மீறல்
இன்று:
ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அலறவும் முடியாமல் வலி தாங்கவும் முடியாமல் பல்லைக்கடித்துக் கொண்டு நிற்கவேண்டிய நிலை..
“என்ன பண்ணிட்டிருக்க தெரியுமா?” என்றொரு குரல் நடுமண்டையைப் பிளப்பது போல..
நடுக்கடலில் நின்றிருப்பது போலானதொரு நிலை. திரும்பியும் செல்லமுடியாத அதே நேரம் இதே வழியில் முன்னேறிச் செல்லவும் இயலாதபடியாக. ஆனால்…
*****
நேற்று:
“Promoting human dignity is one of mankind’s unfinished challenges. இந்த உலகம் ஒரு பெரிய ஸமுத்திரம் தெரியுமா? இந்தக் கடவுள் இருக்கானே அவனொரு மஹா கஞ்சன். ஒன்னு கொடுப்பான். இன்னொன்னு தரமாட்டான். நாம நினைச்சுக்கிற மாதிரி நல்லவன் இல்ல அவன். சிம்பிளா சொன்னா..
எல்லோருக்கும் இந்த ஜலஸமுத்திரத்த நீந்திக் கடக்க பாக்கியம் வாய்க்குறதில்ல. உன்னைப் போல ஒரு சிலருக்கு தான் அது அமையும்.
புத்தியுள்ளவா பொழைச்சுக்குறா. நீயும் ஒரு புத்திசாலிப் பொண்ணு தான். அதான் உன்னைப் பாத்ததுமே என் ஸ்காலரா செலக்ட் பண்ணினுட்டேன்.”
இதைக் கூறும் போது அவரது விரல்கள் என் பேனாவை மெல்ல வருடிக் கொண்டிருந்தன. கடந்த இரண்டு மாதங்களில் இல்லாமல் கனிந்திருக்கும் அவரது குரல் அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என என் இதயத்துடிப்பை அதிகப்படுத்தத் தொடங்கியிருந்தது.
எங்கள் கல்லூரியின் முதன்மைப் பேராசிரியர். வேதியியல் துறைத் தலைவர் Dr. ஸ்ரீநிவாஸ ராகவன். ஒரு முறை என்தோழி மாயா அவரை சீனிவாசன் சார் என்று சொன்னதற்குக் கோபித்துக்கொண்டார். சமஸ்கிருதம் தேவபாஷை. அதை இப்படி தவறா பிரயோகிக்கக்கூடாது என ஒரு மணி நேரம் லெக்சர் எடுத்தார். கூடவே படையப்பா படத்தில் ரஜினிகாந்த் இதையே கோபமாக வலியுறுத்தியிருப்பதைக்கூட சுட்டிக்காட்டினார்.
திறமையிருந்தும் எளிமையானவர் என்பதாலும் வேறொரு ஜாதி பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் (அவரும் இதே பல்கலைக்கழகத்தில் வேறொரு பிரிவில் ப்ரொஃபஸர்) என்பதாலும், பொதுவாக எங்களுக்கு இவர்மேல் நல்ல இமேஜ் இருந்தது. கண்ணியமானவர் அதைவிட கண்டிப்பானவரும் கூட.
எங்கள் துணைவேந்தருடன் இவர் நெருங்கியவர் என்பதால் இவர் தலையைக் கண்டதும் கல்லூரியே கப் சிப்பென்று ஆகிவிடும்.
தன் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர் கவர்னராக இருக்கும் வேறு மாநிலத்தின் பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தருக்கான தேர்வில் இறுதிக்கட்ட மூவரில் ஒருவர் என்றும், இவருக்கே வாய்ப்பு அதிகம் என்றும் தகவல்.
ஆனால்.., அய்யோ நான் ஏன் தேவையில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறேன்?
இன்று என் மனதில் கட்டி வைத்திருந்த ஒட்டு மொத்த மதிப்புக்கோட்டையும் உடைந்து வீழ்ந்துகொண்டிருந்தன. இரு மாதங்களாக இவருடன் தினமும் இருந்திருக்கிறேன். சில நேரங்களில் தாமதமாக வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். பெரிய அளவில் தவறான பார்வை பதிந்ததில்லை ஒரிரு தருணங்களை தவிர. அதெல்லாம் அனிச்சையானது.
ஆனால் மாயா சிலமுறை “fuck that idiot” என்று விவகாரமாகவும், பலமுறை வேறுவிதமாகவும் சொல்லிச் சிரித்தும் இருக்கிறாள். நான் தான் அதைச் சரியாக உணரவில்லை என்பதைவிட அவளை நம்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போதெல்லாம் புலி பொறுமை காத்திருந்திருந்து டைட்டில் சமர்ப்பிக்கும் இந்த நேரத்தில் உறுமுகிறது போலும். இத்தனைக்கும் என்வயதில் மகள் வேறு அவருக்கு. அதோ அடுத்த அறையில் தன் தாயுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.
இன்னும் அவரது விரல்கள் மில்லி மீட்டர் மில்லி மீட்டராக நகர்ந்துகொண்டிருந்தன. எனக்கு இப்போது பயம் வரத் தொடங்கிவிட்டது.
உள்நோக்கமில்லாத சின்னச் சின்ன அத்துமீறல்கள் நடந்ததுண்டு, அதை விரும்பி ரசித்ததும் உண்டு. அவைகளை கடக்காத பெண்ணொருத்தி இருப்பாளா என்ன.!?
ஆனால் இங்கு இதன் நோக்கம் பிடிக்கவில்லை. ஒருவித வறட்டுக் கடின மனநிலை, ஊசி போல் குத்தத் துவங்கியது.
“ஸார்…” என்று இழுத்தேன். எனக்கு மிகவும் சன்னமான குரல் தான் பொதுவாகவே. இப்போது எனக்கே கேட்கவில்லை. இதை இப்படியே தவிர்த்துக் கடந்திட வேண்டுமென்று தோன்றியது. மூளை மரத்துப் போனது போல் ஆகிவிட்டது. ஆனால் அவர் நிதானமாக இயங்கிக் கொண்டிருந்தார்.
“ஓகேம்மா.. புரியுது.. டேக் யுவர் டைம்.. டெக்னிகலி யூ டோன்ட் ஹேவ் அ சாய்ஸ். ஐ நோ யூ ஆர் ய க்ளெவர் கேர்ள்” என்று தன் வெள்ளை கர்ச்சீப்பால் நெற்றி வியர்வையை துடைத்து பின் நிதானமாக மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் நாற்காலியை இன்னும் சில சென்டிமீட்டர்கள் என்பக்கம் நெருங்கி அனாயாசமாக தளர்ந்தவர் முகத்தில் தெரிவது என்ன முறுவலா? நகையா? இளக்காரமா.?!
இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் என் காதுகளை என்னால் நம்பவே முடியவில்லை. கூடவே அவர் கண்களில் படர்ந்திருக்கும் காமத்தையும். சட்டென உதறிவிட்டு எழுந்து திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.
வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுப் படுத்தேன். எட்டு மிஸ்டு கால்கள் வந்திருந்தன அவரிடமிருந்து. தன்னிலை விளக்கமாக 88 வாட்ஸப் குறுந்தகவல்கள். அதில் ஆங்காங்கே சில செய்திகள் அழிக்கப்பட்டிருந்தன. எல்லை மீறியதாக உறுத்தியிருக்கும் போல.
என் படிப்பு, திறமைகளை விட என் குடும்ப நிலை, இந்த முனைவர் பட்டத்தின் தேவை அனைத்தும் தெரிந்தபின்னான அவரது தெளிவான அத்துமீறலை அழகாக நியாயப்படுத்திக்கொண்டிருந்தார் சொற்களில். அவரது தொனி இது அவருக்குப் பழக்கப்பட்ட ஒன்று போலவே இருந்தது. மெல்ல மெல்ல மிரட்டிக்கொண்டிருந்தார் என்று கூட சொல்லலாம். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கோழையெல்லாம் இல்லை.
ஆனால் என் தந்தை இறந்த பின் நான் அதிகம் நம்பிய முதல் ஆண் இவர். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் என்னைக் கரைசேர்க்கப் போகும் தோணியாகவே அவரை நினைத்திருந்தேன். முதன்முதலாகப் பணியிட வெளியுலக வக்கிர முகத்தைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். என்ன செய்வதேன்றே தெரியவில்லை. இவரை எதிர்த்து எதுவும் செய்யமுடியாது என்பது எனக்கும் தெரியும்.
ஒருமுறை மாயா என்னை “நீ ஒரு பக்கா பேசிக் பேக்கேஜ் டீ” என்று நகையாடியது ஏனோ நினைவுக்கு வந்துபோனது. அந்த நீளமான மழைக்கால இரவைப் போல என் எதிர்காலம் இருண்டிருப்பதாகத் தோன்றியது. அப்படியே தூங்கிப்போனேன்.
******
இன்று:
மெல்ல வானம் புலர்ந்து முழுவதுமாக இரவுப்போர்வை கலைந்து விடிந்து வெயிலேறிக்கொண்டிருந்தது. கண்ணைக் கசக்கித் திறக்கையில் பழகிய வேட்டி சட்டையில் என் அப்பா கண்முன்.. ச்சே இல்லை.. என் தம்பிதான் அது. ஒருவரது உடையணிந்தால் அவரைப் போலவே தெரிவது என்னவோ? ஒரு வேளை நான் என் அப்பாவை இப்போது அதிகம் தேடுகிறேனா?? இன்றைய நாளை நினைத்தால் கலக்கமாக இருந்தது. எழுந்து கிளம்பினேன்..
அன்றைய நாள் முழுவதும் அவரது கண்களில் படாமல் நடமாடிக் கொண்டிருந்தேன். ஆனால் மாலை அவரது வீட்டிற்கு சென்று மாதிரி அறிக்கையின் இறுதி வடிவத்தை முடிவு செய்தே ஆக வேண்டும். அது அவருக்கும் தெரியும். இருந்தும் சில அழைப்புகள் மற்றும் நான்கு பேரிடம் என்னைப் பார்க்க வேண்டுமென்றும் கூறித் தன் இருப்பை உறுதி செய்துவிட்டார். நான் போயே ஆக வேண்டும்.
உண்மையில் இந்தப் பிறவி ஒரு பெருங்கடல் போலவே காட்சியளித்தது. தனியே நீந்திக் கடப்பதென்பது கற்பனைக்கும் எட்டாத காரியம். நான் மைக்கேல் ஃபெல்ப்ஸா என்ன?
புகார் கொடுக்கலாம் என்பது நடைமுறையில் இன்னும் சில சிக்கல்களை உண்டுபண்ணுமெனவும் புரிந்தது. யாரிடமும் கூறினாலும் நம்புவதும் கடினம். அவ்வளவு ஆச்சாரமானவர் என்று பெயர் அவருக்கு.
ஆண்களின் சாமர்த்தியமே அதுதான். உடனே ஆதாரம் கேட்பார்கள். ஆறுதல் அறிவுரை என அள்ளி அள்ளி வழங்கி இறுதியில் அவர் செய்தததையே வேறொரு வழியில் செய்யத் துடிப்பார்கள். தலை வெடிப்பது போலிருந்தது. ஏதோ ஒரு பழமொழி வாய் வரை வந்து போனது.
ஆனாலும் சென்றேன். அமைதியாக மடிக்கணினியை எடுத்து அவர் முன் வைத்துத் திறந்தேன். அமர்ந்திருந்த அவர் எழுந்தார்.
“Yes, கமான் மை டியர் கேர்ள்.. யூ ஹேவ் டூ நோ திஸ். There are 3 A s important for Life. Acceptance, Admittance and Adjustability. நல்லா படிக்ற பொண்ணும்மா நீ. சாட்ஷாத் அந்த ஸரஸ்வதி தேவியே வந்து குடியிருக்கா உன்கிட்ட. என்ன லக்ஷ்மி தான் இல்ல. It’s not an issue. எல்லாம் தானா அமையுண்டிம்மா. குருதான் வச்ச கண்ணு வாங்காமப் பாக்க ஆரம்பிச்சுனுட்டானே..” என்றபடியே இரு கைகளையும் என் தோளின் மீது வைத்தார். மெல்ல அழுத்த்….
நான் எழுந்தேன். இந்த முறை வீட்டுக்கு வரவில்லை. திரும்பவும் அவரது அறைக்குச் சென்றேன். அவரது மகளின் உடையில். கிட்டத்தட்ட ஒரே அளவுதான். காலையில் கற்பனையில் காட்சியளித்த அப்பாவின் வழிகாட்டலால்..
அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் வீட்டில் சொல்லி இருப்பேனோ? சொல்லித்தான் இது நடந்திருக்குமா?? சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார் போலும். அது அவரது குரலிலும் சொல்லிலும் தெரியத் தொடங்கியது.
“எ… என்ன இது? ஏன் நிர்மலா ட்ரெஸ்ஸ நீ போட்ட்… ஏய் சொல்லிட்.. அய்யோ… என்ன இது முட்டாள் தனம்ம்ம்மா….” குழறத் தொடங்கியது வாய். என் கையையும் பிடிக்க வந்தார்.
நிமிர்ந்தேன்.
“ஒரு நிமிஷம். நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் ஸார். இது ஒரு பெரிய கடல் தான். இத என்னை மாதிரி எந்தத் துணையும் இல்லாம பின்புலம் இல்லாம வெளிய வர்றவங்க நீந்திக் கடக்க முடியாது தான்.
ஆனா அதுக்காக உங்களைப் போல தவளைகள் துணை தேவையில்லை. எங்க அறிவாலும், திறமையாலும் மட்டும் தான் அதைக் கடக்க முடியும். தினமும் இனி உங்க பொண்ணோட ட்ரெஸ்ஸ்ல தான் வருவேன். அதுக்கு மேலயும் இது தொடர்றதா இருந்தா வேற வழி இல்ல. இன்னும் நாலு நாள் டைம் இருக்கு. நான் வேற ப்ராஜெக்ட் பண்ணிக்குறேன். யாராவது கேட்டா நீங்க எதிர்பாக்குற திறமை எங்கிட்ட இல்லன்னு சொல்லி மாறிக்குறேன்.
இது ஏதோ உங்களுக்கு பயந்து எடுத்த முடிவில்ல. உங்களை பயப்படுத்த எடுத்த முடிவும் இல்ல. உங்க கிட்ட குடியிருக்க கலைமகளுக்கு நான் கொடுக்குற மரியாதை. அவளையாவது தப்பா நினைச்சுத் தொடாம இருங்க.
உங்கள நம்பித் தான் எங்களை அனுப்புறாங்க. ஆனா நீங்க கடல் இறைவன்னு கதை சொல்லி வேற எதையோ தேடிக்கிட்டிருக்கீங்க. I can prove myself. அதுவே எனக்குத் தோணி, ஏணி, படகு கப்பல் எல்லாம்.” என்று கூறியபடியே சட்டென என் கையிலிருந்த கீ செயினைத் திறந்து கத்தியால் அவரது விரலில் அழுந்திக் கீறிவிட்டு நகர்ந்தேன்.
ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அலறவும் முடியாமல் வலி தாங்கவும் முடியாமல் பல்லைக்கடித்துக் கொண்டு நிற்கவேண்டிய நிலை..
“என்ன பண்ணிட்ருக்க தெரியுமா??” என்று வெடித்துச் சிதறினார் Dr. ஸ்ரீநிவாச ராகவன்.
“தெரியும் சார். நீங்க சொன்ன பிறவிப் பெருங்கடலில் எதிர்நீச்சல்” என்றேன் இந்த முறை தீர்க்கமாக..
பதறிப் போனவராய் ரத்தம் சொட்டும் கைகளுடன்
“இல்ல..இல்… இல்லம்மா. நீ எங்கிட்டயே ஸ்காலரா இருந்து பேப்பர் சப்மிட் பண்ணு. என்ன மன்னிச்ச்.. சுடும்மா. இனி இப்படி நடக்காது.. ப்ளீஸ்” என்று துடி துடித்து கைகூப்பினார்.
காலையிலிருந்து மனதை அரித்துக் கொண்டிருந்த பழமொழி இல்லையில்லை அதற்கும் பழைய குறள்மொழி முழுமையாக ஞாபத்துக்கு வந்தது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.
இறைவனடி சேரா தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக