இயல்பினான்
வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது. ஐப்பசி குளிர் ஊருக்கே ஏசி பண்ணி விட்டிருந்தது.
மணி ஒன்பதரை ஆகிவிட்டது.
கனிமொழி எட்டு எட்டரைக்குள் வந்து விடுவாள். ஆனால் இன்று இன்னும் வரவில்லை. அலைபேசியில் கடந்த ஒரு மணி நேரமாக முயன்றதில் தொடர்புக்கு அப்பால் இருப்பதாக செய்தி சொன்னது.
ஹாசினி பாடப் புத்தகங்கள் சூழ ஹோம் ஒர்க் செய்த களைப்பில் தூங்கிப் போயிருந்தாள். வேல்ஸ் வித்யாலயாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டி தேவதை. ரோஸ் நிறக் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டுத் தூக்கி படுக்கையறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தான் வெங்கட் . சின்ன சிணுங்கலுடன் தூக்கத்தை தொடர்ந்த ஹாசினியையே சில நொடிகள் பார்த்தபடி நின்றான். தனக்கும் கனிமொழிக்குமான எட்டரையாண்டு மணவாழ்வின் அழகு பரிசு.
வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
ஹாலைத் தாண்டி வராண்டா வந்து பார்த்தான். வெளியே அரசு வாகனம் நின்றது. கதவைத் திறந்த கனிமொழி உள்ளே யாரிடமோ ஏதோ சொல்லிவிட்டு சேலை முந்தானையால் தலையைப் போர்த்தியபடி செல்ல ஓட்டமாய் வந்து அழைப்பு மணியை அழுத்துமுன் கதவைத் திறந்து விட்டான் வெங்கட் என்ற வெங்கட கிருஷ்ணன்.
“என்னாச்சு. ஆபிஸ் ஜீப்ல வர்ற. ஏதும் அவசர மீட்டிங்கா?” துண்டைக் கனியிடம் நீட்டினான்.
“இல்ல தல. திடீர்னு நாலு மணிக்கு ஒரு ஒன் செவென்டி போர் கேஸ். தீபாவளிக்கு தனக்கு பிடிச்ச சேலைய புருஷன் வாங்கிக் கொடுக்கலன்னு மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சிக்கிட்டாளாம். எங்கே விளாத்திகுளம் தாண்டி குளத்தூர் கீழக் காலனி. ஆளுங்கட்சி வட்ட செயலாளர் வீட்டு மேட்டர். பொலிட்டிகல் பிரஷர். போன் மேல போன். ஆறு மணிக்குள்ளே போஸ்ட் மார்டம் பண்ணனும். ஆர்.டி.ஓ. ஸ்பாட் என்கொயரி பண்ணி ரிக்வசன் லெட்டர் கொடுக்கணுமே. ஆர்.டி.ஓ. ஆபிஸ் டைப்பிஸ்ட் மெடர்னிடி லீவ்ல இருக்குதாம். நீங்களே போய் ஆர்.டி.ஓ பார்மாலிடீஸ் முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு போயிருங்கன்னு பெரியவா ஆர்டர். எளவு வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கேன். முதல குளிச்சிட்டு வந்திடுறேன். வழி விடுங்க பாஸ் ப்ளீஸ்.” என்றபடி குளியலறைக்குள் நுழைந்து விட்டாள் கனிமொழி.
இங்கே பெரியவா என்று குறிப்பிட்டது மாவட்ட ஆட்சித் தலைவரை.
வெங்கட் மணி பார்த்தான். மணி பத்தரையை தொட்டுக் கொண்டிருந்தது.
வெங்கட் நிதானமாக ப்ரிட்ஜ் திறந்து தோசைமாவை வெளியே எடுத்து வைத்து விட்டு தேங்காய் சட்னி கனிமொழிக்கு ரெம்ப பிடித்த கறிவேப்பிலை சட்னி அரைத்து விட்டு முதல் தோசையைச் சுட்டு எடுத்து தட்டில் வைக்கவும், கனி குளித்து முடித்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
“தேங்க்ஸ் புருஷா… கொலைப்பசி.. பிஸ்கட் சாப்டே சமாளிச்சிட்டு இருந்தேன். பாப்பா சாப்டாளா?“
“ம்.. எதோ பிசிக்ஸ்ல ப்ராஜக்டாம். உன் சப்ஜெக்ட் ஆச்சே. உனக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிட்டா. கருவேப்பிலை சட்னி எடுத்துக்க. இப்பதான் பண்ணேன்.“
“இந்த சட்னிக்காகவே உன்னை எத்தனை பிறவிக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம். உம்மா செல்லம்“ என்று கன்னத்தைக் கடிக்க வந்தவளை செல்லமாக மார்பில் கை வைத்து தள்ளி விட்டு
“போதுமா..ப்ரெட் எடுத்துக்கறியா?"
“ப்ரெட்டா... நீங்க சாப்பிட்டாச்சா…?"
“பாப்பா பசிக்குதுன்னா ரெண்டு பேரும் தோசை வார்த்து சாப்டாச்சு.” என்றபடி ஹால் வந்து கால் நீட்டி உட்கார்ந்தான் வெங்கட்.
கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்–கம்–ஸ்டெனோ. 2016 பேட்ச் அப்பாயின்ட்மென்ட். தமிழ் தெரியாத கலெக்டர் வந்ததால் கோவில்பட்டியில் இருந்த ஒரே ஸ்டெனோ கனிமொழியை தூத்துக்குடிக்கு மாற்றல் செய்து விட்டார்கள். காலையில் எழுத்து எட்டு மணிக்குள் பஸ் பிடிக்க வேண்டும். அங்கே ஐந்து மணிக்கு கிளம்பி தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டான்ட் என மாறி மாறி பஸ் மாறி கோவில்பட்டி ஜி.எச். ஸ்டாப்பில் இறங்கி எவ்வளவு வேகமாக நடந்து வந்தாலும் வக்கீல் தெருவில் இருக்கிற வீட்டுக்குள் நுழைய எப்படியும் எட்டரை மணி ஆகி விடும்.
வெங்கட் தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூலிப்பு பிரிவில் தற்காலிக வேலை. பதினைந்தாயிரம் சம்பளம் என்றாலும் நாய்ப்பிழைப்பு. அவனும் கனியும் ஒரே நேரத்தில்தான் டிஎன்பிஎஸ்’சி எல்லா தேர்வுக்கும் அப்ளை செய்தார்கள். ஒன்றாக படித்தார்கள். கனி இரண்டு வருடத்தில் க்ரூப் 2ல் செலெக்ட் ஆகி உள்ளூரிலேயே போஸ்டிங். வெங்கட்டுக்கான வாய்ப்பு மட்டும் கட் ஆப் மார்க்குக்கு பக்கத்தில் வந்து வந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. இடை இடையே வங்கித் தேர்வு - ரயில்வே தேர்வு என எல்லாவற்றையும் விடாமல் எழுதிக் கொண்டே கனிமொழிக்கு கணவனாகவும், ஹாசினிக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.
ஈரத் தலையை துவட்டியபடியே வந்த கனி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன படிக்கிறீங்க இன்னிக்கு ?”
“தமிழக இலக்கிய வரலாறு.. வெங்கடாசலம் எழுதினது “
“நான் இருக்கணுமா ?”
“வேணாம். ரெம்ப அலைஞ்சிருக்க. போய் தூங்கு. ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன்.”
கன்னத்தில் குளிருக்கு இதமாய் இதழ் பதித்து “சீக்கிரம் வாங்க உங்களுக்கு வேலை ரெம்ப இருக்கு” என்று கண் சிமிட்டியபடி பெட்ரூமுக்குள் மறைந்தாள் கனிமொழி.
அவள் போன திசையையே சில வினாடிகள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெங்கட். மனைவி அரசாங்க வேலை பார்க்க கணவன் கிட்டத்தட்ட வெட்டியாய் கணவன் என்கிற ஒற்றைத் தகுதியோடு மட்டும் வாழும் அவலத்தின் குரூரம் அணு அணுவாய் ஊசி இறக்கியது. நட்பு சுற்றச் சமூகத்தின் எள்ளல் பார்வையை சகித்து வாழும் கொடுமையை நினைக்கையில் மூச்சு முட்டியது.
புத்தகத்தைப் புரட்டினான். படிக்கும் மன நிலையில் இல்லை என்பது மூளைக்கு நன்றாகவே தெரிந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு சூடாக இருந்த பாலை எடுத்து வந்து நிதானமாக குடித்து முடித்தான்.
படுக்கை அறைக்குள் நுழைந்தான். குழல் விளக்கின் ஒளியில் கனியின் தேகத்தின் வெளிச்ச விளிம்புகள் அவனைப் படுத்தியது. மெல்ல நெருங்கி அவளைத் தொட்டான் அவன் இளஞ்சூடு விரல்களின் தொடுகையில் கனியின் மேனி அதிர்ந்து அடங்க கழுத்தை மட்டும் வளைத்துப் பார்த்தாள் கனிமொழி.
அடுத்த பதினைந்து நிமிடங்கள் இயற்கை ஒளித்து வைத்திருந்த உன்னத கணங்களைத் தேடி அலைந்து கண்டு முகிழ்ந்து முயங்கி, மென்னதிர்வில் ஓய்ந்து, அடங்கிய பின், ஒரு கனத்த அமைதியும், வெம்மையும், அதிர்வும் மோகத்தின் தீரா வாசமும் அறை முழுதும் கவிழ்ந்து இருந்தது.
தேக அயர்வில் உறக்கத்தைத் தொட இருந்த வெங்கட்டின் கழுத்தை வளைத்துத் திருப்பியது கனியின் மென்கரம். “உங்க கூட கொஞ்சம் பேசணும்“ என்று காதுகளுக்குள் குழறியது அவள் குரல்.
வெங்கட்டின் அனைத்துப் புலன்களும் ஒரு சேர விழித்துக் கொண்டன. அடுத்து நடக்க இருக்கும் சொற்களின் போரை எதிர்நோக்கி கனியின் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் வெங்கட்.
“சொல்லு கனி“ காமம் ஒழிந்த குரல் வெளிவந்தது வெங்கட்டிடம் இருந்து.
கொஞ்சமே தயங்கினாள் கனிமொழி. முதல் தாக்குதலே மார்புக்கு நேராய் அமைத்தாள் தன் கணையின் கூர் முனையை.
“இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பிடிவாதமா இருக்கப் போறீங்க?“
இருளில் ஒளிர்ந்த அவள் கண்களில் அகம்பாவம் இல்லை. ஆணவம் இல்லை. கருணையே பெருகி வழிந்தது. அவளை இன்னும் இறுக்கமாய் தனக்காய் நெருக்கி கொண்டு “நான் ஜெயிக்கிற வரை கனி“ என்றான்.
“ஈசியா ஜெயிக்க வேண்டிய வாழ்க்கையை நீங்களே கஷ்டப்பட்டு போராடி ஜெயிக்கப் பார்க்கிறீங்க. வருஷம் எவ்வளவு வேகமா ஓடுது பார்த்தீங்கல்ல. வெளியே மத்தவங்க கேள்விய கேக்கறப்போ எவ்வளவுதான் கண்டுக்காம போறது? இப்போ ஒரு வார்த்தை 'ஊம்'னு சொல்லுங்க. நம்ம ஊருக்கு வர்ற காண்ட்ராக்ட்ல நாலஞ்சு காண்ட்ராக்டை வாங்கி தரேன். பெரியவர்ட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதும். உங்க நேர்மைய அங்கே காட்டி ஜெயிக்கலாமே. ஊருக்குள்ளே என் புருஷனும் கெத்தா வரணும்கற ஆசை எனக்கு இருக்காதா?“
“உன் சுயமரியாதைய விட்டுட்டு எனக்காக பரிந்துரை பண்ணி அதுல வர வேலையை நான் செய்வேன்னு எப்படி நம்புற கனி ? இத்தனை நாளு என் கூட வாழ்ந்தும் இன்னுமா நீ என்னைப் புரிஞ்சிக்கல.” வெங்கட்டின் குரலில் லேசான வறட்சி.
மல்லாந்து படுத்து விட்டம் பார்த்து பேசியவனின் குரலில் உறுதியே நிரம்பி இருந்தது. “எனக்கு இந்த வாழ்க்கைல வெட்கமே இல்லை கனி. சும்மா இருக்காம வேலைக்குப் போறேன். வர்ற வருமானத்த ஒரு பைசா வேஸ்ட் பண்ணாம நம்ம குடும்பத்துக்கு தர்றேன். அழகான குட்டி தேவதைய பார்த்துக்கறேன். மகாராணியா இருக்குற என் மனைவிக்கு உண்மையா இருக்கேன். ஆனா இதுல எல்லாம் நிறைவு இருக்கான்னு கேட்டா இல்லைதான். என் கனவும் அரசாங்க வேலைதான். நான் சாதாரணமா தோற்கல. போராடித்தான தோற்கிறேன். இதுல வெக்கம் இல்லை. கௌரவம்தான். எப்படியும் இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ளே நானும் அரசாங்க வேலைக்கான தகுதிக்கு என்னை தகுதிபடுத்திக்குவேன்.. முடியலையா எந்த வெட்கமும் இல்லாமல் கிடைக்கிற வேலையை கடைசி வரை நேர்மையா செஞ்சு உனக்கு ஒரு நல்ல புருசனா ஹாசினிக்கு நல்ல அப்பாவா வாழ்ந்து காட்டுவேன் கனி. என்னை நம்பு“
அவனை இன்னுமாய் இறுக்கிக் கொண்டாள் கனிமொழி. “அரசே நமக்கு கொடுக்கிற சலுகைய ஏன் மறுக்கிறீங்க? எத்தனை பேர் அப்படி இந்த வேலைக்கு வந்திருக்காங்க. அவங்க எல்லாம் சந்தோசமா வாழலியா ? நீங்க மட்டுமே ஏங்க இந்த மாதிரி வளைஞ்சு கொடுக்காம நேர்மையா வாழறேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க?"
வெங்கட் எழுந்து உட்கார்ந்தான். கனியையும் எழுப்பி தனக்கெதிராய் அமர்த்திக் கொண்டான்.
“கனி… இப்ப என்ன பிரச்னை உனக்கு ? நான் இருபது மணி நேரம் உழைக்கிறேன். எப்படியும் டி என் பி எஸ் சில வேலை வாங்கிருவேன். ஏன் என்னை நம்ப மாட்டேங்குற?"
”கைல தர்ற வேலைய தட்டி விட்டு ஏன் ஆகாசத்துல பறக்குற வேலைய பிடிக்க ஆசைப்படுறீங்கன்னுதான் எனக்கு ஆதங்கம்."
மறுபடி மறுபடி பேசிய வாக்குவாதங்கள்தான். ஆனால் இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று வெங்கட் கனியின் முகத்தை நேராகப் பார்த்தான். “நான் என்ன செய்யனும்னு நினைக்கிற கனி?“
“ஒரு வாரத்துல நான் சர்டிபிகேட் வாங்கி தரேன். அடுத்த எக்சாம்ல அந்த சர்டிபிகேட்டை கோட் பண்ணுங்க. கண்டிப்பா வேலை கிடைச்சே ஆகும். என்ன சொல்றீங்க?" ஆவலுடன் துடிதுடித்தது கனியின் இதழ்கள்.
அதை ரசித்தபடியே “ என்ன சர்டிபிகேட்?”
”ICM சர்டிபிகேட். இண்டர்காஸ்ட் மேரேஜ் சர்டிபிகேட். இதை மட்டும் சேர்த்து அப்ளை பண்ணிட்டா இப்ப நீங்க வாங்கிற கட் ஆப் மார்க்குக்கு முதல் சிட்டிங்க்லையே நீங்க கேட்கிற டிபார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும்."
“நீ இந்த சர்டிபிகேட் வச்சுதான் இந்த வேலைய வாங்கினியா?" அமைதியாக வந்தது வெங்கட்டின் கேள்வி.
“இல்ல. எங்க கம்யூனிட்டிக்குதான் கட் ஆப் மார்க் கம்மிதானே. உங்க கம்யூனிட்டிக்குதான் நூத்து தொண்ணூறு எடுத்தாலும் எங்க கிடைக்குது. இதுவே ICM சர்டிபிகேட் கொடுத்தா போன வருஷம் கட் ஆப் நூத்து அறுபது கூட வரல.. நீங்க இப்ப எடுக்கிற நூத்து எம்பது மார்க் எடுத்துட்டா போதும். காரன்டியா வேலை வாங்கிரலாம் வெங்கட். ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க“
வெங்கட் அவளைக் கூர்மையாய் பார்த்தான். “அப்ப நம்ம காதல் கல்யாணத்த வேலைக்காக அரசாங்கத்துட்ட அடமானம் வைக்க சொல்ற? அப்படி செஞ்சு நானும் வேலை வாங்கி, இந்த சமூகத்தில வாழ்ற பத்தோட பதினோராவது ஆளா... பிறப்பையும் சாதி இணைப்பையும் சலுகையாக்கி பார்க்கற ஆட்களோட ஆளா மாறி என் சுயத்த தொலைக்க சொல்ற ? அப்படிதானே கனி?“
கனிமொழி சுளீரென்று சாட்டையடி வாங்கியவள் போல் வெங்கட்டைப் பார்த்தாள்.
“உனக்கு நினைவு இருக்கா கனி ? முதல் முதல்ல காலேஜ்ல நாம சந்திச்சிக்கிட்டது நான் வெங்கட்டாவும் நீ கனியாவும்தான். நீ என்ன ஜாதின்னு எனக்கு தெரியாது. நான் என்ன ஜாதின்னு உனக்கு தெரியாது. பிரெண்ட்ஸ் ஆனோம். ஒருத்தருக்கு ஒருத்தர் மனசாலதான் இணைந்தோம். எனக்கு கவிதை. உனக்கு இசை. போற இடம்லாம் ஜெயிச்சோம். மனசால இன்னும் நெருங்கினோம். வீட்டுக்கு தெரிஞ்சு போன பின்னால் எத்தனை மிரட்டல்? நீ எவ்வளவு அடி வாங்கிருப்ப எனக்காக? எத்தனை சொந்தங்களை இழந்தேன் நான் உனக்காக? எல்லோரும் நம்மை ஓட ஓட விரட்டினாங்க. என்னை நம்பி நீயும் உன்னை காப்பாத்தனும்னு நானும் எவ்வளவு வைராக்கியமா இருந்து நடந்த கல்யாணத்துல நம்மள வாழ்த்த வந்தது எத்தனை பேரு. யாருமே இல்ல. இந்த சமூகத்தில் நீ ஒரு முனை நான் ஒரு முனை. இரண்டையும் இணைச்சது நம்ம காதல்… காதல் மட்டும்தானே கனி. வேற எதிர்பார்ப்பு ஏதும் இருந்ததா நமக்குள்ளே?“ நிறுத்தி இடைவெளி விட்டான் வெங்கட்.
கனிக்குக் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தது.
“அப்பேர்ப்பட்ட உன்னதமான உறவை ஒரு வேலைக்காக அடமானம் வைக்க சொல்றே. அப்படியே வச்சு கிடைக்கிற வேலைல நான் எவ்வளவு பெரிய அதிகாரியாகவும் வந்தாலும் அப்புறம் எனக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சி கண்ணாடில என்னைப் பார்க்கறப்ப எல்லாம் காதலை அடமானம் வச்ச ஒரு பிராணியாதான் என்னை பார்க்க வைக்கும் கனி. உனக்கு கிடைத்த வேலை இயல்பா உனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகையில் கிடைச்சது. ஆனா பிறப்பாலோ படிப்பாலோ எனக்குக் கிடைக்காத ஒரு தகுதிய கலப்புத் திருமணம்னு அடையாளப்படுத்தி பகிரங்கப்படுத்தி அதை மட்டும் ஒரு தகுதியா வச்சு வேலைய வாங்குற அளவுக்கு என்னை அவமானப் படுத்திடாத கனி…ப்ளீஸ்."
கனி கதறி அவனை அனைத்துக் கொண்டாள். இந்த அணைப்பில் காமம் இல்லை. அவன் ஆண்மை மீதான அவனின் தன்னம்பிக்கை மீதான செருக்கு இருந்தது. அந்த பெருமையினுள் வெங்கட்டை முழுவதுமாக அவளுள் அடைத்துக் கொள்ளும் பெருமையும், பேராவேசமும் இருந்தது. வெங்கட் கனிமொழியின் பேராழிப்பேரன்பு ஆளுமைக்குள் பேராண்மை கொண்டவனாய் நிறைந்து கொண்டிருந்தான்.
குறள் :
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
விளக்கம்:
இல்வாழ்க்கையில் இயல்பாக இருப்பவனே, வாழ்வின் உண்மையை அறிய முற்படுபவர்களில் தலையானவன்.

காதல் என்பது ஒருவரை ஒருவர் காத்தல்.காதலை அடமானம் வைத்து வயிறுபிழைப்பது அவமானம் எனும் உயரிய கதைக்கரு.தமிழ்ச்சிறுகதையுலகில் புதுமை.மொழிநடை சுஜாதாவையும் கல்கியையும் கலந்திருக்கிறது.இதுவும் அழகியலே.எனக்குள் கர்வத்தையும் கதையாசிரியர்மீது பேரன்பையும் ஊற்றெடுக்கச்செய்கிறது.நிறைவான கதை.நேர்த்தியானகதைக்களம்.வாழ்த்துப்பூச்செண்டு அன்புத்தங்கைக்கு.கதையாசியரின் அண்ணன் என்பதில் ஆயிரம்மடங்கு கர்வம்.
பதிலளிநீக்கு👏🏽👌🏾
பதிலளிநீக்கு