வியாழன், 25 அக்டோபர், 2018

5. கடவுள் இருக்கானா டே?



கடவுள் இருக்கானா டே?




எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் தலையோடு முழுகிவிட்டு, கோவிலுக்கு சென்று சிவதரிசனம் பெறுவதை எப்போதும் தவறியதில்லை கதிரவன். விஸேஷ நாள் மட்டும் அல்லது மனதில் மகிழ்ச்சியோ துன்பமோ எது இருந்தாலும் அதை நந்தியின் காதுக்குள் மெல்லிய சத்தத்துடனும், சிவனின் காதுக்கு மனதுக்குள் மெதுவாக சொல்லி ஓதாவிடில் அது முழுமையானதாக தெரியாது.

இன்று எந்த ஒரு எண்ணமும் அவன் மனதை சூழ்ந்திருக்கவில்லை எனினும், இன்று சித்ராபௌர்ணமி என்பதால் வேறு காரணங்கள் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எப்போதும் போல குளித்துவிட்டு, பாதி உலர்ந்தும் உலராத தலையோடு மனதுக்குள் “அருணாச்சலனே ஈசனே, அன்பே சிவமான நாதனே” என பாடிக்கொண்டே கோவிலுக்கு சென்றான்.

என்ன தான் சித்ராபௌர்ணமியாக இருந்தாலும், அது ஒரு சிற்றூர் என்பதால் ரொம்ப தடபுடலாக எல்லாம் ஏதும் இருக்காது. எப்போதாவது இது போன்ற நல்ல நாளில் பூசாரி வருவார், ஒரு நாள் பூசை செய்வார் செல்வார், இப்படித்தான் இருக்கும். இந்த பூசாரி வருவதுமே முன்பு இருந்த பழைய கோவில் இடித்துவிட்டு கட்டியபிறகு தான். எப்போதும் கோவிலின் ரேடியோ செட்டில் “ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்” என கணபதிக்கு துதி சொல்லிவிட்டு, அடுத்தடுத்து ஒவ்வொரு பக்தி பாடலாக இசைக்கப்படும். பிறகு, கோவிலுக்கு வருபவர்கள் வெறும் கையோடு சென்றால் கையை காண்பிக்க சொல்லி விபூதியும், அர்ச்சனைக்கு பழம் தேங்காய் பூ என கொண்டு சென்றால் பாதி தேங்காய் மூடியும், கொஞ்சம் தீர்த்தமும் கையில் கொஞ்சம் விபூதியும், தட்டில் 50/100 என காணிக்கை வைத்தால் கையில் இடப்பட்ட விபூதி நெற்றியில் வைக்கப்பட்டு “ஷேமமா இருப்பா” என ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இன்றும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு போனான் கதிரவன். ஆனால் அங்கு கோவில் முன்பக்கம் இருந்த தூணுக்கு நடுத்தர வாழைமரங்களும், பின்னே செல்ல செல்ல வாழைக்கன்றுகளும் கட்டப்பட்டு இருந்தது. மாவிலைத் தோரணமும், வேறு ஏதோ ஒரு இலையில் செய்யப்பட்ட நட்சத்திரம் போன்ற தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தது. வெளியே அந்தப்பக்கம், பந்தல் போடப்பட்டு இருந்தது. ஓரமாக சில அரிசி மூட்டைகளும், பெரிய பெரிய பாத்திரங்களும் இருந்தது. சாம்பல் வண்ண முண்டா பனியன் போட்டு நீலக்கலர் லுங்கியை இடுப்பில் இருக்கமாக கட்டிக்கொண்டு, கீழே இருந்த ஜல்லி கரண்டியை எடுத்து கையில் வைத்து அங்கு இருந்த ஒரு சில பொடிப்பசங்களுக்கு எதையோ சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அதை கண்டு “யாருய்யா அது இப்படி அமர்க்களம் பண்ணுறது” என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று கையில் இடப்பட்ட விபூதியை வாங்கிவந்து, நெற்றியில் பூசியது போக மீதியை தூணுக்கு பக்கத்தில் தட்டிவிட்டு அதே தூணில் சாய்ந்து “ஈஸ்வரா” என அமர்ந்தான்.
அப்போது வேகவேகமாக கோவிலுக்கு உள்ளே சென்று பூசாரியிடம் மிகுந்த பூரிப்போடு பேசிக்கொண்டு இருந்தார் புத்தாடை உடுத்திய ராமலிங்கம். அதை பார்த்து தான் கதிரவனுக்கு மொத்தமும் விளங்கியது. “பெரிய இடத்து சம்மந்தம் பொண்ணு நிச்சயம் ஆகி இருக்குன்னு ஊருக்கே விருந்தா” என மெதுவாக முணுமுணுத்து மேலும் என்ன நடக்கிறது என கவனித்தான். பூசாரியிடம் பேசியபடியே வெளியே வந்தவர் “கடவுள் இருக்கான் சாமி, அவன் என்னைய கைவிடலை, ரொம்ப சந்தோசம் சாமி, அதான் நீங்க சொன்னமாதிரியே அன்னதானத்துக்கு ரெடி பண்ணியாச்சு சாமி” என கடவுளை ஒருமையில் சொல்லி பூசாரியை வாக்கியத்திற்கு ஒருமுறை சாமி என பேசியபடி கிளம்பினார்.
இதை கேட்டதும் கதிரவனுக்கு பின்னால் இருந்து ஏளனமாக சிரிக்கும் சத்தம் கேட்க அங்கே பொன்னையன் மாமா படுத்து இருந்தார்.

பொன்னையன் மாமா எப்போதும் கருத்தாக பேசக்கூடியவர். அதனாலே கதிரவனுக்கு அவரிடம் பேசிக்கொண்டு இருப்பது மிகவும் பிடிக்கும். இப்போதும் பேச்சு கொடுத்தான்.

“என்ன மாமா சிரிக்குறீங்க? ஆமா, எங்க மாமா மூணு மாசமா ஆள காணல?”

“நான் காணலையா…? நீ என்ன பாக்கலையா டே…?”

“சரி மாமா, நான் தான் உன்ன பாக்கல, உன்ன காணலை னு கேட்டது தப்புத்தான், உனக்கு தான் ஊருல நடக்குற மொத்தமும் தெரியுமே, என் சங்கதி தெரியாதா? பொண்ணு பாக்க தான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன், இப்போ கூட அத பத்தி தான் வேண்டிக்கிட்டு வந்தேன்”

“சரி டே சரி”

“அப்படியே சிரிச்சிகிட்டே பதில் சொல்லாம என்னைய வேற ஏதாவது பேசி கேக்கவந்தத மறக்கடிச்சுருவீங்களே.! இன்னைக்கு அப்படி நடக்காது மாமோய்.. “கடவுள் இருக்கான்” ன்னு சொன்னதுக்கு எதுக்கு சிரிச்சீங்க?”

“சரி டே சொல்லுறேன், ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு ரெண்டு கேள்வி கேப்பேன், அதுக்கு நீ பதில் சொல்லணும், அதுக்கு அடுத்து பாப்போம்”

“மாமா பேச்சு மாற மாட்டிங்களே?”

“மாட்டேன் டா மாப்ள, கேள்வி கேக்கவா?”

“சரி, கேளு மாமா”

“கடவுள் இருக்கானா டே?”

“இது என்ன மாமா கூறுகெட்ட கேள்வி, இல்லாமையா இத்தன கோவில் குளம்னு இருக்கு, கடவுள் சத்தியமா இருக்கான் மாமா”

“சரி, அப்போ கடவுள்ன்னா யாரு?”

சிறிது யோசித்துவிட்டு “எல்லா உயிருக்கும் நல்லது செய்யுறவன் மாமா” என முடித்தான்.

மறுபடியும் ஒரு ஏளன சிரிப்பு சிரித்துவிட்டு “உனக்கு ஒரு கதை சொல்லுறேன் கேளு, இந்த ராமலிங்கம் இருக்கானே ரெண்டு மாசத்துக்கு முன்ன வேக வேகமா நம்ம ஏரிக்கரை முனியன் கோவில்ல இருந்து வந்துகிட்டு இருந்தான், என்ன டே இவ்வளவு வெரசா போற என்னாச்சுன்னு கேட்டேன், அப்போ தான் சொன்னான் அவங்க பூர்வீக சொத்து பங்காளிக்கு சேரணும்ன்னு தீர்ப்பு ஆகிடுச்சாம், அதுக்கு இங்க என்ன டே பண்ணற ங்க, முனியன் கிட்ட முறை வச்சிட்டு வந்தேன், கடவுள்ன்னு ஒருத்தன் இருந்தா பாத்துப்பான் ன்னுட்டு போனான்”

கதிரவன் தலையை மட்டும் அசைக்க மேலே தொடர்ந்தார் “இவன் என்னடா முனியனுக்கு முறை வச்சான் ன்னு பாக்க போனேன் டே, படியில ரெண்டு துண்டான காசும், பக்கத்துல இருந்த மரத்துல ஒரு கருப்பு கோழியும் துடிச்சிட்டு இருந்தது, அது கால்ல இருந்த காகிதத்துல பங்காளி தன்ராஜ் பேரு எழுதி இருந்தது, அது எதுக்குன்னு தெரியுதா?”

“தெரியுது மாமா”

“இதுக்கு ஏன் சிரிச்சேன்ன்னு யோசிக்கிற, சொல்லுறேன்.. ஏன் டே.. நீ படைச்ச பழத்தையும் ஒரு மூடி தேங்காயையும், கெளம்பும்போது ஏத்திவச்ச விளக்கு வெளிச்சத்துல, திண்ணுட்டு மேல ஊத்தின பால விக்கும்போது குடுச்சிட்டு உனக்கு நல்லதும், மரத்துல தொங்கவிட்ட கோழியில கொழம்பு வச்சி திண்ணுட்டு உனக்கு புடிச்சத செய்ய அவன் என்ன உங்க ஊட்டு வேலக்காரனா டே? கடவுளங்குறவன் யாரு தெரியுமா, உலகத்துல உனக்கு எது மேலயும் நம்பிக்கை இல்லாம போறப்போ, உனக்கு யாரும் துணை இல்லாதப்போ, நம்ம இனிமே வாழவே வேணாம்ன்னு இருக்கப்போ உன் மனசுக்குள்ள உனக்கு நான் இருக்கேன், கவலைப்படாம இருன்னு ஒரு நம்பிக்கையை நட்டுவைப்பான் பாரு அவன் தான் கடவுள், இதெல்லாம் புரிஞ்சா நீங்க இப்படி எனக்கு பொண்ணு பாத்து குடுன்னும், அவன ஒழிச்சு கட்டுண்ணும், கெட்டது நடக்குறப்போ அவனையே திட்டிகிட்டோ, நல்லது நடக்குறப்போ அவன புகழ்ந்துகிட்டோ இருக்கமாட்டிங்க டே.. என்னைக்கோ உருப்படியா வாழ்ந்து நாலுபேரு உங்கள புகழ்ந்து பேசுறமாதிரி நடந்து இருப்பீங்க’ என்ன சொல்லி நடக்க ஆரம்பித்தார் பொன்னையன் மாமா.!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக