திங்கள், 27 ஜூன், 2022

தீண்டாமை - அருள். ஜெ

 தீண்டாமை

- அருள். ஜெ

எச்சரிக்கை:

தீண்டாமை ஒரு பாவச்செயல்.


தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.


தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.  




ட்டத்தில் இருந்து பாக்கையில் உசுருள்ள பொம்மை போலத் தெரிந்தான்  வேடியப்பன். வேசக்கால கதிர்களால் விளைந்த கண் கூச்சத்தில் சோத்துக் கையை வாகாக நெற்றியில் வைத்துக் கொண்டு பனையின் ஒசரத்தில் தெரிந்த கணவனை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குருவு.


உச்சி வெயிலோடு பனை மட்டையை கையிலிருந்த குறுங்கத்தியால் வலித்துக் கொண்டிருந்ததால் உண்டான உடல் வெம்மையும் சேர வேக்காட்டில் குளித்துக் கொண்டே வேகுவேகுன்னு பனை மட்டையை அறுத்து தள்ளிக் கொண்டிருந்தான். அறுத்து தள்ளிய பனை மட்டைகளும், பனங்காய்களும் ஒவ்வொன்றாக “சொத்..சொத்” என்று கீழே விழுந்து கொண்டிருந்தன. இறுதியாக கள்ளுக் கலயத்தை வாகாக வைத்து விட்டுக் கீழே இறங்கினான்.


இறங்கிய கணவனின் வியர்வையைத் துடைக்க, கையிலிருந்த துண்டைக் கொடுத்தாள் குருவு. “உஸ்ஸ்..” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் மேல் உள்ள வியர்வையைத் துடைத்தான். பனை ஏறி, ஏறி அவன் நெஞ்சு காய்ப்பேறித் தழும்பாகக் கிடந்தது. அதை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள்.


“என்ன புள்ள அப்படிப் பாக்கே, பனையேறி பொழைக்கிற அத்தனை ஆளுக மாரும் இப்படிதான் காய்ச்சிப் போய்க் கிடக்கும். ஏ அப்பாரு மாரப் பாத்திருக்கணும் நீயி, இதெல்லாம் ஒன்னும் இல்லன்னு நினைப்ப.” என்றபடியே மேற்கொண்டு பனையேறுவதற்கு கச்சைய இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுந்தான்.           


“யே இவனே, வெயில் உச்சியைத் தாண்டிப் போச்சே பசிக்கலே உனக்கு, வாயேன் இப்படி உக்காரு.” என்றபடியே சோத்துச் சட்டியை எடுத்தாள். வேடியப்பன் மறுபடி உக்கார்ந்தான். தூக்குச் சட்டியின் மூடியை கவுத்து அவனிடம் நீட்டிய குருவு, வாளியில் இருந்த கேப்பங்களியில் நீர் விட்டு நன்கு கரைத்து அஞ்சு சின்ன வெங்காயத்தை உரித்து தொட்டுக்க அவனுக்குக் கொடுத்தாள். களைப்பால் உண்டான பசியில் ஆசையாய் கலயத்தை வாங்கிய வேடியப்பன் மடமடவெனக் குடித்து சின்ன வெங்காயத்தை எடுத்துக் கடித்தான். 


குடித்து முடித்ததும், “சரி புள்ள நீ வீட்டுக்குப் போய் பொழுதடைஞ்சதும் ஆக வேண்டியதப் பாரு. நா அப்படியே பனைங்கட்டிய வித்துபுட்டு வீடு வந்து சேருதேன்” என்றபடியே நடந்தான். வேடியப்பன் பனை உச்சிக்கு ஏறும்வரை பார்த்துக் கொண்டிருந்த குருவு, பின் கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்தாள்.


அவர்களில் வீடு ஊரின் கடைசியில் இருந்தது, போகும் வழியில் தான் அரண்மனைக்காரத் தெரு இருக்கிறது ஊரில் உள்ள அத்தனை மேல்குடி மக்களும் இங்குதான் இருந்தார்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப ஓட்டு வீடோ காரை வைத்த மச்சு வீடோ கட்டிக் கொண்டிருப்பார்கள். ஊரின் கடைக்கோடியில் இருப்பவர்கள் ஓட்டு வீடு கட்டிக் கொள்ளக் கூடாது. பனைக் கூரை தான் வேய்ந்து கொள்ள வேணும். ஊர்த் தெருவுக்குள் செருப்பு அணியக் கூடாது. மீறி அணிந்தால் ஊர் பஞ்சாயத்தக் கூட்டி ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள். பிறகு குடிக்க, தண்ணீர் கூட கிடைக்காது. ஏனென்றால் நல்ல தண்ணீரானது இங்கு மட்டும் தான் கிணற்றில் இருக்கிறது. தாங்களாக தங்கள் தண்ணீர்க் கலயங்களைக் கிணற்றில் இறைத்து ஊற்றிக் கொள்ளக் கூடாது. ஊர்ப் பெண்கள் யாராவது தண்ணீர் இறைக்க வந்தால் அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி தங்கள் பானைய நிரப்பிக் கொள்ள வேணும். அப்படி மோந்து ஊற்றும் போது தெரியாத்தனமாக கையோ, உடுத்துத் துணியோ மேலே பட்டு விட்டால் போச்சு. அன்னைக்குத் தண்ணீர் கிடைக்காது. பானையில் இருந்த தண்ணீரைப் பிடுங்கி கீழே கொட்டி விட்டு பானையை உடைத்து விடுவார்கள்.              


அரண்மனைக்காரத் தெருவில் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் குருவு. நடக்கும் போதே அவளுக்குக் கிறுகிறுவென்று வந்தது. உச்சி வெயில் வேறு. அது மட்டும் தான் காரணமா? ஒருவேளை அதுவா இருக்குமோ? அவளுக்கு நாள் தள்ளிப் போயிருந்தது. அவளுக்கு ஏற்கனவே அதைப் பற்றிய எண்ணம் இருந்தது. நாள் தள்ளிப் போயிருந்த நிகழ்வை உறுதியானதும் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்து விட்டாள். இப்போது தலையைச் சுற்றிக் கொண்டு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. லேசாகத் தள்ளாடினாள். கீழே விழுந்து விடாமல் இருக்க பிடித்துக் கொள்ள ஏதேனும் பிடி கிடைக்குமா என்று ஏறெடுத்துப் சுற்றிலும் பார்த்தாள். சற்றே பக்கத்தில் கோவில் தெரிய அதனருகே சென்றாள். கோவில்ப் படிக்கெட்டில் உட்கார்ந்து கொண்டாள்.


ஊரில் இருந்த சிலர் அவள் அங்கே உட்கார்ந்திருப்பதைக் கண்டனர். அவளை யாரென்று அவள் உடுப்பை வைத்தே அடையாளம் தெரிந்து கொண்டவர்கள், விறுவிறுவென அவள் அருகே வந்தனர்.


“ஏய், உனக்கு எம்புட்டு கொழுப்பிருந்தா கோவில் படிக்கெட்டுல்ல வந்து உக்காருவ எழுந்துருச்சு ஓடு நாயி”


“அய்யா, சாமி நடக்கயில கிறுகிறுன்னு வருதுங்க. நடக்க முடில. கொஞ்ச நேரம் இப்படி ஓரமா உக்காந்துட்டு விரசா போய்டுறேன்.” 


“தலைய சுத்திட்டு வந்தா தெருவுல விழுந்து சாவு. இங்க ஏன்டி வர்ற உங்க ஆளுங்க கோவில் மண்ண கூட மிதிச்சாலே தீட்டுன்னு இருக்கிலே, இங்க வந்து உக்கார எவ்வளவு துணிச்சல் உனக்கு.?” குருவு எழுந்து விட முயற்சித்தாள். அவளுக்கு மேலும் மேலும் இருட்டிக் கொண்டுதான் வந்தது.


“கீழத்தெரு நாயே, சொல்லச் சொல்ல கேக்காம மறுபடியும் உக்காரவா செய்யுற.?” என்றவன் அவள் பின்னந்தலையில் பளீரென அடித்து விட்டு, தலை மயிரைப் கொத்தாகப் பிடித்து தரதரவெனத் தெருவுக்கு இழுத்தான். ஏற்கனவே இருந்த கிறக்கமும் தெருப் புழுதியில் தலைமயிரை இழுத்துக் கொண்டு போனதால் உண்டான வலியும் சேர, சாமி… அய்யா... விட்டுடுங்க போய்டுறேன், என்னை விட்டுடுங்க சாமி… சாமி...” என்று கதறினாள். அவள் கதறலைக் காதில் ஏற்றிக் கொள்ளாதவன் மேலும் மேலும் இழுத்துக் கொண்டே சென்றவன் நடுத்தெருவில் அவளைக் கொண்டு வந்து விட்டான்.


“இன்னொரு தடவை உன்னக் கோவில் பக்கம் பாத்தேன் தொலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவேன் பாத்துக்கோ எந்துச்சு போடி நாயே. எந்தி” என்றபடியே அவள் வயிற்றில் ஓங்கி மிதித்தான். “அம்மா” என்றபடியே வயிற்றைப் பிடித்தபடி சுருண்டாள் குருவு. மயக்கத்தோடு வலியும் சேர்ந்து கொள்ள கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.


பனங்கட்டியைத் தெருத் தெருவாக விற்றுக் கொண்டிருந்த வேடியப்பனுக்கு இருட்டியபோது தான் தகவல் கிடைத்தது. விற்காமல் இருந்த பனங்கட்டியை அங்கயே போட்டு விட்டு பதைபதைப்புடன் வீடு நோக்கி விரைந்தான். அவன் வீட்டின் முன்னே அப்பகுதி மக்கள் கூடி இருந்தனர்.


“யப்பா, குருவு புருசன் வர்றான். கொஞ்சம் வழிய விடுங்கப்பா.” எனக் கூட்டத்தில் யாரோ கூற எல்லோரும் வழியை விட்டனர்.


“என்னாச்சு...? குருவுக்கு...?" என்றபடியே வீட்டுக்குள் நுழைய முயன்றவனை உள்ளே இருந்து வந்த மருத்துவக் கிழவி வழியை மறைத்தாள்.


“யப்பா.. சித்த நேரம் வாசல்ல உக்காரு.”


“குருவுக்கு என்னாத்தா ஆச்சி.?”


“ஒன்னும் ஆவலப்பா. நல்லா இருக்கா. நீ செத்த உக்காரு. கொஞ்சம் உடம்பு முடியாம இருக்கு வைத்தியம் நடக்கு. ஏண்டி பயலுக்கு ஒரு சொம்பு தண்ணியைக் கொடுங்கடி.” என்றவாறே உள்ளே சென்றாள். தண்ணீரை வாங்கி குடித்த வேடியப்பன், வீட்டு வாசலில் இருந்த மரத்தில் குத்துக் காலிட்டு அமர்ந்தான். வாசலில் நின்று கொண்டிருந்த ஒருத்தியை சாடைக்காட்டி அருகே வரும்படி அழைத்தவன், “சொடலையம்மா, குருவுக்கு என்ன நடந்துச்சு.?" எனக் கேட்டான். 


நடந்ததைச் சொன்னாள் சொடலையம்மா, “அடிச்சது மட்டுமில்லாம பாவிபயளுங்க கருவையும் சிதைச்சுபுட்டானுங்களே” என்றாள் தன் சேலைத்தலைப்பை வாயில் வைத்து அழுத்தியபடி.


“என்னாத்தா சொல்ற?”



“ஏந்தம்பி, உனக்கு தெரியாதா.? குருவு சொல்லைலையா உங்கிட்ட.? குருவு முழுவாம இருக்காப்பா. இது அவளுக்கு மூணாவது மாசம். மேலத்தெருக்காரங்க வயத்துலையே மிதிச்சுபுட்டானுங்க. உசுரு ரத்தமா வெளிய வந்துருச்சுப்பா. அதுக்கு தான் ஒத்தடம் கொடுத்து வைத்தியம் நடக்குது.”


“யம்மா… யாத்தே...” என்றபடி கதறத் துவங்கியவனை சிலர் வந்து தேற்றத் தொடங்கினர்.


மறுநாள் கீழைத்தெரு சனங்கள் அம்புட்டும் கூடி இருக்க, காரசாரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.


“ஏம்ப்பா, வர வர மேலைத்தெருக்காரங்க கொடுமைங்க அதிகமாய்ட்டே போகுது. உண்டாகிருக்குற புள்ளைக்குத் திடீர்ன்னு மயக்கம் வர ஒரு பிடிமானத்துக்கு கோவில் வாசல்ல போய் சாயப்போய் அந்த புள்ளைய அடிச்சிருக்கானுங்க. அவங்க அடிச்சதுள்ள உண்டாகிருக்குற புள்ளைக்குக் கழிஞ்சு போயிருக்கு, இந்த அக்கிரமத்துக்கு தீர்வுதான் என்ன?"


“இந்தப் புள்ள எதுக்குப்பா அங்க போச்சி? அறிவு வேணாமா? இந்தப் புள்ள போவலைன்னா அவன் அடிப்பானா?”


“கோவிலு என்ன அவன் அப்பன்காரன் சொத்தா?”


“அதையே அவனும் கேப்பான்.”


“அது அவன் கோவிலுன்னு பட்டயம் ஏதும் எழுதி வச்சிருக்கா?”


“அது அவன் கோவிலுன்னு நெனைச்சு தான் பரம்பரையா கும்பிட்டு இருக்கான். இப்ப நீ போனீன்னா விடுவானா?”


“ஏன் விடமாட்டான்?”


“அவிங்க நம்மளை மாறி ஈனப்பொழைப்பு பொழைக்கலையே. நீ அவிங்க கூட போட்டிப் போட்டா சண்டைதான் வரும் பாத்துக்க.”


“வரட்டும், அவங்களா நாமளான்னு பாத்துக்கிறலாம். என்னய்யா சொல்றீங்க?”, என ஒருவன் கூற சிலர் எழுந்தார்கள்.


“அட உக்காருங்கப்பா. உடனே எந்துச்சுடுரீங்க. நாம நாலு பேரு போய் நூறு பேர் கூட சண்ட போட முடியுமா? நமக்கு கேக்க நாதியில்லையே. இந்த பிரச்சனைய அப்படியே விட்டுருங்க. இல்லன்னா மேலப் பொல்லாப்பு தான் வந்துசேரும் பாத்துக்கிருங்க.”


“நீங்க அவிங்களுக்கு அடிக்க வாகா குனிஞ்சு முதுக காட்டியே பழகிட்டீறு. அதான் இப்படி பேசுதீய. நாங்களும் அப்படியே இருக்கணுமாக்கும்.?” கூட்டத்தில் ஒரு இளவட்டம் கத்தினான்.


“யே… செத்தப்பய ஆரு அது, நாலும் தெரிஞ்ச பெரியவுக பேசிட்டு இருக்கோம்ல. எங்க தலைமுற அப்படித்தால இருந்தது. நாங்கல்லாம் கோவிலுக்குள்ள நுழைஞ்சிருப்போமா? கோவிலுக்குல்லையே போகாம எவ்வளவு சனம் கிடக்குது. உள்ள போய்க் கும்பிட்டாத்தான் சாமியா? வீணா உசுரைக் கொடுக்காதீங்கப்பா.”


“தொட்டா தீட்டு, பட்டா தீட்டுன்னு இருக்குற ஊருக்குள்ள அப்படி ஒரு உசிரு தான் வேணுமா? அதுக்குச் செத்தொலியலாம்”, கூட்டத்தில் காச்சு மூச்சு என்று கூக்குரல்கள் எழுந்தன. இளவட்டங்கள் பலர் எழுந்து போனார்கள்.


இளவட்டங்கள் அன்று இரவே போய் மேலத்தெரு வீடுகளில் கல்லெறிந்து விட்டு வந்தார்கள்.


“கீழத் தெரு நாய்களுக்குக் கொழுப்பப் பாத்தியா. எவ்வளவு துணிச்ச இருந்தா நம்ம வீட்டு மேலக் கல்லெறிவான். சும்மா விடக்கூடாது அவங்கள” என இவர்கள் சென்று அவர்கள் வீட்டுக்குத் தீ வைத்து விட்டு வந்தார்கள். கீழைத் தெரு வீடுகள் எல்லாம் குடிசைகள் என்பதால் சீக்கிரம் பற்றிக் கொண்டன. பல எரிந்து சாம்பலாகிப் போகின. ஊருக்குள் கலவரம் மூளும் சூழ்நிலைகள் உருவாகின.


தீயில் எரிந்து மீத மிஞ்சிய பொருட்கள் ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.


“நாங்க அப்பவே சொன்னோம்ல அவிங்களுக்கு மனுச அதிகம்ன்னு ஏம்பேச்சக் கேக்காம அவிக வீட்டுலப் போய் கல்லெறிஞ்சு வந்துருக்கீகலே. இப்ப பாரு?”


“புல்லு தின்கிற மாட்ட விடக் கேவலமா போயிருச்சு நம்ம நிலைம, அவுகளுக்கு பயந்து கொஞ்சங்கொஞ்சமா சாவுறத விட ஒரேடிய சாவலாம்”


“கூறுகெட்ட பயலே, இப்போ நாம எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறோம். அது மட்டும் தான் பாக்கி”, ஒரு பெருசு சீறியது. ஒரு ஓரத்தில் குந்தி உக்கார்ந்திருந்த வேடியப்பன் எழுந்தான்.


“எல்லாரும் கேட்டுக்கங்க. இனியும் பொறுத்துட்டுப் போக முடியாது. இத இப்படியே விட்டா கடசில வெட்டுகுத்துன்னுதா போய் முடியும். அதனால நம்ம சனங்க கோவப்படாம யோசிங்க. நாம நுழைய முடியாத கோவிலுக்கு அவன் வருசா வருசம் வந்து வரி வாங்கிட்டுப் போவறான். நாம ஏந்தரனும்? இனி ஆரும் வரி தரக்கூடாது. நாம செருப்பு போடக்கூடாதுன்னு சொல்றான் இனி போடணும். மேல்துண்டு போடக்கூடாதுன்னு சொல்றான் இனி போடணும். நாம யாரும் அவுக வீட்டுக்கு ஏவல் வேலை செய்யப் போகக் கூடாது. நாம இல்லீன்னா அவுங்க தான் நாறிப் போவாக. நம்ம பொழப்பு நம்மோடயே போவட்டும். நம்ம கொளந்தைகள பள்ளியோடத்துக்கு படிக்க அனுப்பணும்"


“அவுக புள்ளைங்க படிக்கிற இடத்துல நம்ம புள்ளைக படிக்க அவுக வுடுவாகளா?”


“விடமாட்டாங்க. பாதிரி சாமியாருங்க நம்மளை மாறி பாவப்பட்ட சனங்க படிக்கிறத்துக்குன்னே காசு ஏதும் வாங்காம பள்ளியோடம் நடத்துறாங்க அங்க சேத்து வுடுவோம்”


“சரிப்பா இந்தக் கோவில் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?”


“அவங்க கோயிலுக்கு உள்ள கும்புடுற சாமியத் தான் நாம வெளியே நின்னு வேண்டிக்கிடுதோம். அது அவுக அப்பன்மாரோ, பாட்டன்மாரோ கட்டி வச்ச கோவிலு இல்ல. பொதுச் சொத்து. கோவிலு அவுகளுக்கு மட்டும் இல்ல, நம்மளுக்கும் பொது”


“அவுக பரம்பரையா கும்பிட்டு வர்ற கோவிலுக்குள்ள நம்மள எப்படி விடுவான்?”


“நாம சர்க்காருக்குப் போய் கேப்போம்.”


“என்னப்பா புத்திகெட்டுப் பேசுற.? திருடனுங்ககிட்ட இருந்து பொருள காப்பாத்த, திருடனுங்ககிட்டவே கொடுத்த கதையா. மேல எல்லாமே அவுக ஆளுங்க தான இருக்கானுங்க. நம்மளுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?”


“வெள்ளைக்காரனுக்குக் கீழ தான அவுகளும் வேலை செய்யுறானுங்க. நாம நேரா வெள்ளைக்கார துரைக்கிட்டவே நியாயம் கேப்போம். எத்தனை வருசமானாலும் சரி. யாருப்பே எங்கூட வர்றீங்க.?” வேடியப்பன் கேட்டதும் பலர் எழுந்தார்கள்.


“ஒரு பத்து பேரு வாங்க. மீதி பேரு நம்ம சனங்களைப் பாத்துக்கோங்க. அன்றே எல்லோரும் காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றனர். ஆனால் அங்கே காவல் அதிகாரியாக மேலத்தெரு ஆள்தான் இருந்தார்.


“மேலத்தெரு ஆளுகளுக்குச் சேவகம் பண்ணவே பொறந்த நாய்ங்க. உங்களுக்கு கோவிலுக்குள்ள போறதுக்கு உரிம வேணுமா? ஒழுங்கா மேலத் தெரு ஆளுங்க சொல்ற பேச்சைக் கேட்டு நடக்கப் பாரு”, மனு ரெண்டாகக் கிழிக்கப்பட்டு, அவர்கள் முகத்தில் வீசப்பட்டது.


“யாரும் மனச விட்டுற வேணாம். இத நான் முன்னாடியே எதிர்பார்த்தேன். நாம நேரா வெள்ளைக்காரத் துரையைப் பாத்து மனு கொடுக்கலாம்” என்றான் வேடியப்பன். அவர்கள் பட்டணத்தில் பல மாதங்கள் தங்கி ஒருவழியாக வெள்ளைக்காரத் துரையைப் பாத்து மனுவைக் கொடுத்தார்கள். வெள்ளைக்காரத் துரை முற்போக்கு எண்ணம் கொண்டவராய் இருந்தார். சில நாட்களிலே உத்தரவு வந்து விட்டது.


“கோவில் என்பது எல்லோருக்கும் பொதுவான ஓன்று. அங்கு யாரும் யாரையும் நுழையக்கூடாது என்று சொல்லக் கூடாது. மேலும் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது. மேல் கீழ் என்று எதுவும் கிடையாது. எனவே இந்த உத்தரவை தாங்கி வரும் சனங்களுக்கு கோவிலில் நுழைய முழு உரிமை உண்டு. கோவில் நுழைவு செய்யும் இந்த சனங்களுக்கு காவல்துறை முழுப் பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும், இவர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்று தடுப்பவர்களைச் சட்டம் கடுமையாகத் தண்டிக்கும் என இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது”


மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்க, அத்தனை கீழைத் தெரு சனங்களும் அந்த வெள்ளைக்காரத் துரையோடு கோவில் வாசலில் கூடிருந்தனர். துரையே நேரடியாக வந்ததால் மேலதெருக்காரர்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. வேடியப்பன், குருவுவைக் கூப்பிட்டான்.


“ஏம்புள்ள குருவு வா. நீதான் இந்த கோவிலுக்குள்ள மொத காலடி எடுத்து வைக்கணும். வா புள்ள.” குருவு தயங்கித் தயங்கி கோவில் படிக்கட்டில் தனது வலது காலை எடுத்து வைத்தாள். கூட்டம் ஆரவாரம் செய்தது. வெட்கத்துடன் குருவு அண்ணாந்து மேலே பார்த்தாள். கோபுரச் சிலைகள் சிரித்தன.


-முற்றும்-


குறள்: 309


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.


பொருள்:


ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.


குறிப்பு:


கதைக் கரு உதவி: பூமணி - அஞ்ஞாடி.


பிற நூல்கள்:


ராபார்ட் ஹர்டுகிரேவ்- THE NADARS OF TAMILNAD                                                               


                       

புதன், 22 ஜூன், 2022

ஆறுமோ சினம் - மௌவல்

ஆறுமோ சினம் 

- மௌவல்

உடலும், உள்ளமும் ஒருசேரச் சோர்ந்து போனதால் தன்னையறியாது உறங்கிப்போனாள், அதிரா. நேரங்களும், நொடிகளும் நகர்ந்து செல்லச் செல்ல, இந்தக் கொடுஞ்சூழலும், நகர்ந்து குழைந்து இளகியோடிவிடும் என்பதில் அதிரா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை, காயமாற்றும் வலிமை, காலத்திற்கு மட்டுமே உண்டு. 

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்ததால், அதிரா தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். பள்ளித்திடலில், பிள்ளைகள் உணவருந்தியபோது சிந்திய சோற்றுப் பருக்கைகளை உண்டு கொண்டிருந்த காகங்களின் இடைவிடாதக் கரைதல் அவளின் உறக்கத்தைக் களைத்துக் கவனமீர்த்தது.

திடுக்கிட்டு விழித்த அதிரா சாளரத்தின் வழி வெளியே பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை கட்டிடங்களும், ஆங்காங்கே ஒரு சில மரங்களும் மட்டுமே தென்பட்டன. சாளரத்துக்குப் பக்கமாக நெடுநெடுவென நன்கு வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் கிளையில் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தது ஒரு காகம்.

“ராமசாமி attender வாங்க” என்று சற்றே அதிர்ந்து அழைத்த செவிலியரின் குரல் கேட்டு அதிரா ஓடினாள்.

“சொல்லுங்க சிஸ்டர்” என்று படபடப்போடு ஓடிவந்து நின்றவளிடம், “இந்த மருந்து வாங்கிட்டு வந்து குடுங்க” என்றபடி மருந்துச் சீட்டை நீட்டினார் செவிலியர்.

“சிஸ்டர், நான் அப்பாவை இப்ப பாக்கலாமா?” எனக் கேட்டாள் அதிரா.

“அவரு நல்லாத் தூங்கிட்டு இருக்காரு. எழுந்ததும் கூப்பிடுறேன், வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு, மூடியிருந்த கதவுகளைத் திறந்து உள்ளே சென்றார் செவிலியர்.

மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்ட அதிரா, மீண்டும் சாளரத்தின் அருகே வந்து நின்று, வெளியே பார்த்தாள். 

பள்ளித்திடல் ஒருவருமின்றி வெறிச்சோடி இருந்தது. காகங்களின் பேரிரைச்சலைத் தவிர பெரிதாக வேறோன்றும் அவளுக்குக் கேட்கவில்லை. அரைத் தூக்கத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அதிராவைக் கவனித்துவிட்ட ஆசிரியை ஜூலி, அவளை அழைத்தார். அச்சத்தோடும், தூக்கத்தோடும் மெதுவாக நடந்து சென்று, ஆசிரியரின் அருகே விழித்தபடி நின்றாள் அதிரா.  

மேசையின் மீதிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அதிராவிடம் கொடுத்த ஆசிரியை அதைச் சாப்பிடுமாறு சொன்னார். பின் அவளிடமிருந்த சாக்லேட் கவரை வாங்கி அதை ஒரு பக்கத்தில் மட்டும் இறுக்கமாகத் திருகினார். மறுபக்கத்தை வட்டவடிவில் நன்றாக பிரித்து அதை மேசை மீது நிறுத்தினார்.

அதிரா உட்பட அனைத்து பிள்ளைகளும் ஆசிரியை ஜூலியை மிகுந்த ஆவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அனைவரையும் எழுந்து நிற்குமாறு கட்டளையிட்ட ஆசிரியை ஜூலி, மேசையை மெதுவாக தட்ட தட்ட மேசையின் மீது நின்றிருந்த கவர் பொம்மையும் தாளத்திற்கு ஏற்ப மெல்ல மெல்ல குதித்தாடியது. உண்ட மயக்கத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் இப்போது மிகுந்த உற்சாகத்துடன் ஆடத் தொடங்கினர். அதிராவும் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் அழகாய் அசைந்தாடிக் கொண்டிருந்தாள்.

“ராமசாமி  attender” என மீண்டும் அழைத்த செவிலியரை நோக்கி ஓடினாள் அதிரா. 

“சிஸ்டர்”

“இந்த மருந்தையும் சேர்த்து வாங்கிட்டு வாங்க மா”

“சரிங்க சிஸ்டர்” எனச் சொல்லிவிட்டு, மருந்தகத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

அவள் முன்னே செல்லச் செல்ல, சளைக்காமல் காலம் அவளைப் பின்னுக்குத் தள்ளியபடியே இருந்தது. 

அப்பாவின் கால் சட்டையை ஒரு கையால் இறுகப்பற்றியபடியே அதிரா மருந்தகத்தின் முன் நின்று கொண்டிருந்தாள். அவளின் கண்முன்னே பல வண்ணங்களிலான சோப்புக் கட்டிகள் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ராமசாமி தன் மனைவி உமாவிற்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தார். அதிராவோ இறுகப் பற்றிய அவரின் சட்டையை அவ்வப்போது இழுத்திழுத்து வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோப்பு கட்டிகளை கை காட்டிக் கொண்டிருந்தாள். 

“அதிரா,  பாக்குறதேல்லாம் கேட்டு அடம் பிடிக்க கூடாது. சரியா?” எனச் சொல்லிக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டார் ராமசாமி.

“மருந்துச்சீட்டு குடுங்க” என்றொலித்த ஒரு ஆணின் குரல் அதிராவை சற்றே தடுமாற செய்தது. ஏனோ ஒருவித பதற்றத்தோடே மருந்துகளை வாங்கிக் கொண்டு விரைந்து சென்றாள் அதிரா.

செவிலியரிடம் மருந்துகளைக் கொடுத்துவிட்டு, “சிஸ்டர், இப்ப அப்பாவப் பாக்கலாமா?” எனக் கேட்டாள்.

“டாக்டர் வந்து பாத்துட்டு இருக்காரு. நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்கனு நெனைக்குறேன். அப்புறம் நீங்க எப்ப வேணாலும் வந்து பாக்கலாம். இப்ப கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் செவிலியர். 

முகத்தில் பாதியைப் பல குழல்கள் மூடியிருக்க, கண்கள் மூடிப் படுத்திருந்த ராமசாமியைக் கண்ணாடிக் கதவில் இருந்த வட்டத்தின் வழி பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரா. "கதவு முன்ன வழியில நிக்காதீங்கம்மா, உக்காருங்க, கூப்பிடுறேன்" என்று செவிலியர் சொல்ல, அதிரா அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளின் உயிர் நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவரின் உயிரையும் பொருட்படுத்தாது அவளுக்கு உயிர் கொடுத்தவராயிற்றே.

விடியல் கடந்ததும் அறியாது, அயர்ந்த உறக்கத்திலிருந்த ராமசாமி, கண் விழித்துப் பார்த்த போது, தன் அருகே அதிரா இல்லாததை உணர்ந்து சுற்றும் முற்றும் தேடினார்.

 “டேய் ராமசாமி, உம்பொண்ணத் தேடுறியா? அவ நேரத்தோடு எந்திரிச்சு உங்க அப்பாக்கூட வயக்காட்டுக்குப் போயிருக்காடா” என்று  தன் அம்மா சொல்லி முடித்த சில நொடிகளில், ராமசாமி விரைந்து எழுந்து வயக்காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

“டேய் ராமசாமி, அவள அப்பா பத்திரமா பாத்துப்பாருடா. ஏன்டா இப்படி ஓடுற?” என்று கேட்ட அவளின் குரலைக் கூட சட்டை செய்யாது ஓட்டமும் நடையுமாக சென்றார் ராமசாமி. வரப்புகளின் ஓரத்தில் படர்ந்திருந்த புற்களில் துளிர்த்திருந்த பனித்துளிகளை ராமசாமி தன் பாதங்களால் உடைத்தெறிந்து கொண்டே சென்ற அதே நேரத்தில், அச்சிறு பனித்துளியின் வழியே புது உலகத்தையே கண்டு, வியந்து கொண்டிருந்தாள் அதிரா. 

தொலைவிலேயே தன் மகனைக் கண்டுவிட்ட கந்தன், “அதிரா குட்டி, உங்கப்பன் உன்னையத் தேடி வந்துட்டான் பாரு” என்றார்.

 பனித்துளி உலகின் பெருமகிழ்வில் உலவிக் கொண்டிருந்த அதிரா, தன் அப்பாவைக் கண்டதும் கட்டுக்கடங்கா மகிழ்வோடு அவரை நோக்கி வாஞ்சையோடு ஓடத் தொடங்கினாள். அதிரா விரைந்து ஓடுவதைக் கண்ட கந்தன், அவளைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்துத் தோற்றுப் போனார். அதே நேரம் அதிரா ஓடிவருவதைக் கண்ட ராமசாமி, 

“ஓடிவராத அதிரா, அங்கேயே நில்லு” என்று உரக்கக் கத்தினார். அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது கண் மண் தெரியாமல் ஓடி வந்து கொண்டிருந்தாள் அதிரா. ராமசாமியின் பதற்றமெல்லாம் அதிரா தன்னை நோக்கி  ஓடி வந்து கொண்டிருந்த பாதையின் இடைவெளியில் அமைந்திருந்த அமரன் கிணறு தான். வரப்பையொட்டி அமைந்திருந்த அந்தக் கிணற்றைக் கடக்கையில் சிறிது இடறினாலும் விழுந்துடுவாளே குழந்தை என்பதை நினைத்த நொடியிலேயே ராமசாமி முன்னோக்கி ஓடலானார். தன் தந்தையும் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்ட அதிரா மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகி மான் குட்டியாய்த் துள்ளியோடினாள். 

“புள்ள, நம்ம கைக்கெட்டுற தூரத்துல தான் இருக்கா”  என்று ராமசாமி சற்றே நிம்மதி மூச்செறிந்த அதே நொடி அதிரா கால் இடறிக் கிணற்றுக்குள் விழுந்தாள்.

“ராமசாமி attender” என்றழைத்த செவிலியரை நோக்கி நடந்தாள் அதிரா.

“வார்டுக்கு மாத்தியாச்சு. இப்ப வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற செவிலியரைப் பின் தொடர்ந்து நடந்தாள் அதிரா.

ராமசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதிரா அவரையே உற்று நோக்கிக் கொண்டு நின்றாள். அவளை அறியாது அவளின் கண்கள் பனித்தன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது போனதால் சத்தமில்லாது குலுங்கிக் குலுங்கி அழுதாள் அதிரா. 

அதிரா கிணற்றுக்குள் விழுந்துவிட்டதைக் கண்ட ராமசாமி, இரண்டே பாய்ச்சலில் பாய்ந்து சென்று கிணற்றுக்குள் குதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழந்துவிட்டதைக் கண்ட கிழவன் கந்தனோ, செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டபடியே கிணற்றை நோக்கி ஓடினார்.

விழுந்த வேகத்தில் அடி ஆழத்திற்கு சென்று, மீண்டும் அதே வேகத்தில் மேல் நோக்கி பயணித்து, தண்ணீருக்கு வெளியே சில நொடிகள் தலைக் காட்டி விட்டு, மீண்டும் மூழ்கி போன வேளையில், தன் மகள் அதிராவை கண்டுவிட்ட ராமசாமி,. அவளருகே நீந்தி சென்று  மேல் தூக்க முயற்சித்த போது, பயத்தில் ராமசாமியை பிடித்திழுத்து அவரையும் சேர்த்து நீருக்குள் உள்ளிழுத்தாள் அதிரா.

சூழ்நிலையின் வீச்சினை உணர்ந்து கொண்ட ராமசாமி, சட்டென அதிராவின் இறுக்கமான பிடிகளை தளர்த்திவிட்டு, அவளின் கற்றையான தலை முடியைப் பற்றி இழுத்து, இறுக்கமாக பிடித்துக் கொண்டு மேல் நோக்கி நீந்தினார்.  அதிராவோ மூச்சுவிட முடியாது திணறியபடியே, நீரை குடித்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாய் மேல் மட்டத்தை அடைந்து, ஒரு கையில் கற்படியைப் பிடித்தப்படி, மற்றொரு கையில் அதிராவை தாங்கி நின்ற போது கந்தனும், மேலும் சில ஆட்களும் விரைவாய்க் கிணற்றுக்குள் இறங்கி அதிராவை வாங்கிக் கொண்டு மேலேறினர். 

சிறிதும் குறையாத பதற்றத்தோடு கந்தன் பதைப்பதைத்து நிற்க, எப்படியோ சேதியறிந்த வேணிக் கிழவி ஒப்பாரி வைத்தப்படி வயக்காட்டை நோக்கி ஓடோடி வந்தாள். கிணற்றிலிருந்து மேலேறிய ராமசாமி, அதிராவை வாங்கிக் கொண்டு வேகவேகமாக வீட்டை நோக்கி நடந்தார்.  வாஞ்சையோடு குழந்தையைத் தொட வந்த தன் தந்தையைச் சினந்து புறக்கணித்து, எதிரே ஓடோடி வந்த தாயையும் பொருட்படுத்தாது விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தார் ராமசாமி.

“உங்கள நம்பி இதோட என் புள்ளைய நான் அனுப்பவே மாட்டேன். நான் மட்டும் வராம இருந்திருந்தா என் புள்ள என்னாகிருக்கும்” என அதிராவுக்கு உடைகளை மாற்றிக் கொண்டே கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார் ராமசாமி. பதிலேதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்த கந்தன், பொறுமை இழந்தவராய் “நீ மட்டும் வராம இருந்திருந்தா இப்படி நடந்தேயிருக்காதுடா முட்டாப்பயலே” எனப் பதிலுக்கு உறுமினார்.

மனக்கசப்புகளோடு சென்ற அந்நாளின் பின் மாலைப் பொழுதில், ராமசாமி திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டு வாசலிலிருந்த மண் அடுப்பைப் பற்ற வைத்து வேணிக்கிழவி சோறாக்கிக் கொண்டிருந்தாள். சில்லிட்ட அம்மாலை நேரமும், சிறகை விரித்து கூடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகளின் கூச்சலும், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடு மாடுகளின் மணியோசையும், மண்ணடுப்பு தந்த இதமும், தன் மடி மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த அதிராவின் முகமும் ராமசாமியின் மனதிற்கு இதமாய் இருந்தது.

நெருப்பின் தகதகப்பில் தங்கமாய் மின்னிக்கொண்டிருந்த அதிராவின் முகத்தையே உற்று நோக்கி கொண்டிருந்த ராமசாமி, மென்மையாய் அவளின் தலையைக் கோதியபடி “அதிரா… அதிரா…” என்றழைத்தார்.

தன் தந்தையின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தாள், சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்த அதிரா. 

“அதிரா… ஏம்மா அழற?"

“…….” 

பதிலேதும் பேசாது அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரா.

“அதிரா “

“ம்”

“நீ மட்டுமா மா இருக்க?”

 “நைட்டு அத்த இருந்தாங்க, நான் காலையில தான் வந்தேன்”

"ம், டாக்டர் என்னம்மா சொன்னாரு? எப்போ வீட்டுக்குப் போகலாமாம்?”

“இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம். பயப்படுற மாதிரி ஏதுமில்ல. சரியான நேரத்துக்கு மாத்திரை மருந்து எடுத்துக்கணுமாம். சொல்ற நேரத்துக்கு தவறாம செக்கப்க்கு வரணுமாம்” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள் அதிரா. இதோடு தந்தைக்கும் மகளுக்குமான உரையாடலை முடித்து வைத்து,  உரக்கப் பேசிக் கொண்டிருந்தது அமைதி. 

ஒன்றா? இரண்டா? முழுதாய் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தது அதிரா தன் தந்தையோடு பேசுவதை நிறுத்தி. மூளைக்குச் செல்லும் குருதி நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சட்டெனத் தன்னினைவை இழந்துவிட்ட ராமசாமி கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் இருந்த போது தான் அதிராவுக்கு தான் செய்த தவறு புரிந்தது.‌ ஆனால் காலம் கடந்த பின்பு தவற்றை உணர்ந்து என்ன பலன்? 

அதிராவின் மனம் கசப்பான கடந்த காலத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் ராமசாமியின் மனமும் அங்கு தான் வட்டமிட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இரு உயிர்களும் ஒரே காலக்கட்டத்திற்குச் சென்று, ஒருவரையொருவர் அறியாது, தனித்தனியே கலங்கி நின்றார்கள்.

இருவரின் எண்ண ஓட்டங்களையும் சிதறடித்து சிணுங்கியது, அதிராவின் கைப்பேசி. 

“சொல்லுடா அகில்”

“என்னடி பண்ற? அப்பா எப்படி இருக்காரு? டாக்டர்கிட்ட பேசுனியா? ஏதும் சொன்னாங்களா? 

“ம்”

“என்னடி, ம் ங்குற. வாய் தொறந்து பேசேன்”

“நீ எப்போடா வர்ற?”

“அங்க தான் கெளம்பிட்டு இருக்கேன். உனக்கு ஏதும் வேணுமா, வாங்கிட்டு வரவானு கேட்கத்தான் போன் பண்ணேன்”

“அப்பா முழிச்சிட்டாரு டா”

“எப்போ டி… இவ்வளோ நேரமா சொல்லவே இல்ல”

"காலையில தான்”

“ஏய் அதி, அப்பாட்ட ஏதும் பேசுனியா, இல்லயாடி? இல்ல எப்பவும் போல உர்றுனு இருந்துட்டியா?”

“…………”‌

“சொல்லு அதி”

“பேசுனேன் அகில், முதல்ல நீ இங்க கெளம்பி வா, மத்ததெல்லாம் நேர்ல சொல்றேன். சரி, அத்தை எப்பவும் போல ஏதாச்சும் சாடை பேசுச்சா?"

“இல்ல”

"சரி, லேட் பண்ணாம கெளம்பி வா. அத்தையும் கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அதிரா. 

விமலா அத்தை, ராமசாமிக்கு உடன் பிறந்தவள். பதிமூன்று வயதிலேயே மணமுடித்து ஓரிரு ஆண்டுகளில் கணவனை இழந்தவள். பிள்ளைப் பேறற்றவள்.ராமசாமிக்குத் திருமணம் முடிந்து அதிராவும், அகிலனும் பிறந்தபோது விமலா தன் பெற்றோர்களோடு இளம் கைம்பெண்ணாக ஊரில் இருந்தாள். 

அதிராவிற்கு ஆறு வயதாகும் போது, அவளின் அம்மா உமா ஒருநாள் திடீரெனக் காணாமல் போனாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின், உமா சிறு வயதிலிருந்தே நேசித்து வந்த தன் மாமன் மகனோடு சென்றுவிட்டது ஊரறிந்த செய்தியாகிப் போனது.  தன் உடன் பிறந்தோனைத் தேற்றவும், விட்டுச் சென்றவளை அவ்வப்போது தூற்றவும் வந்து சேர்ந்தவள், அதற்குப் பின்னான நாட்களில் குழந்தைகள் கவனித்துக் கொள்கிறேன் என அங்கேயே தங்கி விட்டாள். அதற்கேற்றாற் போல் வேறு திருமணம் செய்து கொள்ள ராமசாமியும் மறுத்துவிட விமலாவிற்கு வசதியாகிப் போனது.

என்னதான் தன் உடன் பிறந்தவனின் பிள்ளைகளாக இருந்தாலும், அவர்களின் மீது விமலாவிற்கு அன்பைக் கடந்து உள்ளூர சிறிது வெறுப்பு இருக்கத்தான் செய்தது. அதன் வெளிப்பாடாய் எப்போதும் உமாவைத் திட்டித் தீர்த்து அதனால் முகம் சுருங்கும் பிள்ளைகளை வேடிக்கை பார்ப்பது அவளுக்கு வாடிக்கையான ஒன்று.

 ராமசாமி  பிள்ளைகள் மீது அளவிலா அன்பு கொண்டிருந்தாலும் கூட, விமலாவையும் அவர் மீறியதில்லை. தன் குடும்பத்துக்காவும், பிள்ளைகளுக்காகவும் ஓடாய்த் தேய்பவளை மதிக்காமலோ, மீறி செயற்படவோ ராமசாமி முயன்றது கூட இல்லை. இரு பிள்ளைகளில் அதிரா தான் மிகவும் செல்லமாக இருந்தாள்.  ராமசாமிக்குத் தன் மகள் அதிரா தான் உயிர். அகிலனைப் பார்க்கும் போதெல்லாம் உமாவின் நினைவு வந்ததாலேயே ராமசாமி அவனை விட்டுச் சிறிது விலகியே இருந்தார்.

கல்லூரி நாட்களில், தன் நண்பன் ரூபனோடு கொண்ட நட்பானது காதலாக மாற, அந்த வயதிற்கே உரிய குறும்புத்தனத்தோடு சிறகடித்துக் கொண்டிருந்தாள் அதிரா. என்னதான் தந்தைக்குச் செல்ல மகளாக இருந்தாலும், தன் காதல் விவகாரத்தை அவரிடம் தெரிவிக்கும் அளவிற்கு அதிராவுக்கும் துணிவில்லை. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் ராமசாமியுமில்லை. எனவே, காதலின் நெருக்கமானது, தந்தை மகளுக்கிடையே மெல்ல மெல்ல இடைவெளியை உருவாக்கியது.

ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், ஓர் மாலை நேரத்தில் அந்த வீடே கலவரமாகிக் கொண்டிருந்தது. அகிலன் அமைதியாய் நின்று கொண்டிருக்க, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க ஆவல் இல்லாதவளாய் விமலா தன்னைக் காட்டிக்கொண்டு, சமையலறையில் நின்று மறைந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, உடைத்த நாற்காலியை உதைத்து ஓரம் தள்ளியபடி வெகுண்டு கத்திக் கொண்டிருந்தார் ராமசாமி. ஏதும் பேசாது, புத்தகப் பையை இறுகப் பற்றியபடி தலை குனிந்து நின்றிருந்தாள் அதிரா.

“நம்ம உறவுக்காரங்க வயசு என்னாகுதுனு கூட பாக்காம வயசு வந்துட்டாலே கட்டிக் குடுத்து, கடமைய முடிக்குறானுங்க. பெருசா உன்னைய நம்பிப் படிக்க வச்சா நீ என்னா வேலை பாத்துட்டு வர்ற?” எனக் கேட்டபடியே அதிராவை அடிக்க ஓடினார் ராமசாமி.

அவரைத் தடுத்து நிறுவதற்காக ஓடிவந்த அகிலனையும் அதட்டினார் ராமசாமி. அகிலன் ஓடிச்சென்று விமலாவை அழைத்து வருவதற்குள் அதிராவின் கன்னங்கள் இரண்டு அறைகளை வாங்கி ராமசாமியின் ஐவிரலை அடையாளமாகப் பெற்றுக் காட்சியளித்தது.

“நீ நாளையிலருந்து ஒன்னும் புடுங்க வேணாம். வீட்டுலயே கெட” என்று சொல்லும் போது அங்கு விமலா வந்து சேர்ந்தாள். ராமசாமியைச் சற்று அமைதிப்படுத்திப் பின் தனியே அழைத்துச் சென்று, “எனக்கு முன்னமே ஏதோ தோனுச்சுடா.  இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, காலம் கடத்தாம நல்ல வரனா பாத்து முடி” என்றாள் விமலா.

மறுநாள் காலையில், எப்போதும் போல் அதிரா கல்லூரிக்குக் கிளம்பிய போது, “யார கேட்டு நீ காலேஜி கெளம்புற? நீ படிச்சுக் கிழிச்சதெல்லாம் போதும், உள்ள போ” என்றார் ராமசாமி.

“எதுக்காகவும் என்னோட படிப்ப விட முடியாதுப்பா” என்றாள் அதிரா.

“நீ படிக்கப் போயிருந்தா பரவாயில்லையேம்மா. உன் அம்மா தான் இவன ஏமாத்திட்டு ஓடிப்போனானு பாத்தா, நீயும் ஏன் அவனக் கொல்ற” என்று தன் பங்குக்கு வந்து நின்றாள் விமலா.

“அத்த, நீ கொஞ்சம் சும்மாயிரு” என அதிரா சொல்லவும் ராமசாமி சினம் தலைக்கேறியவராய், “நீ கொழுப்பெடுத்துப் பொறுக்கிட்டு வந்துட்டு, அவள ஏன் சும்மா இருக்க சொல்ற? அவ இல்லாம நீங்க இல்லங்குறது நெனப்புல இருக்கட்டும்” என்றார்.

“அதுக்கு அத்த பேசுறதெல்லாம் சரியாகிடுமா. அவங்க எப்படி நடந்துக்குறாங்களோ அது மாதிரி தான் நாங்களும் நடந்துப்போம்” என்றாள் அதிரா.

இருவருக்குமான வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே போக, கோவம் தலைக்கேறிய ராமசாமி “உன் ஆத்தா புத்தி தான உனக்கும் இருக்கும். எப்டி ஏமாத்திட்டு ஓடிப்போலான்னு பாத்துட்டு இருக்கியா?” என்று வன்மத்தோடு சுறுக்கென சொல்லைக் கொட்டிய போது, மனம் நொறுங்கி சில்லு சில்லாய் உடைந்துப் போனாள் அதிரா. அகிலன் கண் கலங்கியபடியே நின்றிருக்க விமலாவோ எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது இயல்பாக நின்று கொண்டிருந்தாள். 

சற்றே தன்னைத் திடப்படுத்திக் கொண்டவளாய், “நேசிக்குறவங்களோட வாழவிடாம இது மாதிரிலாம் பண்ணா யாரா இருந்தாலும் ஓடத்தான் செய்வாங்க” என்று தன் தந்தையைப் பார்த்து அழுத்தமாய் கூறினாள் அதிரா. அடுத்த நொடியே அவளின் மீது பாய்ந்த ராமசாமி, அதிராவின் முடியைப் பற்றி முரட்டுத்தனமாக அடிக்கத் தொடங்கினார்..அகிலன் தடுத்தபோது அவனுக்கும் சில அடிகள் விழுந்தது.

அதுவே தந்தையும் மகளும் கடைசியாக பேசிக் கொண்ட நாளாகிப் போனது. அதன் பின்னான நாட்களில் அதிரா யாரோடும் அதிகம் பேசுவதில்லை. எப்படியோ தன் கல்லூரிப்படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்திருந்த அவளுக்கு இதுவரை எத்தனையோ மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் அதிரா யாரையும் இதுவரை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. 

ஒருமுறை, அதிரா பணியிடத்திற்கு அவளைக் காண வந்த ரூபன், அதிராவைத் தன்னோடு வந்துவிடும்படி மன்றாடினான். ஆனால், அதிரா அதற்கு ஒப்புக்கொள்ளாததோடு, அவனுடனான காதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்தாள்.

முழுதாய் ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தான் தற்போது ராமசாமி மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவளின் மனமானது மருத்துவர்கள் கூறிய சொற்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. வெடித்து வெளியேறிய அழுகையை அடக்க முடியாது அந்த அறையை விட்டு வெளியேறி, முன்பு அமர்ந்திருந்த அதே இருக்கையில் வந்தமர்ந்தாள். இப்போது காக்கையின் கத்தல் அவளின் காதுகளை எட்டவில்லை, ஜன்னலின் வழி அவளின் ஆழ்மன நினைவுகளும் விரிவடையவில்லை. தன்னையறியாது, தடை போட விரும்பாது அழத்தொடங்கினாள் அதிரா.

யாரோ தன் தோள்களை ஆதரவாய் வருடுவதை உணர்ந்த அதிரா, அழுகையை நிறுத்தி நிமிர்ந்துப் பார்த்தாள். அகிலன் கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். விமலா அதிராவைப் பார்த்தபடி ராமசாமி இருந்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

“ஏய் அதி, இப்ப எதுக்கு அழற நீ, அப்பாக்குத் தான் சரியாகிடுச்சுல”

“அப்பாவ நாம கவனிக்காம விட்டுட்டோம்டா”

“அப்பாவ நல்ல ஆஸ்பிட்டல்ல தான சேத்திருக்கோம் அதி, அவருக்கு தேவையான எல்லாமே செஞ்சிட்டு தான் இருக்கோம்”

“அகில், நான் இதப்பத்தி பேசலடா. காலையில சீனியர் கன்சல்டன்ட் வந்த பாத்துட்டு என்ன சொன்னாரு தெரியுமா? இது முதல் முறையில்ல, இதுக்கு முன்னாடி சின்ன சின்னதா ஏதாவது அறிகுறி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அந்த அறிகுறிகள சரியான நேரத்துல கண்டறிஞ்சு ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தாலே இந்த நிலை வந்திருக்காது. இனியாவது கவனமா பாத்துக்குங்க. சரியான நேரத்துக்குத் தேவையான மருந்து மாத்திரைகள குடுங்க. இல்ல, கை கால் விழுந்துடும்னு சொன்னாருடா"

“ஏய் அதி, பயப்படாத அப்பாக்கு ஏதும் ஆகாது”

“டேய் அகில், அவரு கூடத்தான இத்தனை நாளும் இருந்தேன். ஆனாலும் அவர கவனிக்காம விட்டுட்டேன்ல. ஒருவேளை நான் அவருட்ட பேசியிருந்தா, சொல்லிருப்பாருல. என்னோட கோபம் தான் அவரு மேல இருந்த அன்பையும், அக்கறையயும் இல்லாம ஆக்கிடுச்சு. என்னால தான்டா எல்லாம்” என்று சொல்லி கதறி அழுதாள் அதிரா.

அதே நேரம், ராமசாமியைக் காணச் சென்ற விமலா,

“ராமு, உன்ன நல்லபடியா பாத்ததும் தான்டா எனக்கு உயிரே வந்துச்சு. உன் செல்லப்பொண்ணு தான் ஒருவாரமா வேலைக்குப் போகாம பகல்ல இங்கயே இருந்து உன்ன பாத்துக்கிட்டா தெரியுமா” என்ற போது, ராமசாமி சத்தமின்றி அழுது கொண்டிருந்தார்.

“டேய் ராமு, இப்ப தான் உடம்பு தேறியிருக்கு. அழாதடா”

“எப்டிக்கா அழாம இருக்குறது. என் மேல உயிரே வச்சிருந்தா. அவக்கிட்ட நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. ஏழு வருசமாச்சுக்கா அவ என்கிட்டே பேசி, அவ மனசு எவ்ளோ காயப்பட்டிருந்தா அவ என்கிட்ட இத்தனை வருசம் பேசாம இருந்திருப்பா. என்ன தான் கோவம் வந்திருந்தாலும் பெத்த பொண்ணுக்கிட்ட நான் அப்படி பேசியிருக்க கூடாதுக்கா” என்றார் ராமசாமி.

“அதி, அதான் இப்ப பேசிட்டல. இனி அப்பாவ நல்லா பாத்துக்கலாம்” என்றான் அகிலன். 

“இனி பாத்துக்கலாம் அகில். ஆனா நடந்ததையும் அதனால இழந்ததையும் மாத்த முடியாதுல. அதுக்கான பலனை அனுபவிச்சு தானே ஆகணும். அப்பாதான  உரிமையில திட்டுனாரு. அதுக்காக  நான் இவ்ளோ கோவத்தோட இருந்திருக்க வேண்டாம் அகில்” என்றபடி சாளரத்தின் வழி வெறித்துப் பார்த்தாள். 

அதிராவின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தார் ராமசாமி.


குறள் : 


சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


பொருள் : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.


கொல்லி - ஆலன்

கொல்லி

- ஆலன்

ங்கங்கே சிராய்ப்புக் காயங்களாய் இருந்தது. விஜயன் கை கால்களைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான், இரவு கண் மண் தெரியாமல் ஓடியதில் கிடைத்த பரிசு அவை. ஸ்லிப்பர் செருப்பின் பிய்ந்து போன கவட்டை முனையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு வெறுங்காலுடன் பக்கத்திலிருந்த ஓடையை நோக்கிப் போனான். பேன்டும், சர்ட்டும் பாறையில் காய்ந்திருக்க, ஈர ஜட்டியுடன் கையை குறுக்கே கட்டியவாறு எங்கோ பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். இருக்கிற பசியில் இந்தக் காட்டின் பச்சை இலைகளை சாப்பிட்டு விடலாமா என ஆங்காரமாயிருந்தது. தான் இங்கேயே பசியால் செத்து விடுவோமோ என்ற அச்சத்தில் வயிற்றுக்குள் அமிலம் பாய்ந்திருந்தது.

ஒருசில முறை நண்பர்களுடன் இதே இடத்திற்கு வந்திருக்கிறான் ஆனால், இப்போது அவன் இங்கிருப்பான் என யாருக்குத் தெரியும்?. யாருக்காக இப்படி சாக வேண்டும், ஏன் இப்பிடி இந்தப் பாழுங்காட்டிற்குள் வந்து ஒரு எலியைப் போல பதுங்க வேண்டும் எனக் கண்டபடி நினைவுகள் ஓடின. பசிமயக்கத்தில் விஜயன் அசந்துவிட, தொலைவில் காலடி ஓசை கேட்டுப் பதறியெழுந்து மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான். ஆனால் அவன் பேண்டு, சர்ட்டு அவன் முன்னே தான் காயந்து கொண்டிருந்தன.

ஓசை வந்த புதரையே பாரத்துக் கொண்டிருந்தவன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். வந்தவன் அவனுடைய நண்பன் தான்; உற்சாகம் கையில் இருந்த தூக்குவாளி தான் காரணம். என்ன ஏது என்று கூட கேட்காமல் தூக்கு வாளியைப் பறித்து அள்ளி அள்ளி விழுங்கத்தொடங்கினான். வாயின் இருபக்கமும் அமுக்கி அடக்கித் தின்பதைப் பார்க்கும் போது குரங்கு போலிருந்தான். பசிதான் மனிதனின் விலங்கு எச்சம், பேராசை அவனுடைய மனித எச்சம். ஓடையில் கை கழுவிவிட்டு; இப்போது தான் வந்தவனை உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.

“தர்மா! நான் இங்க தான் இருப்பேன்னு எப்பிடிடா தெரிஞ்சது?”

“நேத்தி ராவு புல்லா டவுன அலசிருக்கானுவோ. ஊரெல்லாம் பேச்சாயிருச்சில்ல”

“அப்படியா?”

“ஆமா..! டவுனுக்குள்ள தேடி முடிஞ்சி இன்னிக்குக் காலைல நம்ம சிரமலைக்கே வந்துட்டாங்க”

“வந்து”

“எல்லாரையும் கூப்பிட்டுக் கேட்டானுவோ. என்னையும் கேட்டானுவோ. யாருக்கும் தெரியல, எனக்கும் தெரியாதுன்னு சொன்னேன். விடு விடுவென இறங்கிப் போயிட்டானுவோ”

“யாரையும் ஒன்னும் செய்யலியா?”

“ம்கூம். இல்ல” என்ற தர்மன் மிரட்சியான பார்வையோடு விஜயனைப் பார்த்தான்.

“என்ன பாக்குற?”

“இல்ல, விஜயா அவன் கேட்டதுக்கு நீ கொஞ்சம் அவசரப்பட்டியோன்னு தோனுச்சி”

“ஆமா, இப்ப நினைச்சா அவசரப்பட்டு அந்த வேலையை செஞ்சிருக்கக் கூடாது தான்னு தோணுது. ஆனாலும் அவனும் அப்பிடி கேட்ருக்க கூடாதுல்லடா”

“அவன்ட அதிகாரமிருக்குடா. காக்கி உடுப்பு போட்டவனுக இதுக்கு முன்னாடி பண்ணாத அட்டூழியமா?. ஏதோ அவன் அந்த கேள்விய கேட்டுபுட்டான்.இது அவனுகளுக்கு வழக்கம் தான விஜயா”

“பின்ன என்னடா, ஊரடங்கு போட்ருக்கானுவோ. ஆனா, மருந்து மாத்திரை வாங்க போலாம்னு விலக்கு இருக்கு. அதத்தானே அன்னிக்கு அந்த வேல்ராஜ் சொன்னான். அவனைப் போய் அடிச்சி மூஞ்சி எல்லாம் பேத்துருக்கானுவோ. இவன் கேட்ட மருந்து கடையில இல்ல, பில்லும் இல்ல, ஆனா கொஞ்சம் விசாரிச்சி அந்த மெடிக்கல்காரனக் கூப்பிட்டு கேட்ருந்தா தெரிஞ்சிருக்கும். இப்பிடி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறதுக்கா இவனுகளுக்கு அதிகாரம்? மாட்ட அடிச்சாகூட கேக்க ஆளு இருக்கு. நம்மளப் போல படிக்காத சனங்களுக்கே யாரு தான் கேப்பா? அதும் கேக்குறான் பாரு ‘மருந்து வாங்க போனியா ? இல்ல ரப்பர் வாங்க போனியானு?’ அப்ப தான் நண்பா எனக்கே தாங்க முடியல சட்டைய புடிச்சி செவுத்துல எக்கிட்டேன். எல்லாரும் புடிச்சி விலக்கி விட்டப்புறம் தெரிஞ்சது. ஆனா அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்சிட்டுனு தோனிச்சி."

“நீ தப்பிச்சி ஓடினதுக்கு அப்பறம் வேல்ராஜ விட்டானுக. ஆனா உன்ன எங்கிருந்தாலும் பிடிக்காம விடமாட்டேன்னு அந்த ஆளு துடிக்கிறான். மனு குடுக்க வந்த கூட்டத்துல நீ அவன் சட்டய புடிச்சது அவனுக்கு வெசனமாயிட்டு. காக்கி மேல கை வச்சிட்டான் இனி அவன் செத்தான்டான்னு சொன்னான்”

“ம். இப்ப என்ன பண்றது. கோவப்பட்டு முடிச்ச பின்னாடி தான் மனசுக்கே படுது”

“சரி சரி, இப்பிடியே புலம்பாம காட்டுப் பாதையா போய் நல்லமலை காட்டுக்குப் போயிடு. போற வழில இந்த கம்பு கிழங்கு சுட்டுச் சாப்பிட்டுக்க. இடும்பாறு பக்கத்துல மண்டபத்துல ரவைக்குத் தங்கிட்டு, காலைல மறுபக்கம் இறங்கிட்டா தப்பிச்சிறலாம். கொஞ்ச நாள் போகட்டும். என் மேலயும் கண்ணு வச்சிருப்பாங்க” என்ற தர்மன் கையில் வத்திப் பொட்டி, பீடிக்கட்டு, கம்புக் கிழங்குத் துண்டுகள், ஒரு சிகப்புத்துண்டு, நூறு ரூபா பணமும் கொடுத்தான். கண்ணீர் மல்க அவனை கட்டித் தழுவினான் விஜயன்.

அவன் போவதையே பாரத்துக் கொண்டிருந்துவிட்டு. உடுப்பு மாற்றி நல்ல மலை நோக்கி நடக்கத் தொடங்கினான். இருட்டுவதற்குள் இடும்பாறு மண்டபத்தை எட்டிவிட வேண்டும் என எட்டி நடை போட்டான். சூரியன் மெல்ல இறங்கி மரங்களின் ஊடே கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கியிருந்தான். இடும்பாறு தூரத்தில் சலசலக்கும் சத்தம் கேட்டது. மனமே கனத்திருந்தது. கையில் கிடைத்த சுள்ளிகளைப் பொறுக்கி, தீமூட்டி கிழங்குகளைச் சுடத் தொடங்கினான்.
மதியம் நடந்ததில் அசந்து தூங்கி விட்டான். விடிய கருக்கலில் காட்டுக் குருவிகளின் சலசலப்பில் எழுந்து விட்டவன், தூரத்தில் வண்டிமாடு வரவே மண்டபத்திலிருந்து இறங்கி வந்தான். மாட்டுக்காரன் மலை இறங்கி மறுபக்கம் போகிறேன் எனச் சொன்னான். விஜயனும் மலையிறங்க வேண்டும் எனச் சொல்லி வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி அந்த காட்டுப் பாதையில் இறங்கத் தொடங்கிருந்தது. விஜயன் பீடி பற்ற வைத்து வண்டிக்காரனுக்கும் ஒன்று கொடுக்க வண்டிக்காரன் பேசத் துவங்கினான்.

“எங்கிருந்து வாறீங்க தம்பி”

“நல்லமலை தானுங்க” வேண்டுமென்றே மாற்றிச் சொன்னான்.

“வண்டிக்காரன் தலையாட்டி விட்டு என்ன பொழப்பு! இந்த மலைநாட்டு பொழப்பு. ஆத்திர அவசரத்துக்கு எங்கேயும் போக முடியாது. ஆனைக்கும், சிறுத்தைக்கும் பயந்து பயந்தே வாழணும்”

“ஆமாங்கய்யா”

“கேள்விப்பட்டீங்களா தம்பி! உங்க பக்கத்து ஊரு சிரமலைல வெள்ளாமையெல்லாம் தீ வச்சுப்புட்டாங்களாம். சனங்கள்லாம் ஒரே பேச்சு”

விஜயனுக்குச் சுரீரென்றது. அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

“ஏங்கய்யா என்னாச்சு”

“அது தம்பி யாரோ ஒரு ஆளு தப்பிச்சி ஓடிட்டானாம். அவனைத் தேடி நேத்தி சாயந்தரம் ஊருக்குள்ள இறங்கி வீடு வீடாத் தேடி எல்லாத்தையும் உடச்சுப் போட்டானுகளாம். கடைசில யாரும் ஒன்னும் சொல்லலயாம். அப்புறம் ராத்திரி யாரோ வெள்ளாமையெல்லாம் தீ வச்சிட்டாங்களாம். என்ன கொடுமை பாருங்க தம்பி. ஒரு ஆளுக்காக அவனைச் சேர்ந்த ஆளுகள்ளாம் ஒத்துமையா இருந்துருக்காங்க. ஆனா வருசம் பூரா பாடுபட்ட வெள்ளாமை போச்சே தம்பி. இனி அந்த மக்க அடுத்த ஆறுமாசம் பசியால வாடுமே. என்னமோ போங்க”

அவர் சொல்லச் சொல்ல பதில் ஏதும் பேசாமல் நெஞ்சு வெடித்து அழமுடியாமல் சிலையாகிப் போயிருந்தான்.

“தம்பி, தம்பி என்ன ஒன்னும் சொல்லமாட்டக்கீக” வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான். விஜயன் தொலைவில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மறுபக்கம் இறங்கி சமவெளி வரத் தொடங்கியிருந்தது. வண்டி மாடு ‘சல் சல்’ எனத் தாளத்தோடு வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது.
நினைவு வந்த விஜயன், “அய்யா! வண்டி நிறுத்துங்கய்யா” என்றான்.

“ஏந்தம்பி இதோ ஊரு வந்துட்டு”

“இல்லங்கய்யா, நான் மண்டபத்துலய ஒரு பொருள விட்டுட்டு வந்துட்டேன். நான் திருப்பி எடுக்கப் போறேன். இது வர கொண்டு வந்ததற்கு நன்றிங்கய்யா” என்று சில ரூபாய்த்தாள்களை நீட்டினான்.

“அட போங்க தம்பி, போக்கு வண்டி தானே. இதுக்குப் போயிட்டு. பாத்து போங்க; இருட்டுறதுக்குள்ளே மண்டபத்துக்குப் போயிடுங்க”

“சரிங்கய்யா” என்ற விஜயன் போகின்ற வண்டியையே பார்த்திருந்து விட்டு அங்கேயே நடக்கத் தொடங்கியிருந்தான். காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் காதைத் துளைத்தது. 'ஓ' என அழத்தொடங்கினான். அவனுடன் சேர்ந்து கண்ணீர்த்துளிகளும் மலையேறின.
குறள்:

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

குறள் எண்: 306

தான் கொண்ட சினமானது தன்னை அழிப்பதோடு, தன்னைக் காத்து கரை சேர்க்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்து விடும்.