வழு
Disclaimer: All characters Incidents Names Places and corporations or establishments appearing in this document are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
அன்பின் பெருங்கவிக்கு,
நான் பார்கவி. உங்கள் மொழியில் சொல்வதானால் பார் போற்றும் கவி. கதையின் விதை கவிதை. நீங்கள் கதைக்க விதைத்த விதை நான். ஆனால் முளைக்க மறுத்த விதை.
………
இன்றைய காலை மிகவும் வழக்கமானதாக விடிந்து கொண்டிருந்தது. உள்ளங்கையை நன்கு தேய்த்துவிட்டு விரல் ரேகைகளைப் பார்க்க ஒரு முறை மெல்ல மெல்ல இமைகளை விரித்துப் பார்வையை நேராக்கி சீராக்கிக் கூராக்கிக் கண்விழிக்கத் துவங்கினேன். எனக்கு மிகவும் பிடித்த தேனீரின் வாசனை என்னை கைத் தாங்கலாக எழுப்பிக் கூட்டிச்சென்றது. பரபரவெனப் பல் துலக்கி வாசலை வந்தடைந்தேன். எனக்கு முன்பாகவே அவ்விடத்திற்குத் தேனீரும் தேன் கலந்த நீரும் வந்திருந்தன. உடன் நான் தினமும் எடுத்துக் கொள்ளும் பாலக்காட்டுக் கோபாலன் நாயர் தந்த பஸ்பமும் அவ்விடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
“இன்னிக்குப் பேப்பர் வரலயா?” என்று நான் கேட்கும் முன்பாகவே
“அப்பா இங்க பாருங்க” என்று கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுக் கள் வெறி கொள்ளச் செய்தாள் என் இளைய மகள் பேரரசி.
குறுக்கிட்ட அலைபேசி ஒலியை மௌனித்து விட்டு இணைத்தால், மறுபுறம் என் முதல் மகள் கவி, “டாடி, செம்ம டாடி. லவ் யூ” என்று கொஞ்ச ஆரம்பிக்கத் தடதடவென வரிசையாக அழைப்புகள் சகல திசைகளிலிருந்தும் என்னை ராணித் தேனீயின் பின் சுற்றும் வேலைக்காரத் தேனீக்களைப் போல மொய்க்கத் துவங்கின.
செய்தித்தாளை விரிப்பதற்கு முன் முதல் பக்கத்திலேயே எனது அழகான வெள்ளையாக்கப்பட்ட புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. அழகென்றால் வெள்ளை அல்லது வெள்ளை தானே அழகு. வெள்ளை மழை வெள்ளை அருவி வெண்மேகம் வெள்ளை மனம் வெண்புரவி வெண் நுரைப் பாற்கடல்.… வெள்ளை தூய்மையின் அடையாளமல்லவா? வெள்ளை என்பது ஒளி. வெள்ளை என்பது ஆற்றலின் குறியீடு. விலகலில்லாத கதிரவனின் வெள்ளொளியே உலகின் ஆற்றல் மூலம். வெள்ளை முன்னேற்றத்தின் முத்திரை என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குகையில் என் சிந்தனையைக் கலைத்தது என் மனைவியின் குரல்.
“என்னங்க டீ ஆறிடப் போகுது..” என்றாள்..
குனிந்து பத்திரிகையை எடுத்தேன்.
“தமிழ்க் கவிஞர் பாவரசு பாரதி கண்மணிக்கு பத்மவிபூஷண் விருது” என் கண்மணிகள் முத்துப் போல வெள்ளொளி வீசின. வைரமாய் மின்னின. ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும் நேற்றிரவே ட்விட்டர் ட்ரெண்டிங் முதல் வாட்ஸப் வரை பரவி விட்டிருந்தாலும் அதைச் செய்தித்தாளில் வாசிப்பது தனிப் பரவசமே. நேற்றிரவு நான் அதை எல்லாம் கவனிக்காமல் தூங்கி விட்டிருந்தேன். மேற்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன்.
“குடியரசு தினத்தை முன்னிட்டுப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பாடலாசிரியரும், எழுத்தாளரும், இயக்குனருமான திரு. பாரதி கண்மணிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் விருது பெற்ற கவிஞருக்கு மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையைச் சார்ந்த நடிகர்கள் கிருஷ்ணாராவ், சேனாபதி, விருதகிரி, வெற்றி, ஏகே மற்றும் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிவருகின்றனர்.
இந்த விருது பெறும் பாரதி கண்மணி ஏற்கனவே 2003ல் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் மட்டுமன்றி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் இவர் கிராமப்புற ஏழை மக்களுக்காக குறைந்த செலவில் நல்ல சிகிச்சை தரும் மருத்துவமனைகளையும் ஏழை மாணவர்களுக்காகக் குறைவான கட்டணத்தில் கல்விநிலையங்களும் நடத்தி வருபவராவார். மேலும் இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
திரைத்துறையின் ஒப்பிலா ஒரே உத்தமன் என்று போற்றப்படும் பாவரசு பாரதி கண்மணி அவர்கள் கடந்த 1963ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில்….
தொடர்ச்சி 9ம் பக்கத்தில்”
என்று எனக்கே மறந்துபோன என் வரலாறை விளக்கியிருந்தார்கள். மேற்கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாததால் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
அதற்குள்ளாக அலுவலக வாசலின் இருபுறமும் கோவில்களின் துவாரபாலகர் போல என் 20 அடி உயர பேனர்களைக் கொண்டு நிரப்பியிருந்தார்கள். மெல்லப் புன்னகைத்து விட்டு உள்ளே வந்து அனைவரது வாழ்த்துக்களையும் சில பத்திரிக்கை, தொலைக்காட்சி பேட்டிகளையும் கடந்துவிட்டு மதிய உணவு முடித்து ஓய்வறைக்குத் திரும்பினேன். இதுவே எனக்கே எனக்கான தனிமையின் தனிமையோடு புணரும் நேரம். களைப்பில் கண்ணயரும் முன் என் ஜிமெயில் ஒரு தகவலைப் பரிமாறியது. bargaviparanthaaman2161281024@gmail.com என்ற ஐடியிலிருந்து வந்திருந்தது. ஒரு நொடி என் உணர்வலைகள் திடுக்கிட்டு அமைதி கொண்டன.
பார்கவி பத்மனாபன் எனக்கு சற்றே பரிச்சயமான பெயர். ஆனால் முழுதாக ஞாபகத்துக்கு வரவில்லை. வழக்கமாக இந்த மாதிரியான பெயர்களில் வரும் மின்னஞ்சல்கள் உங்கள் அக்கவுன்டில் 1 கோடி ரூபாய் வருகிறது. அதற்கு ஒரு 20000 மட்டும் அனுப்பி உறுதிசெய்யவும் எனவோ அல்லது 6 முதல் 7 இன்ச் வரை அதிகரிக்கலாம் எனவோ அல்லது உங்களுக்கு நானூறு கம்பெனிகளில் வேலை காத்திருக்கிறது எனவோ வரும். சில நேரங்களில் அவர்கள் தனியாக இருப்பதாகவும் துணையின்றிக் கஷ்டப் படுவதாகவும் கூட அழைப்புகளாக உருமாறும். எத்தனை மாய உலகம் இது? மழைக்காட்டு மரங்களின் பட்டைகளைப் போன்ற பழுப்பேறிய சாம்பல் நிறப் பூஞ்சைகளைப் போல எங்கும் வியாபித்து நிற்கும் மாயைகள். மின்னஞ்சல் தன் ஆடையை விலக்கியது.
“அன்பின் பெருங்கவிக்கு,
நான் பார்கவி. உங்கள் மொழியில் சொல்வதானால் பார் போற்றும் கவி. கதையின் விதை கவிதை. நீங்கள் கதைக்க விதைத்த விதை நான். ஆனால் முளைக்க மறுத்த விதை.
நாலடியும் குறளும் நான்மணிக்கடிகையும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் ஆயிரம் செய்யுளும் ஆண்டாள் மொழியும் நினைவில் நிறுத்திடும் தங்களுக்கு இந்த நாலாந்தரக்கதை நினைவில் நின்றதா என்று தெரியவில்லை.
இருபது வருடங்களுக்கு முன் எனது இருபத்துமூன்றாவது வயதில் நடந்த நிகழ்வு அது. தஞ்சையிலிருந்து சென்னை வந்து செட்டிலாகிய இசையோடு இசைந்து வாழ்ந்த குடும்பம் எங்களது. சபாக்களிலும் கோவில் விழாக்களிலும் மார்கழி உற்சவங்களிலும் பாடிய எனக்கும் திரைப்பாடல்கள் பாட ஆர்வம் வந்தது.
அப்போதெல்லாம் புகழ்வெளிச்சமென்றாலே திரைப்படங்கள் தான். ஆனால் இப்போதிருப்பது போலப் பல்வேறு தளங்கள் அப்போது இல்லை. கவிஞர் இசையமைப்பாளர் இயக்குநர் நடிக நடிகையர் என்று யாராவது ஒருவர் மூலம் வாய்ப்புக் கிடைப்பதே பாக்கியமாக இருந்தது. ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்ற உங்கள் சக கவிஞரது சொற்கள் உண்மைதான்.
திரைத்துறை அண்ணாந்து பார்க்கும் வானமென விரிந்திருந்தது. பாதி ஆவியாகிய குறை மேகமென நான் ஓரத்தில் நின்றிருந்தேன். அப்போது என்னைக் கான மழையாக மாற்ற வந்த தென்றல் நீங்கள் என்று தோன்றியது. ஒரு சபாவில் பாடிய என்னை சிறப்பு விருந்தினராக வந்த நீங்கள் கண்டடைந்தீர்கள். ஆனா அடையத்தான் கண்டீர்களென்று அப்போது தெரியாது எனக்கு.
விழா முடிவில் என்னைப் பாராட்டிவிட்டு என் தந்தையிடம் விசாரித்தீர்கள். பொதுவாகவே எனக்குப் பாட வரும் அளவிற்குப் பேசவராது. இப்போதைய மியூசிக்கலி பெண்கள் போலில்லாமல் மொத்தமாகவே எனக்குப் பத்து வித பாவனைகள்தான் வரும். ஆனால் உங்களைக் கண்டதில் பெருமகிழ்வு அந்நாளில். நீங்கள் என்னிடம் முதன்முதல் பேசியபோது கூட அத்தனை கூச்சம். வெள்ளைப் பனிப்பாறை போலான இயல்பான முகமும் தெளிவான பேச்சும் நேர்மையான பார்வையும் வியப்பளித்தது. உங்களின் பாடல் சாம்ராஜ்யம் உலகறிந்தது. அதிலும் உங்களது நண்பர் அப்போதே ஹாலிவுட் வரை சென்றிருந்தார். அவரது இசையில் பாடினால் உலகப்புகழ் பெறலாம் என்று நினைக்கும் போதே மனம் பறந்தது. ஆனால் பலூன்களெல்லாம் பறவைகளாவதில்லை என்பது ஊசியால் குத்தப்படும் வரை உணரவில்லை நான்.
அதன்பின் ஒரு நாள் என் குரலைப் பதிவு செய்து உங்களிடம் கொடுக்க வந்திருந்தேன்.
“வா பார் கவி.. பார் போற்றும் அழகிய கவி” என்றது உங்கள் குரல்.
“பார்கவி தமிழல்ல. சமஸ்கிருதம்” என்றேன்.
“அட இதோ பார் கவி.
நானொரு ஊர்க்கவி.
நீயோ பார் கவி.
பார்க்கப் பார்க்கச் சலிக்காத பார்கவி.
விழியின் அழகியலில் மொழி ஏது வழி ஏது?
வீரியத்திலும் காரியத்திலும்
ஆரியமாவது திராவிடமாவது” என்று கவி பாட ஆரம்பித்தீர்கள்.
பதிவுசெய்யப்பட்ட குரலைக் கேட்டுப் பரவசமான மனநிலையில் இருந்தீர்கள். என் நண்பரிடம் சேர்த்துவிடுகிறேன். கருநாடகத்தை விட்டு ஆங்கிலப்பாடல் பதிந்துகொண்டு வருமாறு கேட்டீர்கள்.
அடிக்கடி இப்படி நிறைய பாடல் பாடிக்கொண்டு வரப் பணித்தீர்கள். நானும் பாடிக்கொண்டே இருந்தேன். வாய்ப்புகள் வரவில்லை. தொலைபேசிகளில் நீங்கள் அழைக்கையில் நான் அதிகம் பேசாமல் இருப்பேன். நீங்கள் அழகாகப் பேசிக்கொண்டிருப்பீர்கள். பின் மெல்ல மெல்ல வர்ணனைக்குள் இறங்கினீர்கள். அதுவும் உங்கள் பேச்சின் பாகம்தான் என்றிருந்தேன் அதன் நோக்கம் என் தேகம் என்பதை உணராமல். ஏனெனில் இயல்பாகவே நீங்கள் ரசிக்க ரசிக்கப் பேசுவதில் வல்லவர் என்பது நிஜம்.
உன்னைப் பார்த்தால் கவிதை ஊற்றெடுக்கிறது. உன் குரல் கரும்பாறையில் விழுந்த வெள்ளருவியாய் மின்னுகிறது என்றெல்லாம் கூறிக்கொண்டே வந்த நீங்கள் ஒரு நாள் மிகவும் இயல்பாகவே கேட்டுவிட்டீர்கள். உன் குரல் உலகமெல்லாம் ஒலிக்க இது ஒரு சிறு கணவாய். ஏதும் கூறாமல் கடந்திடு என்றீர்கள். என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. வீட்டில் யாரிடமும் கூறாமல் அழுது தீர்த்தேன்
பின் வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் நீங்கள் கூறிய சொற்கள் என் செவிப்பறையை உடைத்துக் கிழித்தன.
“பார்கவி இனி ஒருவரும் உன் பாடலைக் கேட்க இயலாதபடி செய்ய என்னால் முடியும். புரிந்துகொள்வது உன் திறமை” என்றபடி முடித்துவிட்டீர்கள்.
அதன்பிறகுதான் ஆரம்பித்தது உங்கள் திருவிளையாடல். எங்கு சென்றாலும் வாய்ப்புகள் வரவே இல்லை. என் குரல் மௌனமாகிப் போனதோ என்றே தோன்ற ஆரம்பித்தது. அந்த வயதில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. எதுவும் தெரியாத என் தந்தை கவிஞரைப் பார்க்கலாம் என்ற போது நான் தவிர்த்து வந்தேன். மெல்ல உலகம் புரிந்தது. உங்கள் முகமும் தெரிந்தது. இனி திரைப்பாடல்கள் வேண்டாமென்று திருமணம் முடித்து தமிழகத்தை விட்டு வெளியே வந்து செட்டிலானதும் எல்லாம் முடிந்துவிட்டது.
அதன்பின் எங்காவது பாடல்கள் கேட்டால் அதற்கு முணுமுணுக்கக்கூட சக்தியில்லாமல் போய்விட்டது. தூசி மட்டுமே சூழ்ந்த பாலைவனம் போல. இதெல்லாம் உங்களுக்கும் உங்களது ஒழுக்க சீலர் பிம்பத்திற்கும் ஞாபகமிருக்க நியாயமில்லை. இப்போதும் யாராவது என்னிடம் நீ ஏன் பாடுவதை நிறுத்திவிட்டாய் என்பதற்கு நான் உதிர்க்கும் வெற்றுப்புன்னகை மொத்தமும் உங்கள் அழுக்கு நிறைந்த கரங்களே நிரம்பியிருக்கின்றன என்றும் நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.
அண்மையில் உங்கள் இயக்குநர் நண்பரின் மீதான நடிகை ஒருவரின் பாலியல் குற்றச்சாட்டை நீங்கள் எல்லாரும் எதிர்கொள்ளும் விதம் கொடுமையானதாக இருக்கிறது. அவர் ஒரு விளம்பரப் பிரியை தானென்றாலும் உண்மைக்குக் கால்கள் உண்டு. தவழ்ந்தாவது வந்துசேரும்.
என் கணவரிடம் கூறியபோது நிதானமாக இருந்தார். ஆண்களின் கண்ணியமே பேராண்மை என்பது புரிந்தது. ஊடகங்களுக்கு உரைப்போம் என்றார். உங்கள் ஊடகங்களின் லட்சணம் தெரியாதா என்ன? என் ஆடையை வைத்தே ஒட்டுமொத்தத் தீர்ப்பையும் எழுதிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் வெள்ளைச் சட்டையில் ஒரு துளி மேனா மை கூட விழுந்திருக்காது.
உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். உங்களை மிரட்டவோ அவமானப்படுத்தவோ நான் இதை அனுப்பவில்லை. அப்போதே இதை வெளிக்கொணரும் தைரியம் எனக்கு இல்லை. இப்போதும் அவசியமில்லை என்றுதான் என்னளவில் தோன்றுகிறது. ஆனால் இதைத் தங்களுக்கு நினைவூட்டி உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நீங்கள் கட்டிக்காத்து வைத்திருக்கும் பிம்பமும் உங்கள் வாழ்வின் இன்பமும் அப்படியே நிலைக்கட்டும்.
ஆனால் இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை உங்கள் மனசாட்சி முடிவு செய்யட்டும். அப்படி ஒன்று இருந்தால்..
பார்கவி பரந்தாமன்.
நியூடெல்லி.”
ஒரே மூச்சில் வாசித்து முடித்ததும் உலகின் பெருவெறுமையை உணரத்தொடங்கினேன். எத்தனை பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறேன் ஒரு பெண்ணுக்கு நான்? எது என்னைத் தூண்டியது? வந்த வாழ்த்துக்கள் எல்லாம் வழிந்து ஓடிவிட்டன சிந்தையிலிருந்து. ஒரு பெரும்பாறையைப் போல மனது அழுந்தத்தொடங்கியது.
வாலிப வெறி என் கண்ணை மறைத்திருக்கிறது என்று ஒளிந்துகொள்ளமுடியவில்லை. வெளியே எழுப்பும் கேள்விகளுக்கு நாள் கணக்கில் வாதிட முடியும். ஆனால் உள்ளிருந்து எழும் கேள்விகளை ஒன்றும் செய்ய இயலவில்லை.
வெள்ளை வெள்ளை என்று உடை வரை மாற்றிய எனக்குள்ளேயே கருப்பு நிறைந்திருப்பதை உணராமல் போனேனா? புகழின் வெளிச்சம் புத்தியைத் தீர்த்துவிட்டிருந்தபோது கருப்பு மிருகம் காவு வாங்கிக் கொண்டிருந்ததோ?
கருப்பின் மேல் பழியிட்டு ஆவதென்ன?
கருப்பே நிரந்தரம். இருளின் குழந்தை அது. இருளே உண்மை. ஒளி என்பது உருவாக்கப்படுவது. இருள் எப்போதும் இருப்பது. இந்தப் புகழ் பெயர் பதவி என எல்லாவற்றின் பின்னும் இருப்பது என் கருப்பு முகம்தானா?
இந்தக் கருப்பு முகம் வெளியே பரவினால் இதுகாறும் நானடைந்த வெளிச்சம் மங்கிவிடுமா? மறைந்துவிடுமா? என் புகழ் மரித்துப்போகுமா? இந்தப் புறவொழுக்கமெல்லாம் வெற்று வேஷங்களா?
கேள்விகள் எனனைத் தின்னத் தொடங்கின. பதிலெதுவும் கிடைத்தபாடில்லை.
கருநிற உண்மையா? வெண்ணிறப் பொய் வெளிச்சமா?
கண்ணை மூடி யோசித்தேன். இருள் என்னை ஈர்த்தது.
கருப்பை கூடக் கருப்பைத் தானே காட்டுகிறது.
கருப்பொன்றும் கறையல்ல. நிறை.
கருவிழி நனைத்துக் கழுவி முடித்த ஒரு துளி கண்ணீர் கைபேசியை நனைத்தது.
“மதிப்பிற்குரிய நாட்டின் முதல் குடிமகனுக்கு..
பாரதி கண்மணி எழுதிக்கொள்வது. தங்களது தாமரை விருது என்னைத் தழுவ வந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஆனால் அதற்கான என் தகுதியைச் சீர்தூக்கிப் பார்க்கும் மனசாட்சி மனதார அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஏனெனில் என்னால் ஒரு பெண்ணின் எதிர்காலம் இருட்டடிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் ஒத்துக்கொ…….”
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.
மனத்தூய்மையே அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆராவாரங்களே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக