வெள்ளி, 2 நவம்பர், 2018

31. நேர்மை

நேர்மை



போக்குவரத்து சமிக்ஞைகள் சிவப்பு விளக்கை ஒளிரவிட எதிரே வந்த வண்டிகள் அனைத்தும் நின்றது. இடையில் நின்றிருந்த போக்குவரத்து காவலர், No Parking-ல் வாகனத்தை நிறுத்திய சிலரை விசாரிக்கச்  செல்ல சிக்னலில் நின்றிருந்த ஒரு வண்டி நகர முற்பட அருகில் நின்றிருந்த அர்ஜுன் தடுத்து நிறுத்தினான்.

“சார், Green சிக்னல் விழாம ஏன் போறிங்க, போலிஸ் இல்லன்னதும் போறீங்களே தப்பில்லையா?”

“அடப்போய்யா அவனவனுக்கு ஆயிரம் வேலை கிடக்கு, அந்தாளு வந்தா கூட பணம் குடுத்து சமாளிச்சுக்குறேன் நீ போயா…”

“யாருக்குத்தான் வேலையில்லை, இங்க இருக்க எல்லாருக்கும் எதாவது ஒரு அவசரம் தான். அதுக்காக எல்லாரும் சட்டத்தை மீறலாமா? ஊருக்காக இல்லாட்டியும் உங்களுக்காகவாவது நேர்மையா இருங்க சார்”

“என்னய்யா நீ லூசுத்தனமா லெக்சர் அடிக்கிற, பணம் குடுக்கறது நான், வாங்குறது அந்தாளு இதுல நீ ஏன் வற்ர”

“சார், நீங்க தப்பா நெனச்சுட்டு இருக்கீங்க, அவர எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவர் நேர்மையான போலிஸ் அதிகாரி, நீங்க நினைக்கறமாதிரி இல்ல. ரொம்ப நல்லவர்.”

இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட அதற்குள் சமிக்ஞைகளில் பச்சை விளக்கு ஒளிர, வண்டிகள் நகர ஆரம்பித்தது. அர்ஜுன் அவருடனான வாக்குவாதத்தில் வாகனத்தை தன்பிடியிலிருந்து தப்பவிட, அந்நேரம் காவலர் எதிரே வர, தவறுதலாக அவர்மீது மோதி கீழே விழுந்தார். கோபத்தில் எழுந்த அவர், அவன் கன்னத்தில் பளார் என அறை விட்டார் .

அத்துடன் அக்காட்சி முடிந்து “எ ஃபிலிம் பை அர்ஜுன்” என்ற வாசகம் வந்தது.

“அர்ஜுன், வாட் இஸ் திஸ்? படம் பாதிலயே நிக்கிறமாதிரி இருக்கு..” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சந்தானம்.

“ஆமா சார்..”

“வாட்? ஷார்ட் பிலிம் தான் அதுக்குன்னு இப்படியா?”

“இல்ல சார் ஒரு கேள்வியோ படத்த முடிக்கலாம்னு தான்…”

“என்ன கேள்வி?”

“சார் இதுல பார்த்தீங்கன்னா அந்த அர்ஜுன், அப்பறம் அந்த போலிஸ் ஆஃபிசர் ரெண்டு பேருமே நேர்மையானவங்க ,  அறவழில நடக்குறவங்க, ஆனா இப்ப அவர் அர்ஜுன அடிச்சிட்டாரு, இப்ப அவன் அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும் மன்னிப்பு கேக்கனுமா? இல்ல அடிச்சது தவறுன்னு வாதிடனுமா?”

“மன்னிப்பு தான் கேக்கனும்…”

“எப்படி சார்? அது வேணும்னே வந்து அவர் மேல வண்டிய விடலயே, தவறுதலா நடந்தது தானே ?”

“தவறுதலா நடந்தாலும் தப்பு தப்புதானே? அப்ப மன்னிப்பு கேக்குறதுதானே நியாயம்?…”

“சரி சார். அவன் பண்ணது தப்பாவே இருக்கட்டும். ஆனா, போலிஸ்னா அடிக்கலாமா? அத ஏன் இவன் எதிர்த்து கேக்ககூடாது?”

“தப்புக்கு தண்டனையா அடி கிடைச்சிருச்சு. இதுக்கப்பறம் இவன் வாதிட்டா அதான் பெரிய தப்பு. மன்னிப்பு கேட்டு இத இங்கயே முடிச்சிட்டு போறதுதான் சரி…”

“அது எப்படி தண்டனையாகும்? போலிஸ்னா யார வேணா அடிக்கலாமா? கண்டிச்சா ஓகே, அடிக்கிறது எந்த வகைல சேரும்?”

“அது கோபத்தில் நடந்தது…”

“அவருக்கு மட்டுந்தான் கோபம் வருமா? இவருக்கு வரதா? அப்ப பதவியில் இருக்கவர் கோபத்தை காட்டலாம் சாதாரண மனிதன் காட்டக்கூடாதா?”

“அப்படியில்ல இவன் பண்ணது தவறுதானே?, பின்ன மன்னிப்பு கேக்குறது தான் நேர்மை.”

“சரி சார் அவன் மன்னிப்பு கேக்குறான்னு வெச்சுக்குவோம். ஆனா, அதை மன்னிக்கிறது யாரு? கோர்ட்டா இல்ல போலிஸா? இவர் எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்?”

“போலிஸ் தான் அவர் மேல தானே மோதுனான் நல்ல போலிஸா இருந்தா பொழைச்சு போன்னு விட்ருவாங்க… கோர்ட்டுக்கு இழுக்காம”

“அதெப்படி சார் நேர்மையாகும், கேஸ் ஃபைல் பண்ணி கோர்ட்ல நிறுத்தறதுதானே அவரோட கடமை, கடமை தவறியது எப்படி நேர்மையாகும்…”

” ஐயோ அர்ஜுன் இப்படி விதண்டாவாதம் பண்ணிட்டே போனா இதுக்கு பதிலே கிடைக்காது…”

“இல்ல சார் எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சாகனும் அதை இந்த படத்தை பாக்குற பார்வையாளர்கள்  கிட்டையே விட்டுடுறேன் அவங்களை யோசிக்க வெக்கனும் இந்த படம்.”

அப்பொழுது இங்கே எது நேர்மை ?

சாலை விதிகள், சட்டதிட்டங்கள் என அனைத்தையும் மதித்து நடப்பவன், மனதால் நேர்மையாய் வாழும் ஒருவன் தவறுதலாக செய்த தவறுக்கு…

1. அடியையும் வாங்கிக்கொண்டு மன்னிப்பு கேட்பதா?

2. எதிர்பாராமல் நடந்த தவறுக்கு எதற்காக அடி வாங்க வேண்டும் என்று வாதிடுவதா?

லஞ்சம் வாங்காமல் பிறரை துன்புறுத்தாமல் மனதால் நேர்மைக்கொண்டு, சட்டப்படி தன் கடமையை செய்யும் ஒருவர்…

1. கோபத்தின் பிடியில் சிக்கி அவனை அடித்தது சரியா?

2. தவறு செய்தவனை  நீதிமன்றத்தில்  நிறுத்துவதே இவரது கடமை இதில் மன்னிக்கவோ தண்டிக்கவோ இவர் யார்?

இருவரும் தத்தம் வழியில் நேர்மை தவறாது அறவழியில் வாழ்ந்து வந்தவர்கள்தாம். இருப்பினும், ஒரு சிறு செயல் அவர்களை பதம் பார்த்துவிட்டது. ஆயினும் பலநேரங்களில் சூழ்நிலை காரணமாக பலவற்றுக்களில் நேர்மையான நடைமுறைக்கான சாத்தியக்கூறுகள்  இக்காலங்களில் இல்லை எனத் தோன்றினாலும், அறவழியில் சென்று மனதால் நேர்மையுடன் வாழ்பவர்கள் என்றும் மங்காத செல்வமாய் பேரும் புகழுடன் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.


– திருவள்ளுவர்



பொருள்:

அறத்தின்பால் ஈடுபாடு கொண்டு மனதால் நேர்மையாய் செயல்படுபவர்களுக்குத் தான் செல்வமும் சிறப்பும் வந்து சேரும்.


– கவித்தமிழச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக