வெள்ளி, 2 நவம்பர், 2018

13. விண் இன்று பொய்ப்பின்

விண்இன்று பொய்ப்பின்


மழை விடாது பெய்து கொண்டிருக்க, துரையும் அவனது நாய் சிப்பியும் அந்த கப்பலில் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்தார்கள், திடீரென கப்பல் மிக உயரமாக மேலெழுந்து, மீண்டும் நீருக்குள் மூழ்கப்பார்த்தது... துரையின் நாய் தன்னால் முடிந்த மட்டும் நீந்த தொடங்கியது, அதன் நீச்சல் ஏற்படுத்திய அதிர்வால், துரையின் முகத்தில் நீர் தெளிக்க, திடுக்கிட்டு எழுந்தான்.

கனவு.

தனது அறை நண்பன் துணி காயப்போட உதறியபோது தெளித்த நீர் தான் அது, நேரம் பார்க்க கைப்பேசியை எடுத்தான், மூன்று மணி, இன்னும் அரை மணி நேரமிருந்தது,
சரியாக அரைமணி நேரத்தில், கூண்டு கூண்டுகளாக இருக்கும் கண்டெய்னர் அறைகளுக்கு முன்னால் வந்து நிற்கும் வண்டியின் அழைப்பான் ஒலி மூன்று முறை கேட்கும். அது கிளம்புவதற்குள் சென்று அமரவில்லையெனில், அன்றைய நாள் வேலை கிடையாது. பத்து நிமிடம் கண்மூடி இருந்துவிட்டு, குளிக்க சென்றான்.

அவன் குளித்து, கிளம்பி வருவதற்குள் அவனைப் பற்றி.

துரை,

வாழ்ந்து கெட்ட குடும்பம்... அவர்கள் ஊரில் நிறைய வசதியும் மரியாதையும் கொண்ட குடும்பம்... வசதி இருந்ததால்தான் மரியாதை கிடைத்தது என்பதை துரை பின்னாளில் தான் புரிந்து கொண்டான்.

அவர்கள் குடும்பம் உழவுத்தொழிலை நம்பியிருந்தது,

உழவுத்தொழில் மழையை நம்பியிருந்தது,

மழை மனிதனை நம்பியிருந்தது.
மனிதன் இயற்கையை மதிக்காது மழைக்கு வஞ்சனை செய்ய, மழையும் அதையே மனிதனுக்குத் திருப்பிச் செய்தது, வேறு வழியின்றி.

அப்போது இந்த இயற்கை சுழற்சியைப் புரிந்துகொள்ளும் வயதில்லை துரைக்கு... புரிந்துகொள்ளும் வயது வந்தபோது, அவனிடம் பொறுப்பு இல்லாமல் போனது, வழக்கம் போல பங்காளி வீடுகள் துரையின் அப்பாவின் சொத்துக்களைப் பிடுங்கி கொள்ள, இருக்க ஒரு வீடும், உழவுக்கு கொஞ்சம் நிலமும் மட்டுமிருந்தது. நகரமயமாதலில் பலரது நிலங்கள் வீடுகளாக மாற, இவர்கள் நிலமும் அதில் காணாமல் போனது. கடைசியாய் இவர்கள் வீடு மட்டும் இருந்தது, கடனில் எப்போது மூழ்குமென்று தெரியாமல்.

முன்பு சொன்னது போல் வசதி இருந்த காலத்தில் துரை படிப்பின் தேவையை உணரவில்லை...
தேவையை உணர்ந்தபோது, வயதைக் கடந்திருந்தான், எப்படியோ பள்ளிப்படிப்பை முடித்து வைத்திருந்தான், தங்கையைப் பெண் பார்க்க வந்தவர்கள் கேட்ட இருபது சவரன் நகை, துரையின் அத்தனை நாள் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.

ஊரில் நண்பனுடைய வாடகை ஊர்தியை ஓட்டி சொற்ப வருமானம் கண்டு கொண்டிருந்தவனுக்கு, திடீரென லட்சக்கணக்கில் தேவைப்பட்டது.
வீடு கடனில் இருந்ததால் அதைப்பற்றி யோசிக்கவில்லை, நிலம் விற்ற காசுகூட கரைந்து போயிருந்தது. அப்பா இன்னமும் தன்னை வசதியானவர் என்றெண்ணிக் கொண்டேயிருந்தார். மேலும் அவரது முதுமையும் அவரை உழைக்க ஒத்துழைக்கவில்லை.

வேறு வழியின்றி உடனடியாக பாஸ்போர்ட் எடுத்து, குவைத் வந்து சேர்ந்தான்... ஒரு கட்டுமானப் பணியில் உதவியாளனாக இருக்கிறான்... 8 மணி நேர வேலை... 2 மணி நேரக் கட்டாய கூடுதல் பணி... போய்வர இரண்டு மணி நேரம் என 12 மணி நேரம் போக... அவன் அறை அருகே இருக்கும் அண்ணாமலை உணவகத்தில் பகுதி நேர வேலையும் பார்த்து வருகிறான்... இப்போது குளித்துக்கொண்டிருக்கிறான்.

குளித்துவிட்டு, மணி பார்த்தான். 3.25, அவசர அவசரமாக உடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு, கிளம்பி வெளியே வந்தான், வண்டி வந்தது... மூன்றாவது முறை ஒலியெழுப்பும் முன் வண்டியில் ஏறிக் கொண்டான். பாலையின் சூட்டுக்கும், மணல் தெளிக்கும் காற்றுக்கும் இப்போது அவன் பழகியிருந்தான். வேறு வழியும் இல்லை...

12 மணி நேரத்துக்கு பின் தன் அறைக்கு வந்தான். கைப்பேசியில் மிஸ்டு கால்கள்... தங்கை அழைத்திருந்தாள்.

திருப்பி அழைத்தான், "இந்தா ணே அம்மா பேசுது" என்று அம்மாவிடம் கைப்பேசியைத் தந்து நகர.

"சின்னா... சின்னதுரை..."

"சொல்லுமா எப்படி இருக்க சாப்டியா...?"

"எனக்கென்ன கண்ணு, நான் நல்லா இருக்கேன் நீ சாப்பிட்டியா, என்ன சாப்பிட்ட?"

"நானா, சப்பாத்தி சாப்பிட்டேம்மா" பொய் தான்... ஆயிரம் மைலுக்கு அப்புறம் இருப்பவர்களுக்குத் தெரியப் போகுதா என்ன...

"சரி கண்ணு, அப்புறம்..." என இழுத்தாள் அம்மா.

"என்னம்மா... இன்னும் ரெண்டு நாள்ல பணத்த போட்டு விடுறேன், பார்ட் டைம் வேலைக்கு சம்பளம் நாளைக்குதான் வரும்"

"பணத்துக்கில்லடா கண்ணு, அது... நம்ம சிப்பி... செத்து போச்சுடா"

"அய்யோ எப்படிம்மா...???"

"தெரில சின்னா, ரெண்டு நாளா சரியா திங்கல, காலைல நம்ம வீட்டு முன்னாடி இழுத்துட்டிருந்துச்சு, பாம்போ பூச்சியோ தீண்டிருக்கும் போல அப்போதான் பாத்தோம், மாட்டாஸ்பத்திரி போறதுக்குள்ள...." என்றாள் சோகமாய்.

"என்னமா... இவ்ளோ அசால்ட்டா சொல்ற, உங்கள நம்பிதான விட்டு வந்தேன், பாக்க வேண்டிய நேரத்துல சரியா பாத்திருந்தா காப்பாத்திருக்கலாம்ல"

மறுமுனையில் அமைதியே பதிலாக...

கைப்பேசியை வைத்தான்.

"பாக்க வேண்டிய நேரத்துல சரியா பாத்திருந்தா", அவன் வாய்ச்சொல்லே அவனுக்குள் எதிரொலித்தது.

பெய்ய வேண்டிய காலத்துல சரியா மழை பெய்திருந்தா, படிக்க வேண்டிய காலத்துல சரியாக படிச்சிருந்தா, இவன் ஏன் இங்க வேதனை படணும்.

அவனையறியாமல் அவன் கண்கள் ரெண்டு சொட்டு கண்ணீரைச் சிந்தியது, அது பெய்யாத மழையை நினைத்தா, இருளான தன் வாழ்க்கையை நினைத்தா என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக