உயிர் நீர்
கதிரவன் எழும் முன்னரே எழுந்த கருப்பு சேவல் கூரை மீது ஏறி கூவும் ‘கொக்கரக்கோ..’ சத்தம் அவள் காதில் ஒலிக்க.. மிக விரைவாக மரகதம் எழுந்து முதல் நாள் பிடித்திருந்த கடைசி பானையில் உள்ள தண்ணீரை வடித்து வாசலைத் தெளித்து… தெரு மூலையில் இருந்த கார வீட்டில் குடி நீர் வாங்கி வந்து அடுப்பில் ஒல வைத்தாள்.
“தேனு… எழுந்திருத்தா பள்ளியோடத்துக்கு போகணும்ல…”
தேன்மொழி எழுந்து, தொட்டியின் அடியில் இருந்த தண்ணீரைக் குனிந்து செம்பில் எடுத்து முகம் கழுவி விட்டு, விடுபட்டு இருந்த வீட்டுப்பாடங்களைப் படித்து, எழுதிவிட்டுப் புத்தங்களைச் சரி செய்து பையில் வைத்து விட்டு… குளிக்கக் கிளம்பினாள்.
“ஆத்தா ஒரு கொடம் தண்ணி தான் இருக்கு…”
“இத வச்சு இன்னைக்கு குளிச்சுட்டு போ தா..”
குளிச்சு கெளம்பி வந்த தேன்மொழி, “சரி தா சோறு பொங்கிட்டீயா? சோறு கொண்டு போகணும் நேரமாச்சு…”
“அங்க உரியில் கட்டி வச்சுயிருக்கேன் எடுத்துட்டு போ… பார்த்து… சிந்தாம” என்ற மரகதம் வீட்டை விட்டு வாசலுக்கு வந்தாள்.
தண்ணீர் இல்லாத கழனித்தொட்டிய வெறித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள் மரகதம்.
“என்ன ஆத்தா இப்படி உடைஞ்சு போய் நிக்கிற…?”
“இரண்டு வருசமா மழ தண்ணி
இல்ல… குளம் குட்டை எல்லாம் காஞ்சி கெடக்கு… ரெண்டு நாளைக்கு ஒருக்கா வர்ற காவிரி தண்ணியையும் காணோம்… பாரு, ஆடு மாடுக்கு வைக்க கூட தண்ணி இல்லாம என்ன செய்யனு மதி மயங்கி இருக்கேன் தா… ஆத்தாடி நீ பள்ளியோடம் போ.. நேரமாச்சு… அப்புறம் வேகமா போக வேர்த்துரும் என் பிள்ளைக்கு…. போய்ட்டு வா தங்கம்…”
“வரேன் ஆத்தா”
அம்மாவுக்கு டாட்டா காட்டி விட்டு… காய்ந்து கிடந்த வயல் வரப்பில் ஏறி, வறண்டு கிடந்த வயல் வழியே நடந்து சிறிது நேரத்தில் செம்மண் சாலையை வந்தடைந்தாள். அங்கே இருந்து பார்த்த போதே அப்பாவின் சைக்கிள் டீக்கடையின் வெளியே நிறுத்தி இருந்தது தெரிந்தது. வேகமாக நடந்தாள்.
“ஆத்தி.. தேனு… இம்புட்டு வெள்ளனமா வந்துட்ட… வயக்காட்டு வழியா நடந்து வந்தியாத்தா…? பூச்சிக கிடக்குமே… ரோட்டு வழியா வந்துருக்கலாம்ல…”
“ஒண்ணாப்பு படிக்கும் போது தான் வயல் வழியா வர முடியாது… நெல்லு இருக்கும் இப்பத்தான் இல்லியே…”
“கொஞ்ச நேரம் காத்து இருந்தா, அப்பா ராத்திரி வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்து இருப்பேன்ல..” எனக் கூறி கடையிலிருந்து வடை ஒன்றை கடனாக வாங்கி மகள் கையில் கொடுத்து விட்டு, சைக்கிளில் ஏற்றிக்கொண்டுக் கிளம்பினான்.
செம்மண் சாலையில் சிறிது தூரம் சென்றதும், வயல்வெளியில் அமர்ந்து இருக்கும் முதியவர் ஒருவரைக் கண்ட தேன்மொழி…
“ஏன்பா காளிமுத்து தாத்தா இங்க உட்கார்ந்து இருக்காரு…?” என வினவினாள்.
“ஆடிப்பட்டத்தில் ஆயிரக்கணக்குல கடன் வாங்கி நிலத்தை உழுது விதை விதைச்சிட்டு, மழை வரும்னு காத்து இருந்தாரு… மழை வரல நிலம் பாளம் பாளமா வெடிச்சி கெடக்கு…”
தேன்மொழிக்கு அவரைப் பார்க்க பாவமா இருந்தது.
“ஏன்பா மழை வரல…?”
“நம்ம கையில் என்ன இருக்கு… மேலிருந்து அவன் அசையணும் மனம் எல்லாம் ரணமா இருக்கு… மழை தான் இந்த ரணத்தை ஆத்துற மருந்து…”
“கெணத்துல தண்ணி இருக்கும்ல அது என்னாச்சி… நம்ம ஊருக்கு பக்கத்துல தான் கடல் இருக்கே… அங்க நெறயா தண்ணி இருக்கே…”
“ஆறு மைல் தொலைவில கடல் இருக்கறதுனால தான் கொஞ்சமாவது கெணத்துல தண்ணி ஊறிக்கிட்டு இருந்தது… தண்ணி கரிச்சி கிடக்கும், எல்லோரும் மழை இல்லன்னு போர் போட்டு… இருக்கிற தண்ணி வத்திப் போச்சி… ஊருல உள்ள பாதிப் பேரு பொழப்பு பாக்க பக்கத்து டவுனுக்கு போயிட்டாக…”
“ஆமாப்பா எங்கூட படிச்ச பிள்ளைகள்ல ரொம்பப் பேரு வேற ஊருக்கு போயிட்டாக…”
“இருக்கற கொஞ்சம் பேரு வேற போக்கிடம் இல்லாம இங்க இருக்காக… பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செய்யலாம்னா வீடு வாசல வித்துட்டு தான் போகணும்…”
“ஏன் இங்க இருக்க கூடாதா…?”
“மழை இல்லனா குடிக்க தண்ணி, ஆடு, மாடுக திங்க கூட புல்லு முளைக்காதே.. பின்ன எப்படி நெல்லு விளைவிக்க…”
“வாய்க்கால்ல தண்ணி வருமே முன்ன…”
“அது காவேரி ஆத்து தண்ணி , இப்பதான் அதுவும் கிடைக்க மாட்டேங்குதே…”
“அப்போ நாம ஒண்ணும் பண்ண முடியாதா…?”
“ஏன் முடியாது… கம்மாய், குளம், குட்டை, வாய்க்கால எல்லாம் தூர் வாரினா மழை காலத்துல நீரை சேத்து வைக்கலாம்…”
“அப்போ அப்படி பண்ணலாமே…”
“எங்க தா செய்றாங்க பஞ்சாயத்து தலைவர்னு ஒருத்தர் இருக்காரு பேருக்கு. ஒன்னும் செய்றதில்லை…”
“அப்போ ஒண்ணும் பண்ண முடியாதாப்பா…”
“நம்ம ஊர் மக்களா முன்னெடுத்து செய்யலாம்… இல்லைனா இப்படியே போச்சுன்னா, பசும்புல் கூட முளைக்காதுத்தா…”
“அப்படி ஆச்சுனா நாமளும் வேற ஊருக்கு, வேற பள்ளிக் கூடம் போகணுமாப்பா…?”
“ச்சே ச்சே… சீக்கிரம் விடிவு கிடைக்கும்த்தா… நாம இந்த ஊருல தான் இருப்போம், நீ இங்க தான் படிப்ப… பள்ளியோடம் போய்ட்டு எதைப் பத்தியும் நினைக்காம நல்லா படித்தா சரியா…”
“சரிப்பா… போய்ட்டு வரேன்ப்பா…”
“போய்ட்டு வா தா.. ”
கையில் புத்தகப் பையோடு நம்பிக்கையோடு, பள்ளிக்கூடத்தினுள் நுழைந்தாள் தேன்மொழி.
மழை வரட்டும்… பசும் புல் தழைக்கட்டும்!
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
– வள்ளுவர்
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது– கலைஞர்
-முற்றும்-
@chandra_kalaS

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக