இடம்பெயர்வு
- மௌவல்
ஆண்டு : 1877
ஈரமென்பது துளியுமில்லாமல் வறண்டு போயிருந்த அந்த செம்மண் சாலையில், கூட்டம் கூட்டமாக மக்கள் எலும்பும் தோலுமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்ப்பதற்கு நடைபிணங்களைப் போன்று காணப்பட்டார்கள்.
“யப்பா”
“இன்னாடா”
“என்னிய எறக்கி வுடுப்பா”
“சோறு தண்ணி இருந்தாதான ஒடம்புல நடக்க வலுவுருக்கும், அப்பா தூக்கியாரன்” என்று சொல்லியவாறே தன் தோளின் மீது அமர்ந்திருந்த மூன்றாவது பையன் மாடசாமியைச் சரி செய்து கொண்டார் மண்ணாங்கட்டி.
அவரின் தோளின் மீது அமர்ந்து தன் சிறு கண்களுக்கெட்டும் தொலைவு வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த மாடசாமி, எங்கோ தெரிந்த பனைமரத்தைச் சுட்டிக் காட்டி “யப்பா, நம்ம காட்டுல நிக்குற பன மரம் தெர்து பாரேன்” எனக் கூப்பாடு போட்டான். அவனது குரல் காற்றில் கரைந்து மறைந்ததே தவிர யாருடைய காதுகளிலும் தவறியும் நுழைந்துவிடவில்லை. மண்ணாங்கட்டியும் கூட செவிட்டு மனிதனாய்த் தான் நடந்து கொண்டிருந்தார்.
“யப்பா, நம்ம எங்க போறோம் இப்ப” என்று மாடசாமி கேட்ட போது,
“பஞ்சம் பொழைக்கப் போறோம்” என்றார் மண்ணாங்கட்டி. அவர் சொல்வதின் பொருள் உணராது விழித்த மாடசாமியைப் பார்த்து, “அடேய், சோத்துக்குக் கூட வழியில்லாம பொழச்சிருக்க எடம் பாத்துப் போறோம்டா” என்றாள் பொறுமையாக மாடசாமியின் தாயான பொன்னுதாயி.
அவள் முழுதாய்ச் சொல்லி முடிப்பதற்குள், “யம்மா, பசிக்குது” என்றாள் அவர்களின் இரண்டாவது மகள் எல்லம்மா.
“இர்ட்டிப்போது பொன்னு. வெரசா நடங்க. ராப்பொழுது எங்கேயாது ஒறங்கிட்டு, வெடிஞ்சதும் போவோம்” என்ற மண்ணு, தன் மகள் எல்லம்மாவை ஆறுதலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நடந்து நடந்து அசதில பசிக்குதா. கொஞ்சம் பொறுத்துக்க எல்லு” என்றார்.
________
பெரும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரித்தானிய இந்தியாவின் மதராஸ் மாகாணம். திருவான்மியூரிலிருந்து சுமார் ஐந்தரை காதத் தொலைவில் அமைந்திருந்தது வாடாதவூர் என்னும் சிறு கிராமம். அதிகமாக முப்பது முதல் நாற்பது குடும்பங்களும், வளர்ப்பு விலங்குகளையும் சேர்த்து மொத்தம் இருநூற்றிலிருந்து இருநூற்றியைம்பது வரையிலான உயிர்களும் இருந்தன. பருவநிலை மாற்றத்தால் பருவமழை பொய்த்ததாலும், அதன் பயனாய் விளைச்சல், உணவுப்பொருள் உற்பத்தி குறைந்த நிலையிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஏற்றுமதி குறையாததாலும் பட்டினிச் சாவுகள் எண்ணிலடங்காது அதிகரித்துக் கொண்டே இருந்தது. பஞ்சத்தால் ஏற்பட்ட பட்டினிச் சாவுகளையும் கணக்கில் கொண்டால் மக்களின் எண்ணிக்கையானது இருநூற்றியைம்பதிலிருந்து முந்நூற்றியைம்பதை எட்டும்.
பெயரளவில் தான் அது வாடாத ஊராக இருந்தது, பஞ்சத்தின் பிடியில் சிக்கி, ஒருவேளை உணவிற்கும் வழியில்லாது போன மக்கள் பசியால் வாடி, எலும்பும் தோலுமாக இளைத்து இரக்கத்திற்குரிய நிலையில் காணப்பட்டனர். அவர்களது கால்நடைகள் மற்றும் நாய்களும் கூட அவ்வாறே காணப்பட்டது. அவரவர் வசதிக்கேற்ப தங்களது உடமைகளை விற்று உண்ட மக்கள், அடுத்த ஆண்டு பயிரிடுவதற்கான விதை நெல்லையும் உண்டு தீர்த்து, பின் அதற்கும் வழி இல்லாத போது, பசி தாங்க முடியாது பலர் அவர்களது கால்நடைகளை அவர்களே அடித்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஏதும் இல்லாத ஏழை மக்களின் நிலை இன்னும் கொடுமையாக இருந்தது. அவர்களுள் பலர் பல நாட்கள் பட்டினியிருந்து மாண்டு போயினர். எஞ்சியவர்கள் பசியோடும், பஞ்சத்தோடும் போராடி தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு பிழைப்பிற்காக மதராஸ் மாகாணத்தின் தலைநகரை நோக்கியவாறு பயணப்பட்டனர். அவர்களின் பயணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் பிரபு பக்கிங்காம்.
அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையர் சர் ரிச்சர்ட் டெம்பிள் தலைமையிலான நிவாரணப் பணிகள், பஞ்சம் தீவிர நிலையை அடைந்த பின்னரே தொடங்கப்பட்டது. குழந்தைகள், ஊனமுற்றவர்கள், முதியவர்களுக்கு மட்டும் இலவச உணவு வழங்குவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு, மற்றவர்கள் கடுமையான உடலுழைப்புக்குக் கூலியாக ஒரு வேளை உணவை இழப்பீடாகப் பெற்றார்கள்.
இத்திட்டத்தின் கீழ், பக்கிங்காம் பிரபுவால் திட்டமிடப்பட்டிருந்த, கால்வாய் வெட்டும் பணிக்காகவே வாடாதவூர் மக்களும், மேலும் அருகேயுள்ள சில கிராமத்தின் மக்களும் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். பிழைத்திருக்க வழிதேடிப் புறப்பட்ட அக்கூட்டத்தில் தான் மண்ணாங்கட்டியும் தன் குடும்பத்தோடு பயணித்துக் கொண்டிருந்தார்.
நீல வானம் மெல்ல மெல்லச் சிவந்து பின் கரிய நிறத்தை அள்ளி அடர்த்தியாக அப்பிக் கொண்ட போது, மண்ணாங்கட்டியின் குடும்பம் வற்றிப் போன ஒரு ஏரியின் கரையில் அமைந்திருந்த சிறு கோவிலின் முன் தஞ்சமடைந்திருந்தனர். மண்ணாங்கட்டியின் குடும்பத்தில், அவரின் தந்தை, இரு மகன்கள், மனைவி மற்றும் ஒரு மகளென மொத்தம் ஆறு பேர் இருந்தனர். ஆறு பேருக்குமாய்ச் சேர்த்து பொன்னுதாயிடம் மொத்தம் மூன்று களி உருண்டைகள் மட்டுமே இருந்தது. தன் வீட்டிலிருந்த கடைசி கம்பு, வரகினைக் கொண்டு அக்களியுருண்டைகளை செய்திருந்த பொன்னுதாயி, பிள்ளைகளுக்குப் போதாதென்று தனக்கான பங்கைப் பெருமளவில் குறைத்து, பிள்ளைகளுக்குப் பகிர்ந்தாள். மண்ணாங்கட்டியும் தன் பங்கிற்குப் பகிர்ந்து கொடுக்க, உண்டு முடித்த பிள்ளைகள் நாள் முழுதும் நடந்து வந்த அசதியில் படுத்ததுமே உறங்கிப் போனார்கள்.
“ஏய் பொன்னு, விடியல்ல பொறப்படணும், முழிச்சிருக்காம ஒறங்கு” என்று மண்ணாங்கட்டி சொல்லி முடிப்பதற்குள், “எங்கர்ந்து ஒறக்கம் புடிக்க. அடுத்தவேள சோத்துக்கு வழி இல்ல. கண்ணுமுழுச்சுதும் புள்ளிங்க வவுரு பசிக்குமே, என்னனு சொல்ல” என்று புலம்பியவாறே அமர்த்திருந்தாள் பொன்னு.
“டேய் மண்ணு, இப்பகூட ஒன்னும் பாதகமில்ல. என்னிய இங்கயே வுட்டுட்டுப் போடா. ரொம்ப தொலவு ஒன்னும் வந்துடுலயே, நா மொல்லமா ஊரு போய்ச் சேந்திடுவேன். கொழந்தங்கள வச்சிக்கிட்டு, நீ அதுங்களப் பாப்பியா, என்னயப் பாப்பியா?” என்றார் மண்ணாங்கட்டியின் தந்தையான மூக்கய்யா.
“நீ வேற இன்னாத்துக்குப் பொலம்பினுக்குற. அப்டிலாம் ஒன்னத் தனியா வுட்டு போ முடியாது. நல்லதோ, கெட்டதோ ஒன்னாயிருந்தே பாப்போம். பனங்கேங்கும், வள்ளிகேங்கும் கட்டி வச்சிருக்கேன். நீ பேசாம ஒறங்கு” என்று உரிமையோடு அதட்டினாள் பொன்னுதாயி.
இறப்பை நோக்கிய பயணத்திற்கு வாழ்க்கை என்று பெயர் வைத்துக் கொண்டால், வாழ்வை நோக்கிய இவர்கள் பயணத்திற்கு நம்பிக்கையென்பது தான் பொருத்தமாக இருக்கும். இரவும் பகலுமாய் இரண்டு நாட்கள் மட்டுமே தொடர்ந்த அவர்களின் பயணம், உணவு கையிருப்பு தீர்ந்து போனதால் முடங்கியது. உடலளவிலும், மனதளவிலும் வலிமையற்றுப் போனதால் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் மிகுந்த சோர்வடைந்தனர்.
“டேய் மண்ணாங்கட்டி, இதுக்கு மேல என்னால ஒரு அடி கூட எத்துவெக்க முடியாதுடா. எப்டியாவது இதுகள காப்பாத்தி வுட்ரு. அதுங்க ஒடம்புல கொஞ்ச தெம்பிருக்கும் போதே கூட்டினு போய்டுடா” என்று கண்ணீரும் வற்றிப்போன கண்களைக் கசக்கியபடியே புலம்பினார் மூக்கைய்யா.
அவர் சொல்வது தான் சரியென்று மண்ணாங்கட்டிக்குத் தோன்றினாலும், பொன்னுத்தாயி அதற்கு உடன்படுவாளா என்ற ஐயத்தோடு அவளைப் பார்த்தார். பொன்னுதாயும், குழந்தைகளும் உடலில் தெம்பில்லாது படுத்திருந்தனர். அப்போது சற்று தொலைவில் கேட்ட மாட்டின் மணியோசையும், அதன் குளம்பொலியும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. சட்டென முடிவெடுத்தவராய், “நா போய் சாப்டயேதும் கெடைக்குதானு பாத்துனு வரேன்” என்று சொல்லிக்கொண்டே ஓசை வந்த திசையை நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினார் மண்ணாங்கட்டி.
மண் சாலையில் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த மாட்டு வண்டியை எதிர்கொண்டு நிறுத்திய மண்ணாங்கட்டி, வண்டியோட்டி வந்த முதியவரிடம் “அய்யா, குடும்பத்தோட பஞ்சம் பொழைக்க மதராசு பொறப்பட்டோம். வழியில சோறு தண்ணீ தீந்துபோயி, புள்ளக்குட்டிகளாம் பட்டினி கெடக்குது. சாப்ட ஏதும் இருந்தா குடுங்கய்யா” என்றார் மண்ணாங்கட்டி.
“அய்யா, நானே மொதலாளி குடுத்த அரவயிறு கஞ்சிக்குத் திருவாமூருக்குப் போயாரன். எங்கிட்ட ஒன்னுமில்ல சாமி. உசுர இழுத்துப் புடிச்சுக்கினு இன்னிக்கு ஒரு ரா பொழுது நடந்துட்டனா அந்தூரு வந்துடும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அந்த முதியவர்.
இன்னும் ஒரு நாள் நடைபயணம் மேற்கொண்டால் மதராஸ் மாகாணத்தின் பேரூரான திருவான்மியூரை அடைந்துவிடலாம் என்பதை அறிந்துகொண்ட மண்ணாங்கட்டி, தன் குடும்பத்தை நோக்கிச் செல்ல முற்பட்டபோது, அவருக்குக் கேட்ட பெருங்கூச்சலொன்று அவரைச் சிறிது தடுமாறச் செய்தது.
சிறியவர்கள், பெரியவர்கள் என பாகுபாடில்லாத ஆறேழு எலும்புக்கூட்டு மனிதர்கள், ஒரு நாயை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். ஒரு நொடி நின்று பொறுமையாய் நடப்பதை கவனித்தபோது மண்ணாங்கட்டி அதிர்ந்தே போனார். அந்த நாயானது ஒரு எலும்புத் துண்டைக் கவ்வியபடி தலைத்தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. அதனிடமிருந்து அந்த எலும்புத் துண்டை பறிப்பதற்கே அந்தக் கூட்டம் அதனை விரட்டிக் கொண்டிருந்தது என்பதை உணர்ந்து மக்களின் நிலையையும், தன் குடும்பத்தின் நிலையையும் கண்டு மனம் உடைந்து போனார் மண்ணாங்கட்டி.
மெல்ல நடந்து தன் குடும்பம் இருந்த இடத்தை அடைந்த மண்ணாங்கட்டி, தன் தந்தையின் நிலை கண்டதும், சற்று முன் நல்ல செய்தியாகத் தெரிந்த இன்னும் ஒரு நாள் பயணம் என்பது கூட அவ்வளவு நல்ல செய்தியாகப் படவில்லை. பேசுவதற்கு கூட வலுவற்று , நாவுலர்ந்து வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தார் மூக்கையா. அழுக்கேறிய தன் புடவையின் தலைப்பால் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் பொன்னு. சோர்ந்து போயிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்தபோது தான், தன் மூத்த மகன் முருகன் அங்கு இல்லை என்பதே அவருக்கு உரைத்தது.
“பெரிவன் எங்க பொன்னு” என்ற பதறியபடி விசாரித்தபோது,
வறண்டு மண்டியிருந்த புதரினோரம் ஏதோ சலசலப்பொலி கேட்டது. ஓசை எழும்பிய திசையிலிருந்து வெளிபட்ட முருகன் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி பரவிக்கிடந்தது. அவனது கைகளில் சாம்பல் நிற முயலொன்று தப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
“யப்பா, சீக்கிரமா இத புடிச்சு அடிப்பா. தாத்தாக்கு சுட்டு குடுப்போம்.” உறுதியான குரலில் சொன்ன முருகன், அப்பா கையில் அந்த முயலை அழுத்தினான். “யப்பா, அந்த பொதுருக்குப் பின்னாடி கொஞ்ச தொலவுல ஏரி மாதிரி இருக்குப்பா. நெறய செடிலாம் வளந்துருக்கு. நா பாத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு மண்ணாங்கட்டியின் பதிலுக்குக் காத்திருக்காமல் ஓடிப் போனான்.
சில நொடிகள் செய்வதறியாது குழம்பிய மண்ணாங்கட்டி, பின் முருகன் கையிலிருந்த வாங்கிய முயலை உயர்த்திப் பிடித்தவாறு அதன் முகத்தைப் பார்த்தார். சிவந்திருந்த அதன் கண்கள் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தது. பசியால் அவர்களின் உலர்ந்து போன உயிரை சற்றே ஈரப்படுத்திக்கொள்ள இந்த முயல் போதுமானதே என்றாலும், எந்த நொடியும் பிரிந்துவிட காத்திருக்கும் மூக்கைய்யாவின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்பதில் தான் பொன்னுத்தாயி குறியாக இருந்தாள்.
“அத அறுத்துக் குடுத்துட்டு தீ மூட்டு” என்று பொன்னுதாயி சொல்லியபோது, மூக்கைய்யா மெல்லிய குரலில் ஏதோ முனகினார். அவர் ஏதோ சொல்வதற்கு முற்படுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட மண்ணாங்கட்டியும், பொன்னுதாயும் அவரருகே சென்று கூர்ந்து கவனித்தார்கள்.
“ம்மா, பொன்னு, அது கொழந்த மாதிரிமா. அத அடிச்சுக் கொல்லாதீங்க மா. பாவம்மா அது. பொழச்சுப்போட்டும் வுட்ருங்க” என்றார் உடைந்த குரலில்.
“அப்ப உனுக்குச் சாப்ட ஒன்னும் வேணாமா தாத்தா” என்ற எல்லம்மாவைப் பார்த்து, “நீ தொலஞ்சு போனா உங்காத்தா ஒன்ன தேடுற மாதிரி, அது ஆத்தா அத்தத் தேடி அலயும் எல்லு” என்றபோது நான்கு வயதான அந்தச் சிறுமி கண்கள் கலங்கியவாறு சென்று, தன் தாயை அணைத்துக் கொண்டாள்.
ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்த பொன்னுதாயி, மண்ணாங்கட்டியின் கையிலிருந்த முயலை வாங்கிச் சிறிது நேரம் அதனை உற்றுப் பார்த்தாள். அதைத் தூக்கி கொண்டு சற்று நடந்து சென்றவள், அடர்ந்த புதரினருகே அதை விடுவித்தாள்.. அவளது செய்கையைத் தடுக்க யாருக்கும் மனமில்லாது போகவே அனைவரும் அமைதியாக அவளை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
அப்போது முருகன் மீண்டும் புதரிலிருந்து வெளிப்பட்டான். அவன் கைகளில் அழுக்கேறிய சிறு துணி மூட்டையொன்று இருந்தது. அதில் அங்கங்கு அடர் சிவப்பு நிறத்தினாலான கறை படிந்திருந்தது. மண்ணாங்கட்டியும், பொன்னுதாயும் கலக்கத்தோடே அவனைப் பார்த்திருக்க அருகே வந்த அவன் உடம்பு எங்கும் கீறல் ஏற்பட்டு சில இடங்களில் லேசாகக் குருதி கசிந்து கொண்டிருந்தது.
“யம்மா, அந்தப் பொதுருக்குள்ள நெறய கள்ளிச்செடி இருக்குதுமா. இங்கபாரேன் எவ்ளோ பழம் கெடச்சிருக்கு” என்று சொல்லிக்கொண்டே அதில் ஒன்றை எடுத்து, அதன் முட்கள் உடைய தரையில் தேய்த்து, பிய்த்து உண்ட போது, அவன் உதடுகளும், பற்களும் அடர் சிவப்பு நிறத்தில் மாறின.
