பழி வாங்கும் இருள்
செய்வதறியாது அமர்ந்து இருந்தான் சின்னப்பன். காட்டுக்குயிலின் கானம் அவன் காதைச் சேரவில்லை. கடந்த ஐந்து நாட்களாக காட்டினிலும் மலை மேட்டினிலும் அவனை நகரச்சொல்லி தள்ளிக்கொண்டு இருந்த உயிரின்மீதான பயம் அவனது மொத்த பலத்தையும் ருசித்து முடித்திருந்தது.
புதரின் மறைவில் செய்வதறியாது அமர்ந்து இருக்க, இலைகளின் நடுவில் தூரத்தில் தெரியும் பிரம்மாண்ட அரண்மனையின் உச்சியில் இருந்த கொடி அவனை ‘வந்துவிடு’ என்பது போல் அசைந்தது.
அவன் சென்றே தீர வேண்டும். ஐந்து நாட்களுக்கு முன் எங்கிருந்து பயத்துடன் தப்பித்து வெளியே வந்தானோ, அங்கேயே மீண்டும் அவன் சென்றாக வேண்டும். இந்த கட்டாயத்தை அவனுள் புகுத்தியது, முந்தைய தினம் புதர் மறைவில் அமர்ந்து இருக்கும் பொழுது கேட்ட குரல் தான்.
“தேட தொடங்கி ஐந்து நாள் ஆச்சு. இன்னும் இந்த பையன் நம்ம கையில சிக்கலயே. மாட்டட்டும் தலையை சீவி செங்காளை முன்ன வச்சிடுறேன்”
அந்தி தொடங்கிய வேளையில் அவன் ஒரு பட்டியலிட்டான்; தனக்கு யாரெல்லாம் உதவக்கூடும் என்ற பட்டியல். பாதி ஊரே சேரக்கூடிய பட்டியல்; அவற்றில் மிக முக்கியமானவர்களை மட்டும் முதலில் தேர்வு செய்து கொண்டான்; அதில் மூவர் அரசபணி புரிவோர்.
சின்னப்பன் இட்டப்பட்டியலில் இருந்த அனைவருக்குமே இவன் சிறுசிறு உதவிகள் செய்து இருந்தான். சொல்லும்படியான உதவி இல்லை என்றாலும், அதை சொல்லிக்காட்டி பதிலுதவி பெற்றாக வேண்டிய வேளை வந்திருந்தது.
நிலவு பாதிமுகம் மூடி, மீதிமுகம் கொண்டு உச்சியில் நின்றது. நகரின் நடுவே ஆங்காங்கே கூடி இருந்த இருளில் தஞ்சம் புகுந்து மெல்ல முன்னேறிக்கொண்டு இருந்தான் சின்னப்பன். விடியலிற்குள் அவன் பட்டியலிட்ட சிலரின் யாரேனும் ஒருவர் வீட்டினுள் நுழைந்தாக வேண்டும்.
அகண்ட மரத்தின் பின் இருந்த இருளில் வந்து நின்றவன், தான் தஞ்சம் புகவேண்டியவர்களிடம் எவ்வாறு கேட்க வந்ததை கேட்கத்தொடங்க வேண்டும் என்று யோசிக்க தொடங்கினான்.
சட்டென யாரோ அவன் வாய்ப்பொத்தி, பின் இழுத்து, தரையில் தள்ளினர். விழுந்த வேகத்தில் இடதுபக்கமாக உருள, அவன் விழுந்த இடத்தில் தரையை கொத்தியது ஒரு கத்தி. சட்டென இருகைகளிலும் மண்ணைப்பற்றி, கத்தி விழுந்த திசையை நோக்கி வீசிவிட்டு, எழுந்து ஓடத்தொடங்கினான்.
அவன் எத்தனையோ முறை அலைந்து திரிந்த வீதிகள்தான் என்றாலும் புதிதாக தெரிந்தன. பயத்தின் பிடியில் பித்துப்பிடித்தவன் போல் ஓடிக்கொண்டு இருந்தான். மூச்சுவாங்க ஓர் இடத்தில் நிற்க, அவன் நின்ற இடத்தை ஒருமுறை சுற்றிப்பார்த்தான்.
தான் நிற்பது எந்த இடம் என உணர்ந்தவன், முழங்காலிட்டு அழத் தொடங்கினான். உயிரின் மீதான பயம், ஐந்து நாட்களுக்கு முன்பு அவனை எங்கிருந்து விரட்டத்தொடங்கியதோ, மீண்டும் அங்கேயே வந்து நிறுத்தி இருந்தது.
சின்னப்பனின் முதுகில் விழுந்த மிதி, அவனை தரையில் குப்பற விழவைத்தது. மறுநொடி காதோரத்தில் மோதிய கட்டை, அவனை மயக்க நிலையின் தொடக்க நிலையில் கொண்டு சென்று நிறுத்தியது.
“ஏன்டா ஒரு கொலையை பண்ணி தலைமறைவாயிட்டு, ஐந்து நாள் கழிச்சு ஊருக்குள்ள வந்தா உன்னை ஒன்னும் பண்ண மாட்டாங்கன்னு நினைப்பா!” என்றான் கட்டையில் அடித்தவன்.
சடசடசடவென ஓடிவந்த மூவர், கட்டையை வைத்து இருந்தவன் அருகில் நின்றனர். அவர்களில் ஒருவனிடம், “நீ போய் செங்காளையை அழைச்சிட்டு வா” என்று கூற, ஏவப்பட்டவன் ஓடத்தொடங்கினான்.
“செங்காளை வரதுக்குள்ள இவன் தலையை சீவியாகனும். இல்லன்னா, வந்ததும் இவன் உயிரோட இருக்குறத பார்த்துட்டு சத்தம் போடுவான். நீ போயி அவனை தூக்கிபிடி”
ஒருவன் சின்னப்பனை நோக்கி நகர்ந்தான்.
“கத்தி இருக்குல்ல” என்று கட்டையால் அடித்தவன் கேட்க,
அவனுக்கு அருகில் மீதம் இருந்த ஒருவன், இடுப்பு மறைவில் இருந்து நீண்ட வாள் ஒன்றை எடுத்தான்.
“ம்… தலையை எடுத்துடு”
கத்தியை சுமந்தவன் சின்னப்பனை நோக்கி நகர, முன்பு சென்றவன் அவனைத் தூக்கி முழங்காலிட்டு, கை இரண்டையும் முறுக்கி பின்னிழுத்து, தலை முன் தொங்கியபடி பிடித்து இருந்தான்.
சின்னப்பனின் தலைவாங்க ஓங்கிய வாளின் மீது, பாதி நிலவின் ஒளிப்பட்டு மிளிரியது.
“ஆ…..” என்று வாள் ஓங்கியவன் அலற, அவனது அலறல் சத்தத்தின் நடுவே வாள் தரையில் விழும் சத்தமும் கேட்டது.
கட்டையுடன் இருந்தவன், “ஏய்! என்னடா? என்ன? என்னாச்சு?” என்று கூறியபடி, வாளுடன் வந்தவனை பார்க்க, அவனோ ஒரு கையை மறுகையால் பிடித்து அலறிக்கொண்டு இருந்தான்.
“அண்ணே! நாய்ண்ணே” என்றான் சின்னப்பனை பிடித்துக்கொண்டு இருந்தவன்.
“எது நாயா?” என்று கட்டையை வைத்து இருந்தவன் இருளைத் துளைத்து அதை தேடத்தொடங்க, விழுந்த வாளின் அருகில் நின்று, சின்னப்பனைப் பிடித்து இருந்தவனை பார்த்து, சீற்றத்துடன் கூரிய பற்களை காட்டியபடி நின்றுக்கொண்டு இருந்தது, கருநிற நாய்.
“இது எங்க இருந்துடா வந்தது? அதை அடிச்சி விரட்டு. கத்தி எங்க?”
“அது அந்த நாய்க்கிட்ட தான் இருக்கு”
நாய் இருவரையும் மாறி மாறி பார்த்து சீறிக்கொண்டு இருந்தது. கட்டையை வைத்திருந்தவன், நாயை அடிக்க கையோங்கியபடி முன்வர, “ஏய்!” என்று குரல் கேட்டு இருவரும் திரும்பினர்.
செங்காளை வேகமாக அவர்களிடம் ஓடிவந்தான்.
வந்தவன், “எங்கடா போனீங்க இத்தனை நாளா?”
“நீங்க தானே இவனைக் கொன்னு தலையை கொண்டு வர சொல்லி எங்களை அனுப்புனது. இவனை தேடி தான் ஐந்து நாளா காடு மலையை சுத்திட்டு இருந்தோம். கிடைக்கல; அதை சொல்லிட்டு போக வந்தோம். வந்தா ஊருக்குள்ள நுழைய பார்த்தான். அங்கேயே அடிச்சி கொன்னு இருப்போம். தப்பிச்சி இங்க வந்துட்டான். உங்க அப்பாவை கொன்னது போல உங்களையும் கொல்ல வந்து இருப்பானோ?”
செங்காளை மயங்கிய நிலையில் இருந்த சின்னப்பனை பார்த்தபடி, “அவன் எங்கப்பாவ கொல்லல. ஆனா அவன் முன்னாடி தான் கொன்னு இருக்காங்க”
“கொன்னு இருக்காங்களா! யாரு?”
“கங்கண்ணன். எங்கப்பாவை போல அவனும் நிறைய நிலங்களுக்கு அதிபதி தான். போட்டி பொறாமையில கொன்னு, இவனையும் பயமுறுத்தி தொறத்திட்டு, பழியை இவன்மேல போட்டு இருக்காங்க”
“அட! அப்போ உண்மையான கொலைகாரனை எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“கண்டுபிடிச்சது நாங்க இல்லை, அரசர்”
“பரவால்லயே அரசரே நேரா இறங்குற அளவுக்கு உங்கப்பாவுக்கு செல்வாக்கு இருக்கே!”
“எங்கப்பாவுக்கு செல்வாக்கு இருக்குறது உண்மைதான். ஆனா, இந்த வழக்குல அரசர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முன்வர காரணம் அவன்” என்று சின்னப்பனை கைகாட்ட,
“எது அவனா? அவன் உங்க வீட்டு வேலைக்காரன்ல்ல!”
“ம்ம்… எப்பவும் வீட்டுக்குள்ள தான் இருப்பான். எப்பவாவது தான் வெளிய ஏதாவது வேலைக்காரணமா அனுப்புவோம். அந்த நேரத்துல வெளிய நிறைய பழக்கங்கள் வச்சி இருப்பான் போல. அந்த பழக்கங்கள் எல்லாம் இவன் நல்லவன்ற செய்தியை அரசர் காதுவரை கொண்டு போய் இருக்கு. அவரும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆணையிட, நேத்து தான் கங்கண்ணனை சிறையில் அடைச்சாங்க. அவன் சிறை போன பிறகு தான் எனக்கே இந்த விவரங்கள் தெரியும்”
“அப்போ இவனை?”
“எதுவும் பண்ணவேணாம். நீங்களும் இங்க இருக்கவேணாம். இந்த நிலைமையில நம்மளை யாராவது பார்த்தா நமக்கு தான் பிரச்சனை வரும். அதனால உடனே எல்லாரும் கிளம்புங்க. ம்ம்ம்…” என்று செங்காளை கூற, அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
சின்னப்பனைச் சுற்றி இருந்த அனைவரும் மறந்து போக, மயங்கிய நிலையில் தரையில் விழுந்து, புழுதியும் குருதியுமாய் இருந்த சின்னப்பனின் முகத்தை நாவால் வருடத் தொடங்கியது, கருநிற நாய். அந்நாயிற்கு அவன் செய்த உதவியெல்லாம், தினந்தோறும் அவன் அதை கடக்கையில் அதன் அருகே வீசி சென்ற சிறுசிறு தின்பண்டங்கள் தான்.
‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்’
-முற்றும்-
-ஊதா மூங்கில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக