புதன், 26 மே, 2021

மெய்சாட்சி - குறள் கதை

 மெய்சாட்சி

-மௌவல்



வீட்டின் பின்பக்க வாசலில் அமர்ந்திருந்த நித்யா, தனக்கு நேரெதிரே இருந்த பெரிய மரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நன்கு பழுத்து, மரம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் நிறைந்திருந்த நார்த்தங்காய்கள், அம்மரத்தை ஆரஞ்சு மரம் போல் தோற்றப்படுத்திக் காட்டியது.

பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடி வந்திருக்கும் குடும்பத்தின் இரு பெண் குழந்தைகள், அந்த ஆரஞ்சு மரத்தின் பழங்களில் ஒன்றையாவது பறித்து விட வேண்டுமென்ற ஆசையில், ஜன்னலின் வழியாக அவ்வபோது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் அம்மா தேவியின் அதட்டலுக்கு அஞ்சி இருவரும் அங்கிருந்து ஓடினார்கள்.

இரு வீடுகளைச் சுற்றிலும், நடுவிலும் மதில் சுவரேதும் இல்லாததால், இரு வீடுகளும் நெருக்கமாக இருப்பதைப் போல் தோற்றமளித்தது. என்றாலும் இரு வீட்டு மனிதர்களுக்குள் நெருக்கம் என்பது இல்லை. அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் என்றாவது ஒருநாள் மட்டும்  சிறிதாகப் புன்னகைத்து கொள்வார்கள், அவ்வளவு தான்.

வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவியின் நாசியை எப்போதும் போல் நார்த்தங்காய்களின் மணம் நிறைக்க, சற்றே திரும்பி அம்மரத்தை நோட்டமிட்டாள். மரம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்த நார்த்தங்காய்களை கடந்து, மரத்தின் நேரெதிரே சுவரோரமாய் சாய்ந்து அமர்ந்திருந்த நித்யாவைப் பார்த்தவள், மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.

“நித்யா...” என எங்கோ தொலைவில் அழைத்து, பின் சில நொடிகளில் “எங்கடி இருக்க அழுமூஞ்சி, கத்துறது காதுல கேட்கல” என மிக அருகே கேட்டபோது, நித்யாவின் கணவன் வசைப்பாடிக் கொண்டே அங்கு வந்திருப்பதை தேவி உணர்ந்து கொண்டாள்.

கணவன் மனைவியின் உரையாடல்கள் காற்றில் மிதந்து வந்து கட்டாயமாக அவளின் காதுகளில் நுழைய, அங்கிருக்க விரும்பாதவளாய், துணிகளை அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தேவி.

தேவி, செழியன், குழந்தைகள் நந்தினி, நளினி என அழகான குடும்பம், சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில்,  சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தில் இப்போது குடி வந்திருக்கும் நிலத்தை வாங்கினர். அவர் சேமித்து வைத்திருந்த பணம்,  நிலம் வாங்குவதற்கே போதாமல் போக, மேலும் சில லட்சங்களை தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியே நிலத்தையும் வாங்கி, அதில் தன் வசதிக்கேற்ப சிறிய அளவில் வீட்டையும் கட்டி முடித்துக் குடி புகுந்தார்.

செழியன் குடும்பம் குடி வந்து இரண்டு மாதங்களிருக்கும், ஒரு ஞாயிற்றுக் கிழமையின்  மாலை நேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்தும் அவ்வளவாக அறிமுகம் ஆகாத கோபாலும் அவர் மனைவி சாந்தியும், செழியன் வீட்டிற்கு வந்தனர். அவர்களின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத தேவி, தட்டுத் தடுமாறி வீட்டிற்கு வரவேற்றாள். சிறு புன்னகைகளும், சில நிமிட விசாரிப்புகளுக்கும் பிறகு, தன் மகன் சுந்தரின் திருமண அழைப்பிதழை எடுத்து நீட்டினார்கள் கோபாலும், அவர் மனைவியும்.

பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு தேவியும் செழியனும் மட்டும் திருமணத்திற்குச் சென்று வந்தார்கள். மிகவும் ஆடம்பரமாக நடந்தேறிய அந்த திருமணத்தைக் கண்டு வியந்து போனாள் தேவி. பெண் வீட்டார், ஐம்பது சவரன் நகையும் போட்டு, பணமாக இரண்டு லட்சமும் கொடுத்து, காரும் வாங்கி கொடுத்திருப்பதாகத் திருமணக் கூட்டத்தில் பேசிக் கொண்டார்கள்.  

வீட்டிற்கு வந்தும் தேவியின் கண்களில் இருந்த வியப்பு அகலவில்லை, “ஒரு பொண்ண பெத்துட்டா அதை நல்லபடியாக் கட்டிக்குடுக்க பெத்தவங்க எவ்ளோ பாடுபட வேண்டியிருக்கு. நாம் ஒன்னுக்கு ரெண்டப் பெத்து வச்சிருக்கோம். என்ன செய்யப் போறோமோ” எனப் பொறுமினாள்.

“ஏன்டி புலம்புற, நம்மக்கிட்ட இருக்குறது பொண் குழந்தைங்க இல்லடி, பொன் குழந்தைங்க. ரெண்டு பேருக்கும் காசு பணம் நகை நட்டு சேத்து வைக்குறனோ இல்லையோ, கடனவுடன வாங்கியாவது நல்ல படிப்பாப் படிக்க வச்சிடணும். அது போதும்” என்றார்.

கோபாலும், சாந்தியும் இப்போதெல்லாம் கொஞ்சமாகப் பேசுகிறார்கள். குழந்தைகளைப் பற்றி, செழியனைப் பற்றி தேவியிடம் விசாரிப்பார்கள். அவர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு, தேவையில்லாத பேச்சுகள் வளரக் கூடாதென நகர்ந்து கொள்வாள் தேவி.

ஆதவன் அடி வானத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்த ஒரு அந்திப் பொழுதில், குழந்தைகள் நளினியும், நந்தினியும் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை கவனித்தவாறே, உலரப்போட்ட துணிகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் தேவி. அங்குமிங்குமாய் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் கூச்சல் சட்டென மறைந்து அமைதியாக, குழந்தைகளின் பக்கம் தன் பார்வையைச் செலுத்தினாள் தேவி.

குழந்தைகள் பக்கத்து வீட்டைப் பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். மடித்துக் கொண்டிருந்த துணிகளை அப்படியே வைத்துவிட்டு, குழந்தைகள் அருகே சென்ற தேவி, “என்னத்தடி அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளும் பார்த்தாள். பக்கத்து வீட்டின் மாடியறையில் இருந்த ஜன்னல் வழியாக குழந்தைகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் நித்யா.

அலங்காரம் செய்த தேவதையாய்த் திருமணத்தன்று பார்த்தது தான் நித்யாவை, அதற்குப் பின்னான நாட்களில் ஓரிரு முறை நார்த்தங்காய் மரத்தடியில் பார்த்திருந்தாலும் கூட அப்போதெல்லாம் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாதபடி அமர்ந்திருந்தாள் நித்யா. தேவியைப் பார்த்ததும் அறையை விட்டு வெளியே வந்த நித்யா, “எப்படி இருக்கீங்கக்கா?” என்றாள்.

“நல்லாருக்கேன் மா, நீ எப்படி இருக்க? வெளிய பாக்கவே முடியறதில்ல” எனக் கேட்டாள் தேவி. ஏதும் சொல்லாமல் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த நித்யா, குழந்தைகளைப் பார்த்து “எந்தக் க்ளாஸ் டா படிக்குறீங்க?” எனக் கேட்டாள்.

“நான் ஏழாவது படிக்கிறேன், இவ நாலாவது படிக்கிறா” என்றாள் நந்தினி. குழந்தைகளின் அருகே நின்று புன்னகைத்த தேவி, குழந்தைகளைப் பார்த்து “விளையாடுனது போதும் வாங்கடாமா போவோம். இருட்டப் போகுது” என்று சொல்லிக் கொண்டே நித்யாவைப் பார்த்தாள்.

“அக்கா, நீங்க இங்க எத்தனை வருசமா இருக்கீங்க?” என்றாள் நித்யா.

“ஏழு மாசம் ஆகுது. உங்க கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் முன்னதான் நாங்க இங்க வந்தோம் மா”

“நீங்களும் இங்க புதுசாத் தான் வந்திருக்கீங்களா?” என்று நித்யா கேட்ட அதே நேரத்தில், “நித்யா... நித்யா...” என்று சுந்தர் அழைத்தது கேட்டது.

“அக்கா வர்றேன்கா,  அப்புறமா பாக்கலாம், பாய்டா குட்டீஸ்” என்று சொல்லிவிட்டு கீழே ஓடினாள் நித்யா.

குழந்தைகளைக் கீழே அனுப்பிவிட்டு, மீதமிருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள் தேவி. சில நிமிடங்களில் பக்கத்து வீட்டின் மாடியறையில் சாந்தியின் பேச்சுக் குரல் கேட்டது. “எந்நேரமும் இங்கயே படுத்துக் கெடக்கா. இல்ல வீட்டுக்குப் பின்ன இருக்க மரத்தடியில மூஞ்சத் தொங்கப்போட்டு உக்காந்திருக்கா. அவ அப்பனாத்தாள ஒரு சொல்லு சொல்லக் கூடாதுங்குறா, என்னைய மொறைக்குறாடா சுந்தரு”

“ஏன்டி, உங்கப்பனப் பேசுனா மொறைக்குறீயா நீ, அவ்ளோ கொழுப்பாயிடுச்சா உனக்கு. அம்பது சவரன் நகையைப் போட்டு காசு குடுத்துட்டா உங்கப்பன் பெரிய இவனா, எதுக்குடி உங்க ஆத்தா ஒரு நாளைக்கு ஆயிரம் முற போன் அடிக்குறா, சாவவா கெடக்குற நீ, நல்லா குத்துக்கல்லாட்டம் தான இருக்க? எதுக்குடி கல்யாணம் பண்ணிக் குடுத்தா உன்ன? வீட்லயே வச்சுப் புள்ள பெக்க வழி தேட வேண்டியது தான?” என்று அவன் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்த போது, கண்டும் காணாதவளாய், கேட்டும் கேட்காதவளாய், “கல்யாணமாகி முழுசா ஒரு வருசம் கூட ஆகல, இப்டி திட்டுறானே” என முனுமுனுத்தவாறே கீழிறங்கி வந்தாள் தேவி.

வேலை முடித்து செழியன் வீடு திரும்பிய போது, சின்னவள் நளினி உறங்கிக் கொண்டிருக்க, நந்தினி தன் அம்மாவிடம் அரைத் தூக்கத்தில் கதை கேட்டுக் கொண்டிருந்தாள். செழியன் குளித்து முடித்து உணவருந்த அமர்ந்த போது, நளினி எழுந்து வந்து அவரின் அருகே அமர்ந்து கொண்டாள். பிசைந்த சோற்றில் கொஞ்சமாய் எடுத்து, ஆசையாய்த் தன் மகளுக்கு ஊட்டிவிட்ட செழியன், “தூங்கலயடா, காலையில நேரத்தோட எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்ல” என்றார். “ம்” என சொல்லிவிட்டு அடுத்த உருண்டைக்கு வாய் திறந்தாள் நளினி.

“உங்களப் பாக்காம என்னைக்குத் தூங்கிருக்கா அவ. நீங்க வர வரைக்கும் முழிச்சிட்டு தான் இருக்கா” என்றாள் தேவி.

கணவனும், மனைவியுமாய் உணவருந்தி முடித்து, விழித்திருந்த பிள்ளையை உறங்க வைத்து, கதை பேச, காதல் கொள்ள, காமம் ருசிக்க என  அனைத்துக்குமாய்த் தங்களுக்கெனக் கிடைத்திருக்கும் அந்த இரவு நேரத்தில், அன்று நடந்த நிகழ்வுகளை தன் கணவனிடம் விவரித்தாள் தேவி.

“பாவம்ங்க அந்த பொண்ணு, என்னா திட்டு திட்டுறாங்க அவனும், அவங்க அம்மாவும். அந்தம்மாவ நான் என்னமோ நல்லவங்கன்னு நெனச்சேன். சண்டைய மூட்டிவிட்டு வேடிக்கை பாக்குறாங்க. நைட்ல நானும் நிறைய முறை பாத்திருக்கேன், அந்தப் பொண்ணு அழுதுட்டு இருக்குறத”

“அவங்க கதை நமக்கெதுக்குடி? நீ தேவையில்லாம ஏதும் பேசிட்டு இருக்காத சரியா” என்றார் செழியன்.

“நான் என்ன பேசப்போறேன். இன்னைக்கு அந்தப் பிள்ளையே தான் வந்து பேசுனா. ஆனாலும் அவங்க செய்றது ரொம்ப அநியாயம். மாசமா வேற இருக்கா போல. ஆனா நான் பாத்ததும் கேட்டதும்விட, நம்ம குழந்தைங்க சொன்னது அதிகம்ங்க. ரெண்டு நாளு முன்னகூட அந்த பிள்ளையோட முடிய பிடிச்சு இழுத்து, அவளச் சுவத்துல முட்டியிருக்கான். இன்னிக்கும் நாலஞ்சு முறை அறஞ்சிருக்கான், எனக்குத் தெரியாம பழம் பறிக்கப்போன குழந்தைங்க, அவன் அடிக்குறதப் பாத்துட்டு, பயந்து ஓடிவந்திருக்குங்க” என்றாள்.

“குழந்தைங்களப் பத்திரமா பாத்துக்கடி. அந்தப் பக்கம் அனுப்பாத. போகக் கூடாதுன்னு சொல்லி வை”

“எத்தனை முறைங்க சொல்றது, அது ஆரஞ்சு பழமில்ல நார்த்தங்காய்னு” என்றாள் தேவி சலிப்பாக.

மறுநாள் காலையில், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி, வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த செழியன், “தேவி, தீபாவளிக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு. நெருக்கத்துல துணி எடுக்கப் போனா கூட்டம் அதிகமாயிருக்கும்.  இன்னைக்கு இல்ல நாளைக்குப் போய் குழந்தைங்களுக்கு துணி எடுத்துட்டு வந்துடுவோம்” என்றார்.

“ம், ஏங்க தீபாவளிக்கு ஊருக்குத் தான போறோம். லீவு கேட்டுப் பாருங்க” என்றாள் தேவி.

“சரி” என்றவாறே வீட்டின் முன்பக்கமாக, மாடிப்படியின் கீழ் பக்கவாட்டில் விடப்பட்டிருந்த தன் இரு சக்கரவண்டியை வெளியே எடுக்கச் சென்றார் செழியன். அங்கிருந்து பார்த்தால் கோபாலின் வீடு நன்றாகத் தெரியும். எப்போது வண்டி எடுக்கச் சென்றாலும் எங்கேயும் பார்க்காது, எதையும் கவனிக்காது வந்துவிடும் செழியன், அன்று அவ்வீட்டில் கேட்ட அழுகுரலால் சற்றே நிலைத்தடுமாறி போனார். அலட்சியம் செய்ய மனமில்லாது தயக்கத்தோடு பார்த்தபோது, நித்யா மீது காறி உமிழ்ந்து, காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்குத் திட்டிக்கொண்டிருந்தார் சாந்தி. ஏதும் நடக்காததைப் போல் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார் கோபால்.  

செழியன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட சுந்தர், சட்டென, “விடும்மா அவள, நீ போ, போய் வேலைய பாரு” எனத் தன் அம்மாவை அதட்டினான். பின் வேகமாகச் செழியனிடம் வந்து, “என்னண்ணே வேலைக்குக் கிளம்பியாச்சா?” என்றான்.

“ஆமாம்பா” என்றவாறே வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். பின் தேவியை அழைத்து, “தேவி, மனசுக்கு ஏதோ தப்பாப் படுதுடி. அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு வச்சு பாத்துக்கடி. பாவம், பெத்தவங்க புள்ள நல்லாருக்கும்னு நெனச்சிட்டு இருப்பாங்க. ஆனா இங்க அந்தப் புள்ளைய நாசம் பண்ணிட்டு இருக்குதுங்க. என்ன பிறப்புடி அந்தப் பொம்பள” என்று சொல்லியபோது, “என்னாச்சுங்க?” எனக் கேட்டாள் தேவி.

தான் பார்த்தவற்றை கூறிய செழியன், “நைட்டானா சொகமா என் புள்ள கூட இருக்கல. நாளைக்குப் புள்ளையப் பெத்தா அவன் பேர் தானடி இனிஷியலா போடுவ. இதெல்லாம் உனக்கு வேணும், ஆனா தீபாவளிக்குச் சீரா பத்து பவுனு கேட்டா உங்கப்பனும், ஆத்தாளும் எகத்தாளமா பேசுறாங்க. என்ன, என் புள்ளையோட வாழ வந்திருக்கங்குறது மறந்து போச்சாமானு பச்சையா கேக்குறாங்கடி” என்றார் செழியன்.

“எங்கங்க, அக்கம்பக்கம் பேசக்கூடாதுன்னு ஏதும் சொல்லி வச்சிருப்பாங்க போல, கொஞ்ச நேரம் பேசுனாலும் பயந்து பயந்து தான் பேசுறா. நாம என்னங்க பண்றது, சரி, நீங்க பாத்துப் போய்ட்டு வாங்க”  எனச் சொல்ல செழியன் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அன்றைய நாள் முழுவதும், தேவி நித்யாவைப் பார்க்க முயன்றாள். துணி துவைப்பதைப் போல் நார்த்தங்காய் மரத்தடியில் எதிர்நோக்கினாள்.  மாடிக்குச் சென்று மாடியறையை நோட்டமிட்டாள். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. மாலை நான்கு மணியளவில், பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்த போது தேவி, நித்யாவை பார்த்தாள். குழந்தைகளுக்காகவே காத்திருந்ததைப் போல்,  வாசலிலேயே நின்றிருந்தாள் நித்யா. எப்போதும் பேசுவதற்குத் தயங்கும் தேவியும், இன்று நித்யாவைப் பார்த்ததும் வேகமாக அவளை நோக்கிச் சென்றாள்.

“என்னம்மா, காலையிலருந்து ஆளையே காணல” எனக் கேட்ட போது, பதிலேதும் சொல்லாமல் நின்றாள் நித்யா. பின், “அக்கா, குழந்தைங்களப் பின்னாடி பக்கம் கூட்டிட்டு வாங்க” எனச் சொல்லிவிட்டு நார்த்தங்காய் மரத்தடியை நோக்கி நடந்தாள் நித்யா. குழந்தைகளும் மகிழ்ச்சியாக தேவிக்கு முன் அங்கு ஓடினார்கள்.

“ஏய் குட்டீஸ், இந்தப் பழத்தை பறிக்கத் தான அப்பப்போ ஓடி வருவீங்க? எவ்ளோ வேணுமோ பறிச்சுக்குங்க. அத்தை ஊருக்குப் போறேன். திரும்ப வரமாட்டேன். நீங்களும் இந்தப் பக்கம் வராதீங்க” என்று சொல்லிய போது நித்யாவின் கண்கள் கலங்கியது.

“ஏன்மா இப்படி பேசுற? எல்லாம் சரியாகிடும்” என்று தேவி சொல்லிய போது, “அக்கா, இதுக்கு மேலேயும் இங்கிருந்தா எனக்கும், என் பிள்ளைக்கும் பாதுகாப்பு இல்லக்கா. ஒரே பொண்ணு நான். என் அப்பா அம்மா பாவம்கா. அவங்களுக்குப் பொண்ணாவே நிம்மதியா வாழ்ந்திடுவேன்” என்றாள் நித்யா.

“அப்பா, அம்மா வராங்களாம்மா?” எனக் கேட்டாள் தேவி.

“ஆமாக்கா, தீபாவளிக்குக் கூப்பிட வராங்க. இங்க நடக்குறது ஏதும் அவங்களுக்குத் தெரியாதுக்கா. தெரிஞ்சா தாங்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டுக் குழந்தைகளை நோக்கினாள். நார்த்தங்காய் மரம் தாழ்ந்தே இருந்ததால் நந்தினியும், நளினியும் தன் பிஞ்சுக்கைகளால் நார்த்தங்காய்களைப் பறிப்பதுமாய், எடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவதுமாய் இருந்தார்கள்.

“வீட்ல யாரும் இல்லயாம்மா?” எனக் கேட்டாள் தேவி.

“அவங்க பொண்ணு, மாப்பிள்ளை, பேரப்பிள்ளைங்கலாம் தீபாவளிக்கு வராங்க. அதான் துணி எடுக்கப் போயிருக்காங்கக்கா” என்றாள்.

“சரிம்மா, நீ பாத்து பத்திரமா இரு. ரொம்ப நேரம் இங்க நிக்காத. எதாவது பிரச்சினைனா தயங்காம கூப்பிடும்மா. நானும், அண்ணனும் இருக்கோம்” என்று சொல்லிவிட்டுக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.  நித்யா தன் ஊருக்குச் செல்லவிருப்பதை அறிந்த பின் தான் தேவிக்குச் சற்று ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருந்தது. எப்போது தன் கணவர் வருவார் என்று அன்று பெரும் ஆர்வத்தோடு காத்திருந்தாள் தேவி. பிள்ளைகளும் தங்கள் பங்கிற்கு நார்த்தங்காய் பழங்களை வைத்துக் கொண்டு தந்தைக்காகக் காத்திருந்தார்கள்.

வண்டி சத்தம் கேட்டதும், தேவியும், குழந்தைகளும் வெளியே வந்து நின்றதிலிருந்தே செழியன் புரிந்து கொண்டார், ஏதோ நடந்திருக்கின்றது என்று. அவர் வந்ததும் வராதுமாய் குழந்தைகள் பழத்தைக் காண்பிக்க, “உங்கள அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு சொல்லிருக்கோம்ல” என்றார் சற்றே கோபத்தோடு. “குழந்தைங்களா போலங்க, நித்யா தான் கூப்பிட்டுப் பறிச்சுக்கச் சொன்னா” என்று தேவி சொல்ல, “ஏன்டி, அந்தப் பொம்பளைக்குத் தெரிஞ்சா, அதுக்கும் அந்தப் புள்ளையதான்டி ஒரு வழி பண்ணுவா” என்றார்.

“இல்லங்க, நித்யா அவங்க ஊருக்குப் போறா” என்று தொடங்கி, அன்று நடந்த அனைத்தையும் விவரமாக சொல்லி முடித்து, நிம்மதியடைந்தாள் தேவி.

உணவருந்த அமர்ந்த போதும், அவர்களின் பேச்சு நித்யாவைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது. உணவருந்தி முடித்து, பழங்களோடு உறங்கி கொண்டிருந்த குழந்தைகளைத் தூக்கிச் சென்று படுக்கையறையில் கிடத்திவிட்டு, கணவனும், மனைவியும் உறங்கச் செல்ல “இந்த மாதிரி ஆளுங்ககூடலாம் வாழவே முடியாதுடி. அந்த பொம்பள அவ்ளோ பேச்சு பேசுறா, அந்த பய மனசாட்சியே இல்லாம அப்படியே அமைதியா உக்காந்திருக்கான்டி. அவன நம்பித் தான வந்திருப்பா அந்தப் பொண்ணு. இவன மாதிரி ஒருத்தன் கூட வாழுறதுக்கு, அந்தப் பொண்ணு அவங்க வீட்லயே நிம்மதியா வாழ்ந்திடலாம்” என்றார் செழியன். கணவனும், மனைவியும் உள்ளக்குமுறல் தீரப் பேசி முடித்து,  ஒருவழியாக உறங்கிப் போனார்கள்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, தேவி கண் விழித்துப் பார்த்த போது மணி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கதவு பலமாகத் தட்டப்படுவதை உணர்ந்த தேவி, படபடப்போடு தன் கணவனை எழுப்பினாள். செழியன் எழுந்து சென்று கதவைத் திறந்த போது, அங்கு சாந்தியும், கோபாலும் நின்று கொண்டிருந்தார்கள். செழியனும், தேவியும் ஏதும் புரியாமல் பேசாது நின்ற போது, கோபால் செழியனின் கைகளைப் பிடித்து, “கொஞ்சம் வீடு வரைக்கும் வாப்பா. எங்களுக்கு எதுவும் புரியல” என அழைத்தார்.

சாந்தியும் முந்தானையால் வாய் பொத்தி, அழாமல் அழுகிற தோரணையில், “யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலயேம்மா நாங்க. ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்கணும்”  என்று சொன்ன போது, தேவிக்குக் கை காலெல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது.

எதையும் புரிந்துகொள்ள இயலாத நிலையில், படபடப்போடு செழியனும், தேவியும் அவர்களோடு சென்றார்கள். அவர்கள் வீட்டின் பின்பக்க வாசலில் நின்றபடி சுந்தர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். நித்யாவிற்கு ஏதும் ஆகி இருக்கக்கூடாது என மனதோடு நினைத்துக் கொண்டே பின்பக்க வாசலை கடந்த செழியனும், தேவியும், நார்த்தங்காய் மரத்தடியில் தலை குனிந்தவாறு நித்யா நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.

செழியனைத் தள்ளிக்கொண்டு நித்யாவை நோக்கி, தேவி சென்றபோது செழியனின் இரும்புக்கரங்கள் அவளை மேற்கொண்டு முன்னேறவிடாது இழுத்துப் பிடித்தது. அங்கு கவ்வியிருந்த இருளுக்குக் கண்கள் பழக்கமானதும் தான் தெரிந்தது, நித்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. அவளின் இரு பாதங்களும் தரையில் தேய்ந்து கொண்டிருந்ததால், பார்ப்பதற்கு நித்யா நின்று கொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

செழியனும், தேவியும் செய்வதறியாது திகைத்து நின்ற அதே நேரத்தில், கோபாலும், சாந்தியும் வராத கண்ணீரோடு வாய் பொத்தி, தங்கள் வீட்டின் பின் பக்கம் குடியிருக்கும் சங்கரையும், அவர் மனைவி லதாவையும் அழைத்து வந்து நித்யாவைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். கோபாலும், சங்கரும் நித்யாவின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிற்றை அகற்ற, செழியன் நித்யாவின் உடலைத் தூக்கி வந்து கிடத்தினார். சுந்தர், நித்யாவின் உடலருகே கூட வராதது, செழியனுக்கும் தேவிக்கும் பெரிதாகத் தெரியவில்லை.

முன்னதாக, நித்யாவின் சொந்தங்களுக்குச் சொல்லி முடித்து, தாமதப்படுத்தாது இழவு வீட்டின் வேலை ஏற்பாடுகளை விறுவிறுவெனச் செய்யத் தொடங்கினார்கள் கோபாலும், சுந்தரும். அந்த நகராட்சியின் தலைவரும், வார்டு மெம்பரும், அந்தக் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வந்த மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் முத்தையனும் அங்கு வந்திருந்தது செழியனுக்கு மேலும் பல சந்தேகங்களை உருவாக்கியது.

ஒருவழியாக நித்யாவின் தாயும், தந்தையும் கதறிக் கொண்டு ஓடிவர, நண்பகலுக்குள் அனைத்து சொந்தங்களும் வந்து சேர்ந்தனர். நித்யாவின் பெரியப்பா மகன், சற்றே கோபத்தோடு சலம்பிக் கொண்டிருந்தான். நித்யாவின் தந்தையிடம் சென்று காவல் நிலையத்திற்குச் சென்று புகார் குடுக்க வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட சுந்தர் அவனோடு சண்டைப் பிடிக்க தொடங்கவும், "ஏன்டா சுந்தரு, நம்ம வீட்டு மகாலட்சுமியே நம்மள ஏமாத்திட்டு போய்ட்டா, இனி என்ன பேசி என்னாவ போகுது" என்று கண்ணீர் வராமல் குலுங்கினாள் சாந்தி.

அங்கு கூச்சலும், குழப்பமும், படபடப்பும், பரப்பரப்பும் பற்றிக் கொள்ள, ஒருவழியாய் நித்யாவின் அண்ணன் தன் பெரியப்பாவோடும், உறவினர்களோடும் சென்று, கோபால் குடும்பத்தார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தான். விரைந்து வந்த காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்ட போது, முன்னதாகவே அங்கு முகாமிட்டிருந்த தலைவரும், வார்டு மெம்பரும் கோபால் குடும்பத்திற்கு ஆதரவாக நின்றனர்.

“எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி உடம்பக் கூறு போட நாங்க விடமாட்டோம்” எனக் கூறி கூப்பாடு போட்ட சாந்தியைப் பொருட்படுத்தாது காவல் துறையினர் நித்யாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். நித்யாவின் கழுத்திலிருந்த காயங்களைக் கண்டு விசாரித்தபோது, கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிற்றை அகற்றியபோது உண்டான காயம் என்று கூறி, சங்கரையும், செழியனையும் சாட்சிக்கு நிறுத்தினார்கள். அக்கம் பக்கத்தினை விசாரித்தபோதும் கோபால் குடும்பத்திற்கு ஆதரவாகவே பதில் வந்தது.

நித்யாவின் தாய், “இவங்க எல்லாரும் அவ்ளோ நல்லவங்கன்னா, என் பிள்ளை எப்படி செத்தா?” எனக் கேட்டு கலங்கிக் கதறி நின்றார். அவரை தேற்றுவதற்கும் வலிமை இல்லாமல் நித்யாவின் தந்தை ஒருபுறம் கலங்கி நின்றார். "என்னம்மா கொற வச்சேன் உனக்கு. நல்லா தான இருந்தீங்க ரெண்டு பேரும்" எனக் கூறி மார்போடு அடித்துக் கொண்டாள் சாந்தி.

உடற்கூறாய்வு முடிந்த பின், நேரமாகிவிட்டது எனக்கூறி நித்யாவின் உடலை வீட்டிற்கு கூட எடுத்து வராமல் அப்படியே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நித்யா இறந்து போனதாலும், இறக்கும் போது நான்கு மாதம் கருவுற்றிருந்ததாலும், உடற்கூறாய்வில் மூச்சு திணறல் ஏற்பட்டே மரணம் அடைந்திருப்பதாகக் கூறப்பட்டதாலும் மகளிர் காவல் ஆணையம் விசாரணையை கையிலெடுத்து சாந்தியையும், சுந்தரையும் கைது செய்தது.

அப்போதும் கூட அக்கம் பக்கத்தினரிடமிருந்து கோபால் குடும்பத்தாருக்கு ஆதரவாகவே பதில் வந்தது. நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வரும் நாளன்று முக்கிய சாட்சிகளாக இணைக்கப்பட்ட சங்கரும், செழியனும் நேரில் வருமாறு ஆணையிடப்பட்டது.

நிலைக்குலைய செய்த நித்யாவின் மரணத்தால் உடைந்து போன தேவியும், செழியனும், சில நாட்களுக்குக் குழந்தைகள் அங்கிருக்க வேண்டாம் என முடிவு செய்து, தேவியின் அண்ணனை வரவழைத்துக் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.

அன்றிரவு முழுக்க செழியனுக்கும், தேவிக்கும் துளியும் உறக்கமில்லை.

“ஏங்க, சாயுங்காலம்  நலச்சங்க ஆளுங்கலாம் ஒன்னு கூடி பேசுனாங்களே, என்ன சொன்னாங்க?”

“.....” செழியனிடமிருந்து பதில் ஏதும் வராததால், சில நிமிட அமைதிக்குப் பின், “ஏங்க, பிடிச்சிட்டுப் போனவங்கள விட்ருவாங்களா?” என்றாள் தேவி.

“நாள மறுநாள் தெரிஞ்சிடும்” என்றான் செழியன்.

“என்ன இருந்தாலும் அந்தப் பிள்ளையப் பெத்தவங்க பாவம்தானங்க? அவங்க மனசு எப்படி துடிச்சிருக்கும். வயத்துல பிள்ளையோட வேற இருந்தா. அந்தப் பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சுங்க?” எனக் கேட்டு அவளை அறியாது உடைந்தழுதாள்.

“......”

‘இந்த ஊராளுங்களே அவங்களுக்கு ஆதரவாப் பேசுறாங்க, எல்லாரையும் எதிர்த்துக்கிட்டு நாம மட்டும் என்ன பண்ண முடியும்’ எனத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அமைதியானாள் தேவி.

இரண்டு நாட்களுக்கு பின்....

மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் முத்தையன், உறுப்பினர் அனைவரும் வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு பேசத் தொடங்கினார்.

“எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கும் போது, அதை மீறி நடந்துக்குறது கொஞ்சமும் சரியில்ல” எனச் சொல்லிய போது, அங்கு குழுமியிருந்த அனைவரும் செழியனைப் பார்த்தனர்.

“ஏம்ப்பா, நீங்க இங்க வந்து ஏழெட்டு மாசம் தான இருக்கும். நல்லது கெட்டதுல ஒன்னு மண்ணா கலந்துக்க, நம்ம பகுதிக்குத் தேவையானத செய்யனு தான் ஒன்னு சேந்து இந்தச் சங்கத்த உருவாக்குனோம். கோபால் குடும்பத்தை எங்க எல்லாருக்கும் பல வருசமாத் தெரியும். இப்ப வந்த நீ, சங்கத்துல எடுத்த முடிவ மதிக்காம இப்படி பண்ணது கொஞ்சமும் நல்லா இல்ல. பக்கத்து வீட்டுக்காரன் வேற நீ, நாளப்பின்ன அவங்க ஜெயில்ல இருந்து வெளிய வந்தா எப்படிப்பா அவங்க முகத்துல முழிப்ப” எனக் கேட்டார் முத்தையன்.

“மத்தவங்க முகத்துல முழிக்க அவங்க தாங்க அசிங்கப்படணும். நான் என்ன தப்பு பண்ணேன், அவங்க முன்ன கூனிக்குறுகி நிக்க. எனக்கும் ஒன்னுக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்குங்க. என்னால உங்கள் மாதிரிலாம் இருக்க முடியாது. கொஞ்சமாவது அந்தப் பொண்ணப் பெத்தவங்கள நெனச்சு பாத்தீங்களா? மனச்சாட்சினு ஒன்னு இருந்தா அத கேளுங்க, உண்மையச் சொல்லும். நான் என்ன பொய்யா நடக்காததையா சொன்னேன். அவங்க பண்ணது தானங்க சொன்னேன்" எனக் கூறிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தார்.

“யாருக்காகவும், எதுக்காகவும் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கில்லங்க. கோர்ட்டு வாசல்ல கண் கலங்கி நின்ன அந்தப் பொண்ண பெத்தவங்களோட முகத்துல ஒரு நிம்மதியப் பாத்தேன். அது போதும்ங்க எனக்கு, காலத்துக்கும் என் குடும்பமும் குழந்தைகளும் நிம்மதியா இருக்கும்ங்க” எனச் சொல்லி முடித்து, தன்னைச் சற்று முன் கூட்டாகப் பார்த்த கூட்டத்தை சில நொடிகள் பார்த்தார். ஆங்காங்கு சில முனுமுனுப்புகள் தவிர அமைதியாகவே இருந்தது கூட்டம். கூட்டத்தை விட்டு நடக்கத் தொடங்கினார் செழியன்.

வீட்டிற்கு வந்த செழியன், தேவியைத் தேடினார். வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவி செழியனைக் கண்டதும், “ஏங்க சங்கத்துல என்ன சொன்னாங்க?  உங்க கிட்ட சண்டை போட்டாங்களா?” என அச்சத்தோடும், படபடப்போடும் கேட்டாள். செழியனோ நார்த்தங்காய் மரத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அதில் தொங்கி கொண்டிருந்த நார்த்தங்காய்கள் ஒவ்வொன்றும் நித்யாவை நினைவுபடுத்தியது.


பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.           296


குறள் விளக்கம்: ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலை விட புகழ்நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக