திங்கள், 25 மார்ச், 2019

கடன் அன்பை முறிக்கும் - குறள் கதை

கடன் அன்பை முறிக்கும்
- நீர்ப்பறவை

சென்னை நகரின் எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கண்ணன்,  மெல்ல மெல்ல தன் இரு சக்கர வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில், அவனின் மனைவி திவ்யா, ஒரு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தன் மகள் கண்மணியை மடியில் அமர்த்தியவாறு அமர்ந்திருந்தாள். வண்டிகளிலிருந்து வெளியேறிய வெப்பத்தைக் குழந்தை தாங்காது என்று கண்ணன், ஒரே இடத்தில் நின்றுவிடாமல் சிறு இடைவெளிகளிலும் புகுந்து முன்னேறினான். குழந்தை வண்டிகளைக் கண்டு மழலைமொழியில் ஏதேதோ பேசிக்கொண்டும், கையசைத்தும், மற்றவர்களைப் பார்த்து சிரித்தபடியும் இருந்தது. திவ்யாவோ எவ்வித சலனமும் இல்லாமல், சுற்றி நடப்பவற்றில் மனம் ஒன்றாமல், தன் பிள்ளையை இறுக்கப் பிடித்தவாறு அமர்ந்திருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை வளாகம் வந்துவிடும். பின், இயல்பாக எப்போதும் அரங்கேறும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தபோது, திவ்யாவிற்குக் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. பெருமுயற்சியோடு தேங்கிய கண்ணீரை வழியவிடாமல் நிறுத்திவிட்டாள். ஆனால், தொண்டையில் உண்டான ஒரு வலியை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சிந்தனையிலிருந்து நிகழுலகிற்குள் அவள் நுழைந்தபோது, கண்ணன் மருத்துவமனையை அடைந்திருந்தான். இப்போது, இயந்திரத்தனமாகச் செயல்படத் தொடங்கிய திவ்யா, வண்டியிலிருந்து இறங்கியதும், குழந்தையைத் தூக்கி, கண்ணனின் கைகளில் கொடுத்தாள். ஆனால், குழந்தையோ அவளின் கழுத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அதன் அப்பாவிடம் செல்ல மறுத்தது. கண்ணன் எவ்வளவு அமைதிப்படுத்தியும், குழந்தை வர மறுத்து அடம்பிடித்துக் கத்தியது.
கண்மணியைச் சுமந்தபடியே மருத்துவமனையின் முதன்மை கட்டிடத்தின் உள்ளே நுழைந்த திவ்யா, பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் தன் ஆள்காட்டி விரலைப் பதித்துவிட்டு, வெளியே நின்றிருந்த கண்ணனை நோக்கி நடந்தாள். கண்ணன் அவளிடமிருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தையைப் பிரித்தெடுக்க ஆயத்தமாகக் காத்திருந்தான். அவனின் அருகே சென்றதும், சற்று அமைதியடைந்திருந்த குழந்தையைச் சட்டென வாங்கிக் கொண்டான்.

இப்போது குழந்தையின் கதறல், பல மடங்கு சத்தமாகக் கேட்டது. வெளியில் நின்றிருந்த நோயாளிகளும், அவர் உறவுகளும் வேடிக்கை பார்க்க, எதையும் கவனிக்காதவளாய், அழுகைச் சத்தத்தைக் காதில் வாங்காதவளாய் விறுவிறுவென்று வேறொரு கட்டிடத்தை நோக்கி நடந்தாள், கண்ணீர் வழிய.

அவள் அந்த மருத்துவமனையின் புறநோயாளிகள் துறையில் பணிபுரிகின்றாள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர்ந்த திவ்யா, ஐந்து ஆண்டுகளாக பணியில் இருந்தாள். பின் திருமணம் முடிந்து மகப்பேறு காலவிடுப்பில் சென்ற திவ்யா,  சில மாதங்களுக்கு முன் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பினாள்.

காதலித்து மணமுடித்த கணவன் ஏழ்மை காரணமாகப் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தான். திவ்யா ஏழ்மையையும், படிப்பையும் காரணம் காட்டி கண்ணனை ஒதுக்காமல், அவனின் நன்மனம் கண்டு காதலை ஏற்று, திருமணம் செய்து கொண்டாள். கண்ணன் மரத்தச்சர் வேலை பார்த்து வந்தாலும், அதில் போதிய வருமானம் இல்லாமல் போனது. திவ்யாவின் வருமானம் போதுமானதாக இருந்ததால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் தான் திவ்யா கருவுற்றாள்.தனியார் மருத்துவமனை என்பதால், அவளின் மகப்பேறுக்குப் பின் மூன்று மாத காலம் மட்டுமே அவளுக்கு விடுப்பு கிடைத்தது. 

சிறுவயதிலேயே தாயை இழந்திருந்த திவ்யா, தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கண்ணனின் அம்மாவையே நம்பியிருந்தாள். கண்ணை மூடித் திறப்பதற்குள் மூன்று மாதங்கள் உருண்டோட, இரண்டு நாட்களில் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையில், கண்ணனின் தாயும் வர மறுத்துவிட்டார். கண்ணனின் வருமானம் குறைவு என்பதாலும், பலநாள் வேலை இருக்காது என்பதாலும், அவள் வேலையை விட முடியாமல் தவித்தாள். 

குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லாததாலும், வறுமை சூழ்ந்து விடக் கூடாதென்ற அச்சத்தாலும், இருவரும் சேர்ந்து, கண்ணனே வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வதென முடிவு செய்தார்கள்.

குழந்தையைக் கண்ணனே பார்த்துக் கொள்ளப் போகிறான் என்றாலும், திவ்யாவிற்கு உள்ளூர ஒரு நெருடலும், அருகேயிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்து கொண்டுதான் இருந்தது.

திவ்யா விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தாள். நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருந்ததால், அவள் மிகக் கடினமாக வேலை பார்க்க வேண்டியிருந்தது. அவளுக்குக் கிடைக்கும் சிறு இடைவேளையிலும், உணவு நேரத்திலும் யாருடனும் பேசாமல் தனித்தே காணப்பட்டாள். அந்நேரங்கள், அவள் தன் குழந்தையோடும் கணவனோடும் பேசும், பொன்னான நேரங்களானதால்.

சில மாதங்களுக்குப் பின், மருத்துவமனை வளாகத்தினுள்ளே அமைந்திருக்கும், வங்கியில் கடன் வழங்குவதை திவ்யா தெரிந்து கொண்டாள். அவளது சம்பளக் கணக்கும் அந்த வங்கியில் தான் இருந்தது. நாமும் கடன் பெற்று, கண்ணனுக்குச் சொந்தமாக ஒரு கடையை வைத்துக் கொடுத்தால் என்னவென்று, அவளுக்குச் சட்டென ஓர் எண்ணம் உதித்தது.

பணி முடிந்து வீடு திரும்பியவள், முதலில் கண்ணனிடம் தன் யோசனையைத் தெரிவித்தாள். கண்ணனுக்கும், அவள் சொல்வது சரியெனத் தோன்றியது. அதோடு தன் குழந்தையைக் கவனித்துக் கொள்ள இனி யாரையும் தேட வேண்டிய கட்டாயமும் இருக்காது, கண்ணனும் சொந்தமாக வேலை செய்வான் என நிம்மதியடைந்தாள். அதே நேரம், தன் குழந்தையைத் தன்னால் பார்த்துக் கொள்ளமுடியவில்லையே என ஏங்கவும் செய்தாள்.

அடுத்த நாள் வேலைக்குச் சென்றவள் முதல் வேலையாக வங்கிக்குச் சென்று, லோன் பெறுவதற்கான நடைமுறைகளைப் பற்றி விசாரித்தாள். குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பணி புரிந்திருக்கவேண்டுமென்றும், நீங்கள் பணியில் சேர்ந்து சிலமாதங்களே ஆகியிருப்பதால், உங்களால் இக்கடன் வசதியைப் பெறமுடியாது என்று கூறியதைக் கேட்டுக் கலக்கமுற்றாள்.

அவள் இதற்கு முன்பே இங்கு பணிபுரிந்தவிவரத்தைச் சொல்லியும், அவர்கள் மறுத்தனர். அவளின் இந்த வங்கிக் கணக்கு, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதைச் சொல்லித் தட்டிக் கழித்தனர். சற்றே குழம்பியவளாய், தன் மேலாளரைச் சந்தித்து நடந்த விவரங்களைச் சொல்லி, உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அவரும் தன்னால் முடிந்த உதவியை அவளுக்குச் செய்வதாகக் கூறி அனுப்பினார். வீடு திரும்பிய திவ்யா, மகிழ்வோடு காணப்பட்ட கண்ணனிடம் சொல்ல மனமில்லாமல் மறைத்துவிட்டாள்.

அன்றிரவு முழுக்க உறக்கமில்லாமல் தவித்த திவ்யா, எப்படியாவது தன் கணவனுக்கு உதவிட வேண்டுமென்று நினைத்தாள். பசியில் அழுத குழந்தையை அள்ளிய திவ்யா, பால் புகட்டிக் கொண்டே, கண்மணியை வெறித்துப் பார்த்தாள். பகல் நேரத்தில் குழந்தை பால் அருந்தும் புட்டியைப் பார்த்தபோது மனம் துடித்து வேதனைப்பட்டாள். வேலையை விட்டு நிற்கவும் முடியாமல், வேலைக்குச் செல்ல மனமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருந்தாள். 

அன்று புறநோயாளிகள் பிரிவில் அதிகப்படியான நோயாளிகள் இல்லாததாலும், சோர்வாலும், தன் மேலாளரிடம் தெரிவித்து விட்டு, தேநீர் பருக உணவகம் சென்றாள். வங்கியின் மேல் தளத்தில் இருந்தது அந்த உணவகம். அவள் முன்னிருந்த தேநீர்க் கோப்பை மெலிதான ஆவியை விட்டு தன் வெப்பத்தை இழந்து கொண்டிருந்தது. அந்தக் கோப்பையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா, "ஹாய்” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள். வேறு துறையில் பணிபுரியும் ரகு புன்னகைத்தபடி,  அவள் பின்னாலிருந்து வந்து அவள் முன்னிருக்கையில் அமர்ந்தான். திவ்யா மகப்பேறு சென்ற போது அவன் பணியில் சேர்ந்ததாலும், இருவருக்குமான பணிநேரத்தில் மாற்றம் இருந்ததாலும் அவர்களுக்குள் அவ்வளவாகப் பழக்கமில்லை.

சிறிது குழப்பத்தோடே பதில் புன்னகையை உதிர்த்துவிட்டு, அமைதியாகத் தனது தேநீரை எடுத்துப் பருகத் துவங்கினாள்.

“உங்கள பத்தி சார் சொன்னாரு", என்றவனை, திவ்யா உற்று நோக்கியவாறே, “என்ன சொன்னாரு”என்றாள்.

"நீங்க வசதியானவங்கன்னு சொன்னாரு. அப்புறம் ஏன் லோனுக்கு முயற்சி பண்றீங்க? உங்க அப்பாகிட்ட உதவி கேட்கலாம்ல” என்றான்.

“கண்ணனுக்கு அப்படி கேக்குறதுலாம் பிடிக்காது” என்றாள்.

“சரி என்னோட வாங்க” என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென இறங்கி வங்கிக்குள் சென்றான்.

ஏதும் புரியாதவளாய் அவனைப் பின் தொடர்ந்தவள், அவனோடு வங்கிக்குச் சென்று மேலாளர் அறையின் வெளியே நின்றாள். சில நிமிடங்களுக்குப் பின் அறையை விட்டு வெளியேறிய ரகுவின் கையில், கடன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் இருந்ததைக் கண்டு திகைத்து நின்றாள் திவ்யா.

ரகு விண்ணப்பத்தை அவள் கைகளில் கொடுத்துவிட்டு, "மேனேஜர்கிட்ட எல்லாம் பேசியாச்சு, இந்தாங்க இந்த formல இன்டு மார்க் இருக்குற எடத்துல கையெழுத்து, 47ம் பக்கத்துல மட்டும் ரெண்டு பேருகிட்ட surety sign வாங்கிடுங்க" என்று கூற, திவ்யாவுக்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை. கையில் விண்ணப்பத்தை வாங்கி, "ரொம்ப தேங்கஸ்ங்க" எனக் கூற, சிரித்துக் கொண்டே நகர்ந்தான் ரகு. 

கண்ணனைத் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திவ்யா, இப்போது இருவரிடம் வாங்க வேண்டிய surety sign நினைத்துக் கவலைக் கொண்டாள்.

தன் பணியிடத்திற்குச் சென்ற திவ்யா, மேலாளர் உட்பட தன்னோடு பணிபுரியும் அனைவரிடமும், தனக்காகக் கையெழுத்திட முடியுமா எனக் கேட்டுப் பார்த்தாள். ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழித்தனர். செய்வதறியாது தவித்த திவ்யா, வீடு திரும்பியதும், கண்ணனிடம் நடந்தவைகளைக் கூறி வருத்தமுற்றாள். பின் விண்ணப்பப்படிவத்தில் தன் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றிதழ்களை இணைத்தாள். நாளை எப்படியாவது யாரிடமாவது தன் நிலையைச் சொல்லிக் கையெழுத்து வாங்கிவிட முடிவு செய்தாள்.

அடுத்த நாள் காலை திவ்யா பணிக்குச் சென்ற போது, அவளுக்காக ரகு காத்திருந்தான். 

“என்னங்க, எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?”என்றான்

“இன்னும் இல்லை” என்றவளிடம், “ஏங்க அந்த பேப்பர்ஸ் எல்லாம் குடுங்க” என்றான்.

தன் பையிலிருந்து விண்ணப்பப் படிவத்தை எடுத்து நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்ட அவன், அங்கிருந்து வெளியேறி, சிறிது நேரத்திற்குப் பின் திரும்பினான். 

“ஏங்க surely signலாம் வாங்கியாச்சு, இந்தாங்க எடுத்துட்டுப் போய் பேங்க்ல குடுங்க”என்றவன் “குடுத்துட்டு வந்துடாதீங்க, மேல கேன்டீன்ல வெயிட் பண்ணுங்க”, என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது திவ்யாவிடம் ஏனோ காணாமல் போனது. விண்ணப்பப் படிவத்தை வாங்கியவள், அதை வங்கியில் கொடுக்க மனமில்லாமல் நோயாளிகளைக் கவனிக்கத் துவங்கினாள்.

சில மணி நேரங்களுக்குப் பின் அவளின் intercomல் அழைத்த ரகு, “ஏங்க, நீங்க வருவீங்கன்னு நானும் ரொம்ப நேரமாக்  காத்திருக்கேன், அந்த இடத்தை விட்டு அசைய மாட்டுறீங்க”என்றவனிடம், “சாரி, ரகு என்னால இப்ப எங்கயும் வர முடியாது, நிறைய பேஷன்ட் காத்திட்டு இருக்காங்க பாவம்” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

திவ்யா ஆழ்ந்ததொரு குழப்பத்தில் மூழ்கியிருந்தாள். ரகு ஏன் நமக்கு உதவி செய்கின்றான். 'மேலாளர் உதவச் சொன்னதாலா, இல்லை வேறேதும் நோக்கம் இருக்கின்றதா' என அவள் மனம் மீண்டும் மீண்டும் கேட்டுத் துளைத்தெடுத்தது. பணியிடத்தில் பலமுறை ரகுவைப் பார்க்கவும், பேசவும் நேரிட்ட பொழுதும் திவ்யா பணி நிமித்தமாக பேசினாளே தவிர வேறெதுவும் பேசவில்லை. ரகு தன்னையே சுற்றி வருகிறானா, இல்லை நமக்குத் தான் அப்படி தோன்றுகிறதா என்று நினைத்துக் கொண்ட திவ்யா, அவன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் துவங்கினாள். 

மாலையில் பணிநேரம் முடியும் நேரம் ரகு, திவ்யாவைத் தேடி வந்தான். அங்கு திவ்யாவும், மேலாளரும் இல்லாததை உணர்ந்த ரகு, திவ்யாவின் பொருட்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

மருத்துவரைச் சந்திக்க நோயாளிகளைப் பார்க்கும் அறைக்குள் சென்றிருந்த திவ்யா, சில ரிப்போர்ட்களோடு வெளியே வந்தாள். பின் மேலாளர் அறையை நோக்கிச் சென்றவள், அங்கு ரகு இருப்பதைக் கண்டு சற்றே மறைந்து நின்றாள். அவனை உற்று நோக்கிய போது, ரகு அவளின் வெள்ளை நிற coatஐ அவனின் முகத்தருகே வைத்து நுகர்ந்தும், தன் முகத்தோடு தேய்த்தும் கொண்டிருப்பதைக்  கண்டு அதிர்ந்தாள். செய்வதறியாது நின்றவள் வெளியேறிய அவனைக் கண்டு சிறிது தடுமாறினாள்.

“வந்துட்டீங்களா, ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? ”என்றான் ரகு.

"ம்..." என்றவள் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“உங்களதாங்க,  என்னாச்சு? காபி குடிக்கப் போலாமா?”

“ம், இல்லங்க, வேலை இருக்கு” என்றவளை, “எப்பவும் எதைக் கேட்டாலும் ம் தானா, நல்லாத்  தான் பேசுங்களேன்” என்றான்.

ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவள், அறையினுள் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தாள். தன் குடும்ப சூழ்நிலையையும், குழந்தையையும் நினைத்துக் குழம்பிப் போனாள். தன் பின்னால் நெருக்கமாக யாரோ நிற்பதாக உணர்ந்த திவ்யா, திரும்பிப் பார்த்தபோது ரகு நின்றிருந்தான்.

“ஏங்க பேங்க்ல பார்ம் இன்னும் கொடுக்கலயா? நான் மேனஜர்கிட்ட பேசுறேன், உடனே கிடைச்சிடும்”,என்றவனை விட்டு விலகி வந்த திவ்யா படபடத்து நின்றாள். 

“உங்களையே சுத்தி சுத்தி வரேன், பேசக் கூட மாட்டுறீங்க”என்றவன், “வீட்டுக்கு வாங்களேன், பக்கத்தில் தான் இருக்கு, wife அம்மா வீட்டுக்குப் போய்ருக்காங்க, எந்தத் தொந்தரவும் இருக்காது”, என்றவன் சில நொடிகளுக்குப் பின், ”லோன் விஷயமா பேசலாம்ங்க” என்றான். 

ஏதோ நினைத்தவளாய், எதையோ உணர்ந்தவளாய் விறுவிறுவெனச் சென்ற திவ்யா, தன் பையிலிருந்த விண்ணப்பத்தை எடுத்து, கோபத்தோடு கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றவள், “இங்கருந்து வெளில போங்க” என்றாள்.

அவன் அங்கேயே நிற்பதை விரும்பாத திவ்யா, அங்கிருந்து வெளியேறினாள். மனம் லேசாகியிருந்தது. கண்ணனிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது, என்றாலும் தெரிந்தால் தன் வேலையை இழக்க நேரிடுமோ, ஏதேனும் சிக்கல் வருமோ என யோசித்தவள், சற்றே தள்ளியிருந்த பிணவறையின் முன் சென்று அமர்ந்தாள். 

மனதில் ஏதோ முடிவெடுத்தவளாய், கண்ணனைத் தொடர்பு கொண்டு நடந்தவை அனைத்தையும் கூறினாள். “ஒன்னும் கவலைப்படாதே, இதோ நான் கெளம்பி வரேன்” என்ற கண்ணன் வேறெதுவும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தான்.

சில நிமிடங்கள் அழுத பின், முகம் கழுவ நினைத்த திவ்யா, மருத்துவம் பார்க்கும் அறையினுள் நுழைந்தாள். யாருமில்லாத அந்த அறையினுள், மருத்துவர்கள் கை கழுவும் வாஷ்பேஸின் முன் நின்ற திவ்யா, மீண்டும் அழுதவாறே முகத்தைக் கழுவத் துவங்கினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த திவ்யா, தாழ்ப்பாள் போடும் ரகுவைப் பார்த்து அதிர்ந்து போனாள். கதவைத் திறக்கவிடாமல் நின்ற ரகுவைப் பாரத்து, “கதவைத் திறங்க“என்றாள். அவனோ எதற்கும் கவலைப் படாதவனாய் நின்றான். 

“மூணு லட்ச ரூபாய், யாராவது எதுவும் தெரியாம கையெழுத்து போடுவானா? நான் போட்டேன்ல உனக்காக,  ஆனா நீ, புரிஞ்சுக்காம இப்படி பண்ணுறியே” என்றவன், “உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, இப்படியே வரப் பிடிக்கலைனா அவன டைவர்ஸ் பண்ணிட்டு வா, நாம சந்தோஷமா இருக்கலாம்” என்றான்.

சில நொடி பயத்தில் உறைந்து போன திவ்யா, பின் உடனடியாகச் செயல்பட்டு, அங்கிருந்த ஸ்ட்ரெச்சர் மீதேறி ஜன்னலின் வழியே பார்த்தாள். அங்கு அடுத்த கட்டிடத்தின் வாயிலில் செக்யூரிட்டி நின்றிருந்தார். ரகுவைப் பார்த்து, “இங்க பாரு, கதவைத் திற, இல்ல, கத்தி எல்லோரையும் கூப்பிடுவேன்”என்றாள். அவனோ, “கூப்பிடு, எல்லோரையும் கூப்பிடு, வரட்டும், உனக்குத் தான் அசிங்கம்”, என்றான். “உன் புருசனுக்குத் தெரிஞ்சா வேலைக்கு அனுப்ப மாட்டான், உன்னையும் தப்பாத் தான் பேசுவான், பரவாயில்லனா கூப்பிடு” என்றான்.

உள்ளுக்குள் அச்சம் ஏற்பட்டாலும், வெளிகாட்டாதவளாய், “அவங்க நம்புறதும், நம்பாததும் அப்புறம், முதல்ல உனக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று சொன்ன அதே நொடியில்,
“முடிவு கட்டுறதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு பேஷண்ட் டீட்டெயில் வேணும். அதைச் சொல்லிட்டு முடிவு கட்டுங்க”, என்றொரு குரல் சொல்லியது. 

ஸ்கீரின் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்ட திவ்யா, யார் என்ற குழப்பத்தோடே, “சார்” என்று அழைத்து, பின் அடையாளம் கண்டவளாய், “அருண் சார், அருண் சார், ப்ளிஸ் காப்பாத்துங்க”என்றாள்.

“ஏம்மா, நானே முக்கி முக்கி கேஸ்ஷீட் பாத்துட்டு இருக்கேன், நீ என்னடானா ரெண்டு அறை விட்டு வெளியத் தள்ளாம, மேல நின்னு கத்திகிட்டு இருக்க? முதல்ல கீழ இறங்குமா. விழுந்திடப் போற“ என்று சொல்லிக் கொண்டே வெளிய வந்தவர், ரகுவின் தோள் மீது கைகளைப் போட்டு அவனைப் பிடித்தபடி நின்றார்.

“சார்,  நாங்க சும்மா விளையாட்டாப் பேசிட்டு இருந்தோம்” என்றான் ரகு.
கீழே இறங்கிய திவ்யா, "சார் நீங்க எப்ப வந்தீங்க?" என்றாள்.

“காலைல வந்தேன்மா”என்று சொல்லிக் கொண்டே ரகுவின் சட்டையைச் சரி செய்தார். ரகு செய்வதறியாது அதிர்ந்து நின்றிருந்தான்.

"திவ்யா சிஸ்டர், “Pt மனோகரன் file எங்க?”என்றார்.

"என் டேபிள்ல இருக்கு சார்" என்றவளை, “சரி அதை எடுத்துட்டு வந்து குடுத்திட்டு, ஒரு முடிவு கட்டு”,என்றார் டாக்டர் அருண்.

திவ்யா வெளியே சென்று, ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, பின் சிறிது தன்னிலைப்படுத்திக் கொண்டு, மருத்துவர் கேட்ட கோப்பினை எடுத்துக் கொண்டு வந்தாள்.

ரகு நடப்பவையேதும் புரியாமல் படபடத்து பயத்தோடு நின்றிருந்தான்.

“திவ்யா சிஸ்டர், இப்ப என்ன தோணுதோ செய்ங்க”என்றார். 

“சார்”என்று சொல்லித் தயங்கி நின்றவளை, “டைம்ஆகுதுமா” என்றார்.

"சார், இதோ வந்துடுறேன்" என்று சொல்லி வெளியே சென்ற திவ்யா, தன் white coat ஐ எடுத்து வந்தாள். அறையின் உள் நுழைந்தவள், அவன் தன் கோட்டை எடுத்து முகத்தில் தேய்த்தும், நுகர்ந்தும் செய்த செயலை நினைத்து அருவருப்படைந்தவளாய், அந்தக் கோட்டைக் கொண்டு, ரகுவின் முகத்திலேயே அடித்தாள்.

“ஏம்மா, என்ன விளையாடிட்டு இருக்கியா? Bone specialist பக்கத்துல தான இருக்கேன்.. மூக்கு, வாயை உடைப்பேன்னு பார்த்தா“என்று சிரித்த மருத்துவர் அருண், பளிச் என ரகுவின் கன்னத்தில் அறைய, ரகுவின் கண்களில் பொறி பறந்தது. 

கன்னத்தைப் பிடித்தபடி திகைத்து நின்றிருந்த ரகுவைப் பார்த்து, “மிஸ்டர் ரகு, உங்களப் பார்க்க, இந்த ஹாஸ்பிட்டல் டீனே வந்துட்டு இருக்காரு. நீங்க பெரிய ஆளு தான், இங்கயே வெயிட் பண்ணுங்க. அறிவாளியா ஏதும் முடிவெடுக்காதீங்க, அப்புறம் சட்டபடி நடவடிக்கை எடுப்பாங்க”, என்று சொல்லியபடியே திவ்யாவோடு அறையை விட்டு வெளியேறி அந்த அறையின் கதவைப் பூட்டினார், மருத்துவர் அருண்.

“சார், நீங்க உள்ள எப்போ வந்தீங்க?” என்றாள் திவ்யா.

"உண்மையாவே காலையில வந்தவன் தான் சிஸ்டர். Chief Dr AK, சில கேஸ் ரெகார்ட் டிட்டெயில் கேட்டாரு, அதான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க உள்ள வந்ததும் பேசத்தான் நினைச்சேன். அழுற சத்தம் கேட்கவே அமைதியா இருந்துட்டேன். அப்புறம் ரகு வந்து பேசுனதும் தான் தெரிஞ்சுது. என்ன தான் செய்றான்னு பாப்போம்னு தான் அமைதியா இருந்தேன். நீங்க ஸ்ட்ரெச்சர்ல ஏறும் போதே வந்திருப்பேன். நீஙகளும் துணிச்சலா நடந்துகணும்ல அதான்” என்ற அருண்,
"டீன்க்கு மெஸஜ் சென்ட் பண்ணிருக்கேன். இப்ப வந்துடுவாரு. நீங்க பதட்டப்படாம இருங்க. இதெல்லாம் நீங்க துணிச்சலாக் கையாளணும், பயப்படக்கூடாது” என்றார்.

திவ்யா தன் பணியிடத்தை நெருங்கிய போது, மீட்டீங் சென்றிருந்த அவளின் மேலாளர் அறைக்குத் திரும்பியிருந்தார். அவரருகே சென்றவள் ஏதும் பேசாமல், அமைதியோடு நின்றிருந்தாள். நேரம் கடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலரும், வீடு செல்லத் துவங்கினர். ஆள் அரவமில்லாத அந்தப் பெரிய கட்டிடத்தில் எதிரொலித்த குழந்தையின் குரல், திவ்யாவை நிகழ் நிமிடத்திற்கு அழைத்து வந்தது. அது கண்மணியின் குரல். அறையை நோக்கி கண்ணனும், குழந்தையும் வந்து கொண்டிருந்தார்கள்.
மருத்துவர் அருண், நடந்த சம்பவங்களை மேலாளரிடமும், கண்ணனிடமும்கூற, திவ்யாவோ குழந்தையோடு விளையாடியபடி இருந்தாள். கண்ணனும்,  மருத்துவர் அருணும், ரகு இருக்கும் அறையை நோக்கிச் சென்றார்கள். திரும்பி வந்தவர்களிடம் உள்ளே என்ன நடந்ததென்றும் கேட்க விரும்பவில்லை.

சில நிமிடங்களில், டீனும் இன்னும் சில மருத்துவர்களும் அங்கு வந்தனர். மருத்துவர் அருண் அனைவரோடும் ரகு இருந்த அறைக்குச் சென்றார், மேலாளரும், கண்ணனும் உடன் சென்றார்கள். Account பிரிவிலிருந்த ஒருவர் வேக வேகமாக அந்த அறையை நோக்கிச் சென்றார். திவ்யா எதையும் பொருட்படுத்தாது தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அனைவரும் வெளியேற, தலை குனிந்தவாறு ரகுவும் வெளியேறினான், மருத்துவமனையை விட்டு நிரந்தரமாக. 

மருத்துவர் அருணுக்கு நன்றி தெரிவித்த கண்ணனும், திவ்யாவும் அங்கிருந்து புறப்பட்டனர். திவ்யாவை ஆறுதலோடு பற்றிய கண்ணனின் கைகளில் காதலும், ஆதரவும், ஆறுதலும் நிறைந்திருந்தது. 

- நீர்ப்பறவை


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி. (145)

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். 

வெள்ளி, 22 மார்ச், 2019

உழுத நெலம் - குறள் கதை - 139


உழுத நெலம்

"மகேந்திரா, வேலை ஒன்னு இருக்கு, ஊரு வரைக்கும் போயிட்டு வருவோம்." அலைபேசியின் வழி வந்த பரதனின் குரல் மகேந்திரனை வியப்பில் ஆழ்த்தியது. 

"என்னடா, இருக்கியா? பதிலே காணோம்" என்று மீண்டும் கேட்ட பரதனுக்கு, "இருக்கேன் அண்ணா, என்ன திடீர்னு ஊருக்கு?" என்றான் மகேந்திரன்.


"ஏன் துரை காரணம் சொன்னா தான் வருவீகளோ? ரெடியா இரு, நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் பரதன்.

பரதன், மகேந்திரன் இருவரும் அவர்களது ஊரான சிறுவயல்பட்டியை விட்டு வந்து பத்து ஆண்டுகள் இருக்கும். பணி நிமித்தமாக சென்னை வந்து சேர்ந்த பிறகு, மாதமொரு முறை என்று ஊருக்குச் சென்று கொண்டிருந்தவர்கள், இப்போது தேவையிருந்தால் மட்டும் சிறுவயல்பட்டிக்குச் செல்வதென்றாகி விட்டது. ஊரில் இவர்கள் வரவை என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா தமயந்திக்கும், அப்பா ஆனந்தத்திற்கும் இவர்கள் இப்போது வருவது தெரியாது. மகேந்திரன் தனது அலைபேசியை வைத்த இடத்தில் அருகில் இருந்த புகைப்படத்தில் மணக்கோலத்தில் மகேந்திரனும், கவுசியும் நிற்க, பரதனும் செல்வியும் ஒருபுறமும், மறுபுறத்தில் தமயந்தியும், ஆனந்தமும் நின்றிருந்தனர். உழவு தந்த காசிலே, இரண்டு பேரையும் படிக்க வைத்து, இன்று தான் நல்ல நிலைமையில் இருக்கக் காரணமான தாய், தந்தையை நினைத்த அவன் மனது பத்து ஆண்டுகளுக்குப் பின் போனது.

"அம்மா, நீங்களும் சென்னைக்கே வந்திடுங்கம்மா, ஏன் நீங்க இங்க இருந்து துன்பப்படணும்?" என்றான் மகேந்திரன்.

"நான் அங்க வந்துட்டா, இந்த மாடு கன்னுங்க, கோழிக்கெல்லாம் யாரு இருக்கா, உங்களுக்கு சோலி கெடக்கு அங்க, நான் அங்கன வந்து என்ன செய்யப் போறேன்? என்ன வுடு, உங்க அப்பா அங்க வந்து என்ன செய்வாரு?" என்று சொல்லி, சற்று வெட்கத்துடன் சிரித்தாள் தமயந்தி.

"ஏய், என்ன இழுக்கலன்னா உனக்குத் தூக்கம் வராதே" என்ற ஆனந்தம், சற்றென்று முகம் சிறுத்து, "யய்யா, அப்பப்ப வந்து போங்கய்யா" என்றார்.

சிரித்துக் கொண்டிருந்த தமயந்தியின் கண்களில் கண்ணீர் அடைத்தது. "ஏற்கனவே, உன் அண்ணனும் போயிட்டான், இப்ப நீயும் போற, புரியுது, படிச்சிருக்கீக, நல்ல வேலை கெடச்சுப் போறீக, இருந்தாலும், மனசு கெடந்து தவிக்கே, என்ன செய்ய?" என்று சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள் தமயந்தி.

"யம்மா, இங்கன இருக்கு சென்னை. நைட் பஸ்ல உக்காந்தா விடியக்குள்ள வந்துடுவேன். ரெண்டு பேரும் அழுதா நான் எப்படி போறது?" என்றான் மகேந்திரன்.

கண்ணைத் துடைத்தபடி, "நீ போயிட்டு வாடா, ராசா போல, இவரு ஒருத்தரு கெளம்பும்போது தான் அழுவாச்சி காட்டுவாரு" என்று மீண்டும் கணவனைப் பார்த்துக் கண்ணால் அதட்ட, "சரிய்யா, நல்லபடியா போயிட்டு வாய்யா" என்றார் ஆனந்தம்.

"டேய், ரெடியாகிட்டியா?" பரதனின் குரல் மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது மகேந்திரனை.

"அண்ணா, வா, ஒரு பத்து நிமிசம் உட்காரு, இப்ப வந்திடுறேன்." என்று கிளம்ப உள்ளே சென்றான் மகேந்திரன்.
சில மணி நேரங்களில், பரதன், மகேந்திரன் இருவரும் சிறுவயல்பட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

"எதுக்குண்ணே இப்ப ஊருக்குப் போயிட்டிருக்கோம்?"

"எல்லாம் நல்லதுக்குத் தான். எவ்ளோ நாளு தான் வாடகை வீட்ல இருக்குறது? வீடு வாங்கலாம்னு இருக்கேன். ஹவுசிங் லோன் கெடைக்கும். அதுப்பத்தி தான் அப்பாகிட்ட பேசலாம்னு தான் போறோம்"

"ஓ... என்னடா எந்நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு ஊருக்குப் போறோமேன்னு நெனச்சேன்."

"டேய், நான் என்ன அப்பா அம்மா மேல பாசமே இல்லாதவனா? இங்க வேலை எவ்ளோ இருக்குன்னு உனக்கே தெரியும்." என்று சொன்ன பரதன், மகேந்திரனிடம் பதில் எதிர்பார்க்காமல் வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

சிறுவயல்பட்டிக்குள் நுழையும் போதே, சில பெருசுகள், "என்ன தமயந்தி பசங்களா? இப்பத்தான் ஊருக்கு வழி தெரிஞ்சுதா?" என்றனர். மகேந்திரன் சிரித்துக் கொண்டே, "வேலை அப்படி, நீங்க நல்லா இருக்கீகளாய்யா?" எனக் கேட்க, பரதன் மகேந்திரனை முறைத்தான்.

"தம்பி, வாடா, வந்த வேலையப் பாப்போம்" என்று கூற, மகேந்திரன் அந்தப் பெருசுகளிடம், "வர்றேன்யா" என்று சொல்ல, வீட்டை நோக்கி நடந்தனர்.

மதியம் 3 மணியைத் தாண்டி இருந்தது. 'இன்னமும் இந்த மனுசனைக் காணோமே' என்று மனதில் நினைத்துக் கொண்டு, வீட்டின் வாசற்படியில் வந்து பார்த்த தமயந்திக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. பரதனும், மகேந்திரனும் தெருவில் வந்து கொண்டிருக்க, அவளது கண்களில் மகிழ்ச்சி கண்ணீராய் வடிந்தது.

"என் ராசாக்களா, வாங்கய்யா, வாங்க" ஒன்னேகால் ஆண்டுக்குப் பிறகு தன் மகன்களை ஒன்றாகப் பார்த்த தமயந்திக்குக் கையும் காலும் ஓடவில்லை. 'இந்த மனுசனை வேறக் காணோமே' என்று மனதில் நினைத்துக் கொண்டு, தனது மகன்களை நோக்கி ஓடிய தமயந்தியை மகேந்திரன் முன் சென்று பிடித்தான். 

"யம்மோய், அதான் வர்றோம்ல, இப்டி ஓடியார? வுழுந்துடப் போறம்மா" என்றவன், அம்மாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, "எப்டிம்மா இருக்க?" என்றான் மகேந்திரன்.

"என்ன வுடுய்யா, நீ எப்டி இருக்க? பசங்களைக் கூட்டியாறலயா?" என்றவள், பரதனைப் பார்த்து, "நீயும் வாய்யா, நல்லா இருக்கியா?" என்றாள்.

"அம்மா, ஸ்கூல் இருக்கு, அதான். மே மாசம் கூட்டியாறேன்." என்று மகேந்திரன் கூறியபடி, அம்மாவின் கைப்பிடித்து, வீட்டிற்குள் நுழைந்தான். பரதனும் பின் தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில், "தமயந்தி, யாரு வந்திருக்கா, வெளியில செருப்பு கெடக்கே?" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த ஆனந்தம், தனது மகன்களைக் கண்டு, "எப்பய்யா வந்தீங்க? கடைத்தெருவுல தான் இருந்தேன். நீங்க வந்ததைப் பாக்கலயே" என்றார்.

அப்பா, "நாங்க தெற்குத் தெரு வழியா வந்தோம்." என்று கூறிய மகேந்திரன், "அண்ணனுக்குத் தான் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்" என்றான்.

"என்னய்யா, சொல்லு" என்று பரதனைப் பார்த்துக் கூறிய ஆனந்தம், "யம்மா, கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாம்மா, அப்படியே நீயும் வந்து இங்கன உக்காரு" என்றார் தமயந்தியிடம்.

"அப்பா, நான் சென்னையில ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன்" என்றான் பரதன்.

"நல்லதுய்யா, நல்லபடியா வாங்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஒரு கையில் சொம்பில் தேநீரும், இன்னொரு கையில் மூன்று குவளையும் எடுத்து வந்தாள் தமயந்தி.

"ஏய், தண்ணி கேட்டேன்ல?" என்றார் ஆனந்தம்.

"எனக்கென்ன பத்து கையா இருக்கு? பசங்க வந்திருக்காய்ங்க, ஒரு டீத்தண்ணி கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தா..." என்று இழுத்தாள் தமயந்தி.

சொம்பில் இருந்த சூடான தேநீரை ஆற்றி, மூன்று குவளையில் ஊற்றி, மூவருக்கும் கொடுக்க, மீண்டும் பரதன் பேச்சைத் துவங்கினான். "ஒரு இடம் இருக்கு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாங்குனா நல்லா இருக்கும். எனக்கு ஹவுசிங் லோன் கெடைக்கும். தம்பிக்கும் கிடைக்கும்னு நெனக்கிறேன், நாங்களும் எவ்ளோ நாள் தான் வாடகை வீட்லயே இருக்கிறது?" என்றான். பரதன் சொன்னது மகேந்திரனுக்கே வியப்பாய் இருந்தது. ஆனாலும், முழுமையும் கேட்டு விடலாம் என்று இருந்தான்.

"அதுவும் சரிதான்யா. ஆனா, இந்த லோன்லாம் நமக்குப் புடிபடாது. அகலக்கால் வைக்காதப்பா, எதுவா இருந்தாலும் பாத்து பண்ணுங்கப்பா" என்றார் ஆனந்தம்.

"அதெல்லாம் ஒன்னுமில்லப்பா, வீட்டோட மதிப்புல முக்கால் பங்கு கடன்லயே கெடச்சிடும். கால் பங்கு நாம தான்... போடணும்" என்று இழுத்தான் பரதன்.

"என்னய்யா, கேட்க வந்ததைக் கேளுய்யா" என்றாள் தமயந்தி.

"ஆயிரம் சதுர அடியில ரெண்டு வீடு, ஒரு சதுர அடி நாலாயிரத்தி ஐநூறு சொச்சம்,  கடன்ல அறுபத்தேழு லட்சம் கெடச்சுடும், மீதி இருபத்தஞ்சு லட்ச ரூவா தேவைப்படும்." என்று பரதன் சொல்ல,

"அடி ஆத்தி" என்றாள் தமயந்தி.

"அம்மா, சும்மா இரும்மா" என்றான் சற்று கடுப்பாக. அப்பாவைப் பார்த்துக் குரலைக் குறுக்கி "அப்பா, நீங்க தான்பா கொடுக்கணும்" என்றான் பரதன்.

"அண்ணே, இதெல்லாம் நீ என்கிட்ட..." என்று தொடங்கிய மகேந்திரனைக் கண்ணால் அதட்டினான் பரதன்.

ஆனந்தம், "இருவத்தஞ்சு லட்சத்தை ஒன்னா சேத்து நான் பாத்ததே இல்ல, என்கிட்ட எங்கய்யா இருக்கு" என்றார்.

"இருக்குப்பா, உங்களால நெனச்சா தர முடியும்" என்றான் பரதன்.

"என்கிட்ட எங்கய்யா இருக்கு, அவ்ளோ காசு?"

"நிலம் இருக்குல்லப்பா, எப்படி இருந்தாலும் எங்களுக்குத் தானே வரும்?"

"ஏன்யா, உழுவுற நெலத்த விக்கச் சொல்ற? என்னத்த படிச்சீகளோ?" என்றாள் தமயந்தி.

"யம்மா, என் ஆபீஸ்லயே எனக்குத் தான் சொந்த வீடு இல்ல, சும்மா உழுவுற நெலம்னு சொல்லிட்டு இருந்தன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்" எனக் கொதித்தான் பரதன்.

ஒரே நேரத்தில் "அண்ணே..." என மகேந்திரன் சொல்ல, "எலேய், யாரப் பாத்து பேசுற?" என்றார் ஆனந்தம்.

"அப்பா, எப்படி இருந்தாலும் எங்களுக்கு வரப் போறது தானே? நான் உங்ககிட்ட கேக்காம வேற யாருட்ட கேக்குறது?"

"அதெல்லாம் சரி. என் காலத்துக்குப் பின்னாடி உனக்கும் சின்னவனுக்கும் தான் வரும். ஆனா, அதை நீங்க ஆளணுமா, விக்கணுமாங்குறத நான் தான் முடிவு செய்யணும், இது என்ன தாத்தா சொத்துன்னு நெனச்சியா? கொஞ்சம் கொஞ்சமா நானும், இதோ உன் திட்டெல்லாம் வாங்கிட்டு உக்காந்திருக்காளே இவளும் சேத்து வாங்குனது."

"அப்ப முடிவா என்ன தான் சொல்ல வர்றீங்க?" என்றான் பரதன்.

"எனக்கு நெலத்துல வேலக் கெடக்குன்னு சொல்ல வர்றேன்" என்று எழுந்தார் ஆனந்தம்.

"அப்பா, எனக்கு வர்ற கோவத்துக்கு..." என்று இழுத்தவன், அம்மாவைப் பார்த்து, "வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம உழுற நெலம் அது இதுன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்துட்டல்ல" என்று அம்மாவை நோக்கி கையை ஓங்க, பின்னால் இருந்து பரதனைப் பிடித்தான் மகேந்திரன்.

"ஏய், யார்மேல கைய ஓங்குற? என்ன வயசாயிடுச்சுன்னு நெனச்சியா? மம்பட்டி புடிக்குற கையிடா இது. மத்தவன் கண்ணுக்கு முன்ன எனக்கும் வூடு இருக்குன்னு நீ சொல்ல இருக்குற நெலத்த நான் விக்கணுமா? என்ன படிச்சு என்ன செய்ய? பணத்து மேல வைக்குற பாசத்த மனுசங்க மேல வைக்கத் தெரிலல்ல" என்ற ஆனந்தம், சட்டென உடைந்து கீழே விழுந்தார்.

"ஆத்தி, உங்கப்பாவப் புடிடா" என்று பதறினாள் தமயந்தி. மகேந்திரன், பரதனை விட்டு, அப்பாவைப் பிடிக்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, கீழே அமர்ந்த ஆனந்தம், "இப்ப என்னங்கடா, என் நெலம் வேணும் அவ்ளோ தான்டா, இப்ப என் தல வுழுந்தாலும், அடுத்த நாளே இந்த வூடு, நெலமெல்லாம் போயிடும்னு தெரிஞ்சுகிட்டேன். என் மனசுல ஆயிரம் ஓடிட்டிருக்கு, ஆனா, பெத்த பசங்கள ஏதும் வஞ்சிடக்கூடாதுன்னு நெனக்கிறேன்" என்றார் ஆனந்தம்.

"வெசனப்படாதீங்க" உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்த தமயந்தி கூற, மகேந்திரன் செம்பினை வாங்கி அப்பாவுக்குக் கொடுக்க, தமயந்தி தலை குனிந்து நின்றிருந்த பரதனைப் பார்த்து, "உன்னப் பெத்து வளத்தவரை காவு வாங்கத்தான் ஊருலேந்து வந்தியாடா? இப்ப அவருக்கு மட்டும் ஏதாச்சும் ஆகட்டும், நீயெல்லாம் உரு..." என்று சொல்லப் போன தமயந்தியின் கையைப் பிடித்தார் ஆனந்தம்.

"யம்மா, அவனுக்குக் கேக்கத் தெரியல, முதல்ல நம்ம மேல நம்பிக்கை இல்ல" என்ற ஆனந்தம், மகேந்திரனைப் பார்த்து, "நீயாச்சும் எங்கள நம்புறியாய்யா?" என்றார்.

"நம்புறேன் பா, கொஞ்ச நேரம் அப்படியே இந்த தூண்ல சாஞ்சு உக்காருங்க, பேசாதீங்க" என்றான் மகேந்திரன்.

"யய்யா, பரதா, இங்க வாய்யா" நெஞ்சு வலி கொஞ்சம் குறைந்திருந்தது அவருக்கு. அருகே வந்தவனிடம், "இன்னும் நெறைய தேவைங்க இருக்குய்யா, பேரப்பசங்க படிப்பு, கல்யாணம். உங்கள எல்லாம் ஆளாக்குன நெலம்யா அது, இருக்குற வரைக்கும் அள்ளிக் கொடுக்கும்யா, அத ஒரேடியா வித்துடாதீகய்யா, ஒனக்கு பணம் வேணும்னா" என்ற அப்பாவை இடைமறித்த மகேந்திரன், "அண்ணே, எனக்கு வீடு வேணும்னு உன்கிட்ட கேட்டனா? ஊருலயே காசு வேணும்னு கேட்டிருந்தா நான் ஒரு பெர்சனல் லோன் போட்டு வாங்கிக் கொடுத்திருப்பேன். இதுக்கு மேல நெலத்தை விக்குறது பத்தி பேச்சே எடுக்காத" என்று மகேந்திரன் ஆனந்தத்தை மெல்லக் கைத்தாங்கலாய்ப் பிடித்துத் தூக்க, இன்னொரு புறம் தமயந்தியும் பிடித்துக் கொண்டாள். 

கண்களில் நீர் வழிய மகேந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தத்தை இருவரும் கூட்டிச் செல்லத் தனியாளாய் நின்று கொண்டிருந்தான் பரதன்.


- முடிவிலி

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கம் உடையவர்கள் தவறிக் கூட தீய சொற்களை சொல்லிட மாட்டர். 

வியாழன், 7 மார்ச், 2019

கொற்றவன் குன்றில் - குறள் கதை 126

கொற்றவன் குன்றில்


பின்னிரவின் இருளில், சற்றுத் தொலைவில் மங்கலாகத் தெரிந்த குன்றினை நோக்கி, ஐங்கரனும், அஞ்சுதனும் வேகமாக நடந்துகொண்டிருக்க, அவர்களது முகத்தில் வழியும் வியர்வையைத் துடைக்க, அந்தமான் கடற்காற்று முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தது.

இருவரில், அஞ்சுதன் மட்டும் அடிக்கடி திரும்பி அவர்களைச் சுற்றி நிகழ்வதைப் பார்த்துக்கொண்டே நடந்தான். தூரத்தில் தெரிந்த தீப்பந்தங்களின் ஒளி, நேரமாக ஆக அதிகரித்துக்கொண்டே வந்தது.

“நம்மளைப் பாத்துடுவாங்களா?” என்ற அஞ்சுதனின் கேள்விக்கு, அவனைப் பார்க்காமல் நேராக நடந்தபடியே பதில் கூறினான், ஐங்கரன்.

“வாய்ப்பிருக்கு”

“கூண்டுலருந்து தப்பிச்ச கையோட, இந்த தீவுல இருந்தே தப்பிச்சிருக்கலாம். நீ என்னடான்னா என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டு இருக்க” என்றான் அஞ்சுதன், சலிப்பாய்.

“தப்பிக்குறதா? இரவு நேரத்துல கூண்டைவிட்டுத் தப்பிவந்ததைப் போல அவ்வளவு எளிதில்ல இந்தத் தீவை விட்டு வெளிய போறது. நாம வந்த ப்ளைட் இப்ப அவங்க கட்டுப்பாட்டுல இருக்கு. படகுகளுக்கும் இதே நிலைமைதான்”

உடனே அஞ்சுதன் ஏதோ கூறவர, “தயவுசெஞ்சு கடல்ல குதிச்சு நீந்திப் போயிடலாம்னு மட்டும் சொல்லிடாத. இங்க இருந்து நாம உயிரோட வெளிய போகணும்ன்னா அதுக்கு அந்த தங்கக்காப்பைக் கண்டுபிடிச்சே ஆகணும்” என்று ஐங்கரன் இடைமறித்தான்.

“எல்லாம் அந்தக் காப்பால வந்தது. எவனோ ஒரு குடிகாரன் பேச்சைக் கேட்டு, நீ இந்த தீவுக்கு அதை ஆராய்ச்சி பண்ண வந்ததும் இல்லாம, உனக்கு மொழிபெயர்க்க ஒரு ஆளையும், சுத்திப்பார்த்துட்டு வரலாம்டான்னு சும்மா இருந்த என்னையும் இங்க இழுத்துட்டு வந்துட்ட, இங்க வந்து இறங்கினதும், உங்க அரசரோட கைக்காப்பு பத்தின விவரங்களைக் கேட்க வந்து இருக்கோம்னு சொன்னதும்,மொழிபெயர்க்க வந்தவன் கழுத்துல ஈட்டியை இறக்கிக் கொன்னு, நம்மளையும் கூண்டுல அடைச்சுட்டானுங்க. இத்தனையும் இந்தத் தீவுல இருக்கா இல்லையானு கூடத் தெரியாத ஒரு காப்புக்கு”

“காப்பு இங்க இல்லன்னா, பயந்துபோய் அவரைக் கொன்னு, நம்மளைச் சிறைபிடிச்சுருக்க மாட்டாங்க. ஆக, காப்பு இங்க தான் இருக்கு”

“அதுசரி. ஆனா குறிப்பா இந்தக் குகையிலதான் இருக்குன்னு எப்படி சொல்லுற?” என்ற அஞ்சுதன், குன்றின் அடியில் இருந்த குகையைச் சுட்டிக்காட்டினான்.

“தீவைப் பத்தி சொன்னவன்தான் இந்தக் குகை பத்தின தகவலையும் சொன்னான். ஆனா இங்க வந்தபிறகுதான் இந்தத் தீவு முழுக்கவே குகைகள் தான்னு தெரியுது. ஆனா காப்பைத் தேடித்தான் வந்து இருக்கோம்னு அவர் சொன்னதும், தீவு மக்கள்ல சிலர் பயந்துபோய் ஒரே பக்கம் பார்த்து முணுமுணுத்தாங்க, அவங்க பார்த்த பக்கத்துல இந்தக் குகை மட்டும் தான் இருக்கு”

“வெளிச்சத்துக்கு ஒன்னும் இல்லாம அந்த இருட்டுக் குகைக்குள்ள போயி என்ன பண்ண? அங்கயும் தேடி வந்தா?” என்ற அஞ்சுதனின் குரலில் அச்சம் அதிகரித்தது.

“வரமாட்டாங்க”

“எப்படி சொல்ற?”

“அவங்க நம்பிக்கைப்படி, இந்த குகையில அவங்க அரசர் ஓய்வெடுத்துட்டு இருக்கார். அதனால குகைக்குள்ள போறது, அவருக்கு தொந்தரவு தர்ற மாதிரின்னு உள்ள வர மாட்டாங்க”

“இப்ப நாம உள்ள போகப் போறோமே. இது தெரிஞ்சா?”

ஐங்கரன் அஞ்சுதனை நோக்கி திரும்பி நின்றான்.

“அஞ்சுதா! நாம வெளிய இருந்தாலும் நம்மளைக் கொல்லத்தான் போறாங்க. அதனால குகைக்குள்ள போறதைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை”

“ஆனா இவங்க ஏன் இப்படில்லாம் நடந்துக்குறாங்க?” என்றான் அஞ்சுதன்.

“இந்தத் தீவு வெளி உலகத்தோட எந்தத் தொடர்பும் இல்லாதது. தங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள், கொள்கை முறைகள்ன்னு இயற்கையோட சார்ந்த ஒரு வாழ்க்கை வாழறவங்க. நம்ம மாதிரி வெளில இருந்து இங்க வர்றவங்க இவங்களுடைய முறைகளுக்கு ஒத்துவரமாட்டோம். நம்மால புதுசு புதுசா நோய் பரவும். அது இவங்களுக்குத் தேவையில்லாததும் கூட. அதனால யார் வந்தாலும் கொன்னுடறாங்க. சில நேரம் பாதியிலயே தடுத்து அனுப்பிடுவாங்க.”

“ஆனா இதுவும் நம்ம நாடுதான. நம்ம நாட்டோட கட்டுப்பாட்டுலதான இருக்கு. அதெப்படி கொல்றாங்க பயமில்லாம?” என்று கேட்ட அஞ்சுதனைப் பார்த்து,

“நாடா? அப்டின்னா என்னன்னே இவங்களுக்குத் தெரியாது. நம்ம பேசுற மொழியே புரியாது. இவங்க வாழ்க்கையே வேற. இதுக்கு முன்னாடி இங்க வந்தவங்க மதமாற்றம் பண்ண வந்துருக்காங்க. சாதி மதம்னா என்னன்னே தெரியாம ஒரே கூட்டமா வாழ்ந்துட்ருக்க இவங்ககிட்ட மதத்தைப் பத்திப் பேசுனாக் கொஞ்சுவாங்களா? தனக்கு ஒவ்வாத யார் வந்தாலும் திரும்பிப் போன்னு எதிர்ப்பைக் காட்டுவதெல்லாம் ஒரு உயிரினத்தின் அடிப்படை உணர்வு. தப்பு இவங்க மேல இல்ல. ஒரு நாடா நாம இவங்களுக்கு என்ன பண்ணிருக்கோம்னு யோசிச்சுப்பாரு. இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருக்கறதைப் பத்தி நாம என்ன அக்கறை காட்டியிருக்கோம். ஆனா அதப்பத்தி அவங்க கவலைப்படப் போறதும் இல்ல. அவங்களோட தேவைப் பட்டியல்ல நம்மோட எந்த வசதியும் இல்ல நண்பா” என்று முடித்தான் ஐங்கரன்.

“டேய் என்னடா பேசுற? நம்ம ஊர்ல உனக்கு இருக்க மதிப்புக்கு, உங்க அப்பாவோட பவருக்கு, உலக நாடுகள்ல உன் ஆராய்ச்சிக்கு இருக்க முக்கியத்துவத்துக்கு இந்த காட்டுமிராண்டிக் கும்பலுக்குப் போய் பயந்துட்டு இருக்க. நீ நினைச்சா ஒரு சின்ன அமெண்ட்மென்ட் போட்டு பழங்குடி மக்கள் பாதுகாப்பு கருதி அது பண்றோம் இது பண்றோம்னு சொல்லி ஒரு குட்டி ராணுவத்தையே கூட்டிவந்து இங்க இறக்கி ரணகளமாக்கிடலாம். இப்பக்கூட நம்மகிட்ட துப்பாக்கி இருக்கு. நீ என்னடான்னா?” என்று முகம் கடுத்தான் அஞ்சுதன்.

இதைக்கேட்டதும் முறைத்தபடி,
“அஞ்சுதா! இது இவங்க தீவு. இவங்க ஆதிகுடிகள். நம்ம நோக்கம் என்னவா இருந்தாலும் நல்லதாகவே இருந்தாலும் இங்க இவங்க சட்டத்துக்கு நாம அடங்கித்தான் போகணும். அதுதான் சரியான வழி. பொறுப்பில்லாமப் பேசறத நிறுத்திட்டுப் பின்னாடி வா” என்று கட்டளையிட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென நடக்கத் தொடங்கினான் ஐங்கரன்.

அதன்பிறகு அஞ்சுதனும் ஏதும் பேசாமல் நடந்து இருவரும் குன்றின் அடியிலிருந்து குகையின் வாயிலருகே வந்திருந்தார்கள்.

குகையினுள் திட்டுத்திட்டாகத் தெறித்திருந்த நிலவொளியைத் தவிர்த்து, பிற இடங்களில் பரவியிருந்த காரிருளைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே, “அப்போ எப்படியும் நமக்கு சாவுதான், இல்லே” என்ற அஞ்சுதனின் குரல் உடைவதை உணர்ந்தான், ஐங்கரன்.

“டேய் அஞ்சு!” என்று ஆறுதல் சொல்லத் தொடங்க எண்ணிய ஐங்கரன் சட்டென அமைதியானான்.

அஞ்சுதன் அவனைப் புரியாமல் பார்க்க, “காலடிச் சத்தம்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிய ஐங்கரன், அஞ்சுதனின் கையினைப் பற்றி ஓசை எழாமல், குகையினுள் அழைத்துச் சென்றான்.

குகையின் வாயில் பின்பக்கத்தில் படர்ந்து இருந்த இருளில் இருவரும் மறைய, குன்றின் பக்கவாட்டின் வழியே வந்த மூவரும், குகைவாயில் வழி உள்வந்த நிலவொளியில் நிழலாய் விழுந்தார்கள்.

“அவர்கள் இந்தப் பக்கம் வந்தால் கொன்றுவிடு. குகையினுள் செல்ல விட்டுவிடாதே” என்று அவர்களது மொழியில் கூறிய நிழலொன்று, இருவரை அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் நகர்ந்தது.

வாயில்வரை வந்தவர்கள், உள்ளே வராமல் நின்றது அஞ்சுதனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஐங்கரன் கணிப்பு சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உண்டாக்கியது. ஐங்கரன் அவனைத் தட்டி அழைக்க, இருவரும் அந்த இருளிலேயே குகைக்குள் தலையைக் குனிந்தபடி நடக்கத்தொடங்கினர்.

அவர்கள் நின்ற இடத்தில் படர்ந்து இருந்த வேர்களுக்கிடையே, வெண்கோடுகள் இட்ட கருவேர் ஒன்று மெல்ல அசைந்தது.

இருளுக்கு நன்கு பழகியிருந்த விழிகளால் குகையினுள் சிலவற்றைக் காண முடிந்தது.

நேராகச் சென்றுகொண்டு இருந்த குகை, வலதுபுறம் திரும்பியது. பள்ளமும் மேடும் மாறிமாறி வந்துபோனது. சட்டென குகை அடைத்து நின்றது.

“என்னடா குகை அவ்ளோ தானா?” என்றான் அஞ்சுதன்.

ஐங்கரன் பின்சென்று, பார்வையை மேலே துழாவவிட்டபடி, “இல்ல, மேல வழி இருக்கு” என்று கூறிவிட்டு, மீண்டும் அஞ்சுதன் அருகே வந்தவன்,
“என்னைத் தூக்கு” என்றதும் இருவரும் மேலே வந்தனர். ஆனால் அதுவும் குகையின் ஒரு பகுதியே.

மேல்வந்த அஞ்சுதன், “எப்போ குகையைவிட்டு வெளியே போவோம்?”

“ஏன்?”

“பசிக்கும்ல”

“டேய் டிக்டொக் பைத்தியமே” என்று சிரித்த ஐங்கரனுக்குத் தன் நண்பன் தனது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

“கவலைப்படாத. சீக்கிரமே வெளிய போயிடலாம்” என்று அஞ்சுதன் தோளைத் தட்டியபடி கூறியவன், நடந்தபடி பேச்சைத் தொடர்ந்தான்.

“அப்புறம் குகையில அங்கங்க காளான், பூஞ்சைனு வளர்ந்து இருக்கும். பசிக்கிதுன்னு சாப்பிட்டு இல்லாத வம்பை இழுத்துட்டு வந்துடாத, வாயைக் கட்டுப்படுத்திக்கோ”

“அதுசரி. என்னைக் கொலைபண்ண வந்தவன் கூட கூண்டுல அடைச்சு வேளாவேளைக்குச் சோறு போட்டான். நீ நண்பன்னு சொல்லிக்கிட்டு…” என்று பேசிக்கொண்டு வந்த அஞ்சுதனைக், குகையினுள் விழுந்த நிலவொளி கீற்றுகள் வாயடைக்க வைத்தன.

அக்காட்சி அவன் மனதைக் கொள்ளைக் கொண்டது. நிலவொளியின் கீழ் மலர்ந்திருந்த ஊதா நிற மலரில் இருந்து பரவியிருந்த மணம், அந்த இடத்திற்கு அருகே செல்லச்செல்ல அதிகரித்தது.

ஐங்கரன் நடையின் வேகத்தைக் கூட்ட, அஞ்சுதனோ மணத்தின் மயக்கத்தில், “ப்பா செம்மையா இருக்கு” என்று கூறி, மூச்சை ஆழமாக இழுக்கத் தொடங்க,

சட்டென சுதாரித்த ஐங்கரன், அஞ்சுதனின் நாசியைக் கையால் இறுக்க மூடி, அவனை இழுத்தபடி வேகமாக நடந்து சிறிது தூரம் கடந்து தரையில் அமர்த்தினான். பூவின் மணம் குறையத் தொடங்கி, முற்றிலுமாய் மறையவே, ஐங்கரன் அஞ்சுதனின் நாசியை விடுவித்தான்.

இதனால் மூச்சுத்திணறலுக்கு ஆளான அஞ்சுதன் கடுமையாகத் தும்மியபடியே கோபமாக, “என்னடா பண்ணுற?” என்றான்.

“நீ என்னடா பண்ணின அங்க? இன்னும் கொஞ்சம் சேர்த்து இழுத்து இருந்தன்னா, அங்கேயே பொத்துன்னு விழுந்து இருப்ப கிறுக்குப்பயலே.”

“ஆ…” என்று வியந்த அஞ்சுதன் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் எடுத்துக்கொண்டான்.

அஞ்சுதன் இயல்பானதும், இருவரும் நடக்கத் தொடங்கினார்.

அஞ்சுதன், “ஆனா, அது செம்ம ஸ்மெல்டா. அவ்ளோ நல்லாருந்தது”

“இந்த உலகத்துல நல்லா இருக்குன்னு நமக்குத் தோனுறது எல்லாமே நம்மை அங்கேயே தேங்க வச்சிடும். நீயும் அங்கேயேதான் இருந்து செத்துருப்ப” என்றான் ஐங்கரன்.

“ஓ… தத்துவம். இருக்கட்டும் இருக்கட்டும். ஆமா அது என்ன பூ?” என்று வினவியபோது, ஐங்கரன்
“ம்ம். குஷ்ப்…. ஏய் நில்லு” என்று அஞ்சுதன் மார்மேல் கைவைத்து, அவனை நகரவிடாமல் தடுத்தான்.

“இப்ப என்னடா?” என்று சலிப்பானான் அஞ்சுதன்.

“டேய்! குழிடா”

அப்போதுதான் அத்தனை நீளமான குழி அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

“யப்பா, குழி என்ன இவ்ளோ நீளமா இருக்கு!” என்றான் அஞ்சுதன் வியப்பாய்.

“ஆமா. ஓடிவந்துலாம் தாண்ட முடியாது”

“எவ்ளோ ஆழம் இருக்கும்? முட்டியளவு??”

“இல்ல. உன்னை முழுங்குற அளவு”

“இப்ப எப்படி இதைத் தாண்டிப் போறது? போச்சு. போச்சு. எல்லாம் போச்சு. வெளிய போனா பலி. உள்ள வந்தாக் குழி. சாகப்போறேன் நான்” என்று புலம்பத் தொடங்கினான் அஞ்சுதன்.

“ப்ச். இரு. யோசிப்போம்” என்ற ஐங்கரன் எழுந்து, குகையை நன்கு ஆராய்ந்தான்.

பின் பக்கவாட்டுச் சுவரைப் பார்த்து“வழி இங்க இருக்கு. வா போகலாம்” என்றான்.

அஞ்சுதனும் அதைக் காண, “எது இதுலயா? டேய்! சர்க்கஸ்காரன்கூட இப்படி போகமாட்டான்”

“ஆனா, சாவை எதிர்க்கிறவன் போய்த்தான் ஆகணும்” என்ற ஐங்கரன், குகையின் பக்கவாட்டில் சாய்ந்தபடி அத்திட்டில் நகரத் தொடங்க, அஞ்சுதனும் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தான்.

குகை வலதுபக்கமாகத் திரும்ப, சிறிது தூரத்தில் மீண்டும் அடைத்திருந்தது. அடைப்பின் இடையே விழுந்திருந்த கீறல் வழியே, வெள்ளொளி பரவிக்கொண்டிருந்தது.

ஐங்கரன் ஓடிச்சென்று, ஒளிவரும் கீறல்வழி, விழியை ஓடவிட்டான். உள்ளே தெரிந்த இடம், ஒளிமிகுந்து இருக்கவே, குகையின் மேற்பகுதியும், அதன்வழி இறங்கிய நிலவொளியும் தெரிந்தது. நிலவொளி விழும் இடத்தில்,  ஒரு சிலை தெரிந்தது. போருடையில் நின்ற அந்த சிலையின் ஒரு கை நீட்டியிருக்க, அக்கையில்,

“டேய்! காப்புடா” என்றான் ஐங்கரன் வியப்புமிகுதியில்.

“எங்க நான் பாக்குறேன்” என்று முன்வந்த அஞ்சுதனை நிறுத்தி,

“இரு! இரு! இரு!” என்ற ஐங்கரன் காப்பினைச் சுமந்துகொண்டு இருந்த சிலையை ஆராய்ந்தான். அதைப் பார்க்க பார்க்க அவனுக்கு வியப்பு அதிகரித்தது.

“டேய்! அந்தச் சிலையைப் பாரேன்” என்றான் அஞ்சுதனுக்கு வழிவிட்டான்.

ஆனால் அச்சிலையை அடைய இயலாதவாறு குறுக்கே பெரும்பாறையால் அடைக்கப்பட்டிருந்தது.

எப்படியும் குகைக்கு வெளியே போக வழி இருக்குமென்பதால் இருவரும் தேடி ஒரு சிறு இடைவெளியைக் கண்டனர்.

இரண்டடி இடைவேளி அது. ஐங்கரன் படுத்து அதனுள் பார்க்க, இருள் மட்டுமே இருந்தது.

“சரி என் பின்னாடியே வா” என்ற ஐங்கரன் அந்த இடைவெளியினுள் நுழைந்தான். அந்த இடைவெளி மெல்ல மேடேறியது. மேடு ஏற ஏற, இடைவெளியின் அளவும் விரிவானது. முழங்காலிட்டு நடந்தனர். எழுந்து நிற்குமளவு இடைவெளி உண்டாக, ஐங்கரன் முதலில் எழுந்தான்.

தூரத்தில் கீழே தெரிந்த சிலையின் கையில் காப்பு மிளிர்ந்தது. சிலையின் அருகே நின்றிருந்த ஓநாயைக் கண்ட ஐங்கரன், எழ முயன்ற அஞ்சுதனைத் தடுத்து, தானும் முழங்காலிட்டான்.

“என்ன?” என்றான் அஞ்சுதன், ஐங்கரனின் படபடப்பை உணர்ந்து, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“ஓநாய்ங்க இருக்…” என்றவன் பாதியில் நிறுத்திவிட்டு, மெல்லத் திரும்பி, படுத்தபடியே அவர்கள் இருந்த பகுதியின் விளிம்பிற்கு வந்து, மீண்டும் ஓநாய்களை ஆராய்ந்தான்.

மொத்தம் மூன்று ஓநாய்கள் சுற்றி நின்றிருந்தன. அவற்றின் விழிகள் ரத்தச்சிவப்பில் குளித்திருந்தன. அந்த இடம் அகலமாக விரிந்திருந்தது. மறுபுறம் வெளியே செல்லும் வழியும் தெரிந்தது. ஓநாய்களைத் தாண்டிக் காப்பை எடுப்பதும் சாத்தியமல்ல. காப்பு இன்றி வெளியேறுவதும் சாத்தியமல்ல என்பது இருவருக்கும் நன்கு புரிந்தது.

சிறிது நேரம் கண்களை மூடிய ஐங்கரன் மெல்ல விழித்தான்.

“சரி வா அஞ்சுதா. இதோ இந்த வேரைப் பற்றிக்கொள். மேலே ஏறி இந்தக் கற்களை நாலாபுறமும் எறி. ஓநாய்களைக் குழப்பு. நான் உள்ளே புகுந்து காப்பை எடுத்துடறேன். துப்பாக்கில ஒரே ஒரு தோட்டாதான் இருக்கு. அதைத் தேவைப்பட்டா பயன்படுத்திக்கலாம்” என்று ஐங்கரன் கூறவே,

“டேய். வேணாம். இதுல ஆபத்து அதிகம்.” என்றான் அஞ்சுதன்.

“வேற வழியில்ல அஞ்சுதா” என்றபடி வேரைக் கொடுத்தான்.

அவன் கூறியபடி மேலேறிய அஞ்சுதன் ஓநாய்களைக் குழப்பத் தொடங்க, மின்னலெனப் பாய்ந்த ஐங்கரன் காப்பைக் குறிபார்த்து எடுத்த கையோடு, சிலை மீதே கால்வைத்து ஏறி மேலே தொங்கிக்கொண்டிருந்த வேரைப் பற்றித் தொங்கியபடியே குகையின் வெளிவாசலை நோக்கிக் குதிக்கச் செல்லும்போதுதான் அஞ்சுதன் பிடித்திருந்த வேரின் மீது நகர்ந்து வந்த பாம்பைக் கவனித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் துப்பாக்கியை எடுத்து அஞ்சுதனை நோக்கி வந்த பாம்பைச் சுட்டு வீழ்த்திடவே, பதட்டத்தில் தடுமாறிக் கீழே விழுந்தான் அஞ்சுதன். இதற்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு,  கூடவே அந்தப் பாம்பும் மேலே விழுந்ததால் எதிர்பாராவிதமாக ஓநாய்கள் அலறி ஓடத் தொடங்கின. அதே நேரம் குகை வெளிவாசலுக்கு முன் அனைத்து ஆதிகுடிகளும் ஒன்று கூடத் தொடங்கினர். வெளியே சற்றே விடியத் தொடங்கியிருந்தது.

அஞ்சுதன் பதட்டத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். என்னதான் காப்பு கையில் இருந்தாலும் திருடவந்ததாகத் தவறாக எண்ணிவிட்டால் என்ன ஆவதென்ற பயமும், இத்தனை முயற்சி செய்து அடைந்த காப்பை இழக்க வேண்டியிருக்குமோ என்ற வருத்தமும் அவனைச் சூழ்ந்திருந்தன.

அடுத்து வந்த மறுவாசல் வழியே இருவரும் முன்னேற, குகையின்மறுபக்கத்தில் தீவு மக்கள் அனைவரும் தத்தமது ஆயுதங்களுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தனர்.

மெல்ல வெளிவந்த ஐங்கரனையும் அஞ்சுதனையும் கண்டு, வியப்படைந்து, கோபமுற்று, அவர்களை நோக்கிக் கைகளிலிருந்த ஈட்டியை உயர்த்தி அவர்களிருவரையும் குறிவைக்க,  அதுவரை அமைதியாக இருந்து ஐங்கரன் தன் கையில் இருந்த காப்பினை உயர்த்தினான்.

அதைக் கண்டதும் அத்தீவுக்கூட்டத்தின் தலைவனின் விழிகள் எல்லாப்பக்கமும் முடிந்த அளவு விரிந்தன.

அருகில் இருந்தவனிடம், “அவர்கள் இந்தத் தீவைக் கடந்து வெளியேற ஏற்பாடு செய்யுங்கள்” என்று படபடப்புடன் கூற, மூவர் ஓடினர்.

ஐங்கரனைக் கண்டு, தலைவன் பணிவன்புடன் முழங்காலிட்டு, தலை தாழ்ந்து அமரத் தொடங்க, அவர்களை கையசைத்து எழுப்பிய ஐங்கரன் தன் கைகளைக் கூப்பி வணக்கம் கூறினான். அவனது அசைவுக்குக் கட்டுப்பட்டவர்களைப் போல அனைவரும் அதையே செய்தனர்.

அஞ்சுதனுக்கு ஒன்றும் புரியாமல் ஐங்கரனைத் தழுவிக்கொண்டான். அதன்பிறகு அந்தக் காப்பைப் புன்முறுவலோடு அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு இருவரும் தாங்கள் வந்த விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

“இவ்ளோ செஞ்சும் எல்லாம் போச்சுல்ல. காப்பும் போச்சு. ஆராய்ச்சியும் போச்சு.” என்று புலம்பிக் கொண்டே வந்த அஞ்சுதன் ”ஆமா. நீ ஏன்டா எல்லாருக்கும் வணக்கம்லாம் வச்ச? அவனுங்களும் பதிலுக்குக் கும்புடுறானுக. காப்பையும் கொடுத்துட்டு சிரிச்சுட்டே வர்ற. என்னதான்டா உன் கணக்கு?” என்று நச்சரித்தான்.

“அட. இப்ப என்ன? நாம இங்க தேடி வந்தது அந்தக் காப்பை இல்ல. இதத் தான்” என்றபடி தன் மேற்சட்டையின் உள்ளிருந்த பையை விரித்தான் ஐங்கரன்.

அதில் அந்த மயக்கமூட்டும் மலர் வேரோடு இருந்தது. அதன் விதைகளும் இருந்தன. வாசம் பரவுவதற்குள் உடனடியாக மூடிய ஐங்கரன்

“அஞ்சுதா! இந்தப் பூதான் இந்தத் தீவின் புதையல். இதைப்பற்றிய குறிப்புகள் கிடைச்சப்ப வியப்பா இருந்துச்சு. இதைத் தேடித்தான் இந்தத் தீவுக்கே வந்தேன். ஆனா இதுக்குத் தான் வர்றேன்னு தெரிஞ்சா நீ சொன்ன மாதிரி ஊரே படையெடுத்து வந்துடுவாங்க. அதனால தான் தொடர்பே இல்லாம அந்தக் காப்பைத் தேடி வந்ததா சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளரையும் கூட்டிட்டு வந்தேன். சுத்திப் பார்க்கப் போற மாதிரி இருக்கட்டும்னு உன்னையும் அழைச்சுட்டு வந்தேன். ஆனா நம்ம கெட்ட நேரம் இந்த ஆதிகுடி மக்கள் அவரைக் கொன்னுட்டாங்க.

அப்பதான் முன்னேற்பாடு இல்லாம வந்தது தப்புன்னு உரைச்சது. வேற வழியில்லாம உண்மையாவே காப்பைத் தேடி எடுத்துத்தான் உயிரைக் காப்பாத்திக்கணும்னு ஆயிடுச்சு. இதையெல்லாம் உன்கிட்ட முன்கூட்டியே சொல்லிருக்கலாம். ஆனா நீ பதட்டப்படாம வந்துருக்க மாட்ட. எல்லாம் கெட்டிருக்கும். இங்க வந்து உன் மூலமாத் தான் அந்த பூவை என்னால அடைய முடிஞ்சது. நீ மயங்கி இருந்த போதே அதை எடுத்துவைச்சுக்கிட்டேன். நான் ஏற்கனவே அதுல மயங்காத மாதிரி மருந்து சாப்பிட்டு வந்ததால எனக்கு எதுவும் ஆகல.

குகையை விட்டு வெளிய வந்ததும் இதுல ஒரு சின்ன பகுதியை எடுத்து காத்துல கரைச்சு காப்பைத் தூக்கிக் காட்டியதும் எல்லாருக்கும் ஒருவித மயக்கம் உண்டாச்சு. காப்பைப் பாத்ததால மட்டும் அந்தத் தலைவன் நம்மை விட்டுடல. இந்தப் பூவோட வாசமும் ஒரு காரணம். இப்ப இந்தச் செடியோட வேர் விதைன்னு எல்லாமே இருக்கு நம்மகிட்ட. இது நம்ம நாட்டு சூழ்நிலைல வளருமான்னு பாக்கணும். இந்தப் பூ மருத்துவத்துறையில புரட்சியை உண்டுபண்ணப் போகுது. சரியாகப் பயன்படுத்துனா ஆழ்ந்த மயக்கத்திற்கு இட்டுச் சென்று செயல்படாத உடல் உறுப்புகளைச் செயல்படவைக்கறதும் இந்தப் பூவால நடக்கும். எடுத்துக்காட்டா, கணையம் சரியா செயல்படத் தொடங்கினா இன்சுலின் உற்பத்தி சீராகும். சர்க்கரை நோயே குணமாகும். இப்டிப் பல அற்புதங்கள் இந்தப் பூவால நடக்கும். இனிதான் என் சிறந்த ஆராய்ச்சி தொடங்கப்போகுது” என்று முடித்தான் ஐங்கரன்.

“அப்ப நாம திருப்பி இங்க வருவோமா?” என்ற அஞ்சுதனிடம்,

“ம்ம். கண்டிப்பா. அதுக்கான குறியீடுதான் அந்த வணக்கம். அதுதான் நம்ம பாஸ்வேர்ட் இனி. அப்ப கிளம்புவோமா?” என்று மெல்லச் சிரித்து வினவியபடி நடக்கத் தொடங்கினான் ஐங்கரன்.

இதுவரை இருளில் உறங்கிக்கிடந்த கதிரவன் மெல்லத் தன் கரங்களை விரிக்கத் தொடங்கினான்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமைபோல், ஆபத்து காலத்தில் தன் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் திறன் கொண்டவன், அத்திறனைக் கொண்டே ஆபத்தில் இருந்து மீள்வான்’

-முற்றும்-
-ஊதா மூங்கில் மற்றும் வே.கார்த்திகேயன்