ஆறுமோ சினம்
உடலும், உள்ளமும் ஒருசேரச் சோர்ந்து போனதால் தன்னையறியாது உறங்கிப்போனாள், அதிரா. நேரங்களும், நொடிகளும் நகர்ந்து செல்லச் செல்ல, இந்தக் கொடுஞ்சூழலும், நகர்ந்து குழைந்து இளகியோடிவிடும் என்பதில் அதிரா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை, காயமாற்றும் வலிமை, காலத்திற்கு மட்டுமே உண்டு.
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்ததால், அதிரா தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். பள்ளித்திடலில், பிள்ளைகள் உணவருந்தியபோது சிந்திய சோற்றுப் பருக்கைகளை உண்டு கொண்டிருந்த காகங்களின் இடைவிடாதக் கரைதல் அவளின் உறக்கத்தைக் களைத்துக் கவனமீர்த்தது.
திடுக்கிட்டு விழித்த அதிரா சாளரத்தின் வழி வெளியே பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை கட்டிடங்களும், ஆங்காங்கே ஒரு சில மரங்களும் மட்டுமே தென்பட்டன. சாளரத்துக்குப் பக்கமாக நெடுநெடுவென நன்கு வளர்ந்திருந்த வேப்ப மரத்தின் கிளையில் அமர்ந்து கரைந்து கொண்டிருந்தது ஒரு காகம்.
“ராமசாமி attender வாங்க” என்று சற்றே அதிர்ந்து அழைத்த செவிலியரின் குரல் கேட்டு அதிரா ஓடினாள்.
“சொல்லுங்க சிஸ்டர்” என்று படபடப்போடு ஓடிவந்து நின்றவளிடம், “இந்த மருந்து வாங்கிட்டு வந்து குடுங்க” என்றபடி மருந்துச் சீட்டை நீட்டினார் செவிலியர்.
“சிஸ்டர், நான் அப்பாவை இப்ப பாக்கலாமா?” எனக் கேட்டாள் அதிரா.
“அவரு நல்லாத் தூங்கிட்டு இருக்காரு. எழுந்ததும் கூப்பிடுறேன், வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு, மூடியிருந்த கதவுகளைத் திறந்து உள்ளே சென்றார் செவிலியர்.
மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்ட அதிரா, மீண்டும் சாளரத்தின் அருகே வந்து நின்று, வெளியே பார்த்தாள்.
பள்ளித்திடல் ஒருவருமின்றி வெறிச்சோடி இருந்தது. காகங்களின் பேரிரைச்சலைத் தவிர பெரிதாக வேறோன்றும் அவளுக்குக் கேட்கவில்லை. அரைத் தூக்கத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அதிராவைக் கவனித்துவிட்ட ஆசிரியை ஜூலி, அவளை அழைத்தார். அச்சத்தோடும், தூக்கத்தோடும் மெதுவாக நடந்து சென்று, ஆசிரியரின் அருகே விழித்தபடி நின்றாள் அதிரா.
மேசையின் மீதிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து அதிராவிடம் கொடுத்த ஆசிரியை அதைச் சாப்பிடுமாறு சொன்னார். பின் அவளிடமிருந்த சாக்லேட் கவரை வாங்கி அதை ஒரு பக்கத்தில் மட்டும் இறுக்கமாகத் திருகினார். மறுபக்கத்தை வட்டவடிவில் நன்றாக பிரித்து அதை மேசை மீது நிறுத்தினார்.
அதிரா உட்பட அனைத்து பிள்ளைகளும் ஆசிரியை ஜூலியை மிகுந்த ஆவலோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அனைவரையும் எழுந்து நிற்குமாறு கட்டளையிட்ட ஆசிரியை ஜூலி, மேசையை மெதுவாக தட்ட தட்ட மேசையின் மீது நின்றிருந்த கவர் பொம்மையும் தாளத்திற்கு ஏற்ப மெல்ல மெல்ல குதித்தாடியது. உண்ட மயக்கத்தில் இருந்த பிள்ளைகள் அனைவரும் இப்போது மிகுந்த உற்சாகத்துடன் ஆடத் தொடங்கினர். அதிராவும் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் அழகாய் அசைந்தாடிக் கொண்டிருந்தாள்.
“ராமசாமி attender” என மீண்டும் அழைத்த செவிலியரை நோக்கி ஓடினாள் அதிரா.
“சிஸ்டர்”
“இந்த மருந்தையும் சேர்த்து வாங்கிட்டு வாங்க மா”
“சரிங்க சிஸ்டர்” எனச் சொல்லிவிட்டு, மருந்தகத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.
அவள் முன்னே செல்லச் செல்ல, சளைக்காமல் காலம் அவளைப் பின்னுக்குத் தள்ளியபடியே இருந்தது.
அப்பாவின் கால் சட்டையை ஒரு கையால் இறுகப்பற்றியபடியே அதிரா மருந்தகத்தின் முன் நின்று கொண்டிருந்தாள். அவளின் கண்முன்னே பல வண்ணங்களிலான சோப்புக் கட்டிகள் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ராமசாமி தன் மனைவி உமாவிற்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தார். அதிராவோ இறுகப் பற்றிய அவரின் சட்டையை அவ்வப்போது இழுத்திழுத்து வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சோப்பு கட்டிகளை கை காட்டிக் கொண்டிருந்தாள்.
“அதிரா, பாக்குறதேல்லாம் கேட்டு அடம் பிடிக்க கூடாது. சரியா?” எனச் சொல்லிக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டார் ராமசாமி.
“மருந்துச்சீட்டு குடுங்க” என்றொலித்த ஒரு ஆணின் குரல் அதிராவை சற்றே தடுமாற செய்தது. ஏனோ ஒருவித பதற்றத்தோடே மருந்துகளை வாங்கிக் கொண்டு விரைந்து சென்றாள் அதிரா.
செவிலியரிடம் மருந்துகளைக் கொடுத்துவிட்டு, “சிஸ்டர், இப்ப அப்பாவப் பாக்கலாமா?” எனக் கேட்டாள்.
“டாக்டர் வந்து பாத்துட்டு இருக்காரு. நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்கனு நெனைக்குறேன். அப்புறம் நீங்க எப்ப வேணாலும் வந்து பாக்கலாம். இப்ப கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் செவிலியர்.
முகத்தில் பாதியைப் பல குழல்கள் மூடியிருக்க, கண்கள் மூடிப் படுத்திருந்த ராமசாமியைக் கண்ணாடிக் கதவில் இருந்த வட்டத்தின் வழி பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரா. "கதவு முன்ன வழியில நிக்காதீங்கம்மா, உக்காருங்க, கூப்பிடுறேன்" என்று செவிலியர் சொல்ல, அதிரா அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவளின் உயிர் நிலைக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவரின் உயிரையும் பொருட்படுத்தாது அவளுக்கு உயிர் கொடுத்தவராயிற்றே.
விடியல் கடந்ததும் அறியாது, அயர்ந்த உறக்கத்திலிருந்த ராமசாமி, கண் விழித்துப் பார்த்த போது, தன் அருகே அதிரா இல்லாததை உணர்ந்து சுற்றும் முற்றும் தேடினார்.
“டேய் ராமசாமி, உம்பொண்ணத் தேடுறியா? அவ நேரத்தோடு எந்திரிச்சு உங்க அப்பாக்கூட வயக்காட்டுக்குப் போயிருக்காடா” என்று தன் அம்மா சொல்லி முடித்த சில நொடிகளில், ராமசாமி விரைந்து எழுந்து வயக்காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
“டேய் ராமசாமி, அவள அப்பா பத்திரமா பாத்துப்பாருடா. ஏன்டா இப்படி ஓடுற?” என்று கேட்ட அவளின் குரலைக் கூட சட்டை செய்யாது ஓட்டமும் நடையுமாக சென்றார் ராமசாமி. வரப்புகளின் ஓரத்தில் படர்ந்திருந்த புற்களில் துளிர்த்திருந்த பனித்துளிகளை ராமசாமி தன் பாதங்களால் உடைத்தெறிந்து கொண்டே சென்ற அதே நேரத்தில், அச்சிறு பனித்துளியின் வழியே புது உலகத்தையே கண்டு, வியந்து கொண்டிருந்தாள் அதிரா.
தொலைவிலேயே தன் மகனைக் கண்டுவிட்ட கந்தன், “அதிரா குட்டி, உங்கப்பன் உன்னையத் தேடி வந்துட்டான் பாரு” என்றார்.
பனித்துளி உலகின் பெருமகிழ்வில் உலவிக் கொண்டிருந்த அதிரா, தன் அப்பாவைக் கண்டதும் கட்டுக்கடங்கா மகிழ்வோடு அவரை நோக்கி வாஞ்சையோடு ஓடத் தொடங்கினாள். அதிரா விரைந்து ஓடுவதைக் கண்ட கந்தன், அவளைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்துத் தோற்றுப் போனார். அதே நேரம் அதிரா ஓடிவருவதைக் கண்ட ராமசாமி,
“ஓடிவராத அதிரா, அங்கேயே நில்லு” என்று உரக்கக் கத்தினார். அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது கண் மண் தெரியாமல் ஓடி வந்து கொண்டிருந்தாள் அதிரா. ராமசாமியின் பதற்றமெல்லாம் அதிரா தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த பாதையின் இடைவெளியில் அமைந்திருந்த அமரன் கிணறு தான். வரப்பையொட்டி அமைந்திருந்த அந்தக் கிணற்றைக் கடக்கையில் சிறிது இடறினாலும் விழுந்துடுவாளே குழந்தை என்பதை நினைத்த நொடியிலேயே ராமசாமி முன்னோக்கி ஓடலானார். தன் தந்தையும் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்ட அதிரா மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகி மான் குட்டியாய்த் துள்ளியோடினாள்.
“புள்ள, நம்ம கைக்கெட்டுற தூரத்துல தான் இருக்கா” என்று ராமசாமி சற்றே நிம்மதி மூச்செறிந்த அதே நொடி அதிரா கால் இடறிக் கிணற்றுக்குள் விழுந்தாள்.
“ராமசாமி attender” என்றழைத்த செவிலியரை நோக்கி நடந்தாள் அதிரா.
“வார்டுக்கு மாத்தியாச்சு. இப்ப வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற செவிலியரைப் பின் தொடர்ந்து நடந்தாள் அதிரா.
ராமசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதிரா அவரையே உற்று நோக்கிக் கொண்டு நின்றாள். அவளை அறியாது அவளின் கண்கள் பனித்தன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது போனதால் சத்தமில்லாது குலுங்கிக் குலுங்கி அழுதாள் அதிரா.
அதிரா கிணற்றுக்குள் விழுந்துவிட்டதைக் கண்ட ராமசாமி, இரண்டே பாய்ச்சலில் பாய்ந்து சென்று கிணற்றுக்குள் குதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழந்துவிட்டதைக் கண்ட கிழவன் கந்தனோ, செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டபடியே கிணற்றை நோக்கி ஓடினார்.
விழுந்த வேகத்தில் அடி ஆழத்திற்கு சென்று, மீண்டும் அதே வேகத்தில் மேல் நோக்கி பயணித்து, தண்ணீருக்கு வெளியே சில நொடிகள் தலைக் காட்டி விட்டு, மீண்டும் மூழ்கி போன வேளையில், தன் மகள் அதிராவை கண்டுவிட்ட ராமசாமி,. அவளருகே நீந்தி சென்று மேல் தூக்க முயற்சித்த போது, பயத்தில் ராமசாமியை பிடித்திழுத்து அவரையும் சேர்த்து நீருக்குள் உள்ளிழுத்தாள் அதிரா.
சூழ்நிலையின் வீச்சினை உணர்ந்து கொண்ட ராமசாமி, சட்டென அதிராவின் இறுக்கமான பிடிகளை தளர்த்திவிட்டு, அவளின் கற்றையான தலை முடியைப் பற்றி இழுத்து, இறுக்கமாக பிடித்துக் கொண்டு மேல் நோக்கி நீந்தினார். அதிராவோ மூச்சுவிட முடியாது திணறியபடியே, நீரை குடித்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாய் மேல் மட்டத்தை அடைந்து, ஒரு கையில் கற்படியைப் பிடித்தப்படி, மற்றொரு கையில் அதிராவை தாங்கி நின்ற போது கந்தனும், மேலும் சில ஆட்களும் விரைவாய்க் கிணற்றுக்குள் இறங்கி அதிராவை வாங்கிக் கொண்டு மேலேறினர்.
சிறிதும் குறையாத பதற்றத்தோடு கந்தன் பதைப்பதைத்து நிற்க, எப்படியோ சேதியறிந்த வேணிக் கிழவி ஒப்பாரி வைத்தப்படி வயக்காட்டை நோக்கி ஓடோடி வந்தாள். கிணற்றிலிருந்து மேலேறிய ராமசாமி, அதிராவை வாங்கிக் கொண்டு வேகவேகமாக வீட்டை நோக்கி நடந்தார். வாஞ்சையோடு குழந்தையைத் தொட வந்த தன் தந்தையைச் சினந்து புறக்கணித்து, எதிரே ஓடோடி வந்த தாயையும் பொருட்படுத்தாது விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தார் ராமசாமி.
“உங்கள நம்பி இதோட என் புள்ளைய நான் அனுப்பவே மாட்டேன். நான் மட்டும் வராம இருந்திருந்தா என் புள்ள என்னாகிருக்கும்” என அதிராவுக்கு உடைகளை மாற்றிக் கொண்டே கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார் ராமசாமி. பதிலேதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்த கந்தன், பொறுமை இழந்தவராய் “நீ மட்டும் வராம இருந்திருந்தா இப்படி நடந்தேயிருக்காதுடா முட்டாப்பயலே” எனப் பதிலுக்கு உறுமினார்.
மனக்கசப்புகளோடு சென்ற அந்நாளின் பின் மாலைப் பொழுதில், ராமசாமி திண்ணையில் அமர்ந்திருந்தார். வீட்டு வாசலிலிருந்த மண் அடுப்பைப் பற்ற வைத்து வேணிக்கிழவி சோறாக்கிக் கொண்டிருந்தாள். சில்லிட்ட அம்மாலை நேரமும், சிறகை விரித்து கூடு திரும்பிக் கொண்டிருந்த பறவைகளின் கூச்சலும், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடு மாடுகளின் மணியோசையும், மண்ணடுப்பு தந்த இதமும், தன் மடி மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த அதிராவின் முகமும் ராமசாமியின் மனதிற்கு இதமாய் இருந்தது.
நெருப்பின் தகதகப்பில் தங்கமாய் மின்னிக்கொண்டிருந்த அதிராவின் முகத்தையே உற்று நோக்கி கொண்டிருந்த ராமசாமி, மென்மையாய் அவளின் தலையைக் கோதியபடி “அதிரா… அதிரா…” என்றழைத்தார்.
தன் தந்தையின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தாள், சத்தமில்லாமல் அழுதுக் கொண்டிருந்த அதிரா.
“அதிரா… ஏம்மா அழற?"
“…….”
பதிலேதும் பேசாது அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரா.
“அதிரா “
“ம்”
“நீ மட்டுமா மா இருக்க?”
“நைட்டு அத்த இருந்தாங்க, நான் காலையில தான் வந்தேன்”
"ம், டாக்டர் என்னம்மா சொன்னாரு? எப்போ வீட்டுக்குப் போகலாமாம்?”
“இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம். பயப்படுற மாதிரி ஏதுமில்ல. சரியான நேரத்துக்கு மாத்திரை மருந்து எடுத்துக்கணுமாம். சொல்ற நேரத்துக்கு தவறாம செக்கப்க்கு வரணுமாம்” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள் அதிரா. இதோடு தந்தைக்கும் மகளுக்குமான உரையாடலை முடித்து வைத்து, உரக்கப் பேசிக் கொண்டிருந்தது அமைதி.
ஒன்றா? இரண்டா? முழுதாய் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தது அதிரா தன் தந்தையோடு பேசுவதை நிறுத்தி. மூளைக்குச் செல்லும் குருதி நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சட்டெனத் தன்னினைவை இழந்துவிட்ட ராமசாமி கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் இருந்த போது தான் அதிராவுக்கு தான் செய்த தவறு புரிந்தது. ஆனால் காலம் கடந்த பின்பு தவற்றை உணர்ந்து என்ன பலன்?
அதிராவின் மனம் கசப்பான கடந்த காலத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் ராமசாமியின் மனமும் அங்கு தான் வட்டமிட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இரு உயிர்களும் ஒரே காலக்கட்டத்திற்குச் சென்று, ஒருவரையொருவர் அறியாது, தனித்தனியே கலங்கி நின்றார்கள்.
இருவரின் எண்ண ஓட்டங்களையும் சிதறடித்து சிணுங்கியது, அதிராவின் கைப்பேசி.
“சொல்லுடா அகில்”
“என்னடி பண்ற? அப்பா எப்படி இருக்காரு? டாக்டர்கிட்ட பேசுனியா? ஏதும் சொன்னாங்களா?
“ம்”
“என்னடி, ம் ங்குற. வாய் தொறந்து பேசேன்”
“நீ எப்போடா வர்ற?”
“அங்க தான் கெளம்பிட்டு இருக்கேன். உனக்கு ஏதும் வேணுமா, வாங்கிட்டு வரவானு கேட்கத்தான் போன் பண்ணேன்”
“அப்பா முழிச்சிட்டாரு டா”
“எப்போ டி… இவ்வளோ நேரமா சொல்லவே இல்ல”
"காலையில தான்”
“ஏய் அதி, அப்பாட்ட ஏதும் பேசுனியா, இல்லயாடி? இல்ல எப்பவும் போல உர்றுனு இருந்துட்டியா?”
“…………”
“சொல்லு அதி”
“பேசுனேன் அகில், முதல்ல நீ இங்க கெளம்பி வா, மத்ததெல்லாம் நேர்ல சொல்றேன். சரி, அத்தை எப்பவும் போல ஏதாச்சும் சாடை பேசுச்சா?"
“இல்ல”
"சரி, லேட் பண்ணாம கெளம்பி வா. அத்தையும் கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அதிரா.
விமலா அத்தை, ராமசாமிக்கு உடன் பிறந்தவள். பதிமூன்று வயதிலேயே மணமுடித்து ஓரிரு ஆண்டுகளில் கணவனை இழந்தவள். பிள்ளைப் பேறற்றவள்.ராமசாமிக்குத் திருமணம் முடிந்து அதிராவும், அகிலனும் பிறந்தபோது விமலா தன் பெற்றோர்களோடு இளம் கைம்பெண்ணாக ஊரில் இருந்தாள்.
அதிராவிற்கு ஆறு வயதாகும் போது, அவளின் அம்மா உமா ஒருநாள் திடீரெனக் காணாமல் போனாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ஓரிரு நாட்களுக்குப் பின், உமா சிறு வயதிலிருந்தே நேசித்து வந்த தன் மாமன் மகனோடு சென்றுவிட்டது ஊரறிந்த செய்தியாகிப் போனது. தன் உடன் பிறந்தோனைத் தேற்றவும், விட்டுச் சென்றவளை அவ்வப்போது தூற்றவும் வந்து சேர்ந்தவள், அதற்குப் பின்னான நாட்களில் குழந்தைகள் கவனித்துக் கொள்கிறேன் என அங்கேயே தங்கி விட்டாள். அதற்கேற்றாற் போல் வேறு திருமணம் செய்து கொள்ள ராமசாமியும் மறுத்துவிட விமலாவிற்கு வசதியாகிப் போனது.
என்னதான் தன் உடன் பிறந்தவனின் பிள்ளைகளாக இருந்தாலும், அவர்களின் மீது விமலாவிற்கு அன்பைக் கடந்து உள்ளூர சிறிது வெறுப்பு இருக்கத்தான் செய்தது. அதன் வெளிப்பாடாய் எப்போதும் உமாவைத் திட்டித் தீர்த்து அதனால் முகம் சுருங்கும் பிள்ளைகளை வேடிக்கை பார்ப்பது அவளுக்கு வாடிக்கையான ஒன்று.
ராமசாமி பிள்ளைகள் மீது அளவிலா அன்பு கொண்டிருந்தாலும் கூட, விமலாவையும் அவர் மீறியதில்லை. தன் குடும்பத்துக்காவும், பிள்ளைகளுக்காகவும் ஓடாய்த் தேய்பவளை மதிக்காமலோ, மீறி செயற்படவோ ராமசாமி முயன்றது கூட இல்லை. இரு பிள்ளைகளில் அதிரா தான் மிகவும் செல்லமாக இருந்தாள். ராமசாமிக்குத் தன் மகள் அதிரா தான் உயிர். அகிலனைப் பார்க்கும் போதெல்லாம் உமாவின் நினைவு வந்ததாலேயே ராமசாமி அவனை விட்டுச் சிறிது விலகியே இருந்தார்.
கல்லூரி நாட்களில், தன் நண்பன் ரூபனோடு கொண்ட நட்பானது காதலாக மாற, அந்த வயதிற்கே உரிய குறும்புத்தனத்தோடு சிறகடித்துக் கொண்டிருந்தாள் அதிரா. என்னதான் தந்தைக்குச் செல்ல மகளாக இருந்தாலும், தன் காதல் விவகாரத்தை அவரிடம் தெரிவிக்கும் அளவிற்கு அதிராவுக்கும் துணிவில்லை. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் ராமசாமியுமில்லை. எனவே, காதலின் நெருக்கமானது, தந்தை மகளுக்கிடையே மெல்ல மெல்ல இடைவெளியை உருவாக்கியது.
ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், ஓர் மாலை நேரத்தில் அந்த வீடே கலவரமாகிக் கொண்டிருந்தது. அகிலன் அமைதியாய் நின்று கொண்டிருக்க, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க ஆவல் இல்லாதவளாய் விமலா தன்னைக் காட்டிக்கொண்டு, சமையலறையில் நின்று மறைந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, உடைத்த நாற்காலியை உதைத்து ஓரம் தள்ளியபடி வெகுண்டு கத்திக் கொண்டிருந்தார் ராமசாமி. ஏதும் பேசாது, புத்தகப் பையை இறுகப் பற்றியபடி தலை குனிந்து நின்றிருந்தாள் அதிரா.
“நம்ம உறவுக்காரங்க வயசு என்னாகுதுனு கூட பாக்காம வயசு வந்துட்டாலே கட்டிக் குடுத்து, கடமைய முடிக்குறானுங்க. பெருசா உன்னைய நம்பிப் படிக்க வச்சா நீ என்னா வேலை பாத்துட்டு வர்ற?” எனக் கேட்டபடியே அதிராவை அடிக்க ஓடினார் ராமசாமி.
அவரைத் தடுத்து நிறுவதற்காக ஓடிவந்த அகிலனையும் அதட்டினார் ராமசாமி. அகிலன் ஓடிச்சென்று விமலாவை அழைத்து வருவதற்குள் அதிராவின் கன்னங்கள் இரண்டு அறைகளை வாங்கி ராமசாமியின் ஐவிரலை அடையாளமாகப் பெற்றுக் காட்சியளித்தது.
“நீ நாளையிலருந்து ஒன்னும் புடுங்க வேணாம். வீட்டுலயே கெட” என்று சொல்லும் போது அங்கு விமலா வந்து சேர்ந்தாள். ராமசாமியைச் சற்று அமைதிப்படுத்திப் பின் தனியே அழைத்துச் சென்று, “எனக்கு முன்னமே ஏதோ தோனுச்சுடா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, காலம் கடத்தாம நல்ல வரனா பாத்து முடி” என்றாள் விமலா.
மறுநாள் காலையில், எப்போதும் போல் அதிரா கல்லூரிக்குக் கிளம்பிய போது, “யார கேட்டு நீ காலேஜி கெளம்புற? நீ படிச்சுக் கிழிச்சதெல்லாம் போதும், உள்ள போ” என்றார் ராமசாமி.
“எதுக்காகவும் என்னோட படிப்ப விட முடியாதுப்பா” என்றாள் அதிரா.
“நீ படிக்கப் போயிருந்தா பரவாயில்லையேம்மா. உன் அம்மா தான் இவன ஏமாத்திட்டு ஓடிப்போனானு பாத்தா, நீயும் ஏன் அவனக் கொல்ற” என்று தன் பங்குக்கு வந்து நின்றாள் விமலா.
“அத்த, நீ கொஞ்சம் சும்மாயிரு” என அதிரா சொல்லவும் ராமசாமி சினம் தலைக்கேறியவராய், “நீ கொழுப்பெடுத்துப் பொறுக்கிட்டு வந்துட்டு, அவள ஏன் சும்மா இருக்க சொல்ற? அவ இல்லாம நீங்க இல்லங்குறது நெனப்புல இருக்கட்டும்” என்றார்.
“அதுக்கு அத்த பேசுறதெல்லாம் சரியாகிடுமா. அவங்க எப்படி நடந்துக்குறாங்களோ அது மாதிரி தான் நாங்களும் நடந்துப்போம்” என்றாள் அதிரா.
இருவருக்குமான வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே போக, கோவம் தலைக்கேறிய ராமசாமி “உன் ஆத்தா புத்தி தான உனக்கும் இருக்கும். எப்டி ஏமாத்திட்டு ஓடிப்போலான்னு பாத்துட்டு இருக்கியா?” என்று வன்மத்தோடு சுறுக்கென சொல்லைக் கொட்டிய போது, மனம் நொறுங்கி சில்லு சில்லாய் உடைந்துப் போனாள் அதிரா. அகிலன் கண் கலங்கியபடியே நின்றிருக்க விமலாவோ எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாது இயல்பாக நின்று கொண்டிருந்தாள்.
சற்றே தன்னைத் திடப்படுத்திக் கொண்டவளாய், “நேசிக்குறவங்களோட வாழவிடாம இது மாதிரிலாம் பண்ணா யாரா இருந்தாலும் ஓடத்தான் செய்வாங்க” என்று தன் தந்தையைப் பார்த்து அழுத்தமாய் கூறினாள் அதிரா. அடுத்த நொடியே அவளின் மீது பாய்ந்த ராமசாமி, அதிராவின் முடியைப் பற்றி முரட்டுத்தனமாக அடிக்கத் தொடங்கினார்..அகிலன் தடுத்தபோது அவனுக்கும் சில அடிகள் விழுந்தது.
அதுவே தந்தையும் மகளும் கடைசியாக பேசிக் கொண்ட நாளாகிப் போனது. அதன் பின்னான நாட்களில் அதிரா யாரோடும் அதிகம் பேசுவதில்லை. எப்படியோ தன் கல்லூரிப்படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்திருந்த அவளுக்கு இதுவரை எத்தனையோ மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் அதிரா யாரையும் இதுவரை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.
ஒருமுறை, அதிரா பணியிடத்திற்கு அவளைக் காண வந்த ரூபன், அதிராவைத் தன்னோடு வந்துவிடும்படி மன்றாடினான். ஆனால், அதிரா அதற்கு ஒப்புக்கொள்ளாததோடு, அவனுடனான காதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்தாள்.
முழுதாய் ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தான் தற்போது ராமசாமி மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவளின் மனமானது மருத்துவர்கள் கூறிய சொற்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. வெடித்து வெளியேறிய அழுகையை அடக்க முடியாது அந்த அறையை விட்டு வெளியேறி, முன்பு அமர்ந்திருந்த அதே இருக்கையில் வந்தமர்ந்தாள். இப்போது காக்கையின் கத்தல் அவளின் காதுகளை எட்டவில்லை, ஜன்னலின் வழி அவளின் ஆழ்மன நினைவுகளும் விரிவடையவில்லை. தன்னையறியாது, தடை போட விரும்பாது அழத்தொடங்கினாள் அதிரா.
யாரோ தன் தோள்களை ஆதரவாய் வருடுவதை உணர்ந்த அதிரா, அழுகையை நிறுத்தி நிமிர்ந்துப் பார்த்தாள். அகிலன் கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். விமலா அதிராவைப் பார்த்தபடி ராமசாமி இருந்த அறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
“ஏய் அதி, இப்ப எதுக்கு அழற நீ, அப்பாக்குத் தான் சரியாகிடுச்சுல”
“அப்பாவ நாம கவனிக்காம விட்டுட்டோம்டா”
“அப்பாவ நல்ல ஆஸ்பிட்டல்ல தான சேத்திருக்கோம் அதி, அவருக்கு தேவையான எல்லாமே செஞ்சிட்டு தான் இருக்கோம்”
“அகில், நான் இதப்பத்தி பேசலடா. காலையில சீனியர் கன்சல்டன்ட் வந்த பாத்துட்டு என்ன சொன்னாரு தெரியுமா? இது முதல் முறையில்ல, இதுக்கு முன்னாடி சின்ன சின்னதா ஏதாவது அறிகுறி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அந்த அறிகுறிகள சரியான நேரத்துல கண்டறிஞ்சு ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தாலே இந்த நிலை வந்திருக்காது. இனியாவது கவனமா பாத்துக்குங்க. சரியான நேரத்துக்குத் தேவையான மருந்து மாத்திரைகள குடுங்க. இல்ல, கை கால் விழுந்துடும்னு சொன்னாருடா"
“ஏய் அதி, பயப்படாத அப்பாக்கு ஏதும் ஆகாது”
“டேய் அகில், அவரு கூடத்தான இத்தனை நாளும் இருந்தேன். ஆனாலும் அவர கவனிக்காம விட்டுட்டேன்ல. ஒருவேளை நான் அவருட்ட பேசியிருந்தா, சொல்லிருப்பாருல. என்னோட கோபம் தான் அவரு மேல இருந்த அன்பையும், அக்கறையயும் இல்லாம ஆக்கிடுச்சு. என்னால தான்டா எல்லாம்” என்று சொல்லி கதறி அழுதாள் அதிரா.
அதே நேரம், ராமசாமியைக் காணச் சென்ற விமலா,
“ராமு, உன்ன நல்லபடியா பாத்ததும் தான்டா எனக்கு உயிரே வந்துச்சு. உன் செல்லப்பொண்ணு தான் ஒருவாரமா வேலைக்குப் போகாம பகல்ல இங்கயே இருந்து உன்ன பாத்துக்கிட்டா தெரியுமா” என்ற போது, ராமசாமி சத்தமின்றி அழுது கொண்டிருந்தார்.
“டேய் ராமு, இப்ப தான் உடம்பு தேறியிருக்கு. அழாதடா”
“எப்டிக்கா அழாம இருக்குறது. என் மேல உயிரே வச்சிருந்தா. அவக்கிட்ட நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. ஏழு வருசமாச்சுக்கா அவ என்கிட்டே பேசி, அவ மனசு எவ்ளோ காயப்பட்டிருந்தா அவ என்கிட்ட இத்தனை வருசம் பேசாம இருந்திருப்பா. என்ன தான் கோவம் வந்திருந்தாலும் பெத்த பொண்ணுக்கிட்ட நான் அப்படி பேசியிருக்க கூடாதுக்கா” என்றார் ராமசாமி.
“அதி, அதான் இப்ப பேசிட்டல. இனி அப்பாவ நல்லா பாத்துக்கலாம்” என்றான் அகிலன்.
“இனி பாத்துக்கலாம் அகில். ஆனா நடந்ததையும் அதனால இழந்ததையும் மாத்த முடியாதுல. அதுக்கான பலனை அனுபவிச்சு தானே ஆகணும். அப்பாதான உரிமையில திட்டுனாரு. அதுக்காக நான் இவ்ளோ கோவத்தோட இருந்திருக்க வேண்டாம் அகில்” என்றபடி சாளரத்தின் வழி வெறித்துப் பார்த்தாள்.
அதிராவின் பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தார் ராமசாமி.
குறள் :
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
பொருள் : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

எழுத்து நடை அருமை....எனக்கு பிடித்து இருக்கிறது.. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு