புதன், 31 அக்டோபர், 2018

8. தரம் நிரந்தரம்



தரம் நிரந்தரம்

மேலத்தெரு முனையில் இருந்த நைனா டீக்கடையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்து இருந்ததால் வழக்கத்துக்கு அதிகமா கூட்டம் இருந்தது. கடையைத் தாண்டி தண்ணி குழாயைக் கடக்கும் போதே கற்பகத்தின் புலம்பல் சத்தம் கேட்டது. மோகன் முகம் வீட்டின் முன் தெரிந்ததுமே ஆரம்பித்து விட்டாள்...

"ஒண்ணா மண்ணா தான பள்ளியோடம் போனிய இப்ப, இவன் மட்டும் பெயிலா போட்டானே... " 

"இப்ப என்னமா... அமுதன மறுபடி பெயிலான பாடத்தை எழுத சொல்லுங்க..." என்றான் மோகன்.

"ஆமாடா... கணக்குப் பேப்பர் மறுபடி எழுதணும். எந்த டூயூட்டோரியல்ல சேரலாம் மாப்ள...?" என்று கேட்டான் அமுதன்.

"கோவில்பட்டியில் ரெண்டு இருக்கே... ஒண்ணு 'சரஸ்வதி டுயூட்ரோரியல்கிளாஸ் நேரம் அதிகம். வைக்கிற டெஸ்ட்ல பாஸ் ஆனா தான் 'ஹால் டிக்கட்கூட கொடுப்பாங்க... டெய்லி டெஸ்ட்,ஹோம் ஒர்க் இப்படி நல்லா சொல்லித்தருவாங்க... நல்ல வாத்தியார்கள் பயிற்சி தரமா இருக்கும் " என்றான் மோகன்.
"ஞே... அட ஏன்டா மாப்ள நீ வேற... அது நமக்கு செட் ஆகாது..."

"ஏன்டா இப்படி... இன்னொன்னு'சேலஞ் டூயூட்டோரியல்பேருக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லபாஸ் மார்க் எடுக்க சொல்லிக் குடுபாங்ககிளாஸ் காலையில் ரெண்டு மணி நேரம் தான்."

"சேலஞ்லையே சேருரேன்.... எப்படியாவது பாஸ் ஆகி, +1'ல சேர்ந்தா போதும்டா..."

"ம்ம்ம்....யோசிச்சி முடிவு பண்ணு... ஸ்கூல்லயே ஒழுங்கா படிச்சி இருக்கலாம்இப்ப இங்கயும் சரியா படிக்காம பாஸ் மார்க்குக்கு மட்டும் படிச்சயினா +1, +2'ல எப்படி படிச்சி பாஸ் ஆவ..?"

"அட ஏன்டா... ரிசல்ட் வந்த நாள்ல இருந்து அம்மா தெனைக்கும் என்ன கண்ணுல பாக்கும் போதெல்லாம் கண்ண கசக்குதுஅப்பா பேசுறதேயில்ல செப்டம்பர்ல எழுதி பாஸ் ஆகி காட்டணும்டா."

"சரிடா நல்லாப் படிஒண்ணாப்புல இருந்து ஒண்ணாப் படிச்சி இப்ப நீ இல்லாமல் தனியா போறத நினைச்சா வெசனமா இருக்கு."

சேலஞ் டுயூட்டோரியலில் சேர்ந்து விட்டான் அமுதன்.

முந்தைய ஆண்டுகளின் இறுதித் தேர்வில் வந்த கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லிக்கொடுத்தார் ஆசிரியர். "இந்த கேள்வித் தாள்களில் இருந்து தான் மாறி மாறி கேட்பாங்கஇந்த கணக்குகளை போட்டு பார்த்தாலே போதும், 60 மார்க் இதில இருந்து தான் வரும், 35 மார்க் எடுப்பது ரொம்ப ஈஸி" என்று கணக்கு ஆசிரியர் சொன்னதும் அமுதனுக்கு மகிழ்ச்சி.

ஆசிரியர் சொல்லிக் கொடுத்த கணக்குகளை நோட்டில் எழுதிக் கொண்டு '60 மார்க்குக்கு எழுதினாலே போதும் 35 மார்க் ஈஸியா வரும்என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு சிரித்தான் அமுதன்.

அமுதனின் அம்மா அழுது ஒப்பாரி வைத்தாள்.

"பள்ளியோடத்துல பத்து வருசம் பொதி மூட்டை தூக்கி சுமந்தும் பேப்பர்ல நம்பரு வரல.. ஒத்த நோட்ட தூக்கிட்டு போயிட்டு ஒண்ணரை மணி நேரத்தில திரும்பி வரும் போதே என் புத்திக்கு ஒரைச்சதே இவன் இப்பவும் பரிட்சைல தேர மாட்டான்னு..."

"இப்ப ஏன் அழுது ஊர கூட்டுறவ... பெரிய பரீட்சை முன்னக்கட்டி அம்ம போட்டதால அவன் பெயிலா போட்டான் விடு கழுதய... இந்த முறையாவது ஒழுங்கா படிச்சிருக்கணும்... விடு, நீ மருக்கா படிச்சி மார்ச்ல எழுதுடா" என்று அப்பா சொன்னதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

"சரிப்பா..."

கட்டிலில் கூட அமர்ந்து இருந்த மோகனிடம் "தப்பு பண்ணிட்டேன்டா... அம்மாஅப்பாவுக்கு வீணா மனக் கஷ்டம்நேரமும் வீணாகிட்டு..."

"விடுடா இப்ப ஏன் மனசை போட்டு கொழப்புறமுன்னாடியே அனுபவம்,திறமை உள்ளவங்க கிட்ட கத்து இருக்கணும். இப்ப பொலம்பி என்ன ஆக போகுது..."என்றான் மோகன்.

"மறுபடியும் சரஸ்வதி டுயூட்டோரியல்ல சேர்ந்து பாஸ் ஆகுறது மட்டும்மில்ல நல்ல மார்க் எடுத்து தான் +1'ல சேருவேன்" என்றான் அமுதன்.
  •  

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."
(அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் - 8)  

பொருள்:
அறக்கடலாக விளங்கும் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான
காரியமல்ல.


- அ. வளர்மதி

7. மனக்கவலை மாற்றல் அரிது

மனக்கவலை மாற்றல் அரிது

பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட பாய்லர் தொழிற்சாலை கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே இயங்கிக்கொண்டு இருந்தது.

நிறைய துறைகள், நிறைய வேலைகள், நிறைய இரும்பு, நிறைய இயந்திரங்கள், நிறைய மனிதர்கள் இப்படி அனைத்தும் நிறைந்திருந்தது ஒரு மனிதனின் மனம் தவிர.

சத்திய நாராயணன் அங்கு குவாலிடி டிபார்ட்மென்டின் ஜிஎம், அவருக்கு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக, அமெரிக்காவில் தன் மகன் வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்து, ஒரு எண்ணம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

அந்த உறுத்தலுக்குக் காரணம் அதே டிபார்ட்மென்டில் சாதாரண க்ளார்க்காக இருக்கும் சுந்தரமே. வயது அடிப்படையில் இருவரும் சமமானவர்களே. தொழிற்சாலையில் இருவரும் ஒரே சமயத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களே, ஒரு ப்ரொமோஷனில் ஹிந்தி சுந்தரத்தைக் கீழே தள்ளிவிட, அது தெரிந்த சத்தியா மேலே அதற்கும் மேலே என சென்றார்.
தருக்கப்படி, சுந்தரமே சத்தியாவை நினைத்து பொறாமையோ, வெறுப்போ கொண்டிருக்க வேண்டும், அது அப்படியே இடம் மாறியிருந்தது, லட்சம் சம்பளம், சொத்து, மகன், மகள், பேரன், பேத்தி என இத்தனை இருந்தும் சுந்தரத்தின் நிறைவான புன்னகை முகத்தின் முன்பு, சத்தியா ஒன்றுமில்லாதவராக நின்றார். 

அமெரிக்காவில் தனது மகன் வீட்டில் இருந்தபோது, "என்னப்பா எப்பவும் ஒரு மாதிரி உம்முனே இருக்க" எனக் கேட்க

"அப்படிலாம் இல்லடா, ட்ராவல் பண்ணி வந்தேன்ல அதுதான்" என்றார் சத்தியா.

"இல்லப்பா நீ அங்கயும் இப்படித்தான் இருக்கியாம், அம்மா சொன்னாங்க, எதும் கவலை இருந்தா சொல்லிடுப்பா, உடம்புக்கு எதும் பண்ணுதா" 

"ச்ச அவளுக்கு வேற வேலை என்ன...? நான் சந்தோஷமாதான் இருக்கேன்" என மழுப்பினார், பின்புதான் அதன் உண்மையை உணர்ந்தார். ஆம், அவர் சந்தோஷமாக இல்லை, ஏன் என அவரையே கேட்டுக்கொண்டார். விடை தான் இல்லை.

காலை டீ ப்ரேக்கில் ப்யூனை அழைத்து, சுந்தரத்தை தனது ரூமுக்கு வர சொன்னார்.

வந்தார் சுந்தரம்.

"வணக்கம் சார்"

"ம்ம் நல்லாருக்கியா சுந்தரம்?"

சத்தியாவை வினோதமாய் பார்த்து "ஏன் சார் நல்லாதானே இருக்கேன், எதும் பிரச்சினையா சார்...?" என்றார்.

"கேன்டீன் போலாமா சுந்தா" அவர்கள் ஒன்றாக வேலை பார்த்தபோது அழைத்த பெயர்.

கேண்டீனில் அவ்வளவாக கூட்டமில்லை, 

"சொல்லுங்க சார்"

"அட சார் சார்னு சொல்லாத டா"

"சரி சொல்லு சத்யா என்ன பிரச்சினை...?"

"எப்படி சொல்றதுனு தெரில சுந்தா, ரெண்டு வருசத்துல ரிடையர் ஆகப் போறேன், வாழ்க்கைல ஓரளவுக்கு எல்லாமே நல்லா செஞ்சிட்டேன், நாளைக்கே நான் செத்தாகூட எம்பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ எந்த பிரச்சினையும் வராத அளவுக்கு சேப்டி பண்ணிட்டேன், ஆனாலும் ஏதோ ஒன்னு குறையுதே சுந்தா, நீ எப்படி இவ்ளோ சந்தோஷமா இருக்க".

 மெல்லிய சிரிப்பை உதிர்த்த சுந்தரம், "நீ லேட்டு சத்யா" என்றார்.

புரியாமல் பார்த்தார் சத்தியா.

"ஒரு பதினஞ்சு வருசத்துக்கு  முன்னாடி நானும் இதே கேள்வியோட தூக்கமில்லாம சுத்தினேன், விடை தேடி அலைஞ்சேன், அப்போ என்னோட கல்யாண நாள் வந்தது, அன்னிக்கு எதார்த்தமா நானும் அவளும் கோவிலுக்கு போனோம், சாமி கும்பிட்டு உக்காந்திருக்கப்போ அவ கேட்டா, "ஏன் இப்படி உம்முனு இருக்கிங்க"னு, ஒன்னுமில்லைனு சமாளிச்சேன், அவ விடுறதா இல்ல, ஒரு ஸ்டேஜ்ல இப்ப நீ எங்கிட்ட சொன்ன மாதிரி நான் குறைனு நினைச்சதெல்லாம் மனசுல தேக்கி வச்சத எல்லாம் அவகிட்ட சொன்னேன். எல்லாத்தையும் கேட்டவ சொன்னா "உங்கள மாதிரி நிறையபேர் நிம்மதினு ஒன்ன வெளில தேடி அலையறாங்க, உண்மைல அது எங்கயோ வெளில இல்ல, நமக்கு இது போதும், இது கிடைக்காம எத்தன பேர் இருக்காங்கனு நினைச்சு திருப்திபட்டுக்கனும், அந்த மன திருப்திதாங்க நிம்மதி"னு சொல்லி முடிச்சா. அவ பேசி முடிச்சோன என மனசு மாறிடுச்சுனு சொல்லல, ஆனா இத்தனை வருஷமா அவகிட்ட சொல்லாம போயிட்டமேனுதான் வருத்தப்பட்டேன், உள்ள இருந்த தெய்வத்துகிட்ட சொல்லிருந்தா அது எனக்கு பதில் சொல்லி தெளிவு படுத்தியிருக்குமா தெரில, ஆனா என் மனைவி அத செஞ்சா, அதுல இருந்து என்னோட எல்லா கவலையும் அவகிட்ட இறக்கி வச்சுட்டு நான் நிம்மதியா இருக்கேன்" என பேசிமுடித்தார்.

அமைதியாக இருந்த சத்தியாவை பார்த்து "நீயும் அவங்கள கூட்டி கோவிலுக்கு போ இன்னிக்கு" என்றார்.

"தேவையில்ல சுந்தா, நான் இப்ப வருத்தப்படுறேன், இத்தனை நாளா என்னோட கவலைய உன்கிட்ட சொல்லாம விட்டுட்டனேன்னு, நாம நல்லா இருக்கணும்னு யாரெல்லாம் யோசிக்கறாங்களோ அவங்க எல்லாம் நமக்கு மேலானவங்கதான், என்ன அது யாருனு கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம்" எனச் சொல்லி முடிக்கவும், தொழிற்சாலை வேலை முடிந்ததற்கான பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
                                                                                                                                Mr.பாமரன்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது.

கடவுள் வாழ்த்து
குறள் எண் -7

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

6. தப்பில்ல...?

தப்பில்ல….?!
எந்த விருத வாங்கக்கூடாதுனு நினைச்சனோ அந்த விருத வாங்கிருக்கேன். ஆனா, இந்த விருதுக்கு முழுக்க முழுக்க நான் தான் தகுதியானவனா இருப்பேன்னு நினைக்கிறேன்.

பெருமையா வெளிக்காட்ட முடியாத ஒன்ன கையில சுமந்துருக்கேன். பரவால்ல மனசுக்குள்ளயே வச்சுக்குறேன், வாழ்க்கைய கடந்து போகறப்ப பயன்படும். நாளைக்கு ஆர அமர உட்காந்து பேச முடியாது. அதனால இந்த மேடை வரைக்கும் வந்ததுக்கான தொடக்கத்த இப்பவே சொல்லிட்றேன்.

ஒரு நாப்பத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி அதோ அந்த புதுசா பெயிண்ட் அடிச்சுருக்கிற கேட்டுக்கு வெளிலதான் எங்க ஐயா வருவாருன்னு நானும் என் தம்பியும் எங்க அம்மா கைய பிடிச்சுட்டு நின்னுட்டு இருந்தோம். எனக்கும் என் தம்பிக்கும் பத்து வயசு. எங்க ஐயாரு அப்டியே மீசைய முறுக்கிக்கிட்டு வெளிய வராரு. அவர வரவேற்க ஒரு கூட்டம் காத்துகெடக்கு. எங்க ஐயா வெளில வராரு. காத்திருந்த கூட்டம் முண்டியடிச்சு மாலைபோட்டு அவர வரவேற்குது. மாலைய கழட்டாமலே தூரத்துல இருந்து எங்க அம்மாவ பாக்குறாரு. கழுத்துல இருந்த மாலைய கழட்டிக்கிட்டே வேகமா நடந்து பக்கத்துல வராரு. பக்கத்துல வந்த உடனே உடனே ஒரு அறை. பளார்னு எங்க அம்மா கண்ணத்துல விழுது. பின்னாடியே அவரோட குரல் வருது.

ஏண்டி பயலுங்கள பள்ளிகூடத்துக்கு அனுப்பாம வேலைக்கு அனுப்புறியா? புள்ள வளக்கிற லட்சணத்தப் பாரு அந்த மவளே இந்த மவளேனு திட்டு திட்டுனு திட்டுறாரு. என் தம்பி பயத்துல எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டே மொத மொதல்ல எங்க ஐயாவ பாத்துட்டு இருக்கான். அப்பதான் எங்க இரண்டு பேத்தயும் பாக்குறாரு. பாத்த உடனே “என் சிங்கக்குட்டிங்களா” அப்டினு சந்தோசத்துல புல்லரிச்சு, எங்க ஹைட்டுக்கு கீழ குனிஞ்சு, கையில இருந்த மாலைய எங்க இரண்டு பேருக்கும் போட, அது பூமிய தொட்டு நாங்க தாங்க முடியாத கணத்த எங்கள தாங்குற பூமிக்கு கொடுத்துச்சு. மாலைய பிடிச்சுக்கிட்டே எங்க ஐயாவ பாத்து என் தம்பி கேட்குறான்.

"ஐயா தப்பில்ல?"

முகத்த அடையாளம் வைச்சுக்கிற அளவுக்கு விவரம் தெரிஞ்சப்பறம் மொதமொதல்ல, எங்க ஐயாவ அப்பதான் பாக்குறோம். என் தம்பி அவர்ட கேட்டத முழுசும் காதுலகூட வாங்காம “வாங்கடா என் சிங்கக்குட்டிங்களா"னு இரண்டு பேரையும் தூக்குறாரு. என் தம்பி மறுபடியும் கேட்குறான்.

"ஐயா தப்பில்ல?"

"என்னதுடா தப்பில்ல தப்பில்லனு கேட்குற?” என்றார் சில்வண்டுக்கு பதிலளிக்கும் பருந்தாய்.

"கெட்ட வார்த்தை பேசுறது தப்பில்ல?"

கொஞ்ச நேரம்,  அவன் முகத்த புரியாம பார்த்தவரு,  சிரிச்சுக்கிடே "அது அம்மாவ செல்லமா கொஞ்சுனண்டா செல்லம், தப்பில்ல சரியா"னு தோள்ல இருந்த இரண்டுபேருக்கும் முத்தம் கொடுத்து தோள்ல இருந்து எறக்காம வீடு வரைக்கும் போனாரு.

"தப்பில்ல சரியா… அந்த மவளே இந்த மவளே” னு அவர் நாக்கு சொற்கள தப்பவிட அத என் காது சரியாப் பிடிச்சுடுச்சு. கேட்ட காது  சும்மா இருக்காம அத மனசுக்கு கடத்த மனசு தீப்பொறியா என் நாக்குக்கு கடத்த அடுத்த நாளே ஒரு புதுமொழி பிறந்துடுச்சு இந்த மெய்மொழிக்கு. அறிஞ்சவன் செஞ்ச தப்பு அறியா வயது தெரியா தவறுனு பழமொழியா என் மேல விடிஞ்சுது. விளையாட்டுக்கு ஒருவாட்டி சொல்லிப்பார்க்கலாம்னு ஒருமுறை பேசப்பாக்க  தொடங்கி அப்புறம் சகஜமாபஜனை பாடியது.

பத்து வயசுல தீன்னு  தெரியாம நாக்கு கொடுத்த சுகத்துக்கு பழகி பன்னெண்டு வயசுல அதக் கண் கேட்டுச்சு. பேசுனதயெல்லாம் பார்க்கத் தூண்டுச்சு. என்னனு தெரியாம பேசியத இப்போ தெரிஞ்சுக்கத் தூண்டுச்சு.

இரண்டாவது தப்பு. உரியவரின் பார்வைக்கும் அடுத்தவரின் பார்வைக்கும் தெரியாம எதையெல்லாம் பார்க்கக்கூடாதோ அதையெல்லாம் பார்க்க சொன்னுச்சு கண்ணு. அங்கயும் வந்து நின்னான் பொய்யாமொழி.

"டேய் மெய்மொழி"

"என்னடா?"

"தப்பில்லயா?"

"எது தப்பில்லயா?"

"நீ ஒளிஞ்சு ஒளிஞ்சு பாக்குறியே அதெல்லாம்” என்றான்.

"தப்புதான், ஆனா கண்ணு தானா பாக்க சொல்லுதே. நீயும் அங்க வா பாக்கலாம்” என்றேன். எனக்கெல்லாம் வேணாம்ப்பா என்று ஓடியேவிட்டான்.

"டேய்.. அம்மாட்ட சொல்லிடாதடா பொய்யாமொழி” என்று கத்த அது அவன் காதில் விழுந்ததானுகூட தெரியல.

அன்னைக்கே என்னை தடுத்திருக்கலாம் அவன். அன்று ஓடுனவன் மறுபடியும் வந்தான். வேறு மாதிரியான மனுசனா எனக்கு நேர் எதிர்குணாதசியத்தோட வந்தான். எங்கள இரட்டையர்னு சொன்னா எங்க அம்மாவே நம்பமாட்டாங்க. அப்படி ஒரு நேரெதிர் மாற்றம். ஆனா அவன் வந்த நேரம் மிகவும் தாமதம்.
என் கண் பார்த்தத, என் வாய் பேசியத என் காது மறுபடியும் மறுபடியும் அடிக்கடி கேட்டதயெல்லாம் என்னோட மெய்க்கும், மூச்சுக்கும் பரப்பிவிட்டு அது இரண்டும் என்னை நச்சு எடுத்துட்டிருந்த பதினெட்டாது வயசுல வந்து சேர்ந்தான்.
ஐம்பொறிக்கும் ஒரே நேரத்துல சுகமேத்த நான் பயந்து பயந்து பட்டணத்துக்கு போனத தெரிஞ்சு வந்தானோ? இல்ல தெரியாம வந்தானோ? தெரில. ஆனா நான் எப்போதும் மொத மொதல்ல முதலா தப்பு செய்யத் தொடங்கும்போதெல்லாம் இந்த பொய்யாமொழி வந்துடுவான் கேள்வி கேட்க. பட்டணத்து நான் ஒரு வீட்டுக்குள்ள நுழைய போக, என் கையை பின்னாள இருந்து பிடிச்சு இழுத்து “டேய்” அப்டினு நிப்பாட்டுனான். "
டேய் பொய்யு நீ எங்கடா இங்க?" ன்னேன் கொஞ்சம் பதட்டமாகி ஆனா இயல்பா இருக்கவன்மாதிரி நடிச்சுக்கிட்டே.

"எங்க பேராசிரியர பாக்க வந்தேன்டா, நீ எங்கடா மெய்யு இங்க?"

"தெரிஞ்சவங்கள ஒருத்தவங்கள பாக்க வந்தேன்டா, இங்க இருக்கிறதா சொன்னாங்க, அதான் அப்டியே...”ன்னு மழுப்புனேன், ஆனா கண்டுபிடிச்சுட்டான் நான் எதுக்காக வந்துருக்கேன்னு  

"மெய்யு, இது தப்புடா? வா போலாம்" ன்னு என் கையை பிடித்து இழுத்து தடுக்க

"தப்புதான்டா பொய்யு, ஆனா அடக்க முடியாம இருக்குதே, உன்ன மாதிரி நல்லவனா இருக்க முடியாதுடா என்னால. இந்த மெய் இப்டியே இருந்துக்கிறேன் விடுடா” ன்னேன். உடனே என்ன நினைச்சான்னு தெரியல என் கையப் பிடிச்சுக்கிட்டே

தவறதை தவறெனத் தெரிந்தால்
மனமதை மறுபடி பலபடி சொல்லும்
புலனதை புலன்தந்து கேட்டால்
பலனதை வாழ்நாள் சொல்லும்”. – அப்டின்னு அவனோட ஆராய்ச்சித்தமிழ எதுமே புரியாத, அதுவும் அறிவை பெற்று தர கண், காது, வாய், மூக்கு, தோல்னு எல்லாத்தோட கட்டுப்பாட்டையும் இழந்து இருக்குற  என்கிட்ட சொல்லிட்டு இருந்தான். அவனுக்கு நின்னு பதில் சொல்லகூட மனசில்ல, பொறுமையுமில்ல. அப்போ அவன் கைய உதறிட்டு ஓடுனவன்தான்.
இப்போ ஒன்பது கொலைக்குச் சொந்தக்காரனாக எட்டு பெண்கள்   வன்கொடுமைக்குச் சொந்தக்காரனாக மாபெரும் குடிகாரன்னு பல கெட்ட பெயர் வாங்கியவனா மொத்தத்தில் மெய்மொழிங்கிற பேர வெளியில சொல்லமுடியாத அளவுக்கு வளந்து நிக்கிறேன்.
இதோட தொடக்கம் எங்க தொடங்குச்சுனு தெரில, இதோ இந்த கேட்டுக்கு வெளியில அடக்கமுடியாத நாக்கால  தகாத வார்த்தையை சொன்னாரே எங்க ஐயா அங்கு தொடங்கிருக்கலாம், இல்ல என் தம்பி பேசாம இருந்தும் அத நான் பேசத் தொடங்கினேனே அப்போ தொடங்கியிருக்கலாம், எங்க தொடங்கியதுனு  தெரியல   னா ஐம்புலன்களில் இருந்துதா தொடங்குனுச்சுனு மட்டும் நல்லா புரியுது. இன்னையோட என் தம்பி இறந்து பத்து வருசம் ஆச்சு. என் பதினஞ்ச வருச ஜெயில் வாழ்க்கை இன்னையோட முடியுது. வெளில நான் சின்னவயசுல எங்கய்யா வருவாருனு காத்திருந்தமாதிரி அதே கேட்டுக்கு வெளிய என் பேரன் காத்துட்டு இருக்கான். சுதந்திர தினத்தில விடுதலை. இவர மாதிரி நல்லவனா வாழுனு செத்தும் நெடுநாளைக்கு வாழ்ந்துட்டு இருக்க என் தம்பியோட பேருல வருசா வருசா கொடுக்குற பொய்யாமொழியின் ”குறளாய் வாழ்வாய்” விருது இந்த வருசம் எனக்கு. இந்த மெய்மொழிக்கு.

 ம்ம் தப்பில்ல...!

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

வியாழன், 25 அக்டோபர், 2018

5. கடவுள் இருக்கானா டே?



கடவுள் இருக்கானா டே?




எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் தலையோடு முழுகிவிட்டு, கோவிலுக்கு சென்று சிவதரிசனம் பெறுவதை எப்போதும் தவறியதில்லை கதிரவன். விஸேஷ நாள் மட்டும் அல்லது மனதில் மகிழ்ச்சியோ துன்பமோ எது இருந்தாலும் அதை நந்தியின் காதுக்குள் மெல்லிய சத்தத்துடனும், சிவனின் காதுக்கு மனதுக்குள் மெதுவாக சொல்லி ஓதாவிடில் அது முழுமையானதாக தெரியாது.

இன்று எந்த ஒரு எண்ணமும் அவன் மனதை சூழ்ந்திருக்கவில்லை எனினும், இன்று சித்ராபௌர்ணமி என்பதால் வேறு காரணங்கள் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எப்போதும் போல குளித்துவிட்டு, பாதி உலர்ந்தும் உலராத தலையோடு மனதுக்குள் “அருணாச்சலனே ஈசனே, அன்பே சிவமான நாதனே” என பாடிக்கொண்டே கோவிலுக்கு சென்றான்.

என்ன தான் சித்ராபௌர்ணமியாக இருந்தாலும், அது ஒரு சிற்றூர் என்பதால் ரொம்ப தடபுடலாக எல்லாம் ஏதும் இருக்காது. எப்போதாவது இது போன்ற நல்ல நாளில் பூசாரி வருவார், ஒரு நாள் பூசை செய்வார் செல்வார், இப்படித்தான் இருக்கும். இந்த பூசாரி வருவதுமே முன்பு இருந்த பழைய கோவில் இடித்துவிட்டு கட்டியபிறகு தான். எப்போதும் கோவிலின் ரேடியோ செட்டில் “ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்” என கணபதிக்கு துதி சொல்லிவிட்டு, அடுத்தடுத்து ஒவ்வொரு பக்தி பாடலாக இசைக்கப்படும். பிறகு, கோவிலுக்கு வருபவர்கள் வெறும் கையோடு சென்றால் கையை காண்பிக்க சொல்லி விபூதியும், அர்ச்சனைக்கு பழம் தேங்காய் பூ என கொண்டு சென்றால் பாதி தேங்காய் மூடியும், கொஞ்சம் தீர்த்தமும் கையில் கொஞ்சம் விபூதியும், தட்டில் 50/100 என காணிக்கை வைத்தால் கையில் இடப்பட்ட விபூதி நெற்றியில் வைக்கப்பட்டு “ஷேமமா இருப்பா” என ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இன்றும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு போனான் கதிரவன். ஆனால் அங்கு கோவில் முன்பக்கம் இருந்த தூணுக்கு நடுத்தர வாழைமரங்களும், பின்னே செல்ல செல்ல வாழைக்கன்றுகளும் கட்டப்பட்டு இருந்தது. மாவிலைத் தோரணமும், வேறு ஏதோ ஒரு இலையில் செய்யப்பட்ட நட்சத்திரம் போன்ற தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தது. வெளியே அந்தப்பக்கம், பந்தல் போடப்பட்டு இருந்தது. ஓரமாக சில அரிசி மூட்டைகளும், பெரிய பெரிய பாத்திரங்களும் இருந்தது. சாம்பல் வண்ண முண்டா பனியன் போட்டு நீலக்கலர் லுங்கியை இடுப்பில் இருக்கமாக கட்டிக்கொண்டு, கீழே இருந்த ஜல்லி கரண்டியை எடுத்து கையில் வைத்து அங்கு இருந்த ஒரு சில பொடிப்பசங்களுக்கு எதையோ சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அதை கண்டு “யாருய்யா அது இப்படி அமர்க்களம் பண்ணுறது” என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று கையில் இடப்பட்ட விபூதியை வாங்கிவந்து, நெற்றியில் பூசியது போக மீதியை தூணுக்கு பக்கத்தில் தட்டிவிட்டு அதே தூணில் சாய்ந்து “ஈஸ்வரா” என அமர்ந்தான்.
அப்போது வேகவேகமாக கோவிலுக்கு உள்ளே சென்று பூசாரியிடம் மிகுந்த பூரிப்போடு பேசிக்கொண்டு இருந்தார் புத்தாடை உடுத்திய ராமலிங்கம். அதை பார்த்து தான் கதிரவனுக்கு மொத்தமும் விளங்கியது. “பெரிய இடத்து சம்மந்தம் பொண்ணு நிச்சயம் ஆகி இருக்குன்னு ஊருக்கே விருந்தா” என மெதுவாக முணுமுணுத்து மேலும் என்ன நடக்கிறது என கவனித்தான். பூசாரியிடம் பேசியபடியே வெளியே வந்தவர் “கடவுள் இருக்கான் சாமி, அவன் என்னைய கைவிடலை, ரொம்ப சந்தோசம் சாமி, அதான் நீங்க சொன்னமாதிரியே அன்னதானத்துக்கு ரெடி பண்ணியாச்சு சாமி” என கடவுளை ஒருமையில் சொல்லி பூசாரியை வாக்கியத்திற்கு ஒருமுறை சாமி என பேசியபடி கிளம்பினார்.
இதை கேட்டதும் கதிரவனுக்கு பின்னால் இருந்து ஏளனமாக சிரிக்கும் சத்தம் கேட்க அங்கே பொன்னையன் மாமா படுத்து இருந்தார்.

பொன்னையன் மாமா எப்போதும் கருத்தாக பேசக்கூடியவர். அதனாலே கதிரவனுக்கு அவரிடம் பேசிக்கொண்டு இருப்பது மிகவும் பிடிக்கும். இப்போதும் பேச்சு கொடுத்தான்.

“என்ன மாமா சிரிக்குறீங்க? ஆமா, எங்க மாமா மூணு மாசமா ஆள காணல?”

“நான் காணலையா…? நீ என்ன பாக்கலையா டே…?”

“சரி மாமா, நான் தான் உன்ன பாக்கல, உன்ன காணலை னு கேட்டது தப்புத்தான், உனக்கு தான் ஊருல நடக்குற மொத்தமும் தெரியுமே, என் சங்கதி தெரியாதா? பொண்ணு பாக்க தான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன், இப்போ கூட அத பத்தி தான் வேண்டிக்கிட்டு வந்தேன்”

“சரி டே சரி”

“அப்படியே சிரிச்சிகிட்டே பதில் சொல்லாம என்னைய வேற ஏதாவது பேசி கேக்கவந்தத மறக்கடிச்சுருவீங்களே.! இன்னைக்கு அப்படி நடக்காது மாமோய்.. “கடவுள் இருக்கான்” ன்னு சொன்னதுக்கு எதுக்கு சிரிச்சீங்க?”

“சரி டே சொல்லுறேன், ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு ரெண்டு கேள்வி கேப்பேன், அதுக்கு நீ பதில் சொல்லணும், அதுக்கு அடுத்து பாப்போம்”

“மாமா பேச்சு மாற மாட்டிங்களே?”

“மாட்டேன் டா மாப்ள, கேள்வி கேக்கவா?”

“சரி, கேளு மாமா”

“கடவுள் இருக்கானா டே?”

“இது என்ன மாமா கூறுகெட்ட கேள்வி, இல்லாமையா இத்தன கோவில் குளம்னு இருக்கு, கடவுள் சத்தியமா இருக்கான் மாமா”

“சரி, அப்போ கடவுள்ன்னா யாரு?”

சிறிது யோசித்துவிட்டு “எல்லா உயிருக்கும் நல்லது செய்யுறவன் மாமா” என முடித்தான்.

மறுபடியும் ஒரு ஏளன சிரிப்பு சிரித்துவிட்டு “உனக்கு ஒரு கதை சொல்லுறேன் கேளு, இந்த ராமலிங்கம் இருக்கானே ரெண்டு மாசத்துக்கு முன்ன வேக வேகமா நம்ம ஏரிக்கரை முனியன் கோவில்ல இருந்து வந்துகிட்டு இருந்தான், என்ன டே இவ்வளவு வெரசா போற என்னாச்சுன்னு கேட்டேன், அப்போ தான் சொன்னான் அவங்க பூர்வீக சொத்து பங்காளிக்கு சேரணும்ன்னு தீர்ப்பு ஆகிடுச்சாம், அதுக்கு இங்க என்ன டே பண்ணற ங்க, முனியன் கிட்ட முறை வச்சிட்டு வந்தேன், கடவுள்ன்னு ஒருத்தன் இருந்தா பாத்துப்பான் ன்னுட்டு போனான்”

கதிரவன் தலையை மட்டும் அசைக்க மேலே தொடர்ந்தார் “இவன் என்னடா முனியனுக்கு முறை வச்சான் ன்னு பாக்க போனேன் டே, படியில ரெண்டு துண்டான காசும், பக்கத்துல இருந்த மரத்துல ஒரு கருப்பு கோழியும் துடிச்சிட்டு இருந்தது, அது கால்ல இருந்த காகிதத்துல பங்காளி தன்ராஜ் பேரு எழுதி இருந்தது, அது எதுக்குன்னு தெரியுதா?”

“தெரியுது மாமா”

“இதுக்கு ஏன் சிரிச்சேன்ன்னு யோசிக்கிற, சொல்லுறேன்.. ஏன் டே.. நீ படைச்ச பழத்தையும் ஒரு மூடி தேங்காயையும், கெளம்பும்போது ஏத்திவச்ச விளக்கு வெளிச்சத்துல, திண்ணுட்டு மேல ஊத்தின பால விக்கும்போது குடுச்சிட்டு உனக்கு நல்லதும், மரத்துல தொங்கவிட்ட கோழியில கொழம்பு வச்சி திண்ணுட்டு உனக்கு புடிச்சத செய்ய அவன் என்ன உங்க ஊட்டு வேலக்காரனா டே? கடவுளங்குறவன் யாரு தெரியுமா, உலகத்துல உனக்கு எது மேலயும் நம்பிக்கை இல்லாம போறப்போ, உனக்கு யாரும் துணை இல்லாதப்போ, நம்ம இனிமே வாழவே வேணாம்ன்னு இருக்கப்போ உன் மனசுக்குள்ள உனக்கு நான் இருக்கேன், கவலைப்படாம இருன்னு ஒரு நம்பிக்கையை நட்டுவைப்பான் பாரு அவன் தான் கடவுள், இதெல்லாம் புரிஞ்சா நீங்க இப்படி எனக்கு பொண்ணு பாத்து குடுன்னும், அவன ஒழிச்சு கட்டுண்ணும், கெட்டது நடக்குறப்போ அவனையே திட்டிகிட்டோ, நல்லது நடக்குறப்போ அவன புகழ்ந்துகிட்டோ இருக்கமாட்டிங்க டே.. என்னைக்கோ உருப்படியா வாழ்ந்து நாலுபேரு உங்கள புகழ்ந்து பேசுறமாதிரி நடந்து இருப்பீங்க’ என்ன சொல்லி நடக்க ஆரம்பித்தார் பொன்னையன் மாமா.!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

4. கடவுளடி சேர்ந்தார்க்குத் துன்பம் ஏது?

கடவுளடி சேர்ந்தார்க்கு துன்பம் ஏது!

"யோவ் பெரிசு வந்துட்டியா. மறுபடியும் எவ்ளோ திட்டினாலும் அசிங்கப்படுத்தி கஸ்டம் கொடுத்தாலும் கேட்க மாட்ட போல , நான் காசு கொடுத்து ரோட் காண்ட்ராக்ட் எடுக்கிறேன் அதுல எனக்கும் கமிசன் பார்க்கிறேன் உனக்கென்னயா" என்றான் அரசியல்வாதி பெரியவரைப் பார்த்து.

"எனக்கு எவ்ளோ கஸ்டம் கொடுக்கிறேன்னு நீ தான் சொல்ற. அதெல்லாம் கஸ்டம்னு நான் நினைக்கலையே. எல்லாம் கடவுள் செயல்" என்றார் பெரியவர் நேரு.

"ஒரு MLA ஆகுறது எவ்ளோ கஸ்டம். நான் 50-லட்ச ரூவா செலவு பண்ணி வந்தா, நீ அம்பது காசு செலவு பண்ணி பேப்பர வாங்கி எனக்கு வேட்டு வைக்கிறியா "என்று சொல்லிக்கொண்டே கோவத்தில் பெரியவரை தள்ளிவிட்டு, அடித்தான்.

"இதுவும் கடவுள் தான் கொடுக்கிறார் போ "என்று சொல்லி மேலும் அடித்தான். அரசியல்வாதி மேல் இருந்த பயத்தால் யாரும் தட்டி கேட்க முன்வரவில்லை.
வலியுடனே எந்திரித்து, கீழே விழுந்த மூக்கு கண்ணாடியையும், பேப்பரையும் தூக்கிகொண்டு மறுபடியும் கோர்ட்டுக்கு சென்று கேஸ் போட்டார் பெரியவர் நேரு.

வீட்டுக்கு அழுக்கு சட்டையோடு சென்றவரை பார்த்த அவர் மனைவி
"என்னங்க... ஏதாவது பிரச்சனை பண்ணிகிட்டே வர்ரீங்க டெய்லி "என்று அழுதாள். 

லெட்சுமி "தப்ப தட்டி கேக்குறோம். அவ்வளவுதான். எல்லாம் கடவுள் செயல் டி. கஸ்டமோ சந்தோசமோ எல்லாமே நாம பார்க்குற பார்வைலதான்" என்றார் பெரியவர் நேரு.

இதே போல் ரோட்டில் பிளக்ஸ் வைத்தல்,  இலவச குடிநீரை காசுக்கு விற்பது, பார்க்கிங் அதிகம் வசூலிப்பது, தண்ணீர் டேங்க் கட்டுவதில் முறைகேடு என அந்த MLA செய்த அனைத்து ஊழலையும் ஆதாரத்தோடு கேஸ் போட்டார் பெரியவர்.

பெரியவரின் செயலும் அத்தொகுதி மக்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து கொடுத்தது. இதை பொறுக்காத MLA ரவுடிகளை வீட்டிற்கு அனுப்பி கலாட்டா செய்து பெரியவர் மகளையும் மனைவியையும் தகாத வார்த்தையில் திட்டினர்.

பெரியவர் மகள் ரேஸ்மியோ "எங்க அப்பா தப்பதான் தட்டி கேட்டார். நீங்க நேர்மையா நடந்துக்குற வரைக்கும் அப்டி தான் செய்வார் "என்றாள் தைரியமாக. ரேஸ்மியோ கல்லூரியில் கடைசி வருட படிப்புக்கு பணம் இல்லாததால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள் சில நாட்களாக.
பெரியவர் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை அறிந்தவர் கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றவரை அவர் மனைவி தடுத்து
"மக மேலையும் கம்ப்ளைண்ட் கொடு போ. பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டவக்கில்ல , வாடகைக்கு காசு தர வக்கில்ல இதுல பொது சேவையாம்" என்று திட்டி தீர்த்தாள்.

ஆம் பெரியவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். குமாஸ்தாவாக ஆருந்தவர். அவர் வருமானத்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் உயிர் மட்டுமே பிழைக்க முடியும் உணவை உண்டு. மற்றதை நினைத்து கூட பார்க்க முடியாது.
இதையெல்லாம் பெரியவர் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், குளித்துவிட்டு கடவுள் முன் உட்கார்ந்து பகவத்கீதை படித்துகொண்டிருந்தார்.

அவருக்கு  சந்தோசமும் துன்பமும் செயல்களே. மனதை பாதிப்பதில்லை அவை.

இப்படியே பெரியவரின் போராட்டமும் தொடர அதனால் மக்களின் செல்வாக்கும் உயர, அவள் மகளும் கல்லூரி முடித்து நல்ல வேலையில் சேர, சட்ட மன்ற தேர்தலும் வந்து சேர்ந்தது.

இந்த முறை ஆட்சியை கைப்பற்ற போகும் என்று செல்வாக்கு பெற்ற கட்சி பெரியவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்தது. தேர்தலும் முடிய மிகபிரம்மாண்ட வாக்கு வித்தியாசித்தில் வென்றார் பெரியவர். எதிர்த்து நின்ற ஊழல் அரசியல்வாதி படு மோசமாக தோற்றார்.
இதனால் பெரியவருக்கு அமைச்சர் பொறுப்பு வந்தது. அவரது மகளுக்கும் நல்ல வரன் வந்து வாழ்க்கை சுபமாகச் சென்றது.

அப்போதும் பெரியவர் தட்டிகேட்டர் முதல்வரே தவறு செய்தாலும். அமைச்சர் என்பதால் அவர் துள்ளவும் இல்லை , பந்தா காட்டவும் இல்லை . ஆம் அவருக்கு எல்லாம் கடவுள் செயல்.  கடவுள் எப்படி இரண்டும் கடந்து நிற்கிறாரோ அவ்வழியே பெரியவரும். துன்பமும் இல்லை சந்தோசம் இல்லை.

அதனால்தான் வள்ளுவர் அன்றே சொல்லிருக்கிறார்...

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

3. இறை என்பது

இறை என்பது
மதுரையின் மத்தியான  வெயிலில் தப்பித்த சுகம் அங்கு எல்லோருக்கும் இருந்தது. குற்றாலம் மலையின் குளிரில் மனதை கரைத்து, நாங்கள் எல்லோரும் மலையில் நடந்து கொண்டிருந்தோம்..

நான், ரவி, முருகன் மூவரும் மதுரையில் பிரபல தனியார் நிறுவனத்தில் ஒரே பிரிவில் பணியாற்றுபவர்கள். வார இறுதியில் எங்காவது ஊர் சுற்ற கிளம்புவது எங்கள் விருப்பம். இந்த முறை கூடுதலாக திங்கள்கிழமை அரசு விடுமுறை என்பதால், எங்கள் நிறுவனம் அன்று விடுமுறை விட்டிருந்தது. எனவே, நாங்கள் கூடி பேசி குற்றாலம் போவது என்று முடிவு செய்திருந்தோம். முடிவு செய்து இதோ குற்றாலத்தில் நனைய நனைய, குளிர குளிர, குளித்து மேலே என்ன செய்வது என்று பேசி, மலைக்கு மேலே போவது என்று முடிவு செய்து நடந்துக் கொண்டிருக்கிறோம்.

மலையில் அருவிகள் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தன. இதுவரை பார்த்திராத, பெயர் தெரியாத பல பறவைகள், சிறு சிறு விலங்குகள் கண்ணில் தோன்றி மறைந்தன..

பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் களைப்பு தெரியாமல் நடக்கவைத்தன.

மலையில் கொஞ்சம் வெகு தூரம் வந்ததும் ஓரிடத்தில் அருவி போல விழுந்துகொண்டிருக்க, நாங்கள் அங்கே குளிப்பது என்று முடிவு செய்து ஆடைகளை களைந்து துண்டு மாற்றிக்கொண்டு குளிக்க ஆரம்பித்தோம். சிறுஅருவி தலையில் விழுந்து தலையில் இருந்து கால்வரை ஒரு கிளுகிளுப்பை தந்தது. அருவியில் ஆனந்தமாக குளித்தபடியே ஒருவொருக்கொருவர் பேசியபடியே குளிக்க ஆரமித்தோம்.

“ டேய் ரவி சொர்க்கம்னு சொல்வோமே அது இதுதானே" என்றான் முருகன்.

"கடவுள் போல" என்றான் ரவி கவிதையாக.

"ஆமா கடவுள் போல" என்றேன் கேலியாக.

"கடவுளை இதுல ஏன்டா இழுக்குறிங்க, இல்லாதவர பத்தி எதுக்கு பேசிட்டு.."

"அப்போ நீ கடவுள் இல்லன்னு சொல்றியா.?"

"இல்லன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.!"

"அதெல்லாம் இருக்கார்டா, நாம தான் அதை உணர்றதில்ல" என்றான் முருகன்.   

"அட போடா இருந்தா இங்க ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? இவ்வளவு வறுமைகள்? சோறும், குடிக்க தண்ணியும் இல்லாம தினசரி எத்தனை பேர் சாவுறாங்கனு தெரியுமா.? அங்க யாரும் கடவுளைக் கும்பிடுறதில்லையா.? ஏன் இதனை சாவுகள் அதுக்கு பதில் என்ன?" என்றேன் கோபத்துடன்..

'ஹா ஹா ஹா' என்றொரு சிரிப்பு சத்தம். எல்லோரும் கரையை நோக்கி திரும்பி பார்த்தோம். காவி உடை, வெற்று மார்பு தலை முகம் என எல்லா இடங்களிலும் முடிகள் என ஒரு சாமியார் நின்று என்னை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தார்..

'ஓ.. காவிச்சாமியாராக்கும்..'

"என்ன தம்பி என்னை பார்த்தவுடன் காவிச்சாமி போலிச்சாமினு நினைக்கிறிங்க போல இருக்கே...?"

எனக்குள் ஆச்சரியம் நாம் மனதில் தானே நினைத்தோம் எப்படி இவருக்கு தெரிந்தது.?

"அப்புறம் நீங்க என்ன கடவுள் இல்லங்குற ரகமா.?"

"ஆமா... இருந்தா தான் இருக்குனு சொல்ல முடியும்..."

"அப்போ கண்ணால பார்த்தாதான் நம்புவிங்க இல்லையா.?"

"ஆமா" என்றேன்..

"அப்போ கடவுள்னா யாரு உங்கவரைல...?"

"கடவுள் மனுஷங்க உருவாக்கிக்கிட்ட ஒரு கற்பனை பாத்திரம். ஒரு மனுஷன் செதுக்குன சிலை தான் அது.."

"அப்படினா கடவுள் இருக்குறதா எப்படி சொன்னா நம்புவீங்க..?"

"கடவுள் என் கண் எதிர்க்க தோன்றி நான் தான் கடவுள்னு சொன்னா தான் நம்புவேன்.."

"ஆக உங்க கண்ணுமுன்னாடி இருந்தா தான் அது கடவுள்னா, உங்க கண்ணு முன்னாடி இல்லாத, கண்ணுக்கு தெரியாத ஒன்ன எப்படி உங்களால சுவாசிச்சு வாழ முடியுது.?"

"என்ன சொல்றிங்க?" என்றேன் குழப்பத்துடன்..

"அதாவது காற்று, காற்றை உங்களால எப்படி காற்றுனு சொல்ல முடியுது.? அது உங்க கண்ணுக்கு தெரியால அப்படிங்கிறதால அதை இல்லனு சொல்ல முடியுமா.?"

"அது எப்படி முடியும்..?"

"அது தான் உங்க கண்ணுக்கு தெரியலையே அப்புறம் எப்படி அதை இருக்குனு சொல்றிங்க..?"

"ப்ச்.. இது வீண் விவாதம்.."

"இல்ல சரியான விவாதம் தான் பதில் சொல்லுங்க தம்பி.."

"அப்போ எதை கடவுள்னு சொல்றிங்க.?"

"இயற்கை தான் கடவுள்..."

"இயற்கையா..?"

"நீங்க படிச்சவர்தானே... இந்த பூமிக்கு வெளியே என்ன இருக்குனு தெரியும் தானே.. இந்த பூமிக்கு வெளியே எத்தனையோ கோள்கள் பல கோடி கிரகங்கள் அண்டவீதிகள்னு இப்படி எத்தனையோ இருக்கே...? அதுல ஏன் குறிப்பா இந்த பூமில மட்டும் உயிர்கள் தோன்றணும்.? தன்னைத் தானே சுத்திட்டு ஒரு கோள், அதுக்கு தலைமை போல ஒரு சூரியன், அந்த சூரியன் மூலமா இந்த உலகத்தின் இயக்கம் நடக்குது. கடல்கள், கரையில் மரம் செடி அது கொடுக்குற “உயிர்க் காற்று” அந்த காற்று மூலமா சுவாசிச்சு வாழ்ந்திட்டு இருக்குற நீங்க, நான், உங்க நண்பர்கள், உலகத்துல வாழுற பிற மக்கள், பிற ஜீவராசிகள் எப்படி இவ்வளவு சரியா அமைஞ்சது.? அல்லது எது சரியா அமைச்சது.?"

"அது தான் கடவுள் என்ற இயற்கை.."

"அப்போ கோவில்ல இருக்குறது..? என்றான் ரவி"

"உருவமில்லாத இயற்கையை மக்கள் ஒரு உருவத்துக்குள்ள கொண்டு வர விரும்பி உருவாக்கிக்கொண்டதால வந்தது தான் அது.."

"இந்த உலகம் அழியுதுனா அதுக்கு காரணம் நாம தான்,

நீங்க சொன்னிங்களே பஞ்சம், தண்ணி இல்லாம சாவுராங்கனு. ஏன்னு தெரியுமா காரணம் நாம தான். என்னைக்கு இயற்கையை மீற ஆரமிச்சமோ அன்னைக்கே அதனோட பலனை நாம அனுபவிச்சு தான் ஆகணும்.. பஸ், கார், பைக் பிளாஸ்டிக்  இப்படி மனுஷன் தங்களோட தேவைக்கு உருவாக்கி கொண்டதால உருவான காற்று மாசுபாடு, நிலமாசு, குப்பையை கண்டபடி கொட்டி இயல்பா மண்ணுக்கு போக வேண்டிய மழை தண்ணியை போக விடாம செஞ்சு தண்ணிக்கு தட்டுபாடு வரவைச்சதே மனுஷன் தானே அது தானே தண்ணி பிரச்சனைக்கே காரணம்."

இயற்கையை நாம நல்லா வச்சிக்கிட்டாதானே அது நம்மள நல்லா வச்சுருக்கும்.."

"அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு சாமி..? என்றான் முருகன்"

"போங்க... இயற்கையை வணங்குங்க, நேசியுங்க, இயற்கை தான் கடவுள், கோவில்ல போய் தான் கடவுளை கும்பிடனும்னு அவசியம் இல்ல... உங்களை சுத்தி இருக்குற இயற்கையை அதன் போக்குல விடுறதும் அதை துன்புறுத்தாம இருக்குறதும் போதும், நாம நல்லா வாழ்வோம், இந்த உலகமும் நல்லா வாழும். அதுவும் கடவுள் போல தான்..." என்றவாறு அவர் காட்டை நோக்கி நடந்து மறைந்தார்..

நானும் ரவியும் முருகனும் விக்கித்து போனோம்..


-முற்றும்

திருக்குறள்:   

மலர்மிசை ஏகினான் மாணடி  சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ. உரை : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்...

2. நற்றாள் தொழாரெனின்

நற்றாள் தொழாரெனின்


பல வருடங்களுக்குப் பிறகு, பள்ளி நண்பன் வளவனை அந்த நிலையில் பார்த்ததில் மிகவும் பெருமையாக இருந்தது. 
ஹாக்கி விளையாட்டுக்குப் பெயர் போன கோவில்பட்டியில், ஏழரை கோடி மதிப்பில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி முதல் முறையாக நடைபெறுகிறது. இந்தியாவின் தலைசிறந்த 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. அமைச்சர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடந்த முதல் ஆட்டத்தில் ஒடிசா கிழக்கு கடற்கரை அணி, சென்னை ஐ.ஓ.பி. அணியினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் கோவில்பட்டி ஹாக்கி அகாடமி அணி, புதுச்சேரி ஹாக்கி கிளப் அணியினை எதிர்த்து விளையாட ஆயத்தமாகி இரு அணியின் வீரக்களும் வரிசையில் நிற்க, விளையாட்டுத்துறை அமைச்சர் வீரர்களுக்குக் கை கொடுத்து வாழ்த்துக் கூறியபடி செல்ல, அவருக்குப் பின்னால் மூன்றாவது ஆளாக வளவன் சிரித்த முகத்தோடு கை கொடுத்தபடி சென்றான்.
வளவன் என் பால்ய நண்பன். சிறு வயதில் அவனுக்கு ஹாக்கியில் எந்த திறமையும் கிடையாது. இத்தனைக்கும் அவன் அப்பா தூத்துக்குடி துறைமுக ஹாக்கி அணித் தலைவர். எங்கள் ஊரின் சிறுவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மனோகரன் மாமாவிடம் தினமும் ஏதாவது தண்டனை வாங்குவான்.
மனோகரன் மாமா எங்கள் மாவட்டத்தில் சிறந்த கோல் கீப்பர், இருக்கும் இடத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து வலதோ அல்லது இடது புற மூலையை நோக்கி வரும் பந்தை மின்னல் வேகத்தில் தாவித் தடுக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க கூட்டம் காத்துக்கிடக்கும். அவருடைய அதீத பயிற்சியும் தண்டனையும் தான் இவனை இவ்வளவு உயர்த்தி இருக்கிறது.
பள்ளி முடிந்ததும் மைதானத்திற்கு நேரத்திற்கு வர மாட்டான். தன் அப்பா ஒரு அணியின் தலைவர் என்று எப்போதும் பெருமையாகக் கூறுவான். நேராக நீண்டும் நுனியில் சிறிது வளைந்தும் இருக்கும் சீமக்கருவேல மரத்தின் கம்புகளை கொண்டும், காலண்டர் அட்டைகளைக் காலில் கட்டிக்கொண்டும்  ஹாக்கி விளையாடும் எங்களைப் பார்த்து கிண்டல் பண்ணுவான். அவன் அப்பா அவனுக்கு விலையுறந்த ஹாக்கி ஸ்டிக், ஷூ,  பேட் , என வாங்கி கொடுத்து இருந்தார்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் விளையாட்டுப் பள்ளியில், கோட்டாவில் சேர்ந்து கல்லூரியில் BE பட்டப்படிப்பை முடித்து இன்று தமிழ்நாடு ஹாக்கி அணியில் வீரர்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகவும் தமிழ்நாடு ஹாக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறான். நான் B.A எக்கனாமிக்ஸ் படித்து, விளையாட்டு கோட்டாவில் BSNL'ல கிளார்க் ஆக பணி புரிந்து வருகிறேன். 
கோவில்பட்டி ஹாக்கி அகாடமி அணி, புதுச்சேரி ஹாக்கி கிளப் அணியினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றபின் விஐபி கேலரியில் இருந்த வளவனை சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி  இருக்க முடியும்?
குடும்பம் பிள்ளைகள், வேலை பற்றி எல்லாம் விசாரித்து விட்டு கடைசியாக...
"டேய் வளவா மனோகரன் மாமா உனக்கு சரியாத்தான்டா பயிற்சி குடுத்து இருக்காரு..."
என நான் சொல்லி முடிக்கவும் பலமாகச் சிரித்தான்.
"மனோகரன் மாமாவா? என்னடா மதன் சிரிப்பு காட்டுற... சின்ன வயசுல எத்தனை நாள் ஹாக்கி ஸ்டிக்க தலைக்கு மேல ரெண்டு கையால தூக்கி பிடிச்சிட்டு கிரவுண்ட்ட சுத்தி ஓட விட்டுருக்காரு, காலுக்கு இடையில ஸ்டிக்க வச்சிகிட்டு தவளை மாதிரி குதிச்சி கிரவுண்ட எத்தனை முறை  சுத்தி இருப்பேன்..."
"அதனால என்னடா... உன்னோட ஆட்டத்தில் மனோகரன் மாமா சாயல் அப்படியே இருக்கும், எத்தனை முறை நான் வலது மூலையில் இருந்து பந்தை அடித்து குடுக்க இடது கையால் சும்மா கொத்தி மட்டும் விட்டு கோல் ஆக்கி இருக்க, அது மாதிரி வலது காலை பின்புறம் வளைத்து நிறுத்தி வலது கைய மட்டையில் இறக்கிப் பிடித்து, வலது மூலைக்கு குறி வச்சி இடது மூலையில் கோல் அடிக்கிற உத்தியப் பார்க்கும் போது மனோகரன் மாமாவ அப்படியே உரிச்சி உன்னை செஞ்ச மாதிரி இருக்கும்டா..."
"அதெல்லாம் என் அப்பா இரத்தத்தில் இருந்து எனக்கு வந்தது, அவர் எப்படி பொறுப்பு ஆக முடியும் ஆங்... நான் இப்போ தமிழ்நாடு அணிக்கு பயிற்சி குடுக்குறேன்..."
"என்னடா பேசுற அவர் இல்லைனா கோவில்பட்டி வட்டாரம் தாண்டி நம்ம ஊரு அணி தமிழ்நாடு முழுக்க பேர் வாங்கி இருக்க முடியுமா? அவர் மாதிரி ஆசான்களால் தானடா உன்ன மாதிரி நல்ல ஆசான்கள் உருவாகி இருக்கீங்க... கோவில்பட்டியில் சர்வதேச அளவில ஹாக்கி மைதானம் வந்திருக்கு..."
"அட போடா... என்னை எப்போதுமே அவர் பாராட்டினது கிடையாது... குறை தான் சொல்லுவாரு..."
"நீ அவரை புரிஞ்சிகிட்டது அவ்வளவு தான் போ... உன் அப்பாவுக்காக எப்பவுமே உன் மேல அக்கறை அதிகம், தனக்கு தெரிந்த கலையை, யுக்தியை எல்லாம் உனக்கு அப்படியே சொல்லி கொடுத்து இருக்காரு..."
"சின்ன வயதில் அப்படி என்ன சொல்லி கொடுத்து இருக்காரு... கல்லூரியில, கிளப்ல , மாநில அளவுல விளையாடி நானே கத்துகிட்ட யுக்தி தான்டா அதிகம்."
"டேய் அப்ப நீ கொஞ்ச வருசம் முன்ன தமிழ்நாடு அணியில் விளையாடிட்டு இருக்கும் போது நம்ம ஊரில் தைப் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் நடந்த ஹாக்கி போட்டியில் ஒரு கோல் ஆவது உன்னால, என்னால அவரை எதிர்த்து அடிக்க முடிந்ததா சொல்லு..."
"இப்ப என்னடா... ஒரு வாரம் அம்மா வீட்ல தான் இருப்பேன், என்னைக்குன்னு சொல்லு போட்டி வச்சுப்போம், நீ வேணுமினா அவர் அணியில விளையாடு..."
"என்னடா பேசுற...?"
"உண்மையாவே தான் சொல்லுறேன்.. என்னைக்குனு சொல்லு வரேன்."
"ம்ம்ம்... சரிடா எதுக்கு தள்ளிப் போட்டுகிட்டு சாயங்காலம் நம்ம ஊரு மைதானத்துக்கு வா... வரும் போது உன் மனைவி, மகனை கூப்பிட்டு வா..." 
"எத்தனை மணிக்கு வர...?"
" ஐந்து மணிக்கு வா... கலையைக் கத்துக் கொடுத்த 'ஆசானுக்கும் மாணவனுக்கும்' போட்டி வச்சிக்கிடலாம்." 
மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் கருவேல மரத்தின்
அடியில் நின்று கொண்டும், சைக்கிள், பைக்கின் மீது அமர்ந்து கொண்டும், கோவில்பட்டியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளத் தம் பிள்ளைகள், அண்ணன் , தம்பிகள் பயிற்சியில் ஈடுபடுவதைக் காண கூடி இருந்தனர்.
இனோவா காரில் இருந்து இறங்கி வந்தான் வளவன், பின்னால் அவன் மனைவி மற்றும் ஐந்து வயது மகன் 'கவின்' இறங்கி வந்தனர்.
எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டு ஆவலாய் நலம் விசாரித்து தென்னங்கீற்று பந்தலுக்கு கூட்டி வந்தனர். மனோகரன் மாமாவுக்க்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த நான், வளவனின் மகன் கவினை கையில் பிடித்து மடியில் அமர்த்திக் கொண்டேன். மனோகரன் மாமா கண்கள் விரிய எழுந்து வளவனையும் அவன் மனைவியையும் வரவேற்று அருகில் அமர்த்தி நலம் விசாரித்தவரிடம், ஒரு சில வார்த்தைகளில் பதில் அளித்துவிட்டு உடை மாற்றி, விளையாட ஆயத்தமானான் வளவன்.
நான் தயாராகாமல் கவின் உடன் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்து "நீ விளையாட வரலையா?" என கேட்டவனுக்கு "உன் ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப வருசம் ஆகுது நீ விளையாடு... கொஞ்ச நேரத்தில் உன் எதிர் அணி கோல் கீப்பர ரெடி பண்ணி கூப்பிட்டு வாரேன் உன் திறமையைக் காட்டு" என்று கூறினேன். வளவன் சிரித்து விட்டு சென்று விட்டான்.
மைதானத்தின் ஓரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள், இரண்டு அணிகளாகப் பிரிந்து மைதானத்தில் இறங்கும் முன் பந்தலுக்கு வெளியே நின்று இருந்த மனோகரன் மாமாவுக்கு முன்னால் வந்து குனிந்து வணங்கி மண் தொட்டு நெற்றியில் வைத்து விட்டு, மைதானத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த சுண்ணாம்புக் கோட்டைத் தொட்டு வணங்கி விட்டு மைதானத்திற்குள் ஓடினர்.
வளவனின் மகன் கவினை கையில் பிடித்துக்கொண்டு நான் மைதானத்திற்குள் வருவதை, வளவனும், மைதானத்தில் இருந்த எல்லா வீரர்களும், ஒன்றும் புரியாமல் பார்க்க, மனோகருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. "நீங்க இங்கயே இருங்க மாமா" என்று நான் சொல்லியிருந்ததால் செய்வதறியாது நின்றிருந்தார்.
கோல் போஸ்ட் அருகில் வந்ததும் எல்லோரையும் நோக்கி "ஆசானுக்கும் மாணவனுக்கும் போட்டி நடக்கப் போகுது... கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" எனச் சொல்லி விட்டு வளவனைக் கூப்பிட்டு "வா வந்து பெனால்டி சூட் பண்ணு" என்றேன்.
கோல் போஸ்டின் நடுவில் கையில் சிறியளவிலான 'நீண்டு நுனியில் வளைந்து இருந்த கருவேலமரக் கம்பு, காலில் காலண்டர் அட்டையைக் கட்டிக் கொண்டு, கோலைத் தடுக்க ஆயத்தமாக இரு கைகளையும் விரித்துப் பிடித்து உடலை முன் பக்கம் சிறிது வளைத்து குனிந்து கண்களை கூர்மையாக்கி நின்றிருந்தான் கவின்.
வளவன், என்னை நோக்கி "என்னடா இது?" என்று கோவத்தில் கத்த...
சாந்தமாக பதில் கூறினேன். 

"ஆசானுக்கும் மாணவனுக்கும் இடையே தான போட்டின்னு சொன்னேன், எதிரில் நிற்பது வேறு யாரும் இல்லை அந்த மாணவன் தான் நீ, உன் இடத்தில் நிற்கிறது மானோகர் மாமா, அதுவும் கவின் உன் ரத்தம் போ... போய் கோல் போடு... கவின் மாதிரி தான் நீயும், நானும், நம்ம ஊரூல இருக்குற மத்த எல்லோரும் இந்த கிரவுண்ட்க்கு ஒண்ணும் தெரியாம தான வந்தோம், அரசாங்க வேலை, நல்ல பேரு புகழ் எல்லாம் இந்த கிரவுண்ட்ல இருந்து வந்ததுடா... மேல வந்த ஏணிய... ப்ச்... அடப் போடா...
கண்ணில் நீர் வடிய, கவினைக் கட்டி அனைத்து தூக்கிக் கொண்டு மைதானத்திற்கு வெளியில் கழுத்தில் விசிலோடு நின்று கொண்டிருந்த மனோகர் மாமாவின் காலடியில் ஹாக்கி மட்டையை வைத்து வணங்கி விட்டு "என்னை மன்னிச்சிடுங்க மாமா... எனக்கு எல்லாம் தெரியும்னு மமதை கண்ணை மறைச்சிட்டு, எல்லாம் கத்து கிட்டேன்னு கர்வத்தில் மதன் கிட்ட உங்களை போட்டிக்கு அழைத்தது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க..." என கண் கலங்கினான். மனோகர் மாமா வளவனைக் கட்டித் தழுவி கண்ணீரைத் துடைத்து விட, பார்த்துக் கொண்டிருந்த என் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
  •  
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்." 
(அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து, குறள்-2) 
பொருள் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்புஇல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.