வெள்ளி, 2 நவம்பர், 2018

21. எது ஒழுக்கம்


எது ஒழுக்கம்?


நிலவு தன் பணி முடித்து – களைத்து மெல்ல துயில் கொள்ள, கதிரவன் தன் கதிர்களை மெல்ல மெல்ல உலகெங்கும்  ஊடுருவச் செய்து அமைதியாய் மேலெழுந்தான். பறவைகளின் இசையோடு இனிமையாக தொடங்கியது காலைப்பொழுது…

கமலா காலை குளித்து முடித்து, பூசைக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்.

சோமசுந்தரம் எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தார். வேலைக்காரம்மா பொன்னி காபியை எடுத்து வந்து அவர்முன் வைத்தாள். காபியை எடுத்து வாயில் வைத்த சோமசுந்தரத்தின் முகம் சுருக்கென மாறியது. “ஒரு நல்ல காபி கூட போடத்தெரியாதா நோக்கு, எதுக்கு இவ்வளவு சர்க்கரை.? நீ என்ன பாயாசமா செய்ற…? காபி தானே…” பொன்னி மீது  எரிந்து விழுந்தார். கோபத்தில் காபி குடுவையை தூக்கி எரிந்ததில், காபி கீழே கொட்டியது. பொன்னி முகம் வாடி நின்றாள்.

“கூடுதல் சர்க்கரை தெரியாம விழுந்துடுச்சு போல, அவளை  மன்னிச்சுவிட்டுருங்கோ.” என கமலா சொல்ல,

“என்ன எதிர்த்து பேசுற அளவுக்கு தைரியம் நோக்கு வந்திருச்சோ? அவ்வளவு உரிமைய நோக்கு யார் குடுத்தா, ஆக்கினோமா கழுவினோமா உண்டோமான்னு இரு, புருஷன் வேலை நீ பாக்காத…”

“மன்னிச்சிருங்கோன்னோ, தெரியாம பேசிண்டேன்”

“கயல் எங்க?”

“அவ காலேஜ்ல ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு நேரத்தோட போய்ட்டா”

அந்நேரம் பதற்றத்துடன் ஓடி வந்தார் டிரைவர் ஆறுமுகம்..

“ஐயா, ஐயா”

“நோக்கு எம்புட்டு தைரியம் இருந்தா ஆத்துக்குள்ள கால் எடுத்து வெச்சிருப்ப…”

“ஐயா என்ன மன்னிச்சிருங்கய்யா, என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல. நான் உடனே ஆஸ்ப்பத்திரிக்கு போகனும், எனக்கு லீவு குடுங்கய்யா” என அவர் கையைப் பிடித்துக் கதற,

கன்னத்தில் ‘பளார்’ என ஒரு அரை விட்டார். “என்  மேலே கைய வைக்கிற அளவுக்கு அதிகாரத்த நோக்கு யாரு குடுத்தா, நான் மது மாமிசம் உண்ணாம மூனு வேளை குளிச்சு, ஆறு வேளை  பூசை புனஸ்காரம் செய்யிரவன். அந்த அம்பாளோட பக்தன். இப்படி என்ன தொட்டு தீட்டாக்கிட்டியே.  இப்போ எப்படி பூசை செய்வேன்…” என்று அவனைத் திட்ட ஆரம்பித்தார்..

“ஐயா, என் பொண்டாட்டி பாவம். நான் போகணும்… லீவு குடுங்கய்யா” என அழுதான் ஆறுமுகம்.

“உம்பொண்டாட்டி என்ன செத்தா போய்ட்டா..? இப்போ, உடம்புக்குத் தானே சுகமில்ல, என்ன ஆஃபிஸ்ல விட்டுட்டு போ” எனக் கூறிவிட்டு மீண்டும் குளிக்க சென்றார்.

குளித்து பூசை புனஸ்காரம் முடித்து காலை உணவை முடித்து விட்டு அலுவலகம் சென்றார். அலுவலகத்தில் அவர் முன் சிலர் முகத்துதி பாடினாலும், அவர்பின் அவரைத் தரக்குறைவாக பேசுபவர்களே அதிகம்.

“இந்தாளு மனுஷனே கிடையாது யாரையும் மதிக்கவே மாட்டான், ஈவு இரக்கம் கொஞ்சம் கூட கிடையாது” என பலர் பலவிதமாக சாடுவர்.

அலுவலகத்தில் துணைச்செயலாளர் கவிதாவுடன் அலுவலகப்  பணியின் போது, மேஜை மீது இருந்த தேநீர் கோப்பை கீழே விழுந்து, தேநீர் கொட்டியது. கவிதா அதை துடைக்க அங்கு வேலை செய்யும் லட்சுமி அம்மாளை அழைத்து வர எழ அவளை தடுத்து நிறுத்தினார் சோம சுந்தரம்.

“ஏன் கவிதா, நீ தொடைக்கமாட்டியா, அவளுக்கு வேற வேலை இருக்கும், நீயும் என் ஆஃபிஸ் ஸ்டாப் தானே. அவ தொடச்சா என்ன.? நீ தொடச்சா என்ன? நீயே தொடச்சிரு…”

கவிதா முனுமுனுத்துக்கொண்டே துடைத்தாள். கவிதா வெளியே சென்று அவரைத் திட்டுவதாக வந்து சொன்னார் சக அலுவலர் ஒருவர். கோபத்தில் அவளை பழிவாங்க நினைத்தவர், இன்று முக்கியமான கலந்துரையாடல் ஏதோ இருப்பதாக கூறி அவளை மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு  வரச்சொன்னார்.

“சார், இன்னைக்கு என்ன பொண்ணு பாக்க வராங்க…”

“நேக்கு அதெல்லாம் தெரியாதுடியம்மா, தொடர்ந்து வேலை செய்யனும்னா வா”‌ என்று காட்டமாக கூறிவிட்டார். அவளும் வேறு வழியில்லாமல் தலையை ஆட்டிவிட்டுச் சென்றாள்.

மாலை 4 மணி…

ஓட்டுனர் ஆறுமுகத்திற்காக காத்திருந்தார். ஆறுமுகம் வந்ததும் வண்டியில் ஏறி புறப்பட்டார்.

“ஐயா, எங்க போகணும்..? ஏதோ முக்கியமான இடத்துக்கு போகணும்னு காலைலயே சொன்னிங்களே.?

“ஆமாடா, நம்ம ஊரு தமிழ் சங்கத்துல ஏதோ விழா நடக்குது. நம்ம கயல் பேசுறா. அதுக்கு என்ன மாதிரி ஒழுக்கத்துல சிறந்தவங்கதான் தலைமை தாங்கணும்னு வீடு தேடி வந்து கூப்புட்டு போயிருக்காங்க, அங்கதான் போறேன்”

“சரிங்க அய்யா.”

சோமசுந்தரம் உள்ளிட்ட அனைவரும் விழா மேடையை வந்தடைந்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் உபச்சாரம் அனைத்தும் முடிந்து விழா தொடங்கியது. பேச்சு போட்டி ஆரம்பித்தது. அங்கே “நல்லொழுக்கம்” எனும் தலைப்பில் பேச வந்தாள் பெண் ஒருத்தி. அவளை பார்த்ததும் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொண்டது அவரிடம். அங்கே நின்றிருந்தது அவர் மகள் கயல்விழி.. தன் மகளை பெருமையுடன் பார்த்தார்.

கயல்விழி தன் உரையை தொடங்கினாள்…

“நல்லொழுக்கம், இங்கு ஒழுக்கமுடையவர் என்று பலரும் நினைப்பது ரிஷிகளையும் துறவிகளையுமே, ஏனென்றால் அவர்கள்தான் ஆசைகளை துறந்தவர், நகை பணம் என எதன் மீதும் ஈடுபாடு கொள்ளாதவர், புலால் மது மாது என எதன் மீதும் நாட்டம் கொள்ளாது இறையருளை தேடிச் செல்பவர்…

புலால் உண்ணாதிருத்தல், மது மாது என எதன் மீதும் நாட்டமில்லாததால் மட்டுமே அது நல்லொழுக்கம் எனப்படுமா?

ஒரு துறவி என்பவர் பிறக்கும் போதே துறவியாய்ப் பிறப்பதில்லை. இடையில்தான் இறை நாட்டம் கொண்டு துறவறம் மேற்கொள்கிறார். அப்படி உள்ள ஒரு மனிதனுக்கு தாய், தந்தை, தமையன், தமக்கை, மனைவி, மக்கள் உண்டு. இப்படி அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எதையும் செய்யாது, தன் ஆத்ம திருப்தியே முக்கியம் என்று துறவறம் செல்பவர்கள் எப்படி நல்லொழுக்கமுடையோர் ஆவர்?அப்படியென்றால் நல்லொழுக்கமுடையோர் யார், தாய் தந்தை மனைவி மக்கள் சகிதம் வாழ்பவர்களா?” என்று விட்டு ஒருமுறை கூட்டத்தை சுற்றி கண்களை ஒருமுறை ஓட விட்டாள்.

“யோசித்துப்பார்த்தால் தனது ஆசைகள் லட்சியங்கள் என அனைத்தையும் தன் குடும்பத்திற்காக தனக்குள் புதைத்துக்கொண்டு, அவர்களுக்காகவே வாழும் ஒவ்வொரு சராசரி மனிதனும் நல்லொழுக்கவாதி தானே. ஆனால், இதிலும் தனக்கு தன்னுடைய என்ற சிந்தனை மறைந்திருக்கிறது. இது தன்னலத்தொண்டு. அப்பொழுது தன்னை மறந்து பிறருக்கு உழைப்பவன் தான் நல்லொழுக்கவாதியா??தனக்கு மிஞ்சியதுதான தானமும் தர்மமும்…

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் தன்னலம் பேணுதல் தவறல்ல. அதே நேரத்தில், பிறநலம் காத்தல் இன்றியமையாதது….

இங்கு ஒழுக்கம் என்றால் என்ன? வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு கருத்துக்களை சார்ந்து அது மாறுபடும். ஆனால், இங்கு பெரிதும் ஒழுக்கம் என கருதப்படுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான உடலியல் கூறுகள். உடல் சார்ந்தவை. பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காதவாறு நாம் செய்யும் செயல்களே ஒழுக்கம் எனப்படும்.” என்று கூறிவிட்டு தன் தந்தையின் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே மேலும் சொல்லத் துவங்கினாள்.

“இதற்காக பிறருக்காக வாழவேண்டும் எனக் கூறவில்லை. சிறிது மனிதாபிமானம் மற்றும் கருணை இருத்தல் போதுமானது. சான்றுக்கு நீ வலியோன் என்ற காரணத்தினால், உனக்கு எளியோனை காலில் போட்டு மிதிப்பது தவறு. சகமனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு நடப்பதே நல்லொழுக்கம் ஆகும். அவனும் நம்மைப் போன்ற இரத்தம் சதை உணர்வு உள்ள ஓர் மனிதன் தான் என்ற எண்ணம் வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பிறர் பாதிக்கப்படுகிறார்களா என்று ஆராய்ந்து செய்வதே நல்லொழுக்கமாகும். அவை எந்த ஏட்டிலும் எழுத முடியாதது. நடத்தையில் காண்பிப்பது. இவையே வாழ்வியல் கற்பிதம். எனது உரையை இங்கு ஒருக் குறளுடன் முடிக்க விரும்புகிறேன்.

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு”


நல்லொழுக்க நெறியை காகித ஏட்டில் எழுத்துக்களில் எழுதுவதைத் காட்டிலும் வாழ்க்கை நூலில் நடத்தையில் எழுதுவதே சிறப்பு..

தன் மகளின் உரையை கேட்ட சோமசுந்திரத்திற்கு பெரும் அதிர்ச்சி. தன் மகள் தன்னிடம் நேரடியாய்ச் சொல்ல முடியாததை இங்கு சொல்லியிருக்கிறாள் எனப் புரிந்தது அவருக்கு. அவளது ஒவ்வொரு சொற்களும் தன்னை ஊசியால் குத்துவது போன்றே தோன்றியது. ஆழ்மனதை பதம் பார்த்தது. கனத்த மனதுடன் எழுந்து வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் கவிதா அலைப்பேசியில் அழைத்தாள்,

“சார், 7 மணிக்கு வந்திடவா?”

“நீ வரவேணாண்டியம்மா , நாளைக்கு பாத்துக்கலாம்” தனது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து ஆறுமுகம் கையில் வைத்தார்,

“நீ போ… போய் உன் பொண்டாட்டிய பாரு, உனக்கு ரெண்டு நாள் லீவு”

“அய்யா வண்டி…”

“நான் ஓட்டிக்கிறேன் நீ போ…”

வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியவர் தெருவோரத்தில் ஒரு பலகாரக் கடையில் நிறுத்தி தன் மனைவிக்குப் பிடித்த பலகாரங்களை வாங்கிக்கொண்டார்.

”கயல் , என்னம்மா யோசனை?” என்றார் சோமசுந்தரம்.

வண்டியின் கண்ணாடியில் வழிந்த சிறு மழைத்துளிகளை நோக்கிய படி இருந்த கயல்விழி, நினைவு திரும்பியவளாய்த் திரும்பிப் பார்த்தாள். வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து ஆறுமுகம் வாகனத்தைச் செலுத்த பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர் கயல்விழியும் சோமசுந்தரமும்.

மாற்றம் உங்களிடம் இருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் தந்தையே என மனதில் நினைத்துக்கொண்டே ”ஒன்னுமில்லப்பா… என் சொற்பொழிவைப் பற்றி ஒன்னுமே சொல்லலையே?” என்றாள்.

”சொல்ல என்னம்மா இருக்கு… வெவரம் தெரியாத புள்ள நீ நல்லது கெட்டது தெரியாம, நோக்கு தோணுறத எல்லாம் பேசிண்டு வந்துட்ட…” என்றார்.

குறளின் பொருள்:

நல் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்து உலகப் பற்றினை ஒழித்தவர்களுடைய பெருமையை எடுத்துரைப்பதே நூல்களின் துணிவு ஆகும்.

–கவித்தமிழச்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக