வெள்ளி, 2 நவம்பர், 2018

29. தண்டனை


தண்டனை



அவர்முன்தான் நின்றுகொண்டு இருந்தேன். கடைசி ஒருவாரமாக இது நிகழுமா என்ற குழப்பத்திலும், கடைசி இரண்டு நாட்களாக இது நிகழக்கூடாது என்ற உறுதியிலும் இருந்த ஒன்று நிகழ்ந்துகொண்டு இருந்தது.



எவர் பார்வையில் பட்டுவிடக்கூடாதென்று இரண்டு நாட்களாக கல்லூரி வளாகத்தில் கண்கொத்திப்பாம்பாய்ச் சுற்றி திரிந்தேனோ அவரது பார்வை முழுவதுமாய் என்மீது பதிந்து கொண்டுருந்தது.



“காலேஜ் பர்ஸ்ட் செமஸ்டரே முடியல; அதுக்குள்ள இவ்ளோ திமிரா!”



அவரது குரல் என் படபடப்பை எத்தனை மடங்கு உயர்த்தியது என்று தெரியவில்லை. ஆனால், உச்சியில் நிறுத்திவிட்டது. கால்களின் நடுக்கத்தை மறைக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது எனக்கு.



உண்மையில் நான் மிகவும் பயந்த குணமுடைவன். பள்ளி, கல்லூரியான போதும்; ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆன போதும்; அவர்கள் மீது கொண்ட பயம் மாறவில்லை எனக்கு.



முதல்பருவ கல்லூரி நாட்களின் இறுதிநாள். தேர்விற்குமுன் படிப்பதற்கெனவிடும் விடுமுறையை வரவேற்கும் மகிழ்ச்சி மிதப்பில் இருந்தோம் நானும், என் நண்பனும். அன்று கல்லூரி முடிந்தபின், கரும்பலகை துடைப்பானை தூக்கிக்கொண்டு, அவனை துரத்தியபடியே  அவன்மீது எறிந்த துடைப்பான் ‘அவரது’ கன்னத்தை உராய்ந்து சென்றது.



அவரது கன்னத்தை தடவிய துடைப்பானின் மூலை மட்டும் கூராக இருந்திருக்க வேண்டும். கீறல் பிறந்துவிட்டது. ஆழமானது இல்லை என்றாலும் நீளமானது.



அவசரமாக சென்றுகொண்டு இருந்தவர், நிகழ்ந்ததைப் புரிந்து நிற்க சிலநொடிகள் ஆனது. கீறிய கன்னத்தைக் கையால் மறைத்துக்கொண்டு, “டேய்…. படிக்க வந்தீங்களா? விளையாட வந்தீங்களா? அ!” என்றபடி முன்வர,



அவரது சத்தம் கேட்டு எங்களுது ‘சீனியர்’ அண்ணன் வந்து, “டேய்! என்னடா பண்ணீங்க?” என்று எங்களைக் கேட்டதும் அவர் தன்னிலை உணரத்தொடங்கினார்.



“டேய்! இவனுங்க சீனியர் தானே நீ. இவனுங்களைக் கொஞ்சம் எங்கயும் போகாம பார்த்துக்க; நான் ஆபிஸ் ரூம் வரை போயிட்டு வந்துடுறேன்” என்றுகூறி பழைய வேகத்தில், கைக்குட்டையால் கன்னத்தைத் துடைத்தபடி சென்றார்.



சென்றவர் திரும்பி வருவதற்குள், எங்கள் ‘சீனியர்’ அண்ணனைச் சமாளித்து அங்கிருந்து நகர்வதற்குப் பெரும்பாடு ஆகிவிட்டது.



விடுமுறை நாட்களின் இறுதி இரண்டு நாட்கள், தேர்வு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கென ஒதுக்கப்பட்டுருந்தது. எங்களுக்குப் பாடம் எடுத்த அனைத்து பேராசிரியர்களிடம் கையெழுத்து பெறவேண்டி இருந்தது; நான் கீறல் இட்டவரிடமும். அவர்தான் எங்களுக்கு தமிழ் பேராசிரியர்.



இரண்டு நாட்களாக அவரிடம் செல்லாமலும் அவர் கண்ணில் படாமலும் சுற்றிக்கொண்டு இருந்தேன். அவரிடம் சென்று வந்த என் நண்பர்களும், “மச்சா! அவர் கண்ணுல மட்டும் மாட்டிடாத செம்ம காண்டுல இருக்கார் உன்மேல” என்று என் பயத்திற்கு என்னைத் தீனியாக்க துணிந்தனர்.



அவர் என்மீது கொண்ட கோவத்தை நான் வேறு வேறு சொற்களில் கேட்க தொடங்கினேன். செய்வதறியாது கல்லூரி உணவகத்தில் அமர்ந்து இருந்தேன்.



அவரின் பார்வை என்னை எரித்துக்கொண்டு இருந்தது. பிற பேராசிரியர்களிடம் கையொப்பம் வாங்கிய – அவரிடம் வாங்க வேண்டிய – எனது நுழைவுச்சீட்டிற்கான தாள் அவரது மேசையின் மீது இருந்தது.



“எல்லார்க்கிட்டையும் கையெழுத்து வாங்கிட்டு என்கிட்ட மட்டும் வாங்காம சுத்திட்டு இருக்கன்னா என்ன அர்த்தம்? இவன்கிட்ட எதுக்கு நடந்துகிட்டு, தேர்வன்னைக்கு ஆபிஸ் ரூம் போனா ஹால் டிக்கட் தந்துட போறானுங்கன்னு தானே!”



அவர் என் மனதைப் படித்து விட்டதில் எனக்குப் பேரதிர்ச்சி. 10 நிமிடத்திற்கு முன்வரைகூட, கல்லூரி உணவகத்தில் அமர்ந்து இதைத்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.



“டேய்!” என்ற குரல் கேட்டுத் திரும்பவே அவரை கண்டேன்; நான் காணக்கூடாதவரை, என்னை காணக்கூடாதவரை.



“ஸ்டாப் ரூம் வா” என்று கோவமாக கூறிவிட்டு நகர்ந்தார்.



நான் தயங்கியபடி, பயந்தபடி, நடுங்கியபடி சென்றேன், அவர்முன்.



“சொல்லு அதானே காரணம்”



“இல்லைய்யா”



“பின்ன! வேறென்ன? திமிரைத்தவிர வேற என்ன காரணமா இருந்திட போகுது”



அன்று நடந்ததை மனதில் கொண்டு தான் இத்தனை கோவமாக பேசுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது கன்னத்தில் நான் வீசிய கீறல் கருப்புக்கோடாய் மாறி இருந்தது.



பயம் அதிகரிக்க, “மன்னிச்சிடுங்கய்யா” என்றேன்; எரிப்பதுபோல் பார்த்தார்.



“அன்னைக்கு வேணும்னு பண்ணலய்யா. என் ப்ரெண்டு மேல தான் எறிஞ்சேன்; உங்கமேல பட்டுடிச்சு”



“ஆமால்ல! இந்த கணக்கு வேற இருக்குல்ல. தேர்வு நியாபகத்துல இதை மறந்துட்டேன் பாரு” என்று அவர் கூறவும், தேவையற்ற ஒன்றை நானே திணித்துக்கொண்டது போல் தோன்றியது. சத்தமிட்டு தனக்கான சாவை அழைக்கும் தவளையாய் என்னைக் கருதத்தொடங்கினேன்.



அவர் பேச்சை தொடர்ந்தார், “உன்னை நான் அன்னைக்கு அங்கேயே தானே நிக்க சொன்னேன்! எங்க போன? அ!. அன்னைக்கு அப்படி திமிருல போகவும் தான், இன்னைக்குவர அதே திமிருல சுத்திட்டு இருக்கல்ல”



“திமிருலாம் இல்லய்யா”



“பின்ன?”



“நீங்க திட்டுவீங்கன்னு பயந்துதான்ய்யா அன்னைக்கு போயிட்டேன். கையெழுத்து வாங்க கூட பயந்துட்டு தான் வராம இருந்தேன்”



“இதை நான் நம்பணுமா?”



“உண்மையாதான்ய்யா” என்றேன் தழுதழுத்த குரலில்.



அவர் அதை உணர்ந்திருக்க வேண்டும். பயத்தில் துடிக்கும் என் உதடுகளையும், படபடக்கும் விரல்களையும், நடுங்கும் உடலையும் உற்றுகவனிக்க தொடங்கினார்.



“டேய்! நிஜமா அதுக்கா இவ்ளோ பயப்படுற?”



ஆமாம் என்பது போல தலையசைத்தேன். அவர் புன்னகைக்க தொடங்கினார்.



“அடப்பாவி! காலேஜ் வந்துட்ட இன்னும் ஸ்கூல் பிள்ளை போல பயந்துட்டு இருக்க. அன்னைக்கு வேணும்னா என்மேல டஸ்டரை எறிஞ்ச?”



“இல்லைங்கய்யா. தெரியாம…”



“அப்படின்னா அதை நான் அன்னைக்கே மறந்துட்டேன்னு பொருள். இதுக்குலாம் ரொம்ப பயப்பட கூடாது; சரியா!”



மெல்ல தலையசைத்தேன்.



“சரியா போச்சு போ. காலேஜ் வந்துட்ட, ஆனா இன்னும் அதுக்கேத்தபடி நடக்க பழகல; பழகிக்க” என்றபடி எனது தாளில் கையெழுத்திட சென்றார்.



போரிற்கு பின்னான பெருநிம்மதியை உணரத்தொடங்கினேன்.



சட்டென கையெழுத்திடாமல் எழுதுகோலைத் தாளின் மீது வைத்துவிட்டு என்னைப் பார்க்க தொடங்கினார். நான் புரியாமல் நின்றேன்.



“அன்னைக்கு நடந்த தப்பை மன்னிச்சிட்டேன். ஏன்னா, அதை நீ தெரியாம செஞ்சதால. ஆனா, இந்த ரெண்டு நாளா நீ பண்ணின தப்பு தெரியாம செஞ்சது இல்லை. இந்த தப்பை இப்ப சும்மா விட்டா இது இன்னொரு தப்புக்கு இடம் கொடுக்கும். அதனால இந்த தப்புக்கு மட்டும் தண்டனை கொடுக்குறேன். சரியா?”



சரி என்று தலையசைத்தேன்.



“நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன், அதுக்கு நீ பதில் சொல்லிட்டா நான் இதுல கையெழுத்து போட்டு குடுத்துடுறேன். இல்லன்னா நீ சாயந்திரம் வரை இங்கயே இப்படியே நிக்கணும்” என்றவர் எனக்கான கேள்வியை யோசிக்க தொடங்கினார்.



அவர் என்னை மன்னித்துவிட்டார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனக்கு அதில் பெருமகிழ்ச்சி. மறுபுறம் இத்தனை குறுகிய நேரத்தில் என்னிலை உணர்ந்து என் தவறை மன்னித்ததை எண்ணி வியப்படைந்தேன். இவரையா வேண்டாம் என்று தவிர்த்தேன் என்று என்னை நானே திட்டிக்கொண்டேன்.



அதற்குள் அவர் எனக்கான கேள்வியைத் தேர்வு செய்துவிட்டார். என்னைப் பார்த்தவர்,



“சரி.. கேள்வி இதான். ஒரு குறள்; அதோட விளக்கம்; ரெண்டும் சொல்லணும். சொல்லுற குறள் பிரபலமான குறளா இருக்க கூடாது சொல்லிட்டேன்”



“எல்லா குறளுமே பிரபலம் தானேய்யா!”



அவர் சிரித்தார்.



“அப்படி இல்லை. குறள்னு கேட்டதும் ஒரு பத்து பதினைஞ்சி குறள் நியாபகம் வரும்ல! அதுல இல்லாத குறளை சொல்லணும். சொல்லு”



நான் குறளைத் தேட தொடங்கினேன்.  நினைவாற்றலின் ஒவ்வொரு மூலைக்கும் வேலை கொடுக்கத் தொடங்கினேன். கிடைத்தது ஒரு குறள்; அவரது கேள்விக்கான விடையாகவும், எனது வியப்பிற்கான விடையாகவும் அது அமைந்ததில் எனக்கு மீண்டும் மீண்டும் பெருமகிழ்ச்சி.



‘குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது’



-முற்றும்-



-ஊதா மூங்கில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக