வெள்ளி, 2 நவம்பர், 2018

28. குறளரசன் ஐ.ஏ.எஸ்


குறளரசன் ஐ.ஏ.எஸ்



தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் கலந்தாய்வு அறையின் எல்லா கதவுகளும் சாத்தப்பட்டிருந்தது. ஊடகங்களுக்குக் கண்டிப்பாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. முடிந்தவரை பொதுமக்களோ, வெளி ஆட்களோ உள்ளே வராமல் காவல்துறை தடுத்து திறம்படச் செயல்பட்டிருந்தது.

ஏசியின் குளிரையும் தாண்டி, அறை முழுக்க உள்ள இருந்தவர்களின் கோபக்கனல், எரிமலை அமைதியாய் உணக்கமாய் வெடிக்கக் காத்திருந்தது. ஆட்சியர் குறளரசன் வருகைக்காக தீப்பிழம்பாய் அவர்கள் காத்திருந்தார்கள்..

சரியாய் பத்தரை மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் குறளரசன் உள்ளே நுழைந்தான். இளைஞன். முப்பதே வயதினன். ஆழமான பார்வையால் அறையை அளந்தபடி வந்து, தன் இருக்கையில் திடமாய் அமர்ந்து, கூட்டத்தை நேர்ப்பார்வை பார்த்தவனின் உடல் மொழியில் ‘என்னடா பண்ணிருவீங்க?’ என்கிற திமிர் தெறித்தது.

அதுவரை இருந்த பொருளற்ற குரல்களின் சலசலப்பு அமிழ்ந்து, சட்டென ஒரு அமைதி அறைக்குள் வந்தமர்ந்தது. ‘யாராவது ஆரம்பிக்க மாட்டார்களா?’ என்று ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு, ‘நீ ஆரம்பி… நீ பேசு…’ என்பது போல சைகைகள் மட்டும் அங்கங்கே தென்பட்டதைக் கவனித்துக் கொண்டது குறளரசனின் கூர்மையான பார்வை.

மெலிதாய் ஒரு குரல் இரு குரல் என மொத்தக் குரல்களும் எழத் துவங்கி யார் என்ன சொல்கிறார்கள் எனத் தெளிவாக கேளாத வன்மக் கூச்சல் கிளம்பத் துவங்க குறளரசனின் தேகம் விண்ணென நிமிர்ந்து எதிர்கொள்ள ஆயத்தமானது.

ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் சண்முகையா பாண்டியன் எழுந்து தன் தோள் துண்டைச் சரி செய்து கொண்டு, தொண்டையைக் கனைத்துக் கொள்ளவும் கூட்டம் மறுபடியும் அமைதியானது.

சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்ட சண்முகையா பாண்டியன், குறளரசனை நேர்ப்பார்வை பார்த்து துவங்கினார் “கலெக்டர் சார் நினைச்சிருந்தா, இந்தக் கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம். தப்பு எங்க மேல இல்லை..” குறளரசனைக் குற்றவாளியாக்கியே அவர் பேச்சு துவங்கியது.

குறளரசனின் குரலில் எந்த உணர்ச்சியுமே இல்லை. “பரவால்ல உங்க கருத்தை சொல்லுங்க. அதுக்காகத்தானே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் போட சொன்னீங்க… பேசுங்க… ஆனா, ஒவ்வொருத்தரா பேசினா பதில் சொல்ல எனக்கும் வசதியா இருக்கும் “ புன்னகை விரிந்திருந்தது இதழ்களில்.

“நேரடியாவே சொல்றோம் சார்… நாங்க சொல்ற எதையுமே நீங்க கேக்கறது இல்ல… எங்க கோரிக்கை எதையும் நீங்க மதிச்சது கூட இல்ல…” மாவட்டத்துக்கு ஆதரவாக எல்லா கட்சியிலும் இருந்து ஒரு ஆதரவு ஆங்காரக் கூச்சல் எழுந்து அடங்கியது.

“மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் எதுவா இருந்தாலும் டிலே பண்ணாம தீர்த்து வச்சிருக்கேன்… வேற எதுனா, குறை இருந்தா சொல்லுங்க. சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இங்கதான் உங்க முன்னாடி இருக்காங்க. உடனே சரி பண்ண ஏற்பாடு பண்றேன்… “ குறளரசனின் புன்னகை மாறாத பதில் எதிராளிகளை மேலும் சலனப்படுத்தியது.

மற்றொரு பொருளற்ற குரலலை கடைசி வரிசையில் இருந்து எழுந்து முன் வரிசை வரை வந்து அடங்க கூட்டத்தின் மையத்தில் இருந்து, ஒரு குரல் கோப வெடியாய் வெடித்தது. “மக்கள் பிரச்சனைய விடுங்க சார். நாங்க குடுத்த லிஸ்ட் என்ன ஆச்சு ? இன்னிக்கு காலைல வந்த லிஸ்ட்ல நாங்க குடுத்த ஒருத்தரோட பெயரும் இல்ல… நீங்க ஒருத்தர் மட்டும் கவர்மென்ட் இல்ல சார். எங்களையும் சேர்த்துதான் கவர்மண்டு “ பேசியவனின் பேச்சில் அத்தனை காரம். கூடவே சாராய போதையும்.

சண்முகையா பாண்டியன் திரும்பி அவனை உட்காரச் சொல்லி சைகை காட்டிவிட்டு, குறளரசனைப் பார்த்து… ”பாருங்க சார். இங்க ஆளுங்கட்சி எதிர்கட்சின்னு எந்த வேறுபாடும் இல்லாம ஒன்னாதான் வந்திருக்கோம்… எங்களை மனுசங்களா கூட மதிக்காம ஜனநாயகத்துக்கு விரோதமா செயல்படுறதுக்கு உங்களுக்கு பவர் இல்லைன்னு முதல்ல நீங்க புரிஞ்சிக்கணும்…“ என்றார் சற்றே மிரட்டலான தொனியில்.

“இப்பவரை நீங்க எதுக்கு வந்திருக்கீங்க…? ஏன் இவ்வளவு கோபம்னு எனக்கு உண்மையிலேயே புரியல… மிஸ்டர். சண்முகையா பாண்டியன்… அதான் பேசி முடிக்கணும்னு வந்துட்ட்டீங்கள்ல…? நேரடியாவே கேட்டுட வேண்டியதுதானே?“

“அண்ணே… எதுக்குன்னே வளவன்னுட்டு… கலெக்டருக்கு ஒண்ணுமே தெரியாதாம்… நீங்களும் மென்னு முழுங்கிகிட்டு… இங்க பாருங்க சார், கவர்ன்மென்ட் இந்த மாவட்டத்துக்கு மொத்தம் நூத்தம்பது போஸ்ட் சான்க்சன் பண்ணிருக்கு. மத்த கலக்டர்லாம் கட்சிக்காரங்க குடுத்த லிஸ்ட போட்டுட்டு அடுத்த வேலைய பார்க்க போய்ட்டாங்க. நீங்க மட்டும்தான் நாங்க கொடுத்த லிஸ்ட்படி போடுவீங்களா மாட்டீங்களானு பிடி குடுக்காம நழுவிட்டே இருக்கீங்க…“ கூட்டத்தில இருந்த எதிர்க்கட்சி இளம் மாவட்ட தலை ஒன்று உறுமியது.

குறளரசன் புன்னகை விரிந்தது. “அதான் நூத்தம்பது குக் (சமையலர்) நூத்தம்பது ஹெல்ப்பர் ஆக மொத்தம் முன்னூறு போஸ்டிங்கும் ஆள் போட்டு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை நேத்தே போஸ்ட் பண்ணிட்டமே…” என்றபடி தன் பி.ஏவைப் பார்த்து “அனுப்பிட்டீங்களா இல்லையா?“ என்று கேட்க பி.ஏ மையமாய்ச் சொன்ன “அனுப்பியாச்சு” என்ற பதில் குரளரசனுக்கே கேட்கவில்லை.

அவரின் பயம் குறளரசனுக்கு புரிந்தது. தன் ட்ரான்ஸ்பர்க்கு பிறகு அவர்தான் இந்த அரசியல் கூட்டத்தோட மல்லுக்கட்ட வேண்டுமென்று. தவிர இந்த தகவலை மாவட்டங்களுக்கு போட்டுக் கொடுத்திருப்பதே இவர்தான் என்றும் குறளரசன் அறிந்தே இருந்தான்.

‘போஸ்டிங் ஆர்டர் அனுப்பியாச்சு’ என்ற தகவலைக் கேட்டதுமே கூட்டம் மொத்தமும் அதிர்ச்சியில் உறைந்தது. ‘கலெக்டர் இன்னும் பைனல் பண்ணிருக்க மாட்டார். எப்படியும் அவரை மனம் மாற்றி விடலாம்’ என்ற நம்பிக்கையில் வந்த ஆளும் கட்சி மாவட்ட செயலாளரே அதிர்ந்து போயிருந்தார்.

“ஸ்ஸ்ஸார் என்ன சொல்றீங்க ? “ “ஆமாங்க மாவட்டம் சார். நேற்றே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தபால்ல போட்டா லேட் ஆகும்னு விஎஓ , தலையாரி மூலமா நேரடியா தபால் அனுப்பி இன்னிக்கு பத்து மணிக்குள்ளே வேலைல ஜாயின் பண்ணிடணும்னும் அப்படி ஜாய்ன் பண்ணாட்டி அடுத்த நிலைல உள்ள நபர் நியமிக்கப்படுவார்னு ஆர்டர்லயே அடிச்சு அனுப்பி வச்சிட்டோம். அத்தனை பேரும் ஜாயின் பண்ணிட்டாங்களான்னு செக் பண்ணி ரிப்போர்ட் அனுப்பிட்டு வந்ததாலதான் கூட்டத்துக்கு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இல்லாட்டி வீட்டுப் பக்கத்துல போஸ்டிங் வேணும்… எங்கப்பா ஊர்ல போஸ்டிங் வேணும்னு உங்கள வேற சிபாரிசுக்கு கூட்டிட்டு வந்து கஷ்டப் படுத்துவாங்க பாருங்க… அதான்!“ குறளரசன் சிரிப்பு விரிந்தது.

சண்முகையா பாண்டியன் உக்கிர பாண்டியனாக மாறிக் கொதித்தார். “அப்ப நாங்க கொடுத்த லிஸ்ட்ல உள்ள பெயருங்க…”

“தகுதியா இருந்தா கண்டிப்பா, இந்நேரம் வேலைல ஜாய்ன் பண்ணிருப்பாங்க.”

“இது நல்லால்ல கலெக்டர் சார். ஏதும் முறையோட பண்ணனும் “ “இதுல எந்த விதியையும் நான் மீறலியே “

“இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டர்ஸ் எங்கள கன்சல்ட் பண்ணிட்டுதான் லிஸ்டே போடுவாங்க…“

“மே பி… பட் நான் அப்படி இல்ல…“

“கஷ்டப்பட்டு முன்னேறி கலெக்டராகி வந்திருந்தா நம்ம பழக்க வழக்கம் தெரிஞ்சிருக்கும். டைரைட்டா வரவங்களுக்கு ஏழைகள் கஷ்டம் எங்க தெரியப் போகுது“ என்று கோபத்தில் துள்ளிய ஒரு உடன்பிறப்புக்கோ ரத்தத்தின் ரத்ததுக்கோ இரண்டு கையிலும் ஆறு மோதிரங்கள் மின்னியது.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வேறுபாடு இல்லாமல் பின்வரிசையில் இருந்து கலெக்டர் ஒழிக ன்னு ஒரு கோஷம் கிளம்பி அடங்கியது.

சண்முகையா பாண்டியன் “நீங்க புதுசா வந்திருக்கறதால இங்க உள்ள நடைமுறை தெரியாம பண்ணிட்டீங்க… பரவாயில்ல… லிஸ்ட திருப்பி வாங்கிடுங்க சார்… நாம உக்காந்து பேசி சாயங்காலத்துக்குள்ளே வேற ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி பிரஸ்க்கு குடுத்துரலாம். பிரச்னைய முடிக்க பாருங்க கலெக்டர் சார். வளர்த்தாதீங்க. ரெம்ப கஷ்டமா போயிடும். பசங்க கோவக்காரங்க சார்…“ என்றார் சத்தம் குறைந்த – சினம் குறையாத குரலில்.

“பிரச்னை முடிஞ்சு போச்சு மாவட்டம் சார். லிஸ்ட் என் ஹையர் ஆபிசியல்ஸ்க்கு அனுப்பியாச்சு… இனிமே நானே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது.”

பாண்டியனுக்கு மூச்சு இறைத்தது. சொற்கள் தடுமாறின.  “குக்குக்கு அஞ்சு லட்சம்… எல்ப்பருக்கு மூணு லட்சம் வாங்கிருக்கோம் சார் “ என்றது ஒரு சகோ.

“யாரும் உங்கள வாங்க சொல்லலியே“ என்றார் குறளரசன்.

“வர்ற மினிஸ்டர் தலைவருக்குல்ல்லாம் செலவு செய்ய அப்புறம் நாங்க என்ன பண்றதாம். கொள்ளை அடிக்கவா ?” இன்னொரு தம்பியின் கோபக் கேள்வி.

“இது நான் பதில் சொல்லத் தேவை இல்லாத கேள்வி“

கூடியிருந்தோர் அனைவரும் கலெக்டரை கை நீட்டி ஆளாளுக்குக் கேள்வி கேட்கத் திரள….. “மீட்டிங்க முடிசிக்கலாமா?“ போலி அடக்த்துடன் குறளரசன் கேட்க கொதித்தெழுந்தார் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்.

“நீங்க போட்ட போஸ்டிங் எப்படி செயல்படுதுன்னு பார்த்துடுறோம். இப்பவே கோர்ட்ல ஸ்டே வாங்குறோம். நீங்க இன்னும் எத்தனை நாள் இந்த ஊருல கலெக்டரா இருக்கேன்னு பார்த்துடுறோம்…? இப்ப அந்த லிஸ்டைத் திருப்பி வாங்க முடியுமா முடியாதா…?” சினத்தில் சீறி எழுந்த கேள்வியில் மொத்த அரங்கமும் அமைதியானது.

குறளரசன் குரல் அமைதியாய் – அதிகாரமாய் ஆணவ அரசியிலின் உச்சந்தலையில் நச்நச்சென்ற ஆணியாய் இறங்கியது. “எத்தனை நாள்னு முக்கியமில்ல மாவட்டம் சார். இருக்கிற ஒவ்வொரு செகண்டும் நான் அரசியல் ஊழியன்தான். என்னோட வேலை அரசுக்குத்தான். கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டியதும் அதே அரசாங்கத்துக்குதான். நீதிமன்றமோ அரசாங்கமோ நான் போட்ட லிஸ்ட் தவறானதுன்னு சொல்லி எனக்கு தண்டனை கொடுத்தாலும் தலை நிமிர்ந்து ஏத்துக்குவேன். அதுக்காக தப்பானவங்க. பேச்சைக் கேட்டு, தப்பான ஆட்களை அரசுக்குத் தேர்வு செய்து கொடுக்கிற தப்பான வேலைய நான் எப்பவும் எங்க இருந்தாலும் செய்ய மாட்டேன். நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம்“ என்றபடி கம்பீரமாய் எழுந்து நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் குறளரசனின் தனி அறையின் மேலே அவருக்கு முன் பணியாற்றிய ஒரு முன்னாள் ஆட்சித் தலைவரின் பிரேம் செய்யப்பட்ட வாசகம் பொன்னிறத்தில் மின்னியது.

“லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர்”

குறள் : நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

விளக்கம் : நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன்மக்களின் உயர்வை அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டி விடும்.

— சித்ரா தேவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக