சனி, 10 நவம்பர், 2018

47. இயல்பினான்

இயல்பினான்

வெளியே மழை வலுத்துக் கொண்டிருந்தது. ஐப்பசி குளிர் ஊருக்கே  ஏசி பண்ணி விட்டிருந்தது.
மணி ஒன்பதரை ஆகிவிட்டது.

கனிமொழி எட்டு எட்டரைக்குள் வந்து விடுவாள். ஆனால் இன்று இன்னும் வரவில்லை. அலைபேசியில் கடந்த ஒரு மணி நேரமாக முயன்றதில் தொடர்புக்கு அப்பால் இருப்பதாக செய்தி சொன்னது.

ஹாசினி பாடப் புத்தகங்கள் சூழ ஹோம் ஒர்க் செய்த களைப்பில்  தூங்கிப் போயிருந்தாள். வேல்ஸ் வித்யாலயாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் குட்டி தேவதை. ரோஸ் நிறக் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டுத் தூக்கி படுக்கையறைக்கு கொண்டு சென்று படுக்க வைத்தான் வெங்கட் . சின்ன சிணுங்கலுடன் தூக்கத்தை தொடர்ந்த ஹாசினியையே சில நொடிகள் பார்த்தபடி நின்றான். தனக்கும் கனிமொழிக்குமான எட்டரையாண்டு மணவாழ்வின் அழகு பரிசு.

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

ஹாலைத் தாண்டி வராண்டா வந்து பார்த்தான். வெளியே அரசு வாகனம் நின்றது. கதவைத் திறந்த கனிமொழி உள்ளே யாரிடமோ ஏதோ சொல்லிவிட்டு சேலை முந்தானையால் தலையைப் போர்த்தியபடி செல்ல ஓட்டமாய் வந்து அழைப்பு மணியை அழுத்துமுன் கதவைத் திறந்து விட்டான் வெங்கட் என்ற வெங்கட கிருஷ்ணன்.

“என்னாச்சு. ஆபிஸ் ஜீப்ல வர்ற. ஏதும் அவசர மீட்டிங்கா?” துண்டைக் கனியிடம் நீட்டினான்.

“இல்ல தல. திடீர்னு நாலு மணிக்கு ஒரு ஒன் செவென்டி போர் கேஸ். தீபாவளிக்கு தனக்கு பிடிச்ச சேலைய  புருஷன் வாங்கிக் கொடுக்கலன்னு மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சிக்கிட்டாளாம். எங்கே விளாத்திகுளம் தாண்டி குளத்தூர் கீழக் காலனி.  ஆளுங்கட்சி  வட்ட செயலாளர் வீட்டு மேட்டர். பொலிட்டிகல் பிரஷர். போன் மேல போன். ஆறு மணிக்குள்ளே போஸ்ட் மார்டம் பண்ணனும். ஆர்.டி.ஓ. ஸ்பாட் என்கொயரி பண்ணி ரிக்வசன் லெட்டர் கொடுக்கணுமே. ஆர்.டி.ஓ. ஆபிஸ் டைப்பிஸ்ட் மெடர்னிடி லீவ்ல இருக்குதாம். நீங்களே போய் ஆர்.டி.ஓ பார்மாலிடீஸ் முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு போயிருங்கன்னு பெரியவா ஆர்டர். எளவு வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கேன். முதல குளிச்சிட்டு வந்திடுறேன். வழி விடுங்க பாஸ் ப்ளீஸ்.” என்றபடி குளியலறைக்குள் நுழைந்து விட்டாள் கனிமொழி.

இங்கே பெரியவா என்று குறிப்பிட்டது மாவட்ட ஆட்சித் தலைவரை.

வெங்கட் மணி பார்த்தான். மணி பத்தரையை தொட்டுக் கொண்டிருந்தது.
வெங்கட் நிதானமாக ப்ரிட்ஜ் திறந்து தோசைமாவை வெளியே எடுத்து வைத்து விட்டு தேங்காய் சட்னி கனிமொழிக்கு ரெம்ப பிடித்த கறிவேப்பிலை சட்னி அரைத்து விட்டு முதல் தோசையைச் சுட்டு எடுத்து தட்டில் வைக்கவும், கனி குளித்து முடித்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

“தேங்க்ஸ் புருஷா… கொலைப்பசி.. பிஸ்கட் சாப்டே சமாளிச்சிட்டு இருந்தேன். பாப்பா சாப்டாளா?“

“ம்.. எதோ பிசிக்ஸ்ல ப்ராஜக்டாம். உன் சப்ஜெக்ட் ஆச்சே. உனக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிட்டா. கருவேப்பிலை சட்னி எடுத்துக்க. இப்பதான் பண்ணேன்.“

“இந்த சட்னிக்காகவே உன்னை எத்தனை பிறவிக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம். உம்மா செல்லம்“ என்று கன்னத்தைக் கடிக்க வந்தவளை செல்லமாக மார்பில் கை வைத்து தள்ளி விட்டு 

“போதுமா..ப்ரெட் எடுத்துக்கறியா?"

“ப்ரெட்டா... நீங்க சாப்பிட்டாச்சா…?"

“பாப்பா பசிக்குதுன்னா ரெண்டு பேரும் தோசை வார்த்து சாப்டாச்சு.” என்றபடி ஹால் வந்து கால் நீட்டி உட்கார்ந்தான் வெங்கட்.

கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டைப்பிஸ்ட்–கம்–ஸ்டெனோ. 2016 பேட்ச் அப்பாயின்ட்மென்ட். தமிழ் தெரியாத கலெக்டர் வந்ததால் கோவில்பட்டியில் இருந்த ஒரே ஸ்டெனோ கனிமொழியை தூத்துக்குடிக்கு மாற்றல் செய்து விட்டார்கள். காலையில் எழுத்து எட்டு மணிக்குள் பஸ் பிடிக்க வேண்டும். அங்கே ஐந்து மணிக்கு கிளம்பி தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் புது பஸ் ஸ்டான்ட் என மாறி மாறி பஸ் மாறி கோவில்பட்டி ஜி.எச். ஸ்டாப்பில் இறங்கி எவ்வளவு வேகமாக நடந்து வந்தாலும் வக்கீல் தெருவில் இருக்கிற வீட்டுக்குள் நுழைய எப்படியும் எட்டரை மணி ஆகி விடும்.

வெங்கட்  தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூலிப்பு பிரிவில் தற்காலிக வேலை. பதினைந்தாயிரம் சம்பளம் என்றாலும் நாய்ப்பிழைப்பு. அவனும் கனியும் ஒரே நேரத்தில்தான் டிஎன்பிஎஸ்’சி எல்லா தேர்வுக்கும் அப்ளை செய்தார்கள். ஒன்றாக படித்தார்கள். கனி இரண்டு வருடத்தில்  க்ரூப் 2ல் செலெக்ட் ஆகி உள்ளூரிலேயே போஸ்டிங். வெங்கட்டுக்கான வாய்ப்பு மட்டும் கட் ஆப் மார்க்குக்கு பக்கத்தில் வந்து வந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. இடை இடையே வங்கித் தேர்வு - ரயில்வே தேர்வு என எல்லாவற்றையும் விடாமல் எழுதிக் கொண்டே கனிமொழிக்கு  கணவனாகவும், ஹாசினிக்கு ஒரு நல்ல அப்பாவாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.
ஈரத் தலையை துவட்டியபடியே வந்த கனி அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன படிக்கிறீங்க இன்னிக்கு ?”

“தமிழக இலக்கிய வரலாறு.. வெங்கடாசலம் எழுதினது “

“நான் இருக்கணுமா ?”

“வேணாம். ரெம்ப அலைஞ்சிருக்க. போய் தூங்கு. ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன்.”

கன்னத்தில் குளிருக்கு இதமாய் இதழ் பதித்து “சீக்கிரம் வாங்க உங்களுக்கு வேலை ரெம்ப இருக்கு” என்று கண் சிமிட்டியபடி பெட்ரூமுக்குள் மறைந்தாள் கனிமொழி.

அவள் போன திசையையே சில வினாடிகள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெங்கட். மனைவி அரசாங்க வேலை பார்க்க கணவன் கிட்டத்தட்ட வெட்டியாய் கணவன் என்கிற ஒற்றைத் தகுதியோடு மட்டும் வாழும் அவலத்தின் குரூரம் அணு அணுவாய் ஊசி இறக்கியது. நட்பு சுற்றச் சமூகத்தின் எள்ளல் பார்வையை சகித்து வாழும் கொடுமையை நினைக்கையில் மூச்சு முட்டியது.

புத்தகத்தைப் புரட்டினான். படிக்கும் மன நிலையில் இல்லை என்பது மூளைக்கு நன்றாகவே தெரிந்தது. புத்தகத்தை மூடி வைத்து விட்டு சூடாக இருந்த பாலை எடுத்து வந்து நிதானமாக குடித்து முடித்தான்.

படுக்கை அறைக்குள் நுழைந்தான். குழல் விளக்கின் ஒளியில் கனியின் தேகத்தின் வெளிச்ச விளிம்புகள் அவனைப் படுத்தியது. மெல்ல நெருங்கி அவளைத் தொட்டான் அவன் இளஞ்சூடு விரல்களின் தொடுகையில் கனியின் மேனி அதிர்ந்து அடங்க கழுத்தை மட்டும் வளைத்துப் பார்த்தாள் கனிமொழி.

அடுத்த பதினைந்து நிமிடங்கள் இயற்கை ஒளித்து வைத்திருந்த  உன்னத கணங்களைத் தேடி அலைந்து கண்டு முகிழ்ந்து முயங்கி, மென்னதிர்வில் ஓய்ந்து, அடங்கிய பின், ஒரு கனத்த அமைதியும், வெம்மையும், அதிர்வும் மோகத்தின் தீரா வாசமும் அறை முழுதும் கவிழ்ந்து இருந்தது.

தேக அயர்வில் உறக்கத்தைத் தொட இருந்த வெங்கட்டின் கழுத்தை வளைத்துத் திருப்பியது கனியின் மென்கரம். “உங்க கூட கொஞ்சம் பேசணும்“ என்று காதுகளுக்குள் குழறியது அவள் குரல்.

வெங்கட்டின் அனைத்துப் புலன்களும் ஒரு சேர விழித்துக் கொண்டன. அடுத்து நடக்க இருக்கும் சொற்களின் போரை எதிர்நோக்கி கனியின் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான் வெங்கட்.

“சொல்லு கனி“ காமம் ஒழிந்த குரல் வெளிவந்தது வெங்கட்டிடம் இருந்து.
கொஞ்சமே தயங்கினாள் கனிமொழி. முதல் தாக்குதலே மார்புக்கு நேராய் அமைத்தாள் தன் கணையின் கூர் முனையை.

“இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பிடிவாதமா இருக்கப் போறீங்க?“

இருளில் ஒளிர்ந்த அவள் கண்களில் அகம்பாவம் இல்லை. ஆணவம் இல்லை. கருணையே பெருகி வழிந்தது. அவளை இன்னும் இறுக்கமாய் தனக்காய் நெருக்கி கொண்டு “நான் ஜெயிக்கிற வரை கனி“ என்றான்.

“ஈசியா ஜெயிக்க வேண்டிய வாழ்க்கையை நீங்களே கஷ்டப்பட்டு போராடி ஜெயிக்கப் பார்க்கிறீங்க. வருஷம் எவ்வளவு வேகமா ஓடுது பார்த்தீங்கல்ல. வெளியே மத்தவங்க கேள்விய கேக்கறப்போ எவ்வளவுதான் கண்டுக்காம போறது? இப்போ ஒரு வார்த்தை 'ஊம்'னு சொல்லுங்க. நம்ம ஊருக்கு வர்ற காண்ட்ராக்ட்ல நாலஞ்சு காண்ட்ராக்டை வாங்கி தரேன். பெரியவர்ட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதும். உங்க நேர்மைய அங்கே காட்டி ஜெயிக்கலாமே. ஊருக்குள்ளே என் புருஷனும் கெத்தா வரணும்கற ஆசை எனக்கு இருக்காதா?“

“உன் சுயமரியாதைய விட்டுட்டு எனக்காக பரிந்துரை பண்ணி அதுல வர வேலையை நான் செய்வேன்னு எப்படி நம்புற கனி ? இத்தனை நாளு என் கூட வாழ்ந்தும் இன்னுமா நீ என்னைப் புரிஞ்சிக்கல.” வெங்கட்டின் குரலில் லேசான வறட்சி.

மல்லாந்து படுத்து விட்டம் பார்த்து பேசியவனின் குரலில் உறுதியே நிரம்பி இருந்தது. “எனக்கு இந்த வாழ்க்கைல வெட்கமே இல்லை கனி. சும்மா இருக்காம வேலைக்குப் போறேன். வர்ற வருமானத்த ஒரு பைசா வேஸ்ட் பண்ணாம நம்ம குடும்பத்துக்கு தர்றேன். அழகான குட்டி தேவதைய பார்த்துக்கறேன். மகாராணியா இருக்குற என் மனைவிக்கு உண்மையா இருக்கேன். ஆனா இதுல எல்லாம் நிறைவு இருக்கான்னு கேட்டா இல்லைதான். என் கனவும் அரசாங்க வேலைதான். நான் சாதாரணமா தோற்கல. போராடித்தான தோற்கிறேன். இதுல வெக்கம் இல்லை. கௌரவம்தான். எப்படியும் இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ளே நானும் அரசாங்க வேலைக்கான தகுதிக்கு என்னை தகுதிபடுத்திக்குவேன்.. முடியலையா எந்த வெட்கமும் இல்லாமல் கிடைக்கிற வேலையை கடைசி வரை நேர்மையா செஞ்சு உனக்கு ஒரு நல்ல புருசனா ஹாசினிக்கு நல்ல அப்பாவா வாழ்ந்து காட்டுவேன் கனி. என்னை நம்பு“

அவனை இன்னுமாய் இறுக்கிக் கொண்டாள் கனிமொழி. “அரசே நமக்கு கொடுக்கிற சலுகைய ஏன் மறுக்கிறீங்க? எத்தனை பேர் அப்படி இந்த வேலைக்கு வந்திருக்காங்க. அவங்க எல்லாம் சந்தோசமா வாழலியா ? நீங்க மட்டுமே ஏங்க இந்த மாதிரி வளைஞ்சு கொடுக்காம நேர்மையா வாழறேன்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க?"

வெங்கட் எழுந்து உட்கார்ந்தான். கனியையும் எழுப்பி தனக்கெதிராய் அமர்த்திக் கொண்டான்.

“கனி… இப்ப என்ன பிரச்னை உனக்கு ? நான் இருபது மணி நேரம் உழைக்கிறேன். எப்படியும் டி என் பி எஸ் சில வேலை வாங்கிருவேன். ஏன் என்னை நம்ப மாட்டேங்குற?"

”கைல தர்ற வேலைய தட்டி விட்டு ஏன் ஆகாசத்துல பறக்குற வேலைய பிடிக்க ஆசைப்படுறீங்கன்னுதான் எனக்கு ஆதங்கம்."

மறுபடி மறுபடி பேசிய வாக்குவாதங்கள்தான். ஆனால் இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று வெங்கட் கனியின் முகத்தை நேராகப் பார்த்தான். “நான் என்ன செய்யனும்னு நினைக்கிற கனி?“

“ஒரு வாரத்துல நான் சர்டிபிகேட் வாங்கி தரேன். அடுத்த எக்சாம்ல அந்த சர்டிபிகேட்டை கோட் பண்ணுங்க. கண்டிப்பா வேலை கிடைச்சே ஆகும். என்ன சொல்றீங்க?" ஆவலுடன் துடிதுடித்தது கனியின் இதழ்கள்.

அதை ரசித்தபடியே “ என்ன சர்டிபிகேட்?”
”ICM சர்டிபிகேட். இண்டர்காஸ்ட் மேரேஜ் சர்டிபிகேட். இதை மட்டும் சேர்த்து அப்ளை பண்ணிட்டா இப்ப நீங்க வாங்கிற கட் ஆப் மார்க்குக்கு முதல் சிட்டிங்க்லையே நீங்க கேட்கிற டிபார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும்."

“நீ இந்த சர்டிபிகேட் வச்சுதான் இந்த வேலைய வாங்கினியா?" அமைதியாக வந்தது வெங்கட்டின் கேள்வி.

“இல்ல. எங்க கம்யூனிட்டிக்குதான் கட் ஆப் மார்க் கம்மிதானே. உங்க கம்யூனிட்டிக்குதான் நூத்து தொண்ணூறு எடுத்தாலும் எங்க கிடைக்குது. இதுவே ICM சர்டிபிகேட் கொடுத்தா போன வருஷம் கட் ஆப் நூத்து அறுபது கூட வரல.. நீங்க இப்ப எடுக்கிற நூத்து எம்பது மார்க் எடுத்துட்டா போதும். காரன்டியா வேலை வாங்கிரலாம் வெங்கட். ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க“

வெங்கட் அவளைக் கூர்மையாய் பார்த்தான். “அப்ப நம்ம காதல் கல்யாணத்த வேலைக்காக அரசாங்கத்துட்ட அடமானம் வைக்க சொல்ற? அப்படி செஞ்சு நானும் வேலை வாங்கி, இந்த சமூகத்தில வாழ்ற பத்தோட பதினோராவது ஆளா... பிறப்பையும் சாதி இணைப்பையும் சலுகையாக்கி பார்க்கற ஆட்களோட ஆளா மாறி என் சுயத்த தொலைக்க சொல்ற ? அப்படிதானே கனி?“

கனிமொழி சுளீரென்று சாட்டையடி வாங்கியவள் போல் வெங்கட்டைப் பார்த்தாள்.

“உனக்கு நினைவு இருக்கா கனி ? முதல் முதல்ல காலேஜ்ல நாம சந்திச்சிக்கிட்டது நான் வெங்கட்டாவும் நீ கனியாவும்தான். நீ என்ன ஜாதின்னு எனக்கு தெரியாது. நான் என்ன ஜாதின்னு உனக்கு தெரியாது. பிரெண்ட்ஸ் ஆனோம். ஒருத்தருக்கு ஒருத்தர் மனசாலதான் இணைந்தோம். எனக்கு கவிதை. உனக்கு இசை. போற இடம்லாம் ஜெயிச்சோம். மனசால இன்னும் நெருங்கினோம். வீட்டுக்கு தெரிஞ்சு போன பின்னால் எத்தனை மிரட்டல்? நீ எவ்வளவு அடி வாங்கிருப்ப எனக்காக? எத்தனை சொந்தங்களை இழந்தேன் நான் உனக்காக? எல்லோரும் நம்மை ஓட ஓட விரட்டினாங்க. என்னை நம்பி நீயும் உன்னை காப்பாத்தனும்னு நானும் எவ்வளவு வைராக்கியமா இருந்து நடந்த கல்யாணத்துல நம்மள வாழ்த்த வந்தது எத்தனை பேரு. யாருமே இல்ல.  இந்த சமூகத்தில் நீ ஒரு முனை நான் ஒரு முனை. இரண்டையும் இணைச்சது நம்ம காதல்… காதல் மட்டும்தானே கனி. வேற எதிர்பார்ப்பு ஏதும் இருந்ததா நமக்குள்ளே?“ நிறுத்தி இடைவெளி விட்டான் வெங்கட்.

கனிக்குக் கண்கள் கலங்கிக் கொண்டிருந்தது.

“அப்பேர்ப்பட்ட உன்னதமான உறவை ஒரு வேலைக்காக அடமானம் வைக்க சொல்றே. அப்படியே வச்சு கிடைக்கிற வேலைல நான் எவ்வளவு பெரிய அதிகாரியாகவும் வந்தாலும் அப்புறம் எனக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சி  கண்ணாடில என்னைப் பார்க்கறப்ப எல்லாம்  காதலை அடமானம் வச்ச ஒரு பிராணியாதான் என்னை பார்க்க வைக்கும் கனி. உனக்கு கிடைத்த வேலை இயல்பா உனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகையில் கிடைச்சது. ஆனா பிறப்பாலோ படிப்பாலோ எனக்குக் கிடைக்காத ஒரு தகுதிய கலப்புத் திருமணம்னு அடையாளப்படுத்தி பகிரங்கப்படுத்தி அதை மட்டும் ஒரு தகுதியா வச்சு வேலைய வாங்குற அளவுக்கு என்னை அவமானப் படுத்திடாத கனி…ப்ளீஸ்."

கனி கதறி அவனை அனைத்துக் கொண்டாள். இந்த அணைப்பில் காமம் இல்லை. அவன் ஆண்மை மீதான அவனின் தன்னம்பிக்கை மீதான செருக்கு இருந்தது. அந்த பெருமையினுள் வெங்கட்டை முழுவதுமாக அவளுள் அடைத்துக் கொள்ளும் பெருமையும், பேராவேசமும் இருந்தது. வெங்கட் கனிமொழியின் பேராழிப்பேரன்பு ஆளுமைக்குள் பேராண்மை கொண்டவனாய் நிறைந்து கொண்டிருந்தான்.

- சித்ரா தேவி



குறள் :
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

விளக்கம்:
இல்வாழ்க்கையில் இயல்பாக இருப்பவனே, வாழ்வின் உண்மையை அறிய முற்படுபவர்களில் தலையானவன்.

46. சபலம்

சபலம்


மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.

“என்ன மிஸ்டர் கோபால், உங்க வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.?

“உண்மைதான் சார்.”

“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.? எனக்கு வியப்பா இருக்கு.”

“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”

“ஓ.. அப்படியா.? எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு."

“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”

அந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான்.

“ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”


“ஓகே. தேங்க் யூ..”

“ம்ம்ம்.. வெல்கம்.”

எனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன.

ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...?


தலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.

எனக்கு குப்பென வியர்த்தது...! பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.

வீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.

“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.

'சொல்லிவிடலாமா இவளிடம்.?'

“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”

“எதுக்கு.?"

“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”

'என்னாச்சு இவருக்கு.?' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

"ம்ம்.. சொல்லுங்க.”

“இப்படி உக்காரு." என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.

“ஏதுங்க இது.? கடன் வாங்கினிங்களா,.?"
நான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.

“யாரு தவற விட்ட பணம் இது.?"

“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”

அவள் அமைதியாக இருந்தாள்.

“சுபா ஏதாவது பேசேன்.”

“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”

“சுபா என்ன சொல்ற.? கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”

“உங்க சபல புத்திய கடவுள பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.

“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”

“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.?” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”
“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.?" என நான் குரலை உயர்த்த...

சுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.

“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.

“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.

நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத் திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி பணப் பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபச்சரித்தார்.

“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.

“அப்படியா..?" என்று யோசித்தவர்,
“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா...? ஒரு வாரத்துக்கு முன்னாடி தான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது.? நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு..." என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...
என் கண்ணில் கண்ணீர் வந்தது...

அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.


நிறைவு

திருக்குறள் :
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்

மு.க விளக்கம் :
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றியும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ?

45. பெரும் மகிழ்ச்சி

பெரும் மகிழ்ச்சி

கடை வீதிகளில் கூட்ட நெரிசல் காரணமாக ஆறு மணிக்கு மேல் வண்டிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றுச்சாலையில் திருப்பிவிடப்பட்டிருந்தது. இரு சக்கர வண்டிகளை சாலை ஓரத்தில் நிறுத்த இடம் தேடி மக்கள் அலைந்து கொண்டிருந்தனர்.
HP விளம்பர விளக்கின் கீழ் ஒரு கையில் விசிலும் மறு கையில் STOPஎன்று எழுதப்பட்டிருந்த வட்டமான அட்டையையும் கையில் பிடித்தபடி எரிபொருள் நிரப்ப வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார் அய்யாகண்ணு.
“ஏலேய் முருகேசா சார் வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு அந்த ஸ்கூட்டிக்கு போட்டு விடு எவ்வளவு நேரம் நிக்கிறாங்க லேடிஸ காக்க வைக்காதெ… சார் அங்க எல்லாம் வண்டியை நிப்பாட்ட கூடாது பெட்ரோல் டேங்கர் லாரி வர்ற நேரம் வண்டியை எடுங்க… பக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாண்ட்ல போயி நிப்பாட்டுங்க… தம்பி இஞ்சினை ஆப் பண்ணாம டேங்க் மூடியை கழட்டாதப்பா…” அதிகாரமும் அன்பும் கலந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அய்யாகண்ணுவின் கண்ணில் பட்டது அந்த வெள்ளை நிற கார் பார்த்தவுடன் அவரின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“தாத்தோய் ஓனர் வந்துட்டாரு… வீட்டுக்கு வெள்ளனமே போகணும்னு சொன்னீரு… போயி கேட்டு சட்டு புட்டுன்னு கெளம்புற வழியப்பாரும்.” என்று சிரித்தான் முருகேசன்.
“ஏம்முலெ இழிக்கெ… வீட்லெ பொடுசுகெ காத்துக்கிடக்கும்கெ… மவனும் மருமவளும் போனஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வர லேட் ஆகும்னு தான்லெ வெரசா போகணும்னேன்.”
“போனஸ் இன்னைக்கு இல்லியாமே என்ன செய்வீரு?”
அதைக் கேட்டதும் அவரின் முகம் சிறுத்து விட்டது.
“சரி சரி வெசனப்படாதீரும் ஓனர் போறதுக்குள்ள போயி பேசிப்பாரும்.”
எதுவும் பேசாமல் அலுவலகம் நோக்கி நடந்தார் அய்யாகண்ணு.
சிறிது நேரம் கழித்து கையில் சில 500ரூபாய் நோட்டுகளோடு அலுவலகத்தின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். முருகேசனும் மற்றவர்களும் மறித்து ஆச்சரியத்தோடு சரமாரியாக கேள்விகள் கேட்டவர்களிடம்…
“போனஸ் இன்னைக்கு இல்லயாம் பெட்ரோல் டீசல் லோடுக்கு பணம் குடுத்துட்டாராம் அவரோட நெலமயெ சொன்னாரு, நான் என்னோட நெலமயெ சொல்லி அவசரத்துக்கு ரெண்டாயிரம் ரூபா வாங்கினேன்” என்று கூறி விட்டு முகம் கை கால்களை கழுவி, சீருடை கலைந்து, உடை மாற்றிக் கடைத்தெரு நோக்கி வேகமாக நடந்து சென்றார்.
சாலைகளின் ஓரத்தில் பட்டாசு, பலகாரக்கடைகள் மின் விளக்குகளின் அலங்காரத்தில் மின்னியது. நகரின் பிரதான சாலையில் பிரபல துணிக்கடையின் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் வெளியே 30% முதல் 50% வரை தள்ளுபடி என்றிருந்த விளம்பரப் பதாகையின் முன்பு இருந்த தள்ளுவண்டி கடையில் பேரம் பேசியபடி இருந்தவர்களை விலக்கி,
“ஒம்பது வயசுப் பையன், ஆறு வயசு புள்ளைக்கு சட்டை டவுசரு, பாவடை சட்டை காட்டுப்பா” என்றார் அய்யாகண்ணு.
மனைவி மரகதத்தோடு பேரப்பிள்ளைகள் மல்லுக்கட்டிக்கிட்டு இருக்குற சத்தம் சைக்கிளை நிறுத்தும் போதே கேட்டது. செருப்பைக் கழட்டிக்கொண்டே…
“எதுக்குடா சண்ட போடுறீகெ… இங்கெ வாங்கெ… தாத்தா என்ன கொண்டு வந்திருக்கேன்னு பாருங்கெ… வெரசா வாங்கெ…” குரலைக் கேட்டதும் சண்டயெல்லாம் ஓரமாக வைத்து விட்டு பேரப் பிள்ளைகள் நான் முந்தி நீ முந்தினு வாராந்தாவை நோக்கி ஓடி வந்து அவருடைய கையில் இருந்த பையப் பார்த்ததுமே அதுக்குள்ள என்ன இருக்குன்னு பிள்ளைகளுக்கு தெரிந்து விட்டது. அவ்வளவு தான், அடுத்த நிமிடம் ‘கே.. கே… கோ’வென்று பிள்ளைகள் போட்ட சத்தத்தில் அந்த பழைய கார வீடு சிறிது நேரம் அதிர அய்யாகண்ணுவும், மரகதமும் காதைப் பொத்திக் கொண்டனர்.
பேரப்பிள்ளைகள் புத்தாடைகள் அணிந்து பார்த்து மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் அய்யாகண்ணுவுக்கு மனசு மகிழ்ச்சியில் நிறைந்து விட்டது.
அடுப்படியில் இருந்து பால் கலக்காத காப்பியோட வந்த மரகதம், “போதும்… போதும்… எல்லாத்தையும் அவுருங்க… தீவாளியன்னைக்கு போடலாம்” என்று சொன்னது யாரு காதுலயும் விழவில்லை.
“போனஸ் போட்டாங்களா இன்னைக்காவது?” மரகதம் கேட்டதும் அவருடைய முகம் வாடியதைப் பார்த்ததுமே புரிந்து கொண்ட அந்த ‘மகராசி’ மேற்கொண்டு அதைப் பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
“பஞ்சாலை வேல முடிஞ்சு இன்னும் கொஞ்ச நேரத்துல மருமவளும் மகனும் வந்துருவாங்க, மருமவளுக்கு வந்ததும் ஒரு வாய் காப்பி குடிச்சாத்தான் அடுத்து வேலையே ஓடும்.” மனதுக்குள் எண்ணம் ஓடவே அடுப்பில் இருந்த காப்பியில் பால் ஊற்றி கொதிக்க வைத்தாள் மாமியார் மரகதம்.
காலில் கிடந்த செருப்பை வேகவேகமாக கழட்டிப் போட்டுவிட்டு, பின்கட்டு பக்கம் போய்விட்டு வந்து , மாமியார் குடுத்த காப்பியக் குடித்து விட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு பைக்குள்ள வைத்து இருந்த பணத்தை எடுத்த மருமகள் இளவரசி,
“அத்தே இந்தாங்க போனஸ் பணம் நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் போயி ஒங்க மகளுக்கு பட்டுச்சேலையும் மாப்பிள்ளைக்கு சட்டை பேண்ட்டும் வாங்கி குடுத்துட்டு தீபாவளிக்கு அழைச்சுக்கிட்டு வந்துருங்க” எனச் சொல்லி பணத்தை மாமியார் கையில் திணித்தாள்.
மாமியார் மரகதம் செய்வதறியாமல் நிலை குத்தி நின்றிருந்தாள். பணமில்லாமல் மகளையும் மருமகனையும் ரெண்டாவது தீபாவளிக்கு கூப்பிட முடியாமல் போய்விடுமோ என்று தவித்த அந்த தாயுள்ளம், ‘மருமக பஞ்சாலையில கஸ்டப்பட்டு உழைச்சு மொத மொதலா வாங்குன போனஸ் பணத்த கையில திணிச்சது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வீட்டுல பெரியாளுக யாருக்குமே புதுத்துணி எடுக்கலனு…’ ஞாபகம் வரவே என்ன செய்வதென்று தெரியாமல் தன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
அத்தையையும் மாமாவையும் பார்த்த இளவரசி, “மாமாவ எதுக்கு அத்தே பாக்குறீங்க அவுக ஒண்ணும் சொல்லமாட்டாக நீங்க மொதல்ல பணத்த உள்ளாற வெச்சுட்டு வாங்க… போங்க” என உரிமையோட அதட்டினாள்.
அய்யாகண்ணு மனைவியைப் பார்த்து தலையசைக்கவும் பணத்தைக் கொண்டு போய் பெட்டியில் வைத்து விட்டு வந்த மாமியாரின் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்க்கார வைத்தாள் இளவரசி.
“அத்தே எதுக்கு தயங்குறீங்க? நம்ம கயல்விழிக்கு தான செய்யுறோம் என்னயயும் கயலையும் எதுக்கு பிரிச்சு பாக்குறீங்க? அவ என் தங்கச்சி மாதிரி… அதுனால நீங்க தயங்காதீங்க இந்த வருச தீபாவளிக்கு அவ நம்ம கூட தான் இருப்பா… கவலப்படாதீங்க அத்தே…”
இளவரசி பேசுவதைக் கேட்டுக்கொண்டே உள்ள வந்த அன்பழகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன் மனைவிக்கு தன் தங்கச்சி மேல இருக்குற பாசத்தைப் பார்த்ததும் அவனுக்கு கண் கலங்கியது. அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மனைவியின் கைகளைப் பிடித்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான். கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்ததும் இளவரசிக்கும் ரொம்பவும் மகிழ்ச்சி.

உள் அறையில் இருந்து உடுத்திய புதுத்துணியோடு வராந்தாவிற்கு ஓடி வந்த பிள்ளைகள் அப்பாவின் கையில் இருந்த பொட்டலத்த்தைப் பார்த்து ஆவலோடு பாய்ந்தார்கள். பரபரவென்று பிரித்தான் கலையரசன். முத்துலாபுரம் கருப்பட்டி மிட்டாய், சாத்தூர் காராச் சேவு, கோவில்பட்டி முறுக்கும் அதிரசமும் இருந்தன.
காகிதம் சுற்றி இருந்த சிறிய அளவிலான அட்டைப் பெட்டியைப் பிரித்தாள் கனிமொழி. சேவல் மார்க் பட்டாசு கம்பெனியின் கிப்ட் பாக்ஸ் அது… கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம், சீனி வெடி, ஓல வெடி, பொட்டு வெடி , துப்பாக்கி என்று எல்லாம் கலந்து இருந்தது. அடுத்த நொடி பெரியவர்கள் நான்கு பேரும் காதுகளைப் பொத்திக் கொள்ள சிறுசுகள் இரண்டும் கத்தி அடங்க சிறிது நேரம் ஆனது.
கன்னங்கரேலென பின்னல் பின்னலாக வட்டமாக இருந்த கருப்பட்டி மிட்டாயை வாயில் வைத்து கடித்தவுடன் மொறுமொறுப்பாக உடைந்து வாய்க்குள்ளும் உதட்டிலும் வழிந்த கருப்பட்டிப்பாகுவை துடைத்தபடியே கையில் மீதி இருந்த அரை வட்ட மிட்டாய் துண்டோடு வாசலுக்கு வந்தான் கலையரசன்.
“கனி… அண்ணாக்க நிமிர்ந்து வாயெத் தொற” என்றான்.
“எனக்கு ஒண்ணும் வேணாம் நீயே தின்னு.”
“வாயெத் தொறன்னா தொறயேன்.”
“என்னத்துக்காம்?”
“ஒன்ன பாக்க வெச்சி தின்னா எனக்கு வகுறு வலிக்கும்.”
“அதெல்லாம் வலிக்காது… நான் வெடி போட்டுட்டு அப்புறமா தின்கிறேன்.”என்றாள் கனிமொழி.
“கலை, கனி ரெண்டு பேரும் இங்க ஓடி வாங்க… அப்பத்தான் அப்பா ஒரு சேதி சொல்லுவேன்.”
இருவரும் அருகில் வரவே மகளை அப்பாவும், மகனை அம்மாவும் மடியில் அமர்த்திக் கொண்டனர்.
“இன்னைக்கே ரெண்டு பேரும் புது ட்ரெஸ் போட்டு , பட்டாசு எல்லாம் வெடிச்சிட்டா… நாளைக்கு கயல் அத்தையும், மகிமா பாப்பாவும் வரும் போது என்ன பண்ணுவீங்க…” என்று அன்பழகன் கூறிய அடுத்த நொடி கலையரசனும், கனிமொழியும் மடியில் இருந்தபடியே மகிழ்ச்சியில் துள்ளிக் கத்த தொடங்கும் முன் இருவரின் வாயையையும் பொத்தி கட்டிப் பிடித்து சிரித்தபடியே இருவரையும் அடக்கிக் கொண்டு இருந்த மகனையும் மருமகளையும் பார்த்து, அய்யாகண்ணுவும் அவர் மனைவியும் சிரித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
அத்தையும் அத்தை மகளும் வரப் போகும் ஆனந்தத்தில் கலையரசனும் கனிமொழியும் சிரித்தபடியே கம்பி மத்தாப்பைச் சுழற்ற வண்ண வண்ணமாய் வெளிச்சம் வட்டமாகவும் நாலா புறமும் சிதறி ஒளி வீசியது. வீட்டில் இரண்டு நாள் முன்பே தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கி இருந்தது.
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

பொருள்:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.


-லிண்டோ சசி.

44. தூய நெஞ்சம்

தூய நெஞ்சம்



செல்போன் அலாரம் தனக்கு உரித்த நேரமான 5.30 மணிக்கு கத்த துவங்கியது கண்களை கசக்கிய படியே, அலாரத்தை அணைத்தான் அசோக்; ஓசை கேட்டு அவன் மனைவி காவியா கண்களைத் திறக்காமலே திரும்பிப் படுத்துக் கொண்டாள். படுக்கையை விட்டு எழுந்த அசோக், தூக்க கலக்கத்தோடு குளியறைக்குள் புகுந்துகொண்டான்.

அசோக் கத்தார் நாட்டில் உள்ள  அரசாங்க உதவி பெறும் தொலைதொடர்பு சேவை நிறுவனம் ஒன்றில் சேவைத்தர பிரிவில் தலைவனாக உள்ளான்; வெகு விரைவிலேயே அவனுக்கு இந்த உயர் பதவி கிட்டியிருக்கிறது காரணம் அவனது நேர்மை மற்றும் இன்ன பிற. 

வீட்டில் பார்த்த காவியாவை கல்யாணம் செய்துகொண்டு, கம்பெனி வழங்கிய புது பிளாட்டில் குடிபெயர்ந்து 5 மாதங்கள் ஆகிறது. காவியாவைப் பற்றியும்  அசோக்கைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வதற்குள், குளித்து விட்டு வரும் அசோக்கைப் பின்தொடருவோம்.

வெளியே வந்த அசோக், காவியா இன்னமும் படுக்கையில் இருப்பதைக் கண்டு வியந்தான். எப்பொழுதும் தன்னுடனே எழுந்து குளித்து வரும் தனக்குத் தர வேண்டி, ஆவி பறக்க காபி கோப்பையோடு எதிரே காட்சியளிக்கும் காவியா, இன்று எழாமல் இருப்பதன் காரணம் நேற்று நடந்த நிகழ்வாகத்தான் இருக்கும் என்று யூகித்துக்கொண்டான். இரவு நினைவலைகளோடு அசோக் சமையலறைக்குள் நுழைந்தான். 

காவியா –  புத்துலக மங்கை… உலகத்திற்கு ஏற்ப தன்னை எப்போதும் புதுப்பித்து மெருகேற்றிக் கொள்பவள்… Very Practical… அசோக் – அவனும் புத்துலக இளைஞனே!! ஆனால், இன்னமும் மனசாட்சிக்குப் பயந்து நடப்பவன். ஏதோ ஒரு புள்ளியில் இருவரும் ஒத்துப்போய் அவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதே…!!

நேற்று நடந்ததைப் போல் அவர்களுக்குள் சிறுசிறு சண்டை எப்படியேனும் வாரம் ஒரு முறை வந்துவிடும். தவறு இருவர் மேலும் உள்ளது. ஒரு சமயம் அலுவலகப்பணிகள் பற்றி காவியா கேட்க – அசோக் ஆர்வமாக அவளுக்கு எல்லாவற்றையும் கூறினான்.

ஆஃபிஸில் உள்ள மற்ற ஸ்டாஃப்ஸ் முடிந்த வரை மேலதிகாரியை ஏமாற்றி ஏதோ ஒரு வகையில் லாபம் அடைகிறார்கள்; தனது கணவன் மட்டும் முட்டாளாய் இருந்து வருகிறான் என்று வெகு விரைவாகத் தெரிந்து கொண்டாள்; நிறைய முறை அசோக்கிடம் இது குறித்து பேசி அவனைத் துளைத்தெடுப்பாள்… நேற்றும் அதே போல்,

“எனக்கு புடிக்காத விஷயம்… என் மனசுக்கு ஒப்பாத காரியங்கள என்ன திரும்ப திரும்ப செய்ய சொல்ற… நானும் உனக்காக ரெண்டு மூனு தடவ செஞ்சிப்பாத்தேன்… என்னால நிம்மதியா இருக்க முடியலை, மனசாட்சி உறுத்துது… இந்த காலத்துல இப்படி கூட முட்டாளா இருப்பாங்களானு நீ கேக்கற? நா இப்படி தா!! மத்தவங்க அப்படி இருக்கங்காங்கறதுக்காக என்னால அவங்க மாதிரிலாம் இருக்க முடியாது”

கண்களை இருக்கியபடி அவன் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த காவியா, ”ஒடனே கோவப்படறதுல ஒன்னும் குறைச்சல் இல்ல!! கம்பெனில நல்ல எடத்துல இருக்குடா ரொம்ப இல்லாட்டியும் சிக்கல் இல்லாம வரதையாச்சும் ஏன் வேணான்னு சொல்ற…? ஏன் இப்படி புரிஞ்சிக்காம இருக்க…? நமக்கு  இல்லாட்டியும் அடுத்து வர நம்ம குழந்தைங்களுக்கு ஆகும்டா”

“அப்படி சேத்துற எந்த பொருளும் நமக்கோ, நம்மள சுத்தியிருக்கறவங்களுக்கோ எந்த நிரந்தர மகிழ்ச்சிய தந்துடுமா…? தப்பு பண்ணிட்டு பயந்து பயந்து வாழ விரும்பல… புரிஞ்சுக்கோ…” கோபத்தை அடக்கியபடியே அசோக் பதில் அளித்தான். 

இப்படியே அவர்கள் வாக்குவாதம் சண்டையாக மாறியது; ஒரு  கட்டத்திற்கு மேல் பொறுக்காத அசோக் பேசி பயனில்லை என்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.  குக்கர் விசில் எழுப்ப, நேற்றைய நினைவில் இருந்து மீண்ட அசோக் துரிதமாக அன்றைய சமையலை செய்து விட்டு அலுவலகம் சென்று விட்டான்.

எனினும் அவன் மனது முழுவதும் காவியா எப்படியும் சமாதானம் ஆகி விடுவாள் என்றே எண்ணமே ஆட்கொண்டிருந்தது.

5 நாட்கள் பின் வந்த ஒரு வெள்ளி அசோக்கிடம் காவியா, “ஊருக்கு போறேன் அசோக்… நாலைஞ்சு மாசம்  இருந்திட்டு வரேன்” என்றாள் தெளிந்த முகத்தோடு .

“உன் விருப்பம் காவியா; நீ எப்படியும் என்ன புரிஞ்சிப்பேனு எனக்கு நம்பிக்கை இருக்கு…” அசோக் தீர்க்கமாகப் பதில் உரைத்தான்.முகத்தில் தோன்றிய புன்னகையை மட்டும் அவனுக்கு உதிர்த்து விட்டு இந்தியா வந்தடைந்தாள்.

பெற்றோரோடு இருந்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது என்று தன் கல்லூரித் தோழியின் அறையில் தங்கினாள். அந்த தோழி மூலமாகவே புதிதாக துவங்கிய நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். 

சேர்ந்த மூன்று மாதத்திலே நல்ல பெயர் எடுத்த காவியாவிடம் சில பிரிவுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அவ்வப்போது அசோக்கிடம் போனில் பேசிக்கொள்வாள். அசோக்கும் நன்றாக வேலை பார்க்கும் படி ஊக்குவிப்பான்.

அலுவலகத்தில் எல்லோரிடமும் நட்பாக காவியா பழகினாலும், மற்றவர்கள் அவளை  அப்படி எண்ணவில்லை!! “சிக்கியது ஒரு இளிச்சவாயன்” என்று தான் செய்ய வேண்டிய வேலைகளை இவள் தலையில் கட்டினார்கள்; அதை பொருட்படுத்தாமல் 2 மாதம் வரை அயராது உழைத்து எல்லா வேலையும் செய்தாள்.

போக போக மனமும் உடலும் முடியாமல் போக, பணியில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள்… வறட்டு கௌரவம் பார்த்து வேலையையும் விட அவளுக்கு மனமில்லை. விளைவு, வேலையில் பிழைகள்… முன்னர் அவளது வேலைகளில் தெரிந்தே தவறு நடக்கும் போது மாட்டிக் கொள்ளாதவள், மற்றவர்களின் வேலையைச் செய்த போது வந்த தவறால் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் எடுத்தாள்; சகஊழியர்கள் சுமத்திய வீண்பழி இப்படி எல்லாம் ஒன்றாக பாவம் காவியாவை சூழ்ந்துகொண்டது. இதுகுறித்து நண்பர்களிடமோ, அசோக்கிடமோ கூட சொல்ல தோன்றவில்லை அவளுக்கு.

“ஒருவரின் மனம் துவண்டு போயோ, சோர்வுற்றோ வருத்தத்தில் இருக்கும் போது தான் முன்னர் செய்த தவறு  அவர்கள் மனதில் பெரிதாக தெரியும் என்பார்கள்..!”கிட்டத்தட்ட அதே நிலையில் தான் காவியா… அசோக்கிடம் தான் போட்ட சண்டை அனைத்தும் அவள் நினைவில் வந்து அவளை மேலும் வாட்டியது.

அடுத்து வந்த நாட்களில் அதிகம் யோசிக்காமல் தெளிவான முடிவை எடுத்திருந்தாள். வேலை செய்த கம்பெனியின் உயரதிகாரிக்கு மெயில் மூலம் பணிவிலகல் கடிதம் அனுப்பினாள்; அடுத்து செய்ய வேண்டியவற்றைத் துரிதப்படுத்தினாள்.

7 நாள் கழித்து…. இப்போது நாம் பார்ப்பது நன்றாக வளர்ச்சி பெற்ற கத்தார் நகரம் ஏர்போர்ட் விட்டு வெளியேறி டாக்ஸியில் வீட்டிற்கு சென்றாள் காவியா. 

வீட்டின் கதவைத் திறந்த அசோக்கிற்கு இன்ப அதிர்ச்சி!! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் காவியா வருவாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.!!

உள்ளே வந்த காவியா கொஞ்சமேனும் தாமதிக்காமல் அசோக்கை ஆற தழுவிக்கொண்டாள்; அதுவரை கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் வெளியே வரத் துவங்கியது; அசோக்கை தழுவியபடியே தானாக பேசிக்கொண்டாள் அவனுக்கு கேட்காத வண்ணம், ‘சாரிடா அசோக்..! நா செஞ்சது தப்புடா..! இனி உன் வேலை சம்பந்தமா நா ஏதும் கேட்கமாட்டேன்… நீ உன் மனசு போலவே இரு! நீ சம்பாதிக்கறது போதும்டா நமக்கும், நம்மள சுத்தி இனி வரபோற இந்த சமூகத்துக்கும்; பொது சொத்துக்கு  ஆசைப்பட்டு பழி பாவம்லா ஏத்துக்க  என்னால முடியலடா; அந்த கஷ்டம் என்னோட போகட்டும்…’ என நினைத்தவள், அசோக்கை விட்டு விலகி, கலங்கிய கண்களோடு,

“உனக்கு கஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் எனக்கு அது பெருசா தெரிஞ்சிருக்காது!! ஆனா, காலம் சரியா எனக்கே மண்டைல அடிச்சி உணர்த்திருச்சு அசோக்!!”.  இவள் என்ன கூறுகிறாள் என்று புரியாமல் குழப்பப்பார்வை பார்க்கும் அசோக்கை பார்த்து, அழுகை மீறி சிரித்தாள் காவியா.  

குறள்:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.  

விளக்கம்: பொருள் தேடும்போதுபாவத்திற்குப் பயந்து தேடியபொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை 
ஒருக்காலும் அழிவதில்லை.

வியாழன், 8 நவம்பர், 2018

43. அப்பத்தா

அப்பத்தா


நிர்மலாவின் மொபைல் அதிர்ந்து உறுமியது, எடுத்து "சொல்லு எரும, எப்ப வர்ற?" என்றாள்.

எரும என்கிற கார்த்திக், நிம்மியின் தம்பி. "காலைல வந்திடுவேன் க்கா, மாமாவுக்கு கால் பண்ணேன் எடுக்கல, விஜிக்கு எதாச்சும் வேணுமா?"

"பெரிய மனுசா... நீங்க சும்மா வந்தா மட்டும் போதும், ஸ்வீட் வாங்கறேன்னு காசெல்லாம் வேஸ்ட் பண்ணாத, இங்க விஜி ரெண்டு நாளா இருமிட்டு இருக்கா".

"சரிக்கா..."

காலையில், "வா கார்த்திக்" என வரவேற்றார் மாமா. 

"என்னடா ஆளு வளர்ந்துட்டே போற...?" என்றாள் நிம்மி. 

"கண்ணு வைக்காத நிம்.. சாரி அக்கா" என்றான். 

திருமணத்திற்குப் பின் அக்காவை பெயர் சொல்லி அழைப்பதில்லை, இருப்பினும் பழக்கத்தில் அவ்வப்போது வாய் தவறிடும்.

குளித்து வந்தவன், "அக்கா, சாமி எங்க கும்பிடுறது?" என்றான். "அடேய்... என்னடா அநியாயத்துக்கு நல்லவனா மாறிட்ட, மாமா முன்னாடி சீன் போடுறியா?" எனச் சிரித்தாள் நிம்மி.

பதிலுக்கு, சிரிப்போடு "என்னக்கா, சாமி கும்பிட்டா அன்னிக்கு நாள் பாஸிடிவ்வா இருக்க மாதிரி தோணும், அவ்ளோதான்" என்றான்.

சாப்பிட அமர்ந்தபோது, "அப்புறம் கார்த்திக் ஜாபெல்லாம் எப்படி போகுது?" என்றார் மாமா.

"ஜாபா...? அத ஏன் மாமா கேக்கறிங்க, ஊர் பக்கம்  இஞ்சினியருக்கு என்னத்த வேல, ஒன்னு மார்க்கெட்டிங், இல்லனா எதாச்சும் வண்டி வாங்கி போட்டு ஓட்டணும், எனக்கு ரெண்டும் செட்டாகல... அப்படியே சுத்திட்டு இருக்கேன், அடுத்து இங்க வந்துதான் வேலை தேடணும்" என்றான்.

மாமா முகத்தில் முன்பிருந்த சிரிப்பு காணாமல் போயிருந்தது... "சரி கார்த்திக் நான் கிளம்பறேன், ஈவ்னிங் மீட் பண்ணலாம்" எனக் கிளம்பினார் மாமா.

"ஏன்டா மாமாகிட்ட இப்படித்தான் பேசுவியா, அவருக்கு சும்மா சுத்தறது, டைம் வேஸ்ட் பண்ணுறதே பிடிக்காது..." நிம்மி சன்னமான குரலில் ஆனால் அதட்டும் விதமாக கேட்டாள். 

"அப்போ அவரு கம்பெனில ஒரு வேல வாங்கித் தர சொல்லு..."

"க்கும்... அவரு ஐஐடிலயே கோல்டு மெடல் வாங்கினாலும், ரெஃபர் பண்ண மாட்டாரு" என்றாள் நக்கலாக.

'ஐஐடில கோல்டு மெடல் வாங்குறவன் ஏன் ரெபரென்ஸ் கேக்கறான்' என மனதில் நினைத்துக்கொண்டு கார்த்திக்கும் சிரித்தான்.

"அப்புறம், நானே கேக்கணும்னு நினைச்சேன், என்ன விசயமா வந்த, நாங்கூட எதோ வேலை விசயமா வந்திருப்பன்னு நினைச்சேன், நீ பேசறத பாத்தா அப்படி தெரில, என்னடா எதும் பிரச்சினையா?"

"பிரச்சினைலாம் இல்லக்கா, மாமா இருக்கும்போதே சொல்லணும்னு நினைச்சேன், நம்ம அப்பத்தாவுக்கு அடுத்த மாசம் சாமி கும்பிடுறோம், நீயும் மாமாவும் வரணும், அதுக்கு அழைப்பு சொல்லத்தான் வந்தேன்"

"டேய் இத போன்ல சொன்னா பத்தாதா, இதுக்காகவா இ்வ்ளோ செலவு பண்ணிட்டு வந்த...?"

"அட... நான் வாட்ஸப்புல சொன்னாலே போதும்னுதான் சொன்னேன், அப்பாதான் பழசையே நினைச்சுட்டு, அப்பத்தாவ உனக்கு ரொம்ப பிடிக்கும், ஒருவேள போன்ல சொல்லி மாமா உன்ன அனுப்பலின்னா, நீ வருத்தப்படுவியோனு தப்பா நினைச்சுட்டு என்ன அனுப்பி வச்சாரு" என்றான் சற்று கடுமையாக.

"இப்ப எதுக்கு இவ்ளோ கோவப்படுற...? இதுக்கெல்லாம் போகணும் சொன்னா மாமா எதாச்சும் சொல்லுவாரேன்னு சொன்னேன்."

"இதுக்கெல்லாம்" என்ற வார்த்தை கார்த்தியைக் குத்தியது. கோவத்தை அடக்கி கொண்டு, "சரிக்கா... நான் போய் வினோத்த பாத்துட்டு வரேன்" எனக் கிளம்பினான். 

"யாருடா வினோத்...?" 

"நம்ம சொந்தத்துல, கீதா பெரியம்மா பையன் க்கா, இங்க தான் ஒரு ஹோட்டல்ல வேல பாக்கறான்."

"சரி டா மதியம் சாப்பிட வந்திடு." 

மதியம் வீடு திரும்புகையில் வினோத்தும் வந்திருத்தான். அக்காவுக்கு எரிச்சல் என்றாலும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

"உக்காரு வினோத்..." என்ற கார்த்திக், நிம்மியைப் பார்த்து, "அக்கா... இதுதான் நம்ம கீதா பெரியம்மா பையன்... இன்னிக்கு லீவுன்னு சொன்னான், அதான் நம்ம வீட்டுக்குக் கூட்டி வந்தேன்."

"வாப்பா வினோ... வேலைலாம் நல்லா போகுதா. அண்ணன் வந்தாதா வரணும்னு இல்ல... டைம் கிடைச்சா எப்ப வேணும்னா வா" என்று பொதுவாக சொன்னாள் நிம்மி.

"சரிங்க க்கா" என வினோத் சொல்ல, மையமாகத் தலையாட்டிவிட்டு சமையலறைக்குச் சென்ற நிம்மியைப் பின் தொடர்ந்து, "என்னக்கா... சிரமப் படுத்திட்டனா? அவனும் வரேன்னு சொல்லிட்டான்... தடுக்க முடில... சாரிக்கா" என்றான்.

"விடு கார்த்தி,  ஃபுட் ஆர்டர் பண்ணா அரை மணி நேரத்துல வந்திட போகுது" என்றாள் நிம்மி.

"ஆர்டரா ஏன் க்கா வீட்டுல இல்லையா."

"டேய் திடீர்னு வந்தா எப்படிடா? இதெல்லாம் இங்க சகஜம், அவனுக்கும் தெரியும்."

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கார்த்திக்கு.

வினோத் தன் நண்பனைப் பார்த்து விட்டு, அப்படியே தன் அறைக்குச் செல்வதாய் சொல்லிக் கிளம்பினான்.

கார்த்தி அபார்ட்மென்ட் பார்க்கில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கே விளையாடிகொண்டிருந்த ஒரு சிறுவன் ஊஞ்சலில் இருந்து வழுக்கி விழுந்து கையில் அடிபட்டது, இவன் ஓடிச்சென்று தூக்கி "ஒன்னுமில்ல ஒன்னுமில்ல டா கண்ணு" எனச் சமாதானபடுத்த முயற்சிக்க, அதற்குள் அவன் தாய் எங்கிருந்தோ வந்து அந்த சிறுவனை வாங்கிக் கொண்டாள். அப்போதுதான் கவனித்தான் அந்த சிறுவனின் கை ஒடிந்திருந்தது, "அய்யோ" என அலறினாள் தாய். "இருங்க இருங்கமா, உங்க வீட்டுல யாரும் இல்லையா?" என்றான்.

"அவரு ஆபிஸ் போயிட்டாருங்க..." என்றாள் அதிக பதட்டத்தில் இருந்த அந்த குழந்தையின் தாய். 

நேராக, தன் அக்கா ப்ளாட்டுக்கு வந்து தன் அக்காவிடம் வண்டி சாவி கேட்க,

"எதுக்கு டா, நா விஜிய கூப்பிட போகணும்"

"இல்லக்கா அந்த பையன் பாவம் வலில துடிக்கிறான்..." 

"டேய் நீ இந்த ஊருக்கு புதுசு, ரொம்ப பதறாத, அவங்க cab புக் பண்ணி போயிக்குவாங்க, நீ சும்மாயிரு..."

"இல்லக்கா அந்த பையனுக்கு நம்ம விஜி வயசுதான் பாவம்..."

"லூசு மாதிரி பேசாத டா... இங்க யாரு என்னான்னு தெரியாமல்லாம் ஹெல்ப் பண்ண முடியாது, மாமா திட்டுவாரு". சுட்டெரிக்கும் பார்வையைத் தன் அக்காவிடம் வீச, அவள் பார்வையைத் திசை திருப்பினாள்.

மனமின்றி மீண்டும் அந்த ஊஞ்சல் இருந்த இடத்திற்கு வந்தான், அங்கிருந்த செக்யூரிட்டி "தம்பி அவங்க cab புக் பண்ணி போயிட்டாங்க பா, நீ பதறாத, ஊருக்கு புதுசா" என்றார்.

"ஆமாண்ணே" என்று வீட்டுக்கு வந்தான்.

நாம்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டோமோ என்றெண்ணிக்கொண்டான். அக்கா விஜியை அழைத்து வந்தாள், விஜியுடன் விளையாண்டதில் பொழுது போனது தெரியவில்லை.

மாமாவிடம் தான் வந்த காரணத்தை சொன்னபோது, "இல்ல கார்த்தி... எனக்கு லீவு கிடைக்குமா தெரில, விஜிக்கு எக்ஸாம் வேற வரப்போகுது, அதான் சம்மர் லீவு வரப்போகுதுல்ல அப்போ பாத்துக்கலாம்"

"சரிதாங்க மாமா, அப்பா உங்கள அனுசரிச்சுதான்  ஞாயித்துக்கிழமை சாமி கும்பிடுறமாதிரி வச்சிருக்காரு, அதுமில்லாம அப்பத்தாவுக்கு நிம்மியக்கானா உசு.." சொல்லி முடிப்பதற்குள்...

"கார்த்தி வர்ற மாதிரி இருந்தா நீ சொன்னதுமே ஓகே சொல்லிருப்பேன், நீ படிச்ச பையன், கொஞ்சம் அப்பாகிட்ட சொல்லிடு, வேணும்னா நானே கால் பண்ணி சொல்றேன் மாமாகிட்ட" என்று மாமா குறுக்கிட,

"வேணாம் மாமா நான் சொல்லிக்கிறேன்" என்று சொன்னான் கார்த்திக்.

அன்றிரவு ரயிலுக்குக் கிளம்பினான் கார்த்திக். கிளம்பும்போது விஜி இருந்தால் அழுது ஆர்பாட்டம் செய்வாள் என்று மாமா அவளை கடைக்கு அழைத்துச் சென்றார்.

நிம்மி "என்னாடா கண்ணு... கோவமா அக்கா மேல?" என்று வாஞ்சையாய் அவன் தலை கோதினாள்.

"அதெல்லாம் இல்ல க்கா", என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டான்.

"எனக்கு தெரியும் கார்த்தி உனக்கு கோவம். என் சூழ்நிலைய நொந்துக்கிறத தவிர எனக்கு வேற வழி தெரியல" என லேசாக கண் கலங்கினாள்.

கார்த்தி பேசத்தொடங்கினான். "ஆமாக்கா இந்த சிட்டி லைப் உன்னை ரொம்பவே மாத்திடுச்சு. நீ கல்யாணமாகி வந்தப்போ நம்ம அம்மாவ பிரிஞ்சு போறத நினைச்சு அழுததவிட, அப்பத்தாவ பிரியறத நினைச்சுதான் அழுதேன்னு சொன்ன. ஆனா இன்னிக்கு அவங்களுக்காக சாமி கும்பிடகூட உன்னால வர முடியல... ஏன்? காலைல நான் சாமி கும்பிட்டதகூட நீ ஒரு வேடிக்கையாதான் பாத்த...

நம்ம சொந்தக்காரன் வீட்டுக்கு வந்தா வாழை இலை இல்லாம சோறு போட்டு அனுப்பி பாத்திருக்கியா நீ...?"

"..."

"அதவிடு நம்ம பக்கத்து வீட்டுக்காரன் கைய அறுத்துகிட்டா அவன் கைக்கு வைக்கிற சுண்ணாம்பு நம்ம வீட்டுல இருந்து உடனே போகும் அவ்வளவு பாசம் இருக்கும்..."

"இதெல்லாத்தையும் விட நம்ம மனசு எவ்வளவு சுத்தமா இருந்துச்சு.

ஆனா இந்த சிட்டி வாழ்க்கை இதுதான் நியாயம்னு அநியாயமா ஒன்ன சொல்லி கொடுத்து அதுக்கு நம்ம பழக்கியும் விடுது, எத்தன ரூவா சம்பளம் கிடைச்சாலும் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாக்கா..."

"நம்ம தூக்கி வளத்த பெரிசுகள நினைச்சு பாத்து, மனச சுத்தமா வச்சுக்க சாமி கும்பிட்டு, வீட்டுக்கு வர்ற விருந்தாளிக்கு வயிராற சோறு போட்டு, பக்கத்து வீட்டுக்காரனுக்கு எதுனாலும் மொத ஆளா நின்னு, நானும் எனக்கு உண்மையா இருக்க நம்ம ஊரு வாழ்க்கையே போதும்... நான் கிளம்பறேன் க்கா..." என்று பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தவனைப் பார்த்தபடி நின்றிருக்க, அவள் விழி தேங்கிய நீர் கண்ணிறைந்து வழிந்தோடியது. 



குறள்- 5:3

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம்:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

42. இல்லறம்... நல்லறம்...

இல்லறம்... நல்லறம்...



ஊருக்கு நடுவே இருந்த அந்த ஆலமரத்தில், ஒரு சிறிய கிளையின் மீது அமர்ந்து இருந்தது ஒரு அழகிய காகம். அது தன்னுடைய தலையை அங்கும் இங்கும் திரும்பிப் பார்க்க, அதன் கண்ணில் கதிரவன் போல சிவந்த ஒரு ஆலம்பழம் தென்பட்டது. அதை சிறிது எட்டித் தன் அலகால் கொத்த, அந்த பழமோ கிட்டியதொரு வாய்ப்பு என, கீழே விரைந்தது. காகமோ இனி இந்த பழம் தனக்கு இல்லை என எண்ணி அடுத்த பழத்தை தேடலாம் என எண்ணியது.

கீழே விரைந்த பழம் அங்கே, பல நாள் துவைக்காத ஒரு அழுக்கு வேட்டி கட்டியிருந்த பெரியவரின் தலை மேல் விழுந்தது. அந்த பழம் அவர்மேல் பட்டு, அங்கே விளையாடி களைத்த இரு நாய் குட்டிகளின் பக்கமாக உருண்டு ஓடியது. அவரோ இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என எதையும் கவனிக்காது, மேலும் தன் புலம்பல்களைத் தொடர்ந்தார். அதைக் காற்றும், மண்ணும், மரமும், மரத்திற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்த அகர முதல்வனும் கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆடிக் களைத்த குட்டிகளும் உறங்கி இருந்தன.

குடம் நிரம்பும் ஓசை கேட்டு அடுத்த குடத்தை மாற்றி வைத்தான். அப்போது அந்த பெரியவர் துறவறம் என்றால் என்ன என்பதை பற்றியும், பற்றற்று இருப்பது என்றால் என்ன என்பது பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார். ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தவன், அடுத்த குடம் நிரம்பும் ஓசை கேட்டு குழாயை அடைத்துவிட்டு, அவன் சைக்கிளில் இருந்த அந்த கயிறை எடுத்து குடத்திற்கு சுருக்கு மாட்டி, சைக்கிள்’லில் வைத்து மிதிக்க வீடு வந்து சேர்ந்தான்.

வீடு வந்தவனை பார்த்த அம்மா இன்மொழி, “அகரா, அத தொட்டியில ஊத்தாத, ஊட்டுல போய் எறக்கி வை. ஒரு தொட்டிய நான் ‘பாக்கியம்’ அக்கா வூட்டுக்குழாயில புடிச்சு நிரப்பிட்டேன், பொழங்க இது போதும், நாளைக்கு தண்ணி வரும்னு சொல்லிருக்காங்க, வேணும்னா நாளைக்கு எடுத்துக்கலாம்” எனச் சொல்ல, அவனும் குடத்தை இறக்கி, அதன் மீது தட்டுகளை எடுத்து மூடி வைத்துவிட்டு, ஓரமாக இருந்த கயித்து கட்டில் மீது அமர்ந்து யோசனையில் அமர்ந்தான்.

வெளியே இருந்த கருவேப்பிலை மரத்தில் இருந்து ஒரு கொத்து பறித்து “எண்ணைய வேற அடுப்புல வச்சிட்டேன்” என வேகமாக வீட்டுக்குள் ஓடினாள் இன்மொழி. சிறிது நேரத்தில் வீட்டில் மிளகாய் நெடி நிரம்ப, ஒரு தட்டில் இட்லி உப்புமாவை வைத்து “பசிக்கிது சொன்னியே, சாப்பிடு” என சொல்லிவிட்டு, நின்றும் பாராமல் அடுத்த வேலை செய்ய ஓடினாள். சிறிது நேரம் கழித்து கையில் வெங்காய பொட்டும், பூண்டு பொட்டும் எடுத்துக்கொண்டு சென்றவள், அதை எருவு குழி வீசிவிட்டு திரும்பி வரும்போதும் தட்டு உப்புமாவுடன் அங்கேயே இருப்பதைக் கண்டு, பேச ஆரம்பித்தாள்.

“என்னடா இன்னும் சாப்பிடாம யோசனைல இருக்குறயாடங்குது?”

“அதெல்லாம் ஒன்னுல்ல…”

“ஒன்னும் இல்லைனா இந்நேரம் தட்டு தொடைச்சு வச்சி இருப்ப, என்ன யோசனைன்னு சொல்லு!”

“ஏம்மோய்! அந்த பெரியவர பத்தி என்ன நெனைக்குற?”

“எந்த பெரியவரு?”

“அதான் மா அந்த ஆலமரத்தடி பெரியவர்.”

“அவர் கெடக்குறாரு, ரொம்ப நாளா பைத்தியமாட்ட பெனாத்திகிட்டு… ஏன்? அவருக்கு என்னாச்சு இப்ப?”

“ம்மோய், நம்ம தான் அவரை பைத்தியமாட்ட பாக்குறோம், ஆனா அவரு துறவு, பற்று இல்லாம இருக்குறதுன்னு எவ்வளவு சூப்பரா பேசுறாரு தெரியுமா?”

“உன்ன கூப்புட்டு வச்சி பேசினாரா?”

“இல்ல, எப்பயும் போல தனியாத்தான் பேசிட்டு இருந்தாராச்சு”.

“இப்போ அந்த பொலம்பல கேட்டுட்டு வந்து தான் இப்படி யோசனைல இருக்குறயா. சரி, சொல்லு… என்னவாம் அவருக்கு? தொறவுன்னா என்னவாம்?”

“துறவு அப்படின்னா பந்த பாசம்ன்னு எல்லாத்தையும் விட்டுப்போட்டு, இந்த உலகத்துல இருக்கிற சந்தோஷத்தையும் சோகத்தையும் ஒதுக்கிவச்சி, நம்ம மனசுல இருக்குற ஆசைய அடக்கி, நமக்குன்னு இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டு, எது மேலயும் பற்று இல்லாம, எந்த உறவும் இல்லாம, வீடு, வாசல், சுற்றம், நட்புன்னு ஏதும் இல்லாம எந்த உசுருக்கும் கேடு நெனைக்காம இருக்குறதாம்” என சொல்லிக்கொண்டு இருக்க வெளியே இருந்து யாரோ அழைத்த சத்தம் கேட்டு திரும்பினாள் இன்மொழி.

“சரி, இரு யாருன்னு பாத்துட்டு வரேன்” என கூறி வெளியே சென்றவள், வீட்டுக்கு உள்ளே வந்து, கையில் ஒரு தட்டில் சோறும், டம்ளரில் குழம்பும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

இவன் யோசனையில் விழ, திரும்ப கையில் கொஞ்சம் சாப்பாடோடு வந்தவள் “தண்ணி புடிக்குற அவசரத்துல மறந்தே போயிட்டேன், பக்கத்து வீட்டு சோனி’யும், டாமி’யும் முன்னயே வந்து பாத்துட்டு போய்டுச்சுங்க, 'மரகதம்' அக்கா ஊருக்கு போகும்போதே நாய்க்குட்டிக்கு மட்டும் சாப்பாடு வச்சுடுங்கன்னு சொல்லிட்டுப் போச்சு” எனச் சொல்லி இவனை அனுப்பினாள்.

அவனும் கையில் இருந்த சாப்பாட்டை இரண்டு தொட்டியிலும் கொட்டிவிட்டு, வெளியே யார் வந்து இருப்பார்கள் என எட்டிப் பார்த்தான். ஆலமரத்தடி பெரியவர் மூன்றாம் வீட்டு திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னமோ நினைத்து உள்ளே வந்தவனை பார்த்து “ஏன் கண்ணு, எல்லாரும் வீடு, வாசல், ஒட்டு உறவுன்னு எல்லாத்தையும் விட்டுட்டு துறவியா போய்ட்டா, துறவிங்க எல்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என கேட்டுவிட்டு வெளியே சென்று மதில் சுவற்றின் மீது கையில் இருந்த சாப்பாட்டை வைத்து “கா.. கா.. கா..” என கரைந்துவிட்டு வந்தாள்.

“ஆமா இவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என யோசித்து இட்லி உப்புமாவை வெளியே எடுத்துக்கொண்டு வந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட அங்கே பெரியவர் இல்லை, அவர் கெளம்பி இருந்தார், சோனி’யும், டாமி’யும் சட்டியை சுற்றி சுற்றி வந்து மோப்பம் பிடித்துக்கொண்டு இருந்தனர், எங்கோ இருந்து வந்து தன் இறகை அடக்கி, மதில் சுவரின் மீது அமர்ந்தது ஒரு காகம்.

குறள்:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

விளக்கம்:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

- ப.ஜனார்த்தனன்

திங்கள், 5 நவம்பர், 2018

41. காலமே விடை

தன்னிலை விளக்கம்:  தோன்றிய ஒரு கருவைச் சரியாக சொல்லிட முனைந்து, எந்த விதத்திலும் தவறான கருத்துக்களைச் சொல்லிவிடக்கூடாது என்ற கவனத்திலும் “மெளனவலிகளின் வாக்குமூலம்” என்ற சமூக சிற்பிகளின் புத்தகத்தைப் படித்து அதன் தரவுகளை எடுத்துக்கொண்டு என் கருவினில் சில கற்பனைகளைப் புகுத்தியே எழுதப்பட்டதாகும். அந்த புத்தகத்தின் தரவுகள் உண்மையாக இருக்கும்வேளையில் இதில் கூறப்பட்ட தரவுகளும் உண்மையே, எந்த ஒருவரையும் தாக்கும் எண்ணத்தில் தரவுகளைப் பொய்யாக புனையவும் இல்லை புகுத்தவும் இல்லை. கதையில் வரும் கதாபாத்திரங்களும், செயல்களும் கற்பனை வடிவமே.

                                                    

                       காலமே விடை


            கன நாளாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இருளின் கடின உழைப்பைக் காயங்கள் ஏதுமின்றி களைத்தெறிந்து கொண்டிருக்கிறது நிலவு. நிலவின் வெளிச்சம் வீட்டினுள் புகுந்து வீட்டை வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது. அழகியத் தூறலாக இருந்த மழை இப்போது நிலத்தில் வேகமாக அடிக்க, தண்ணீரின் அடர்த்தியால் அடி தாங்க முடியாத நிலம், மனிதனின் முதுகைப்போல சிவக்கத் தொடங்கியது. வீட்டின் கதவை மூடிவிட்டு ஈரக்காற்றை வீட்டினுள் அனுமதிக்காமல் தடுக்க நினைக்க, அது திறப்பானின் துளையில் நுழைந்து வீட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வை இப்படியாக ரசிக்க ஆசையாய் இருந்தும் ஆசை என்பதை மறந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தமையால் ஆசையின் இடத்தை நிரப்பியிருந்த பயம், இதனை வேறு மாதிரியாக நினைக்க வைத்திருக்கிறது.


            கன நாளாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. எப்போது இது நிற்கும் என்று தெரியவில்லை. அது நிற்கும் தருவாயில் 'என் உயிர் என் இடத்தில் இருக்குமா?' என்றும் தெரியவில்லை. இருளின் கடின உழைப்பைக் காயங்கள் ஏதுமின்றி களைத்தெறிந்து கொண்டிருக்கிறது நிலவு. இதனாலே அந்த நிலவின் மீது மிகுந்த கோபம். எங்கள் பயத்திற்கு விடுதலை கொடுப்பதே அந்த இருள் தரும் பாதுகாப்புதான். அதனைக் கெடுத்து வீட்டினுள் இருக்கும் எங்களைக் காட்டிக்கொடுக்க நினைத்துக் கொண்டிருக்கிறது நிலவு. அழகிய தூறலாக பெய்த மழையும் எம் பெண்களை அவர்களே பாதுகாக்க செய்யும் உத்தியை தவிர்க்க நினைத்து அடைமழையாய் பெய்து வஞ்சனைச் செய்துகொண்டிருக்கிறது. வீட்டின் கதவை மூடிவிட்டேன். காற்றில் இருக்கும் ஈரம் மனிதனின் மனதில் இல்லாமல் போகவே எங்கே துளைப்பானின் துளை வழியே வீட்டினுள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.


            இப்படி மனம் முழுதும் பயம்தான். பயம் எங்களுக்கு புதிதல்ல, பல வருடங்களாக எங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வாழமுடியாமல், கைக்கொடுத்து உதவ யாருமில்லாமல், கொடுப்பவன் கை காப்பாற்றக் கொடுக்கிறதா காட்டிக்கொடுக்க கொடுக்கிறதா என்று தெரியாமல் எங்களுக்கு நன்கு பழக்கி வைத்திருந்த ஒன்றுதான் பயம்.


            இன்றைய இப்போதைய எங்கள் பயத்திற்கு காரணம், காட்டுப்புளியங்குளத்தில் இறங்கியப் புலிகள்தான். வுவுனியாவுக்கு திரிகோணமலைக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. இரண்டு புத்தாண்டுகளை ஒரே நேரத்தில் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த அந்த கிராமத்தில் இறங்கியப் புலிகளால் எங்களது ஒரே புத்தாண்டைக்கூட கொண்டாட முடியாமல் எங்கள் மனதில் பயம் இறங்கியது.


            வருபவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் கடைநிலை சாதி என்பதாலேயே எப்படி ஓரம்கட்டப்படும் அவல நிலை இருந்ததோ, இருக்கின்றதோ அதேபோலதான் இங்கும். ஆனால் இங்கு சாதி என்பது தமிழ் சாதி, முஸ்லிம் சாதி, சிங்கள சாதி என்று மூன்று பெரும் சாதி மனிதர்களைத்தான் முதலில் குறிக்கும்.


நல்லிணக்கம் என்று கிறிஸ்துவத்தில் இருந்து கடன் பெற்ற சொல்லை நிலை நாட்ட மூளையற்று சண்டையிட்ட இந்து தமிழர்களும் முஸ்லிம் தமிழர்களும் போராடிவருகின்றனர். ஆனால் தமிழ் இனத்தில் பிறந்தோம் என்பதற்காகவே சிங்களப்படையும் இந்திய அமைதிப்படையும் ஒரே இலக்காக எங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.


வருபவர்கள் எந்த சாதி மனிதர்கள் என்று தீவிரமான பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரவு நேரமென்பதால் புலிகள் ரோந்து வரும் நேரம்தான் இது. ஆனால் இந்த இடி மழையை கடந்து வரும் குடலை குமட்டும் நெய் வாசனையையும், இருட்டில் தெரியும் சிவப்பு தலைப்பாகையையும் பார்த்தால் வருவது இந்தியன் ஆமி என்பது வீட்டின் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. காட்டுப்புளியங்குளத்தில் இறங்கிய புலிகள் படையால் கோபம் கொண்ட இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் களமிறங்கியிருக்கிறது. இன்று இங்கு நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான போர் சூழ்நிலைக்கு முக்கியக் காரணமான படை இந்த இந்திய அமைதிப்படை. அமைதிக்கு வந்ததாகக்கூறி அமைதியைக் குலைத்த இராணுவப்படை இந்த இந்தியப்படை.


இன்று காலையில்தான் வீட்டுக்கு ஒருவரை இயக்கத்தில் இணையச் சொல்லி வந்து சென்றிருந்தார்கள். எந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா?. அதனால் எதிர்பார்த்த எதிர்வினைதான் இது. இயக்கத்திலிருந்து வந்து சென்ற செய்தியைத் தமிழ் இனத் துரோகிகள் ஆமிக்குச் சொல்லியிருக்கக்கூடும்.


இப்போது வருபவர்கள் என்ன திட்டத்துடன் வருகிறார்கள் என்பது தூரத்தில் அவர்கள் செய்யும் அட்டூழியங்களிலே நன்றாக தெரிகிறது. கனத்த மழைப் பெய்து கொண்டிருப்பதால் சுடுமணலை தின்னச் சொல்ல இயலாது அவர்களால். உடுப்புகளின்றி சுடுமணலில் புதைத்து வைக்கவும் இயலாது. ஹிந்தி பாட்டு பாடச் சொல்லி பாடாதவர்களைச் சுடும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதையும் யூகித்துக்கொண்டேன். புலிகளைப் பற்றிய தகவலைச் சொல்ல மறுக்கும் பிஞ்சு குழந்தையைச் சுடும் மனநிலையிலும் இப்போது இல்லை. நடுராத்திரியில் கொட்டும் மழையில் ஆமி இறங்கியிருப்பதால், பெண் பிள்ளைகளைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள் என்பதை நன்றாக யூகித்துக்கொண்டேன். அவர்களது செயலும் அதனைச் சொல்லிக்கொண்டிருந்தது.


எதோ ஒரு ஊரில் என் மகன் பதுங்கு குழியில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க, என் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு முழுதும் இப்போது என் தலையில் இறங்கியிருக்கிறது. திருமணமாகி நான்கு திங்களே ஆன எண்ட மருமகளைக் காப்பாற்றிட உள்ளம் பதறுகிறது.


இந்த மாதத்தின் முதல் திகதியில் ஆமி இறங்கியிருந்தபொழுது அவர்கள் கண்டு நடுங்கும் அம்மை நோய் இருப்பதைப்போல வேப்ப இலையை வீட்டில் கட்டி காப்பாற்றித் தந்தாள் என் மனைவி. அதற்கு முந்திய முறை வந்திருந்த பொழுது வீட்டிற்குள் இருந்தால் பாதுகாப்பில்லையென தெருவின் முற்றத்தில் கூடி நின்று மானத்தைப் பாதுகாத்துக்கொண்டனர்.


கடந்த இரண்டு முறையும் பகலில் வந்திருந்தார்கள். ஆனால் இந்தமுறை கொட்டும் மழையில் காமத்தைத் தீர்க்க அனாதையாய்க் கதியற்று நிற்கும் எங்களை நோக்கி வந்திருக்கிறார்கள். இப்போது எந்த உத்தியைப் பயன்படுத்தி இரக்கமில்லாத அந்த மிருகங்களிடமிருந்து எங்களைப் பாதுகாப்பதென்று விளங்கவில்லை. மேலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.


"இந்தியன் ஆமியா?” என பயமான குரலுடன் வினவினாள் என் மனைவி.


"ஓம்"


"இப்போ என்ன செய்ய? எங்கள் இருவரைப் பற்றிய கவலை வேண்டாம். நம்ம மருமவளைக் காப்பாற்றிக்கொடுங்கள்” என்று கண்ணீர் வடிய கேட்டாள்.


"அத்தை நீங்கள் அழுகாதீர்கள். ஒன்றும் தவறாக நிகழாது."


"இல்லை, உண்ட கணவன் இயக்கத்தில் இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதனால் கட்டாயம் ஏதாவது செய்வார்கள்” என்றாள்.


"எண்ட மகளே, கடந்த முறை அவர்கள் வந்து சென்றபின்பு பதுங்குவதற்காக நாம் வெட்டி வைத்தோமே... அந்த குழியில் இறங்கிப் படுத்துக்கொள்” என்றேன்.


"இல்லை மாமா, அதில் இருவர் மட்டும்தான் பதுங்கமுடியும், அது இன்னமும் முழுதாக வெட்டி முடியவில்லை. தோட்டத்தில் வெட்டிய குழி முழுதும் மழை நீர் இறங்கியிருக்கும். உங்களை விட்டு நான்மட்டும் எப்படி போவனன்” என்று அடம்பிடித்தாள். இப்படி பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியாமல் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் நெய் வாடையும், கூடவே புகை வாடையும் வீட்டருகே நெருங்கியிருந்தது.


"கதைத்துக்கொண்டிருக்க நேரமில்லை மோனே, அவன் சொல்லுபடி செய்" என்று நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த எண்ட அம்மை உத்தரவிட, சமையல் அறையில் வெட்டி வைத்திருந்த குழியில் எண்ட மனைவியும், எண்ட மருமகளும் இறங்கத் தயாராயினர். அந்த குழி இன்னமும் முழுதாய்த் தயாரான குழியல்ல, யார் கண்ணுக்கும் புலப்படாமல் வெட்டி தயார் செய்தும், அதை மூட சிமெண்ட் மூடியை மறைத்து எடுத்துவர காலமாவதால் திறந்த வெளியாகவே இருக்கின்றது.


முதலில் என் மருமகள் இறங்கி அதில் ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டிருக்க,  கதவை டப்… டப் என வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டது. என் மனைவியின் கண்ணீர் அதிகரித்தது, சத்தம் வெளியில் வராமல் இருக்க வாயைப் பொத்திக்கொண்டாள். அவளையும் வேகமாகக் குழியில் இறக்கிவிட்டு, மிகவும் இறுக்கமான இட சூழ்நிலையில் இருக்க வைத்து அருகில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பெரிய ட்ரம்மை எடுத்து குழியில் மீது வைத்து, குழியை மறைத்தேன்.


"நான் வந்து திறக்கும் வரையிலும் எழுந்து வர முயலாதீர்கள்” என்று ட்ரம்மை மூடினேன். “ஓம்” என்று அவள் அளித்த பதில் குழியை மூடியபின்னும் வெளியில் கேட்க, டப்.. டப்… டப்… என இம்முறை கதவு வேகமாக தட்டப்பட்டது. நான் ஓடிச் சென்று கதவை சடாரென்று திறக்க, உள்ளே நடப்பதைத் தெரிந்துகொள்ள கதவின் திறப்பான் வழி பார்க்க முனைந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்தான்.


கதவை திறந்தவுடன் என்னைத் தள்ளிவிட்டு உள்ளே விரைவாக நுழைந்தனர் மூவர் கொண்ட குழு. என்னை ஒருவன் துப்பாக்கி முனையில் வைத்திருக்க... இன்னொருவன் வீட்டினுள் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருக்க, மற்றொருவன் சமையல் அறையினுள் நுழைந்தான். வீட்டில் ஆட்கள் இல்லை என்பது தெரிந்தவுடன் “லடுக்கி கிதர் ஹே?” என்றான் துப்பாக்கி முனையில் என்னைப் பிடித்து வைத்திருந்தவன்.


என்ன கேட்கிறார்கள் என்று ஒருவாறு யூகித்துக்கொண்டு, “யாரும் இல்லை” என்றேன். என் பதிலை என் சைகையின் மூலம் யூகித்தவன் துப்பாக்கியின் பின்புறத்தை வைத்து என் முகத்தில் பலமாகத் தாக்கினான். வலி தாங்கமுடியாமல் இரத்தம் கொட்ட கீழே முழங்காலிட சமையல் அறையில் இருந்து “அரேய் பாய்” என்றொரு சத்தம். பயத்தில் இதயம் வேகமாகத் துடிக்க சட்டென எழுந்து நின்றுகொண்டேன். எனது இந்த செயலினால் எதையோ உணர்ந்த மற்ற இருவரும் என்னை இழுத்துக்கொண்டே சமையல் அறைக்குச் சென்று உள்ளே நின்றவனிடம் “க்யா?” என்றனர்.


சமைத்து வைத்திருந்த வடச்சட்டியினுள் அவனது பையில் வைத்திருந்த சப்பாத்தியைச் சட்டியினுள் விட்டு “அச்சா கரி பாய்” என்றான். இன்னொருவனும் அந்த சட்டியின் பக்கம் நகர, எம் முதுகில் துப்பாக்கி வைத்திருந்தவனின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. சமையல் அறையைச் சுற்றி முற்றிப் பார்த்தவன் ட்ரம்மை உற்றுப் பார்த்தான்.


அங்கு எதையோ உணர்ந்தவன், உடனே ட்ரம் அருகில் சென்று மூடியிருந்த ட்ரம்மினைத் திறந்து உள்ளே நோக்கினான். அடுத்து அவனது செயல் ட்ரம்மினை நகர்த்துவதுதான் என்று யூகித்துக்கொண்டு அவர்களைத் தாக்க நான் தயாராக இருக்க, அருகில் இருந்தவன், “இதர் குச் நகி யார்” என்று சோற்றில் கவனம் வைத்து மேம்போக்காக பார்வையிட்டவன் கதைக்க, ட்ரம்மை நகர்த்தும் செயலை அப்படியே விட்டுவிட்டு, பெண்கள் கிடைக்காத கோபத்தில் என்னை பிடித்து சமையல் அறையில் இருந்து வெளியில் தள்ளி, “லடுக்கி கிதர் ஹே?” என்று கத்தினான் மீண்டும். அவன் தள்ளிய வேகத்தில் கட்டிலில் படுத்திருந்த எண்ட அம்மையின் அருகில் சென்று விழுந்தேன்.


"ஏ லடுக்கி கைசே? ச்சைய்யே? " என்று என் அம்மையை கைக் காட்டினான் ஒருவன். அவனும் கொஞ்சமும் கூச்சமின்றி, சிரித்துக்கொண்டே படுத்திருந்தவளின் ஆடையை விலக்கி பார்த்து சிரிக்க, கட்டுப்படுத்த இயலாத கோபத்தில் அவனைப் பின்னுக்குத் தள்ளினேன். அடுத்த நொடி அவனது கை துப்பாக்கிக்குச் சென்றது. பின்னால் நின்ற இருவரின் கையும் துப்பாக்கியில் தயாரானது என்னைக் குறிவைத்து.


“சாலா எல்.டி.டி.ஈ வாளா” என்று அவனது துப்பாக்கி கொஞ்சமும் யோசிக்காமல் ட்ரிகரை அழுத்த, ஒரு குண்டு இதயத்திலும், இரண்டு குண்டு நெஞ்சிலும், ஒரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தன. குண்டுகள் பாய்ந்த இந்த நொடியும் என்ட குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் சூடான இரத்தமாய் கொதிக்க, என்னைச் சுட்டவனின் துப்பாக்கி அடுத்து எண்ட அம்மையை நோக்கி நகர்ந்தது. ஐந்தாவது குண்டை அவள் மீது செலுத்த ட்ரிகரை அழுத்த செல்ல வீட்டின் வெளியில் எல்.டி.டி.ஈ என்று ஒரு குரல் கத்தியது. அந்த பெயரின் சத்தம் கேட்டு மூவரும் பதறியடித்து வெளியில் ஓட, குறுதியில் நனைந்துகொண்டே இம்முறை எண்ட குடும்பத்தைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியில், ஒரு போராளியாய் உயிரை இழக்கத் தயாரானேன் என் தாயின் மடியில்.

                                              ..................

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை

உரை:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

40. வழி

வழி 



சமுதாயத்தில் அடிமட்டத்தைச் சேர்ந்தவன் அவன்.

அவனொரு உழவுக் கூலி. அறுவடை முடிந்த நாட்களில் வயலில் எலிக் குழிகளைத் தோண்டி எலி சேர்த்து வைத்திருந்த தானியங்களை எடுப்பதே அவனது வேலை. கூலி வேலை இல்லாத நாட்களில் வயல்வெளிகளில் வாழும் எலிகள், பெருச்சாளிகளைப் பிடிப்பதே அவனுக்கு வேலையாக இருந்தது. அதுவே அன்றைய உணவு எல்லாம். அவனுக்கு அவன் மனைவி மீது அப்படி ஒரு அன்பு.

அவர்களுக்கு அந்த வருடம் தான் திருமணம் ஆகிருந்தது. 

ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்தி பெறுவதே இல்லறம்.

எது இல்லை எனினும் அது நிறைவற இருந்தது. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.


அன்று கடும் வறட்சி. குளங்கள் எல்லாம் வறண்டு கிடந்தது. எங்கும் குடிக்க தண்ணீர் கூட கிடைப்பது கடினமாக இருந்தது. தண்ணீருக்காக மக்கள் நாலாபக்கமும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவன் ஊருக்கு பக்கத்தில் மலை இருந்தது. மலைக்கு அந்த பக்கம் ஊர் இருந்தது. அந்த ஊரில் தண்ணீர் கிடைப்பதாக சொல்லப்பட. மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு கிளம்ப ஆரமித்தார்கள். அந்த பக்கம் மலையை சுற்றிப் போக சரியான பாதை வசதி கூட கிடையாது. மலையை சுற்றி காடுகள் வேறு. எனவே மலை ஏறி இறங்கி மலைக்கு மறுபுறம் பத்து கிலோ மீட்டர்கள் நடையாய் நடந்து தண்ணீர் சுமந்து வந்தார்கள். மற்ற பெண்களோடு சேர்ந்து அவளும் தண்ணீருக்காக மலை ஏற ஆரமித்தாள். ஒரு குடம் நீருக்காக தான் இப்படி ஒரு அலைச்சல்.


அன்றும் அப்படி தான். மலைக்கு மறுபுறம் போய் தண்ணீர் சுமந்து கொண்டு கீழ் வருகையில் கல் இடற, அவள் தலைகுப்புற பள்ளத்தில் விழுந்தாள். நீட்டிக்கொண்டிருந்த கூறான பாறை ஒன்று அவள் தலையில் மோதியது.. மண்டை பிளந்தது. “அம்மா”வென அவளின் அலறலில் மலை அதிர்ந்தது. ரத்தம் குபுகுபுவென கொட்ட ஆரம்பித்தது. உடன் வந்த பெண்களில் சிலர் அவளை நோக்கி போய் ரத்தத்தை நிறுத்த துவங்க. இன்னொரு பெண் அவனுக்கு விவரத்தை சொல்ல ஓடி வந்தாள்.


மழை பெய்யாததால் அவனுக்கு சரியான வேலை இல்லை. வேலை எதுவும் இல்லாத காரணத்தால் சுருண்டு படுத்துக்கிடந்தான். ஓடி வந்தவள் விவரத்தை சொல்ல, அவன் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடினான் மலையை நோக்கி. சிறு கும்பல் கூடி இருந்தது. அவள் மயங்கிக் கிடந்தாள். அவன் அவளைப் பிடித்துக் கொண்டான். ரத்தம் நிற்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது. அவன் அலறினான். கூடி இருந்தவர்களைக் கண்டு கைகளைக் கூப்பினான்.

“அய்யோ நிறைய ரத்தம் போகுதே. அய்யா யாராவது உதவுங்க. இவள எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகணும்” ஏதாவது செய்யும்படி வேண்டினான். கதறினான்.

ஊர் கலந்து ஆலோசித்தது. மலைக்கு அந்தபுறம் இருபது கிலோமீட்டர் தூரத்தில் தான் மருத்துவமனை இருந்தது. தூக்கிக் கொண்டு போக முடியாததால், மாடுகள் பூட்டி மலையைச் சுற்றிப் போவதென முடிவு செய்யப்பட்டது.


ஐம்பது கிலோமீட்டர்கள்..!! மலையைச் சுற்றிப் போக முப்பது கிலோ மீட்டர்கள். அங்கிருந்து மருத்துவமனை போக இருபது கிலோ மீட்டர்கள்.!


மாட்டு வண்டி முடிந்தவரை விரைவாக சென்றது. போகும் வழியெங்கும் அவளின் ரத்தம் வழிந்து கொண்டே போனது. முப்பதாவது கிலோமீட்டரில் அவள் உயிர் பிரிந்தது போனது. அவளது கை அவனது கையை இருக்க பிடித்தபடி இருந்தது. அவளது கண்களில் அவனைப் பாதியில் விட்டுப்போன அவநம்பிக்கை இருந்தது. அது அவனுக்கு, அவர்களுக்கு தெரியவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர் சோதித்து விட்டு,


“யோவ் அறிவில்ல உங்களுக்கு. இவ்வளவு பலமா காயம்பட்டும் இவ்வளவு தாமதாமாவா கொண்டு வருவாங்க? உசுரு எப்போவோ போய்டுச்சு. சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்.”


அவன் அவள் மீது உரண்டு புரண்டு கதறினான். சுற்றிருந்த கூட்டம் கண் கலங்கியது.


அவளைக் கொண்டு போன அதே வண்டியில் அவளின் உயிரற்ற சடலம் திரும்ப கொண்டுவரப்பட்டது. “அந்த மலை மட்டும் இல்லனா சீக்கிரம் கொண்டு போயிருக்கலாம்ல.” உடன் வந்தவர்கள் பேசிக்கொண்டு வர அவன் அமைதியாய் அவளுடைய சடலத்தை வெறித்தான். வரும் வழியெங்கும் அவன் மலையையே பார்த்துக் கொண்டு வந்தான்.


அவள் உடலை எரிமூட்டி வீடு வந்து சேர்ந்த பின்பும், ஒரு வாரம்  அவன் மலையையே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பின்னொரு நாளில், அவன் உளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


“ப்ளின்க் ப்ளின்க்” மலைப் பாறைகளை அவன் உடைக்கத் துவங்கினான்.

பாதை போடுவதற்காக.


ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்தது.


“ஒத்தப்பயலா மலையை குடஞ்சு பாதை தோண்டுறானமே இந்த பய.?


“பொண்டாட்டி மலைல இருந்து விழுந்து செத்ததுல இருந்து இந்த பயலுக்கு கிறுக்கு பிடிச்சுருச்சு. மலைய ரெண்டா உடைச்சு பாதை போட போறானாமே? நடக்குற காரியமா இது?” ஊர் சிரித்தது.


அவன் மலையை உடைப்பதை வேடிக்கை பார்க்கப்போய் அவனை ஏகடியம் செய்தது. அவனுடைய உறவினர்கள் எல்லோரும் அவனை “ஏலேய், ஏன்டா வீண் வேல பாத்துட்டு இருக்க ஒத்த மனுசனால அவ்ளோ பெரிய மலைய குடைஞ்சு பாதை போட முடியமா? இத விட்டுட்டு வேற சோலிய பாக்க கிளம்புடா” என்றார்கள் எல்லோருக்கும் அவனது “ப்ளின்க் ப்ளின்க்” உளி சத்தமே பதில் சொன்னது. அவர்களின் கண்களுக்கோ அந்த மலை தெரிந்தது. அந்த பாறைகள் தெரிந்தன. அவனுக்கோ அதற்க்கு அப்பால் உள்ள வெளிகள் தெரிந்தன. அவன் சாமி வந்தது போல அந்த மலையை தொடர்ந்து கொத்திக் கொண்டிருந்தான்.


வருடங்கள் உருண்டோட ஆரமித்தன. ஆனால் அந்த “ப்ளின்க் ப்ளின்க்” சத்தம் ஒருநாள் கூட நிற்கவில்லை... தொடர்ந்து கேட்டது. ஆரம்பத்தில் அவனை கேலி செய்தவர்கள் கூட நாளாக நாளாக அந்த மலை கொஞ்ச கொஞ்சமாக உடைவதைக் கண்டு அவனுக்கு உளியும் சுத்தியலும், உணவும் வந்து கொடுத்துப் போனார்கள்.

அவன் எல்லாம் மறந்து வெறிபிடித்து, அந்த பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தான். இன்னும் வருடங்கள் கடந்து போயின.


“ப்ளின்க் ப்ளின்க்” அந்த மலையின் கடைசி முனையையும் அவன் உடைத்து தகர்த்தான். அவன் இப்பொழுது அவர் ஆகிருந்தார். மலையை உடைக்க ஆரம்பித்த பொழுது அவனுக்கு 24 வயது. முடித்த பொழுது அவருக்கு வயது 46. 22 வருடங்கள் அவர் அந்த பாறைகளை உடைக்க செலவிட்டார். 25 அடி உயரம் 30 அடி நீளம் 360 அடி நீளத்தில் அவர் அந்த மலையை குடைந்து பாதை போட்டார். அன்று 50 கிலோ மீட்டர்கள் மலையை சுற்றி போனவர்கள் இன்று வெறும் பத்து கிலோமீட்டர் மீட்டரில் பக்கத்து நகரத்தை அடைந்தார்கள்.

அப்பகுதி மக்கள் அவரைக் கொண்டாடினார்கள். அவர் எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தார். மலையை தன்னந்தனியாக உடைத்த அந்த மாவீரன். பெருஞ்சிற்பி, அந்த மலையை குடைந்து பாதை அமைத்த பின்னும் 26 வருடங்களாக அரசு ஒரு சாலை கூட போடவில்லை.


“எங்க கிட்ட அனுமதி வாங்காம மலையை உடைச்சுருக்காரு. எங்களால ஒன்னும் பண்ண முடியாது என்றது.” வனத்துறை


அவர் அந்த மாபெரும் சாதனையை செய்த பின்னும், 26 வருடங்கள் கூலி வேலை செய்தே செத்துப் போனார். அரசு எந்தவிதத்திலும் அவருக்கு உதவில்லை. அவர் சாவதற்கு முன் யாரோ அவரிடம் கேட்டார்கள்.


“உங்க மனைவி மேல இருக்குற பிரியத்துல தான் இதை செஞ்சிங்களா?” அவர் கேட்டவனை உறுத்துப் பார்த்துவிட்டு


“என் மனைவி மேல எனக்கு காதல் இருக்குதான். ஆனா என் மனைவிக்காக நான் இதை பண்ணல. என் மனைவிய போல வேற யாரும் சரியான சமயத்துல உதவி கிடைக்காம செத்துட கூடாதுன்னு தான் இதை பண்ணேன். நான் என்ன பண்ணேன்னு மக்களுக்குத் தெரியும். அரசாங்கம் பாராட்டும் விருது கொடுக்கும்னு நான் இத பண்ணல. அனுமதி இல்லாம மலை குடைஞ்சேன்னு என்ன தண்டிச்சாலும் பரவயில்ல. வருத்தபட நான் எந்த கெட்டவிசயத்தையும் செய்யல. நல்ல விசயத்தைத்தான் செஞ்சுருக்கேன். அது போதும் எனக்கும்.”


அவர் ஒருநாள் இறந்து போன போது, எல்லோரும் ஓடிவந்தார்கள். கதறிக் கதறி அழுதார்கள்..

இருந்த போது அவரை பழித்த அரசு அதிகாரிகள் கூட ஓடி வந்தார்கள்.

அவர் உடல் அரசு மரியாதைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

அவர் இறந்து எத்தனையோ வருடங்கள் ஆனாலும், இன்றும் கூட அந்த மலையில் அந்த கிழவனின் “ப்ளின்க் ப்ளின்க்” உளிச்சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது.


திருக்குறள் :


“செயற்பால தோரும் அறனே ஒருவருக்கு


உயற்பால தோரும் பழி “ 


கருணாநிதி விளக்கம் :

பழிக்க தக்கவைகளை செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்கு புகழ் சேர்க்கும் “


(என் குறிப்பு) இது ஒரு உண்மைக் கதை அந்த “அவன் என்ற அவர் யார் என அறிய விரும்புபவர்கள் கூகுளில் “தசரத் மான்ஜி” என தேடுங்கள்...


- அருள். ஜெ