துணைவி
- அருள். ஜெ
விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். அவனுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. எனவே நேரம் கிடைக்கையில் எல்லாம் வரப் போகும் மனைவி எப்படி இருப்பாள் என்று அது தொடர்பான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான்.
அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? கிரிக்கெட் பிடிக்குமா? பிடிக்குமென்றால், அவளின் பிடித்த ஆட்டக்காரர் யார்? கோலியா? ரோஹித்தா? எனக் கேட்க வேண்டும். என்னைப்போலவே புத்தகம் படிப்பாளா? பொன்னியின் செல்வன் படித்திருப்பாளா? அதைப்பற்றிப் பல மணி நேரம் என்னுடன் உரையாடுவாளா? மனது சலிக்கும் போதெல்லாம் நீண்ட பயணம் செல்வது அவனுக்குப் பிடிக்கும். அவளுக்கும் பிடிக்குமா? பைக்கின் பின்னால் அவளை அமர வைத்து ஒரு நீண்ட பயணம் செல்வது போலக் கற்பனையில் மூழ்கினான்.
அவன் பாலகுமாரன் மற்றும் ஜெயகாந்தன் ரசிகன். அவனது வீட்டறையில் அவர்களின் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். வருபவளும் அவர்களின் ரசிகையாக இருந்து விட்டால் எப்படி இருக்கும்? அட. நினைத்தாலே இனித்தது.
பள்ளி, கல்லூரியில் கிரிக்கெட், கவிதை மற்றும் கதைகள் எனப் போட்டிகளில் கலந்துகொண்டு தான் வாங்கிய பாராட்டுப் பத்திரங்கள் மற்றும் கோப்பைகளைத் தூசு தட்டி அடுக்கி வைத்தான். வருபவள் கேரம்போர்ட் மற்றும் செஸ் விளையாட்டில் ஆர்வமுடையவளாக இருந்து விட்டால்? இருக்கட்டும் என அதையும் வாங்கி வைத்தான்.
ஒரு நன்னாளில் திருமணம் முடிய, விருந்து அது இது என புதுமணப் பரபரப்பு ஒருவழியாகக் குறைந்து ஒரு மாதம் கழிந்தது. இப்போது மனைவி கமலாவுடன் மனம் விட்டுப் பேச நேரம் கிடைத்தது. பல காலமாகத் தேக்கிவைத்த எதிர்பார்ப்போடு அவளிடம் பேச்சு கொடுத்தான்.
“கமலா?”
“ம்ம்ம்...”
“உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் யார்?”
“எழுத்தாளரா? அப்படின்னா?”
“அதான் இந்த சிறுகதை நாவல்லாம் எழுதுவாங்களே அவங்க.”
“ச்சேச்சே.. எனக்கு அதெல்லாம் பிடிக்காதுங்க. எந்த புக்கும் படிச்சது இல்ல.”
விஜய்க்கு சப்பென்று ஆகிப் போனது.
“எந்தப் புத்தகமும் படிச்சது இல்லையா?”
“நான் ப்ளஸ் டூ படிச்சப்போ பாடப் புத்தகம் படிச்சது. அதுக்குப் பின்ன எந்த புக்கும் படிச்சதே இல்ல.”
“இந்த ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் கூடவா படிச்சதில்ல?” என்றதும் கேட்டிராத நகைச்சுவையைக் கேட்டது போலக் கலகலவெனச் சிரித்தவளைக் கண்டு கடுப்பான விஜய் அந்த இடத்தைவிட்டே வெளியேறினான்.
மண்டை காய்ந்து போனது அவனுக்கு. அலமாரியில் இருந்த புத்தகங்களைத் திரும்பிப் பார்த்தான். புத்தகங்களும், புத்தகங்களுக்கு நடுவே பாலகுமாரனும், ஜெயகாந்தனும் அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலப்பட்டது.
தான் வாங்கிய பரிசுக் கோப்பைகளை எல்லாம் அழகாக அடுக்கி அவள் பார்வையில் படும்படிதான் வைத்திருந்தான். ஏதோ பொம்மையைப் பார்ப்பது போல அவள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
ஒரு நாள் வேறு வழி இல்லாமல் கூப்பிட்டுச் சொன்னான்.
“ஏய், இதெல்லாம் நான் வாங்கினது தெரியுமா.?”
“எதுக்கு வாங்குனீங்க.?”
“இது கிரிக்கெட் போட்டியில நான் வாங்கினது. இது காலேஜ் கவிதைப் போட்டியில. ஆமா, உனக்குக் கிரிக்கெட் பிடிக்குமா.?”
“ச்சே... எங்க வீட்ல எல்லாரும் பாப்பாங்க. ஆனா எனக்குப் பிடிக்காது.”
'அதுசரி. எனக்கு இப்படித்தான் வாய்க்கணும்ன்னு இருக்கும்போது உனக்கு எப்படி கிரிக்கெட் பிடிக்கும். எல்லாம் என் நேரம்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
“சரி, அத விடு, உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்.”
“இதுன்னு சொல்லமுடியாது, எல்லா பாட்டும் கேப்பேன்.”
"நான் எஸ். ஜானகியம்மாவோட பெரிய ரசிகன், தெரியுமா?”
“அது யாரு.? அந்தக் கிழவி மாதிரி இருக்குமே அதுவா?”
விஜய் நொந்து போனான்.
கொஞ்சம்கூட தனது ரசனைக்கு ஒத்துவராத மனைவி கிடைத்ததை நினைத்தாலே பற்றிக்கொண்டு வந்தது. கணவன் மனைவி என்றால் இரட்டை மாட்டு வண்டி போல இரண்டு மாடுகளும் சரியாகச் சென்றால்தானே குடும்பம் நடக்கும்? ஒரு மாடு சுணங்கினாலும் வண்டி சரியாகப் போகாது. பேசாமல் இவளையும் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு ஒத்தை மாடாகவே ஓட வேண்டியதுதான் என ஒரு முடிவுக்கு வந்தான்.
தனக்கு மிகப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது டிவி ரிமோட்டைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அம்மாவுடன் சேர்ந்து டிவி நாடகங்களை ரசித்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு கோபமாகக் கூட வந்தது. தனது ரசனைக்குள் வராத மனைவியைக் கண்டு பல நேரங்களில் வெறுப்பாக வந்தது. அவளோடு மனம் ஒன்றிப் பழக முடியவில்லை. இதுவே ஒரு கடும் தலைவலியாக மாறிப்போனது அவனுக்கு. இவளைத் திருமணம் செய்து தன் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டோமோ என்று வேதனையாக இருந்தது. யாரிடமும் இதைச் சொல்லவும் முடியாமல் நிம்மதியாக வாழவும் முடியாமல் வெறுமையில் இருந்தான்.
எந்த எதிர்பார்ப்புமின்றிக் குத்துமதிப்பாக நாட்கள் கடந்து போகத் துவங்கின. சில மாதங்களில் கமலா கருவுறவே, வீட்டில் மெல்ல மெல்ல மகிழ்ச்சி தலை தூக்கியது. ஆளாளுக்குக் கமலாவைத் தாங்கிப் பிடிக்கத் துவங்கினர். விஜய் மகிழ்ந்தான்.
“ஏன்டா. பிள்ளைத்தாச்சி பொண்ணு ஆசைப்பட்டு எதைக்கேட்டாலும் மறுக்காம வாங்கித்தரணும் தெரியும்ல?” என அம்மா சொன்னதைக் கேட்டு மனைவியிடம் சென்றவன்,
“கமலா, உனக்கு பிடிச்சது ஏதாவது கேளு வாங்கித் தர்றேன்.” என்றான்.
“ஆமா, உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் என்கிட்டக் கேட்டீங்களே, ஆனா, எனக்கு என்ன வேணும்னு நீங்க கேட்க, பாப்பா வர வேண்டியிருக்குல்ல" என்று கமலா சொல்ல, சுருக்கென்றது விஜய்க்கு.
அவன் முகம் உறைந்ததைக் கவனித்த கமலா, "சும்மாதான் கேட்டேன். எனக்குத் தையல் துணியும், ஊசி நூல்கண்டும் வேணுங்க. நம்ம வீட்ல இருக்குற தையல் மிசினக் கொஞ்சம் சரி பாக்கணும். மோட்டர் போட்டுக் கொடுங்க, போதும்” என்றாள்.
“இதுவா? இதெல்லாம் எதுக்கு?”
“நம்ம குழந்தைக்கு நானே துணி தைக்கலாம்னுதான்”
“சரிம்மா. அப்படியே பண்ணிருவோம். மறுநாளே மெசினைத் தூக்கி சரி செய்யக் கொடுத்து விட்டு, அவள் கேட்ட பொருள்களை எல்லாம் வாங்கித் தந்தான். அடுத்தநாளே மிஷின் சத்தம் கடகடவென கேட்கத் துவங்கி விட்டது.
மனைவி நெய்த துணிகளை எடுத்துப் பார்த்தான். அத்தனை அழகாய் இருந்தது. உடையில் கைவேலையாக செய்த அலங்காரங்கள் அத்தனை அருமையாக இருந்தது.
“ஏய்... இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”
“எனக்குக் கிரிக்கெட்டும், ஜெயகாந்தனும் தான் தெரியாது, இதெல்லாம் தெரியும்” அவள் சிரித்துக் கொண்டே சொன்னபோது விஜய் தன் தவறை உணர்ந்தான்.
இப்போது தான் ஒவ்வொன்றாக கவனிக்கத் துவங்கினான். வீட்டின் பூஜை அறை அத்தனை அழகாக ஊதுபத்தி சாம்பல் கூட இல்லாது தூய்மையாகக் கடவுள் படங்களுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்பு ஒழுங்கற்று இருந்த வீடு அங்கங்கே சில இயற்கைக் காட்சிப் படங்கள் மாட்டப்பட்டு நேர்த்தியாக இருந்தது.
தினசரி வாசல் தெளிக்கப்பட்டு விதவிதமான கோலங்கள் கமலாவின் கைவண்ணத்தில் போடப்பட்டு மிக அழகாய் இருந்தது.
மனைவியின் கைப்பக்குவ சமையல் கூடக் குறை சொல்ல முடியாத அளவு சுவையாய் இருந்தது.
எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறோம். எப்போதும் தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு மனைவிக்குப் பிடித்தது பற்றி இதுவரை யோசிக்காமல் இருந்து விட்டது குறித்து வெட்கமாய் இருந்தது. கமலாவிடம் மனதால் மேலும் நெருங்கத் துவங்கினான்.
வளைகாப்பு முடிந்த சில மாதங்களில் அழகான பெண் குழந்தையைப் பெற்றாள்.
கிழிந்த நாராய்க் கிடந்த மனைவியை மருத்துவமனையில் சென்று பார்த்த போது விஜய் நெகிழ்ந்து போனான். தன் பொருட்டு வலி தாங்கி இன்னொரு உயிரை பெற்றுக் கொடுத்த மனைவி மீது பெருங்காதல் வந்தது.
சில நாட்களில் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள். குழந்தையைக் காண வரும் பெரியோரைக் கண்டு மரியாதை நிமித்தமாய் தனது உடல் நலனைப் பாராது எழுந்து வரவேற்க, பெரியோர்கள் விஜயிடம் கமலாவைப் புகழ்ந்தார்கள். விஜய் தனது மனைவியைப் பற்றி பெருமை கொண்டான்.
தாய்மையைத் தன் தாயிடம் உணர முடிந்தது. ஆனால் தாய்மை என்றால் என்ன என்பதை மனைவியிடம் தான் அதிகமாக கற்றுக் கொள்ள முடிகிறது என்பதைப் புரிந்ததும் கமலாவிடம் ஒரு மரியாதை ஏற்படத் துவங்கியது. வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என பம்பரமாக சுற்றிச் சுழலும் அவளின் சுமை புரிந்தது.
துவக்கத்தில் கமலாவிடம் தங்களுக்கிடையே கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லை என்று நினைத்தான். இப்போது அவர்களுக்கிடையே வேதியியல், இயற்பியல், விலங்கியல் எல்லாமே வேலை செய்கிறது.
இப்போதெல்லாம் விஜய் மனைவியின் பாரம் குறைக்கும் பொருட்டு, தன்னால் இயன்ற வேலைகளைச் செய்கிறான். வீடு கூட்டுவது, பாத்திரம் கழுவுவது, துணிதுவைப்பது என எதுவும் பெண்கள் தான் பார்க்கவேண்டும் என்பதில்லை இவையெல்லாம் வாழ்வியல் வேலைகள் அனைவரும் செய்யவேண்டும் என்ற பக்குவம் வந்துவிட்டது.
தனது விருப்பங்கள் மட்டுமே முன்னுரிமையாகப் பார்த்த கண்களுக்குக் கமலாவின் பார்வையும் விருப்பங்களும் புலப்படத் தொடங்கியது. வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு, இது போகத் தன்னையும் கவனித்துக் கொள்ளும் கமலாவிற்கு முன், பாலகுமாரனும், ஜெயகாந்தனும், புத்தகங்களும் கிரிக்கெட்டும், எஸ். ஜானகியும் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது விஜய்க்கு. தன்னுடன் வாழும் சக உயிரின் வலியும், வேதனையும், உரிமையும், உண்மையும் புரிந்தபின் வேறென்ன வேண்டும் மகிழ்வதற்கு?
குறள்:
தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொல்லோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
விளக்கம்:
தனக்கு இது துன்பம் தருவது என உணர்ந்தவன் மற்றவர்க்கு அதைச் செய்வது என்ன காரணத்தால்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக