முள் தராசு
மாடன் நின்றிருந்த மிட்டாய்க்கடைக்கு இடதுபுறம் ஒரு டெய்லர் கடையும், வலது புறம் ஒரு வெற்றிலை பாக்குக் கடையும் இருந்தன. டெய்லர் கடை கட்சி அலுவலகமாகவும் இருந்தது. சிவப்பு துண்டு போட்ட தோழர்கள் உற்சாகமாகச் செய்தி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
"....நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதன் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து 144 இடங்களில் வெற்றி பெற்றதுடன் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், அதிமுக கட்சியின் தலைவருமான திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இத்துடன் செய்திகள் முடிவடைந்தது. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி.” கடை வாசலில் சடசடவென்று பட்டாசு வெடித்தன.
முட்டாய்க் கடையில் வூட்டுப் பயலுகளுக்குச் சேவும், சீனி முட்டாயும் ஓலைக்கொட்டானில் வாங்கி மஞ்சப்பையில் திணித்துக் கொண்டிருந்த மாடன், வெடிச்சத்தம் கேட்ட திசைக்குத் திடுக்கிட்டு எட்டிப் பார்த்தான்.
அவன் கேட்ட வெடிச்சத்தம், வேற மாதிரியான வெடிச்சத்தம். கட்சி வாசலில் கேட்டதையும் தாண்டிக் கேட்ட வலுவான வெடிச்சத்தம். வெடிச்சது கையெறிக்குண்டுன்னு துணிப்பாத் தெரிஞ்சது. கண்ணாடிச் சில்லு, வச்சிரம், கருமருந்து அடிச்சு - திணிச்சு - சணல வச்சு இறுக்க நேக்கா சுத்தி எறிஞ்சிருக்கிற கைக்குண்டின் உக்கிரமான சத்தம்.
கடைமேட்டை விட்டு இறங்கி, கிருஷ்ணன் கோவில் தெரு முக்குக்கு வந்து, கண்ணைச் சுருக்கிட்டு உத்துப் பார்த்தான். 'மாலை மசங்கி ராத்திரி வரட்டா' என்று கேட்டுக் கொண்டிருந்த நேரம், வெளியூர் ஆட்கள் நடமாட்டம் ஓஞ்சிருந்தது. தொலைவுல, அங்கங்கே பெட்ரமாக்ஸ் லைட் வைச்சு யாவாரம் பண்ற கடைகள்ல இருந்து வந்த வெளிச்சத்திலும், ஆளுக ஓடுற சாடுற திசைய வச்சும் சத்தம் எங்க இருந்து வந்தது என்று முடிவு பண்ணப் பார்த்தார். கூடவே ஒன்னு ரெண்டு பேராய், கூட்டம் கூடி வெடி வந்த சத்தம் திசையில் பார்க்கத தொடங்கினார்கள்.
கிருஷ்ணன் கோவிலை நோக்கிப் போன மண்பாதை கோயிலுக்கு வல்லாங்கைல திரும்பி இரட்டை பிள்ளையார் கோயில்ல போய் சேர்ந்து இளையரசனேந்தல் சாலையோடு பிணைஞ்சிரும் அந்த ரோட்டில்தான் கருசப்பட்டியானின் நவதானிய கமிசன் கடையும், பருத்தி விதைக் கடையும் இருந்தன. கவனிச்சிட்டு இருக்கும்போதே மறுபடி ஒரு குண்டெறிச்சத்தம். இப்ப சத்தம் வந்த திசை மாடனுக்கு விளங்கிருச்சு. வேட்டிய அவுத்து கைல வச்சுக்கிட்டு, உயரமா நாலஞ்சு ஆளுக கடைத்தெரு திசை பாத்து வேகமா ஓடுறது நிழலாத் தெரிஞ்சது.
கமிசன் கடைதான் வெடிபட்டுருக்கணும். ரெட்ட குண்டு அடிக்கு இந்நேரம் கடை தொவஞ்சிருக்கணும். இப்ப பொலியும் ஆருன்னு ஒருமாரி தெரிஞ்சு போச்சு மாடனுக்கு. “ஆத்தாடி கொழுத்த உருப்படியல்ல போட்டுருக்காக” ன்னு வியந்தான் மாடன். ஆளு தப்பிச்சிருக்குமாங்கறது குதிரைக்கொம்பு தான். மேப்படியான் மட்டுமா இல்ல, டீத்தண்ணி வாங்கிக் குடுப்பான்னு கூட குத்த வச்சிருந்த வேறு ஆரும் சட்னி ஆயிருப்பாங்களான்னு இன்னம் செத்த நேரம் கழிச்சுதான் தெரியும்.
மாடன் வெடி வந்த திசைய பார்த்துட்டு இருக்கும்போதே, ஒரு மூணு பேரு மாடன் நின்னுட்டு இருந்த திசை பார்த்து ஓட்டமா வந்தாக. ஓட்ட வேகத்தில இளவட்ட பயலுவன்னு தெரிஞ்சது. மாடன் நின்ன இடத்துல இருந்து நகலாம உத்துப் பார்த்தபடி நின்னார். ஆளுக யாருன்னு இப்பவும் மட்டுப்படல. ஓடியாந்தவக அம்மையார்பட்டி சவுளிக் கடை திரும்பி பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பயில, சவுளிக்கடை வெளிச்சம் மூணு பேரு மேலயும் பரசலா விழுந்தது. மாடனுக்கு உக்கிப் போச்சு.
“அட ஏரிக்கரை கருப்பா, பயலுவ நம்ம ஊர்க்காரம்ல”ன்னு திக்குன்னுருச்சு மாடனுக்கு.
ராமூர்த்தி – ஊர் நாட்டாமை மருதையா மவன். சூரிக் கத்தியோட முன்னால ஓட பெறத்தால ஒடுறவன வச்ச கண்ணு வாங்காம மாடன் பார்த்தார். அவருக்கு ஈரக்கொலை ஒரு பாட்டம் நடுங்கி அடங்கியது. அவன் கையில அரைக்கை நீளத்துக்குச் சொட்ட சொட்ட, இரத்தப் பசையோட கோழி அருவா. அவனுக்குப் பின்னாடி டவுசரோட கைக்கொண்ணா எறிகுண்ட வச்சிகிட்டு ஓடியாந்தது கழுவன் மகன். ஆனா, பெரியவனா சின்னவனான்னு மட்டும் மட்டுப்படல. அதுக்குள்ளே பயலுக வேகமா ஓடி பேட்டைக்குள்ளே மறைஞ்சிட்டாக. இந்நேரத்துக்கு பஸ் ஸ்டாண்ட்ல ரெண்டு போலிஸ்காரனாவது நிப்பான். அதான் பயலுக ஊடுபக்கம் பாஞ்சிருக்காகன்னு புரிஞ்சு போச்சு மாடனுக்கு.
மாடனுக்கு உள்ளங்கால்ல இருந்து ஒரு சுள்ளுன்னு ஒரு நடுக்கம் கிளம்பி, உச்சந்தலை வரை விர்றுன்னு ஓடுச்சு. இனிமே அங்க நிக்கிறது நல்லதுக்கில்லன்னு தெரிஞ்சு போச்சு. கடைக்கார முதலாளிக, சேவு மிச்சர் வாங்க வந்தவங்கன்னு சிறு கூட்டம் ஒன்னு கூடிருச்சு.
“என்னாச்சுல மாடா... பொலி யாராம் வெள்ளையனால?” னு கேட்டார். யாருன்னு அவருக்கும் தெரிஞ்சுதானிருக்கும். மாடன் பதில் சொல்லாம அங்கன இருந்த வாக்குலையே “இந்தாங்க சாமி“ன்னு முதலாளிட்ட சில்லறைய குடுத்துட்டுக் கெளம்புனான்.
விடுவிடுவென மேடேறி நடந்து, செம்புலியம்மன் கோவிலைச் சுத்திக்கிட்டு எட்டயபுர ரோட்டுல வெரசா நடக்க ஆரம்பிச்ச மாடனுக்குப் படபடன்னு வந்தது. செஞ்சவங்க யாருன்னு கண்கூட பாத்தாச்சு. வேற யாரும் பார்த்திருப்பாங்களான்னு தெரியல. இன்னாருன்னு ஊகம் பண்ணலாம். கட்ரைட்டா இன்னாருன்னு சொல்ல ஆள் இருக்குமான்னு தெரில.. அவனவன் உசுரக் கைல பிடிச்சிட்டு ஓடிட்டுல இருந்திருப்பான்.
மாடனுக்கு முதல்ல ஊரு போய்ச் சேரணும்னு இருந்துச்சு. நிக்காம நடந்தாலும், ஒரு மணி நேரத்துக்கு மேலாயிரும். இன்னும் செத்த நேரத்துல, ஊருக்கும் சேதி போயிரும். ஊர்க்கூட்டம் போட வீட்டு வீட்டுக்கு ஆள் விட்டுருப்பாங்க. மூணும் நம்ம ஊர்ப் பயலுகளாச்சே. மேப்படியான் வீட்டுக்கும் இந்நேரம் சேதி போயிருக்கும். அவன் வீட்டாளுக தாட்டிக்கமானவுக. காசு வச்சு இந்நேரம் போலிஸ்காரனுவள வளைச்சுப் போட்டுருபபாங்க.
விடியக்குள்ள போலிஸ் வந்து ஊர துவச்சு எடுத்துரும். பயலுக செஞ்சதுக்கு ஊர்க்காரன் மிதிபடணும். மானங்கெட்ட வசவு வாங்கணும். பாப்போம் ஊர்க்கூட்டம் என்ன முடிவு பண்ணுதுன்னு? பயலுவ ஓட்டத்தைப் பார்த்தா குருமலைக்காடா.. இல்ல மந்திதோப்பு மலையான்னு தெரிஞ்சுக்க முடியல. யாரும் சொல்லவும் மாட்டாக.
மாடன் தொரையூர் வழி போகவா இல்ல, திட்டங்குளம் வழியா போகவானு சின்னதா மலைச்சு, பெறவு ரெண்டும் வேண்டாம்னு கொஞ்ச தூரம் நடந்து தொழிப்பேட்டை எதுக்க ஏறி, பாறை தாண்டி இறங்கி அறுப்பு முடிச்சு குதிகால் வரை சோளத்தட்டை விரவிருக்கிற வயக்காடு ஊடா ஊர் போய்ச் சேர்ந்த போது ஊருக்குள்ளே சேதி வந்திருந்தது.
ஊர் நடுவா போகாம மயானக் குழி சுத்திக்கிட்டு கீழத் தெருல இருந்த தன் குச்சில் இருந்த திசை திரும்பினதுமே வீட்டு வாசலில் நாலஞ்சு பேரு நிக்கிறத பார்த்துட்டார் மாடன்.
......................
மாடன் தல தெரிஞ்சதுமே வாசல்ல குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்த நாலஞ்சு பேரும் பேச்ச நிறுத்திட்டு, மாடனையே பார்த்தார்கள். மாடன் கவனிச்சும், கவனிக்காத மாறி குச்சுளுக்குள் நுழையப் போகயில தவுடன்தான் மறிச்ச மேனிக்கு, “மச்சான்.. உமக்கு ஆரும் சேதி சொன்னாகளா? ஊர்க்கூட்டம் போட்டுருக்காக. உம்மை நாலு தடவ தேடி வந்துட்டாக“ என்றான்.
கீழத்தெரு பெரியாம்பளயான், “ஏலே தவுடா, ஏம்ல பறக்க? பொறுல; மாப்ள தொலதொரவுல இருந்து வாரீரு. முதல்ல கைகால் கழுவிட்டு வாரும், அப்றம் பேசிக்கலாம். யத்தா சடச்சி, மாப்ளைக்கு காப்பித்தண்ணி போட்டு குடுத்தா...!“என்று சொன்னான்.
மாடன் எல்லோரையும் சுத்திப் பார்த்துட்டு “ந்தா.. ஒரு நிமிசத்தில வந்துருதேன் மச்சான். நம்ம கொண்டியாத்தா கோவில் முத்தத்தில நம்ம சனங்கள உக்காத்தி வைங்க. உங்கட்டல்லாம் கலந்துட்டுதான் ஊர்க்கூட்டத்துல ஏதும் நா பேச முடியும்”
மாடன் தான் கீழத்தெரு குடிகளுக்கு நாட்டாமை. கீழத்தெரு ஊர விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கு. தெருன்னு ஏதும் கிடையாது. மொத்தமே பதினாறு குச்சில். அங்கங்க சிதறிக் கிடக்கும். பெருந்திருழா ஊர்ப் பொது விசேசம் தவிர ஊருக்குள்ள பெருசா வேலை ஏதும் கிடையாது. ஊருக்குள்ளே இருக்கிற நிலத்துக்கு காவல் போகணும். விளையுறதுக்குக் கூலி வாங்கிகிட்டு, வயல்லா மாடா உழைக்கணும். திருழாக்கு தெரு சுத்தம் பண்ண, கல்யாண பந்தி எலை எடுக்க, மிஞ்சின சோத்த பங்கு வைக்க, கருமாதிக்கு ஊர் சொல்ல அவ்வளவுதான். ஏதும் பஞ்சாயத்துன்னா அவுகளா முடிவு எடுத்துட்டு... “என்னல ஒத்துக்கிறியா?“ன்னு கேப்பாக. ஆனா பதில கேக்க மாட்டாக.
ஆனா இன்னிக்கு அப்படி இருக்காது. பெருஞ்சத்தம் இருக்கும். ஊர் கலந்தாகணும். வசமா ஊரே மாட்டிருக்கு. ஒருத்தரும் தப்பிக்க முடியாது. பேச்சியம்மன் கோயில் பீடத்துக்கு எதிர இருந்த பொட்டல்ல கீழத்தெரு சனம் உக்காந்திருந்தது. கைகாலத் துடைச்சிட்டு மாடன் வந்து சேரவும், ஊர்க்கூட்டத்துக்கு வரச்சொல்லி ஊர்ச்சாட்டி காவக்காரர் வந்து மறுபடி நின்னார்.
“ஏ எத்தன தடவ உங்க தெருவுக்கு அலையறது. வாங்கப்பா, ஏ மாடா உனக்காக அங்க ஊரே கூடி, அர மணி நேரமா காத்துக் கிடக்கு. நீ என்னடானா இங்கன உக்காந்து கத பேசிட்டு இருக்க. என்னப்பா இது ஊர்சொல்லுக்கு மருவாதி இல்லியா? சொல்லுய்யா உங்காளுககிட்ட”
“எங்க நாட்டாமை வராம, நாங்க எப்படிங்க வர முடியும்? முந்தா நாள் போன அவரே இப்பத்தான வந்திருக்காரு. எங்காளுக்குள்ள கலந்தாடாம அங்க வந்து சும்மா மண்ணு மாறி நிக்கவா?” ஆனா அப்படி நிப்பதுதான் வழமை.
“ஆருல அது, தவுடனா? என்னல வாய் ரெம்ப போவுது.. நீங்க இல்லாம ஊர்க்கூட்டம் போட்டு முடிவு எடுக்க முடியாதுன்னு நெனப்பா ? போனாப் போவுதுன்னு தேடி வந்து கூப்டா?“
பதிலுக்குத் தவுடன் ஏதோ சொல்லத் தொடங்க, மாடன், “போங்க காவக்காரய்யா, தோ வந்துருதோம்...”ன்னதும், காவக்காரரு, “எல்லாம் நேரம்ல“ன்னு தலைல அடிச்சிட்டு நவுந்து போனார்.
கூடிருந்த சனம் நடுல இருந்த மெல்ல ஒரு சலசலப்பு அலையாய்த் துவங்க, மாடன் பார்வையில் அடங்கிப் போனது. மாடன் சடச்சிய ஆழமாப் பார்த்தான். அவள் பார்வையில் வெக்கையான கண்ணீர் தெரிஞ்சது.
மாடன் மெல்ல எழுந்து சபை கும்பிட்டான். “முதல்ல நானும் பெரியாம்பளையும் பொதுப் பஞ்சாயத்துக்கு போய் என்னன்னு
தாக்கல் தெரிஞ்சுட்டு வர்றோம். அப்புறம் நாம ஒரு முடிவுக்கு வந்துக்கலாம். சரியா? வாங்க மாமா“ என்றபடி ஊர் மடத்தைப் பார்த்து நடக்க. கீழத்தெரு பெரியாம்பளையும் பின்னால் நடக்க, கீழத்தெரு சனங்கள் அப்படியே உக்காந்திருந்தார்கள். அங்கே அந்த காத்தோட்டமான ராத்திரி நேரத்திலும், கண்ணுக்குத் தெரியாத வெக்கை ஒன்று கவிழந்திருந்தது.
..........
ஊர் மடத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது. சாவடி திண்ணை நடுவுல பெட்ரோமாக்ஸ் லைட் வச்சு சுத்தி நடுத்தெரு ஆளுங்க சலசலன்னு பேசிட்டு உக்காந்திருந்தாங்க. ஊர்த் தலைவர் மருதையா நடுல உக்காந்திருக்க சுத்திலும் இருந்த முகங்களில் கொஞ்சம் பெருமை கொஞ்சம் ஆணவம்னு தெரிஞ்சது. அங்கங்கே திட்டுத்திட்டாய் இருட்டில் கொஞ்சம் ரத்தவாடை தெரிந்தது மாடனுக்கு.
மேலத்தெருல இருந்தும் நாலஞ்சு ஊர்ப் பெரியவுகளும், பெண்டுகளுமாய், இந்த ஊர்க்கூட்டத்துக்கும், அவுகளுக்கும் சம்பந்தமே இல்லாதவக மாதிரி தனிச்சு உக்காந்திருந்தாங்க. அவங்க மூஞ்சில இருந்து என்ன நினைக்கிறாங்கன்னு கண்டுபிடிக்க முடியாதபடிக்கு கல்லா வச்சிருந்தாங்க முகத்த.
கொஞ்சம் தள்ளி, கழுவனும், அவம் பொஞ்சாதியும் கைகட்டி நின்னுகிட்டு இருந்தத மாடன் பார்த்துக் கொண்டான். மாடனைப் பார்த்த கழுவன் கண்கள், சட்டுன்னு தாழ்ந்து மண் பார்த்தமேனிக்கு போயிருச்சு. அப்புறம், அவன் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
பக்கத்தில் இருந்த மாமன்காரன் காதில் குசுகுசுன்னு பேசிக்கிட்டு இருந்த ஊர்நாட்டாமை, மருதையாட்ட மாடன் வந்த சேதி சொல்லப்பட்டதும், நிமிர்ந்து மாடனைப் பார்த்த மருதையா, ”வாப்பா மாடா, நான் அப்பவே ஆள் விட்டனப்பா. தங்கச்சி மக சடங்குக்கு நல்லமுத்தன்பட்டி போயிருந்தன்னு சொன்னாக. நீ ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ளே ஊருக்குள்ளே என்னென்னமோ நடந்து போச்சு.. தெரியும்ல?“, என்று பாதி செய்தியும், பாதி கேள்வியுமாய்க் கேட்டார்.
எடுத்த உடனே சட்டுன்னு சேதிக்கு வந்துட்ட மருதையாவுக்கு என்ன பதில் சொல்லன்னு கொஞ்சம் தடுமாறிப் போனான் மாடன். சுதாரித்துக் கொண்டு.. “நாலஞ்சு தடவ கூப்டு விட்டதா தவுடன் சொன்னான். நானும் உடனே கிளம்பி வந்திட்டேன். விவரம் ஏதும் முழுசா தெரியல. நீங்களே சொல்லிருங்க” என்றான்.
தான் பார்த்ததைச் சொல்ல வேண்டுமான்னு யோசித்தான். அவுக என்ன சொல்றாகன்னு கேட்ட பெறவு சொல்லிக்குவம்னு விட்டுட்டான்.
மருதையா கூட்டத்தைப பார்த்து, “பாருங்கல, பெத்த புள்ள அய்யனாராட்டம் ஊர்ப்பலி வாங்கிட்டு போயிருக்கு. .அப்பங்காரன் ஒன்னும் தெரியாத சைவப்பூசாரியாட்டம் நிக்கிறத!” மாடன் பக்கம் திரும்பி, “ஏலே மாடா... உன் நடுவான் என்ன பண்ணான்னு நிசமாவே உனக்கு தெரியாதால? இல்ல தெரிஞ்சும் தெரியாதவனாடடம் நடிக்கியா?“ என்றார் சிரிப்புடன். ராமமூர்த்திக்குப் பின்னாடி ஓடினவன் இப்ப மாடன் கண்ணு முன்னாடி ஓடினான். ரத்த கவிச்சி வாடை தன்னைச் சுத்தி அடிச்சது போல இருந்தது.
மாடன் பதில் சொல்லாமல் சடச்சியப் பார்த்தான். அவள் தெரியாதுன்னு சொல்லுங்கன்னு சாடை காட்டினாள். மாடன், “நான் முந்தா நாள் சடங்குக்குன்னு ஊரு விட்டுப் போனவன் இப்பத்தான் வந்து நிக்கேன். நீங்க சொல்றத தெளிவாவே சொல்லிருங்க.” என்றான்.
“அதான, அவனே இப்பதான் ஊருக்கு வந்திருக்கான். எதுக்கு சுத்தி வளைச்சு பேசிட்டு, பட்டுன்னு உடைச்சு பேசிரு மருதையா, பார்க்க வேண்டிய சோலி எத்தனை இருக்கு?” என்று கூட்டத்திலிருந்து ஒரு தாட்டிக்கமான குரல் கிளம்பி வந்தது.
“ந்தா பாரு மாடா, கோயில்பட்டில வச்சு கரிசப்பட்டியான யாரோ நாலஞ்சு பேரு போட்டுத் தள்ளிட்டாங்களாம். கூட இருந்த தொம்மம்பட்டிக்காரன் ஒருத்தனும் செத்துட்டான். இன்னொருத்தனுக்கு ஆஸ்பத்திரில இழுத்துகிட்டு இருக்கு. யாரு செஞ்சான்னு ஒருத்தரும் பார்க்கல. ஆனா நம்மூர்க்காரப் பயலுவதான் நாலஞ்சு பேரா சேந்து கரிசப்பட்டியானப் போட்டுட்டாங்கன்னு, கரிசப்பட்டியான் மச்சினன் கம்ப்ளைன்ட் குடுத்துருக்கான். நம்ம ஏட்டையா பொன்னுபாண்டி லேசு பாசா சொல்லி வுட்டுருக்காரு. போலிசு நம்ம பயலுவள தேடத் தொடங்கிட்டாங்க. இதுல உம்பயலும், எம்பயலும்தான் மெயினா இருந்திருக்காங்கனு பேசிக்கிடுதாக. இந்தா நிக்கானே கழுவன் மகனும், இதுல உண்டாம். கரிசப்பட்டியானப் போடுறதுக்கு எல்லா ஊர்க்காரனுக்கும் ஆயிரமாயிரம் காரணம் இருக்கு. ஆனா பாரு, பழி நம்மூரு பயலுக மேல விழுந்துருக்கு. பச்சைப் பயலுக. இவனுகளால கத்தி புடிக்க போறானுக...” என்று பேசிகிட்டே மாடனை உத்துப் பார்த்தார் மருதையா.
மாடனுக்கு என்னன்னு புரிஞ்சிருச்சு. மருதையா மச்சினனுக்கும், கரிசப்பட்டி முதலாளிக்கும் உள்ள ஊடுபகை இருந்ததும், இன்னிக்கு மருதையா மச்சினன் ஒத்தக் கையோட அலையுறதுக்குக் காரணமும் கரிசப்பட்டியான்தான். 'ஊருக்கே தெரிஞ்ச கதைய அப்படியே மறைக்க பாக்குறாக' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனா இதுல நம்ம பயலுக்கு வேண்டாத வேலை. இருக்கட்டும் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்னு பெருமூச்சு விட்டு, “ம்ம், சரிதான். சொல்லுங்க தலைவரே“ என்றான்.
“எப்படியோ மாடா, செஞ்சவன் எவனா வேணா இருந்துட்டு போட்டும். நம்ம பயலுவள காப்பாத்த வேண்டியது நம்ம பொறுப்பு. இந்த ஊரோட பொறுப்பு. இதோ நிக்காகளே மேலதெருக்காரங்க. இவுக செத்தது எங்க சாதியாளாவே இருந்தாலும், நாங்க இந்த விசயத்துல ஏதும் தலையிட மாட்டோம். போலிஸ்ட்ட ஏதும் துப்பு சொல்ல மாட்டோம்னு பால்ல அடிச்சு சத்தியம் பண்ணிட்டாக. எம் புள்ளைய விடு. உன் மகன் கழுவன் மகன்லாம் சின்னப் பயலுவ. இன்னும் பார்க்க வேண்டியது எவ்வள இருக்கு. இப்பவே செயிலுக்கு போயி ஒண்ணுமில்லாம போகவா? அதான் ஊரு கூடி ஒரு முடிவு எடுத்திருக்கோம். ஓடுன பயலுகள தேட வேணாம். ஒரு நாலு நாளைக்கு கண்காணாமலே திரியட்டும். நம்ம நடேச அய்யர வச்சு நாளைக்கே நாலு மேசர் பயலுகள “நாங்கதான் செஞ்சோம்”னு சாத்தூர் கோர்ட்ல ஆசர் பண்ண சொல்லிருவோம். அய்யர பத்தி தெரியும்ல. கோர்ட்டுக்குள்ளே வச்சு வெட்டினவனையே விடுதல பண்ண வைக்கிற ஆளு. அதெல்லாம் ஊரு பார்துக்கிரும். என்ன ஆசராகிறவன் குடும்பத்தப் பார்த்துக்க வேண்டியது நம்ம ஊர்ப் பொறுப்பு. செலவையும் ஊர் பார்த்துக்கிடும். நீயும் கழுவனும் கவலைப்படாம இருங்க.. பயலுகள மட்டும் ஊர்ப்பக்கம் தல காட்டாம பார்த்துக்கிடுங்க. மத்தத நாங்க பாத்துக்குறோம். என்னங்கயா சொல்றீங்க?“ மருதையா ஊர் பார்த்து கேட்க ஊரே மொத்தமா “அப்படியே செஞ்சுரலாம் தலைவரே” .என்று பதில் சொல்லுச்சு.
மாடன் மேலத்தெருக்காரங்க முகத்தைப் பார்த்தான். ஒருத்தர் மூஞ்சில இருந்தும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியல.
கழுவனைப் பார்த்தான். அவன்கிட்ட இந்நேரம் எல்லாம் பேசி முடிச்சிட்டுதான்
நம்மகிட்ட சொல்ற கடமைக்கு சொல்றாங்கன்னு தெரிஞ்சது. இனி தான் பேசுறதுக்கு
ஒண்ணுமே இல்லைன்னு முடிவுக்கு வந்தான் மாடன். சடச்சி முகத்தில் இப்போ
பெருநிம்மதி தெரிந்தது. மாடன் ஊர்த்தலைவரைப் பார்த்து பெருங்கும்பிடு போட்டான்.
“அப்புறம் என்ன. எல்லாருக்கும் சரிதானய்யா? எதுனா சொல்லணும்னா இப்பவே சொல்லிருங்க.” கொஞ்சம் இடம் விட்டார் மருதையா. சலசலன்னு சத்தம் வந்ததே தவிர, யாரும் எதுவும் எதிர்ப்பா சொல்லல. ”சரி, கூட்டத்த முடிச்சிக்கிடுவோம். நாளைக்கு போலீஸ்காரன் யாரும் வந்தா ஆளாளுக்குப் பேசக் கூடாது. வாயத் தொறக்கக் கூடாது சரியா ? மீறி எதுனா சொன்னா, அவன் யாரா இருந்தாலும், எப்பேர்க்கொத்த கொம்பனா இருந்தாலும், அவன், அவன் பொண்டு, பிள்ளைக, கொண்டான், கொடுத்தான் எவனுக்கும் ஊருக்குள்ளே இடம் கிடையாது. கட்டுனதுணிய உருவிட்டு ஊர விட்டு முடுக்கி விட்டுற வேண்டியது. சுத்தி நம்ம சனம் உள்ள எல்லா ஊருக்கும் இத சொல்லி விட்டுறணும்.. இதாம் தண்டனை ஆமா“ என்றபடி எழுந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு பெருங்கும்பிடு ஒண்ணு போட்டு விட்டு நகர, ஊர்க்கூட்டமும் மெல்லக் கலையத் தொடங்கியது.
மாடன் கடைசியாகக் கிளம்பினான். சடச்சியும் கழுவன், கழுவன் பொண்ட்டாட்டி சேர்ந்து வீட்டைப் பார்த்து கிளம்ப. கூட வந்த மாமனிடம் கூட ஏதும் பேசாமல் தலை நிமிராமல் நடந்த மாடனின் மனசு கனத்துக் கிடந்தது. தன் ரெண்டு கையிலயும் இரத்தப் பிசுபிசுப்பும் மேலு பூராவும் இரத்தக்கவிச்சி வாடை வீசுவதும் போல இரண்டு கைகளையும் விரித்துப் பார்த்துக் கொண்டான்.
உழைத்துக் காய்ப்பேறிய கைகள். இதுவரை உழைப்பைத் தவிர வேறு கவடு சூது அறியாத கைகள். நடுவான் முகம் மனசுக்குள் ஒரு நொடி வந்து போனது. நம்ம தலைமுறையில் முதல் முதலாய் ஒருத்தன் கத்தி எடுத்து இரத்த ருசி பார்த்துருக்கான். இப்ப எங்க இருப்பான் என்ற கேள்வி மனசுக்குள் பெருசாப் பரவியது.
வீட்டுக்கு வந்தவன் வெளியே கிடந்த கட்டிலில் படுத்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். “சாப்புடுதீகளா” என்று கேட்ட சடச்சியிடம் கூட பதில் சொல்லவில்லை. மயானத் திசையிலிருந்து கூகை ஒன்று அலறிய சத்தம் காதுக்குள் கோர அழுகையாய் ஊடுருவியது. ஒருவேளை சாகும்போதும் கரிசப்பட்டியான் கதறலும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வர, போர்வையை இழுத்து தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
.............
வானம் கீழ்க்கையில் வெளிறத் தொடங்கியிருந்தது.
கோயில்பட்டி போலிஸ் ஸ்டேசனுக்குள் குண்டு பல்பு வெளிச்சம் மங்கலாய் வெளிச்சம் தர, மேசையில் குப்புறப் படுத்து கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ஏட்டு பொன்னுப்பாண்டி, யாரோ வரும் அரவம் கேட்டு தலை தூக்கி பார்த்து “எவம்ல அது?”ன்னு அரட்ட வந்த உருவம் தன் தலை முக்காட்டை விலக்கியது.
“என்னல மாடா? இந்நேரம் வந்திருக்க?“, ஏட்டின் பார்வையில் லேசான ஐயம். சுத்துமுத்தும் பார்த்தபடி “அதான் நேத்து ஊர்க்கூட்டதுல பேசிட்டீங்கள்ல? அப்புறம் எதுக்கு இந்நேரத்துக்கு இங்கன வந்து நிக்க?”
மாடன் தெளிவாகச் சொன்னான். “யய்யா. நேத்து ராத்திரி எம் பையனும், இன்னும் ரெண்டு பெரும் சேர்ந்து கமிசங்கடை கரிசப்பட்டிகாரு ரெங்கசாமிய குண்டு எரிஞ்சும் வெட்டியும் கொலை பண்ணிட்டாங்க. நான் அத நேர்ல பார்த்தேன். என்னையவே சாட்சியா போட்டுக்குருங்க”
“ஏலே கூறு இருக்கால உனக்கு, நீ என்ன பண்ணுத தெரியுமா? பின்னாடி என்ன நடக்கும்னு தெரிஞ்சுதான் பேசுறியா? இதுனால உங்குடும்பமே சீரழிஞ்சு போயிரும்ல. ஒரு ஊர்லகூட உன்ன ஒண்ட விடமாட்டாங்க தெரியும்ல? உன் வம்சமே இல்லாம போயிரும்ல.”
“தெரிஞ்சுதான் வந்திருக்கேன் ஏட்டையா. இன்ஸ்பெட்டர் வந்ததும் சொல்லுங்க. அவங்க ஒளிஞ்சிருக்கிற இடத்த நானே கூட்டிட்டு போய்க் காட்டுறேன்“ என்று சொல்லிவிட்டு ஏட்டையாவின் பதிலை எதிர்பார்க்காமல், அங்கேயே துண்டை விரித்து குத்திக் காலிட்டு உட்காந்து கொண்டான் மாடன்.
அவன் பார்வை எதிர்த்தாப்ல இருந்த காந்தி போட்டோவையே வெறித்தபடி இருந்தது. .
குறள் : கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
கலைஞர் உரை: ஒருவருக்கு வாழ்வும் தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியார்க்கு அழகாகும்.
* கதை நடக்கும் கால கட்ட விவரிப்புக்கும், வட்டார பேச்சுத் தமிழுக்கும் உதவி செய்த என் அம்மா பொன்னுதாயி என்ற கிராமத்துக் கிழவிக்கு இக்கதையை உரித்தாக்குகிறேன்."
- சித்ரா தேவி
ஒரு குறுநாவலுக்குரிய செய்தியை சிறுகதைக்குள் திணிக்க முயற்சி செய்ததால் தடுமாற்றம் தெரிகிறது. மற்றபடி 70 இறுதிகளின் விவரணமும் வட்டாரச் சொல்லாக்கமும் கதையை உயிர்ப்போடு கொண்டு செல்கிறது. தொடரட்டும் குறள்கதைகள் ...வாழ்த்துகள்
பதிலளிநீக்குகதை நல்லாயிருக்குங்க! வட்டாரப் பேச்சு நல்லா இருக்கு 👏🏽👏🏽
பதிலளிநீக்கு