திங்கள், 22 ஆகஸ்ட், 2022

அவள் வருவாளா? - மௌவல்

 அவள் வருவாளா?

- மௌவல்



அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.14 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்த இந்திரா என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையிலான விசாரணையில், மேலும் 31 நபர்களிடம் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் பல லட்சங்களில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” டிடிடும் என்ற திடுக்கிடும் பின்னணி இசையோடு செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. 

“அதெப்படி பாலா, இப்படி தேடிப் போய் ஏமாந்து போறாங்க. காசு குடுத்து கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்றவங்க examலா ஏதும் எழுத வேணாமா?” எனக் கேட்டாள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே தன் கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த தமிழினி.

“யாருக்குத் தெரியும்?, நான் என்னவோ கவர்மண்ட் வேலைக்குப் போற மாதிரி என்ன கேக்குற? நீயும் உன் ப்ரெண்டும் தான கவர்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்றீங்க” என்றான் பாலா.

“எங்க ட்ரை பண்றது, அதான் ஏதும் பண்ண முடியாம எல்லாம் போச்சே” என்றாள் தமிழினி வருத்தத்தோடு.

“வருத்தப்படாத தமிழ், பாத்துக்கலாம், சர்டிபிகேட் வேற வாங்குறது பத்தி விசாரிச்சேன், ஒரு affidavit notary publicகிட்டேந்து வாங்கணும், என்ன தனித்தனியா ஒவ்வொன்னுக்கும் apply செய்யணும், நேரம் எடுக்கும், ஆனா கிடைச்சுடும், சரியா?” என்ற பாலா, தமிழினியை ஆதரவாகப் பார்த்தான். 

“பாலா, நாளைக்கு நான் அனிதா வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன், பாத்து ரொம்ப நாளாச்சு” என்ற தமிழினிக்கு இசைவாய்த் தலையசைத்தான் பாலா. 

****

அந்தத் தெருவின் முடிவில் அமைந்திருந்த கடைசி வீடு அது. பார்ப்பதற்குப் பெரிய வீடாக இருந்தாலும் மிகவும் பழைய வீடு போன்று தோற்றமளித்தது. வீட்டின் உட்புறம் சிறிதும் வெளியே தெரியாதவாறு அமைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய வாயிற்கதவு உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது‌. வீட்டின் முன்னே நின்று கொண்டு பலமுறை அனிதாவிற்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் பதில் ஏதும் வராததால், பெரிய இரும்புக் கதவின் தாழ்ப்பாளை வேகமாக அசைத்து ஒலியெழுப்ப, ஒலியோடு துருக்களையும் கொட்டியது அந்தப் பெரிய கதவு. இன்னும் சிறிது வலுமாக தட்டினால் கதவு கழன்றே விழுந்துவிடும் போல் தோன்றியது தமிழினிக்கு‌. கதவின் ஒலிக்குப் பின் நிலவிய அமைதியை “இதோ வரேன் இருடி" என்ற குரல் குலைத்தது. குரல் வந்த திசையை தமிழினி பார்க்க, இரண்டாம் தளத்தில் இருந்த அனிதா கையசைத்துக் கீழே வந்து கொண்டிருந்தாள். 

“ரொம்ப நேரமா வெயிட் பண்றியா தமிழ்” என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்த அனிதா, தமிழினியை நேராக இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அனிதாவின் அம்மா பார்வதி, இரண்டாம் தளத்தின் வாயிற்படியில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட தமிழினி மகிழ்வோடு நலம் விசாரித்தாள். சில நிமிடங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்த பார்வதி, சட்டெனத் தமிழினியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார்‌

“ம்மா, என்னாச்சும்மா? ஏன் அழுறீங்க?”

“…….”

“தமிழ், முதல்ல நீ உள்ள வா, அப்புறமா அவங்ககிட்ட பேசலாம்” என்றாள் அனிதா சற்றே அதட்டலாக.

“என்ன ஏதுனு கேட்டுட்டு வரேன், கொஞ்சம் பொறுடி” என்றாள் தமிழினி.

“தமிழு, என்னைய ஏதும் கேட்காத, நீ அவகிட்டயே கேளு, அவளே சொல்லுவா” என்றார் பார்வதி தழுதழுத்த குரலில்.

“என்னதான்டி நடக்குது இங்க? ரெண்டு வாரமாப் பாக்க வரதுக்கு போன் பண்றேன். எடுக்கவே மாட்ற. அதான் நீ வீட்ல இருக்கியா இல்லையானுலாம் கேட்காம வந்துட்டேன்” என்றாள் தமிழினி.

“ஊருக்குப் போயிருந்தோம், அதான் பேச முடியல தமிழ்” என்று அனிதா கூற, “ஏன்டி புழுகுற, உண்மையச் சொல்லு. ரெண்டு வாரமா போலிஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமா நடந்துட்டு இருக்கோம்னு” என்றார் பார்வதி.

ஏதும் புரியாது விழித்தபடி, அனிதாவையே பார்த்தாள் தமிழினி.

மேலும் தொடர்ந்த பார்வதி, “இருபத்தஞ்சு லட்சத்தத் தொலச்சிட்டோம் தமிழு. வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தரதா சொன்னத நம்பித் தான் பணத்தக் குடுத்தோம். ஆனா, அந்தாளு ஏமாத்திட்டான் தமிழு” என்றார் கண்ணீர் மல்க. அனிதாவோ தன் அம்மா சொல்வது ஏதும் காதில் விழாததைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

“என்னமா சொல்றீங்க? என்னால நம்பவே முடியல. இருபத்து அஞ்சு லட்சம்னு அசால்ட்டா சொல்றீங்க. நேர்ல போய் என்ன ஏதுனு பாத்தீங்களா? நல்லா விசாரிச்சிங்களாமா?” என்றாள் தமிழினி படபடப்போடு.

“ரெண்டு வாரம் முன்ன தாம்மா நாங்களே news பாத்துத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுக்கப்புறம் வியாசர்பாடி போலிஸ் ஸ்டேஷன்க்குப் போய் விசாரிச்சப்ப தான் உண்மைனு தெரிஞ்சுது. கம்ப்ளெயின்ட் குடுத்துட்டு வந்திருக்கோம்” என்றார் பார்வதி.

“என்னம்மா நடந்துச்சு? யாருமா இப்படி பண்ணது? எப்படிமா உங்களுக்குத் தெரியும்? நேர்ல போய் ஒரு முறை பாத்துட்டு வருவோமா?” என்று பதட்டத்தோடு பல கேள்விகளை அடுக்கினாள் தமிழினி.

“நான் வேலை பாக்குற ஆபிஸ்ல ட்ரைவரா வேலை பாக்குற வேலு சொல்லித் தான் தெரியும். அவன் தங்கச்சி பொண்ணுக்கு மெட்ரோ ஆபிஸ்ல வேலை கிடைச்சிருக்குனு சொன்னான். ஒரே ஒரு பொம்பளப் புள்ளைய வச்சிருக்க, கஷ்டப்பட்டுப் படிக்கவும் வச்சிட்ட, மேல கொஞ்சம் காசு பணத்த ரெடி பண்ணி ஒரு கவர்மெண்ட் வேலைல உக்கார வச்சிட்டா அவ நல்லா இருப்பால்லன்னு சொன்னான். அவ கல்யாணத்துக்குத் தான் கொஞ்சம் பணத்தை வச்சிருக்கேன், அதையும் தூக்கிக் கொடுத்துட்டு என்னடா பண்றதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன் தமிழு" என்ற பார்வதி சில நொடிகள் அமைதியானார்.

சட்டென குரலை உயர்த்தி, "அதை இவகிட்ட சொன்னது தான் தப்பாப் போச்சு. அதையே பிடிச்சுக்கிட்டு, கவர்மெண்ட் வேலைக்குப் போயே ஆகணும்னு என்ன பாடாப்படுத்திட்டா தமிழு. கல்யாணத்துக்கு என்னடி பண்றதுன்னு கேட்டா, வேலை கெடச்சிட்டா சம்பாதிச்சிடலாம்மானு சொல்லி என் உயிரை எடுத்துட்டா” என்றார் அனிதாவின் அம்மா வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.

“ம்”

“மறுநாள் வேலு கிட்ட சொன்னதுக்கு, நீ கவலப்படாதக்கா, தெரிஞ்சாளு ஒருத்தரு மூலமா தான் வேலைக்குப் பேசி முடிச்சோம். இந்த வாரத்துல அவரப் போய் பாத்துட்டு வந்துடுவோம். எதுக்கும் கொஞ்சம் பணத்தைக் கையில வச்சிக்கன்னு சொன்னான்” என்றார் பார்வதி.

“ஏன்டி உனக்கு இந்தத் தேவையில்லாத வேல? கவர்மெண்ட் வேலை வேணும்னா எதாவது exam எழுதி ட்ரை பண்ண வேண்டியதுதான? எதுக்குடி இப்படிலாம்” என்று அனிதாவைப் பார்த்து மிகுந்த கோபத்தோடு கேட்டாள் தமிழினி.

பதில் ஏதும் பேசாது தமிழினியையே வெறித்துப் பார்த்த அனிதா, சில நிமிடங்களில் உள்ளறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

தமிழினியும், அனிதாவும் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். வகுப்பறையில் அவ்வளவாக யாரோடும் கலந்துவிடாத இருவரும், அந்த கல்வியாண்டின் இறுதியிலிருந்து நட்பில் கலந்தார்கள். அன்றிலிருந்தே இருவரும் இணை பிரியாத தோழிகளாகவும் மாறியிருந்தனர். இருவருடைய குடும்பப் பிண்ணணியும், வாழும் சூழ்நிலையும் பல விதங்கள் ஒத்திருந்ததும் இவர்கள் நட்பின் காரணியாகிப் போனது. இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது பணம் மட்டும் தான்.

பத்தாம் வகுப்பில் தேறி, பதினோறாம் வகுப்பு சேர்ந்த போது இருவருக்கும் வேறு வேறு துறைகள் கிடைத்தாலும், பள்ளி தொடங்கிய முதல் நாளன்று தமிழினி இருந்த துறைக்கே வந்திணைந்தாள் அனிதா. மேல்நிலை கல்வியின் இரண்டாண்டு காலம் போதுமானதாக இருந்தது, அவர்கள் நட்பை மேலும் மெருகேற்றிக்கொள்ள. பெரும்பாலும் இருவரும் இணைந்தே காணப்பட்டார்கள், பள்ளி வாழ்க்கையில் இணைந்தே பயணப்பட்டார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழினி நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்றிருக்க, அனிதாவோ கணிதப் பாடத்தில் தேறாது தோல்வியடைந்திருந்தாள். 

காலத்தின் ஓட்டத்திற்கு இணையாக இருவரும் ஒன்றாகப் பயணிக்க நினைத்தாலும், நிகழ்வுகள் முரணாக அமைந்துவிட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல தொடங்கிய தமிழினி, தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் மேற்படிப்பைத் தொடர்ந்தாள். மறுதேர்வு எழுதி வெற்றி பெற்ற அனிதா, தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பில் இணைந்தாள்.

மூடிய கதவுகளைச் சில நொடி உற்று நோக்கிய தமிழினி, “ம்மா, பணத்தை எப்போ யாருக்கிட்ட கொடுத்தீங்க?” எனக் கேட்டாள்.

“ஒருநாள் உங்க வீட்டுக்கு வந்து போனோமே, அதே நாள் தான்மா பணத்தையும் கொடுத்தோம். வேலு முதல்ல ஒருத்தரக் காட்டுனான். அவனுக்கு 5 லட்சம் அனுப்புனோம். அதுக்கப்புறம் தான் விஜயகுமாரப் பாத்தோம், வேலை முடிஞ்சுடுச்சு, அஞ்சாறு மாசத்துல ஆர்டர் வந்துடும்னு சொல்லி 20 லட்சம் வாங்குனான். சும்மா பேருக்கு exam எழுதச் சொன்னான்மா” என்றார்.

தமிழினிக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், எதிர்பாராதவிதமாய் ஒருநாள் அனிதாவை சந்தித்த போது தமிழினி அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். இயல்பான நல விசாரிப்புகளுக்கு பின் சற்றே கோபமாய், “ஏன்டி எவ்ளோ நாள் உன் நம்பருக்கு ட்ரை பண்ணேன் தெரியுமா? Switch offனே வந்துச்சு. invitation எடுத்துட்டு வீட்டுக்கு வந்தாலும் ஆளில்ல, அவங்க சொந்த வீட்டுக்கே போய்ட்டாங்கனு சொன்னாங்க. சொல்லிட்டுப் போகக் கூடாதா?” என்றாள் தமிழினி.

“இப்ப இங்க தான்டி இருக்கோம். நீ வீட்டுக்கு வா, பொறுமையா சொல்றேன்” என சொல்லிவிட்டு தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்துச் சென்றாள் அனிதா.

நீண்ட நாளுக்குப் பின்னான சந்திப்பில், இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் ஆவலோடு அறிந்து கொண்டார்கள். அலுவலகத்தில் நிர்வாகம் தொடர்பான வேலை, அளவான சம்பளம், அன்பான கணவன் என தமிழினி வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருக்க, அனிதாவோ எந்த வேலையிலும் நிலைத்திருக்காது அதிக வருமானத்திற்கான வாய்ப்பைத் தேடி அலைக்கழிந்து கொண்டிருந்தாள்.

“தொடக்கத்துலயே அதிகமா எதிர்பாக்கதடி, experience ஆகணும்ல” என்ற தமிழினியை “உன்ன மாதிரி முட்டாளுங்க தான் குறைவான சம்பளத்துக்கு வேலை பாப்பாங்க” என்று சொல்லிய அனிதாவின் பார்வையில் தெரிந்த ஏளனத்தைத் தமிழினியும் கவனிக்கத் தவறவில்லை. 

அனிதாவின் பேச்சுக்கள் தமிழினிக்குச் சற்றே வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அதை முகத்தில் காட்டாது, “சரிடி நான் கிளம்புறேன், வீட்டுக்கு அடிக்கடி வாடி" என்று எழ முயற்சித்தாள்.

“என்னடி, உடனே கிளம்பிட்ட” என்ற அனிதாவிடம், “Net centreக்குப் போறேன்டி, examக்கு apply பண்ணணும்” என்றாள் தமிழினி.

சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்த அனிதா, “என்ன exam தமிழ்?” எனக் கேட்டு மீண்டும் தமிழினியை அமரவைத்து, தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் கேட்கத் தொடங்கினாள். பின், “தமிழ் நானும் அப்ளை பண்றேன்டி, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே எழுதலாமா?” எனக் கேட்டுவிட்டு, நாளைக்கு அஞ்சரை மணிக்கு நானும் வரேன், நாம சேர்ந்து அப்ளை பண்ணுவோம்” என்றாள்.

மறுநாள் நண்பகலில் தமிழினியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனிதா, “தமிழ், இன்னிக்கு நாம போக வேணாம். Net centreல apply பண்றதுக்கு நானே எங்க officeல இருக்க systemல apply பண்ணிடுறேன். நீ உன்னோட certificates மட்டும் ரெடியா வை, நானே வந்து வாங்கிக்குறேன்” என்றாள். தமிழினியும் அவளின் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து ஒரு பையில் பத்திரப்படுத்தி அலமாரியில் வைத்தாள்.

பார்வதி சொல்லியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழினி, சட்டெனத் திடுக்கிட்டவளாய் “ம்மா, என்ன சொன்னீங்க இப்ப? என் வீட்டுக்கு வந்த அதே நாள் தான் அங்க போய்ப் பணத்தை குடுத்தீங்கன்னு தான சொன்னீங்க” என்றாள்.

“ஆமா” என்றபடி புரியாமல் விழித்த பார்வதியிடம், “ம்மா, அப்போ என்னோட mark sheet, TC, certificates எல்லாம் அங்க எங்கேயாவது விட்டுட்டு வந்துட்டீங்களா” என்றாள் தமிழினி சற்றும் பதட்டம் குறையாதவளாய்.

சில நொடிகள் பதிலேதும் பேசாது அமைதியாயிருந்த பார்வதி, யோசித்தவராய் “இல்ல தமிழு, அங்க விட்டுட்டு வந்திருந்தா தெரிஞ்சிருக்குமே” என்றார் தயக்கத்தோடு. மேலும், “இப்படிலாம் நடக்கும்னு நெனச்சுக் கூட பாக்கல தமிழு. ரெண்டு பேரும் எவ்ளோ ஆசையா இருந்தீங்க, நாங்க பணத்த தொலச்சிட்டு நிக்குறோம், நீ certificateங்களத் தொலச்சிட்டு நிக்குற” என்றார் தழுதழுத்த குரலில்.

“நீங்க வீட்டுக்குப் போறீங்கனு நெனச்சு தாம்மா குடுத்தேன்” என்றவளை இடைமறித்து, “இப்ப எதுக்கு அனிதா வாங்குற, இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு சொன்னேன். அவ கேக்கவேயில்ல தமிழு. உன்கிட்ட சொல்லும் போது தான் எனக்கே தெரிஞ்சுது certificates தொலஞ்ச விஷயம்” என்றார் தமிழினியின் முகத்தைப் பார்க்க இயலாதவராய்.

தமிழினியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்த வேளையில், வெளி அறையில் இருந்த அனிதாவின் கைப்பேசி சிணுங்கியது. Vyasarpadi police station என்ற பெயரில் வந்த அழைப்பைக் கண்டதும், பதற்றத்தோடு அனிதாவை அழைத்தார் பார்வதி. அனிதாவோ பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். சில நிமிடத்திற்குப் பின், கதவைத் திறந்துக்கொண்டு அனிதா வெளியே வருவதற்கும் மீண்டும் கைப்பேசி சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது. அழைப்பை ஏற்றுப் பேசிய அனிதா, “காலையில பத்து மணிக்கு தானே, வந்துடுறோம் சார்” என்றாள்.

“என்ன அனிதா, நாளைக்கு station வரச் சொல்றாங்களா?” என்றாள் தமிழினி.

“ஆமாடி, சில details கேட்டுருக்காங்க advocateம் பாக்கணும்” என்றவள், “ம்மா, நான் சொல்றத எல்லாம் நைட்டே எடுத்து வச்சிக்கம்மா. ஒரு அக்கவுண்ட் நம்பர் கொடுத்து 5 லட்சம் போட சொன்னாங்கல, அந்த டீட்டேயில் வேணும். அது உன் accountல இருந்து தானே transfer பண்ணோம். FIR copy எடுத்து வச்சிக்க. அப்புறம் நாம அவங்கள நேர்ல பாக்கப் போனப்ப, ஒரு நம்பர் குடுத்தாங்கள அந்த நம்பர் வேணும். நம்ம காச எத்தன பேரு பங்கு பிரிச்சிருக்கானுங்கன்னு தெரில” என்றவள் தமிழினியைப் பார்த்தாள்.

“நான் வேணும்னா உன்னோட வரட்டுமாடி” என்றாள் தமிழினி.

“இல்ல, நான் பாத்துக்குறேன்” என்றவளிடம் “அனிதா, என்னோட certificates பத்தி ஏதும் தெரிஞ்சுதா” எனக் கேட்டாள் தமிழினி.

சட்டென முகம் மாறிய அனிதா, “எங்க மிஸ் ஆச்சுனே தெரிலடி. officeலயும் இல்ல, வேற எங்கேயாவது தொலஞ்சுதானும் தெரில. Officeல நல்லா தேடிப் பாத்தாச்சு, கிடைக்கல. எல்லாருட்டயும் சொல்லி வச்சிருக்கேன். எனக்கென்னவோ கிடைக்குற மாதிரி தெரில. நீ எல்லா certificatesம் இன்னொரு copy கேட்டு apply பண்ணு‌. அதான் நல்லது” என்று சொல்லிவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

அனிதா வெளியே சென்றதும், “இருமா தமிழ், அவ சொன்னத எடுத்து வச்சிட்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு பார்வதி உள்ளறைக்குச் சென்றார்.

தமிழினி செய்வதறியாது அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள். அவளின் எண்ண ஓட்டங்கள் பலவாறாக இருந்தது. “பள்ளி நாட்களில் இருந்தே அவள் அப்படிதான். அவளுக்காக நான் என்ன தான் செஞ்சாலும் அது அவளுக்கு நிறைவைத் தரவே தராது. நான் மத்தவங்ககிட்ட பேசுனா, பழகுனா கூட மூஞ்சிய தூக்கி வச்சிப்பா. இப்பவர இவ மட்டும் தான எனக்கு friend. நான் அவள எவ்ளோ நம்புறேன், நேசிக்குறேன். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா எவ்ளோ மகிழுறேன். இவளுக்கு மட்டும் ஏன் எப்பவும் என் மேல ஒரு வெறுப்பு இருக்கு. மாறிடுவானு நெனச்சு நெனச்சு நான் ஏமாந்து போறது தான் மிச்சம்” என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்த தன்னை சற்றே வாயடைத்துவிட்டு, “ம்மா, நான் கெளம்பட்டுமா?” என்று உள்ளறையில் இருந்த பார்வதிக்குக் கேட்குமாறு சற்றே உரக்கக் கேட்டாள் தமிழினி.

“தமிழ், இங்க வாமா, இதை கொஞ்சம் எடுத்துக் குடுத்துட்டுப் போடா” என்றார் பார்வதி உள்ளறையில் இருந்தபடியே.

உள்ளறைக்குச் சென்ற தமிழினியிடம் அலமாரியைச் சுட்டிக் காட்டிய பார்வதி, “தமிழ், இவ இந்த FIR Copyய எதுல வச்சிருக்கானே தெரில. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. அதோ மேல ஒரு பை இருக்குல, அதை மட்டும் கொஞ்சம் எடுத்துக் குடும்மா “ என்றார்

“எனக்கும் எட்டாதுமா, அந்த chairஐ கொடுங்க” என்ற தமிழினி, “நாளைக்கு அங்க போய் பாத்துட்டு வந்து போன் பண்ணுங்கம்மா, நீங்களாவது என்ன ஏதுனு சொல்லுங்க” என்று சொல்லிக்கொண்டே, நாற்காலியின் மீதேறிய தமிழினி அலமாரியின் மேல் புறத்தில் இருந்த பையை எடுத்தாள்.

“தமிழு, அப்டியே அதுல என்ன இருக்குனு பாரு. வேணாம்னா அங்கயே வச்சிடுவோம்” என்று பார்வதி சொல்லவும், நாற்காலியின் மீது நின்றபடியே அந்த கவரைப் பிரித்துப் பார்த்தாள் தமிழினி. அதன் உள்ளே சில தாள்களும், கூடவே இன்னொரு நெகிழி பையும் இருந்தது. தாள்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு, தாள்கள் வெளிவராதபடி கவனமாக மடித்து வைக்கப்பட்ட நெகிழிப் பையை பிரித்துப் பார்த்த போது அதில் அவளின் certificateகள் அனைத்தும் இருந்தன. அதனைக் கண்ட தமிழினி, சில நொடிகள் திகைத்து, செய்வதறியாது விழித்து, சிலையென நின்றாள்.

“என்ன தமிழு, அதுல என்ன இருக்கு” என்று கேட்ட பார்வதியிடம், “என்னோட certificates மா” என்று சொல்லி முடிக்கவும், அனிதா அங்கு வரவும் சரியாக இருந்தது.

பார்வதி ஏதும் புரியாதவராய், அனிதாவையும், தமிழினியையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்க்க, தமிழினி அனைத்தும் விளங்கியவளாய் அனிதாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தமிழினியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தன் பார்வையை வேறு பக்கம் செலுத்திய அனிதா, ஏதோ சொல்வதற்கு வாயெடுக்க, “வேணாம் அனிதா, நீ ஏதும் சொல்லாத, ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, தன் சான்றிதழ்களோடு அங்கிருந்து புறப்பட்டாள் தமிழினி. அவள் மீண்டும் வருவாள் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை அனிதாவிற்கு.

- மௌவல்

குறள்:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

விளக்கம் :

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக