தளிர்
'தனக்கு முற்றிலும் புதிய அனுபவமாய் இருக்கப் போகிறது இங்கு' என்றெண்ணிய படியே, தனக்கு பணிமாற்றலாகியிருக்கும் வயலூரில் அம்மா உமையாளோடு வந்திறங்கினாள் அனுபமா.
“அம்மா... இங்க பாறேன்.. பெயரைப் போலவே ஊரும் அழகாயிருக்கு... இல்லம்மா?” என்ற அனுபமாவைப் பார்த்தபடியே, “ஆமா அனு.. மனதுக்கும் குளிர்ச்சியா இருக்கு” என்ற உமையாள், “வா.. ஊருக்குள்ள போவோம்” என்றாள். தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு, விசாரித்த படியே ஊர் தலைவரைப் பார்த்து விவரம் கூறினார்கள்.
"ரொம்பவே மகிழ்ச்சிம்மா, உங்களுக்கு ஏற்கனவே வீடு தயாரா இருக்கு,
வாங்க போகலாம்” என்று நடந்து கொண்டே, “ நீ எப்பம்மா பணியில சேரப் போற?” என கேட்டார் தலைவர். அனு, “ஐயா, நான் வீட்டுக்கு போய் உடனே தயாராகி வருகிறேன்” என்றாள்.
சொன்னபடியே அனு பணியைத் தொடங்க பள்ளிக்கு வரவே, அறிமுகங்கள் இனிதே நடந்தேறி தனக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் விவரங்களைத் தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.
மாணாக்கர்கள் பாடத்தில் நன்கு தேர்ந்திருந்தாலும், கிராமத்து வழக்கில்
மாறிப் போயிருந்த தன் பொறுப்பான ஆங்கிலப் பாடத்தை, ‘முழுதும் முடியா
விட்டாலும் தன்னால் முடிந்த வரை நல்ல முறையில் மாற்ற வேண்டும்’ என எண்ணியப்படியே 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை, பாடங்களைக் கற்றுத்தரத் துவங்கினாள்.
தாங்கள் பயந்தபடி அல்லாது, நட்பாய் போதிக்கும் அனுபமாவை மாணாக்கர்களுக்கு பிடித்ததைப் போலவே, அவர்களின் அன்பிலும் கிராமத்து மனிதர்களின் பண்பிலும் புதிய இடமென்ற உணர்வே வராததால் காலாண்டு விடுமுறையிலும் தங்கள் ஊர் சென்று உடனே திரும்பி விட்டனர் உமையாளும், அனுவும்.
தன் தேர்வுத்தாள்களை திருத்தும் பணியிலும், 'விடுமுறையில் தேற்றினால் தான் உண்டு தன் மகளை' என வளர்ந்த குழந்தையை தேற்றுவதைப் போல மகளும் தாயும் அவரவர் பணிகளில் மும்மரமாகி விட, பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் துவங்கிட விடைத்தாள் தரும் பணிகளில் மும்மரமானார்கள் ஆசிரியர்கள்.
எதிர்பாரா மகிழ்ச்சியைப் போல தங்கள் ஆங்கிலப் பாடத்தில் மதிப்பெண்கள் அதிகமானதை எண்ணி பூரித்த மாணாக்கர்களாலும், உடனொத்த ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைந்தாலும் அவள் மனதினோரம் ஒரு சிறு கவலை இருக்கத்தான் செய்தது, தனிப்பட்ட முறையில் விருப்ப மாணவியான மலர்விழி இனி பள்ளிக்கு வரப் போவதில்லை என்பதை அறிந்த பின்னர்.
குடும்ப சூழ்நிலையோ என அனு எண்ணிக் கொண்டிருக்கையில் தங்களுக்குள் பேசியபடியே இரு மாணவிகள் அனுவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஏதோவொரு தயக்கம் அவர்களிடம் இருந்தாலும் நட்போடு பழகும் அனுவின் தேவை அவர்களுக்கு இருப்பதை அவர்களின் பார்வையே உணர்த்தின அனுவிற்கு.
‘இவர்களிடம் மலரைப் பற்றி கேட்கலாமா?' என எண்ணியபடியே வந்த சிறுமிகளிடம்,
“என்னம்மா சொல்லுங்கள், என்ன சொல்லணும் என்கிட்ட?” எனக் கேட்டாள் அனு.
“அது வந்து... டீச்சர்... மலரு நேத்தி அழுதுகிட்டே இவகிட்ட சொன்னாளாம்..
நாளைக்கு மலருக்கும் அவங்க மாமாக்கும் கல்யாணமாம்...” என வருத்தத்தோடு கூறினாள் ஒரு சிறுமி... இதைக் கேட்டு பேசுவதையே மறந்ததைப் போல சொற்களைத் தேடினாள் அனு.
“என்னம்மா சொல்ற?” எனத் தன் கவலையையும் அதிர்ச்சியையும் ஒருசேர தெரிவித்த படி.
“ஆமா டீச்சர்... அவ அப்படிதான் என்கிட்ட சொன்னா, அவ பெரியவ ஆகணும்னு இவ்வளோ நாள் காத்துட்டு இருந்தாங்களாம்... இப்ப பெரியவ ஆகிட்டாள்ல. அதான் கல்யாணத்த பத்தி சொல்லி இதும் சொன்னாங்களாம்” என்றாள் இன்னொரு சிறுமி...
செய்வதறியாது திகைத்தாலும் அதை மறைத்தபடி “சரி நீங்க போங்கம்மா... நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அனு. என்ன செய்யலாம் என்பதை யோசித்தப்படியே அந்த நாளைக் கடத்தினாள் அனு.
விடிந்ததும் ஒரு முடிவிற்கு வந்தவளாய் அம்மாவிடம் சென்று அனைத்தையும் கூறி, அவர்களையும் உடனழைத்துக் கொண்டு திருமணம் நடக்க இருக்கும்
கோவிலுக்கு சென்றாள் அனு.
எதிர்பாராமல் வந்த அனுவைக் கண்டு ஒன்றும் கூறவியலாமல் கலங்கிய கண்களுடன் செல்லும் மலரைப் பார்த்தவாறே உறுதியோடு, “இந்த திருமணத்தை நீங்கள் நிறுத்த வேண்டும்” எனப் பெரியவரிடம் முறையிட்டாள். அவரோ இவளைக் கண்டு கொள்ளாது “இங்க எல்லாம் இது வழக்கம் தான், பாடம் சொல்லித் தர வேலைய மட்டும் நீ பாரும்மா போதும்” என்றார்.
ஒரு நொடி திகைத்து, சற்று உரக்கவே “இந்த ஏற்பாட்டையெல்லாம் இப்போ நிறுத்த போறீங்களா.. இல்லையா?” என கேட்க சலசலப்போடு அமைதியானது கூட்டம். அப்பொழுது மாப்பிள்ளை அலங்காரத்தோடு உள்ளே வந்த மலர்விழியின் மாமா இனியன், “யார் நீங்க? ஏன் நிறுத்தணும் ஏற்பாட்டை?” என கேட்க, மலரின் ஆங்கில ஆசிரியை என அறிமுகப்படுத்தி கொண்டே, "இளம் வயது திருமணம் சட்டப்படி தவறு, எனவே கூடாது, நானும் நடத்த விட மாட்டேன்” என்றாள்.
இனியனோ “எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு, ஆனால் என்ன செய்ய? கணவனை இழந்த என் அக்கா இந்த சமுதாயத்திற்கு பயந்து என்னிடம் கேட்டதால்தான் நான் சம்மதித்தேன்... ஆனாலும், நான் மலரை நன்றாகவே பார்த்துக் கொள்வேன்” என்றான். இதைக் கேட்ட அனுவோ “எனக்குப் புரிகிறது உங்கள் கவலை... இருப்பினும் அவள் பட்டப்படிப்பு வரையாவது பொறுத்திருக்கலாமே?” என்றாள். அமைதியாய்க் கவனித்துக் கொண்டிருந்த மலரின் அம்மாவோ, “பெத்த பிள்ளைக்கு எது செய்யணும்னு பெத்தவங்களுக்கு தெரியும், நீங்க போங்க இங்கருந்து...” என்றாள்.
அதைக் கேட்ட அனுவோ “இப்படித்தான் பெத்தவங்களுக்குத் தெரியும்னு சொல்லியே என் வாழ்க்கை போன மாறி மலரோட வாழ்க்கையை வீணா போக விடமாட்டேன்” எனச் சற்று கோபத்தோடே கூறினாள். அனைவரும் அதைக் கேட்டுத் திகைக்க, உமையாளோ கண்ணீரைக் கட்டுபடுத்த இயலாது நின்றாள்.
அனு தொடர்ந்தாள்.. “ஆமா இப்படித்தான்... 'அப்பா இல்லாத வீடு என் கடமையை முடிக்கணும்'னு, என் அம்மாவும் நான் பள்ளிப்படிப்பு முடிச்ச உடனே திருமணம் செய்து வச்சுட்டாங்க, எனக்கு கிடைத்த புதையல் தான் என் கணவன்.. நல்லாவே பாத்துகிட்டாங்க.. எனக்கு படிப்பு மேல இருக்க ஆர்வத்தைக் கவனிச்சு என்னைப் பட்டப்படிப்பு சேர்க்க ஆசையா முயற்சி செய்துக்கிட்டு இருந்த போது எதிர்பாரா விபத்துல அந்த இடத்துலயே இறந்து போய்டாங்க.. நாலே மாதத்துல இப்படி ஆனாதால ஊரார்கிட்ட நான் வாங்கின ஏச்சும் பேச்சும் கொஞ்சமில்ல.. அப்போ எங்களுக்கு உறுதுணையா இருந்து பாத்துகிட்டது எங்க பள்ளி தமிழாசிரியர் தான்... அதனாலயே ஆசிரியர் பயிற்சில சேர்ந்து இந்த அளவுக்கு சுயமா நிற்கிறேன்... என் வாழ்க்கை மாதிரியே என் மாணவிக்கும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்...” என விசும்பலும் கோபமுமாய் முடித்தாள் அனு.
அவளின் வலியை உணர்ந்தாலும் இந்த சமுதாயத்தின் மீது பயம் கொண்ட மலரின் அம்மாவோ “புரியுது டீச்சர், ஆனா இந்த சமூகத்துல தனியா வயசு பொண்ண வச்சுட்டு எத்தன நாள் நான் நெருப்ப கட்டிட்டு இருக்க முடியும்? சொல்லுங்க நீங்களே..." எனக் கேட்க அனுவோ, “நல்ல கல்விய கொடுங்கம்மா... அது காப்பாத்தும் வாழ்நாள் முழுதும்” என்றபடியே, "நீங்களாது அவங்களுக்கு புரிய வைங்க..." என்றாள் இனியனிடம். அவனும் யோசிக்கலானான்.
மீண்டும் மலரின் அம்மாவிடம் சென்று “உங்களைப் போல தான் எனக்கும் தயக்கம் இருந்தது. வெளியில் சொன்னால் நிம்மதியா வாழ முடியாதே என... ஆனா என்னப் போல இனி யாருடைய வாழ்க்கையையும் பாதித்திட, நான் விட மாட்டேன்.. அதுதான் இனி என் முதல் கடமை... தயவு செய்து திருமணத்தை நிறுத்துங்க” என வாதாடிக் கொண்டிருந்தாள். இனியன் தெளிந்த முடிவெடுத்தவனாய், “நீங்க சொல்றது தான் சரி.. நான் இனி மலருக்கு ஒரு நல்ல வழிகாட்டியா மட்டும் தான் இருப்பேன்... ‘அக்கா உனக்காக தப்பு செய்ய இருந்தேன்... இந்த திருமணம் நடக்காது" எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே... மாலையை கழற்றி எறிய... “இனி நான் எப்பவும் போல பள்ளிக்கூடம் போவனே..” என மகிழும் மகளை பார்த்தப்படியே சரியென்றாள் மலரின் அம்மா...
ஊர் பெரியவரும் “அனு இனி இந்த ஊருல இளம் வயது திருமணம் நடக்காதும்மா... எங்க பிள்ளைங்க எவ்வளவு படிக்க விரும்புதோ அவ்வளவும் படிக்க வைப்போம்மா... கல்வி அழியாத வரை உனக்கும் அழிவில்லம்மா.. “ என்றார்.
அதைக் கேட்டு, "இதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க... ஒரு ஆசிரியையா சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது என் கடமை” என்றபடியே எப்போதும் போல தன் பணிக்குப் புறப்பட்டாள் அனு.
குறள் :
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
சான்றுங்கால் சான்றாத் துணை.
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது, ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
- லதா பாரதி

��
பதிலளிநீக்கு