விதை!
சுற்றிலும் மலை நடுவே கல்லூரியும் விடுதியும் ஆங்காங்கே அமைந்திருக்கிறது… எங்கெங்கும் காணினும் பச்சை நிறமே கண்ணுக்குக் குளிர்ச்சியாய்க் காட்சியளிக்கிறது.. புல்லில் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகள் ஆங்காங்கே… சூரியன் மலையின் மேலெழும்பி தன் பரவசக் கதிர்களை வீச ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. ஞாயிற்று கிழமை கல்லூரி விடுமுறை. விடுதி எண் 309 அறையின் சாளரத்தின் வழியே தன் கதிர்களைச் செலுத்தி, சந்திரனை எழுப்ப முயன்றது சூரியன்…
தன் மீது சூரியக் கதிர்கள் படவும் சோம்பலை முறித்து, எழுந்து தன் கடமைகளை முடித்து, அன்று விடுதியில் போடும் நெய் தோசையை சாப்பிட்டு விட்டு, விடுதியின் முன்புறம் தன் வழக்கமான – விருப்பமான The Hindu & Indian Express ஆங்கில நாளிதழ்களை எடுத்து கொண்டு, கல்லூரிக்கு வெளியுள்ள தனக்குப் பிடித்த வேப்ப மரத்தை ஒட்டியுள்ள பெஞ்சில் அமர்ந்தான். அங்கு வந்திருக்கும் சில பெற்றோர்களைப் பார்த்து, தன் பெற்றோரின் பற்றிய நினைவு வரவே எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டான்..
தன் துணிமணிகளைத் துவைத்துவிட்டு.. அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க ஆயத்தமானான். புத்தகத்தைத் திறந்தாலே, தன் அம்மா அக்கா நினைவு வரவே, படிக்கமுடியாமல் புத்தகத்தை மூடிவைத்தான். நண்பர்களோடு இயல்பாக பழகுவதையும் நிறுத்தி இருந்தான். இப்படியாக நாட்கள் ஓடின. கல்லூரிகளுக்குச் சென்றாலும் ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தான். படிப்பில் நாட்டமில்லை.
தன் தந்தையில்லாமல் தன்னுடைய குடும்பம் சுமை அனைத்தும் தன் மீது இருப்பதை அறிந்து நன்றாக படிக்க வேண்டும் என்பதை உண்ர்ந்தும்…
வகுப்பு தேர்வில் 6ல் 3ல் தோல்வி. விருப்ப பாடமான இயற்பியலில் மட்டும் 80. 3 மற்றும் அதற்கு அதிகமான பாடங்களில் தோல்வியுற்றவர்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று துறை முதல்வர் சொல்லியிருந்தார்… அப்போது தான் சந்திரன் அறிவுக்குத் தன்னுடைய தவறு எதுவென தெரிகிறது. அம்மாவுக்கு அழைப்பு செல்கிறது…
தன் மகனைக் காண, அவனுக்கு பிடித்ததெல்லாம் சமைத்து கொண்டு கல்லூரி விடுதி முன் நிற்கிறாள், பேருந்து ஏறி ஒரு ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கூட அறியாதவள்.
மதிய உணவுக்கு விடுதிக்கு வந்தவன் தனக்கு பிடித்த வேப்ப மர நிழலில் தன் அம்மா நிற்பதைக் கண்டு, ஓடோடி சென்று, கண்ணீரோடு கட்டியணைத்தான்.
“ஏங்கண்ணு, இப்படி இளைச்சுட்டியே டா… வா… வந்து மொத சாப்பிடு… உனக்கு பிடித்த வாழைக்காய் பொரியல் எல்லாம் கொண்டு வந்திருக்கேன்.”
“நீ நல்லா இருக்கியாம்மா… வெண்ணிலா எப்படிம்மா இருக்கா? நல்லா படிக்கிறாளா…?”
“நாங்க நல்லா இருக்கோம் கண்ணு… அவளுக்கென்ன நல்லா படிக்கிறா… உன்ற அக்காவாச்சே…” என்ற மங்கை, சந்திரனின் தலையைக் கனிவுடன் கோதிவிட்டு, “சாப்பிடு கண்ணு… அப்புறம் பேசிக்கலாம்…” என்றாள்.
“நீயும் சாப்பிடும்மா…” எனச் சந்திரன் கூற, முதலில் மறுத்த அம்மா, பின் அவன் கையால் ஒரு வாய் சாப்பிட, முகத்தில் மகிழ்ச்சி புன்னகையோடு கண்களும் மெல்ல கலங்கியிருந்தன.
மங்கையின் கையால் வெகு நாட்கள் கழித்து உண்ட சந்திரன், மகிழ்வில் இருந்து மீண்டும் முகம் வாடினான்.
“அம்மா…” என உடைந்த குரலில் கூற…
மங்கை அமைதியாய் அவனைப் பார்த்தாள்...
“அம்மா…” குரல் மேலும் உடைந்து சிறு அழுகையாய் மாற இருந்த நேரம்,
“கண்ணு, என்ற புள்ளை அறிவு, எனக்கு தெரியாதா? நீ அறிவு டா. 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடத்துக்குள்ள வந்தவன்டா. நீ நினைச்சா உன்னால எதையும் செய்ய முடியும். நான் உங்க வாத்தியார்க்கிட்ட பேசிக்குறேன். இந்த ஒரு முறை இப்படி ஆகி போச்சு… இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா?” என அழுகையைத் துடைத்தாள் தன் சேலையால்.
சந்திரன், மங்கையை அழைத்துக் கொண்டு, துறைத்தலைவர் அறைக்குச் சென்றான். துறைத்தலைவர் கண்ணன் அங்கு சில பெற்றோரிடம் பேசிக் கொண்டியிருந்தார். இவன் வகுப்பு விரிவுரையாளர்கள் மூலம் சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருந்தார் கண்ணன். வகுப்பிலே மிக அமைதியான பையன் என்பதையும்…
கண்ணாடி கதவின் உள்ளிருந்து தலையசைத்து கண்ணன் இசைவு தர, சந்திரனும் மங்கையும் அறையினுள் சென்றனர்.
“வணக்கம் சார்…” மங்கை சொன்னாள்.
“வாங்கம்மா உட்காருங்க.” கண்ணன் அமைதியாக.
“உங்கள் மகன் வாங்கிய மார்க் பாத்தீங்களா?”
“பார்த்தேன் சார். மார்க் பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது..நல்லா படிப்பான் சார்..அது மட்டும் எனக்கு தெரியும்…” மங்கை தயங்கியபடி கூறினாள்.
“ஓ… உங்க பையன் 6 ல் 3 பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கான். உங்க கிட்ட சொன்னானா?”
“அதெல்லாம் சொன்னான் சார்… என்கிட்ட எதையும் மறைக்க மாட்டான் சார்…”
“இதே மாதிரி தொடர்ந்து படித்தால் செம்ஸ்டரில் அரியர் விழும்… உங்க பையனோட எதிர்கால வாழ்வை வீணாக்கிரும். பார்த்துக்கோங்க…” கண்ணன் சற்று கடுமையாகவே சொன்னார்.
“சொல்றேன், சார். இனிமே நல்லா படிப்பான்… இந்த ஒரு முறை கவனக்குறைவா இருந்துட்டான் சார்…” என மங்கை கூற,
“சரிம்மா, நீங்க போங்க…” என்ற கண்ணன், சந்திரனைப் பார்த்து, “சந்திரன் நீங்க நில்லுங்க.” என்றார்.
சந்திரன் அம்மாவைப் பார்த்து, “நீ வெளிய இரும்மா… இப்ப வந்திடுறேன்…” எனக்கூற, கண்ணாலே சரி என்றாள் மங்கை.
“சொல்லுங்க சார்.” என்றான் சந்திரன்.
“எல்லா வகுப்பிலும் உன்னைப் பத்தி நல்லா தான் சொல்றாங்க… நல்ல படிக்கிற பையன் உன்னாலே ஏன் இப்போ படிக்க முடியல?”
“புத்தகத்தை எடுத்தாலே அம்மா அக்கா நினைவுகளால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியல சார். அப்பா இறந்தவுடன் என் குடும்பத்துக்கு எல்லாமுமாக இருக்க வேண்டியவன், இப்ப நானே சுமையா இருக்கேனோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது, சார்” என்றான் சந்திரன், சற்றே கலங்கியபடி.
“அப்போ discontinue பண்ணிட்டு ஏதாவது மளிகை கடை வைக்க போறியா?” கண்ணன், சற்று குரலை உயர்த்தி.
“இல்ல சார்.”
“உன்னோட குடும்பம் உன்ன நம்பித் தான் இருக்குதுன்னு தெரியுதுல… அதையே நீ படிக்குறதுக்கான தூண்டுதலா மாத்திருக்கணும் இல்லையா…? நீ படித்தா தான் உன்னோட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அப்புறம் ஏன் இவ்வளவு பொறுப்பில்லாம இருக்க…??”
“தவறு தான் சார்… புரிகிறது எனக்கு. இனி ஒரு முறை இப்படி நடக்காது சார்…” என்று உறுதியளித்தான் சந்திரன்.
“உங்க அம்மாவை பார்த்தாலே பாவமா இருக்குய்யா… அதுக்காகவே படிக்கணும் நீ… இனியும் ஒருமுறை அவங்க வரும்படி நடந்துக்காதே… போய்ட்டு வா.”
“நடக்காது சார்… நன்றி” என்று எழுந்தான் சந்திரன்.
வெளியே நின்றிருந்த மங்கை, சந்திரன் வருவதைக் கண்டு, “கண்ணு, ஏதாச்சும் திட்டுனாங்களாய்யா…?” எனக் கேட்க, சந்திரன், “இல்லம்மா… இனிமே நல்லா படிக்கணும்னு சொன்னாங்க…” என்று சொல்லியபடி கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத் துவங்கினர்.
“கண்ணு, நீ எங்களை நினைத்து கவலைப்படாதே.. நீ படிச்சு முடிச்சு ஒரு வேலைக்கு போகிற வரைக்கும் எப்படியாது குடும்பத்தை ஓட்டுறோம். நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்துய்யா… உன்ற அறிவ நினைச்சு நான் பெருமைப்படணும் எப்பவும்.” பேருந்து நிறுத்தத்தில் மங்கை கூறினாள்.
“எல்லாமே நல்ல புரியுதும்மா… இது போல கல்லூரியில் இருந்து குத்தம் குறைன்னு நீங்க இங்க இப்படி வர்றது இது தான் முதலும் கடைசியுமா இருக்கும்மா…” இனி நீ என்னோட பட்டமளிப்பு விழாவுக்கு தான் வரணும் என்றான் சந்திரன். பேருந்து வந்தது… “உடம்ப பாத்துக்க கண்ணு… நல்லா படிக்கணும்…” எனக் கூறியபடி, பேருந்தில் ஏறிக்கொள்ள, பேருந்தும் நகர்ந்தோடியது. சந்திரன் விழிகளில் நீரும் வழிந்தோடிக் கிடந்தது.
காலங்கள் ஓடின… ஒவ்வொரு ஞாயிறும் தன் குடும்பத்தைப் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக் கொள்வான்.
ஒரு தந்தை இறந்தால், அந்த குடும்பம் பொருளாதார ரீதியாகவும் சமூகத்திலும் எவ்வளவு பின்னோக்கி செல்கிறது என்பதைக் காலம் கற்றுக் கொடுத்திருந்தது. குடும்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்பதை அவனது அறிவு நன்கு உணர்ந்திருந்தது.
ஒரு ஆண்டு ஓடிவிட்டது… அரியர் எதுவுமில்லாம் முடித்துவிட்டான். இரண்டாம் ஆண்டு, தான் எடுத்துப் பயின்ற மின்னியல் பொறியியல் துறை சார்ந்த பாடங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு படிக்கத் துவங்கினான் சந்துரு…
வகுப்பில் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து படிக்கிறான். வகுப்பில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கூட அறியாமல் இருந்தவன், தற்செயலாக வருகை பதிவு எடுக்கும் போது, ‘மதி’ என்ற பெயர் ஒலிப்பது இவன் காதில் வந்து விழுகிறது. தன் தந்தையின் பெயர் கொண்டவர் யாரென அவன் பார்வை தேட, “எஸ் மேம்” சத்தம் எழுந்த திசையில் முதன் முறையாக மதியைக் கண்டான் சந்துரு. சில நொடிகள் அவள் மீது அவன் பார்வை நிலைகுத்தி நின்றது. மதி வேறொரு கல்லூரியில் இருந்து, இந்த கல்லூரிக்கு ஆண்டின் இடையில் வந்து சேர்ந்தவள்…
தினமும் வகுப்பில் நுழையும் போது, மதியைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தான் சந்திரன். படிப்பும் பார்வையுமாக சந்திரனின் நாட்கள் நிறைவாகவே நகர்ந்தன.
அன்று வகுப்பில் நுழையும் போது மதியை பார்க்கவில்லை… இப்படி ஐந்து நாட்கள் கடந்து செல்கிறது. யாரிடம் மதியைப் பற்றி கேட்பது. யாரிடமும் பேசியதில்லை. கேட்டாலும், தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சம் வேறு.
ஒரு ஆசிரியர் மதி ஏன் இவ்வளவு நாள்
வரவில்லை என்று கேட்கும் போது, அவளுக்கு டைபாய்டு காய்ச்சல் என்று பதில் அளிக்கிறார் ஒரு தோழி.
20 நாள் விடுப்புக்குப் பின் மீண்டும் வந்த மதியைப் பார்த்த சந்திரன், எப்படி நலம் விசாரிப்பது என்று தெரியாமல் நிற்க, எப்படியோ துணிந்து அருகில் சென்று,
“மதி…”
“சொல்லு… ஸ்ஸ்ஸ்… உன் பேரு…?” என கண்மூடி இழுத்தாள். சந்திரன், தனக்குள் நம்ம பேரு கூட தெரியாத அளவுக்கு இருந்திருக்கிறோம் என நொந்து கொண்டு, “சந்திரன்… உடம்பு பரவாலைங்களா?” என்றான்.
“ம்ம்… இப்போ பரவாயில்லை…”
“ஓ சரி… உடம்பைப் பார்த்துக்கோங்க…” எனச் சந்திரன் கூறிவிட்டு தன்னிடத்துக்குப் போக, மதி “சந்திரன்…” என அழைத்து, “ஃப்ரெண்ட்ஸ்க்குள்ளே என்ன வாங்க போங்க என்று… வா போ எனவே சொல்லலாம்… ஃப்ரெண்ட்ஸ்” எனக் கையை நீட்டினாள். சந்திரனும் அவளின் நட்புக்கரம் பிடித்து குலுக்கினான்.
மதியுடன் நட்பு, அவனுடைய படிப்பிற்கும் பேருதவியாய் இருந்தது. மூன்றாம் வருடம் முதல் செமஸ்டரில் வகுப்பு முதலாவது மாணவனாக வருகிறான் சந்திரன்.
துறைத்தலைவர் கண்ணன் ஒரு project reviewக்கு தலைமை ஏற்க சந்திரனின் வகுப்புக்கு வர, சந்திரன் தன்னுடைய project பற்றி கூறுகிறான். சந்திரனின் அறிவுத்திறனையும், நுட்பத்தையும் கண்டு வியந்த கண்ணன், முதலாண்டில் நாம் கண்டித்த சந்திரனா என வியக்கிறார்.
Review முடிந்ததும், கண்ணன் எழுந்து, “I’m very proud of you Chandran. You prove it today who you’re. Very great. Successful career is waiting for you. Congratulations.” எனக் கூறிப் பாராட்டினார்.
“Thank you, sir. You’re one of the reasons who made me who I am now. I am grateful to your words on that day, forever.” எனப் பதில் கூற, அமர்ந்திருந்த மதி முதலில் கைத்தட்ட, மெல்ல கரவொலி அந்த அறை முழுதும் நிறைந்தது, சந்திரனின் மனத்தின் மகிழ்ச்சி போல.
கண்ணன் நிகழ்வு முடிந்ததும், சந்திரனைத் தனியாக அழைத்து, “உன்னை நல்லாவே வளர்த்துகிட்டடா…! சாதிச்சுட்ட… இனி உன்னோட முழு கவனமும், ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும் சந்திரன்… நினைவுல வச்சுக்கோ…” என அறிவுரை வழங்க,
“கண்டிப்பா சார்…” என்றான் சந்திரன்.
அந்த கல்லூரியின் செய்முறைக் கூடங்களின் மின் தேவைக்காக, சூரிய மின்பலகை கொண்டு 500W அளவிற்கான சிறு சூரியமின்நிலையம் அமைத்தான் சந்திரன். அனைத்து கட்டுப்பாடுகளையும் PLC மூலம் இயக்குமாறு செய்து, அதற்கான programming அனைத்தையும் தானாக செய்து முடித்தான். கல்லூரியே இவனுடைய கண்டுபிடிப்பை பற்றி தான் அன்று பேசிக்கொண்டிருந்தார்கள்… மற்ற துறையிலிருந்தும் வந்து, சந்திரனின் நுட்பத்திறனைப் பார்த்து வியந்து சென்றார்கள்.
சந்துருவுக்கு மதியை நட்பைத் தாண்டிப் பிடிக்கும். மதிக்கும் சந்துருவை நட்பைத் தாண்டி பிடிக்கும். ஆனால் தன் குடும்ப சூழ்நிலையும் தெரியும். எது செய்ய கூடாது என்பதும் தெரியும். அது அவளுக்கும் தெரியும். நட்புடன் இருந்து கொண்டார்கள் இருவரும் இறுதிவரை.
தன் கல்லூரிக்கு வந்த பெரிய நிறுவனத்தின் வளாக நேர்காணலில் முதல் ஆளாக தேர்வானான் சந்திரன். HOD இவனுடைய குழுவை அழைத்து “உங்களால் இந்த கல்லூரிக்கே ரொம்ப பெருமை டா…” என்று பாராட்டியவர், சந்திரனைப் பார்த்து, “You’re such a brilliant boy as your mom said on that day… You’ll reach so much heights in your life…” என்றார்.
“நன்றி சார். எல்லாத்துக்கும் நீங்களும் ஒரு பெரிய காரணம் சார். உங்களுடைய ஊக்கம் தான் சார் பெரிய உந்து சக்தி எனக்கு…” என்றான் பணிவுடன்.
“Congratulations Chandru. Very happy for you” என்ற மதியிடம்
“Thanks Mathi.” என்றான் நிறைவான புன்னகையோடு.
தனக்குப் பிடித்தமான வேப்பமரத்தடியில் வந்தமர்ந்தான் சந்திரன். சிறிய வெண்ணிற பூக்களுடன் நின்ற அந்த வேம்பு, தன் நண்பனின் சாதனை கண்டு மகிழ்ச்சியைப் பூத்தூவி கொண்டாடியது.
இறுதி ஆண்டு தேர்வோடு சந்திரனின் பொறியியல் கல்லூரி வாழ்வு இறுதிப்பகுதியை அடைந்திருந்தது. மதியும், சந்திரனும் வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தனர்.
“சொல்லு சந்துரு…” அமைதி கலைத்தாள் மதி.
“என்ன மன்னிச்சிரு, மதி…”
“எதுக்கு…?"
“இல்ல…” என்று இழுத்த சந்திரனின் கையைப் பிடித்த மதி, “எனக்கு தெரியும்டா… உன்னோட அம்மாவையும் அக்காவையும் நல்ல பார்த்துக்க…” என்றாள்.
“கண்டிப்பா மதி.”
“அக்கா கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடு… அந்த MNCயில வேலையில சேர்ந்ததும், பிஸி ஆகிடாதே… அப்பப்ப நேரம் கிடைச்சா போன் பண்ணு…” என்றாள் மதி. தங்களின் கல்லூரியின் கடைசி மணித்துளிகளில் இருவரும் அந்த மரத்தடியில் அமைதியாக அமர்ந்தபடி இருந்தனர்.
சந்திரன் வீட்டுக்குச் செல்கிறான். மங்கை வெற்றி பெற்றவளாக உணர்கிறாள். சில நாட்களில் வேலைக்கான சேர்க்கை கடிதம் வரவும், வேலையில் சேருகிறான். தன்னுடைய சாதனை பயணத்தைத் தொடர்கிறான். அக்காவுக்கான வரன் பார்த்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வெற்றிகரமாக முடித்தான்.
அடுத்து, அம்மாவின் கனவான கனவு இல்லத்தைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து இடம் தேர்வு செய்கிறான்… இரண்டாண்டுகளில் கனவு இல்லம் கட்டி முடித்து, அம்மாவை அந்த இல்லத்தில் வைத்து அழகு பார்த்தான்…
வீட்டின் மொட்டைமாடியில் சூரியமின்பலகை கொண்டு, 3200Watt அளவுக்கு மின்னிணைப்பு தந்தான். தன் மகனின் அறிவை நினைத்து மகிழ்ந்தாள் மங்கை, அவளையே அறியாமல் அருவியாய்க் கண்ணீர் வழிய…
“கண்ணு… உன்ற அப்பா எனும் ஆலமரம் விதைத்த விதை, இன்று இந்த குடும்பத்துக்கு உன் அறிவாக வளந்து, ஐம்புலன்களையும் அடக்கி மரமாய் வளர்ந்து நிக்குதுய்யா…” என மங்கை கூற, மங்கையின் மைந்தன் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தன் அன்னையை ஆரத் தழுவிக்கொண்டான்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
-வள்ளுவர்
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
-கலைஞர்
முற்றும்.
@chandra_kalaS

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக