இந்திய தென் எல்லையில், தன்னைக்காணக் கூடியிருந்தவர்களுக்கும், தன்னை மதிக்காமல் குப்புற படுத்து உறங்கி கொண்டிருந்தவர்களுக்கும் பொதுவாக உதித்தான் கதிரவன்.
இரண்டாவது வகையைச் சேரந்த பார்த்தி என்பவன், தன் தாத்தாவிற்காக அன்று நேரமே எழுந்துவிட்டான். முந்தைய நாள் இரவிலிருந்து இப்போதோ, அப்போதோ என இழுத்துக்கொண்டிருந்தது தாத்தாவின் உயிர். பாதி இரவு வரை கண் விழித்து பார்த்துக்கொண்டவன், இப்போது அம்மாவைக் கொஞ்சம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தான், தாத்தா நல்ல நிலையில் இருந்திருந்தால் அவன் முதுகில் தட்டி எழச்சொல்லி இருப்பார்.
அப்பா காலைக்கடனை முடித்து வந்தவராய், "அந்தாளு (பெரியப்பா) வந்தாரா" எனக் கேட்டார், வரவில்லை எனத் தெரிந்துகொண்டே. பெரியப்பா வருவதற்குள் பார்த்தியின் குடும்பம் பற்றி... பெரியப்பா சித்தப்பாவுக்கு இடையில் பார்த்தியின் அப்பா, பெரியவர் முதுகலை படித்தவர், அரசுப்பணி, அவர் குடும்பம் வேறு ஊரில் வாழ்கிறார்கள், அவர் பணி காரணமாக பார்த்தியின் ஊரில் இருந்தார், பாட்டி இறந்தபின் அவர் பார்த்தியின் வீட்டில் தங்குவதில்லை, அந்த ஊரிலேயே அறை எடுத்து தங்கி இருந்தார், சித்தப்பா பக்கத்து ஊரில் குடும்பத்துடன் இருந்தார், அவ்வப்போது வருவார் குடும்பத்துடன்.
பெரியப்பா வந்துவிட்டார், வீட்டுக்குள் நுழையாமல்கூட "என்ன இருக்காரா இல்ல, ஆம்புலன்ஸ வர சொல்லவா?" எனச் சொல்லி வெளி பெஞ்சிலேயே அமர்ந்தார். சத்தம் கேட்டு மேல் வீட்டிலிருந்து வந்த வீட்டு ஓனர் என்ன என்பது போல் பார்க்க, "அது ஒன்னுமில்லைங்க, அந்த நாலடி ரோட்டு இடத்தை விக்க என்னோட கையெழுத்தும் வேணும், பங்க கொடுக்காம கையெழுத்து போட மாட்டேன்னு சொல்லிட்டனுங்க நானு, இந்த ப்ரதர்ஸ் ரெண்டு பேரும் அந்த மனுசன உசுப்பி விட்டு, அவரும் வேற வழியில்லாம இப்படி செஞ்சிட்டிருக்காரு, எனக்கு இந்த சென்டிமென்ட்டெல்லாம் பிடிக்காது, நா ப்ராக்டிகல் பர்ஸன், துட்ட வை... கையெழுத்து போடுறேன், தாயும் புள்ளையும் வேறனானும், வயிறும் சோறும் ஒன்னுதானே" எனச் சொல்லி முடிக்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் வீட்டு ஓனர் அப்பாவைப் பார்க்க, அப்பா பழக்கப்பட்டவராய் தன் தந்தையிடம் அவர் மூத்த மகன் வந்ததைச் சொல்ல முயற்சித்து கொண்டிருந்தார். சரியாக சித்தப்பா வந்து சேர்ந்தார்.
அன்றிரவு தாத்தா இறந்துபோக, பிந்தைய நாட்களில் அந்த நாலடி ரோட்டு இடம் அடிமாட்டு விலைக்கு விற்கபட்டு, அந்த தொகை பெரியப்பாவிடம் கொடுக்கபட்டது, அது அவரது இரண்டு மாத சம்பளம்கூட காணாது. அதன் பின்பு பார்த்தி பள்ளி முடித்து கல்லூரி பயின்று கொண்டிருந்த ஒரு பொழுதில், அவன் சித்தப்பா அவசரமாக போன் செய்து, பெரியப்பா தங்கியிருந்த அறைக்கு போக சொல்ல, அதை பயந்து கொண்டே அப்பாவிடம் சொல்ல, "போய் பாத்துட்டு போன் பண்ணுடா" என அனுப்பி வைத்த அப்பாவை சற்று வியப்புடனும், கொஞ்சம் பெருமையுடனும் பார்த்தான்.
அந்த மேன்சன் ரிசப்சனில் ஓரமாக இருந்த பழைய சோபாவில், அழுக்கு கைலி, கட்டம்போட்ட சட்டையில் முதுகு காட்டி தூங்கிக் கொண்டிருந்தது தன் பெரியப்பாவாக இருந்திடகூடதென நினைத்து ஏமாந்து போனான், பெரியப்பாதான். அந்த மேன்சன் ரூம்பாய் வாயிலாக இரண்டு நாட்களாக பெரியப்பா தந்த தொல்லைகளைக் கேட்டறிந்தான்.
"பெரியப்பா" நீண்ட நாட்களுக்கு பிறகு அழைக்க,
"ம்ம்... யாரு வருணா (அவர் மகன்) அந்த கேமராவ எடுங்க டா, வீட்டு ஓனர நம்பாத" என பிதற்றினார்.
தாத்தா இறந்த அன்று எந்த பெரியப்பாவை அடிக்க வேண்டும் என நினைத்தானோ, அவரை தோள் பிடித்து தூக்கி அமர வைத்தான்.
தன்னைப் பற்றி சொல்லி அவருக்கு சூழ்நிலையைக் கொஞ்சமாக புரியவைக்க, சித்தப்பாவும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருமாக அருகிலிருந்த உணவகத்துக்கு அவரை அழைத்து என்ன "என்ன சாப்பிடுற?" என்ற சித்தப்பாவின் கேள்விக்கு "எதையாச்சும் சொல்லு ரொம்ப பசிக்குது நேத்து மதியம் சாப்பிட்டது" என்று சொன்ன பெரியப்பாவைக் காண பாவமாக இருந்தது.
சாப்பிடும்போது தனக்குத்தானே ஏதோ சொல்லிக்கொண்டார், கேமரா, வீடு, ஏமாந்துடாத என மாறி மாறி.
சாப்பிட்டதும், "சரி... நான் போய் இவர அவங்க வீட்டுல விட்டு வரேன் நீ கிளம்பு, உங்கப்பா எதும் சொல்லுவாப்ல" என்றார் சித்தப்பா. பின்பு பேருந்து நிலையத்தில் அவரை அனுப்பி வைத்து வீட்டுக்கு வந்தான்.
அதன் பின்பு கல்லூரி முடித்து, ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டான் பார்த்தி, அதற்குக் கூட அவன் அப்பாவே உறுதுணையாய் நின்றார். வேலை காரணமாக சொந்த ஊர் விடுத்து சென்னைக்கு வந்தான், தன் அப்பா அம்மாவையும் உடன் அழைத்தே. தன் குழந்தையைக் காண குடும்பத்துடன் வந்திருந்த சித்தப்பாவை பஸ் ஏற்றிவிட சென்ற போது,
"பெரியப்பா எதும் பேசினாரா" என்றான்.
"இல்ல டா, ஆனா ஒரு விஷயம் அந்த மனுசன் நல்லா வாழலடா, காசும் பதவியும் இருக்கும்போது நாந்தான்னு ஆடினாரு, அது இல்லைனு ஆனதும் இப்போ எதை எதையோ நினைச்சு நோயாளி மாதிரி ஆகிட்டாரு, ஆனா உங்கப்பா காசு இல்லாதப்பவும், இப்போ நீ இவ்ளோ வசதியா வச்சிருக்கப்பவும் ஒரே மாதிரி இருக்காரு, ஒருத்தன் செய்யற நல்லதும் கெட்டதும் அவன் வாழ்க்கைய எப்படி மாத்தும்னு ஆராய்ச்சிலாம் செய்ய வேண்டியதில்ல, அவன் வாழுற வாழக்கையே சொல்லிடும்" என முடித்தார். பேருந்தும் வந்தது.
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை.
- Mr. பாமரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக