திங்கள், 25 மார்ச், 2019

கடன் அன்பை முறிக்கும் - குறள் கதை

கடன் அன்பை முறிக்கும்
- நீர்ப்பறவை

சென்னை நகரின் எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கண்ணன்,  மெல்ல மெல்ல தன் இரு சக்கர வண்டியை நகர்த்திக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில், அவனின் மனைவி திவ்யா, ஒரு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தன் மகள் கண்மணியை மடியில் அமர்த்தியவாறு அமர்ந்திருந்தாள். வண்டிகளிலிருந்து வெளியேறிய வெப்பத்தைக் குழந்தை தாங்காது என்று கண்ணன், ஒரே இடத்தில் நின்றுவிடாமல் சிறு இடைவெளிகளிலும் புகுந்து முன்னேறினான். குழந்தை வண்டிகளைக் கண்டு மழலைமொழியில் ஏதேதோ பேசிக்கொண்டும், கையசைத்தும், மற்றவர்களைப் பார்த்து சிரித்தபடியும் இருந்தது. திவ்யாவோ எவ்வித சலனமும் இல்லாமல், சுற்றி நடப்பவற்றில் மனம் ஒன்றாமல், தன் பிள்ளையை இறுக்கப் பிடித்தவாறு அமர்ந்திருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை வளாகம் வந்துவிடும். பின், இயல்பாக எப்போதும் அரங்கேறும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தபோது, திவ்யாவிற்குக் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. பெருமுயற்சியோடு தேங்கிய கண்ணீரை வழியவிடாமல் நிறுத்திவிட்டாள். ஆனால், தொண்டையில் உண்டான ஒரு வலியை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சிந்தனையிலிருந்து நிகழுலகிற்குள் அவள் நுழைந்தபோது, கண்ணன் மருத்துவமனையை அடைந்திருந்தான். இப்போது, இயந்திரத்தனமாகச் செயல்படத் தொடங்கிய திவ்யா, வண்டியிலிருந்து இறங்கியதும், குழந்தையைத் தூக்கி, கண்ணனின் கைகளில் கொடுத்தாள். ஆனால், குழந்தையோ அவளின் கழுத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அதன் அப்பாவிடம் செல்ல மறுத்தது. கண்ணன் எவ்வளவு அமைதிப்படுத்தியும், குழந்தை வர மறுத்து அடம்பிடித்துக் கத்தியது.
கண்மணியைச் சுமந்தபடியே மருத்துவமனையின் முதன்மை கட்டிடத்தின் உள்ளே நுழைந்த திவ்யா, பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் தன் ஆள்காட்டி விரலைப் பதித்துவிட்டு, வெளியே நின்றிருந்த கண்ணனை நோக்கி நடந்தாள். கண்ணன் அவளிடமிருந்து வலுக்கட்டாயமாகக் குழந்தையைப் பிரித்தெடுக்க ஆயத்தமாகக் காத்திருந்தான். அவனின் அருகே சென்றதும், சற்று அமைதியடைந்திருந்த குழந்தையைச் சட்டென வாங்கிக் கொண்டான்.

இப்போது குழந்தையின் கதறல், பல மடங்கு சத்தமாகக் கேட்டது. வெளியில் நின்றிருந்த நோயாளிகளும், அவர் உறவுகளும் வேடிக்கை பார்க்க, எதையும் கவனிக்காதவளாய், அழுகைச் சத்தத்தைக் காதில் வாங்காதவளாய் விறுவிறுவென்று வேறொரு கட்டிடத்தை நோக்கி நடந்தாள், கண்ணீர் வழிய.

அவள் அந்த மருத்துவமனையின் புறநோயாளிகள் துறையில் பணிபுரிகின்றாள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர்ந்த திவ்யா, ஐந்து ஆண்டுகளாக பணியில் இருந்தாள். பின் திருமணம் முடிந்து மகப்பேறு காலவிடுப்பில் சென்ற திவ்யா,  சில மாதங்களுக்கு முன் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பினாள்.

காதலித்து மணமுடித்த கணவன் ஏழ்மை காரணமாகப் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தான். திவ்யா ஏழ்மையையும், படிப்பையும் காரணம் காட்டி கண்ணனை ஒதுக்காமல், அவனின் நன்மனம் கண்டு காதலை ஏற்று, திருமணம் செய்து கொண்டாள். கண்ணன் மரத்தச்சர் வேலை பார்த்து வந்தாலும், அதில் போதிய வருமானம் இல்லாமல் போனது. திவ்யாவின் வருமானம் போதுமானதாக இருந்ததால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் தான் திவ்யா கருவுற்றாள்.தனியார் மருத்துவமனை என்பதால், அவளின் மகப்பேறுக்குப் பின் மூன்று மாத காலம் மட்டுமே அவளுக்கு விடுப்பு கிடைத்தது. 

சிறுவயதிலேயே தாயை இழந்திருந்த திவ்யா, தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கண்ணனின் அம்மாவையே நம்பியிருந்தாள். கண்ணை மூடித் திறப்பதற்குள் மூன்று மாதங்கள் உருண்டோட, இரண்டு நாட்களில் வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலையில், கண்ணனின் தாயும் வர மறுத்துவிட்டார். கண்ணனின் வருமானம் குறைவு என்பதாலும், பலநாள் வேலை இருக்காது என்பதாலும், அவள் வேலையை விட முடியாமல் தவித்தாள். 

குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லாததாலும், வறுமை சூழ்ந்து விடக் கூடாதென்ற அச்சத்தாலும், இருவரும் சேர்ந்து, கண்ணனே வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வதென முடிவு செய்தார்கள்.

குழந்தையைக் கண்ணனே பார்த்துக் கொள்ளப் போகிறான் என்றாலும், திவ்யாவிற்கு உள்ளூர ஒரு நெருடலும், அருகேயிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்து கொண்டுதான் இருந்தது.

திவ்யா விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தாள். நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருந்ததால், அவள் மிகக் கடினமாக வேலை பார்க்க வேண்டியிருந்தது. அவளுக்குக் கிடைக்கும் சிறு இடைவேளையிலும், உணவு நேரத்திலும் யாருடனும் பேசாமல் தனித்தே காணப்பட்டாள். அந்நேரங்கள், அவள் தன் குழந்தையோடும் கணவனோடும் பேசும், பொன்னான நேரங்களானதால்.

சில மாதங்களுக்குப் பின், மருத்துவமனை வளாகத்தினுள்ளே அமைந்திருக்கும், வங்கியில் கடன் வழங்குவதை திவ்யா தெரிந்து கொண்டாள். அவளது சம்பளக் கணக்கும் அந்த வங்கியில் தான் இருந்தது. நாமும் கடன் பெற்று, கண்ணனுக்குச் சொந்தமாக ஒரு கடையை வைத்துக் கொடுத்தால் என்னவென்று, அவளுக்குச் சட்டென ஓர் எண்ணம் உதித்தது.

பணி முடிந்து வீடு திரும்பியவள், முதலில் கண்ணனிடம் தன் யோசனையைத் தெரிவித்தாள். கண்ணனுக்கும், அவள் சொல்வது சரியெனத் தோன்றியது. அதோடு தன் குழந்தையைக் கவனித்துக் கொள்ள இனி யாரையும் தேட வேண்டிய கட்டாயமும் இருக்காது, கண்ணனும் சொந்தமாக வேலை செய்வான் என நிம்மதியடைந்தாள். அதே நேரம், தன் குழந்தையைத் தன்னால் பார்த்துக் கொள்ளமுடியவில்லையே என ஏங்கவும் செய்தாள்.

அடுத்த நாள் வேலைக்குச் சென்றவள் முதல் வேலையாக வங்கிக்குச் சென்று, லோன் பெறுவதற்கான நடைமுறைகளைப் பற்றி விசாரித்தாள். குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பணி புரிந்திருக்கவேண்டுமென்றும், நீங்கள் பணியில் சேர்ந்து சிலமாதங்களே ஆகியிருப்பதால், உங்களால் இக்கடன் வசதியைப் பெறமுடியாது என்று கூறியதைக் கேட்டுக் கலக்கமுற்றாள்.

அவள் இதற்கு முன்பே இங்கு பணிபுரிந்தவிவரத்தைச் சொல்லியும், அவர்கள் மறுத்தனர். அவளின் இந்த வங்கிக் கணக்கு, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதைச் சொல்லித் தட்டிக் கழித்தனர். சற்றே குழம்பியவளாய், தன் மேலாளரைச் சந்தித்து நடந்த விவரங்களைச் சொல்லி, உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். அவரும் தன்னால் முடிந்த உதவியை அவளுக்குச் செய்வதாகக் கூறி அனுப்பினார். வீடு திரும்பிய திவ்யா, மகிழ்வோடு காணப்பட்ட கண்ணனிடம் சொல்ல மனமில்லாமல் மறைத்துவிட்டாள்.

அன்றிரவு முழுக்க உறக்கமில்லாமல் தவித்த திவ்யா, எப்படியாவது தன் கணவனுக்கு உதவிட வேண்டுமென்று நினைத்தாள். பசியில் அழுத குழந்தையை அள்ளிய திவ்யா, பால் புகட்டிக் கொண்டே, கண்மணியை வெறித்துப் பார்த்தாள். பகல் நேரத்தில் குழந்தை பால் அருந்தும் புட்டியைப் பார்த்தபோது மனம் துடித்து வேதனைப்பட்டாள். வேலையை விட்டு நிற்கவும் முடியாமல், வேலைக்குச் செல்ல மனமும் இல்லாமல் அவள் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருந்தாள். 

அன்று புறநோயாளிகள் பிரிவில் அதிகப்படியான நோயாளிகள் இல்லாததாலும், சோர்வாலும், தன் மேலாளரிடம் தெரிவித்து விட்டு, தேநீர் பருக உணவகம் சென்றாள். வங்கியின் மேல் தளத்தில் இருந்தது அந்த உணவகம். அவள் முன்னிருந்த தேநீர்க் கோப்பை மெலிதான ஆவியை விட்டு தன் வெப்பத்தை இழந்து கொண்டிருந்தது. அந்தக் கோப்பையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா, "ஹாய்” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள். வேறு துறையில் பணிபுரியும் ரகு புன்னகைத்தபடி,  அவள் பின்னாலிருந்து வந்து அவள் முன்னிருக்கையில் அமர்ந்தான். திவ்யா மகப்பேறு சென்ற போது அவன் பணியில் சேர்ந்ததாலும், இருவருக்குமான பணிநேரத்தில் மாற்றம் இருந்ததாலும் அவர்களுக்குள் அவ்வளவாகப் பழக்கமில்லை.

சிறிது குழப்பத்தோடே பதில் புன்னகையை உதிர்த்துவிட்டு, அமைதியாகத் தனது தேநீரை எடுத்துப் பருகத் துவங்கினாள்.

“உங்கள பத்தி சார் சொன்னாரு", என்றவனை, திவ்யா உற்று நோக்கியவாறே, “என்ன சொன்னாரு”என்றாள்.

"நீங்க வசதியானவங்கன்னு சொன்னாரு. அப்புறம் ஏன் லோனுக்கு முயற்சி பண்றீங்க? உங்க அப்பாகிட்ட உதவி கேட்கலாம்ல” என்றான்.

“கண்ணனுக்கு அப்படி கேக்குறதுலாம் பிடிக்காது” என்றாள்.

“சரி என்னோட வாங்க” என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென இறங்கி வங்கிக்குள் சென்றான்.

ஏதும் புரியாதவளாய் அவனைப் பின் தொடர்ந்தவள், அவனோடு வங்கிக்குச் சென்று மேலாளர் அறையின் வெளியே நின்றாள். சில நிமிடங்களுக்குப் பின் அறையை விட்டு வெளியேறிய ரகுவின் கையில், கடன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் இருந்ததைக் கண்டு திகைத்து நின்றாள் திவ்யா.

ரகு விண்ணப்பத்தை அவள் கைகளில் கொடுத்துவிட்டு, "மேனேஜர்கிட்ட எல்லாம் பேசியாச்சு, இந்தாங்க இந்த formல இன்டு மார்க் இருக்குற எடத்துல கையெழுத்து, 47ம் பக்கத்துல மட்டும் ரெண்டு பேருகிட்ட surety sign வாங்கிடுங்க" என்று கூற, திவ்யாவுக்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை. கையில் விண்ணப்பத்தை வாங்கி, "ரொம்ப தேங்கஸ்ங்க" எனக் கூற, சிரித்துக் கொண்டே நகர்ந்தான் ரகு. 

கண்ணனைத் தொடர்பு கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திவ்யா, இப்போது இருவரிடம் வாங்க வேண்டிய surety sign நினைத்துக் கவலைக் கொண்டாள்.

தன் பணியிடத்திற்குச் சென்ற திவ்யா, மேலாளர் உட்பட தன்னோடு பணிபுரியும் அனைவரிடமும், தனக்காகக் கையெழுத்திட முடியுமா எனக் கேட்டுப் பார்த்தாள். ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழித்தனர். செய்வதறியாது தவித்த திவ்யா, வீடு திரும்பியதும், கண்ணனிடம் நடந்தவைகளைக் கூறி வருத்தமுற்றாள். பின் விண்ணப்பப்படிவத்தில் தன் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றிதழ்களை இணைத்தாள். நாளை எப்படியாவது யாரிடமாவது தன் நிலையைச் சொல்லிக் கையெழுத்து வாங்கிவிட முடிவு செய்தாள்.

அடுத்த நாள் காலை திவ்யா பணிக்குச் சென்ற போது, அவளுக்காக ரகு காத்திருந்தான். 

“என்னங்க, எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?”என்றான்

“இன்னும் இல்லை” என்றவளிடம், “ஏங்க அந்த பேப்பர்ஸ் எல்லாம் குடுங்க” என்றான்.

தன் பையிலிருந்து விண்ணப்பப் படிவத்தை எடுத்து நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்ட அவன், அங்கிருந்து வெளியேறி, சிறிது நேரத்திற்குப் பின் திரும்பினான். 

“ஏங்க surely signலாம் வாங்கியாச்சு, இந்தாங்க எடுத்துட்டுப் போய் பேங்க்ல குடுங்க”என்றவன் “குடுத்துட்டு வந்துடாதீங்க, மேல கேன்டீன்ல வெயிட் பண்ணுங்க”, என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

முன்பிருந்த மகிழ்ச்சி இப்போது திவ்யாவிடம் ஏனோ காணாமல் போனது. விண்ணப்பப் படிவத்தை வாங்கியவள், அதை வங்கியில் கொடுக்க மனமில்லாமல் நோயாளிகளைக் கவனிக்கத் துவங்கினாள்.

சில மணி நேரங்களுக்குப் பின் அவளின் intercomல் அழைத்த ரகு, “ஏங்க, நீங்க வருவீங்கன்னு நானும் ரொம்ப நேரமாக்  காத்திருக்கேன், அந்த இடத்தை விட்டு அசைய மாட்டுறீங்க”என்றவனிடம், “சாரி, ரகு என்னால இப்ப எங்கயும் வர முடியாது, நிறைய பேஷன்ட் காத்திட்டு இருக்காங்க பாவம்” எனச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

திவ்யா ஆழ்ந்ததொரு குழப்பத்தில் மூழ்கியிருந்தாள். ரகு ஏன் நமக்கு உதவி செய்கின்றான். 'மேலாளர் உதவச் சொன்னதாலா, இல்லை வேறேதும் நோக்கம் இருக்கின்றதா' என அவள் மனம் மீண்டும் மீண்டும் கேட்டுத் துளைத்தெடுத்தது. பணியிடத்தில் பலமுறை ரகுவைப் பார்க்கவும், பேசவும் நேரிட்ட பொழுதும் திவ்யா பணி நிமித்தமாக பேசினாளே தவிர வேறெதுவும் பேசவில்லை. ரகு தன்னையே சுற்றி வருகிறானா, இல்லை நமக்குத் தான் அப்படி தோன்றுகிறதா என்று நினைத்துக் கொண்ட திவ்யா, அவன் நடவடிக்கைகளைக் கவனிக்கத் துவங்கினாள். 

மாலையில் பணிநேரம் முடியும் நேரம் ரகு, திவ்யாவைத் தேடி வந்தான். அங்கு திவ்யாவும், மேலாளரும் இல்லாததை உணர்ந்த ரகு, திவ்யாவின் பொருட்கள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

மருத்துவரைச் சந்திக்க நோயாளிகளைப் பார்க்கும் அறைக்குள் சென்றிருந்த திவ்யா, சில ரிப்போர்ட்களோடு வெளியே வந்தாள். பின் மேலாளர் அறையை நோக்கிச் சென்றவள், அங்கு ரகு இருப்பதைக் கண்டு சற்றே மறைந்து நின்றாள். அவனை உற்று நோக்கிய போது, ரகு அவளின் வெள்ளை நிற coatஐ அவனின் முகத்தருகே வைத்து நுகர்ந்தும், தன் முகத்தோடு தேய்த்தும் கொண்டிருப்பதைக்  கண்டு அதிர்ந்தாள். செய்வதறியாது நின்றவள் வெளியேறிய அவனைக் கண்டு சிறிது தடுமாறினாள்.

“வந்துட்டீங்களா, ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? ”என்றான் ரகு.

"ம்..." என்றவள் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“உங்களதாங்க,  என்னாச்சு? காபி குடிக்கப் போலாமா?”

“ம், இல்லங்க, வேலை இருக்கு” என்றவளை, “எப்பவும் எதைக் கேட்டாலும் ம் தானா, நல்லாத்  தான் பேசுங்களேன்” என்றான்.

ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தவள், அறையினுள் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தாள். தன் குடும்ப சூழ்நிலையையும், குழந்தையையும் நினைத்துக் குழம்பிப் போனாள். தன் பின்னால் நெருக்கமாக யாரோ நிற்பதாக உணர்ந்த திவ்யா, திரும்பிப் பார்த்தபோது ரகு நின்றிருந்தான்.

“ஏங்க பேங்க்ல பார்ம் இன்னும் கொடுக்கலயா? நான் மேனஜர்கிட்ட பேசுறேன், உடனே கிடைச்சிடும்”,என்றவனை விட்டு விலகி வந்த திவ்யா படபடத்து நின்றாள். 

“உங்களையே சுத்தி சுத்தி வரேன், பேசக் கூட மாட்டுறீங்க”என்றவன், “வீட்டுக்கு வாங்களேன், பக்கத்தில் தான் இருக்கு, wife அம்மா வீட்டுக்குப் போய்ருக்காங்க, எந்தத் தொந்தரவும் இருக்காது”, என்றவன் சில நொடிகளுக்குப் பின், ”லோன் விஷயமா பேசலாம்ங்க” என்றான். 

ஏதோ நினைத்தவளாய், எதையோ உணர்ந்தவளாய் விறுவிறுவெனச் சென்ற திவ்யா, தன் பையிலிருந்த விண்ணப்பத்தை எடுத்து, கோபத்தோடு கிழித்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள். “உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றவள், “இங்கருந்து வெளில போங்க” என்றாள்.

அவன் அங்கேயே நிற்பதை விரும்பாத திவ்யா, அங்கிருந்து வெளியேறினாள். மனம் லேசாகியிருந்தது. கண்ணனிடம் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது, என்றாலும் தெரிந்தால் தன் வேலையை இழக்க நேரிடுமோ, ஏதேனும் சிக்கல் வருமோ என யோசித்தவள், சற்றே தள்ளியிருந்த பிணவறையின் முன் சென்று அமர்ந்தாள். 

மனதில் ஏதோ முடிவெடுத்தவளாய், கண்ணனைத் தொடர்பு கொண்டு நடந்தவை அனைத்தையும் கூறினாள். “ஒன்னும் கவலைப்படாதே, இதோ நான் கெளம்பி வரேன்” என்ற கண்ணன் வேறெதுவும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தான்.

சில நிமிடங்கள் அழுத பின், முகம் கழுவ நினைத்த திவ்யா, மருத்துவம் பார்க்கும் அறையினுள் நுழைந்தாள். யாருமில்லாத அந்த அறையினுள், மருத்துவர்கள் கை கழுவும் வாஷ்பேஸின் முன் நின்ற திவ்யா, மீண்டும் அழுதவாறே முகத்தைக் கழுவத் துவங்கினாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த திவ்யா, தாழ்ப்பாள் போடும் ரகுவைப் பார்த்து அதிர்ந்து போனாள். கதவைத் திறக்கவிடாமல் நின்ற ரகுவைப் பாரத்து, “கதவைத் திறங்க“என்றாள். அவனோ எதற்கும் கவலைப் படாதவனாய் நின்றான். 

“மூணு லட்ச ரூபாய், யாராவது எதுவும் தெரியாம கையெழுத்து போடுவானா? நான் போட்டேன்ல உனக்காக,  ஆனா நீ, புரிஞ்சுக்காம இப்படி பண்ணுறியே” என்றவன், “உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, இப்படியே வரப் பிடிக்கலைனா அவன டைவர்ஸ் பண்ணிட்டு வா, நாம சந்தோஷமா இருக்கலாம்” என்றான்.

சில நொடி பயத்தில் உறைந்து போன திவ்யா, பின் உடனடியாகச் செயல்பட்டு, அங்கிருந்த ஸ்ட்ரெச்சர் மீதேறி ஜன்னலின் வழியே பார்த்தாள். அங்கு அடுத்த கட்டிடத்தின் வாயிலில் செக்யூரிட்டி நின்றிருந்தார். ரகுவைப் பார்த்து, “இங்க பாரு, கதவைத் திற, இல்ல, கத்தி எல்லோரையும் கூப்பிடுவேன்”என்றாள். அவனோ, “கூப்பிடு, எல்லோரையும் கூப்பிடு, வரட்டும், உனக்குத் தான் அசிங்கம்”, என்றான். “உன் புருசனுக்குத் தெரிஞ்சா வேலைக்கு அனுப்ப மாட்டான், உன்னையும் தப்பாத் தான் பேசுவான், பரவாயில்லனா கூப்பிடு” என்றான்.

உள்ளுக்குள் அச்சம் ஏற்பட்டாலும், வெளிகாட்டாதவளாய், “அவங்க நம்புறதும், நம்பாததும் அப்புறம், முதல்ல உனக்கு ஒரு முடிவு கட்டுறேன்” என்று சொன்ன அதே நொடியில்,
“முடிவு கட்டுறதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு பேஷண்ட் டீட்டெயில் வேணும். அதைச் சொல்லிட்டு முடிவு கட்டுங்க”, என்றொரு குரல் சொல்லியது. 

ஸ்கீரின் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்ட திவ்யா, யார் என்ற குழப்பத்தோடே, “சார்” என்று அழைத்து, பின் அடையாளம் கண்டவளாய், “அருண் சார், அருண் சார், ப்ளிஸ் காப்பாத்துங்க”என்றாள்.

“ஏம்மா, நானே முக்கி முக்கி கேஸ்ஷீட் பாத்துட்டு இருக்கேன், நீ என்னடானா ரெண்டு அறை விட்டு வெளியத் தள்ளாம, மேல நின்னு கத்திகிட்டு இருக்க? முதல்ல கீழ இறங்குமா. விழுந்திடப் போற“ என்று சொல்லிக் கொண்டே வெளிய வந்தவர், ரகுவின் தோள் மீது கைகளைப் போட்டு அவனைப் பிடித்தபடி நின்றார்.

“சார்,  நாங்க சும்மா விளையாட்டாப் பேசிட்டு இருந்தோம்” என்றான் ரகு.
கீழே இறங்கிய திவ்யா, "சார் நீங்க எப்ப வந்தீங்க?" என்றாள்.

“காலைல வந்தேன்மா”என்று சொல்லிக் கொண்டே ரகுவின் சட்டையைச் சரி செய்தார். ரகு செய்வதறியாது அதிர்ந்து நின்றிருந்தான்.

"திவ்யா சிஸ்டர், “Pt மனோகரன் file எங்க?”என்றார்.

"என் டேபிள்ல இருக்கு சார்" என்றவளை, “சரி அதை எடுத்துட்டு வந்து குடுத்திட்டு, ஒரு முடிவு கட்டு”,என்றார் டாக்டர் அருண்.

திவ்யா வெளியே சென்று, ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, பின் சிறிது தன்னிலைப்படுத்திக் கொண்டு, மருத்துவர் கேட்ட கோப்பினை எடுத்துக் கொண்டு வந்தாள்.

ரகு நடப்பவையேதும் புரியாமல் படபடத்து பயத்தோடு நின்றிருந்தான்.

“திவ்யா சிஸ்டர், இப்ப என்ன தோணுதோ செய்ங்க”என்றார். 

“சார்”என்று சொல்லித் தயங்கி நின்றவளை, “டைம்ஆகுதுமா” என்றார்.

"சார், இதோ வந்துடுறேன்" என்று சொல்லி வெளியே சென்ற திவ்யா, தன் white coat ஐ எடுத்து வந்தாள். அறையின் உள் நுழைந்தவள், அவன் தன் கோட்டை எடுத்து முகத்தில் தேய்த்தும், நுகர்ந்தும் செய்த செயலை நினைத்து அருவருப்படைந்தவளாய், அந்தக் கோட்டைக் கொண்டு, ரகுவின் முகத்திலேயே அடித்தாள்.

“ஏம்மா, என்ன விளையாடிட்டு இருக்கியா? Bone specialist பக்கத்துல தான இருக்கேன்.. மூக்கு, வாயை உடைப்பேன்னு பார்த்தா“என்று சிரித்த மருத்துவர் அருண், பளிச் என ரகுவின் கன்னத்தில் அறைய, ரகுவின் கண்களில் பொறி பறந்தது. 

கன்னத்தைப் பிடித்தபடி திகைத்து நின்றிருந்த ரகுவைப் பார்த்து, “மிஸ்டர் ரகு, உங்களப் பார்க்க, இந்த ஹாஸ்பிட்டல் டீனே வந்துட்டு இருக்காரு. நீங்க பெரிய ஆளு தான், இங்கயே வெயிட் பண்ணுங்க. அறிவாளியா ஏதும் முடிவெடுக்காதீங்க, அப்புறம் சட்டபடி நடவடிக்கை எடுப்பாங்க”, என்று சொல்லியபடியே திவ்யாவோடு அறையை விட்டு வெளியேறி அந்த அறையின் கதவைப் பூட்டினார், மருத்துவர் அருண்.

“சார், நீங்க உள்ள எப்போ வந்தீங்க?” என்றாள் திவ்யா.

"உண்மையாவே காலையில வந்தவன் தான் சிஸ்டர். Chief Dr AK, சில கேஸ் ரெகார்ட் டிட்டெயில் கேட்டாரு, அதான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க உள்ள வந்ததும் பேசத்தான் நினைச்சேன். அழுற சத்தம் கேட்கவே அமைதியா இருந்துட்டேன். அப்புறம் ரகு வந்து பேசுனதும் தான் தெரிஞ்சுது. என்ன தான் செய்றான்னு பாப்போம்னு தான் அமைதியா இருந்தேன். நீங்க ஸ்ட்ரெச்சர்ல ஏறும் போதே வந்திருப்பேன். நீஙகளும் துணிச்சலா நடந்துகணும்ல அதான்” என்ற அருண்,
"டீன்க்கு மெஸஜ் சென்ட் பண்ணிருக்கேன். இப்ப வந்துடுவாரு. நீங்க பதட்டப்படாம இருங்க. இதெல்லாம் நீங்க துணிச்சலாக் கையாளணும், பயப்படக்கூடாது” என்றார்.

திவ்யா தன் பணியிடத்தை நெருங்கிய போது, மீட்டீங் சென்றிருந்த அவளின் மேலாளர் அறைக்குத் திரும்பியிருந்தார். அவரருகே சென்றவள் ஏதும் பேசாமல், அமைதியோடு நின்றிருந்தாள். நேரம் கடந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலரும், வீடு செல்லத் துவங்கினர். ஆள் அரவமில்லாத அந்தப் பெரிய கட்டிடத்தில் எதிரொலித்த குழந்தையின் குரல், திவ்யாவை நிகழ் நிமிடத்திற்கு அழைத்து வந்தது. அது கண்மணியின் குரல். அறையை நோக்கி கண்ணனும், குழந்தையும் வந்து கொண்டிருந்தார்கள்.
மருத்துவர் அருண், நடந்த சம்பவங்களை மேலாளரிடமும், கண்ணனிடமும்கூற, திவ்யாவோ குழந்தையோடு விளையாடியபடி இருந்தாள். கண்ணனும்,  மருத்துவர் அருணும், ரகு இருக்கும் அறையை நோக்கிச் சென்றார்கள். திரும்பி வந்தவர்களிடம் உள்ளே என்ன நடந்ததென்றும் கேட்க விரும்பவில்லை.

சில நிமிடங்களில், டீனும் இன்னும் சில மருத்துவர்களும் அங்கு வந்தனர். மருத்துவர் அருண் அனைவரோடும் ரகு இருந்த அறைக்குச் சென்றார், மேலாளரும், கண்ணனும் உடன் சென்றார்கள். Account பிரிவிலிருந்த ஒருவர் வேக வேகமாக அந்த அறையை நோக்கிச் சென்றார். திவ்யா எதையும் பொருட்படுத்தாது தன் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அனைவரும் வெளியேற, தலை குனிந்தவாறு ரகுவும் வெளியேறினான், மருத்துவமனையை விட்டு நிரந்தரமாக. 

மருத்துவர் அருணுக்கு நன்றி தெரிவித்த கண்ணனும், திவ்யாவும் அங்கிருந்து புறப்பட்டனர். திவ்யாவை ஆறுதலோடு பற்றிய கண்ணனின் கைகளில் காதலும், ஆதரவும், ஆறுதலும் நிறைந்திருந்தது. 

- நீர்ப்பறவை


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி. (145)

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக