ஈரம்
ஊரே மழ தண்ணீ இல்லாம வறண்டு கெடக்கு… ஒருத்தர் மொகத்திலும் செழிப்பே இல்ல… என்னத்த வாழுறோம் நாலு காசுக்கு வழியத்து திண்டாடுறோமே மழ இல்லாமனு பொலம்பிக்கிட்டு இருந்தா பொன்னுத்தாயி..
பொன்னுத்தாயி தினமும் காலைல வெள்ளன வெரசா வாரி சுருட்டி எந்திரிச்சி வீட்டுவாசல்ல போய் நின்னு வானத்த பாக்கறத வழக்கமா வச்சிருந்தா..
“என்னாத்தா… என்னாச்சு உனக்கு
தெனத்துக்கும் இப்டி எந்திரிச்சி வானத்தில அப்டி என்னத்த பாத்துட்டு இருக்கனு கேட்டது அப்பு… பொன்னுத்தாயோட ஒரே மவன்”..
“இல்லப்பூ ஏதாவது மழ பெய்யுமானுதா… ஆவணில வெதைக்கணும்… ரெண்டு வருசமா வெளச்ச இல்லாம வெத நெல்லு கூட கையில இல்லிய… கொரலு தழுதழுக்க திண்ணைல உட்காந்தா”..
“கவலபடாத ஆத்தா வெத நெல்ல கவருமெண்டு மானியத்துல குடுக்குதாம்
ஊருக்குள்ள எல்லாரும் வாங்கப் போறாங்களாம்
நானும் போய் வாங்கியாரேன்”..
“சோறு பொங்குறதுக்கு அரிசியும் இல்லை வீட்ல என்னப்பு செய்றது மானம் மனம் இறங்கலைனா நம்ம வயிறும் பட்டினி தான்”
“ரேசன் கடையில் அரிசி வாங்குனீயாத்தா?”
“நம்ம கார்ட்டுக்கு 20 கிலோ கொடுத்தாங்கப்பு.. உங்க அக்கா போன வாரம் வந்து எனக்கு பாதி கொடுனு வாங்கிட்டு போய்ட்டா.. நம்ம என்னைத்தையோ குடிப்போம்.பாவம் அக்கா புள்ள குட்டிகள வச்சுட்டு கஷ்டபடுதுல அது தான் குடுத்துவிட்டேன்”
“சரி ஆத்தா நான் டவுனுக்கு போய் விதை நெல் வாங்கிட்டு அரிசி வாங்கிட்டு வரேன்”
“சரிப்பு”
பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி திண்டுல உட்காந்துக்கிட்டு யோசனைல இருந்தான் அப்பு… முழுசா கிழியாம நஞ்சி போய் இருக்குற 10ரூவா தாள வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்ன்னு..
இருக்குற ரூவாய்ல டவுனுக்கு போகலாம்… திரும்பி வர்றதுக்கு என்ன செய்ய மகராசனுங்க டிக்கெட்டு வெலயும் ஏத்திப்புட்டாங்களே…
வானத்தை பார்த்து.. “என்னிய இப்படி பஞ்ச பாட்டு பாட வெக்கிறீயே கொஞ்சம் கருண காட்ட கூடாதா” சுளிர்னு வெயில் பதிலுக்கு அடித்தது.. வெயில்…
மதியம் மூனு மணி…
அசந்து அந்த மரத்தடில தூங்கிட்டான்..
“டே அப்பு.. எழுந்திரு என்னடா இப்படி
தூங்கிட்டு இருக்கே”
தூக்கிவாரிப் போட எந்திரிச்சி பாத்தா மாணிக்கம்
“என்ன பகல இப்படி தூங்கிட்டு இருக்கே”..
“என்னங்க செய்ய”
“வேலைக்கு எங்காவது போக வேண்டியது தானே டா”
“வெளியூர்க்கு போக படிச்சியிருக்கணும்.. நான் மழைக்கு கூட பள்ளி கூட பக்கம் ஒதுங்கல.. எனக்கு விவசாயத்தை தவிர ஒன்னும் தெரியாது.. பாழா போன மழ இப்படி சதி செஞ்சி என்னிய பஞ்சப்பாட்டு பாட வைக்குதே”
கலங்கிய கண்களுடன் அப்பு….
“சரி கண்ண கசக்காத”
“அந்த இத்துப்போன பத்துரூவாய வச்சக்கிட்டு என்னத்த செய்யப் போற
நா வேணுமினா பட்டணத்தில் ஒருத்தர்ட்ட சொல்லி வேலை வாங்கி தரேன் வந்திரு”.
“வந்துறேன்ங்க”.
“எந்த வேலை சொன்னாலும் செய்வீல?"
“செய்வேன்ங்க”
“சரி டா காலைல எட்ரர காருக்கு கிளம்புவோம் வந்திரு”
ரா முச்சூடும் தூங்காம பொரண்டுக்கிட்டே கிடக்கறத பாத்த பொன்னுத்தாயி…
“என்னப்பு தூங்கலையா”?
“தூக்கம் வரலத்தா”
“எத நினைச்சும் கவலைப்படாதப்பு நாளைக்கு பொழுது நல்ல பொழுதா விடியட்டும் நமக்கு”
“சரித்தா”
வெள்ளெனவே எந்திரிச்சி கெளம்பி
பஸ்டாண்டுக்கு 8 மணிக்குலாம் வந்துட்டான் அப்பு.
பின்னாடி திரும்பி ஆலமரத்தடில இருந்த விநாயகரை பார்த்து ஒரு கும்பிடு போட்டு "அப்பனே புள்ளயாரப்பா ஊருல மழ பெய்யல.. நீயும் கருண காட்டல.. நான் போற காரியத்தலயாவது கருண காட்டு"
மாணிக்கம்…” டே அப்பு வந்துட்டீயா டா”
“வந்துட்டேன்ங்க”
பஸ்ல ஏறி உக்காந்ததும் “டே நான் டிக்கெட் எடுக்கிறேன் டா..உன்கிட்ட அந்த கிழிஞ்ச பத்து தான இருக்கு"
வலியோடு… வெளியே பாக்குற மாதிரி தலைய திருப்பி…
“இறங்கு டா நாம இங்க தான் இறங்கணும்”
இறங்கினான் அப்பு..
“வாடா”…
போனது…. ஒரு பெரிய குடோனுக்கு
“என்னங்க இந்த இடம் இப்படி இருக்கு”..
“வாடா பேசாம வேல வேணுமா? வேணாமா”?
“சரிங்க” பேசாம பின்னாடியே போனான் அப்பு.
“வாடா மாணிக்கம்… என்ன இந்த பக்கம்” குரலே அதட்டியது
“இல்லய்யா… வேலைக்குச் சொல்லிருந்தீங்கள்ல.. அதான்… இவன் தெரிஞ்ச பய தான்… கூட்டியாந்தேன் “
“ஓ.. தம்பி எது சொன்னாலும் செய்வாப்பில்லையா?"
“செய்வாப்லங்கய்யா..."
“நம்ம வேலை பத்தி சொன்னியா எதுவும்..."
“இல்லைங்க யா”
பெரியவர் அப்புவிடம், "தம்பி இது கஷ்டமான வேல…. செஞ்சுருவியா?”
“செய்றேன் யா எதுனாலும்”.
“டே ராசு இங்க வாடா தம்பிக்கு நம்ம வேலய பத்தி சொல்லு”..
ராசு அப்புவ கூட்டிட்டு போயி காதுல சொல்ல…
பகீர்ர்ர்ர்ர்னு முழிச்ச முழி அப்படியே நட்டுக்கிச்சி அப்புவுக்கு.
“சரி டே மாணிக்கம் கூட்டிக்கினு போ சரினா நாளைக்கு வர சொல்லு
வேணான்னா விட்டுரு”..
திகிலடிச்ச மாதிரி அப்பு..
"டே அப்பு எனக்கு உன்ன இப்படி கொண்டு போய் விடனும்னு ஆசை இல்லடா.. உனக்கு ஏதாவது உதவனும்னுதா…. பிடிக்கலேனா செய்யாத ஆனா வேற வேல எங்க இருக்கு இத செஞ்சா பணம் கிடைக்கும்”…
பதிலே பேசாம பஸ்ஸ விட்டு இறங்கி புள்ளயார ஒரு பார்வை பாத்துட்டு வீட்டுக்கு போயிட்டான்.
“வாப்பு.. மொகத்த கழுவு.. நம்ம குஞ்சரம் வீட்ல ரெண்டு உழக்கு அரிசி வாங்கி சமைச்சு வச்சுருக்கேன் சாப்பிடுய்யா”..
போட்டு வைத்த சுடுசோறு. தொண்டையில் இறங்கல.
“என்னப்பு சாப்பிடாம யோசனையில் இருக்க.. அப்புறம் யோசிச்சுக்கலாம் சாப்பிடு”.
“ஆத்தா சாப்பாடு வேணாம்.. பசி இல்ல. நம்ம மாணிக்கம் நல்ல சாப்பாடு வாங்கி கொடுத்தான் சாப்பிட்டுட்டேன்த்தா. மனசும் நிறைஞ்சு வயிறும் நிறைஞ்சு கிடக்கு”..
ரா முழுக்க யோசிச்சி விடிஞ்சும் விடியாம எந்திரிச்சி ஆத்தாட்ட
“காசு இருக்காத்தா பட்டணம் வரை போகணும்”.
“இந்தாப்பு பத்து ரூவா இருக்கு”..
“நான் செய்றேன் யா அந்த வேலைய”
“டே ராசு இங்க வாடா தம்பிக்கு எல்லாத்தையும் சொல்லு”.
எல்லாத்தையும் விளக்கி… பக்கத்தில போய் பேச்சு கொடுத்து வேலைய முடிச்சுட்டு வா. நான் வண்டியில ரெடியா நிக்கிறேன் வந்துருன்னான் ராசு.
வேர்த்து விறுவிறுத்துப் போய் அந்த பெண்ணிடம்
“குடிக்க கொஞ்சம் தண்ணீ குடுங்க”
அந்த பெண் தண்ணீ எடுக்க திரும்ப… அவங்க கழுத்து சங்கிலிய இழுத்து அறுத்தெடுத்துட்டு ஓடி வந்துவிட்டான் அப்பு..
“டே ராசு இந்த வேலை செய்றதுக்கு நான் சாகலாம் போல டா”
“சரி வண்டியில ஏறு பொருளை கொடு”..
ஐயா வேலை நல்ல படியா முடிந்தது…இந்தாங்க பொருள்.
“நான் என்னவோ நினைச்சேன் தம்பி பரவாயில்லையே”..
“இந்தா உன்னுடைய கூலி 500 பிடி. பஸ்க்கு இந்தா 20.வேற வேலை வந்தா சொல்லி அனுப்புறேன் வா”.
“சரிங்கய்யா கடந்தான் அப்பு”.
வழில அரிசி காய்கறியோட வெத நெல்லோட மனசு கனக்க வீட்டுக்கு போனான்.
“என்னப்பு இவ்வளவு சுமை”.
“பட்டணத்தில் ஒரு வேலைய முடிச்சேன் தா அது தான்”.
“முகம் எல்லாம் வாடி இருக்கே”..
“ஆத்தா இந்தரிசியில் சோறு பொங்கி வையி.பசிக்குது சாப்பிடணும்”.
“செத்த நம்ம வயலை போய் பார்த்துட்டு வாங்க பொங்கி வச்சுறேன்”.
பார்த்துட்டு வந்தவனுக்கு மணக்க மணக்க ஆத்தா தட்ல சோறு வைக்க…
சாப்பிட உக்காந்த அப்புவுக்கு கழுத்துல ரத்தம் வடிய கத்துன முகம் கண்ல தெரிய வாய்ல வச்ச சோறு தொண்டக்குழில இறங்கி… எந்திரிச்சிட்டான்
ரெண்டு நாளா புள்ள சரியாவே இல்லாம கெறங்கிக் கெடக்கேனு முனுமுனுத்தபடியே…
காலைல வழக்கம் போல பொன்னுத்தாயி வாசலுக்கு வர…
அங்கன போலீஸ் நிக்கிது
“ஒம்மவன் எங்கே"னு அதட்ட,
“இங்கனதாய்யா இருக்கான்... தப்புத்தண்டாவுக்கெல்லாம் போக மாட்டன்ய்யா" னு பொன்னுத்தாயி பதற..
“அவன வரச் சொல்லும்மா”…
சத்தம் கேட்டு அப்புவே வெளியே வந்துட்டான்..
ஊரே கூடி வேடிக்கை பார்க்க போலீஸ் அவன அடித்து இழுத்துட்டு போகுது.
பின்னாலயே ஓடுறா பொன்னுத்தாயி என்னானு தெரியலியே எம்மவன இழுத்துட்டு போறாங்களேனு…
ஜீப் நிக்கல ஏழைத்தாய் கதறலுக்கு.
ஊர்ப் பெரிசு கால்ல விழுந்து ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறா..
கேஸ் குடுத்தவங்க கழுத்துல கட்டோட நிக்கிறத காட்டி உசிரு போயிருந்தானு கேட்க… பேச்சே வரல பொன்னுத்தாயிக்கு
நம்மூரு பையன்தாங்க இதுக்கு முன்னாடி இப்டி போனதேயில்ல
விவசாயத்த பாத்தமா வீட்ட பாத்தமானு கெடந்தபய… இப்டி அது இதுனு இவனப் பத்தி நல்ல விதமா சொல்லி கெஞ்சி கேஸ போடாம காப்பாத்தி விட்டாரு..
உங்காத்தா பொன்னுத்தாயி பேருக்கேத்த தங்கமானதாச்சே
அந்தம்மா புள்ள நீ இப்டி செஞ்சிட்டியேனு கேட்க…
மடால்னு கால்ல விழுந்தான் அப்பு
“தண்ணீ இல்லாம புத்தி பேதலிச்சி போச்சுய்யா
இனிமே சென்மத்துக்கு இந்த தப்ப செய்ய மாட்டேன்ய்யா”…
எதுவுமே பேசாம வீட்டுச் சொவத்துல சாஞ்சிருக்குற ஆத்தா கால பிடிச்சிக்கிட்டு அழுக… உழைக்கிற மக்கா திருடன்னு பேரு வாங்கவா பொறந்தனு பொன்னுத்தாயி குரலே எழும்பாம கேட்டது நெஞ்சில குத்து வாங்கின மாதிரி நோவ இன்னும் அழுதான்..
மழயும் காணோம் ஆத்துல தண்ணியும் வரல கெணத்துல கண்ணுக்கெட்ன தொலைவுல தண்ணீய காணோம்..கொஞ்சமாச்சும் ஈரத்த அந்த மாரி காட்னாத்தா நாம மானத்தோட பொழைக்கலாம்
எல்லாம் வறண்டு போனா மனுச புத்தி பேதலிச்சி தான் போகும்னு மாரியாத்தா மேல பாரத்தை போட்டுட்டு கண்ணசந்தாங்க விடியும்னு..
விடிஞ்சது நிஜமாவே அப்புவுக்காகவே விடிஞ்சது
ஊர்ப்பெரிசோட சிநேகிதர் புள்ள கூட படிக்கிற புள்ளைக எல்லாம் கிராமத்த சுத்தி பாக்க வந்தவக ஏதோ பேசணும் னு கிராமத்தில எல்லாரையும் வரச் சொன்னாங்க..
“ஏன் இப்படி வறண்டு கிடக்கு வயலெல்லாம்னு அந்த புள்ளைங்க கேட்க வானம் பாத்த பூமி இப்டித்தாம்ப்பா தரிசா கிடக்கும் பாதிக்கு பாதி வருசமானு இவங்க சொல்ல”…
“அதுக்காக மழை இல்லாத காலத்தில் ஏன் கஷ்டப்படனும்னு புள்ளைக திருப்பிக் கேட்க”…
வேறென்ன செய்றதாம் மாரியாத்தா கோவிச்சிக்கிட்டு போறப்ப… னு ஊர்ல கேட்டதும் சிரிச்சாங்க படிச்ச புள்ளைங்க..
“ஊர்ல… ஊரச் சுத்தி இருக்குற குளங்கள தூர் வாரினா மழை பெய்றப்ப அதுல சேர்த்து வச்சிக்கலாம் அடுத்த மழை பெய்யற வரை”
“கேக்க நல்லாதான் இருக்கு
சேத்து வைக்க மழ பெய்யனுமில்ல…”
“நீங்க முதல்ல இத செய்ங்க ”
“அதெல்லாம் கவருமெண்டு செய்யறது”
“நமக்கு வேணும்ங்கறத நாம முதல்ல செய்ய ஆரம்பிச்சா கவர்மென்ட்டு தானா வந்து செய்வாங்க” என்று முடுக்க…
ஊர்ப்பெரிசு அப்புவ கூப்பிட்டு “வழியில்லனு தப்பான வழிக்குப் போயிட்டியே… உங்காத்தாவுக்கு உன்ன விட்டா யாரு இருக்கா இனிமே அந்த மாதிரி நினப்புக்கெல்லாம் தலைமுழுகிரு இந்த தூர்வாருற வேலைக்கு வா கூலி தர்றேன்."
மம்பட்டியோட மொத ஆளா இறங்கினது அப்பு தான் ரெண்டு வாரத்தில ஊரே கூடி எல்லா குளத்தையும் சரி செஞ்சாங்க...
இதுக்குத் தானே இத்தனை வருசமா காத்துக்கிட்டு இருந்தேன் என்பது போல பெய்தது மழை இத்தனை நாளும் பெய்யாததற்கும் சேர்த்து வைத்து
ஒத்தப்பொட்டு தண்ணீ தேங்கல தெருவில அத்தனையும் வடிஞ்சாச் வடிகால் வழியா குளத்துக்கு ததும்பி நிக்கிது குளங்களும் மக்க மனசும்!
ஈரமாய்!
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
-வள்ளுவர்
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் –கலைஞர்
–முற்றும்–
@chandra_kalaS

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக