நேர்த்திக்கடன்
“மணியாகிடுச்சி சீக்கிரம் வாங்க...” அவசரப்படுத்துக்கிறாள் கீர்த்தனா. எனக்கு
கோயிலுக்குச் செல்வதில் உடன்பாடில்லை. இப்போது அவளுடன் போக மறுத்தால், சமாதானம் செய்வதற்கு
ஆகும் செலவு அதிகமானதாக இருக்கும். அதனால், அவளுடன் கோயிலுக்கு செல்வது என்று தீர்மானித்துவிட்டேன்.
நாத்திகம் பேசினாலும், மனைவி சொல்லே மந்திரமல்லவா..?
“வந்துட்டேண்டி...” என்றபடி வண்டியை நோக்கி நடந்தேன். பூஜை மற்றும் பரிகார யாக
பொருட்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதாக அவள் என்னிடமிருந்து வாங்கியிருந்த ரொக்க
பணத்தையும் வைத்திருந்தாள்.
நீண்டகாலமாக செய்து வரும் தொழிலில் இப்போதுதான் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருக்கிறேன்.
இதற்காக நான் கடந்த பாதை மிகவும் நீளமானது. பல நெருக்கு மத்தியில், இன்று மனைவியுடன்
‘டூ வீலரில்’ கோயிலுக்குச் சென்று நன்கொடை அளிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்றுதான்
கூறவேண்டும்.
“வண்டில ஏறு கீர்த்தனா...” வண்டியை கிளப்பினேன்…
பேசிக்கொண்டே வந்தாள்.
“இன்னைக்குத்தான் எந்த வேலையும் வச்சிக்கக்கூடாதுனு சொல்லியிருந்த்தேன்ல? அப்புறம் என்ன கடைசி நேரத்துல அவசர வேல?”
“நான் என்ன மாச சம்பளத்துக்கா வேல பாக்குறேன்? ஒரு நாள் கேஸ்வல் லீவ் போட்டுட்டு சுத்த? நீயே சொல்லு...”
“எப்ப பாத்தாலும் தொழில பத்தியே யோசிச்சா… எப்படிங்க கோயில் குளத்துக்கு போனாதானே புண்ணியம் கிடைக்கும்?”
“புண்ணியம்ங்குறது கோயிலுக்கு போறதுல இல்ல கீர்த்தனா...”
“போதும் நிறுத்துங்க. உங்க நாத்திகத்த வேற யார்ட்டையாவது வச்சிக்கங்க. நான்
கும்புடுற சாமிதான் உங்கள இந்த அளவுக்கு உயர்த்திருக்கு… அது எப்பவும் நெனைப்புலயே
இருக்கட்டும்”
“சரி விடு… உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?”
“கோயில் போறவரைய பேசாம வாங்க. இல்லனா நான் எறங்கி நடந்து போயிடுவேன்” என கோபித்தாள்.
கீர்த்தனா காதலித்து கரம் பிடித்த பெண்தான். என்னோடு எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகும்
இவள், கடவுள் விஷயத்தில் நான் பேசுவதை கேட்பதே இல்லை. என் பேச்சைக் கேட்காமல் நான் நினைப்பதையே செய்யும் அன்பான மனைவி.
திருவான்மியூரில் இருக்கும் அப்பார்ட்மென்டில், குடும்பங்களுள் எங்கள் குடும்பமும்
ஒன்று. எங்களுக்கு குடும்பம் என்றால், நானும் கீர்த்தனாவும்தான். திருமணமாகி இரண்டு
மாதங்கள்தான் ஆகியுள்ளது. கல்லூரிக் காலத்தில் தொலைவில் இருந்து காதலிக்கத் தொடங்கிய
இவளை, மனைவியாக்கி அருகிலிருந்து காதலிக்கத் தொடங்கியுள்ளேன்.
மாத சம்பளத்துக்கு வேலை செய்வதில் உடன்பாடில்லாது போகவே, சோழிங்கநல்லூரில்,
கடை ஒன்றை வாடகைக்கு பிடித்து, சிறிய அளவில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.
மர்க்கெட்டிங் என்றால், கிடைக்கும் எந்த பொருளையும் சந்தைப்படுத்துவது.
தொடக்கத்தில், மிகவும் மோசமான நிலையில் இருந்த எனது நிறுவனம். திருமணத்துக்கு
பிறகு கொஞ்சம் வளரத் தொடங்கியது. பேருந்து படிக்கெட்டில் தொங்கியபடி பயணிட்த நான் இரு
சக்கர வாகனம் வாங்குமளவுக்கு கொஞ்சம் முன்னேற்றம்தான்.
இதற்குக் காரணம் தவறுகளில் இருந்து நான் கற்ற பாடம் என்பது எனது கருத்து. ஆனால்,
என் மனைவிக்கோ அவள் வேண்டி விரதமிருந்த கபாலீஸ்வரர்தான்
என்னை உயர்த்தினார் என்பது நம்பிக்கை.
அறிவியல் சார்ந்த எத்தனையோ விஷயங்களை புரிந்துகொள்ளும் இவளுக்கு, கடவுள் நம்பிக்கை
மட்டும் குறையவே இல்லை. நானும் அது குறித்து வாதத்தை உருவாக்கி எங்களுக்குள் சண்டை ஏற்படுவதை
விரும்பாததால், அவளிடம் மட்டும் நாத்திகம் பேசுவதில்லை என்று எனக்குள்ளேயே தீர்மானித்துக்கொண்டேன்.
கபாலீஸ்வரர் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தேன். மனைவி சொல் தட்டாது, ஒரு சொல்கூட பேசவில்லை. திருவிக மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது அலைபேசி அதிர்ந்தது.
பாலத்திலிருந்து கீழிறங்கியதும் வண்டியை ஓரம் கட்டி எடுத்து பார்த்தேன். சதீஷ் அழைத்திருந்தான்.
திருமணத்துக்கு வந்து சென்ற பிறகு இன்றுதான் அலைபேசியில் அழைத்திருக்கிறான்.
“மச்சா… சொல்டா...”
“எங்கிருக்க..?” என அதிர்ச்சியாய் கேட்டான்.
“இப்ப அடையாறு பக்கம் இருக்கேன்”
“ஒரு உதவி… ”
“என்னடா தயங்காம சொல்லு...”
“வியாசர்பாடில ஒரு விடுதி. அங்கிருக்க குழந்தைகளுக்கு சாப்பாடு வேணும்… வழக்கமா
உதவுறவங்க ‘கஜா’ நிவாரண முகாம்ல இருக்காங்க… எதாவது பண்ண முடியுமா..?” என பதட்டத்துடன்
கேட்டான்.
“எத்தனை பேரு..?”
“65 பேருடா”
“சரி என்னால ரெண்டு நாள் தாக்கு பிடிக்க முடியும். நான் பாத்துகுறேன்” என அழைப்பைத்
துண்டித்தேன்.
“கீர்த்தனா...”
“என்ன..? எதாவது காரணத்த சொல்லி கோயிலுக்கு போறத தடுக்கலாம்னு நினைக்காதீங்க”
“இல்ல கீர்த்தனா… ஒரு ஹோம்ல, 65 குழந்தைகளுக்கு சாப்பாடு வேணுமாம்...” என தயங்கினேன்.
“அட என்ன இதுக்கு தயங்குறீங்க..? எங்க ஆர்டர் பண்லாம்னு சொல்லுங்க.” என என்னைவிட
அவள் மும்மரமானாள்.
“கோயிலுக்கு இன்னொரு நாள் போய்க்கலாமா?”
“கோயில் இருக்கட்டும் எங்க இருக்கு அந்த இடம்?”
“அது, வியாசர்பாடி, நாமலே சமச்சிக்கலாமா? அங்க அந்த வசதில்லாம் இருக்கும்”
“ம்ம் சரிங்க…” என்றாள்.
பயணத்திசையை மாற்றினோம். “கோயில்ல உன் நேர்த்திக் கடனுக்காக சேத்துவச்ச பணம்தான்
இருக்கு… உனக்கு கோவமில்லையா கீர்த்தனா?”
“கோயில்ல நேர்த்திக் கடன் செலுத்துறதவிட இதுமாதிரி குழந்தைகளுக்கு உபசரிக்கிறதுலதாங்க
அதிக புண்ணியமிருக்கு” என்றாள் புன்னகையுடன்...
- இரகுராமன் @raghuraaaman
- இரகுராமன் @raghuraaaman
"இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்
பயன்"
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய
வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு
ஏற்ற அளவினதாகும்
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும்
ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின்
தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரின்
சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக