அறன்
கடும் மழை அனைத்து வீடுகளையும் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது சில நொடிப்பொழுதை பகல் போல் காட்டும் மின்னலோடும் தொடர்ந்த இடி முழக்கத்தோடும்.
இரவு 9 மணி ஆனதாலும், மழையாலும் பாரதி தெருவில் மனித நடமாற்றமற்று நடுஇரவைப்போல் அமைதியில் காட்சியளித்தது.
அந்த மழையிலும் வண்டியிலிருந்து விறு விறு என்று இறங்கிய ஒருவன் நேராக விளக்கு அணையாமல் இருந்த சிறிய வீட்டை நோக்கி ஓடினான். சாத்தப்பட்டிருந்த கேட்டை திறந்து வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ஆக்டிவாவையும், அபாச்சி பைக்கையும் நோட்டமிட்டபடி சென்று கதவை மூன்று முறை தட்டினான்.
சத்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து வந்த 55 வயது மதிப்புடைய ஒருவர் கதவைத் திறந்ததும், வந்திருக்கிறவர் காவலர் என்று தெரிந்ததும் சிறிது படபடப்பில் "சார் நீங்க? " என்று கேட்க, வந்திருந்தவரோ "ராகவன் இருக்காரா?" என்று கேட்டுவிட்டு "நீங்கள் என்ன வேணும் ராகவனுக்கு?"என்று கேட்டார் காவலர்.
"நான் ராகவனின் அப்பா ராஜன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன சார்? ஏதும் பிரச்சனையா?" என்று காவலரிடம் கேட்டார்.
"ஒன்னுமில்லை. ஐயா ராகவன பார்க்கணுமாம். ஒரு சின்ன என்கொயரி அதான் இன்ஸ்பெக்டர் ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வரச்சொன்னார்" என்றார் காவலர்.
பயந்த ராஜன் "சார் வேற எதுவும் இல்லையே" என்று கேட்டுக்கொண்டிருக்கையில்! இவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ராகவன் "யார்ப்பா அது இந்த மழைல?" என்று கேட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தான். அவன் பின்னாடியே ராகவனின் அம்மா மலர்விழியும் வந்தாள்.
காவலரை பார்த்ததும், திடுக்கிட்ட ராகவன் அதை சமாளித்து "சார் என்ன வேணும்?" என்று கேட்க, பதிலுக்குக் காவலரோ "நீங்க தான ராகவன்? ஒரு என்கொயரி... ஸ்டேஷன் வரைக்கும் வாங்க" என்று சொன்னார், கொஞ்சம் அதட்டலாகவே.
ராகவன் "சரி சார், வாங்க போகலாம், அப்பா, நீங்க இருங்க நான் போய்ட்டு வந்துடுறேன்" என்று கூறிவிட்டு காவலரின் வண்டியிலேயே ராகவன் ஏறிக்கொள்ள, வண்டி மாட்டுத்தாவணி R2 காவல் நிலையம் நோக்கிச் சென்றது. ராகவனும் காலையில் நடந்ததை நினைத்துக்கொண்டே சென்றான். அப்போது மழை தூறலாக மாறியிருந்தது.
ராஜனும் தான் அணிந்திருந்த உடையுடனே சென்று ஆக்டிவாவை மிதிக்க மலர்விழியும் பின் அமர்ந்து கொண்டாள். வெளிக்கதவை கூட சாத்தாமல் புறப்பட்டனர் இருவரும். மலர்விழி அழுதுகொண்டே செல்ல ராஜனோ "கொஞ்சம் ஒப்பாரி வைக்காம வர்றியா?" என்று திட்டியதற்கும் காவல்நிலையம் வருவதற்கும் சரியாக இருந்தது.
காவல் ஆய்வாளர் ராகவனிடம் விசாரணையைத் துவங்கியிருந்தார். ராஜனும் மலர்விழியும் பதட்டத்துடன் ராகவன் அருகில் வந்து ஆய்வாளருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ராகவனுக்கு அருகில் அமர்ந்தனர்.
ஆய்வாளர் ராமன் "சொல்லுங்க ராகவன், எதுக்கு எங்களுக்கு சொல்லாம போய்ட்டீங்க? அவனுங்கள பார்த்தீங்களா? உங்களுக்கு இப்போ ஆட்கள காமிச்சா, அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?" என்று அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டார்.
கேள்விகளைக் கேட்ட பிறகு, சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் "சொல்றேன் சார்" என்றான்.
அதிகாலை முடிந்து கதிரவன் அன்று மட்டும் செக்கச் சிவந்த வண்ணத்தை அதிகமாக பரப்பிவிட்டிருந்தான். ராகவனும் உடற்பயிற்சி உடையில் சாலையின் நடைபாதையில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தான்.
அப்போது வயது முதிர்ந்த ஒரு ஜோடியும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். ராகவனுக்கும் அவர்களுக்கும் ஒரு 80 அடி தூரம் இருந்தது.
அப்போது வெகு தூரத்தில் இருந்து ஹார்ன் ஒலி எழுப்பிக்கொண்டே ஒரு கார் படுவேகத்தில் அவர்கள் பின்வருவதை உணர்ந்த அம்முதியவர்கள், தொடர்ந்த கேட்ட ஹார்ன் ஒலியால் பயந்து, ஓரத்தில் ஒதுங்கி நின்று திரும்பிப் பார்க்க அவர்களை கடந்து சென்றது ஒரு விலையுயர்ந்த கார் "ஹே ஹே" என்ற பலத்த கூச்சலுடன்.
சிறிது நேரம் திடுக்கிட்டவர்கள், பயத்திலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வந்து அவர்களுக்குள் பேச முற்பட்ட போது, அப்பெண்மணி தன் கழுத்தில் யாரோ கை வைத்ததை உணர்வதற்குள், திடீரென்று முன்பக்கம் கீழே விழ தரதர வென்று இழுத்துச் செல்லப்பட்டவள், உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிய வலியால் "அய்யோ ! அம்மா! காப்பாத்துங்க என் தாலி.... " என்று கத்தியவள் திடீரென்று ரோட்டின் ஓரத்தில் மோதி மயக்கமடைந்தாள்.
இழுத்தபோது திருடனின் முகத்தில் இருந்த கர்ச்சீப் விலக, ராகவன் "ஏய்ய் ......." என்று கத்திக்கொண்டே பின் வந்த போது அந்த முகத்தைப் பார்த்து திடுக்கிட்டான். அவன் சிறு வயது பையன். சக கல்லூரி ஜூனியர் மாணவனும் கூட. ஆனால், அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து தப்பிவிட்டார்கள்.
பெண்மணியின் கணவனோ ஏதும் செய்ய இயலாத நிலையில் கதறினான். பிறகு, ராகவன் அந்த பெண்மனியை தன் கையாலே எடுத்துக்கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தான். நடந்த சம்பவத்தை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தபோது ராகவன் அங்கு இல்லை. உதவி செய்தலும் சிக்கல் உண்டாக்கும் என்றென்னும் நடுத்தர குடும்பத்து மனப்பாங்கு ராகவனைச் செலுத்த, எதுக்கு இந்த வீண் பிரச்சனை என்று, அந்தப் பெரியவரிடம் "என்னை எதுவும் சொல்லிடாதீங்க போலீஸ் கேட்டா" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
இதைத்தான் விவரித்தான் காவல் ஆய்வாளரிடம். அவரோ "கொஞ்சம் முயற்சி செய்ங்க ராகவன் . அவனால ஏகப்பட்ட செயின் பறிப்பு சம்பவம் நடந்திருக்கு. ரெண்டு கொலை கூட நடந்திருக்கு. ஒரு துப்பு கெடைச்சா போதும் அவன புடிச்சிடலாம்" என்றார். ஆனால், ராகவன் அப்போதும் எதுக்கு வீண் வம்பு என்று நினைத்து "சரியா தெரியல சார்" என்றான்.
"சரி. நீங்க போலாம்" என்றார் ஆய்வாளர். வீடு வரைக்கும் அமைதியாகவே வந்தனர் அவனும் அவன் பெற்றோரும். ராஜனும், "எதுக்கு இந்த தொந்தரவு நடுராத்திரில. இதெல்லாம் தேவையா?" என்று புலம்பிக்கொண்டே சென்றார். மலர்விழியும் தன் பங்குக்கு "நீ உதவி பண்ணப்போயிதான் இப்போ போலீஸ் ஸ்டேசன் வரை போய்ட்டு வர்ரோம் "என்று கடிந்தாள் ராகவனை.
இதனால் மனம்வெறுத்த ராகவன் தன் அறைக்குள் சென்று கதவை பலமாக சாத்தினான். 'என்னடா இது நல்லது பண்ணாலும் நம்மளையே திட்றாங்க' என்று நினைத்தபடி.
அடுத்த நாட்கள் இயல்பாகவே கடந்தன வழக்கம்போல. கல்லூரிக்கு செல்வதும் வருவதுமாக இருந்தான். ஆனால் அந்த சம்பவம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் அந்தப் பெண்மணியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றவன், அப்பெண்மணி இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் நொடிந்தே போனான் மனதளவில்.
இரண்டு மூன்று நாட்கள் சரியாகச் சாப்பிடாமல் இருந்தான். பிறகு ஒரு மனதைரியம் வந்து "அவனை விடக்கூடாது. தப்பு செஞ்சிட்டு தைரியமா திரியுரானா வெளில. விடக்கூடாது" என்று முடிவு எடுத்தான். ஆம் அவன் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவன் அவன். பழக்கமில்லை என்றாலும் அடிக்கடி புகார்களில் மாட்டுவதால் காண நேரிடும் அவனை. ஆனால் அன்றிலிருந்து அவன் கண்ணில் படவில்லை.
அன்றிலிருந்து ராகவனுக்குள் ஏகப்பட்ட மாற்றம். சிறு உதவி என்றாலும் தேடிப்பிடித்து உதவினான். ராக்கிங் நடந்தாலும் தடுத்து நிறுத்தினான். இடைப்பட்ட காலத்தில் ஒரு அமைப்பை கல்லூரியிலும் ஏற்படுத்தினான். அது 'பொதுப்பிரச்சனைகளில் பங்கெடுக்க வேண்டும்... தீர்வு ஏற்பட உதவ வேண்டும்...' என்பதை மையமாக வைத்து விழிப்புணர்வு அமைப்பு.
காலங்கள் உருண்டோட கல்லூரி வாழ்வு முடிந்து, ஒரு வேலையிலும் அமர்ந்தான். ராகவனையும் கைது செய்யும் நேரம் வந்தது. சத்தியவதி என்ற இளைஞியின் இதயத்தைத் திருடியதால். வரதட்சணை தவிர்த்த மனமகிழ் திருமணம் நடந்தது, நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்துடன். மகிழ்வான வாழ்க்கை அறத்துடன் வாழ விழைந்ததால் ராகவனுக்கு, அவள் மனைவி சத்தியவதியும் இன்னொரு ராகவனையோ/சத்தியவதியையோ இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த தயாரானாள்...
ராகவனும் சத்தியவதியும் புதுவரவிற்கு இளந்தென்றலின் தொடுதலை உணரவைக்க, இளங்காலையில் பறவைகளுடனும் கதிரவனுடனும் போட்டிபோட்டுக்கொண்டு எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
பல முதியவர்களும் இளைஞர்களும் இவர்களுக்கு முன்னும், பின்னும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது "ஏஏஏ.... அம்மா...." என்ற குரலுடன் ஒரு பலத்த சத்தமும் கேட்டது.
திரும்பி பார்த்த ராகவன், அங்கே இரு இளைஞர்கள் தர்ம அடி வாங்கிக்கொண்டிருந்தை அருகில் சென்று பார்த்தவன், சிறிது நகைத்துவிட்டு "போதும் அடிக்காதீங்க. காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்க" என்று கூறிவிட்டு நடைபயிற்சியைத் தொடர்ந்தான்.
ஆம் இம்முறை அவர்களே மாட்டிக்கொண்டார்கள். ஒரு இளைஞனின் சாதுர்யத்தால். திருட முற்பட்ட போது எதிர்பாரா நேரத்தில் ஹெல்மெட் ஒன்று பறந்து வந்து ஓட்டுபவரைத் தாக்க கீழே விழ நேர்ந்தது. அந்த தைரியம் ராகவனின் அறம் அமைப்பால் வார்க்கப்பட்ட ஒன்று இன்று.
ஆம்... ராகவன் அந்த சம்பவத்திற்கு பிறகு பாரதி தெரு உட்பட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து கல்லூரியில் தான் முன்னெடுத்த "அறம்" என்ற இயக்கத்தின் மூலம் இங்கும் சக மனிதனுக்கு அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திக்கொண்டிருக்கிறான்...
💐💐💐.…..
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொழிப்பு: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
- பாஸ்கரன் (மிடில் பென்ச்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக