அறைகூவல்
மணியண்ணன் விட்ட அறை என்னை தடுமாறச் செய்து இருந்தது. இந்த நாள் இப்படி அமைந்து இருக்கத் தேவையில்லை. வெற்றிவாகைச்சூடி, வேட்டியை மடித்து, மீசையை முறுக்கி, ராச தோரணையில் திமிராக நடக்க வேண்டும் என எண்ணி எண்ணி ஐந்து மாதமாக காத்திருந்த இந்த நாள் இப்படி அமைந்து இருக்கத் தேவையில்லை.
“டேய் சூச்சிக்காரப் பயலே! நினைச்சத சாதிச்சிட்டல்ல. எனக்கு முன்னமே தெரியும்டா நீ இப்படி ஏதாவது பண்ணுவன்னு. உன்னை கொல்லாம விட மாட்டேடா” என்று கையை ஓங்கியபடி நஞ்சப்பனை நோக்கி நகர்ந்த என்னை நிறுத்தியது மணியண்ணன் என் கன்னத்தில் விட்ட அறை தான்.
“என்னெ ஏண்ணே அடிக்கிற? அவனை அடி. என்னெ உசுப்பேத்தி ஒன்னுமில்லாம பண்ணப் பய அவன்” என்று நான் கத்த,
“அவன் ஒன்ன என்னடா பண்ணான்?” என்று மணியண்ணனும் கத்தினார்.
“ஏன் அவன் என்கிட்ட விட்ட சவால் ஒனக்கு தெரியாதா?”
ஐந்து மாதத்திற்கு முன்பு, ஊர் அரசமரத்தடியில் கூடியிருந்த ஒரு சிலரில் நானும் நஞ்சப்பனும் இருந்தோம். விளையாட்டு பேச்சுக்கள் விவாதமாக மாறவே,
“சரிடா! நீ அவ்ளோ பெரிய வேலைக்காரனா இருந்தா, இந்த சாகுபடியில யாருக்கு வெளைச்சலு அதிகமா வருதுன்னு பாத்துடுவோமா?” என்றான் நஞ்சப்பன்.
“அதுக்கு என்னெடா! தாராளமா பாத்துக்கலாம்” என்றேன் வேட்டியை மடித்து, மீசையை முறுக்கி, ராச தோரணையில்.
அன்றிலிருந்தே அவனை வீழ்த்துவது ஒன்று தான் எண்ணம். அவனைவிட பெரிய நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். உயர்ந்த உரங்களை வாங்கி அடிக்கினேன். மழையும் போதும் போதும் என்றளவு வாரி தந்தது. எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல்.
நானும் நஞ்சப்பனும் ஒன்றாக தான் வண்டி கட்டி இங்கு வந்தோம். என்னைவிட அவனிடம் மூட்டைகள் குறைவு தான். குறைவு அதிகமாக இல்லை என்றாலும் குறைவு தான். எனது விளைச்சலை விற்று பணமாக்கி வெளிவந்து சிறுது நேரம் கழித்து தான் தெரிந்தது நஞ்சப்பனின் விளைச்சல் என்னைவிட அதிகம் என்று.
அதை தோல்வி என்று ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது. ஏற்றுக்கொண்ட போது பொறாமை தொற்றிக்கொண்டது; பொறாமை துணைக்கு சந்தேகத்தை அழைத்தது; வந்த சந்தேகம் அதற்கான காரணம் தேடியது; வரும்வழியில், என் கவனம் சிதறிய பொழுதில் அவன் செய்த சூழ்ச்சியின் பலனாகத்தான் அது இருக்க முடியும் என்று சந்தேகம் காரணத்தை உறுதி செய்த போது, கோவம் தலைக்கேறியது; கண்கள் அவனை தேடத்தொடங்கியது. தூரத்தில் கண்ட அவனை பார்த்து கத்தியபடி, கையோங்கியபடி, சென்ற என்னை மணியண்ணன் அடித்தார்.
“அவ நெலத்தை விட பெரிய நெலம் என்னுது. அப்படியிருக்க என் வெளைச்சலை விட அவன் விளைச்சல் எப்படி அதிகமா வரும்? ஒன்னு அவன் என் மூட்டையை களவாடி இருக்கணும்! இல்ல என் நெலத்தை எதுனா பண்ணி இருக்கணும்”
“அவன் ஒன் நெலத்தை எதுனா பண்ணுனது இருக்கட்டும். நீ ஒன் நெலத்துக்கு என்ன பண்ண?”
“ஏன்! நான் என்ன பண்ணல? நான் என் நெலத்துக்கு பண்ணளவு கூட அவன்… அவன் நெலத்துக்கு பண்ணிருக்க மாட்டான்”
“கிழிச்ச நீ. ஏன்டா நெலம் பெருசா இருந்தா போதுமா? ஒசந்த ஒரத்தை வாங்கி அடிக்கி வச்சா போதுமா? இல்லை பத்துக்கு இருபது பேரா வயல்ல இறக்கினாத் தான் போதுமா? நீ எத்தனை முறை ஒன் நெலத்தை அக்கரையோட போயி பாத்த? வயல்ல இறங்கி ஆசையா அதை தொட்டு பாத்த? புள்ளைக்கு மட்டும் பக்கத்துல படுக்குற புருசனை பொம்பள ஒருகாலமும் மதிக்க மாட்டா. அவபோல தான்டா நெலமும். அன்னைக்கு வானம் பொத்துட்டு ஊத்துச்சே அப்ப பொத்திட்டு ஊட்டுக்குள்ள தானே இருந்தே! அவன் என்ன பண்ணான் தெரியுமா? அந்த மழையிலயும் வயலுக்கு போயி வரப்பு வெட்டி தண்ணிக்கு போக்கு இடம் காட்டிட்டு இருந்தான். இப்படி அக்கரையா பாத்துக்குறவனுக்கு அவ விளைச்சலை வாரி தராம என்ன பண்ணுவா?” என்றவரை,
“அண்ணே! விடுங்கண்ணே” என்று கூறி என்னிடம் வந்தான் நஞ்சப்பன்.
“ஒன்னைவிட நான் ரெண்டு மூட்டை வெளைச்சலு தான் அதிகம். இந்தாபுடி அந்த ரெண்டு மூட்டைக்கான காசு. நீயே என்னைவிட வெளைச்சலு அதிகம் பார்த்தவனா இரு. கோவப்படாத” என்று அந்த காசை என் கையில் திணித்தான்.
அவன் எனக்கென விட்டுக் கொடுத்தது, மீண்டும் ஒருமுறை கோவத்தை உச்சிக்கு ஏற்றியது.
“ஏன்டா என்னை பார்த்தா காசுக்கு வக்கத்த பயபோல தெரியுதா!” என்று அவன் தந்த காசை அவன் முகத்திலேயே விட்டெறிந்தேன்.
“பத்தலன்னா… இதையும்பிடி!” என்று நிறுத்தி நிதானமாக ராச தோரணையில் கூறி, என் பையில் இருந்த பணத்தை எடுத்து வானில் வீசினேன். பணமழை பொழிய தொடங்கியது.
அப்பொழிவிற்கு நடுவே, வேட்டியை மடித்து, மீசையை முறுக்கி, ராச தோரணையில் நடக்க தொடங்கினேன்.
ஆனால், இத்தனையும் செய்ய சொன்ன என் மனம். இத்தனையையும் செய்தபின்னும் இன்பம் கொள்ளாமல், நிம்மதி அடையாமல், கோவம், வெறி, துன்பத்தால் மட்டுமே சூழ்ந்து இருக்கும் காரணம் புரியவில்லை.
‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது’
-முற்றும்-
-ஊதா மூங்கில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக