கலங்காக் கார்காலம்
பேச்சியிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது. இதுநாள்வரை கனிவுடன் பேசிவந்த அவளிடம் இன்று கடினமாக பேசிவிட்டேன்; என் மனைவியின் உந்துதலால்.
நேற்றே கூறிவிட்டாள், “இனிமே இதுலாம் கூடாது” என்று. இருந்தும் அவள் பேச்சை மீறி நேற்று நான் செய்த செயல் வீட்டை இரண்டாக்க பார்த்து, பின் அமைதியானது. இன்றும் அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காகவே அவ்வாறு பேசிவிட்டேன்.
அவ்வாறு பேசி இருக்க கூடாது தான். பேச்சியை பேசிய வார்த்தைகள் என்னை ஓர் இடத்தில் நிற்கவோ அமரவோ விடவில்லை. அதனால்தான் நடையும் ஓட்டமுமாய் அவளை தேடத்தொடங்கினேன்.
எதிர்பார்த்தது போலவே அவள் அங்கு தான் அமர்ந்து இருந்தாள். அவள் முன் சென்று நின்றேன். மண்ணை பார்த்துக்கொண்டு இருந்தவள் பார்வையில் என் பாதம் படவே, மெல்ல நிமிர்ந்தவளை பார்த்து புன்னகைத்தேன்.
மெதுவாக எழுந்து நின்றவள் முன், கையை நீட்டினேன். எனக்கென எடுத்து வைத்து இருந்த பணத்தில், வரும்வழியில் அவளுக்கென வாங்கிய பலகார பொட்டலம் என் கையில் இருந்தது.
வாங்க தயங்கினாள். இதுநாள்வரை இவள் இப்படி தயங்கி நின்று நான் பார்த்தது இல்லை. நான் பேசிய பேச்சுக்களின் தாக்கம் அது; உறுத்தியது.
“ம்… எடுத்துக்க” என்று சொல்லவே எடுத்துக்கொண்டாள்.
பொறுமையாக பொட்டலத்தை பிரித்தவள், அதிலிருந்து எடுத்த பலகாரத்தை வேகமாக உண்ணத்தொடங்கினாள்.
“மெல்ல மெல்ல” என்றேன், பிள்ளையின் உண்ணும் வேகத்தை மந்தப்படுத்த எண்ணும் தாயின் குரலாய்.
அவள் காதில் அது விழவில்லை. வேகம் நிலைத்து இருந்தது.
“காலாகாலத்துல குடைக்கு வேலை இல்லன்னா, காலத்துக்கும் கொடுக்க எதும் இருக்காது போல” என்றேன் சலிப்பாக; அவள் என்னை கவனிக்கவில்லை.
“வாசயேறி வேண்டி வந்தவங்களை வெறுமனே அனுப்புறது இன்னைக்கு தான் முதல்முறை. மனசு கேட்கல. அதான் உன்னை தேடி வந்தேன்”
அவள் உண்ணுவதில் மும்முரமாக இருந்ததால் நானே தொடர்ந்தேன், “வயல் நிலைமை ஊர் சனத்துக்கு தெரியும். மழ வரமுன்ன வாசமுன்ன யாரும் வந்து நிக்க கூடாதுன்னும் தெரியும். அவங்க வரமாட்டாங்க; அதேபோல நீயும்…”
மெல்ல நிமிர்ந்தவள் பார்வை ஏதோ செய்யவே அந்த வார்த்தையை தொடர முடியாமல் விட்டுவிட்டேன்.
அவள் முகத்தில் கவலை நிறைந்து இருந்தது. அதில் கடமைக்கு புன்னகையை காட்டிவிட்டு திரும்பி நடக்க தொடங்கினாள்.
லேசாக கண் கலங்க தொடங்கவே வானத்தை பார்த்தேன். அது கலங்கவில்லை.
‘தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
வானம் வழங்கா தெனின்.
மழை பெய்யாமல் போனால், இங்கு தானமும் தவமும் இல்லாமல் போகும்’
-முற்றும்-
-ஊதா மூங்கில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக