ஈற்றுயிர்
ஒலிக்கட்டளைக்கு அந்த அறை கட்டுப்படும்... அறையின் வெப்பநிலை, விளக்கின் வெளிச்ச அளவு என எல்லாமும்... எவ்வளவு மாற்றங்களை நான் பார்க்கிறேன்... அறையின் மூலையில் ஒரு எண்ணியல் கடிகாரம் நேரத்தோடு இன்றைய தேதியையும் காட்டியது.
9:30AM
18/04/2078
இன்னமும் ஒரு தீர்வு கிடைத்தபாடில்லை. எப்படி கிடைக்கும்? காகிதத்தை தேடி ஓடும் மனிதர்கள், வாழும் இடத்தில் காற்றும் ஒரு விலைபொருளாக அல்லவா மாறி நிற்கிறது? இதோ தீர்வு கிடைக்கும், இதோ தீர்வு கிடைக்கும் என்று எண்ணிய காலம் கடந்து, மாற்றைத் தேடி ஓடும் காலம் வந்துவிட்டதே... பின்பு எப்படி கிடைக்கும். நான் மட்டும்தான் இன்னமும் தீர்வு கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய? ஏமாந்தே பழகியவனுக்கு அடுத்தடுத்து நம்பிக்கை வைப்பதுதானே வையத்தின் நியதி. நானும் மனிதன் தானே...? எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கா...? ஆனால், இந்தமுறை திண்ணமாக இருக்கிறேன் சென்ற முறை போலவே.
இதோ, நாளையோடு என் கார்மயிலி பிறந்து, முப்பத்திரண்டு ஆண்டு முடியப் இருக்கிறது. நான் உயிராக வளர்த்த மயிலன் இறந்தும், முப்பத்திரண்டு ஆண்டு ஆக இருக்கிறது. பிறந்தவளை கையில் ஏந்திய தருணத்தைவிட, இறந்த அவனது திமிலை பிடித்து தாங்கிய தருணமல்லவா நீங்காமல் மனதில் நின்று கொண்டிருக்கிறது. எப்படி மறப்பேன்...? நான் மட்டுமல்ல, இந்த உலகமே எப்படி மறக்கும்? நிலத்தில் இறங்கி உழுத உலகத்தின் கடைசி உழவு மாடல்லவா அவன். அவனுக்கு பிறகு யாரும் மாட்டை நிலத்தில் இறங்கி உழவில்லையாம், உழத் தெரிந்தவர்களும் இல்லையாம். தெரிந்தவர்களில் பாதி பேர்தான் தற்கொலைக்கு உயிரை விட்டார்களே. என் தந்தை சொல்லியிருக்கிறார்...
நான் பிறக்கும் பொழுது, அதாவது 2018 மார்ச் மாதம், சூடான் என்ற உலகின் கடைசி ஆண் வெள்ளை மூக்குக்கொம்பன் (White Rhinoceros) கென்யாவில் இறந்ததாம், அதனால்தான் எனக்கு அந்த பெயரை வைத்தாரென்று. "சூடான்".
எந்த நேரத்தில் பெயர் வைத்து தொலைத்தாரோ, என் மயிலன் கடைசி உழவு மாடு என்ற பெயருடன் இந்த சூடானின் கையில் மடிந்து விழுந்தது. இருந்தும் இந்த மனிதர்கள் சூடானின் இறப்பளவுக்கு மயிலனின் இறப்பிற்கு வருந்தவில்லை. அவர்களது தேவையை நிரப்ப, பசுமாடுதான் தேவையாம், அதனால் பால் மட்டும் சுரப்பதற்கென தனியாக பசுமாட்டை மட்டும் ஏதோ பெட்டியில் இருந்து பெற்றெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். ம்ம்ம்... பாவப்பட்ட கார்ப்பரேட் மனிதர்கள்.
சரி நமது வேலையைப் பார்ப்போம். எனக்கு தேவை என்னுடைய ஆசைக்கான தீர்வு. அது வீட்டினுள் இருந்தால் கிடைக்காது? வெளியில் சென்று பார்த்தால்தான் கிடைக்கும். இந்த உருண்டோடும் சக்கர நாற்காலியில் அமர்ந்து அமர்ந்து, முதுகு தண்டை வளைத்துக்கொள்வதற்கு எழுந்து நடந்து மூர்த்தியை தேய்த்துக்கொள்வது எவ்வளவோ மேல். ஆனால் வெளியில் எப்படி செல்வது? எழுந்து சென்றால் கார்மயிலி திட்டுவாளே! வெளியே செல்லக்கூடாதென்றல்லவா சொல்லியிருக்கிறாள். வந்து பார்த்தால் 'சொன்னப் பேச்சை கேட்க மறுக்கிறேன்' என்று கோபித்துக் கொள்வாளே, என்ன செய்வது? இல்லை... இல்லை... மாட்டிக்கொள்ள மாட்டோம். அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாள். அப்படியே எழுந்தாலும் அவள் கோபித்துத்தான் கொள்ளட்டுமே. அவள் கோபத்தில் அழகாக இருப்பாள். என் மயிலக்காளை கோபித்துக்கொண்டு தீவனம் தின்ன அடம்பிடிப்பதுபோல், இவளும் முகத்தை திருப்பி திருப்பி என்னைக் கெஞ்ச வைப்பாள். அதைப் பார்த்து நாளாயிற்று. இருந்தும் என்னைத் திட்டிவிட்டு, அதற்காக அவள் வருந்துவாளே, என்ன செய்வது? சரி... சென்று பார்த்துவிட்டு, அவள் எழுவதற்கு முன் ஓடி வந்துவிடுவோம்.
குடியிருப்பு பகுதியின் வாசலுக்கு வந்துவிட்டேன். ஆனால் இந்த வாசல்கதவு திறக்கமாட்டேன் என்கிறது. மற்றவர்கள் செல்லும்பொழுதெல்லாம் தானாக திறந்துகொள்ளும்கதவு நான் செல்லும்போதுமட்டும் திறக்கமாட்டேன் என்கிறது. இது அந்த கண்காணிப்பாளனின் வேலையாகத்தான் இருக்கும். நான் வெளியில் செல்கிறேன் என்பதாலேயே கதவைத் திறக்கவிடாமல் செய்திருப்பான். வரட்டும், எப்படியும் கண்காணிப்பறையில் பார்த்துவிட்டு அவனே வருவான், வரட்டும்.
"என்ன சார், எங்க போறிங்க?“ என்று கேட்டுக்கொண்டே, கையில் கண்ணாடிபோல் தெரியும் அலைபேசியை எடுத்துக்கொண்டு நடந்து வந்தான்.
"ஏன் தம்பி... ஏன் கேட்குறிங்க?"
"மயிலி மேடம்தான் உங்கள கேட்டவிட்டு வெளிய விடக்கூடாதுனு சொல்லிருக்காங்களே? வெளிய போனா எதாவது சண்டைய இழுத்துட்டு வந்திடுறீங்களே!"
"இல்ல.. மயிலிதான் என்னைய முன்னால நடங்க... நான் பின்னாடி வரேன்னு சொன்னா."
"ஆமாமா… போனவாட்டி இப்டிதான் கடைக்கு போக சொன்னாங்கனு சொல்லிட்டு போனிங்க, மேடம் என்னைய செமயா திட்டிட்டாங்க."
"இல்ல தம்பி, உண்மையாலுமே மயிலிதான் சொன்னாள். வேண்டுமென்றால், நான் இங்கயே நிற்கிறேன்... மயிலி வந்தவுடனே போகிறேன், சரியா?"
'ம்ம்ம்...' என்று மண்டையைச் சொரிந்தவன், வாசலின் வெளியே கார் வந்தததும், கையில் இருந்த மொபைலில் “ஆன் தி கேட்-3 சென்சார்” என்று தகவல் பேசினான். அவன் அனுப்பிய இரண்டு நொடியில் கதவு தானாக திறந்தது. என் மனதுக்குள் மகிழ்ச்சி திறந்தது. 'ஆகா, அடைத்து வைத்திருக்கும் கிளிகளின் கதவு திறக்கும்போது அவைகளின் மனநிலை இப்படிதான் இருக்குமா?' என்று என் மனதை நானே கேட்டுக்கொண்டு கதவு மூடுவதற்குள் படக்கென கேட்டைத் தாண்டிக்கொண்டேன். என்னை தடுக்க முற்பட்டவனை வண்டியினுள் இருந்தவர் அழைக்க, அவன் பதறி ஓடினான். நானும் ஓடிவந்துவிட்டேன்.
நிழலுக்கு இடம் கிடைக்குமா என்று நானும் சுற்றும் முற்றும் தேடிக்கொண்டே கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் மேல் நடந்து வந்துவிட்டேன். எங்கும் ஒரு மரநிழலைக்கூட காணவில்லை. நமக்கே ஒதுங்க இடமில்லையே இந்த காக்கையும் குருவியும் குறு வீயும்* எங்கு சென்று தங்கியிருப்பார்கள். அடப்பாவமே. ஒருவேளை அந்த சூடானைப்போல, காக்கையும் குருவியும் குறு வீ இனங்களும் அழிந்திருக்குமோ...? அது அழிந்தால் எப்படி விதைகள் இடம் மாறும்? எப்படி உயிர்கள் பெருகும்? இத்தனை மனிதர்கள் வாழும் இடத்தில் இதுகூடவா தெரியாமல் இருப்பார்கள்? அழிய விட்டிருக்க மாட்டார்கள்...?
அதோ.. ஒரு மரம் கண்ணில் பட்டுவிட்டது. ஆஹா பச்சை மரத்தின் நிழலில் நின்று காற்று வாங்கிக்கொண்டு, இருட்டப் போகும் மேகத்தினைக் காண்பது எத்தனை அழகு...?
அட... இதென்ன, மரத்தின் கீழ் வந்து நின்றும், அந்த குளுகுளு காற்றை உணர முடியவில்லை. அட மரப்பட்டைகள் என்ன வலுவலுவென மின்னுகிறது. அடக்கொடுமையே நெகிழியில் செய்த மரமா. இதை என்ன கருமத்திற்கு செய்து வைத்திருக்கிறார்கள்? சூடான் இறந்தபொழுதே இதை ஒழிப்பதாக அல்லவா சொன்னார்கள்? அப்போது மரத்தினை என்ன செய்திருப்பார்கள்...? ஒன்றும் விளங்கலையே...
"சார் சார்… யார் நீங்க...? இங்க என்ன பண்ணுறிங்க?” என்றான் பின்னால் இருந்து ஒருவன், அதே கண்ணாடி மொபைலுடன்.
"இல்லப்பா நிழலா இருந்துச்சுன்னு வந்தேன்ப்பா.. ஏன் ஒதுங்கக்கூடாதா?.
"சாரி சார், இது அழகுக்காக வச்ச மரம். இங்க எல்லாம் நிக்கக்கூடாது போங்க சார்."
'அடப்பாவமே, இதற்கு என்ன பதில் சொல்வது...?' என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு “ஒரு மரம் வைத்து வளர்க்கக் கூடவா, நேரமில்லாமல் இருக்கிறார்கள்” என்றேன்.
"அதெல்லாம் இல்ல சார், மண்ணு முழுக்க ப்ளாஸ்டிக், மரத்துக்கு ஊத்த தண்ணியில்ல, கன்னு வச்சாலும் வளர்றது இல்ல சார். என்னத்த! மண்ணு செத்துடுச்சு சார், இந்த ஊர் முழுக்க இதே நிலைமைதான், கேட்டா மாடர்ன் சிட்டிங்றாங்க. சரி நீங்க ஊருக்கு புதுசா?"
"மரமில்லாம மனுசங்க மட்டும் எப்டி வாழ்றாங்க?” என்றேன். நான் கேட்ட கேள்விக்கு என்னை மேலையும் கீழயும் பார்த்துவிட்டு... "சார், ஆள் பாக்க ஒரு மாதிரி இருக்கீங்களே, எந்த ஊர், எந்த அப்பார்ட்மெண்ட் சார்? எதுக்கு இங்க வந்தீங்க...?” என்றான்.
"இன்னைக்கு மழை வரும்ல... அத பாக்கலாம்னு வந்தேன். பூமிக்கு உடம்பு சரியில்லையாம், உடம்பு சரியான உடனே மழை வந்துடும்னு மயிலி சொன்னா அதான் பாக்க வந்தேன்” என்றேன்.
இதை நான் சொன்ன உடனே என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, உடனே கையில் வைத்திருந்த கண்ணாடி மொபைலில், "அண்ணே… டேவிட் அண்ணே... கேட் 4-ல ஒரு சிக்கல்” என்று தகவல் சொன்னான்.
'நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டனா? இல்லை மயிலிதான் தவறாக சொல்லிக்கொடுத்துவிட்டாளா? மனிதர்கள் மாதிரிதானே பூமியும். குழந்தையைச் சரியாக பார்த்துக்கொள்ளாவிட்டால் காய்ச்சல் சளி வருகிறது மாதிரி, பூமியையும் சரியாக பார்த்துக்கொள்ளாவிட்டால் உடம்பு சரியில்லாமல்தானே போகும். ஏன் இவர்கள் என்னை இப்படி பார்க்கிறார்கள்? இந்த பைத்தியக்காரர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை போல...!' நான் இதை நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் அழைத்த டேவிட் அண்ணன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
"யோவ் வந்துட்டியா..? மாசத்துல இரண்டு நாள், உனக்கு இதே வேலையா போய்டுச்சுயா... உன்னய இங்க வரக்கூடாதுனு சொல்லிருக்கன்ல"
"இல்லை இன்று மழை வந்துவிடும் பார்த்துவிட்டு சென்றுவிடுகிறேன்."
"யோவ்! அடிக்கிற வெயிலுல நீ வேற ஏன்யா..? உன்ட்ட பேசுனா இன்னைக்குக் கணக்குக்கு குடிக்க வேண்டிய மொத்த தண்ணியையும் இப்பவே குடிக்க வேண்டி வந்துடும்யா. இரு... உன் பொண்ணுக்கு போன் போடுறேன். பூமி... அந்தாள மானிட்டர் ரூம்ல உட்கார வைய்யா” என்று போனை எடுத்தான். எனக்கு உள்ளுக்குள் பதறியடித்தது.
"வேண்டாம், வேண்டாம்... கார்மயிலி தூங்கிக்கொண்டிருக்கிறாள். நானே திரும்பி சென்றுவிடுகிறேன்."
"இல்ல... இல்ல... நீ வந்தா இங்கயே உட்கார வச்சுட்டு போன் பண்ண சொல்லிருக்கு உன் பொண்ணு."
"அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள் எழுப்ப வேண்டாமே!"
"ஆங்... அதெல்லாம் நல்லா பேசு, ஆனா மாசம் ஒருவாட்டி தன்னத் தானே பேசிட்டு ஓடிவந்துடு. பேசாம இங்க உட்காரு. மேடம் இப்ப வந்துடுவாங்க" என்று மொபைலை நான்காக மடித்து பாக்கெட்டில் வைத்தான். எப்போது மயிலியிடம் பேசி முடித்தான் என்று தெரியவில்லை. 'மயிலி வந்தால் திட்டுவாள்' என்று பயந்துகொண்டே மானிட்டர் ரூமில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் நின்ற மரம் முதல்கொண்டு மொத்த குடியிருப்பும் அதில் தெரிந்தது. நான் அந்த செயற்கை மரத்தையே பார்த்துக்கொண்டிருக்க, டேவிட் அண்ணாவிடம் "அண்ணே யாருனே, இவரு? பைத்தியம் மாதிரி இருக்கு” என்றான் பூமி.
"யாரு, அவரா பைத்தியம்... நீ வேற? அவர் தனக்கு தானே பேசுறத ஒரு நாள் ரெக்கார்ட் பண்ணி தரேன் கேட்டுபாக்குறியா. உலக அரசியல் எல்லாம் பேசுவாரு. நல்லா செல்வ செழிப்பா வாழ்ந்தவரு/தானாம். உலகத்தோட கடைசி உழவு மாட்ட இவருதான் வச்சுருந்தாராம். அதுனாலயே இவர ஈற்றுழவன்னு சொல்லுவாங்க."
"ஆமாம் ஆமாம், அது நான்தான். அந்த மாடு பெயருகூட மயிலன். உங்களுக்கு எப்படி தெரிந்தது டேவிட் அவர்களே?"
"யோவ்! உன்ன பேசாம இருக்கனும்னு சொன்னன்ல” என்று என்னை அதட்டினான்.
"இரு... இரு... என் பொண்ணு வந்த உடனே சொல்றேன்..."
"அப்புறம்ணே” என்று ஆவலாக கேட்டான் பூமி.
அப்புறம் என்ன, அவர் பொண்ணு பொறந்த நேரம், அவரு மாடு செத்துபோச்சு இவரு மழை மழைனு ரோட்டுல ஓட ஆரம்பிச்சவருதான் இப்டி பைத்தியமாகிட்டாரு, எந்த நேரத்துல பொண்ணு பொறந்துச்சோ...?"
"இல்லை... இல்லை... நீங்கள் தவறாக சொல்லுகிறீர்கள். இரண்டு வருடமாக மழையில்லை, தண்ணியில்லை. தண்ணியில்லாமல் என் மயிலி செத்துவிட்டது. அது இறந்த நேரத்தில் என் ராசிக்கார மகள் பிறந்தாள். மழையின்றி நீரின்றி இவளை எப்படி வளர்ப்பதென்ற பயத்தில்தான் நான் இப்படி ஆனேன். உங்களுக்கு வரலாறு தெரியவில்லை டேவிட் அவர்களே..."
"அண்ணே, இவர் உண்மையாலுமே பைத்தியம்தானா, குழந்தை மாதிரி பேசுறாரேன்னே?" என்றான் பூமி.
"சும்மா இருய்யா பூமி, கொஞ்சும் தமிழ்ல அழகா பேசுற மாதிரிதான் இருக்கும், கொஞ்ச நேர பேசுனேனா உன்னையவே குழப்பி சுத்தல்ல விட்ருவாப்டி. தோ... அவரு பொண்ணு வந்துடுச்சு போய் விடு அவர” என்று என்னை எழுப்பினான். மயிலி தூரத்தில் இருந்து, என்னை முறைத்துக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தாள்.
என் பின்னாளில் இருந்து ஒரு குரலில் ஓசை என்னை கடந்து காற்றில் மயிலியை நோக்கி சென்றது.
"ம்மா.. வீட்லயே பத்திரமா வச்சுக்குங்கம்மா, பேசி பேசி தொண்ட தண்ணி வத்துது."
"கவலை வேண்டாம் டேவிட் அவர்களே… நாளை பூமிக்கு உடல்நிலை குணமாகி மழை வந்துவிடும். ஒரு தீர்வு கிடைத்துவிடும். மகிழ்ந்திருங்கள் டேவிட் அவர்களே." என்றேன் நான்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
*குறு வீ -குறு - சிறிய, வீ - பறவை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக