வியாழன், 1 நவம்பர், 2018

9. நன்றி விழா

நன்றி விழா

ஊரே துடைத்தாற் போல் இருந்தது. வீதிகளில் வெறுமையாடியது.

அத்தேசத்தின் மிகப்பெரும் சொத்தான சிந்தனையாளன்; கவிஞன்; தத்துவஞானி சித்தாந்தன் இறந்து ஒரு மாதம் ஆகிறது. அவரின் எதிர்பாரா மரணம் அந்த தேசத்தையை கண்ணீரில் மூழ்கச் செய்து இருந்தது.

நீரின்றி வற்றிய கண்களில் ஆனந்த ஊற்று சுரக்க வைத்தது மன்னரின் யோசனை. அது இன்று செயலாகிறது. சித்தாந்தன் அவர்களின் சொந்த ஊரான பக்கத்து ஊரில் அவருக்கான ‘நன்றி விழா’ இன்று. மன்னரின் தலைமையில் வெகுச்சிறப்பாக நடக்க உள்ளது. ஊரின் வெறுமைக்கும் அதுவே காரணம்.

வெறிச்சோடிய வீதியில் வெறுங்காலில் நடந்துகொண்டு இருந்தான், வெள்ளையப்பன். அந்த தேசத்தில் நிரம்பி இருந்த கவிஞர்களில் அவனும் ஒருவன்.

அவனது கால்கள் ஊரின் எல்லைப்புற ஆலமரத்திடம் செல்லவே அவளை பார்க்க நேர்ந்தது. அவள், அவ்வூரின் அதிக வயதான பெண்மணி; செல்லப்பெயர் ‘கெழவி’.

“என்னாத்தா இங்க உக்காந்துட்டு இருக்க? பேச்சுதுணைக்கு ஆள் இல்லயோ”

“யாரது வெள்ளையப்பனா!”

“அதுசரி. ஆண்டவன் ஒன் கண்ணுக்கு போவ வேண்டிய சத்த எல்லாம் காது போவ சொல்லிட்டா போல” என்றபடி பாட்டியின் அருகில் அமர்ந்தான்.

“என் கண்ணு போன இத்தன நாளுல இன்னைக்குத்தா அது இல்லன்னு கவலை கொள்ளேன்”

“ஏன் இன்னைக்கு என்ன?”

“அந்த மவராசனுக்கு வெழா எடுக்குறாங்களே தெரியாதா ஒனக்கு”

“ம்ம்… ம்…”

“ஊரே அதுக்கு தானே போய் இருக்கு. நான் போகதான் வழியில்ல”

“ஏன் போறது!”

“கண்ணு தெரியாத நான் போயி என்ன பண்ணுறது. பத்தாததுக்கு காலும் மந்தம். நான் என்ன கைப்புள்ளையா கணம் கொள்ள மாட்டேனு  தூக்கி சுமந்துட்டு போவ”

“அதுவும் சரிதான்”

“நீ ஏய்யா போல”

“வான்னும் யாரும் கூப்பிடல; வரியான்னும் யாரும் கேக்கல; நானும் போகல”

“ம்ம்… ஊரு சனம் வந்தபொறவு தான் நடந்ததை கேட்டு தெரிஞ்சிக்கணும்” என்றாள் சலிப்பாக.

“அந்த மவராசனுக்கு என்ன பண்ணாலும் போதாது” அவளது குரலில் உணர்ச்சி கூடியது.

“அது அறிவுக்கும், குணத்துக்கும், செயலுக்கும் ஊரு மொத்தமும் ஆளுக்கொரு தங்கத்தட்டு வச்சி தலைமேல தாங்குனாலும் போதாது. மவராசன் மவராசன்… அந்த மவரா…”

“இந்தா சும்மா இருக்கியா ஓயாம” வெள்ளையப்பன் பேச்சில் எரிச்சல் நிறைந்து இருந்தது.

“ஏன் எம்மேல ஏறுற?” கிழவி அடக்கமான குரலில் கேட்டது.

“அப்புறம்…. அவ மவராசன்னா அப்ப நம்ம ராசன் யாரு எமராசனா! ஊர் உலகத்துல அவனை போல ஆள் இல்லையா என்ன, சலிக்காம அவனை பத்தியே பாடிகிட்டு”

வெள்ளையப்பனின் பேச்சு கிழவியை வாயடைக்க வைத்தது. பின் எதை நினைத்தோ கலகலவென சிரிக்க தொடங்கினாள்.

“இப்ப எதுக்கு பொக்கைய காட்டிகிட்டு கிடக்க?”

கிழவி கிண்டல் குரலில், “ஊரே ஒன்னை வுட்டுபுட்டு போன காரணத்தை இப்பத்தானே அறிஞ்சேன். அதான்”

‘கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை – வள்ளுவர்

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் – கலைஞர்’

-முற்றும்-

-ஊதா மூங்கில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக