வெள்ளி, 2 நவம்பர், 2018

30. கும்பிடுறேஞ்சாமி

கும்புடுறேஞ்சாமி



“யாத்தே…குருவம்மாக்கா…ஒம்புள்ளய பாம்பு கடிச்சிடிச்சுத்தா…” என்ற குரல் கேட்டு கையில் இருந்த சட்டியைத் தவறவிட்டு விட்டு பதறி ஓடினாள் குருவம்மாள். தரையில் விழுந்து கிடந்த மகனைத் தன் மடியில் கிடத்தி உலுக்கினாள்.

“ஏலேய், தம்பி…கண்ண தொறடா… முழிச்சுக்கடா…” என்று கூப்பாடு போட்டாள். சிறிது நேரத்திற்குள் அவள் கணவன் மாரிமுத்துவிற்குத் தகவல் போய் சேர அவனும் ஓடோடி வந்தான்.

“என்னங்க…பாருங்க இவன, கண்ண தொறக்க மாட்டிங்கான்.” என்றழுதாள்.

“ஏடே…நாராயணா, அப்பாவ பாருடா…யய்யா ராசா, கண்ணத் தொறந்து பாருடா…” என்று அவனும் முயற்சிக்க, “டவுனுக்கு தூக்கிட்டுப் போலாங்க. வத்ராப்புல பெரியாசுப்பத்திரி இருக்குல, அங்க போலாங்க.” என்று குருவம்மாள் விசும்பத் தொடங்கினாள்.

“எப்படித்தா போவ? அதெய்ன் தெக்குப்பட்டி கோயில்ல நேத்தே கொடி ஏத்திட்டாவொள்ல. இன்னு ரண்டு வாரத்துக்கு பூக்குழி முடியற வர ஊருள்ள போவக்கூடாதுல்ல”

“ஒத்த மஞ்சத் துண்டையாச்சு மேல சுத்திக்கிட்டு கொல்லப் பொற வழியா நீங்க மட்டுமாச்சு போய்ட்டு வந்த்ருங்க, புள்ள உசுரு தாங்கணுமில்ல. அய்யர் கால்ல விழுந்தாச்சு கெஞ்சிட்டு தூக்கிட்டுப் போங்க.”


இவர்கள் வாழும் தாணிபாறை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூன்று புறம் மலைகள் சூழ வீற்றிருக்கும் ஓர் அழகிய குறுங்கிராமம். தாணிபாறையில் இருந்து வற்றாயிருப்பு செல்ல செல்ல தென்கிழக்கே உள்ள தெற்குப்பட்டி வழியாகத்தான் சென்றாக வேண்டும். சுற்றுப்புறத்தில் வைத்தியசாலை உள்ள ஒரே ஊர் வற்றாயிருப்பு மட்டுமே. வேறு இடம் என்றால் சதுரகிரி மலையேறி மேற்கே இறங்கி வைகைச் சுனையின் முற்றத்தில் உள்ள வருசநாட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.


வற்றாயிருப்புக்கு செல்ல அரை மணி நேரமும் வருசநாட்டிற்குச் செல்ல அரை நாளும் ஆகுமென்பதால் குருவம்மாள் சொன்னதே சரி என்று தோன்றியது. தெக்குப்பட்டி அய்யரைக் காண விரைந்தான்.

“கும்புடுறேஞ்சாமி” என்றான் அய்யர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் எட்ட நின்றபடி.

உள்ளருந்து அதிகாரத் தோரணையில் சத்தம் வந்தது, “பாவிப்பயலே…பொழுதடைய முன்னாடி ஏனாக்கும் ஊருக்குள்ள வார?”

பத்து நிமிடங்களாய் மாரிமுத்து மன்றாடியும் பகல் நேரத்தில் ஊரைத் தாண்டிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிள்ளையின் உயிரைக் காக்க வேண்டி வேறு வழியின்றி வருசநாடே போவதென்று முடிவெடுத்தான். ஆறு வயதுப்பிள்ளையைத் தோளில் சுமந்தபடி  மலையேறத் தொடங்கினான். குருவம்மாளும் ஓட்டமும் நடையுமாய் பின் தொடர்ந்து வந்தாள். ஒரு மணி நேரம் சென்று மலைப்பாதையில் மெதுவாய் வேகம் குறைந்து நின்றுவிட்டான். பின் வந்த குருவம்மாள், “மூச்சு வாங்குதாங்க? புள்ளக்காக கொஞ்சம் பொறுத்துக்கங்க. நா வேணா அவன கொஞ்ச தூரந் தூக்கியாரவா?” என்றபடி முன்னால் வர, கண்ணீர் வழிந்தபடி நின்றிருந்த மாரிமுத்துவைப் பார்த்து அதிர்ந்தாள்.

“ஏத்தா, மூச்சு நின்னுடுச்சுத்தா…” என்றான் சன்னமான குரலில்.

குருவம்மாள் அலறிய சத்தம் கேட்டு காட்டுப் பறவைகளும் சிறு விலங்குகளும் சிதறியடித்துப் பறந்தன!

*

நான்கு மாதங்கள் கழிந்திருந்தது. குருவம்மாள் தன் தனிமையின் பாரத்தைக் குறைக்க அவ்வப்பொழுது மாரிமுத்துடன் காட்டிற்குள் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். இவர்கள் சேகரித்து வரும் விறகு சுள்ளிகளை, பொழுதடங்கிய பின்னர் ஊருக்குள் சென்று விற்க மாரிமுத்துவிற்கு அனுமதி உண்டு. குருவம்மாளுக்கோ அந்த அனுமதியும் கிடையாது. பிள்ளையை விழுங்கியவளாயிற்றே!

இன்று மாரிமுத்து வீட்டில உறங்க, தனியாக சுள்ளி பொறுக்கி வரும்வழியில் தெக்குப்பட்டி அய்யரும் அவன் மனைவியும் சிறு பாறையில் அமர்ந்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்கள் கண்ணில் படாமல் மரம் செடிகள் பின் ஒளிந்து கொண்டாள். அவர்களின் உரையாடல் இவளுக்குத் தெளிவாகக் கேட்டது.

“போன வருசத்துல நம்ம லோகமே மாறிடுச்சுடி. வெள்ளக்காரா இந்தியாவ விடுவிச்சுட்டு நாட்டுக்கே ஓடிட்டா. படேல் மாதிரி ஒருத்தர் இருந்ததால தான் இன்னைக்கு நாடே ஒன்னா இருக்கு. இல்லனா எல்லாம் துண்டு துண்டா ஆயிருக்கும். இனி நாட்டோட முன்னேத்தமெல்லாம் நேரு கைல தான் இருக்கு.”

“ம்ம்.”

“நோக்குத் தெரியுமோ? பாக்கிஸ்தான் காரா தீவிரவாதி கைல துப்பாக்கிய கொடுத்து அனுப்புறா. கஷ்மீரத்துல இருக்குற நம்ம பண்டிதா எல்லாம் பாவம்டி. இந்த நேரத்துல காந்திய வேற போட்டுத் தள்ளிட்டா. எந்த பக்கம் திரும்பினாலும் கலவரம், சண்ட, சச்சரவு. என்னைக்கு தான் நம்மவாளுக்கு விடிவு காலமோ!”

குருவம்மாள் அசையாமல் இவர்கள் ஓய்வு முடித்து கிளம்பட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். அய்யரின் மனைவி ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளாள். தலைப்பிள்ளை. அவர்கள் இவளைப் பார்த்து விட்டால், பிரசவத்தில் சிக்கல் ஏதேனும் வந்தால் அந்தப் பழியும் இவள் மீது வந்து சேரும் என்ற பயம் வேறு அவளை வாட்டியது.

அய்யரின் மனைவி, “ஏண்ணா, இந்த முறையோட போதுண்ணா. இனி என்ன மலையேறச் சொல்லாதீங்கோ.”

“ஏனாக்கும்?”

“காலெல்லாம் வலிக்கறது.”

“சரி சரி. வருந்தாத. எல்லாம் மகாலிங்க மூர்த்தி பாத்துப்பார். ஆமா, தாம்பூலத்தட்ட எங்கடி, காணும்?”

“அச்சச்சோ, மேல உக்காந்து இருந்தோம்ல, அங்கயே விட்டுட்டேண்ணா.”

“சரி, நீ இங்கயே இரு. நா போய் எடுத்துண்டு வர்றேன்.” என்று அய்யர் கிளம்பினான்.

அவன் சென்று சில நிமிடங்களில் அய்யரம்மாவிற்கு பிரசவ வலி எடுக்கத் தொடங்க, அவள் அலறினாள், “ஏண்ணா, செத்த வாங்கோளேன். வயிறு விலிக்கறது. ஏண்ணா…”

அவள் அலறல் அய்யருக்குக் கேட்காத தூரம் கடந்து விட, அருகில் இருந்த குருவம்மாள் காதுகளுக்குச் சென்றது. தீட்டிற்கும் தாய்மைக்கும் இடையேயான போராட்டத்தில் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக தாய்மையே வென்று விட உதவிக்கு ஓடி வந்தாள்.

“அம்மா, வலி வந்துருச்சாமா?” என்றாள்.

குருவம்மாவைப் பார்த்ததும் அய்யரம்மா புருவம் சுருங்கினாலும் அவள் வலி அச்சுருக்கத்தை நீக்கியது. “அடி வயித்த பிறட்றா மாதிரி இருக்குடி.” அவள் கூறிய அடுத்த கனம் கால்கள் வழியே நீர் ஒழுக, “யாத்தே. பனிக்கொடம் ஒடஞ்சிடுச்சே! இனி புள்ள காத்திருக்காதுமா. அந்த திருப்பத்துல தான் என் குடிசை இருக்கு. யோசிக்காம வந்துருமா, வைத்தியச்சிய வரச்சொல்லுதேன்.”

அய்யரம்மாவும் வேறு வழியின்றி சம்மதித்தாள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மாரிமுத்து, “ஏத்தா…என்ன காரியந்தா பண்ணுத? யார எங்க கூட்டியாற?” என பதறினான்.

“சும்மா இருங்க, புள்ள வரப்போவுது, போயி பேச்சியம்மாவ வரச்சொல்லுங்க. அய்யரு பக்கமா மலையேறி போறாரு. அடுத்ததா அவரயுங் கூட்டியாங்க.”

பேச்சியம்மாள் இடைக்குலம் என்றாலும் வயது முதிர்ந்த கை தேர்ந்த மருத்துவச்சி. தெக்குப்பட்டியில் கடந்த ஐம்பது ஆண்டுகளாய் அனைத்துப் பிரசவமும் இவர் பார்த்ததே. இன்று வரை இவர் பிரசவம் பார்த்து ஒரு பிள்ளை கூட இறந்ததில்லை. ஆதலால் ஊரில் அனைவருக்கும் இவர் மேல் அளவற்ற மரியாதை உண்டு. மருத்துவச்சி உள்ளே நுழையும் பொழுது அய்யரம்மா வலியில் அனத்தி அனத்தி சற்று சோர்ந்து போயிருந்தாள். அவர், அய்யரம்மாவின் இடுப்பில் கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி மார்புக்கு மேலாக ஏற்றி விட்டு, அவளின் கால்களை அகல விரித்து வைத்தார்.

அதே நேரத்தில் மலையிலிருந்து இறங்கிய அய்யர் தன் மனைவியைக் காணாமல் தேட, தரையில் ஒழுகிய நீரும் வழியில் உதிர்ந்திருந்த பூக்களும் அவன் மனைவி மாரிமுத்து வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்பட்டாள் என்று அவனுக்கு உணர்த்தின. வாயிலில் நின்றிருந்த மாரிமுத்துவைப் பார்த்து, “பாவி, ஷண்டாளா, என்னடா பண்ற…” என்று கோவத்தைக் கக்கியபடி வேகமாய் வந்து படியேறியவர் தன் மனைவி நிலையைக் கண்டவுடன் அதிர்ந்து விட்டார். “அய்யோ…”என்று ஏதோ சொல்ல வந்தவரை, பேச்சியம்மாள், “சும்மா இரு அய்யரே, புள்ள உசுரோட வேணுமா வேண்டாமா?” என்று அதட்டினார்.

மாரிமுத்து குடிசையின் வெளியே நின்று விட்டிருந்தான்.

அதே நேரம் மீண்டும் வலியேறி அய்யரம்மா கதறவும், “அய்யரே, இப்படி தலமாட்ல வந்து உக்காந்து கைய புடிச்சிக்கோ” என்றபடி அய்யரம்மாவைப் பார்த்து, “இங்கியாருமா, என்னயப் பாரு.” என்றார். அய்யரின் கைகளைப் பற்றிய பின் அவள் கவனம் கிட்டவும் தொடர்ந்தார், “புள்ளய பெத்துக்க ஒனக்கு எம்புட்டு கஷ்டம் இருக்கோ அதேயளவு கஷ்டம் ஒம்புள்ளைக்கும் இருக்கு. நீ ஒம்புள்ளய வெளியேத்த துடிக்க மாதிரி தான் உள்ள ஒம்புள்ளயும் வெளியேற துடிக்கி. அதெய்ன் பொறண்டுக்கிட்டே இருக்கு. நீ வலிய பொறுத்துக்கிட்டு கத்தாம இருந்தெய்னாத்தேன் ஒம்புள்ள தல, கீழ வந்து ஒழுங்கா வெளிய வரும். புரியுதா?”

அய்யரம்மா, “அய்யோ வலிக்கறதே மா! நா என்ன பண்ணுவேன்? ஈஷ்வரா…” என்றாள்.

“வலிக்கத்தெய்ன் செய்யும். ஒம்புள்ள செத்து வெளிய வந்தா, அதோட பொணத்த மார்ல போட்டு நீ அழுவியல, அப்ப இன்னு அதிகமா வலிக்கும். அதத்தேன் உன்னியால தாங்க முடியாது. இத தாங்கிக்கலாம். நீ இப்ப தைரியமா இருந்தாத்தேன் உம்புள்ள ஒழுங்கா வெளிய வரும்.” என்று கூறிவிட்டு குருவம்மாளிடம், “ஏத்தா குருவம்மா, அந்த வெளக்கெண்ணைய எடுத்துக் குடுத்துட்டு இப்படி கால் மாட்ல வந்து ஒக்காரு.”

எண்ணையை வயிற்றில் ஊற்றி மெதுவாய் ஒருபக்கமாக மென்மையாய் தேய்க்கத் தொடங்கினார். “தல வலது பக்கமா இருக்குத்தா, புள்ள பொறண்டு கீழ வந்தா துவாரம் பெருசாகும். அப்ப சொல்லு.” என்றபடி தன் வேலையைத் தொடங்கினார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பிள்ளை இடம்மாற, குருவம்மாள், “யாத்தே, தல தெரியுது” என்று கூவினாள்.

“வெரலளவு தெரியுதா?”

“இல்லத்தே.”

“அப்ப செத்த பொறு.” என்றபடி மார்பிலிருந்து அடிவயிற்றுப் புறமாக சிறிது நேரம் தேய்த்துக் கொடுத்தார். அவ்வப்போது அய்யரம்மா வலியால் துடிக்க, அய்யரின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அய்யர் பேச்சியம்மாளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளையின் பிணத்தை மார்பில் போட்டு அழுவதைத் தாங்க இயலாது என்ற சொற்கள் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. தன்னால் பிள்ளையை இழந்த குடும்பம் இன்று தன் பிள்ளையைக் காக்க போராடுவதைக் கண்டு திகைத்தான்.

“ம்ம், இப்ப வெரலளவு தெரியுதுத்தே”

“தெரியுதா, சரி, தயாரா இரு. புள்ள தல வெளிய வந்ததும், தலயோட புடிச்சு வெளிய உருவிடணும், என்ன?” என்றபடி அய்யரம்மாவின் மார்புக் குழியில் இருந்து ஒன்று இரண்டு மூன்று என அளவெடுத்து, மேல் வயிற்றின் குறிப்பிட்ட இடத்தில் தன் இரு கைகளையும் வைத்து ஓரே மூச்சில் ஓரழுத்து அழுத்த, அய்யரம்மா உச்சபட்ச வலியில் அலறினாள். பிள்ளையின் தலை வெளியேறவும், குருவம்மாள் நளினமாய் உருவினாள். குருதியும் பனிக்குட நீரும் சேர்ந்து குருவம்மாளின் முகத்தில் தெறித்த படி வெளியேறிய பிள்ளையின் வீலென்ற அழுகை தாயின் அலறலுடன் சேர்ந்து அறையை நிரப்பியது. குருவம்மாள் பரவசத்தின் உச்சத்தில், “அய்யரே, பொண்ணு. அந்த நீலாண்டி அம்மனே வந்து பொறந்திருக்கா” என்று தன் நிலை மறந்து மொழிந்தாள்.

சிரித்த பேச்சியம்மாள், “பொண்ணு பொறந்தா, பொன்னு சேரும். அய்யரே, வெளிய காத்திரும். புள்ளையவும் பொஞ்சாதியவும் குளிப்பாட்டி கூட்டியாரேன்.” என்று அனுப்பி வைத்தாள்.

பிரம்மை பிடித்தவனாய் தள்ளாடித் தடுமாறி அய்யர் வெளி வருவதைப் பார்த்த மாரிமுத்து, சட்டென்று எழுந்து குறுகி நின்று, “கும்புடுறேஞ்சாமி” என்றான்.

“எ…எப்…எப்படி?”

“புள்ளய காப்பத்தணும்ன்ற பதட்டத்துல குருவம்மா இப்படி பண்ணிட்டா. மன்னிச்சுருங்க சாமி. தீட்டாய்ப் போச்சே, பரிகாரஞ் சொல்லுங்க சாமி, பண்ணிடுறோம்.” என்று கும்பிட்டான்.

“உம்பிள்ளய காப்பாத்த நீ ஊருக்குள்ள வரக்கூடாதுனு சொன்னேன். உம்பிள்ளைய பறி கொடுத்தும், நீயும் உன் ஆத்துக்காரியும் என் பிள்ளைய காப்பாத்திருக்கீங்க. எப்படி?” என்று அய்யர் வினவ, “மேல வீடோ கீழ வீடோ, மாடோ மனுசனோ, எங்க பொறந்தா என்ன சாமி? உசுரு, உசுருதானுங்களே!” என்றான்.

இதைக் கேட்டதும் கண்கள் அகல மாரிமுத்துவைப் பார்த்த அய்யர், “ஏதோ உயர் குலத்துல பிறந்ததனால நாங்கள்லாம் பெரியவானும் மத்தவா நீங்க எல்லாம் தாழ்ந்தவானும் நினைச்சுண்டு இருந்தேன். ஆனா, உன் வம்சத்த அழிச்ச எனக்கு, என்னோட வம்சத்த காப்பாதிக் குடுத்துருக்கியே, உண்மையிலயே நீ தான் மாரிமுத்து பெரியவா” என்றான்.

இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக அய்யர் தன்னை பெயர் சொல்லி அழைத்ததைக் கண்டு பிரமித்து நின்ற மாரிமுத்து, என்ன சொல்வதென்று தெரியாமல் கை கூப்பி, “கும்புடுறேஞ்சாமி” என்றான்.

அய்யர், குவிந்த அவன் கைகைப் பற்றிக் கொண்டு, அவன் கும்பிடுவிற்கு மறுப்பு தெரிவிப்பதாய் தலையசைத்து, பணிந்து தொடர்ந்தான், “நீயில்ல, நான்…கும்புடுறேஞ்சாமி.”

கலங்கிய கண்களுடன் மாரிமுத்து அய்யரைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

குறள்:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும்இரக்கம் கொண்டு வாழ்பவரேஅறவோர்; அவரே அந்தணர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக