வியாழன், 31 ஜனவரி, 2019

நட்பு - குறள் கதை (106)

நட்பு



"அப்பா..." என அழைத்தபடி வந்த தன் மகன் இளமாறனை எப்போதும் போலவே பெருமிதத்துடன் பார்த்தார் சங்கரலிங்கம். 

“அப்பா, நான், வினோத், ரகு, கவின் எல்லாரும் சேர்ந்து சிம்லா போலாம்னு இருக்கோம்ப்பா, என் பர்த்டே பார்ட்டிக்குனு போறதுனால எல்லா செலவையும் என் தலையில கட்டிட்டானுங்க, கொஞ்சம் செலவாகும். கணக்கு பார்க்காம தாங்க.” என்ற இளமாறனுக்குப் பதில் பின்னாலிருந்து வந்தது. 

“அதெல்லாம் ஒன்னும் போக வேணாம். நீ போய் கடைசி ஆண்டு படிப்ப ஒழுங்கா முடிச்சிட்டு அப்பா கூட ஆபிஸ்க்குப் போற வழியப் பாரு.“ என்றாள் இளமாறனின் அம்மா சகுந்தலா சிடுசிடுப்புடன்.

இளமாறன் அப்பாவை முறைக்க, தினமும் நடக்கும் கதையாதலால் சிரித்தபடி தன் மனைவியிடம் சங்கரலிங்கம், "விடு சக்கு. எல்லாம் கொஞ்ச நாள் தானே. ஆபிஸ் வந்துட்டா அவனுக்கு எங்க நேரம் கிடைக்கும்? விடு பெருசாக்காத.” எனக் கூறிவிட்டு அலுவலகம் கிளம்ப தன்னறைக்குச் சென்றார்.

சகுந்தலா இளமாறனிடம், “சரி, சரி... எப்போடா போற? எதும் எடுத்து வைக்கவா?” என்றார் இம்முறை அன்புடன். 

"இல்லம்மா; வினோத் இன்னும் ஒன்னும் சொல்லல, சொல்லட்டும்; அப்பறமா தான் முடிவு பண்ணனும். ஆனா எப்படியும் இன்னிக்குத் தெரிஞ்சுடும். சொல்றேன்.” என்று சொன்ன இளமாறன், ரகு வந்தழைக்க அவனோடு கிளம்பினான். போகும் வழியில் வினோத்தும் வர அவனைப் பார்த்து, “ஏன்டா வினோத். அப்பா கிட்ட பேசினியா? எல்லாம் ஓகேவா?” என்றான் இளா.

வினோத், “எங்கடா, வேறுபாடு பார்க்காம சின்ன வயசுலேருந்து நீ பழகுறதால மட்டும் தான் என்னை உன் கூட பேசல்லாம் விட்ருக்காங்கடா, இல்லனா எங்க அப்பாவுக்குத் தான் பணம்னாலே அலர்ஜியாச்சே! உனக்கே தெரியுமே.” என்றான்.

இளாவும் அவன் சொன்னதை ஒத்துக்கொண்டபடி, “ ஆமாடா சின்ன வயசுலயே உங்க அப்பா இப்படி சொல்லிக் கேட்டிருக்கேன்.. ஆனா ஏன்டா இப்படி?” எனக் கேட்டான். 

"எல்லாம் சில பணம் இருக்கிறவங்க பண்ற ஆடம்பரத்தால வந்த வெறுப்புடா, அதுல உண்மையும் இருக்கறதுனால நானும் அப்பா சொல்லுக்கு மறுப்பு சொல்றது கிடையாது” என்ற வினோத்தைப் பார்த்து, 

“டேய், உங்க பஞ்சாயத்தை அப்பறமா வச்சுக்கோங்க. காலேஜுக்கு  மணி ஆச்சு.“ என்றான் ரகு.  

"சரி கிளம்பு, இல்லைனா உன் ஆளு, அஞ்சலி உன்னத் தோப்புக்கரணம் போடவச்சுருவால்ல?“ என கலாய்த்தபடியே கல்லூரிக்குக் கிளம்பினர் மூவரும்..
----
மனைவியிடம் சொல்லி விட்டுக் கிளம்பிய சங்கரலிங்கம், போகும் வழியில் எதிர்பாராத விதமாக தன் பழைய நண்பன் மணிவண்ணனைக் கண்டார். தான் தனியாக நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக வேலையில் இருந்த போது நட்பான மணிவண்ணனை திடீரெனக் கண்டும், காணாதது போல நடந்து சென்றார் சங்கரலிங்கம். மணிவண்ணன் தன்னைத் தவிர்க்கும் சங்கரலிங்கத்தைப் பார்த்து ஒரு புன்னகை தோய்ந்த பார்வையை வீசிவிட்டு, தன் அலுவலகம் நோக்கி நடையைக் கட்டினார். 

தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய தன் அலுவலகத்திற்குள் எப்போதும் பெருமித்தோடே நுழையும் சங்கரலிங்கத்திற்கு இன்று ஏனோ மனதில் சற்று உறுத்தல்..! அவரது நம்பிக்கைக்குரிய நீண்ட கால மேலாளரான மனோகரன் உள்ளே வந்ததுமே ‘முதலாளிக்கு என்ன ஆயிற்று?' என எண்ணிக்கொண்டு, “ஐயா. ஏதும் சிக்கலா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றார்.

சங்கரலிங்கம், “ ஆமா, மனோகரா, வர்றப்ப மணியப் பார்த்தேன். அப்போ எப்படி அமைதியா மகிழ்ச்சியா இருந்தானோ, அதே மாதிரியே இன்னிக்கும் இருக்கான். என்னால ஏன் அது போல இப்போவெல்லாம் இருக்க முடியிறதில்லன்னு யோசிச்சிட்டு இருந்தேன், வேற ஒன்னுமில்லை" 

"அது ஒன்னுமில்லை சார், அவரு நம்மல போல வசதி வாய்ப்பு வேணும். அது வேணும். 
இது வேணும்னு யோசிக்காம, இருக்கிறதுலயே மனநிறைவு அடைஞ்சுக்குவாரு, ஒருவொருத்தர் ஒருவொரு மாதிரி." என்றார் மனோகரன்.

“ஆமாப்பா நீ சொல்றதும் சரி தான். இளமையில வசதி வசதின்னு தேடி ஓடிட்டு வயசானதுக்கு அப்பறம் நிம்மதியைத் தேடி ஓடுறோம்.மணி மாதிரி இருக்கறவங்க ரொம்ப குறைஞ்சிப் போய்ட்டாங்க.” 

"சரி சார், நமக்கு மீட்டிங்க்கு டைம் ஆச்சு கிளம்புவோமா?" என்றார் மனோகரன். சங்கரலிங்கமும் தனது தினசரி வேலைகளில் மூழ்கினார்.
----
வழக்கம் போல நேரம் மாறாது வீடு வந்துவிட்ட கணவனைக் கவனித்தபடி, இரவு உணவிற்கு என்ன செய்யவேண்டும் என்று சமையல்காரம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சகுந்தலா. காலையில் இளா பணத்திற்குக் கேட்டதை நினைவுக்கு வர, "சக்கு, இளா வந்துட்டானா? பணத்தைப் பத்தி ஏதும் சொன்னானா?” என்றார்.

“இல்லங்க, வினோத் வர்றது இன்னும் முடிவாகலயாம். கேட்டுட்டுச் சொல்றேன்னு சொன்னான். எனக்கென்னமோ, வினோத் இவன்கிட்ட பணத்துக்கு அடி போட்றது மாதிரிதான் தெரியுது.” என்றார் சகுந்தலா, எப்போதும் போல குத்தலாய்.

“அப்படில்லாம் ஏதும் இருக்காதும்மா, மணியப் பத்திதான் உனக்கே தெரியுமே.” என்றார் சற்று அழுத்தமான குரலில். 

“அதான உண்மையச் சொன்னா எப்போ தான் ஏத்துக்கிட்டு இருந்திருக்கீங்க, என்னமோ போங்க, நீங்களாச்சு; உங்க பையனாச்சு” என்றார் சகுந்தலா, இளா-வினோத் நட்பு தனக்குப் பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்தியபடி.

தொலைக்காட்சியில் செய்திகளைக் கவனித்துக் கொண்டிருந்த சங்கரலிங்கம்,  இளா வருவதைக் கண்டு, “சக்கு, இளா வந்துட்டான் பாரு, ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வா அவனுக்கு” என்றார். அருகில் வந்து அமர்ந்த இளமாறனைப் பார்த்து, “என்னடா ஆச்சு உங்க ஊர்ப்பயணம்?" என்றார்.

“இல்லப்பா, இன்னிக்கு வினோத்கிட்ட இது பத்தி கேட்டேன். ஏதும் முடிவா சொல்லல, அவன் அப்பாகிட்ட இன்னும் பேசல போல, நாளைக்குச் சொல்றேன்னு சொல்லிட்டான், சரிப்பா, நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன்” என்று தன்னறை நோக்கிச் சென்றான் இளமாறன்.

உள்ளிருந்து வந்த சகுந்தலா, “பார்த்தீங்களா, நான் சொன்ன மாதிரிதான் ஆகப் போகுது, அவரு பணம் இல்லைன்னு சொல்வாரு, உங்க பையன் உடனே நானே பார்த்துக்கிறேன்னு அவனுக்கும் சேர்த்து எல்லாமே செய்வான்” என்றார்  உள்ளே எரியும் கோபத்துடன். 

“விடு சக்கு, நாம ஒன்னும் அதுல ஏழையாகிட மாட்டோம்.” என்று  இன்னும் சகுந்தலாவின் கோபத்திற்கு நெய் ஊற்ற வேண்டாம் என எண்ணிக்கொண்டே ஓடும் செய்திகளைக் கவனிக்கலானார்.

'இந்த பழக்கத்தை இத்தோடு நிறுத்தாவிட்டால் நாளை ஏதும் பெரிதாய்த் தங்களிடம் மணிவண்ணன் குடும்பத்தினர் எதிர்பார்ப்பதற்கு நாமே வழி செய்கிற மாதிரி ஆகிவிடும், விடக்கூடாது, இளாவிடம் இதுபற்றி பேசவேண்டும்' என்று எண்ணிகொண்டார் சகுந்தலா.

தான் வழக்கமாய்ச் செல்லும் கோவிலுக்கு அவர்கள் கேட்ட நன்கொடையைப் பெரிய மனதோடு தந்து விட்டு வரும் வழியில்,  சகுந்தலா வினோத்தின் அம்மாவைப் பார்க்க நேர்ந்தது. காரை விட்டு இறங்கி "புவனா.." என்றழைக்க, கணவனுக்குத் தப்பாத மனைவியாய், சகுந்தலாவைப் பார்த்து அமைதியாய்ப் புன்னகைத்தார் புவனா.

வெறும் இதழ் சிரிப்பாய்ச் சிரித்தபடி, “என்ன, புவனா எப்படி இருக்க? உன் வீட்டுக்காரரும் இளா அப்பாவும் ஒண்ணா வேலை பார்த்தப்போ பார்த்தது, எங்க வாழ்க்கை மாறிப் போனதும், உன்ன பார்த்தே நாளாச்சுல?” என்றார்.

“ஆமா சகுந்தலா,  பணம் பெருசா தெரியறப்போ மனுசங்க உருவமா கூட தெரியறது இல்ல,“ எனத் துணிவாகப் பதில் தந்த புவனா தொடந்தார். 

“சரி சொல்லுமா? என்ன பேசணும் என்கிட்ட?”  
“ஒன்னுமில்லை, உன் பையனை எங்க இளாகிட்ட பேசுறதக் குறைச்சுக்கச் சொல்லு.” என்றார் சகுந்தலா.

புவனாவின் புருவம் சுருங்கியது.   “ஏன் அத இளாக்கிட்டயே நேரா சொல்லிருக்கலாமே?” என புவனா கேட்க, சகுந்தலா “இளாவ பத்தி தெரிஞ்சும் இப்படி கேட்கலாமா நீ? அவங்க பேசறது எனக்குப் புடிக்கல. இவனோ பிடிவாதமா இருக்கான். அதனால வினோத்கிட்ட சொல்லிக் குறைச்சுக்க சொல்லு. இரண்டு குடும்பத்துக்குமே அதான் நல்லது. யாராவது கண்டபடி காசு பணத்துக்காக வினோத் இளா கூட ஒட்டிட்டு இருக்கான்னு சொன்னா இரண்டு குடும்பத்துக்குமே வருத்தம்தான் மிஞ்சும்“  என பட்டும் படாமல் மனதில் உள்ளதைச் சொல்லி முடித்ததில்  பதிலைக் கூட எதிர்பாராது தன் வழி கிளம்பினார் சகுந்தலா.
----
எவ்வளவு கேட்டும் பிடி கொடுக்காமலே பேசும் வினோத்தைத் திட்டிவிட்டு பயணம் பற்றி கேட்க அவன் வீட்டிற்கு இளா வந்த நேரம்,  அவனது கைப்பேசி ஒலித்தது. எடுத்து "சொல்லும்மா" என்றான் இளமாறன்.

“எங்கடா இருக்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?” என்றார் சகுந்தலா.

“அம்மா, வினோத் வீட்டுக்கு வந்திருக்கேன். சிம்லா போறத பத்தி கேக்க.” 

மகன் தன் பேச்சைக் கேட்கவில்லையே என்ற கொதிப்பில் “உன்ன யார் அங்க போகச் சொன்னது? வினோத், அவங்க குடும்பத்த பத்தில்லாம் எப்போ தான் புரிஞ்சுக்கப் போறியோ? உன்கிட்ட இருக்கற பணத்துக்கு அடிபோட ஆரம்பிச்சுட்டாங்க.”  என்று பொரிந்து தள்ளினார் சகுந்தலா.
“அம்மா என்ன பேச்சுமா பேசற நீ? எப்போலேருந்துமா இப்படி மாறிப் போன? வேண்டாம்மா உன்கிட்டேயிருந்து இத நான் எதிர்பார்க்கல” எனச் சொல்லியபோது தான்  கவனித்தான் அவனது கைப்பேசி ஒலிப்பெருக்கி முறையில் இருந்திருப்பதையும்,  வினோத்தின் அப்பா மணிவண்ணன் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதையும். ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கைப்பேசி அழைப்பைத் துண்டித்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான் இளமாறன். 

கேட்டுக் கொண்டிருந்த மணிவண்ணனோ முடிவெடுத்தவராய் மறுநாள் வினோத்தை அழைத்துக் கொண்டு சங்கரலிங்கம் வீட்டிற்குச் சென்றார். ‘அழையா விருந்தாளியாய் இன்று இவனெங்கே?' என எண்ணியபடியே மனம் நிறைய கேள்வியோடு வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார் சங்கரலிங்கம்.
“வாடா மணி, வா வா, இப்போதான் வழி தெரிஞ்சுதா? ஒன்னா வேலை பார்த்தப்போ எப்படில்லாம் இருந்தோம், நாங்க வசதியானதும் எனக்குத்தான் வேலைப்பளு வரமுடியல, நீயாவது வந்து பார்க்கக்கூடாதா?” எனக் குறைப்பட்டுக் கொண்டே "ஆனா, நான் உன்னப்போல இல்லடா, உன் பையன்கிட்ட அப்பப்போ உன்னப்பத்தி விசாரிப்பேன்" எனக் கூறினார்.  'அப்பாவப் பத்தி இவரு விசாரிச்ச்தே இல்லையே' எனக் குழப்பத்தோடு வினோத்தும், 'எப்படிப்பா இப்படில்லாம்!' என ஏற இறங்கப் பார்த்தவாறே இளாவும் மணிவண்ணனோடு வீட்டினுள் சென்றனர்.

உள்ளே வந்த மணிவண்ணனைச் சற்று சுருங்கிய பார்வையாய் ஒப்புக்குச் சிரித்து, "இப்போ தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதாண்ணா?' எனக் கேட்டார் சகுந்தலா.

“அப்படியெல்லாம் எதும் இல்லைம்மா சகுந்தலா, வர்றதுக்குக் காரணம் இருந்துச்சு, அதனால தான் வந்தேன்” என்ற மணிவண்ணன் தொடர்ந்தார். 
“நேத்தி உன் மகன்கிட்ட நீ பேசினத நானும் கேட்டம்மா, நீ நினைக்கிற அளவுக்கெல்லாம் நாங்க மோசமில்ல, செய்த உதவிய நீங்க வேணா மறந்திருக்கலாம், வாங்கினது நானாச்சே எப்படி மறக்க முடியும்? நாமெல்லாம் ஒன்னா இருந்த காலத்துல என் புவனா உயிர் பிழைக்க, பணம் கிடைக்காம ஊரெல்லாம் நான் அலைஞ்சப்போ, உன் தாலிய நீ கழட்டி தந்த, அந்த நன்றி இன்னமும் இருக்கு அத மனசுல வச்சுகிட்டுத் தான் சின்ன வயசுலேருந்தே வேற்றுமை பாறாம பழகுற உன் பையன்கிட்ட வினோத் பழக அனுமதிச்சதே. மத்தபடி உங்க வசதிக்காக இல்ல, இனி என் பையன் இங்க வரமாட்டான். 'தன்னைப் போலவே பிறரையும் நினை'ன்னு சொல்றதெல்லாம் வெறும் ஏட்டுல மட்டும் தான்னு புரிஞ்சுகிட்டேன். நான்வரேன்..” என்று சொல்லிவிட்டு வினோத்தையும் ஒரு பார்வை பார்த்துக் கிளம்பினார் மணிவண்ணன். வினோத் அவருடன் செல்ல, எல்லாம் தெரிந்த சங்கரலிங்கமும், காரணம் தெரிந்து கொண்ட இளாவும் அழைப்பதைச் சட்டை செய்யாது போய் விட்டிருந்தார் மணிவண்ணன்.  

பழமை நினைவுகள் மனத்துள் வந்து போயிருந்தாலும், 'இனி எனக்கு உறுத்தல் இருக்காது, அதுவரை நிம்மதி' எனத் தான் கொண்ட பிடிவாதத்தில் உறுதியாய்த் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார் சகுந்தலா.
----
அலுவலகம் விட்டு எப்போதும் போலவே வீடு வந்துவிட்ட சங்கரலிங்கம் மனைவியை வீட்டில் காணாது தொலைப்பேசியில் அழைத்து கேட்போம் என மனைவியின் எண்ணைத் தேட அதற்குள்ளாக அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினார். 

“ஹலோ, சங்கரா?” என்ற மணிவண்ணனின் குரலில் சற்று துணுக்குற்றவராய். 

“ஹலோ, மணி சொல்லுடா, சக்குக்கு என்னாச்சு?” 

“ஒன்னும் பயப்படாதே, எங்கையோ.. சக்கு கடைத்தெருவுக்குப் போய்ட்டு வந்துருக்கும் போல, வர்ற வழில வண்டி மோதி சகுந்தலாவுக்கும் டிரைவருக்கும் நல்ல அடி, அந்த வழியா வந்த நான் பாத்து ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு வந்துட்டன். மோதின வேகத்துல டிரைவர் சீட்பெல்ட் போட்டு இருந்ததால அவருக்கொன்னும் பெருசா அடி இல்ல, சகுந்தலாவுக்குத் தான் தலையில நல்லா அடி” எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே, “ஐயோ சக்கு!” என சங்கரலிங்கம் அலறினார். 

மணிவண்ணன், “டேய், டேய், பதறாத, இரத்தம் தேவைப்பட்டுது. வினோத்தோடது ஒத்து போனதால உடனே கொடுத்து ட்ரீட்மென்ட் நல்லபடியா முடிஞ்சது, பயப்படத் தேவையில்லை, கவனமா பாத்துகிட்டா மட்டும் போதும்னு டாக்டர் சொல்லிட்டாருடா” என்றார். உடனே மருத்துவமனை கிளம்பிப் போகும் வழியில் மகனுக்கும் தகவல் தந்தபடியே சென்றார்.

அங்கே போய் உறங்கும் மனைவியைப் பார்த்தவுடன் சற்றே நிம்மதியடைந்தவராய், "உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலடா, இவ்வளவு நடந்தும், சக்குவ காப்பாத்திட்ட, நன்றிடா” எனத் தழுதழுத்தார். 

“விடு சங்கரா, அது வேற இது வேற, மின்ன சொன்னது போல என் பையன் பழைய படி வர மாட்டான். ஆனா உயிரைக் காப்பத்துற கடமை எல்லாருக்கும் இருக்கு. அது மட்டும் தான் நான் செஞ்சேன்” எனக் கூறிக் கொண்டிருக்கும் போது, சகுந்தலா கண் விழித்த செய்தியைச் செவிலி வந்து சொல்ல இருவரும் உள்ளே சென்றனர்.
என்ன நடந்தது என்பதை சகுந்தலா கேட்டுத் தெரிந்து கொண்ட பின், மனம் குன்ற தன் பணம் தந்த மிதப்பில் மனம் மாறிப் போன தன்னை நொந்து கொண்டவராய் மன்னிப்பு வேண்டினார். மணிவண்ணன், “ஏற்கனவே எல்லாம் சங்கரன்கிட்ட சொல்லிட்டம்மா, கவலைப்படாதேம்மா நான் வரேன்” என்றபடி கிளம்பினார் மணிவண்ணன். தன்னுடைய மேட்டிமைத்தனத்தாலும், சுடுசொற்களாலும், ஒரு நல்ல நட்பையும், உறவையும் இழந்ததை உணர்ந்த சகுந்தலாவின் கன்னத்தில் கண்ணீர் சூடாய் வழிந்து கொண்டிருந்தது.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.