முகமூடி
- அருள்.ஜெ
ராம்கோபாலுக்கு லேசாக நினைவு திரும்பியது. எப்போதோ யாரோ எதற்கோ ஒரு குடோனாகப் பயன்படுத்திய அந்த அறை இப்போது தூசியும், ஒட்டடையும் படிந்து மிக மோசமான நிலையில் இருந்தது. சுவரில் சிமென்ட் பெயர்ந்து செங்கற்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தன.
தூசிகள் நிறைந்து கறைபடிந்த ஒரு குண்டு பல்ப் விட்டத்தில் ஏனோதானோவென்று வெளிச்சத்தைச் சிந்திக் கொண்டிருக்க,
ராம்கோபாலின் விழிகள் மெல்ல சுழன்று யாவற்றையும் கவனித்து மூளை உள்வாங்கி, தான் ஏதோ தவறான இடத்தில் இருப்பதாய் எச்சரிக்கைச் செய்தி அனுப்ப, ராம்கோபாலின் கால்கள் தன்னிச்சையாக எழ முயற்சி செய்து தோற்றன. தனது கால்களும், கைகளும் இருக்கையில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.
அறையில் யாருமற்ற தனிமை அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
“ஹலோ, யாராவது இருக்கீங்களா?” என்று கத்தியவனின் குரல் எதிரொலித்து அவனுக்கே திருப்பிக் கேட்டது.
“என்னை எதுக்கு இங்க அடைச்சி வச்சிருக்கீங்க?”, யாரும் பதில் சொல்லப் போவதில்லை என்று தெரிந்தும் தனது அச்சத்தைக் கதறல் மூலமாகக் குறைத்து விடும் நோக்கத்தோடு மேலும் குரல் எடுத்துக் கத்தினான்.
கட்டில் இருந்து விடுபடும் நோக்கத்தில் கைகால்களை வலுவாக அசைத்துப் பார்த்தான். விடுபட முடியவில்லை. தளர்ந்தவனின் காதில் அந்த சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் ஒலி.
“ஹலோ, யாரு? என்னைக் காப்பாத்துங்க", ராம்கோபால் கண்கள் வரும் ஆளைத் தேடி அலைபாய்ந்தன. அந்த உருவம் மெல்ல நடந்து, குண்டு பல்பின் வெளிச்சத்திற்கு வந்தது. ராம்கோபால் வெளிறினான். உடல் முழுவதும் ஆடை பூண்டு முகத்தில் முகமூடி அணிந்திருந்த உருவம் அந்த அரைகுறை வெளிச்சத்தில் அசிங்கமாய்த் தெரிய, ராம்கோபால் மிரண்டான்.
“ஏய்.. யார் நீ எதுக்காக என்னை இங்க கட்டிப்போட்டு வச்சிருக்க.? உனக்கு என்ன வேணும்.?” பதில் சொல்லாத உருவம் அங்கே இருந்த மேஜையில் தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைக்கத் துவங்கியது. கத்தி, ரம்பம். ராம்கோபாலுக்கு பயத்தில் வியர்த்தது.
“ஏய், என்னை விட்டுடு. நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணேன்?” ராம்கோபால் பயத்தில் உளற, அந்த உருவம் நீண்ட கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நெருங்கி வரத் துவங்கியது.
“ஏய், நோ, நோ, என்னை ஒன்னும் பண்ணிடாத. விட்று” ராம்கோபால் கதறத் துவங்க, அருகே நெருங்கிய உருவம் ராம்கோபாலுக்கு வலதுபுறமாய் இருளாகிக் கிடந்த இன்னொரு மூலையை நோக்கி நடக்கத் துவங்கியது. ராம்கோபால் அப்போது தான் கவனித்தான் தன்னைப்போலவே இன்னொருவன் ஒரு நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருந்ததை. அவனை நெருங்கிய உருவம் சற்றும் யோசிக்காமல் அவன் வயிற்றில் முழு வேகத்தோடு கத்தியைப் பாய்ச்சியது. “ஆ..." என்று அந்த அறை முழுக்க பயங்கரமான அலறல் ஒன்று எழ, அந்த உருவம் மேலும், மேலும் விசையுடன் கத்தியைப் பாய்ச்சியது.
“நோ, நோ...” ராம்கோபால் அலறினான். உடல் கட கடவென நடுங்கத் துவங்கியது. மெதுவாகத் திரும்பிய அந்த உருவம் ராம்கோபாலிடம் நெருங்கியது.
“ஏய், யார் நீ? என்னை எதுக்கு இப்படி பிடிச்சி வைச்சுக் கட்டிப் போட்டிருக்க?”, ராம்கோபால் நடுங்கத் துவங்க, அந்த உருவம் பொறுமையாக நடந்து அருகில் இருந்து ஒரு மடக்கு நாற்காலியை எடுத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்து அவனை வெறிக்கத் துவங்கியது. ரத்தம் தோய்ந்த கத்தியை அருகில் வைத்தது.
“யார் நீ?” இந்தமுறை உருவம் அவனைப் பார்த்துக் கேட்டது.
“ஏய், என்ன விளையாடுறீயா? என்னைக் கடத்திட்டு வந்து கட்டிப் போட்டதும் இல்லாம கேள்வி வேற கேட்டுட்டு இருக்க? யார்றா நீ? உன்னோட மாஸ்க்க கழட்டிட்டுப் பேசுடா?” ராம்கோபால் எகிறினான்.
“உஸ்...” என்று வாயில் விரல் வைத்து எச்சரித்த உருவம் சடாரென்று கத்தியை திருப்பி வைத்துத் தொடையில் அடித்தது.
“ம்ம்ம்...” வலியில் பல்லைக் கடித்த ராம்கோபாலிடம், “இந்தக் கத்தியை நேரா வச்சி மறுபடியும் உன் தொடைல அடிச்சா கத்தி உன் தொடையில கோடு போடும், பின்ன ரத்தம் வரும். பாக்க விருப்பமா உனக்கு? கேட்டதுக்குப் பதில் சொல்லு, யார் நீ?” என்றது உருவம்.
“ராம்கோபால்.”
“ராம்கோபால். உன்னை எதுக்காக இங்க கடத்திட்டு வந்துருக்கேன்னு தெரியுமா?”
“தெரியாது?”
“ம்ம், இதைக் கொஞ்சம் பாக்குறீயா?” என்று செல்போனில் ஒரு வீடியோவை ப்ளே செய்தது. ராம்கோபால் பார்க்கத் துவங்கினான்.
நள்ளிரவு.
காமிரா ஆன் ஆகி பதிவு செய்யத் துவங்கிருந்தது. காமிராவின் கோணம், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரைக் காட்டியது. அப்படியே கோணம் திரும்பிப் பேய் வேடம் போட்டுக் கொண்டு மறைவில் ஒளிந்து கொண்டிருந்த இன்னொருவரையும் காட்டியது. அந்த நபர் நெருங்க, பேய் வேடம் போட்ட நபர் திடீரென அவர் முன்பு தோன்றி “பே..” என அலற நடந்து வந்த நபர் அரண்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓட, ஓடுகையில் தடுக்கி கீழே விழுந்தார். பேய் வேடம் போட்ட நபர். ஓடிச் சென்று அவரைத் தூக்கி விட்டு விட்டு அவரிடம் ஏதோ சொல்லி காமிராவைக் காட்டி டாட்டா காட்டச் சொல்ல, அவரும் நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு கையை அசைத்தார். அத்துடன் வீடியோ முடிந்திருந்தது.
முகமூடி உருவம் பேசத் துவங்கியது. “இப்போ நீ பார்த்தது என்னன்னு தெரியுமா.?”
“தெரியும். prank show. அதை என்னோட யூடியூப் சேனல்க்காக நாங்க தான் எடுத்தோம். அந்த பேய் வேடம் போட்டிருக்குறது நான் தான்.”
“தட்ஸ் குட். உன்னால பயமுறுத்தப்பட்ட அந்த நபர் யார்ன்னு தெரியுமா?”
“தெரியாது"
“தெரியாத நபரை பயமுறுத்தி வீடியோ எடுக்குறது தப்புன்னு தெரியாதா உனக்கு.”
“அது just fun. மக்கள் ரசிச்சுப் பாக்குறாங்க.”
“ஓ, அப்படியா? viewers அதிகமாக அதிகமாக உங்களுக்கு பணம் கிடைக்கும்ல"
“அது ஏதோ கொஞ்சம் கிடைக்கும். Fun மட்டும் தான் முக்கியம்.”
“இந்த வீடியோல்ல உன்னால பயமுறுத்தப்பட்டவர் பிறகு என்ன ஆனார்ன்னு தெரியுமா.?”
“தெரியாது.” ராம்கோபால் உதட்டைப் பிதுக்கினான்.
“செத்துப் போயிட்டாரு.”
“what? எப்படி?”
“உன்னால பயமுறுத்தப்பட்ட நபர் ஒரு இதய நோயாளி ஏற்கனவே அதுக்காக ஆப்ரேசன் பண்ணிக்கிட்டவரு. அன்னைக்கு வீட்டுக்குப் போனவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போய்ட்டார்.”
“இதெல்லாம் எப்படி தெரியும்?”
“அந்த நபர் என்னோட அப்பா.” ராம்கோபால் அதிர்ந்தான்.
“சாரி ப்ரதர், நான் தெரியாம பண்ணிட்டேன்.”
“இல்ல.. நீ தெரிஞ்சு தான் பண்ணுன. இந்த மாதிரி Prank பண்ணா உடல் ரீதியாத் துன்பப்படுவாங்கன்னு தெரிஞ்சு தான் பண்ணுறீங்க. அவங்கபடுற அந்தத் துன்பம் தான் உங்களுக்கு முதலீடே. அப்பதான மக்கள் பாப்பாங்க. இல்லையா?”
“......”
“எங்க குடும்பம் நம்பி இருந்ததே எங்க அப்பாவோட வருமானத்தை தான். எங்க அப்பாவோட இழப்பு எங்க குடும்பத்தைச் சுத்தமாச் சிதைச்சுடுச்சு. என்னோட கனவுகளையும். அதை உன்னால திருப்பித் தர முடியுமா.? அட்லீஸ்ட் உன்னோட சாரி என்னோட அப்பாவ திருப்பிக் கொடுத்துடுமா? அதனால எனக்கு வேற வழி தெரியல. Yes Its My Revenge.!” என்றபடியே அந்த முகமூடி மனிதன் கத்தியை எடுத்துக் கொண்டு ராம்கோபாலை நெருங்கினான்.
“நோ.. வேணாம். என்னை விட்டுடு..”
“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். இந்தக் குறளுக்குப் பொருள் தெரியுமா உனக்கு?”
“......”
“தீமை என்பது தீமை செய்பவருக்கே உரியது. தீமையைச் செய்யாதவரே தீமை இன்றி வாழத் தகுதி உடையவர்.” ஆக, நீ வாழத் தகுதி இல்லாதவனா மாறிட்ட.” என்றபடியே கத்தியை ஓங்க,
“இல்ல, வேணாம். நான் செஞ்சது தப்பு தான். இனி அப்படி பண்ண மாட்டேன். இனி Prank show எதுவும் பண்ண மாட்டேன். என்ன மன்னிச்சு விட்டுடு.”
“நான் புத்தனோ, ஏசுவோ இல்லையே. உன்ன மன்னிச்சு விட்டுட, உனக்குக் கொடுக்குற இந்தத் தண்டனையில மத்த யாருக்கும் prank show பண்ணுற எண்ணமே வரக் கூடாது", என்றபடியே கத்தியை முழு வேகத்தில் செலுத்த,“
நோ...” என்றபடியே ராம்கோபால் அலற...
"Cut… Cut..." என்றபடி எழுந்தார் அந்தக் குறும்பட இயக்குனர்.
"தம்பி, குறள் எல்லாம் மேற்கோள் காட்டுனோம். ஆனா, அவர் செஞ்சதும் தீமைதான். நீ செய்றதும் தீமைதான். அதனால இப்ப குறள் படி காட்சி ஒத்து வரல அதனால ஸீன மாத்துறோம்." காட்சியை விளக்கி விட்டு "Action" எனச் சொல்ல காமிரா ஓடத் துவங்குகிறது.
"ஆ.." என அலறிய ராம்கோபால் கண்ணைத் திறந்து பார்த்தான். தனது கைக் கட்டுகள் வெட்டப்பட்டிருந்தன. நம்ப முடியாமல் முகமூடி மனிதனைப் பார்த்தான். அவன் கால் கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டுச் சொன்னான்.
"பயம்மா இருக்குல்ல, சாவுன்னா மனுஷனுக்கு பயம். ஒரு தீடீர் மரணம் கொடுக்குற வலி என்னனு எனக்கு தெரியும். உன்னக் கொன்னு அந்த இழப்பை உன்னோட குடும்பத்துக்கு நான் கொடுக்க விரும்பல. இனி உன்னோட வாழ்நாள் முழுக்க இந்த மாதிரி Prank show பண்ணாத. அதனால என்னை மாதிரியானவங்க குடும்பம் பாதிக்கப்படும். எங்க அப்பாவோட இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. உன்னை கொல்றது மூலமா அது நேராகாது. வலி எப்பவும் ஒண்ணு தான். இனி நீ பண்ணுற Park show மத்தவங்களைத் துன்புறுத்த கூடியதா இல்லாம அவங்களுக்கு நல்லது செய்யுற மாதிரி இருக்கட்டும். நான் வர்றேன்." என்றபடி நடக்கத் துவங்கிய முகமூடி மனிதனைப் பார்த்து ராம்கோபால் கேட்டான்.
"அப்போ அது?" என்று அந்த இருளடைந்த மூலையைக் காட்ட, "அது வெறும் வைக்கோல் திணிக்கப்பட்ட பொம்மை தான். Just Prank." என்றபடி இருளில் கலந்து மறைந்தான்.
- முற்றும்
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)


