வெள்ளி, 2 நவம்பர், 2018

35. குறைகுடம்


குறை குடம்


விடிந்தும் விடியாததற்கு முன்பே சமையல்கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தம் காலை சோம்பலைக் கலைத்துக் கொண்டிருந்தது. போர்வையை இழுத்து தலையோடு மூழ்கி, சத்தத்தில் இருந்தும், காலை பனியின் குளிரிலிருந்தும் தப்பி ஓடி தூக்கத்தைத் தொடர்ந்தேன். போர்வையினுள் இருந்த இதமான வெப்பம் எழவிடாமல் ஒரு சுகத்தினைத் தந்துகொண்டிருந்தது. பள்ளி ப்ரேயரில் என் வகுப்பின் சார்பில் நான் தான் குறள் சொல்லவேண்டும் என்ற பயமும் எந்த குறளைச் சொல்வது என்ற எண்ணமும் தூக்கத்தை தடுக்க...

“யக்கா வருச வரப்போகுது வாக்கோவ்” என்று ஆண்டாள் அம்மாச்சியின் சத்தம் எங்கள் வீட்டினுள் விழுந்து காற்றில் அவள் பின்னாளே சென்றது. அந்த சத்தத்தை துரத்திக்கொண்டே, என் அம்மாச்சியின் சத்தம் பின்னாலே ஓடியது.

“இந்த ரசத்த எறக்கிட்டு வந்தறேன்... என் வரிசைக்கும் சேத்து பிடிடி” என்று மண்வீட்டின் தாழ்வாரத்தின்வழி பதிலை தந்துவிட்டு...

“டேய் ராசு, புளிமூட்ட மாதிரி தூங்குறியே... அந்த தண்ணிய கொஞ்சம் பிடிச்சாந்தா என்ன?” என்று போர்வைக்குள் ஒளிந்திருந்த என்னைத் திட்டத் தொடங்கினாள் என் அம்மாயி.

நன்றாக காதில் விழுந்தது. இருந்தும் போர்வைக்குள் இருந்த இதத்தில் இருந்து வெளியேவர மனமில்லை.

"என்ன மட்டும் என்ன இரும்புலயா செஞ்சு வச்சுருக்கு, அந்த தண்ணிய பிடிச்சாந்தா கொறஞ்சா போய்டுவ” என்று மீண்டும் கத்தினாள்.

“அம்மாயி நேத்துதான அத்தின கொடம் பிடிச்சேன்?“

“உன்னால போக முடிலேனா, செத்த பேசாம தூங்குப்பா மவராசனா இருப்ப, எனக்குனு வந்து சேந்துருக்கு பாரு கொலவாறி” என்று அவளது காலை பாட்டைத் தொடங்க, கோபமாக விடிந்தது காலை. மிகவும் கடுப்பாக போர்வையை தூக்கி எறிந்துவிட்டு வரிசை தண்ணியை நோக்கி, வாய் கொப்பளித்துக்கொண்டே நடந்தேன்.

நான் எழுந்து நடக்கத் தொடங்க வீட்டு வாசலருகே பூவும் பொட்டுமின்றி ஊதாங்கோலில், வெந்நீர் வைத்துக்கொண்டிருந்த அம்மாவின் கண்ணில் கண்ணீர் தெரிய, அதற்கு அடுப்பு புகையைக் காரணம் காட்டி பார்வையை நழுவிக்கொண்டிருந்தாள் என்னிடமிருந்து.

நான் தலையெடுக்கும்வரை இதுதான் வாழ்க்கையென என் அம்மா சொன்னது ஞாபகத்திற்குவர மனதினுள் இருந்த ஆயிரம் காயத்தினுள் இதையும் பூட்டி வைத்துக்கொண்டு ஆண்டாள் அம்மாச்சியின் பின்னால் சென்று நின்றேன்.

ஆண்டாள் அம்மாச்சிக்கு முன்னால் ராசாத்தி அக்காவும், அவளுக்கு முன்னால் பூங்கொடி அக்காவும் நின்று கொண்டிருந்தனர். ஒரு வரிசைக்கு ஒரு ஆளுக்கு மூன்று கொடம்தான் கணக்கு. ஒரு மணி நேரம் வருகிற தண்ணியில் இரண்டு வரிசையென வீட்டுக்கு ஆறுகுடம் பிடித்துவிடலாம். தெருவில் எந்நேரமும் தண்ணி வரும் உப்பு தண்ணி பைப் இருந்ததால் ஒரு நாளைக்கு ஆறு கொடம் நல்ல தண்ணி என்பது அளவுக்கு அதிகமானதுதான்.
என் அம்மாச்சிக்கெல்லாம் தினமும் பிடித்து வைத்த தண்ணியை அடுத்த நாள் காலையில் எடுத்து கீழே ஊத்திவிட்டு போனியை கழுவி மீண்டும் இன்றைய தண்ணியை பிடித்து வைத்தால்தான் மனதாறும்.    

அன்று பூங்கொடி அக்கா வீட்டில் அவனது மகனுக்கு புண்ணியதானம் செய்து பெயர் சூட்டும் விழா.

“ஆண்டாளத்த வீட்ல விசேசமிருக்கு ஒரு கொடம் சேத்து பிடிச்சுக்கிட்டா” என்றாள் சாடையாக பின்னால் நின்ற பஜாரி ராசாத்தியக்காவிடம் அனுமதி வாங்குவதற்காக.

"சரித்தா பிடிச்சுக்கோ, நம்மூட்டு விசேசத்துக்குத்தான” என்றாள் புள்ளபூச்சி ஆண்டாள் அம்மாயி. பூங்கொடி ராசாத்தி முகத்தை ஒருமுறை பார்த்துக்கொள்ள அந்த நான்காவது கொடம் நிரம்பும் வரை சிடுசிடுவென நின்றாள் ராசாத்தி.

பூங்கொடியக்கா பிடித்துவிட்டு நகர ராசாத்தி அவளது முதல் கொடத்தை பைப்பில் வைத்துவிட்டு அந்த குடம் நிரம்புவதற்குள் வேகவேகமாக ஓடி வீட்டிற்குள் இருந்த இன்னொரு மூனு கொடத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவளது திட்டம் தெரிந்துவிட்டது. இன்று யாராவது சடையை பிடித்து இழுக்க முடிவெடுத்துவிட்டாள். பூங்கொடிக்கு ஒரு குடம் அதிகமாக கொடுத்தது அவளுக்குப் பொறுக்கவில்லைபோல. ஆண்டாள் அம்மாச்சி எதுவும் அவளிடம் கேட்காது என்று எனக்கு நன்றாக தெரியும். என் வரிசைக்குப் பின்னால் பிடிக்கவேண்டிய செல்வி அக்காவையும் காணவில்லை.

மூன்று குடம் பிடிக்கும்வரை அமைதியாக இருக்க மூன்றாவது குடம் நிரம்பும் நேரத்தில் என் அம்மாயி வந்துவிட்டாள். இன்று கச்சேரி இருக்கு என்று என் உள்மனது சொல்லிவிட்டது. என் அம்மாயி வாயை திறந்தால், எடக்கு முடக்காக ஏதாவது கேட்டுவிடுவாள். அவள் நாலாவது கொடத்தை பைப்பில் வைக்க இது நாலாவது குடம் என என் அம்மாயிக்கு ஆண்டாள் அம்மாயி தகவல் சொல்வதற்கு முன் நான் முந்திக்கொண்டேன்.   

“யக்கா, மூனு கொடம் ஆச்சுக்கா”

“எனக்கும் வீட்ல விசேசம் வேலையெல்லாம் கெடக்கு, அடுத்த வரிசை தண்ணியே இப்பவே பிடிச்சுக்குறேன்”

“யக்கா எங்களுக்கெல்லாம் வேலையில்லையா, இப்டி சண்டைக்குப் பண்ணாதக்கா” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பு என் அம்மாயி காதில் குசுகுசுத்துவிட்டாள் ஆண்டாள் அம்மாச்சி.

“முண்டா பய மவனுக்கு பேச்ச பாறேன், ஓசி சோறு திங்கிறவனுக்கு ரோசம் வருதாம்” என்று ராசாத்தியக்கா வார்த்தையைத் தவறவிட.

“எடு வெளக்கமாத்த எடுபட்ட சிரிக்கி, எவன பாத்து முண்டா பயங்கிற, உன் புருசன் சம்பாரிச்சு போட்டு திங்குறானாடி பீத்த சிரிக்கி” என்று சாக்கடை இரண்டும் திறக்க, நேற்று செல்விக்கும் ராசாத்திக்கும் நடந்த சண்டை தூக்கத்தைக் கலைத்து ஓடிவந்து நான் வேடிக்கை பார்த்ததுபோல இன்று செல்வியக்கா பையன் செந்திலோடு சேர்ந்து மொத்த தெருவும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

ராசாத்தியக்கா பைப்பில் வைத்த நான்காவது குடம் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சண்டைக்கு நடுவில் இன்று ப்ரேயரில் சொல்லவேண்டிய குறளை முடிவெடுத்துவிட்டேன்.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல்நான்கும்

இழுக்கா இயன்ற தறம்


கலைஞர் உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம்,புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும்அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்

- திலிப் திராவிட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக